Coimbatore - Dinakaran

கே.பி சுப்பையன் மரணம்

கோவை, டிச.16: கோவை லட்சுமி ஜூவல்லரி மற்றும் லட்சுமி ஓட்டல் உரிமையாளர் கே.பி.சுப்பையன் நேற்று காலை 10.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரணம் அடைந்த கே.பி சுப்பையனுக்கு கே.பி.எஸ் பிரகாஷ், கே.பி.எஸ் ராஜேஷ் என இரு மகன்களும், ரமணி விஜயன், டாக்டர் ராஜலட்சுமி, சாந்தி, ஜோதி என்ற மகள்களும் உள்ளனர். இறுதி ஊர்வலத்தில் தமிழக பால் வளத்துறை அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, எஸ்.பி வேலுமணி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மது விற்ற 18 பேர் கைது

கோவை,டிச.16: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 209 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்றுமுன் தினம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் பேரூர், ரேஸ்கோர்ஸ், சூலூர், துடியலூர், தொண்டாமுத்தூர், காட்டம்பட்டி, கருமத்தம்பட்டி, உக்கடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 209 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோவை மதுவிலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

பள்ளி குழந்தைகளுடன் பயணித்த மலை ரயில்

மேட்டுப்பாளையம்,டிச.16: மேட்டுப்பாளையத்திலிருந்து தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் ஊட்டி செல்கிறது. 100 ஆண்டு கடந்து உலகின் பழமையான நீராவியில் இயங்கும் ரயில் என்ற பெருமையை இந்த மலைரயில் பெற்றுள்ளது. ரயிலின் கட்டுமான வடிவமைப்பு மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமான காட்சிகள், பள்ளதாக்கு நீர்வீழ்ச்சி என மனதை மயக்கும் அனைத்து இயற்கை எழிலை காணும் வகையில் இந்த ரயில் பயணம் உள்ளது.  இந்த மலை ரயிலின் பாரம்பரியம் மற்றும் ரயில் இயக்கம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக ஆலாங்கொம்பில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 111 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து - குன்னூர் வரை இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் நேற்று அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக மாணவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். அதன் பின்னர் கல்லார், அடர்லி, ஹில்குரோ, ரன்னிமேடு ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தபட்டது. அப்போது ரயில் இயக்கம் குறித்து கோவை ரயில்வே வணிக பிரிவு ஆய்வாளர் சிட்டி பாபு விளக்கம் அளித்தார்.  பள்ளி மாணவ, மாணவிகளை மலை ரயிலில் அழைத்து சென்று அதன் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சேலம் கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் மற்றும் வணிக பிரிவு முதன்மை மேலாளர் விச்சுவின் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

‘மார்கழி திருவிழா 2018’ பக்தி சொற்பொழிவு இன்று துவக்கம்

கோவை,  டிச. 16: மார்கழி திருவிழா 2018 என்னும் பக்தி சொற்பொழிவு கோவையில் இன்று துவங்குகிறது.கோவை மார்கழித்திருவிழா பக்தி சொற்பொழிவு சுந்தராபுரம் செங்கப்ப  கோனார் திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிறு) துவங்கி, டிச.22ம் தேதி வரை  நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு அருட்பணி மன்றத்தினரின் திருமுறை  பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இன்று ஜோதி பார்வதி  குழுவினரின் பகவான் நாமசங்கீர்த்தனம், நாளைை (17ம் தேதி) ‘ஆதிசங்கரர்’ குறித்து  பேராசிரியை குருஞானாம்பிகை, 18ம் தேதி ‘வள்ளலார்’ குறித்தும், 19ம் தேதி  ‘ஆழ்வார்களும், கம்பனும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முருகேசன், 20ம் தேதி  ‘ரமணரின் வாழ்வும் வாக்கும்’ குறித்து டாக்டர் கலாமணிரங்கசாமி, 21ம் தேதி  ‘சக்தியின் பெருமை’ குறித்து பேராசிரியை விஜயசுந்தரி, 22ம் தேதி  ‘மாயக்கண்ணனும் மகாபாரதமும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் திருநாவுக்கரசு  ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

தாறுமாறாக ஓடிய காரால் 4 பேர் காயம்

கோவை, டிச.16: கோவை அவினாசி ரோட்டில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை சென்னையை சேர்ந்த அன்பரசன் (28) என்பவர் ஓட்டி சென்றார். கார் கோவை அரசு மருத்துவ கல்லூரி அருகே சென்ற போது தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற ஒரு பைக், மொபட் மற்றும் ஒரு கார் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற ஈஸ்வரன் (55), சந்தோஷ் (27), அமுதா (23), கலையரசன் (25) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  கார் மோதியதில் பைக், மொபட், மற்றும் காரின் பின் பக்கத்தில் சேதம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் ஓட்டிய அன்பரசனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர் மது போதையில் கார் ஓட்டிய போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாநகரில் 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்

ேகாவை, டிச. 16: ேகாவை மாநகரில் 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.  கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு மற்றும் சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:  தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டு, தமிழக முதல்வர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர், வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதி என அடிப்படை கட்டமைப்பு பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். மாநகரில், 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.  மண்டல அளவிலான களஆய்வு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினமும் துப்புரவு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.  மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு, எரியாத தெருவிளக்கு தொடர்பான புகார் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர்செய்ய வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.  மாநகராட்சியில் அங்கீகாரமற்ற மனைகளை, மாநகராட்சியின் விதிமுறைகளின்படி வரன்முறைப்படுத்தும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். கூட்டத்தில், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஐந்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  முன்னதாக, கோவை மாநகராட்சியில்  பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான மற்றும் மருத்துவ இயலாமை காரணமாக பணி  ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுதாரர்கள் உள்பட மொத்தம் 38 பேருக்கு கருணை  அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.

பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு கூட்டத்தில் சலசலப்பு

கோவை, டிச. 16:   கோவை மாநகராட்சி கலையரங்கில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’  என்ற விழிப்புணர்வு  கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறும்போது, ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சில்வர் தட்டு, டம்ளர்களை சரியாக கழுவாமல்  மீண்டும் மற்றொருவருக்கு வழங்கப்பட்டது. இதை, அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டித்தனர்.இதனால், ஓட்டல் ஊழியர்களிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, தட்டு, டம்ளர்களை முறையாக கழுவி பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்பின், சிற்றுண்டி பரிமாற்றம் சீராக நடந்தது. இந்த திடீர் சலசலப்பால் அரங்கத்திற்கு வெளியே சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

சோமனூரில் பஸ் நிலையம் கட்ட ரூ.3 கோடி நிதி

சோமனூர், டிச.16:சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு ஆண்டை கடந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தை புதியதாக கட்டரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு செப். 7ம் தேதி சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு, ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தடவர்களுக்கு, ரூ.50 ஆயிரம் அரசு நிதிஉதவி வழங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கூடுதல் நிதிஉதவி கேட்டு போராடி வருகின்றனர்.  இந்நிலையில், அரசு நிதியில் இருந்து ரூ.3 கோடி செலவில் பஸ் நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சியின் கட்டுப்பாட்டில், சோமனூர் மத்தியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த அண்ணா பஸ் நிலையத்திற்கு மேட்டுப்பாளையம், சத்தி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளுக்கு தினமும் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.மேற்கூரை இடிந்த விபத்தில் அங்கு செயல்பட்டு வந்த 16 கடைகள் மூடப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் அங்கு புதியதாக பஸ் நிலையம் அமைக்க ரூ.3 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த 16 கடைகள் அகற்றப்பட்டது. பஸ் நிலைய கட்டுமான பணிக்கு மண் பரிசோதனை செய்த பின், புதிய பஸ் நிலையம் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் கூறினார்.

குடிசை வாரியத்தால் வெள்ளலூரில் 992 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்டம்

கோவை, டிச.16: கோவை செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வெள்ளலூர் அமுதம் நகரில் 992 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படவுள்ளது. 67.80 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டும் பணி ஒரிரு மாதத்தில் துவக்கப்படும். தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும் 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டு, மின் இணைப்பு, குடிநீர், சாக்கடை இணைப்பு வழங்கிய பின்னர் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். 18 மாதத்தில் வீடுகளை கட்டி ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.   இந்த வீடுகளில் வசிக்கும் பயனாளிகள் தேர்வு மாநகராட்சி சார்பில் நடக்கிறது. நகரில் ஆட்சேபகரமான புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்படும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், அறிவொளி நகர், செல்வபுரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் குடிசை பகுதியில் வசித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. சில இடங்களில் பழுதான அடுக்குமாடி வீடுகள் இடிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டி தரப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கோவை புறநகர் பகுதியில் மேலும் வீடுகள் கட்ட ஆலோசனை நடக்கிறது. வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி வேகமாக நடக்கிறது.

மக்கள் சேவை மையம் வேலைவாய்ப்பு முகாம்

கோவை, டிச. 16:  மக்கள் சேவை மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. மக்கள் சேவை மைய தலைவரும், பாரதிய ஜனதா மாநில செயலாளருமான வானதி சீனிவாசன் இம்முகாமை துவக்கிவைத்தார். இம்முகாமில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. டிரைவர், கிளீனர், இன்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு வானதி சீனிவாசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். முகாமில், யுஎம்எஸ் டெக்னாலஜி நிறுவனர் ராஜ்குமார், ஸ்கில் ஈஸ்ட் பங்குதாரர் ஷேசாத்திரி, கேட் செண்டர் இயக்குனர் செல்வன், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

கோவை என்ஜிபி கல்லுாரியில் உலக தமிழ் பண்பாட்டு மைய விருது வழங்கும் விழா

கோவை, டிச. 16:  கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில் விருது வழங்கும் மற்றும் நூல்வெளியீட்டு விழா நேற்று நடந்தது.  இதில், கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன் வரவேற்றார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் 2018ம் ஆண்டு உ.வே.சா. தமிழறிஞர் விருதை முனைவர் ம.பெ. சீனிவாசனுக்கும், பெரியசாமி தூரன் தமிழ் படைப்பாளர் விருதை சின்னப்பபாரதிக்கும் , டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறை தமிழ் தொண்டர் விருதை பேராசிரியர் முத்துச்செழியனுக்கும் வழங்கினார்.  மேலும், உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி , டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் எழுதிய “சாமானியனும் சர்க்கரை நோயும்” என்ற நூலை வெளியிட்டார். இதனை, எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி பெற்றுக்கொண்டார். விழாவில், சாகித்திய அகாடமி விருதாளர் ராமகிருஷ்ணன், டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் முத்துசாமி, கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயலர் மற்றும் உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூரியன் எப்.எம் 93.5 ல் ‘மினிமம் பேச்சு - மேக்ஸிமம் பாட்டு’ நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பு

கோவை, டிச. 16:  தமிழகத்தின் நம்பர் 1 எப்.எம்., சூரியன் எப்.எம் 93.5, தனது நேயர்களுக்கு புதுமையான பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, ‘’மினிமம் பேச்சு - மேக்ஸிமம் பாட்டு’’ என்னும் தலைப்பில் புதுமையான நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சி, டிசம்பர் 17ம்தேதி (நாளை) முதல், 2019 ஜனவரி 17ம்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.நேயர்கள் திரும்ப திரும்ப கேட்க விரும்பும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இடைக்கால பாடல்களை அதிகம் கேட்கலாம். திரை இசையில் மனம் மகிழ, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தங்களது பேச்சை குறைத்து, பாடல்களை அதிகம் வழங்க உள்ளனர். சூரியன் எப்.எம் 93.5ல் இந்த புதுமையான நிகழ்ச்சி நேயர்களுக்கு நான்-ஸ்டாப் ட்ரீட் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கேளுங்க... கேளுங்க...

கேட்டுக்கிட்டே இருங்க... சூரியன் எப்.எம் 93.5. கோவை நேரு கல்வி குழுமத்தின் பி.கே.தாஸ் விருது வழங்கும் விழா

கோை, டிச. 16: கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் பி.கே.தாஸ் நினைவு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.  கோவை திருமலையம்பாளையம் நேரு கலை அறிவியல் கல்லூரியில் 10வது பி.கே.தாஸ் நினைவு, சிறந்த பேராசிரியர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், மொத்தம் 31 பேருக்கு சிறந்த பேராசிரியர்கள் விருது மற்றும் 7 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  தென்னிந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொறியியல், கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி பேராசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. இதில், நேரு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனிருதன் வரவேற்றார். நேரு கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.பி.கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய டெக்னிக்கல் எஜூகேஷன், துணை தலைவர் டாக்டர். எம்.பி. புனியா கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது: ஆசிரியர்கள் மாணவர்களிடம் நல்ல செய்திகளை கொண்டு செல்லும் கருவியாக உள்ளனர். மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசான்களாக விளங்க வேண்டும் என்றார்.விழாவில், கவுரவ விருந்தினராக தமிழக அரசின், முதன்மை தலைமை வன பாதுகாவலர் டாக்டர்.உபாத்தியா,நேரு கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், தேர்வு குழுவின் நடுவர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் ரத்தினமாலா ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை அருகே ஓடும் பஸ்சில் கழண்டு விழுந்த கண்ணாடி

பெ.நா.நாயக்கன்பாளை யம், டிச. 16:  கோவை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீர் என உடைந்து விழுந்தது.   ஊட்டியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த கே.எஸ்.பி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரனெ உடைந்து விழுந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்க பட்டது. இதில் டிரைவர் உட்பட பயணிகள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.   வண்டியின் அழுத்தம் மற்றும் கண்ணாடியை சுற்றி இருக்கும் ரப்பர்பீடிங் இளகியதால் உடைந்திருக்கும் என கூறப்படுகிறது.

சூலூரில் தி.மு.க. பயிலரங்கம்

சூலூர்., டிச.16: சூலூரில் திராவிடச் சிறகுகள் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பயிலரங்க நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.பி., திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  சூலூர் ஒன்றிய தி.மு.க. மற்றும் திராவிடச்சிறகுகள் அமைப்பு சேர்ந்து சூலூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிலரங்க நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சியில் எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது: வரும் காலத்தில் ஸ்டாப் செலக்சன் தேர்வுகள் அனைத்தும் இனி தேசிய அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு நடந்தால் மாநில மொழிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழகம் உட்பட அனைத்து மாநில மாணவர்களும் பாதிக்கப்படுவர்கள், தமிழ் உட்பட மாநில மொழிகளில் பயில்வோர் பணியில் சேர முடியாத அபாயம் ஏற்படும். எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன் நடைமுறையில் உள்ளதை மாற்றாமல் மாண்டல அளவிலான தேர்வுகளே தொடர வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழர்கள் அல்லாத வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படும் அபாயம் ஏற்படும் என்றார். இதையடுத்து தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது: எதிர்கால தமிழகம் ஸ்டாலின் தலைமையில் பிரகாசமாக அமைய உள்ளது. யாரையும் ஆசைகாட்டி அழைக்கும் இயக்கம் தி.மு.க அல்ல என பேசினார். விழாவிற்கு தெற்கு மாவட்ட அமைப்பாளர் சன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  புலவர் கௌதமன் கருத்துரை வழங்க, தெற்கு மாவட்ட அமைப்பாளர் தென்றல் செல்வராஜ், தளபதி முருகேசன், கபிலன் இருகூர் சந்திரன், சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருப்பூர், டிச.12: தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பி.என்.ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். கொள்கை பரப்பு ெசயலாளர் பால்ராஜ், துணை செயலாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், வரும் 31ம் தேதி தாராபுரத்தில் உள்ள அருள்ஜோதி திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோரை இதில் பங்கேற்க செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விபத்தில் காயமடைந்து தப்பிய மதுரை வாலிபர்கள் உடல் கிணற்றில் சடலமாக மீட்பு

பொங்கலூர், டிச.12: பல்லடம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மதுரை வாலிபர்கள் உடல் அங்கிருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.என்.புரத்தில் அரசுப் பஸ் மீது கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த இரு வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள், பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்குள் அப் பகுதி மக்கள் திரண்டு அவர்களை பிடித்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர், பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். போலீசை பார்த்த உடன் இருவரும்  அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்று மறைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள கிணற்றில் இரு ஆண் சடலம் மிதப்பதாக அப் பகுதி மக்கள் பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினருடன் வந்த போலீசார் கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டனர். விசாரணையில், மதுரை பரவையைச் சேர்ந்த ராஜேஷ்வரன் (38), சமயநல்லூரைச் சேர்ந்த சரவணக்குமார் (37) என தெரியவந்தது. மேலும், இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றபோது எதிரே வந்த பஸ்சில் மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீட்டாடிய, மதுவிற்ற 10 பேர் கைது

திருப்பூர், டிச.12: திருப்பூர் மாநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி சந்தை அருகே பணம் வைத்து சீட்டாடுவதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சிறப்பு எஸ்ஐ., சிவக்குமார் தலைமையில் சென்ற போலீசார், சீட்டாட்ட கும்பலின் தலைவன் ஆறுமுகம் (43) உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிமிருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், நல்லுார் ஆகிய இடங்களில் மது விற்ற சேவியர் ராஜா (21), வினோத்குமார் (28), சக்திவேல் (34) ஆகியோரை கைது செய்து 22 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாரதியார் பிறந்த நாள்

ஈரோடு,  டிச. 12: ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு  மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் மாநில  பொதுசெயலாளர் விடியல் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாரதியார்  படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இதில், வட்டார தலைவர்  புவனேஸ்வரன், பொது செயலாளர்கள் ரபீக், ராமன், செயற்குழு உறுப்பினர்  குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்பி., அலுவலக வளாகத்தில் போதை ஆசாமி தற்கொலை முயற்சி

ஈரோடு, டிச. 12:  ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரண்டு பேர் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் மகளிர் போலீசார் விசாரணை நடத்தாமல், நாளை(இன்று) வா என திருப்பி அனுப்பினர். இருப்பினும் அவர்கள் நீண்ட நேரம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்தனர். இந்நிலையில்   திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசார் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினர். மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் விசாரணை நடத்த முடியாமல் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.