Crime - Dinakaran

மண் கடத்தலை தடுத்த எஸ்.ஐ மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

பேரணாம்பட்டு:  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு போலீஸ் எஸ்ஐ சிலம்பரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வி.கோட்டா சந்திப்பு சாலையில் மணல் கடத்தல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரியவந்தது. அப்போது லாரி உரிமையாளர் மேல்பட்டி அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஆனந்தன்(34) போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆத்திரமடைந்த ஆனந்தன், எஸ்ஐ சிலம்பரசனை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் தப்பிய எஸ்ஐ மற்றும் போலீசார், லாரியை மடக்கி பிடித்து ஆனந்தன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலிச்சான்று தந்து பணியில் சேர்ந்த நூலகர் பணி நீக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டம் மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(47) என்பவர் வாலாஜா அடுத்த அனந்தலை ஊர்புற நூலகத்தில் நூலகராக பணியாற்றி வந்தார். இவரது சான்றிதழ்கள் உண்மை தன்மையை கண்டறிய அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வின்போது, நூலகர் லோகநாதன் பணியில் சேரும்போது போலி பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இந்நிலையில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நூலகர் லோகநாதன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சொத்து பிரித்து தராததால் வெறிச்செயல் பஸ்சுக்குள் புகுந்து தாய் வெட்டிக்கொலை

* தடுக்க முயன்ற சகோதரிக்கு வெட்டு* தப்பியோடிய மகன் சுற்றிவளைப்பு* தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம்தாம்பரம்: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு விஜயலட்சுமி (55) உள்ளிட்ட 3 மகள்களும், தேவராஜ் (53) உள்ளிட்ட 2 மகன்களும் உள்ளனர். இதில், தேவராஜ் தனது தாயை சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், முத்தம்மாள் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் சொத்தில் அவருக்கு பங்கு கொடுக்கவில்லை. இந்த சொத்து தொடர்பாக செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடுத்தார், அதில் மகனுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தில்  தாய் சாட்சி கூறினார். மகள் விஜயலட்சுமி இன்று சாட்சி சொல்ல உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதற்கு முத்தம்மாள் தனது மகள் விஜயலட்சுமியுடன் புறப்பட்டார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாநகர பேருந்தில் (த.எண்: 166) ஏறிய முத்தம்மாள் சீட்டில் அமர்ந்து இருந்தார். அவர்களை பின்தொடர்ந்து வந்த தேவராஜ், அரிவாளுடன் பேருந்தில் ஏறி, தாய் முத்தம்மாளை கழுத்தில் சரமாரி வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திேலயே இறந்தார். இதனை பார்த்து அலறி தடுக்க வந்த சகோதரி விஜயலட்சுமியை தலையில் வெட்டினார். இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், விஜயலட்சுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. பின்னர், முத்தம்மாள் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே, தாயை கொலை செய்து தப்பிக்க முயன்ற தேவராஜை அங்கிருந்த பயணிகள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

6.5 லட்சம் அமெரிக்க கரன்சி பறிமுதல்

சென்னை: துபாய்க்கு கடத்த முயன்ற 6.5 லட்சம் அமெரிக்க கரன்சியை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்தவர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா (38) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் செல்ல வந்தார்.  அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. பின்னர் அவரை, தனி அறைக்கு அழைத்து சென்று, அதிகாரிகள் முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது, அவரது உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு 6.5 லட்சம். இதையடுத்து அப்துல்லாவை கைது செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

வீட்டை உடைத்து 35 சவரன் கொள்ளை

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் வெற்றிக்கண்ணன் (31), தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகை, 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கதவு, பீரோவில் பதிவாகி இருந்த ரேகையை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்து வருகின்றனர்.

போதை பொருள் சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி: போரூர் ரவுண்டானா சந்திப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியே வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட மாவா போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த விஜய் (24), என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாவா போதைப் பொருளை சப்ளை செய்து வந்த வட மாநில வாலிபர்கள் ரமேஷ்குமார் (31), விபேஷ்கன்னா (32) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர். நுங்கம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை நேற்று போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள், பல கடைகளுக்கு மாவா சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

லஞ்சம் தராததால் பொய் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் ஊர் தலைவராக இருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு செஞ்சி, ரோசனை காவல் நிலைய எஸ்ஐ சதீஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் என்னை காவல் நிலையம் அழைத்து சென்று, லஞ்சம் கேட்டு மிரட்டினர்.  கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினர். பின்னர் எனது சொத்து பத்திரங்களை எடுத்துவர சொல்லி அதில் ஒரு நிலத்துக்கு 2 லட்சம் எனக்கு கொடுத்துவிட்டு நிலத்தை வாங்கிக் கொண்டனர். மேலும் 3 லட்சம் லஞ்சமும் கேட்டனர். இதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சதீஸ் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே ராமமூர்த்திக்கு அரசு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அதை இன்ஸ்பெக்டர், எஸ்ஐயிடம் இருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும். என்று கூறி உத்தரவிட்டார்.

சென்னை அருகே வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் கண்ணன் என்பவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கண்ணன் வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

மதுரை: திருநகர் ஹார்விபட்டி பூங்கா அருகே ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரைவீரன், தங்கப்பெருமாள், முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 3.3 கிலோ கஞ்சா மற்றும் 13 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழக்கரையில் மளிகைக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

ராமநாதபுரம்: கீழக்கரையில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மளிகைக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முருகன் வெளியூர் சென்றதை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

துப்பாக்கியால் சுட்டு 3.50 லட்சம் பறிப்பு கொள்ளையரை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

ஊத்தங்கரை, : ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் 3.50 லட்சத்தை பறித்து சென்ற கொள்ளையரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாளம்பட்டியில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக ஆனந்தன் (42), உதவி விற்பனையாளராக முருகன் (50) ஆகியோர் உள்ளனர். இவர்கள் கடந்த 16ம் தேதி இரவு, விற்பனை முடிந்து 3.50 லட்சத்துடன் ஒரே பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். ஊத்தங்கரை-அரூர் சாலை காட்டேரி பகுதியில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 வாலிபர்கள், நாட்டு துப்பாக்கியால் முருகன், ஆனந்தனை சுட்டு, அவர்களிடம் இருந்த 3.50 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர். காயமடைந்த இருவரும் தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட எஸ்பி மகேஷ்குமார் உத்தரவின்பேரில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கொள்ளையரை பிடிக்க ஊத்தங்கரை டிஎஸ்பி (பொறுப்பு) தங்கவேல் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கொள்ளையரை தேடி வருகின்றனர்.

போரூரில் பரபரப்பு சம்பவம் நைஜீரியா வாலிபர் உள்பட 2 பேர் துப்பாக்கி முனையில் கைது: மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தது அம்பலம்

சென்னை: போரூரில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த நைஜீரிய நாட்டு வாலிபர் உள்பட இருவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் - தாம்பரம் செல்லும் பைபாஸ் சர்வீஸ் சாலை, போரூர் அருகே கடந்த 14ம் தேதி கொகைன் விற்கப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சாதாரண உடையில் சென்று கொகைன் வாங்குவதைபோல நடித்தனர். அவர்களை வாடிக்கையாளர்கள் என கருதிய நபர் போலீசாருக்கே கொகைன் விற்றான்.  உடனடியாக அவனை பிடித்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில், கொகைன் விற்ற வாலிபர் மதுரவாயலைச் சேர்ந்த  குமரேசன்(26) என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து ₹70  ஆயிரம் மதிப்புள்ள 22 கிராம் கொகைனை பறிமுதல் செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில் அம்பத்தூர் துனை கமிஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பிடிபட்ட குமரேசனிடம் தீவிர விசாரணை  செய்து வந்தனர். அவருக்கு கொகைன், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சப்ளை செய்தவர் யார்? எங்கிருந்து வருகிறது. இதில் ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.  விசாரணையில் நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமிருந்து வாங்கியதாக குமரேசன் தெரிவித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போரூர் பைபாஸ் சர்வீஸ் சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  குமரேசன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போதை பொருட்களை சப்ளை செய்த நைஜீரியா நாட்டை  சேர்ந்த வாலிபர் மற்றும் ஆவடியைச் சேர்ந்த அருண்திவாகர் ஆகிய இரண்டு பேர் வந்தனர். அங்கு மாறு வேடத்தில் இருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நைஜீரிய நபர் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார்  துப்பாக்கி முனையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வு சைமன் ஒபீனா(30), என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த ஆவடியை சேர்ந்த அருண்திவாகர்(33), என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கொகைன் மற்றும் எக்ஸ்டாசி  எனும் 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’குமரேசன் ஆரம்ப நாட்களில் அடிக்கடி கோவா சென்று வருவார். அப்போது அங்கு நைஜீரிய நாட்டு  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு இவனது தேவைக்காக கொகைன் மற்றும் தடை செய்யப்பட்ட எக்ஸ்டாசி எனும் மாத்திரைகளை வாங்கி உபயோகித்து வந்துள்ளான். பின்னர் போதை கும்பல் குமரேசனை மூளை சலவை செய்து  போதை மாத்திரைகளை மொத்தமாக கொடுத்து விற்பனை செய்து கொடுத்தால் கமிஷன் கொடுப்பதாக கூறியதையடுத்து கடந்த சில மாதங்களாக தனது நண்பர் அருண்திவாகர் உதவியுடன் இந்த போதை மாத்திரைகளை வாங்கி  விற்பனை செய்து வந்துள்ளார். அதற்கு சாதாரண குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் வைத்து விற்பனை செய்தால் போலீசார் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து போதை  மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளான். இதில் குறிப்பாக சினிமா துறையை சார்ந்தவர்கள், இரவு நட்சத்திர விடுதிகளில் நடனம் ஆடுபவர்கள், பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி கொடுப்பவர்கள் என பல தரப்பினரிடம் இந்த போதை மாத்திரைகளை விற்பனை  செய்து வந்துள்ளார். இந்த ஒரு மாத்திரை சுமார் ₹500 முதல் ₹3ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மாத்திரையை சாப்பிட்டால் வாசனை வராது. இதனால் வீட்டிலோ வெளியிலோ போதை மாத்திரை  சாப்பிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கொகைன் மதிப்பு சுமார் ₹10 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குமரேசன், அருண் திவாகர், நைஜீரிய நாட்டு வாலிபர் சுக்வு சைமன் ஒபீனா  ஆகியோருக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர் 21 பேர் மதுரை அருகே சுற்றிவளைப்பு

மதுரை:  மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பாஸ்கரன் (65). அருகிலேயே இவரது வீடு உள்ளது. கடந்த 6ம் தேதி அதிகாலை பாஸ்கரன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். அசிறிது நேரத்தில் அவரது வீட்டு காவலாளி, பால் வாங்குவதற்காக வெளியே வந்தார். அப்போது துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல், அவரை வீட்டிற்குள் தள்ளிச் சென்றது. கர்சீப்பால் முகத்தை மூடியிருந்த அந்த கும்பல், டாக்டரின் மனைவி மீரா (60), வேலைக்கார பெண் மற்றும் காவலாளி ஆகிய மூவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி டாக்டர், மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.இதில், கொள்ளை கும்பல் திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.  திருமங்கலம் அருகே ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி என்ற குருட்டு கணபதிக்கு (39) கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முதலில் அவரை தனிப்படை மடக்கியது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பெரிய நெட்ஒர்க் மூலம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குறிப்பாக, முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை டார்கெட் வைத்து கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. குருட்டு கணபதியிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகளுக்கு, தங்கள் முன்னிலையில் கணபதியை பேச வைத்துள்ளனர்.இந்த உரையாடல் மூலம், கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 20 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மதுரை வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவில் முகாமிட்டனர். தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கிய கன்னியாகுமாரி அகத்தீஸ்வரம் ராஜேஷ் (41), மதுரை விராகனூர் பழனிவேல், சுரேஷ், வில்லாபுரம் மணிகண்டன், திருமங்கலம் காமராஜர்புரம் பகுதி கார் டிரைவர் மாரிமுத்து, மதுரை ஹரிகிருஷ்ணன், கண்ணன், வாடிப்பட்டி அய்யங்கோட்டை செல்வம், வேடசந்தூர் சிவக்குமார் உட்பட 21 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். சிக்கிய அனைவரையும் மதுரையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்தும் கொள்ளைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.கோவாவில் உல்லாசம்தமிழகத்தில் கொள்ளையடிக்கும் பணத்துடன் இந்தக் கும்பல் கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லுமாம். அங்கு, கையில் இருக்கும் பணம் தீரும் வரை பெண்களுடன் உல்லாசமாக இருந்து, ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். தற்போதும் கோவாவிற்கு சென்று விட்டு சென்னை வழியாக மதுரை வந்த போது தான் கும்பல் போலீசாரிடம் சிக்கி இருக்கிறது.

அம்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அம்பத்தூர் அடுத்த புதூர், கருணாநிதி தெருவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக சிவராஜ் பணியாற்றி வருகிறார். இவர், அம்பத்தூர் பகுதி தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறதா, கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று மதியம் 2 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி லவக்குமார் தலைமையில் ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்திற்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த சோதனை 6 மணி நேரம் நடந்தது.இதில், அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாக கூறுப்படுகிறது. மேலும், விசாரணைக்கு தேவைப்பட்டால் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

சென்னை: பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரமீதா (30). தம்பதிக்கு பிரதீப்ராஜ் (8) என்ற மகனும், இளநிலவு (7) என்ற மகளும் உள்ளனர். கணவருக்கு தெரியாமல் ரமீதா சிலரிடம் ₹20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதை திருப்பி தராததால், கடன் கொடுத்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபற்றி அறிந்த ரமேஷ் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதில் மனமுடைந்த ரமீதா, துணி சலவைக்கு பயன்படுத்தும் ரசாயனத்தை தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்து மயங்கினார். அவரை மீட்டு மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 குழந்தைகளையும் சென்ைன எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.* பெரம்பூர் அடுத்த திரு.வி.க நகர்  காமராஜர்  நகர் 1வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (28) என்பவரை, அதே பகுதி  எம்எஸ்எல் தெருவை சேர்ந்தவர் அமானுல்லா (47), திரு.வி.க நகர் 4வது  தெருவை சேர்ந்த முபாரக் அலி  (43), ராஜ்குமார் (45) ஆகியோர் சரமாரி தாக்கியதில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து  அமானுல்லா, முபாரக் அலி, ராஜ்குமார் ஆகியோரை கைது  செய்தனர்.* திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை வெங்கிடசாமி 2வது தெருவை  சேர்ந்தவர் ரமேஷ்குமார் (18), ரோட்டரி நகர், கெனால்  தெருவை சேர்ந்த விக்னேஷ் (18). கல்லூரி மாணவர்களான இவர்கள் நேற்று முன்தினம் பெசன்ட்நகர்  சாலையில் பைக்கில் சென்றபேது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதல், சிகிச்சை பலனின்றி ரமேஷ்குமார் இறந்தார்.  விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.* அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன்  (23) என்பவரை தாக்கிய ஆவடி, காமராஜர் நகர் விவேகானந்தா தெருவை  சேர்ந்த ராஜேஷ் (29), ஆவடி ஆனந்தம் நகர் ராமசாமி தெருவை சேர்ந்த  சந்திரசேகரன் (24) என்ற இரு நண்பர்களை போலீசார் கைது செய்தனர். * பட்டாபிராம் கருணாகரச்சேரி கிராமத்தில் உள்ள  இலவச தையல் பயிற்சி மையத்தில் 5  தையல் மெஷின்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த  தண்டுரை, பள்ளத்தெருவை சேர்ந்த சுரேஷ் (22), அதே  பகுதியை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் (22), வள்ளலார் நகர்,  3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), கருணாகரச்சேரி, பெருமாள் கோயில்  தெருவைச்சேர்ந்த கமல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். * பட்டாபிராம் முல்லை நகரை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவரை சரிமாரி தாக்கிய பட்டாபிராம் தண்டுரை  பள்ளத்தெருவை சேர்ந்த சுரேஷ் (22), அதே பகுதி பெருமாள் கோயில் தெருவைச்  சார்ந்த குமார் (22), பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (22),  பட்டாபிராம், வள்ளலார் நகர் 3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர். * கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை  சேர்ந்த அசோக்குமார் (48) என்பவர், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தார். வாலிபருக்கு கத்திக்குத்து:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்லாம் (32). நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டையில்  உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோது, நண்பர்கள் சிலருடன், அதே பகுதியில் உள்ள பெட்டி கடை முன் சிகரெட்  பிடித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த  ரவுடி சசிகுமார் (28) என்பவருக்கும், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சசிகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்லாம்  வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. போலீசார்  வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது  செய்தனர்.

துபாயில் இருந்து கடத்தி வந்த 50 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: வாலிபர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து 50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, மத்திய வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, அதில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை கண்காணித்தனர். அதில், சென்னையை சேர்ந்த அபுபக்கர் என்பவர், தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 2 தங்க கட்டிகளை எடுத்து ரகசியமாக ஜீன்ஸ் பேன்டில் வைத்ததை பார்த்தனர். உடனடியாக அதிகாரிகள், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன், சர்வதேச மதிப்பு 50 லட்சம். பின்னர் அவரை கைது செய்து, சுங்க சோதனை பிரிவுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என தெரிந்தது. அவரை கைது செய்து, கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கரன்சி சிக்கியது: சென்னையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்தவர்களின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது (36) என்பவர் சுற்றுலா பயணியாக இலங்கை செல்ல வந்தார். அவரது கைப்பையை சோதனையிட்டபோது, கருப்பு பேப்பரில் சுற்றப்பட்ட பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர்.அதில், பல்வேறு நாடுகளின் கரன்சிகள் இருந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹5 லட்சம். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபர் முகமதுவை கைது செய்தனர்.

மதுரை அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை: 4 பேர் கைது

மதுரை: மேலூரில் துப்பாக்கி முனையில் மீரா என்பவரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரிடம் இருந்து ரூ.32லட்சம், துப்பாக்கி, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல்-நாமகிரிப்பேட்டை அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா அளித்த புகாரில் போலி மருத்துவர்கள் தமிழ்செல்வன், இளவரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீ மாருதி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து மருத்துவம் பாத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

நாகை: மயிலாடுதுறை குத்தாலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன், சண்முகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கும்பகோணத்தில் கடந்த 2016ம் ஆண்டு தட்சிணாமூர்த்தி வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை போரூரில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: சென்னை போரூரில் கொகைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றதாக கைதான குமரேசன் தந்த தகவலின் பேரில் நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார். பெங்களுருவில் கைதான நைஜீரிய இளைஞரிடம் இருந்து 450 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.