Chennai - Dinakaran

6.5 லட்சம் அமெரிக்க கரன்சி பறிமுதல்

சென்னை: துபாய்க்கு கடத்த முயன்ற 6.5 லட்சம் அமெரிக்க கரன்சியை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்தவர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா (38) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் செல்ல வந்தார்.  அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. பின்னர் அவரை, தனி அறைக்கு அழைத்து சென்று, அதிகாரிகள் முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது, அவரது உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு 6.5 லட்சம். இதையடுத்து அப்துல்லாவை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

வீட்டை உடைத்து 35 சவரன் கொள்ளை

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் வெற்றிக்கண்ணன் (31), தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகை, 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கதவு, பீரோவில் பதிவாகி இருந்த ரேகையை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்து வருகின்றனர்.

போதை பொருள் சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி: போரூர் ரவுண்டானா சந்திப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியே வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட மாவா போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த விஜய் (24), என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாவா போதைப் பொருளை சப்ளை செய்து வந்த வட மாநில வாலிபர்கள் ரமேஷ்குமார் (31), விபேஷ்கன்னா (32) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர். நுங்கம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை நேற்று போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள், பல கடைகளுக்கு மாவா சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

கட்டி முடித்து 10 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமான காவலர் குடியிருப்பு: 1.2 கோடி நிதி வீணாகும் அவலம்

ஆவடி: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள், காவலர்களுக்கு வீடுகள் சொந்தமாக கட்டி கொடுக்கப்படுகிறது. இதில், அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அதன்படி, திருமுல்லைவாயல் - செங்குன்றம் சாலையில் அரிக்கம்பேடு பகுதி புழல் ஏரிக்கரையில் போலீஸ் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் தனித்தனி பிளாக்குகளாக 14 வீடுகள், 1.2 கோடி செலவில் நவீனமயமாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த வீடுகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது.   ஆனால், இதுவரை போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளாக வீடுகள் பூட்டியே கிடப்பதால் பழாகி வருகிறது. தற்போது, இந்த குடியிருப்பில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து உள்ளே நுழைந்து மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.  மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மேலும், சூதாட்டம், பாலியல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடக்கிறது.  மேலும், குடியிருப்பு வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இந்த கொடிகள் வீட்டின் சுவர் மீதும் படர்ந்து வருவதால், விஷ ஜந்துக்கள் வசிப்படமாக மாறி வருகிறது. இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர், ஆவடி பகுதி காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் சொந்த வீடு இன்றி தவிக்கின்றனர். இவர்கள் மாதம் ₹6 ஆயிரம் வரை கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இந்த வீடுகளை இவர்களுக்கு ஒதுக்கினால் பயன் உள்ளதாக இருக்கும். மேலும், காவலர் வீட்டு வசதி கழகத்திற்கும் வருவாய் கிடைக்கும்,’’ என்றனர். இதுகுறித்து காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி அளித்ததும் குடியிருப்புகள் திறக்கப்படும்,’’ என்றனர்.

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

சென்னை: வேளச்சேரி அடுத்த  நன்மங்கலம் வெள்ளைக்கல் பெரியார் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் (18). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விக்ரம், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அதை சுகுமார் உள்பட நண்பர்கள் 5 பேருடன் கொண்டாடினார். பின்னர்,   மாலை வடக்குப்பட்டு ஏரியில் குளிக்க சென்றுள்ளார். மற்றவர்கள் கரையிலேயே குளித்துள்ளனர். சுகுமார் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தார்.  * பல்லாவரம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.  * ஆலந்தூர் வஉசி நகரை சேர்ந்தவர் தேவராஜ்  (21). இவரது மனைவி மாலினி  (20). தம்பதி இடையே தகராறு காரணமாக   தேவராஜ் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து இறந்தார்.* செங்குன்றம் அருகே பைக்கில் அரிவாளுடன் திரிந்த  மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்த செல்லா (எ) செல்வம் (37)  என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். * தி.நகரில் தடை செய்யப்பட்ட  பான்மசாலா  விற்ற தி.நகர், வஉசி  தெருவை சேர்ந்த ஹரிபாபு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். * வேளச்சேரி, எம்ஜிஆர்  நகர், 2வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (47). இவரது மனைவி உஷா (42) ஆகியோரை முன்விரோத தகராறில் இரும்பு ராடால் தாக்கிய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழுமலை (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். * பெரும்பாக்கம், சேரன் நகர், 2வது தெருவில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த மெரினா பொன்னியம்மன்  கோயில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (20) நீலாங்கரை, கணேஷ் நகர், 1வது தெருவை  சேர்ந்த மெக்கானிக் ஏசு (எ) பரத் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுக்குப்பம் பகுதியில் ஓட்டை உடைசல் தொட்டிகளால் சாலையில் சிதறும் குப்பை கழிவு: சுகாதார சீர்கேட்டில் மக்கள்

துரைப்பாக்கம்: மேட்டுக்குப்பம் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உடைந்துள்ளதால், குப்பை கழிவுகள் சாலையில் சிதறி கிடக்கிறது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம், 194வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், விபிஜி அவென்யூ, சிபிஎஸ் நகர், அன்னை அவென்யூ ஆகிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் இந்த தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, தினசரி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே இங்குள்ள தெருக்களை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் உடைந்து காணப்படுவதால் சாலையில் குப்பை சிதறி கிடக்கிறது. அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் இந்த குப்பையை கிளறி உணவு கழிவுகளை சாப்பிடுவதால், தெரு முழுவதும் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான முறையில் குப்பையை துப்புரவு ஊழியர்கள் அகற்றுவதில்லை. இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் தொட்டி அமைத்து, அதில் சேரும் கழிவுநீரை கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர். ஆனால் விபிஜி நகர், 3வது தெருவில் உள்ள சில வீடுகளில் கழிவுநீரை சாலையிலேயே விட்டு விடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரியும், உடைந்துள்ள குப்பை தொட்டிகளையும் மாற்ற கோரியும், சாலையில் கழிவுநீரை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

போக்குவரத்து துறைக்கு 13.7 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 13.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தரை மற்றும் முதல் தளத்துடன் 1610 சதுர மீட்டர் பரப்பளவில் 2.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும், திருப்பூர் நகரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டிடம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பகுதி அலுவலக கட்டிடம், வேலூர் மாவட்டம் பகுதி அலுவலக கட்டிடம், திருச்சி மாவட்டம் முசிறியில் பகுதி அலுவலக கட்டிடம், சென்னை ஆர்.கே.நகரில் 3.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடகிழக்கு) வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம், வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக கட்டிடம் மற்றும் சேக்காடு சோதனைச்சாவடி என மொத்தம் 13 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து துறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.நகரில் மெகா மார்கழி இசை விழா

சென்னை: சென்னையில் மெகா மார்கழி இசை விழா, தி.நகர் சர்.பி.டி. தியாகராயர் அரங்கில், கடந்த 13ம் தேதி தொடங்கி, 19ம் தேதி (இன்று) வரை நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இசை விழாவை தொடங்கி வைத்தார். தமிழ் கலாச்சார சங்க தலைவர் ஜெகந்நாதன் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். சுங்கம் மற்றும் கலால் ஆணையர் சிவன் கண்ணன் ஐஆர்எஸ், ஜெமினி குரூப் சேர்மன் சுதாகர் ஆர்.ராவ், கலர்ஸ் டிவி தலைமை நிர்வாகி அனூப் சந்திரசேகர், நடிகை சௌகார் ஜானகி, வீணா ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இன்று மாலை நிகழ்ச்சிகளாக வீணை, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், இசை நாட்டியம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

பாலத்தில் இருந்து குதித்ததால் வழிப்பறி வாலிபரின் கை எலும்பு முறிந்தது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு அருகே பட்டாளம், சி.ஏ கார்டனை சேர்ந்தவர் பூபதி (42), தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை பூபதி, வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு வாலிபர்,  பூபதியை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து 1500, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடினார்.  இதனால், அதிர்ச்சியடைந்த பூபதி அலறி கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற ஓட்டேரி போலீசார், அந்த வாலிபரை விரட்டி சென்றனர். அந்த சாலையில் எல்லைக்கு சென்ற வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், அவரது கை முறிந்தது.இதையடுத்து போலீசார், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஓட்டேரி பழைய வாழைமா நகரை சேர்ந்த பால்ராஜ் (எ) சேட்டு (37). இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்பட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆவடி ரயில் நிலையத்தில் ஆண்டுக்கு 30 கோடி வருவாய் கிடைத்தும் அடிப்படை வசதிகள் செய்யாத அதிகாரிகள்

ஆவடி: ஆண்டுக்கு 30 கோடி வருவாய் ஈட்டும் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை கூட செய்து தருவதில்லை, என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆவடி நகராட்சி பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அண்ணனூர், முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சென்னை, புறநகர் பகுதிகளுக்கு செல்ல ஆவடி ரயில் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் வழியாக மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் என தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.  ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான  ராணுவ தொழிற்சாலைகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய விமான படை பயிற்சி  மையம், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், ரயில்வே பணிமனை மற்றும் 10க்கும்  மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் உள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையம் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  இதனால், இந்த ரயில் நிலையத்தில் ஆண்டுக்கு 20 கோடி வருமானமும், ரயில்வே முன்பதிவு மூலம் 11.5 கோடி வருமானமும் ரயில்வேக்கு கிடைக்கிறது. ஆனால் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ஆவடி ரயில் நிலையத்தில் குடிநீர், இருக்கை, மின்வசதி, கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. காலை, மாலை, இரவு வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆவடி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கேட் எப்போதும் மூடியே கிடக்கும். அப்பகுதிகளில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும், நடை மேம்பாலத்தில் கூட சரிவர மின் விளக்குகள் எரியவில்லை.  இதனால், இரவில் பயணிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தின் வழியாக தான் நடந்து செல்கின்றனர். அந்த நேரத்தில் எக்ஸ்பிரஸ், மின்சார, சரக்கு ரயில்கள் மோதி பலர் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. மேலும், டிக்கெட் கவுன்டர் பகுதியில் நாய்கள் படுத்து தூங்குகின்றன. சில நேரங்களில் அவைகள் பயணிகளை விரட்டி கடிக்கின்றன.இங்கு பயணிகள் ஓய்வு அறை கட்டி திறக்கப்படாமலேயே கிடக்கிறது. இதன் காரணமாக நள்ளிரவில், அதிகாலை ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் தங்க முடியாமல் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர். ரயில் நிலைய பகுதிகள் முறையாக பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் பல இடங்களில் குப்பைகள் சிதறி கிடக்கிறது.  ஆண்டுக்கு 30 கோடி வரை வருவாய் ஈட்டித்தரும் இந்த ரயில் நிலையத்தை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இங்கு கிடைக்கும் வருவாயை என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை.இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பலமுறை ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் கவனித்து ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். வலுவிழந்த பாலம்ஆவடி ரயில் நிலையம் அருகில் புதிய ராணுவ  சாலையில் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட ரயில்வே பாலம் முறையான பராமரிப்பு இல்லாததால் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள்  செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. மேலும், மேம்பாலம் பல இடங்களில்  சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்  அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

லஞ்சம் தராததால் பொய் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் ஊர் தலைவராக இருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு செஞ்சி, ரோசனை காவல் நிலைய எஸ்ஐ சதீஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் என்னை காவல் நிலையம் அழைத்து சென்று, லஞ்சம் கேட்டு மிரட்டினர்.  கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினர். பின்னர் எனது சொத்து பத்திரங்களை எடுத்துவர சொல்லி அதில் ஒரு நிலத்துக்கு 2 லட்சம் எனக்கு கொடுத்துவிட்டு நிலத்தை வாங்கிக் கொண்டனர். மேலும் 3 லட்சம் லஞ்சமும் கேட்டனர். இதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சதீஸ் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே ராமமூர்த்திக்கு அரசு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அதை இன்ஸ்பெக்டர், எஸ்ஐயிடம் இருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும். என்று கூறி உத்தரவிட்டார்.

ஜனவரி 1ம் தேதி முதல் தடை எதிரொலி: கடைகளில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் ஸ்டாக் வைக்க கூடாது: மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருகிறது. இதனால், கடைகளில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை வைக்க கூடாது, பொதுக்களுக்கு வினியோகிக்ககூடாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 29ம் தேதி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு வருகிற 1ம் தேதி முதல் சில குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு மற்றும் உபயோகத்திற்கு தடை செய்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு முறை பயன்படுத்தி  குப்பையில் போடப்படும் தூக்கு பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உறிஞ்சுக்குழாய்கள் போன்றவற்றை தயாரிக்க கூடாது. சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிப்பதாக கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த தடைக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் சிறு கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை சென்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வையும், எச்சரிக்கையும் தூண்டு பிரசுரமாக வழங்கி வருகின்றனர். மேலும், இன்றைக்குள் கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை காலி செய்ய வேண்டும். ஸ்டாக் அதிகமாக இருந்தால் அதை உடனடியாக காலி செய்ய வேண்டும். 20ம் தேதிக்கு மேல் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் ஸ்டாக் இருக்கக்கூடாது. அவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தாலோ அல்லது ஸ்டாக் வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் சிறு கடைகளில் இருந்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் வரை இப்போதே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக துணிப்பை மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கட்டணம் வசூல்சென்னையில் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகளுக்கு 2, 3, 4, 5 என்று அளவுக்கு ஏற்றவாறு கட்டணங்களை வசூலித்து வந்தனர். தற்போது அவர்கள் அதை கைவிட்டு வீட்டில் இருந்து பைகளை கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருகின்றனர். பைகளை கொண்டு வராதவர்களுக்கு துணி பைகளை வழங்குகின்றனர். அந்த துணி பைகளுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலித்தது போல கட்டணம் வசூலிக்கவும் தொடங்கியுள்ளனர் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பழவந்தாங்கலில் 3 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஆலந்தூர்: பழவந்தாங்கலில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பழவந்தாங்கல் எல்லமுத்தம்மன் கோயில் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள குடிநீர் குழாயில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால், குடிநீர் வாரியம் சார்பில், அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக  அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் வந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, பழவந்தாங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து முறையான பதில் சென்னால்தான் கலைந்து செல்வோம், என கூறினர். இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதையேற்று மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சொத்து பிரித்து தராததால் வெறிச்செயல் பஸ்சுக்குள் புகுந்து தாய் வெட்டிக்கொலை

* தடுக்க முயன்ற சகோதரிக்கு வெட்டு* தப்பியோடிய மகன் சுற்றிவளைப்பு* தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம்தாம்பரம்: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு விஜயலட்சுமி (55) உள்ளிட்ட 3 மகள்களும், தேவராஜ் (53) உள்ளிட்ட 2 மகன்களும் உள்ளனர். இதில், தேவராஜ் தனது தாயை சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், முத்தம்மாள் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் சொத்தில் அவருக்கு பங்கு கொடுக்கவில்லை. இந்த சொத்து தொடர்பாக செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடுத்தார், அதில் மகனுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தில்  தாய் சாட்சி கூறினார். மகள் விஜயலட்சுமி இன்று சாட்சி சொல்ல உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதற்கு முத்தம்மாள் தனது மகள் விஜயலட்சுமியுடன் புறப்பட்டார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாநகர பேருந்தில் (த.எண்: 166) ஏறிய முத்தம்மாள் சீட்டில் அமர்ந்து இருந்தார். அவர்களை பின்தொடர்ந்து வந்த தேவராஜ், அரிவாளுடன் பேருந்தில் ஏறி, தாய் முத்தம்மாளை கழுத்தில் சரமாரி வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திேலயே இறந்தார். இதனை பார்த்து அலறி தடுக்க வந்த சகோதரி விஜயலட்சுமியை தலையில் வெட்டினார். இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், விஜயலட்சுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. பின்னர், முத்தம்மாள் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே, தாயை கொலை செய்து தப்பிக்க முயன்ற தேவராஜை அங்கிருந்த பயணிகள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை கேட்கும் கோரிக்கை: மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் உரிமைக்கான கோரிக்கை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மீனவர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்பதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார். அதன்படி மீனவர்களிடம் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதல் கருத்துகேட்பு கூட்டம் தமிழக மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன் தலைமை வகித்தார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் யூ.ஆர்.சபாபதி, அகில இந்திய தேர்தல் அறிக்கைக்குழு உறுப்பினர் சச்சின் ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மீனவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் எவை எவை இடம்பெற வேண்டும்? என்று கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டனர்.  இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள பல்வேறு மீனவர் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, கட்சத்தீவு அருகே தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை வாங்கி தருவது, தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது, மீனவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக சச்சின் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக அறிந்து நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களுடைய எண்ணங்களில் உள்ள கோரிக்கைகள், ஆலோசனைகளை கேட்டறிந்து வருகிறோம். தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் இறப்பு: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

சென்னை: புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் பேர் இறப்பதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார். கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பொது சுகாதாரதுறை இயக்குனர் குழந்தைசாமி, மாநில புகையிலை கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்பு  அதிகாரி சோமசுந்தரம்,  கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின்  தலைவர் நிர்மலா தேசிகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.பின்னர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பேசியதாவது:  சிகரெட்,  பான் மசாலா உட்பட புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களிடம் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் புகையிலையின் தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொது இடங்களில் புகையிலைப் பொருட்களை உபயோகப்படுத்த தடை உள்ளது. அதை மீறி பயன்படுத்தியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபாரதம் மூலம் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 1 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 48 லட்சம் அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புகையிலை பயன்பாடு 10 சதவீதம் குறைந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிக்க முக்கிய காரணியாக புகையிலை உள்ளது. நீங்கள் சிகரெட் பிடிப்பதால் உங்கள் வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது. இதனால், ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் பேர் பலியாகின்றனர். எனவே, சிகரெட் உட்பட உயிர்க்கொல்லியான புகையிலை எந்த வடிவத்தில் இருந்தாலும்  அதை எல்லாரும் தவிர்க்க வேண்டும். மேலும், புகையிலை பயிரிடுவதை விடுத்து விவசாயிகள் மாற்று பயிர்களுக்கு மாற வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இவ்வாறு பேசினார்.

அரசு மருத்துவமனையில் அதிகளவு மயக்க மருந்தால் கர்ப்பிணி பரிதாப மரணம்: முதல் பிரசவத்திலேயே சோகம், போலீசில் கணவன் புகார்

பல்லாவரம்: பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் இறந்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம், என்.எஸ்.கே நகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி ராஜகுமாரி (23). தம்பதிக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜகுமாரி தனது கணவர் வீட்டின் அருகில் உள்ள மணஞ்சேரி அரசு மருத்துவமனையில் தினமும் பரிசோதனை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் மீட்டு மணஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை தலை புரண்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்க்க முடியும் என்று கூறினர். மேலும், அறுவை சிகிச்சை செய்து, பிரசவம் பார்ப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர். பின்னர், திடீரென அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானதால் ராஜகுமாரியை மீட்டு மேல்சிகிச்சைக்காக எழும்பூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அவசரப்படுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் செல்லும் வழியில் ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜகுமாரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே ராஜகுமாரி கணவன் நித்தியானந்தம் குன்றத்தூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: என்னுடைய மனைவி ராஜகுமாரியின் இறப்பிற்கு மணஞ்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான் காரணம். அவர்கள்தான் பிரசவத்திற்காக கொடுக்கப்படும் மயக்க மருந்து அளவுக்கு அதிகம் கொடுத்துள்ளனர். அதனாலேயே ராஜகுமாரி இறந்துள்ளார். பிறகு எதற்காக காலையில் இருந்து இரவு வரையில் வீணாக காக்க வைக்க வேண்டும். எனவே ராஜகுமாரியின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பல மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு, அமைச்சரின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்று புகார் கூறிய மூதாட்டி: ராமாபுரத்தில் பரபரப்பு சம்பவம்

பூந்தமல்லி: ராமாபுரம் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை என்ற புகார் குறித்து ஆய்வுக்கு வந்த அமைச்சர் பெஞ்சமினை கையைப் பிடித்து தரதரவென்று குடியிருக்கும் தெருவுக்கே இழுத்துச் சென்று மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போரூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளை சேர்ந்த 2252 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர், அவர் அதிகாரிகளுடன் ராமாபுரம் ஏரியை ஆய்வு செய்வதற்காக சென்றார். ஏரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ராமாபுரம் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அமைச்சரின் அருகில் வந்து, எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறினார்.  பின்னர் அவர் அமைச்சரின் கையை பிடித்து தரதரவென தான் குடியிருந்து வரும் பகுதிக்கு அழைத்து சென்றார். அமைச்சரும் மூதாட்டியுடன் சிரித்தவாறே சென்றார்.  உடன் அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் பரபரப்புடன் சென்றனர். இதையடுத்து அந்த மூதாட்டி, எங்கள் பகுதிக்கு ஆண்டவர் நகர் என்று பெயர். ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை.  பல மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் உள்ள மெயின் ரோட்டுக்கு சென்றுதான் தண்ணீர் பிடித்து வரவேண்டியுள்ளது. எனக்கு வயதாகி விட்டதால் அவ்வளவு தூரம் சென்று தண்ணீர் பிடித்து வர முடியவில்லை. இல்லையென்றால் காசு கொடுத்துதான் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. அதற்கும் என்னிடம் வசதியில்லை. உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் கொடுங்கள் என்று அமைச்சரிடம் புகார் கூறினார். இதையடுத்து, அமைச்சர், தற்போது குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் எவ்வளவு சீக்கிரம் இந்தப் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். அமைச்சரின் பதிலால் ஆறுதல் அடைந்த மூதாட்டி குஷியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்காமல் மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்த அனைவருக்கும் உடனே பணி வழங்க வேண்டும் என்று அகில இந்திய ரயில்வே அப்ரண்டீஸ் சங்கம் சார்பில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், 21.6.2016க்கு முன்பு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். 18.9.2018 அன்று நடந்த குரூப் டி தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். உடல்தகுதி தேர்வு வைக்க கூடாது. அப்ரண்டீஸ் சட்ட திருத்தம் 2014ன்படி பயிற்சி முடித்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மழைநீர் கால்வாய் பணி மேற்கொள்ள நவீன குப்பை தொட்டிகள் உடைத்து அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் பல லட்சம் மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட நவீன குப்பை தொட்டிகளை, கால்வாய் பணிக்காக ஒப்பந்ததாரர்கள் உடைத்து அகற்றி வருவது பொதுமக்களிடைேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் குப்பை கெட்டுவதற்கு வசதியாக நகராட்சி சார்பில் ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி லாரிகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் மூலம் சேகரித்து மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வெளியேற்றி வந்தனர். பல ஆண்டுகளாக இந்த கிடங்கில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியால் சுற்றுப்பகுதி மக்கள் நோய் பாதிப்பில் தவித்து வருகின்றனர். மேலும், கோடை காலங்களில் இந்த குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்படுவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  இப்பிரச்னைக்கு தீர்வாக, நகராட்சி பகுதியில் சேரும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என பிரித்து, நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பவும், இதன் மூலம் குப்பை சேர்வதை தடுக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 10 கோடி மதிப்பீட்டில் நகராட்சி முழுவதும் 160 இடங்களில் நவீன குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டன. தரையில் இருந்து பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் தொட்டி கட்டப்பட்டு, அதன் மீது, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுவதற்கு ஏதுவாக இரண்டு தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதன் நடுவில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கு தனியாக ஒரு சிறிய தொட்டியும் அமைக்கப்பட்டது. இவற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டும்போது அவை அனைத்தும் தரை தளத்தின் கீழே சென்று தங்கிவிடும். இதன் மூலம் குப்பைகளை ஒரு வாரம் தொடர்ந்து கொட்டி வந்தாலும் விரைவில் நிரம்பி விடாமல் இருக்கும். பின்னர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் லாரிகள் மூலம் அந்த தொட்டியில் இருக்கும் குப்பை கழிவுகளை அகற்றி வந்தனர்.  இதன் மூலம் நகராட்சி பகுதியில் குப்பை தேங்குவது குறைந்து வந்தது. இந்நிலையில், மழைநீர் கால்வாய் பணிக்காக நகராட்சியின் பல இடங்களில் அமைக்கப்பட்ட நவீன குப்பை தொட்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அகற்றப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பல லட்சத்தில் அமைக்கப்பட்ட தொட்டிகள் வீணாவதுடன், பொதுமக்கள் குப்பையை சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக, மேற்கு தாம்பரம் அம்பாள் நகர் பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், அப்பகுதியில் 12 லட்சம் செவில் அமைக்கப்பட்ட 2 நவீன குப்பை தொட்டிகளை உடைத்து அகற்றிவிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் தற்போது குப்பைகளை சாலையிலேயே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சி முழுவதும் அமைக்கப்பட்ட நவீன தொட்டிகளால் குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு வசதியாக இருந்தது.  தற்போது, நகராட்சி பொறியாளர் பிரிவு சார்பில், நகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், நவீன குப்பை தொட்டிகளை உடைத்து அகற்றிவிட்டு, கால்வாய் பணியை மேற்கொள்கின்றனர். முதலில், கால்வாய் அமைத்துவிட்டு பின்னர் நவீன குப்பை தொட்டிகளை அமைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மழைநீர் கால்வாய்க்கு இடம் ஒதுக்கிவிட்டு நவீன  குப்பை தொட்டிகளை அமைத்து இருக்க வேண்டும். ஆனால், நகராட்சி அதிகாரிகள் அதை  செய்யாமல் பெருமளவில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.அதிகாரிகள் கொள்ளை:நகராட்சியின் பல பகுதிகளில் கால்வாய் பணிக்காக நவீன குப்பை தொட்டிகள் உடைத்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணி முடித்த பிறகு மீண்டும் புது டெண்டர் விட்டு நவீன குப்பை தொட்டிகள் அமைக்கிறோம் என்ற பெயரில் பல  லட்சங்களை அதிகாரிகள் கொள்ளையடிப்பார்கள். மக்களுக்கான திட்ட பணிகளை முறையாக ஆய்வு செய்து, செயல்படுத்தாமல், கமிஷனுக்காக அவசர கதியில் முறையான திட்டமின்றி அதிகாரிகள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.