Cuddalore - Dinakaran

கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஜல்லிகள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

நெய்வேலி, பிப். 15:   நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் பகுதியை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கிராம மக்களுக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் இவ்வழியாக வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, சத்திரம், வசனாங்குப்பம், கட்டியங்குப்பம், சிறுதொண்டமாதேவி, அப்பியம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இவ்வழியாக தினந்தோறும் நெய்வேலி செல்கின்றனர். இச்சாலையில் பல வருடங்களாக ஜல்லிகள் பெயர்ந்து கரடு, முரடாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாய கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சேதமடைந்த சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இச்சாலை வழியாக சென்றால் நெய்வேலியில் இருந்து கடலூருக்கும் செல்லும்  குறுக்கு வழிச்சாலை.   இதனால் பல கிலோமீட்டர் தூர செலவு மிச்சம் ஆகும் என்பதால் நெய்வேலி பகுதியில் உள்ள பொதுமக்கள் இவ்வழியாக நாள்தோறும் பயணிக்கின்றனர். நெய்வேலி ஆர்ச் கேட் சுற்றியுள்ள கிராம மக்கள், நகர பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேகாக்கொல்லை செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். அவ்வழியே தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தங்களது சைக்கிள்களில் செல்லும்போது விபத்து  ஏற்படுவதாக  பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், இச்சாலை கரடு, முரடாக இருப்பதால், அடிக்கடி பஞ்சராகி வருகிறது. இப்பகுதி வசிக்கும் மக்கள் சாலை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பழுதான சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மூதாட்டி பலி

வேப்பூர், பிப். 15:வேப்பூர் அடுத்த மதுரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவரது மனைவி நீலாவதி(72). இவர் நேற்று முன்தினம் மாலை மாரியம்மன் கோயில் மேடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, மாதுளை பழங்களை விற்பனை செய்து கொண்டு வந்த    சரக்கு வாகனம், எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த நீலாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தியவர் கைது

புவனகிரி, பிப். 15:  புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ணிக்கொல்லை கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர்.       அதில் எவ்வித அனுமதியுமின்றி அருகில் உள்ள பரவனாற்றிலிருந்து மணல் திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை கைப்பற்றிய போலீசார், மணல் கடத்தியதாக மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (42) என்பவரை கைது செய்தனர்.

ரகளை வாலிபர் கைது

நெய்வேலி, பிப். 15:   நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, அண்ணா தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் மகன் சபரிநாதன் (36). இவர் 21ம் பிளாக்கில் உள்ள பேருந்து நிலையம் அருகே மது அருந்திக்கொண்டு சாலையில் செல்பவர்களை பார்த்து ஆபாசமாக பேசி இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி சம்பவ இடத்துக்கு வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்றார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தவாக செயற்குழு கூட்டம்

வேப்பூர், பிப். 15: நல்லூர் ஒன்றிய த.வா.க செயற்குழுக் கூட்டம் வேப்பூரில் நடந்தது. த.வா.க., ஒன்றிய செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலர் அறிவழகன், மாவட்ட செயலர் அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிர்வாகி சற்குருநாதன் வரவேற்றார். ஒன்றிய இளைஞரணி தலைவர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வரும் 28ம் தேதி சென்னையில் நடக்கும் மக்கள் பேரணியில் திரளாக பங்கேற்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை

முஷ்ணம், பிப். 15: முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு பன்னிரு கருட சேவை நடந்தது.முஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயிலில் மாசி மாதம் மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பெருமாள் தங்க கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து கருட சேவை நம்மாழ்வார் கைங்கர்ய சபா சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்து ஒவ்வொன்றாக அணி வகுத்தன.முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு முதன்முதலாக பன்னிரு கருட சேவை வாகனங்களில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதனை திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோவிந்தராஜபெருமாள் சன்னதி அறங்காவலர் ரெங்காச்சாரியார் முன்னிலையில் முஷ்ணம் தெத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 25 கருட சேவை சாத்தியன், திருப்பயர், கோவிலூர், ஏரப்பவூர், பெரம்பலூர், மேமாத்தூர், ரெட்டிகுப்பம், கோமங்கலம், இளமங்கலம், கோபாலபுரம், பெ.பூவனூர், வண்ணாங்குடிகாடு, ஆண்டிமடம், அணிகுதிச்சான், வலசக்காடு, நெடுஞ்சேரி, கோ.பவழங்குடி, விருத்தாசலம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கருட சேவை வாகனங்கள் அணிவகுத்தது. இதில் 500 பாகவதர்கள் பங்கேற்ற பஜனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பாம்பு கடித்து விவசாயி பலி

பண்ருட்டி, பிப். 15: பண்ருட்டி அருகே பெரியகள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (75), விவசாயி. இவர் கடந்த 7ம்தேதி தனக்கு சொந்தமான வயலில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இவரது உறவினர் பாண்டியன் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி

விழுப்புரம், பிப். 15: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்புரை வழங்கினார். இஎஸ்எஸ்கே கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் விழுப்புரம் சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சாமிக்கண்ணு நோக்கவுரை வழங்கினார். அவரது உரையில் கிராமப்புற பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்து வருகின்றனர். விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவுக்கு மாணவர் சமுதாயம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அருணகுமாரி, சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பற்றி அறிமுகவுரை ஆற்றினார். அதில் பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படக்கூடியவர் என்று புகழாரமும் சூட்டினார். பின்னர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசும் போது, இந்தியாவின் எதிர்கால தூண்கள் இளம் தலைமுறையினர். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு சிறந்து விளங்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் முதலாக பெண்களுக்காக போராடியவர். பெண்கல்வி அவசியம். 55 ஆண்டுகளில் பெண் கல்வியை 4 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியால் கல்வி கற்றுள்ளனர் என கூறினார். இந்நிகழ்ச்சியில் லயன் ஆர்.சந்திரன், சரவணன், சண்முகம், ஜெயகுமார், ராமமூர்த்தி மற்றும் பல்வேறு தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெய்வானை அம்மாள் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத்துறை மாணவி அர்ச்சனா, புதுடெல்லியில் பிரதமர் மோடி பங்குபெறும் பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், குவாரியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் இணை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெய்வானை அம்மாள் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் விஜய சண்முண்டீஸ்வரிக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்க கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

சிதம்பரம், பிப். 15:   கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் பழைய கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராம மக்கள் வெள்ள நீரால் பாதிப்படைந்தனர். வீடுகள், பயிர்கள், தோட்டப்பயிர்கள் சேதமடைந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டன. அதில் கீழக்குண்டலப்பாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 81 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீட்டு தொகை யாருக்குமே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று காலை பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கொள்ளிடம் தடுப்பணை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவி.மணிவண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

முஷ்ணத்தில் டிஆர்ஓ ஆய்வு

முஷ்ணம், பிப். 15: முஷ்ணம் பகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பிரதம மந்திரியின் விவசாய கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை கணினி மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த பணிகள் எந்த அளவில் நடந்துள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் ஆய்வு செய்தார். சோழத்தரம், நந்தீஸ்வரமங்கலம், பாளையாங்கோட்டை, தேத்தாம்பட்டு, முஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனையடுத்து முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் புகழேந்தி, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சாமிக்கண்ணு ஆகியோரிடம் பணி நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது, , சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், பொது மண்டல துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் நிதி பிரச்னை: பேச்சு வார்த்தையில் உடன்பாடு

புவனகிரி, பிப். 15: சிதம்பரம்- கடலூர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை 45ஏவை நான்கு வழிச்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதலாக நிதி வழங்கக் கோரியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்த வலியுறுத்தியும் நேற்று புதுச்சத்திரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பரங்கிப்பேட்டை ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த சாலை மறியல் போராட்டத்தையொட்டி, சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஹேமஆனந்தி முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோருவது குறித்து 10 தினங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத முதலாவது வழித்தடத்தை பயன்படுத்துவது.  இரண்டாவது வழித்தடத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு கடிதம் எழுதுவது, கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைப்பதற்கு பதிலாக விவசாயிகள் பாதிக்காத, மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு கடிதம் எழுதுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

முஷ்ணம் பிப். 15: முஷ்ணம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக்கொள்ள எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அகற்றவில்லை.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஷ்வரி, உதவி பொறியாளர் கார்த்திக், சாலை ஆய்வாளர் வெற்றிசெல்வம் ஆகியோர் முன்னிலையில் சாலை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முஷ்ணம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒறையூரில் சுகாதார சீர்கேடு

பண்ருட்டி, பிப். 15:பண்ருட்டி அருகே ஒறையூர், எனதிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களும் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். ஒறையூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த இரு கிராமங்களிலும் முக்கியசாலையில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர்.இதன் காரணமாக அந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மூக்கை பிடித்தபடிதான் சுமார் அரை கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. பல வருடங்களாக இப்பிரச்னை தீர்க்கப்படாமலே உள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் நேரில் சென்று இப்பகுதியை தூய்மையாக வைத்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதகுகள் அமைக்காததால் சுண்டுக்குழி ஏரியில் வீணாக வழிந்தோடும் தண்ணீர்

குறிஞ்சிப்பாடி, பிப். 15: வடலூர் பார்வதிபுரத்தில் அமைந்துள்ள சுண்டுக்குழி ஏரியில் மதகுகள் அமைக்க வேண்டும், என்எல்சி கசடு மணல் படிந்து மீண்டும் தூர்ந்து போவதை தடுக்க நீரை வடிகட்டி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் வருவாய் கிராமத்தில் சுண்டுக்குழி ஏரி அமைந்துள்ளது. சுமார் 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் பார்வதிபுரம், நைனார்குப்பம், வெளிமருதூர் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இப்பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனை தூர்வாரி ஆழப்படுத்தி, மதகுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து வடலூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சுண்டுக்குழி ஏரி, காரப்பா ஏரி மற்றும் வெங்களத்து ஏரி ஆகிய ஏரிகளை தூர்வார என்.எல்.சி. இந்தியா நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் பார்வதிபுரத்தில் உள்ள சுண்டுக்குழி ஏரியை ரூ.52 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணி முடிந்துவிட்டது. ஆனால் ஏரியில் மதகுகள் அமைக்கவில்லை. ஏரியில் தேங்கும் தண்ணீர் மதகு வசதி இல்லாததால், கடந்த ஆண்டு பருவமழை காலங்களில் பெய்த மழைநீர் மற்றும் என்.எல்.சி., சுரங்கம் வெளியேற்றும் நீர் ஆகியவை ஏரியில் தேங்காமல் வீணாக வழிந்தோடியது. இதனால் பாசன விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க ஏரியில் 3 மதகுகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏரி தூர்வாரும் பணி முழுமை பெறவில்லை என்றும், ஏரியின் நீர்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.என்எல்சி சுரங்கத்தில் இருந்து வரும் தண்ணீரில் வண்டல் மண் கலந்து ஏரியில் படிவதால், தூர்வாரப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் ஏரி மீண்டும் தூர்ந்து வருகிறது. இதனால் கால்நடைகள் தண்ணீர் பருக ஏரியில் சென்று, சிக்கிக் கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனை தடுக்க ஏரிக்கு முன்னதாக குட்டைகள் அமைத்து என்எல்சி சுரங்க நீரை அதில் தேக்கி, வண்டல் மணலை வடிந்த பின்னர் நீரை ஏரியில் தேக்க வேண்டும்.தற்போது மழை இல்லாத சூழலை பயன்படுத்தி ஏரியில் மதகுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீக்குளித்த தொழிலாளி பரிதாப சாவு

பண்ருட்டி, பிப். 14:   பண்ருட்டி அருகே மானாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் தாமோதரன் (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (35). தாமோதரன் தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதையடுத்து தம்பதியர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம்தேதி வழக்கம்போல் தாமோதரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி கண்டித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டதால் தாமோதரன் விளையாட்டுத்தனமாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.  இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தாமோதரன் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி சரளா முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி

சிதம்பரம், பிப். 14: நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடந்தது. சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட 4 நகராட்சிகளை சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமிற்கு சிதம்பரம் நகராட்சி மேலாளர் (பொறுப்பு) காதர்கான் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சிதம்பரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷோபினி, சிதம்பரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள் பால்டேவிஸ், தர்மராஜ், சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கருணாநிதி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஹரிகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோர் சுகாதாரம் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் குறித்தும், மருத்துவ குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

தரமில்லாத சாலை மீண்டும் சீரமைப்பு

முஷ்ணம், பிப். 14: முஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பழைய மருத்துவமனை தெரு, கசப்பை மற்றும் கொம்பாடித் தெரு பகுதியில் தார் சாலை அமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை திட்டப்பணியின் கீழ் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்த சாலை தரமற்று ஜல்லிகள் பெயர்ந்து குவியல் குவியலாக சிதறி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிதறி கிடக்கும் ஜல்லியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வந்தனர்.இதனால் இச்சாலைமேல் முறையாக தார் ஊற்றி ரோடுரோலர் வாகனம் மிதித்தால் தான் சாலை முழுமையாக இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தும் சீரமைக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தரமற்ற சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளை குவியலாக கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து கடந்த 8ம் தேதி தினகரனில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜா மேற்பார்வையில் உதவி பொறியாளர் சீனிவாசன், முஷ்ணம் பேரூராட்சி நிர்வாக செயலர் மல்லிகா, பணி மேற்பார்வையாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் கசப்பை சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகளை சரிசெய்து மீண்டும் தார் ஊற்றி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து பழைய மருத்துவமனை தெரு மற்றும் கொம்பாடித்தெரு சாலைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

காங். தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கடலூரில் உற்சாக வரவேற்பு

கடலூர், பிப். 14: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ். அழகிரிக்கு கடலூரில் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக அழகிரி கடலூருக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் கடலூர் நகரில் காங்கிரஸ் கொடி தோரணங்கள் வைக்கப்பட்டு வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. தனது சொந்த ஊரான கீரப்பாளையத்திலிருந்து கடலூர் வருகை தந்த அழகிரிக்கு முதுநகர் பகுதியில் இருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழகிரி அழைத்துவரப்பட்டார். பின்னர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார். கடலூர் நகர செயலாளர் கோபால் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராஜன் மற்றும் நகர தலைவர் வேலுசாமி, மாவட்ட துணை தலைவர் ரங்கமணி, மாநில பொதுக்குழு குமார், வட்டார தலைவர் ரமேஷ் ரெட்டியார், மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மார்க்கெட் மணி, சுந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பண்ருட்டி வேலுமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிவப்பிரகாசம், செந்தில், ஜெயராமன், ராஜேஷ், காமராஜ் மற்றும் காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், தொழிலாளர் அணி ராமராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை 8 பேர் மீது வழக்கு: கணவன் அதிரடி கைது

திருக்கோவிலூர், பிப். 14: சங்கராபுரம் வட்டம் மைக்கேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து(35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரிமளாமேரி(24) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்தின் போது பரிமளாதேவியின் பெற்றோர் வீட்டில் 7 சவரன் நகையும், ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சவரிமுத்துவும், அவரது குடும்பத்தினரும் பரிமளாதேவியிடம் தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று கணவர் குடும்பத்தினர் மீண்டும் ரூ.3 லட்சம் ரொக்கம் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று கூறி அவரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பரிமளாதேவி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் சவரிமுத்து, மாமனார் எரோனிமூஸ், மாமியார் ரீத்தாமேரி, கணவரின் சகோதரிகள் விமலாராணி, அமலோற்பவமேரி, அருள்ஜோதி, ஆரோக்கியமேரி மற்றும் செட்ராஜ் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அதில் சவரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் மணல் லாரிகள்

பண்ருட்டி, பிப். 14: பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக அரசு மணல் விற்பனை மையம் இயங்கி வருகிறது. பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து அள்ளப்பட்டு இங்கு குவித்து வைத்து மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை மையத்தில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் மணல் எடுக்க வரும் லாரிகள் ஒரே நேரத்தில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.  மேலும் அரசு மணல் விற்பனை மையம் எதிரில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. மணல் எடுத்து செல்லும் லாரிகள் தார்பாய் கொண்டு மூடப்படாமல் செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மணல் விற்பனை மையம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.