Dharmapuri - Dinakaran

தொடர் விடுமுறையையொட்டி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

தர்மபுரி, அக்.18: தொடர்விடுமுறை காரணமாக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, இன்று (18ம் தேதி) முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பஸ், ரயில்களில் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையொட்டி நேற்று, தர்மபுரி புறநகர பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். சேலம், அரூர், வேலூர் செல்லும் பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதே போல் நகர பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பள்ளி மாணவனை கடத்தி ₹50 லட்சம் கேட்டு மிரட்டல்

தர்மபுரி, அக்.18: . தர்மபுரி காந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மேச்சேரியில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செயல்அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரகதீஷ்வரன் (14). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும், பிரகதீஷ்வரன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை காவில்லை.அன்றையதினம் இரவு ராஜாவிற்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், மகனை கடத்தி விட்டதாகவும், ₹50 லட்சம் பணம் கொடுத்தால் விடுவதாகவும் கூறினார். இது குறித்து ராஜா தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில், டிஎஸ்பி காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர்மாணவனை தேடினர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், ராஜாவை தொடர்பு கொண்ட பிரகதீஷ்வரன், தான் தப்பித்து விட்டதாகவும், வெங்கடம்பட்டியில் இருப்பதாகவும் கூறினார். பின்னர்போலீசார் மாணவனை மீட்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர். இதில்,  தந்தை அழைத்து வர சொன்னதாக கூறி ஒருவர் என்னை அழைத்து சென்றார். பின்னர் வத்தல்மலைக்கு கடத்தி செல்ல முயன்றார். அவரிடம் இருந்து தப்பி, கிராம மக்கள் உதவியுடன் தந்தைக்கு போன் செய்தேன் என பிரகதீஷ்வரன் கூறினான். ஆனால் மாணவனின் பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்தான். இதனால் பணத்திற்காக மாணவனே தன்னை கடத்தியதாக நாடகம் ஆடினானாரா? அல்லது உண்மையிலேயே கடத்தப்பட்டானா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

தர்மபுரி, அக்.18: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு திட்டத்தின் கீழ் 2018- 19ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பு மற்றும் பிளஸ்1, பிளஸ்2 கல்வி உதவித்தொகைக்கான புதியது மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் https://scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க, கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற, உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்த ரேஷன்கடை ஊழியர்கள் 62 பேர் கைது

தர்மபுரி, அக்.18: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்த ரேஷன் கடை ஊழியர்கள் 62பேரை தர்மபுரி போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், டிஎன்சிஎஸ்சி பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு என தனியாக துறை ஏற்படுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும். பயோமெட்ரிக் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். 100 சதவீதம் கணினி மயம் ஆக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 15ம் தேதி தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. நேற்று 3வது நாளாக காலை 11 மணியளவில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி சிறப்புரையாற்றினார். இதையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த மாவட்ட தலைவர் தனசேகரன், பிரசார செயலாளர் சுகமதி, மனோகரன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், குமார், ஜம்புலலிதா, அண்ணாமலை, சீனிவாசன், ரவி, கிருஷ்ணமூர்த்தி, பார்த்தசாரதி, பொருளாளர் ஜான்ஜோசப் மற்றும் 12 பெண்கள் உள்பட 62 பேரை தர்மபுரி போலீசார் கைது செய்தனர்.

காவிரி நீரை ஏரிகளுக்கு திருப்பி விடக்கோரி உழவர் பேரியக்கத்தினர் கையெழுத்து இயக்கம்

தர்மபுரி, அக்.18: காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்ப தமிழக அரசை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட பாமக, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்க நடந்து வருகிறது. இதை, கடந்த மாதம் 19ம் தேதி, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் அன்புமணி ராமதாஸ் எம்பி தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாவட்டத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில், பாமகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நேற்று தர்மபுரி- திருப்பத்தூர் சாலை பெரியார் சிலை அருகே, முன்னாள் எம்பி பாரிமோகன், மாநில நிர்வாகி நம்பிராஜன், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் முனிசிப் செல்வம், மகாலிங்கம், கிருஷ்ணன், மணி, கோவிந்தன் ஆகியோர், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். கடந்த ஒரு மாதத்தில் 6லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

அரூர், அக்.18: மொரப்பூர் அண்ணல் நகர் மற்றும் மோட்டூர் பகுதியை சேர்ந்த 200 குடும்பத்தினர், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை குடியிருக்கும் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குடியிருக்கும் வீட்டிற்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுக்கள் விசாரணைக்காக, அரூர் ஆர்டிஓவிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்ந நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 200 குடும்பத்தினர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேற்று சென்று மனு கொடுத்தனர். அப்போது செல்வம், வீரமணி, கவிராசு, வேடியப்பன், கற்கண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பிடமனேரியில் மயானத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தர்மபுரி, அக்.18: பிடமனேரி மயானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி எம்ஜிஆர் நகரில் மயானம் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ₹1.4 லட்சம் மதிப்பில் இந்த மயானத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மயானத்தின் சுற்றுச்சுவர்கள் உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மயானத்தின் உள்ளே முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் சடலங்களை அடக்கம் செய்வதற்கும், இறுதி சடங்குகள் செய்வதற்கும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மயானத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயம் வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரூர், அக்.18: அரூர் ஜெயம் வித்யாலயா பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அரூர் அருகே தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆசிரியர் விஜயன் வரவேற்றார். ஆசிரியர் கந்தசாமி முன்னிலை வகித்தார். அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும், அதனை கடைபிடிப்பதன் அவசியம், ஹெல்மெட் அணிவதன் நன்மைகள், காரில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து காணொலி காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், பள்ளி பஸ் டிரைவர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

தர்மபுரி, அக்.18:  தர்மபுரியில் மாவட்ட காவல்துறை சார்பில், 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், காவலர் வீர வணக்கநாளை முன்னிட்டு நேற்று மினி மாரத்தான் போட்டி தர்மபுரியில் நடந்தது. போட்டியை டிஎஸ்பி காந்தி தொடங்கி வைத்தார். அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய போட்டி, அரசு மருத்துவமனை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி, செந்தில் நகர் வழியாக எஸ்பி ஆபீஸ் வளாகத்தில் முடிந்தது. 4 கிலோ மீட்டர் நடந்த இந்த ஓட்டப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரம், சரவணன், ஆசிரியர் மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 21ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தர்மபுரி எஸ்பி பண்டி கங்காதர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகிறார்.

பாட்டாளி இளம்பெண்கள் சங்க நிர்வாகிகள் நியமனம்

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்ட பாட்டாளி இளம்பெண்கள் சங்க பொறுப்புக்கு, மாணவர்கள் மற்றும் இளம்பெண்களிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி விருப்ப மனுக்களை பெற்றார். தர்மபுரி மாவட்ட பாமக அலுவலகத்தில், மாணவர் சங்கம் மற்றும் பாட்டாளி இளம்பெண்கள் சங்கத்திற்கு, மாவட்டத்திற்குட்பட்ட பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே.மணி, இளம்பெண்கள், மாணவர் சங்கத்திற்கான விருப்ப மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார். பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, பாட்டாளி மாணவர் சங்க மாநில செயலாளர் வக்கீல் விஜயராசா ஆகியோரும் விருப்ப மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் அவதி

கடத்தூர், அக்.18: அரூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரூர் அரசு மருத்துவமனைக்கு நாச்சினாம்பட்டி, கொளகம்பட்டி, சித்தேரி, பெத்தூர், எட்டிபட்டி, குரும்பட்டி, சோளக்கொட்டாய் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் ேநாயாளிகளுக்கு போதிய குடிநீர் வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் அடிக்கடி தண்ணீர் வராததால், வெளியில் கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறினால் மட்டுமே, தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் தண்ணீர் வருவதில்லை என மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே, மருத்துவமனையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி கருகி சாவு

தர்மபுரி, அக்.18: மொரப்பூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் கருகி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்னறர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சகுந்தலா (62). இவர் கடந்த 3ம் தேதி மண்ணெண்ணெய் அடுப்பில் தண்ணீர் காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவரை மீட்டு மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சகுந்தலா இறந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஏரியூர் அருகே கலாம் நூலகம் திறப்பு

தர்மபுரி, அக்.18: பென்னாகரம் அருகே சித்திரப்பட்டியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, நூலகம் திறக்கப்பட்டது. பென்னாகரம் தாலுகா ஏரியூர் அருகே சித்திரப்பட்டியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, அப்துல் கலாம் இளைஞர் நற்பணி சங்கம் மற்றும் ஊர்பொது மக்கள் சார்பாக, கலாம் நூலகம் திறக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மயில்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி சங்கத் தலைவர் ரமேஷ், காவலர் மூர்த்தி, மாது, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குபேந்திரன், செல்லமுடி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், தமிழ் ஆசிரியர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் திருமால், தர்மபுரி மாவட்ட தமிழ் கையெழுத்து இயக்க பொறுப்பாளர் திருமுருகன் மற்றும் நற்பணி சங்க துணை தலைவர் சர்குணன், மன்ற நிர்வாகிகள் பொன்முடி, துரைசாமி, மாதேசன், முனியன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

கடத்தூர், அக்.18: கடத்தூரில் தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.   மொரப்பூர், கடத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட முல்லை நகர் தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். மொரப்பூர் தொழில்நுட்ப அலுவலர் திருமால் பங்கேற்று, வேளாண் துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகள் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசனம், மருந்து தெளிப்புமுறை, பயிர் காப்பீட்டு திட்டம், நீடித்த நிலையான மானாவாரி பயிர் சாகுபடி மேலாண்மை இயக்கம் மற்றும் புதிய தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். தேனீக்கள் வளர்ப்பு மற்றும் செயல்முறை அதை பயன்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி செயல்விளக்கம் அளித்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து ெகாண்டனர்.

பைக் மீது லாரி மோதி பெண் பலி

பாலக்கோடு, அக்.17: பாலக்கோடு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய கணவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டி ராமன்னன்கொட்டாயை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (40). இவரது மனைவி லட்சுமி (37). இருவரும் கட்டிட ேவலை செய்து வந்தனர். நேற்று காலை 10 மணிக்கு, இருவரும் பாலக்கோட்டிற்கு பைக்கில் சென்றனர். மதியம் சாப்பாட்டிற்காக தம்பதி வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓசூரில் இருந்து சேலம் ேநாக்கி சென்ற லாரி, அவர்களுடைய பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் தண்டாயுதபாணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாலக்ேகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சமுத்து மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

தர்மபுரி, அக்.17: தர்மபுரி பச்சமுத்து அறிவியல் மகளிர் கலைக்கல்லூரியில் கணித துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி தாளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.துணை தாளாளர் சங்கீத்குமார், முதல்வர் பிலோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணிதத்துறை தலைவர் தங்கமணி வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரன், சேலம் பெரியார் பல்கலைக்கழக முனைவர் முத்துலட்சுமி, திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில், கணினித்துறை உதவி பேராசிரியர்கள் தெய்வானை, சத்யா, காமாட்சி, தொட்டியம்மாள், மாதேஸ்வரி, சவுமியா, சுதா, பிரியா, லோகேஸ்வரி, கல்பனா, சரண்யா, குணவதி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன் பிரசார வாயிற்கூட்டம்

தர்மபுரி, அக்.17: நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் சார்பில், வரும் 26ம் தேதி அன்று சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு போராட்டத்தை விளக்கி நேற்று தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன் பிரசார வாயிற் கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சையத் உசேன் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் ராஜாஅண்ணாமலை, மாநில செயலாளர் தியாகராஜன் ஆகியோர் பிரசாரம் குறித்து விளக்கி பேசினர். பிரசார கூட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி தினக்கூலி ஊழியர்களுக்கு பேரூராட்சி தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்கியது போல், அரசாணை வழங்க வேண்டும். பழி வாங்கும் போக்கில் பணியிட மாறுதல்களை ரத்து செய்து, மீண்டும் ஊழியர்களை அந்த இடத்திலேயே பணி வழங்க வேண்டும். நகராட்சி நிர்வாக ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள நகராட்சி ஆணையர் பணியிடம் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். நகராட்சி ஆணையர் பொறுப்பு நகராட்சி ஆனையருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில், பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்யவேண்டும் என பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் இருந்து தர்மபுரிக்கு ரயிலில் வந்த 1,890 டன் நெல்

தர்மபுரி, அக்.17: டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு 1,890 டன் நெல் சரக்கு ரயில் மூலம் வந்து இறங்கியது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பச்சரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வேண்டிய பச்சரிசிக்கான நெல் டெல்டா மாவட்டங்களிலிருந்து வருகிறது. நேற்று தர்மபுரி மாவட்டத்திற்கு வேண்டிய நெல் தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரி ரயில் நிலையத்திற்கு 42 வேகனில் 1,890 மெட்ரிக் டன் நெல் சரக்கு ரயிலில் வந்தது. வந்த நெல்மணிகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மூட்டையாக மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 50ஆயிரம் மெட்ரிக் டன் நெல் டெல்டா மாவட்டங்களிலிருந்து, தர்மபுரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 73 நெல் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிபகழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகளில் ஒப்படைப்பார்கள். ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு, ரேஷன் கடையில் பச்சரிசி வழங்கப்படுகிறது. நேற்று மட்டும் 1,890 மெட்ரிக் டன் நெல் வந்திறங்கியது என்றனர்.

அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் மாணவர்கள் கலைவிழா

தர்மபுரி, அக்.17: தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான கலைவிழா தர்மபுரியில் நேற்று நடந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான கலைவிழா நேற்று தர்மபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இதில் நடனம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, ஓவியம், கோலாட்டம், மயிலாட்டம், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலைப்போட்டிகள் நடந்தது. போட்டிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேல்,  பள்ளி தலைமையாசிரியை தெரசாள் மற்றும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தர்மபுரி, அக்.17: தர்மபுரி விஞ்ஞானிகள் என்ற தலைப்பில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, தர்மபுரி மருதம் நெல்லி கல்லூரியில் நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டது. அதில் நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி திவ்யா கண்டுபிடிப்பான காது கேட்காத மற்றும் பார்வையற்றவர்களுக்கான அழைப்பு மணி என்ற கண்டுபிடிப்பிற்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு ₹10ஆயிரமும், பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக பெற்றார். பரிசு பெற்ற மாணவியை முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வாழ்த்தினார். உடன் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், வட்டாரக் கல்வி அலுவலர் பழனி, தலைமை ஆசிரியர் நரசிம்மன், வழிகாட்டி ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் முருகன், கந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.