Dindigul - Dinakaran

வத்தலக்குண்டு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து பலி

வத்தலக்குண்டு, டிச. 19: வத்தலக்குண்டு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து பலியானார். வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(27). விவசாயி. மனைவி பஞ்சவர்ணம்(25). ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கேரள வேலைக்கு சென்ற கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பினார். சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு கடந்த 16ம் தேதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக உறவினர்கள் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த பஞ்சவர்ணம், குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு, வீட்டில் மண்ணெண்ணெயை உடலின் மீது ஊற்றி தீக்குளித்தார். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை ேதனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

செம்பட்டி, டிச. 19: நிலக்கோட்டையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். வட்ட பொருளாளர் மகேஸ்வரன் வரவேற்றார். விஏஓ நவாஷ், வட்ட செயலாளர் தெய்வேந்திரன், ஓய்வூதியர் சங்க தலைவர் அமாவாசை பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கூடுதல் பொறுப்பு விஏஓக்களுக்கு பொறுப்பூதியம் வழங்க கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கக்கோரியும், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் சத்யா நன்றி கூறினார்.

என்எஸ்எஸ் முகாம்

ஒட்டன்சத்திரம், டிச. 19: ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட (என்எஸ்எஸ்) மாணவர்களின் சிறப்பு முகாம் கூடலிங்கபுரத்தில் 7 நாட்கள் நடந்தது. முகாமிற்கு பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் கருப்புச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் (ஓய்வு) சின்னத்தம்பி, பட்டதாரி ஆசிரியர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். முகாமில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. என்எஸ்எஸ் மாணவர்கள் கூடலிங்கபுரத்தில் பொது இடம் மற்றும் கழிவுநீர் வாய்க்காலை தூய்மைப்படுத்துதல், மழை நீர் சேகரிப்பு குழிகள் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கியும், அதற்கான பணிகளிலும் ஈடுபட்டனர்.

மக்கள் விரோத பாஜ அரசை அகற்ற வேண்டும் தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம் தீர்மானம்

பழநி, டிச. 19: மக்கள் விரோத பாஜ அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒன்றிணைய வேண்டுமென, தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழநி அருகே அமரபூண்டியில் தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சென்னை மாவட்ட தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். மாநில மகளிரணி தலைவி சரிதாபானு முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட மகளிரணி தலைவி பானுமதி வரவேற்றார். கூட்டத்தில், ராகுல் காந்தி இந்திய நாட்டின் பிரதமராக வர வேண்டும். மக்கள் விரோத பாஜ அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய அரசை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பிரதமராக ராகுலை முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசு உரிய விலை நிர்ணயிக்க கோரி பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்: பழநி அருகே பரபரப்பு

பழநி, டிச. 19: அரசு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தி பழநி அருகே பாலை சாலையில் கொட்டி, விவசாயிகள், பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் கோமாரி நோய் தாக்கிய மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மருத்துவமனை அமைக்க வேண்டும். பெருகி வரும் கால்நடைகளின் தேவைக்கேற்ப உயிர் காக்கும் மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பசும்பாலுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு ரூ.45 வழங்க வேண்டும். தொப்பம்பட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். 2016ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி அருகே தொப்பம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் கனகு, சங்க நிர்வாகிகள் சின்னத்துரை, பெருமாள், சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

7 எம்எல்ஏ தொகுதிகளிலும் பாரபட்சமின்றி காவிரி கூட்டுக்குடிநீரை விநியோகிக்க வேண்டும்: திமுக செயற்குழு தீர்மானம்

திண்டுக்கல், டிச. 19: பாரபட்சமின்றி மாவட்டம் முழுவதும் காவிரிரி கூட்டுக்குடிநீரை விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்தியதற்காக தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில்  தலைக்காய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய வசதி இல்லை. மதுரைக்கு அனுப்பும் நிலையே உள்ளது. உரிய சிகிச்சை பலனும் கிடைப்பதில்லை. உரிய வசதிகளை செய்து தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரபட்சமின்றி காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் வடிகால் வாரியம் தூங்கிக் கொண்டிருக்கிறது. செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் பஷீர்அகமது, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர் அருகே விபத்தில் இருவர் பலி

வேடசந்தூர், டிச. 19: வேடசந்தூர் அருகே விபத்தில் 2 பேர் பலியாயினர். வேடசந்தூர், குங்குமகாளியம்மன் கோயிலை சேர்ந்தவர் மூர்த்தி(27). அதே தெருவை சேர்ந்தவர் சங்கீதா(35). இருவரும் டூவீலரில் லந்தக்கோட்டை அருகே கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே சென்றபோது டூவீலர் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதியது. இதில் மூர்த்தி, சங்கீதா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். டிராக்டர் டிரைவர் தப்பி ஓடினார். டிஎஸ்பி சிவக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எரியோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவில் விஷம் கலந்து இருவரை கொன்ற வழக்கில் கைதான சூபர்வைசருக்கு பரோல்

செம்பட்டி, டிச. 19: மதுவில் விஷம் கலந்து இருவரை கொன்ற வழக்கில் கைதான சூபர்வைசர் பரோலில் வெளியே வந்துள்ளார். கொடைரோடு அருகே பள்ளபட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகன்(45), பாரதிபுரம் விநாயகர் நகரைச் சேர்ந்த சாய்ராம்(60), முருகத்தூரான்பட்டி அருகே பாஞ்சாலகுறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி(47) மது வாங்கி குடித்து மயங்கி விழுந்தனர். இவர்களில் முருகன், சாய்ராம் உயிரிழந்தனர். இருதரப்பு முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கள்ளத்தனமாக பள்ளப்பட்டியில் மது விற்ற ஜெயசந்திரன், இவரது உறவினர் ராஜா, கொடைரோடு டாஸ்மார்க் சூபர்வைசர் ராஜலிங்கம், தமிழ்வாணன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, மதுரையை சேர்ந்த பாலு ஆகியோர் கைதாயினர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ள ராஜலிங்கம் தாயார் கச்சம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற கொடைரோடு டாஸ்மார்க் சூபர்வைசர் ராஜலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இவருக்கு நீதிமன்றம் 3 நாள் பரோல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளப்பட்டி வந்த ராஜலிங்கம், தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

ரத்தசோகையை எளிதில் தடுக்கலாம்

தினமும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சமைப்பதுடன், வளர் இளம் பெண்கள் இவற்றை உட்கொள்வதை வலியுறுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதிலும், கவனம் செலுத்துவதிலும் பாரபட்சம் காட்டாமல், இருபாலருக்கும் குறிப்பாக நாளைய தாய்மார்களான வளர்இளம்பெண்களுக்கு போதுமான உணவு ஊட்டச்சத்து உணவுகளை அளிக்க வேண்டும். வளர்இளம்பெண்களின் உயரம், எடை மற்றும் சரியான வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் அசைவ உணவு சமைக்கும்போது ஈரலை தனியாக எடுத்து வளர்இளம்பெண்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் இவர்களுக்கு இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும். சுத்தமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வியாழனன்றும் சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரையை தங்கள் மகள் உட்கொள்கிறாரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இரவு உணவு உண்டபின் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும். சாப்பிடாமல் இருத்தல், தாமதமாகச் சாப்பிடுதல் உள்ளிட்ட நிலையை மாற்ற வேண்டும். ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

கொத்தனார் தவறி விழுந்து பலி

பழநி, டிச.19:  பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (21). கொத்தனார். நேற்று முன்தினம் பழநி டவுன் கோட்டை மேட்டுத்தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 2வது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக கருப்பசாமி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே மில்லில் பெண் மர்ம சாவு?

வேடசந்தூர், டிச. 19: வேடசந்தூர் அருகே மில்லில் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூர் அருகே  விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இங்கு உளுந்தூர்பேட்டை, கோட்டான்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் விஜயலட்சுமி (19). இங்குள்ள விடுதியில் தங்கி ேவலை பார்த்து வந்தார். நேற்று இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேடசந்தூர் பகுதி மில்களில் அதிக அளவில் பெண்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், போலீசார் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சைப்பட்டி சாலை... பள்ளத்தில் தள்ளுது ஆளை வாகன ஓட்டிகள் டென்ஷன்

வத்தலக்குண்டு, டிச. 19: வத்தலக்குண்டுவில் குண்டும் குழியுமாக உள்ள பச்சைப்பட்டி சாலையால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தை சந்தித்து வருகின்றனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பச்சைப்பட்டி சாலை உள்ளது. இச்சாலையை கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்காததால் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த சாலையில் திருமண மண்டபம், சிறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் மதுரை - திண்டுக்கல் சாலையை இணைக்கும் சாலையாகவும் உள்ளதால் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இச்சாலையில் பயணிக்கும் இருசக்க வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் அசோக்குமார் கூறுகையில், ‘‘சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சைப்பட்டி சாலையை சீரமைத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. மழை நீர் செல்வதற்கு கால்வாய் அமைக்காததால் சாலையில் தண்ணீர் தேங்கி வீணாகி வருகிறது. சேவுகம்பட்டி பேரூராட்சியினர் இருபுறமும் மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்’’ என்றார்.

டிச.21ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல், டிச.19:  நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வரும் 21ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, நிலக்கோட்டை, நத்தம் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் பலி: வனத்துறை தீவிர விசாரணை

கொடைக்கானல், டிச. 19: கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் உயிரிழந்ததால், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் நகர் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களில் காட்டெருமைகள் அதிக அளவு உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடனே நடமாடி வருகின்றனர். இவற்ைற வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே தனியார் தோட்டத்தில் ஒரு காட்டெருமை பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது. நேற்று முன்தினம் கொடைக்கானல் சிவனடி சாலையில் உள்ள ஒரு இடத்தில் மற்றொரு காட்டெருமை தடுமாறி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து நடமாட முடியாமல் தவித்தது. தீவிர சிகிச்சை அளித்தும்  பலனின்றி நேற்று உயிரிழந்தது. பிரேத பரிசோதனை முடிந்து, தோட்டத்தில் புதைக்கப்பட்டது. கொடைக்கானல் ரேஞ்சர் ஆனந்தகுமார் கூறியதாவது, ‘‘வயது மூப்பு காரணமாக இரண்டு காட்டெருமைகளும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் பலியாகியுள்ளது’’ என்றார். ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் பலியானதால் வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

புத்தாண்டு முதல் பாலித்தீனை பயன்படுத்தாதீங்க... மஞ்சப்பைக்கு மாறுங்க மக்களே...

திண்டுக்கல், டிச.19:  வரும் ஜனவரி முதல் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணிப்பை, காகித உறைகளைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் புத்தாண்டு முதல் மக்காத பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பால், தயிர், எண்ணெய், மருத்துவ உறைகள் தவிர பிளாஸ்டிக் தாள், தட்டு, தேனீர் கப், தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரிபை, கொடி உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக துணிப்பை, காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம்  திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசியதாவது, ‘‘பாலித்தீன் கேரிபை விநியோகிக்கும் கடைகளில் அபராதம் விதிக்கவும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும் பொதுமக்களும், வியாபாரிகளும் இந்த உத்தரவிற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வாழ்வாதார இயக்கம், மாசுக்கட்டுப்பாடு வாரியம், தொழில்மையம், உள்ளாட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக வரும் 20ம் தேதி அனைத்துத்துறை அலுவலர்களுடன் பாலித்தீன் ஒழிப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாநகர் நல அலுவலர் அனிதா, சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் மனமாற்றத்திற்கு தயாரா?சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலித்தீனை முறையாக மறுசுழற்சி செய்ய முடியும். ஆனால் பொதுமக்களிடம் வீசி எறியும் மனோநிலையே அதிகம் உள்ளது. இதனால் இவற்றை ஒருங்கிணைத்து அகற்ற முடியவில்லை. சாக்கடை, மண்ணிற்குள் புதைந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கழிவுநீர் தேக்கத்தால் கொசு, துர்நாற்ற பிரச்னை உண்டாகிறது. மண்ணிற்குள் புதைந்து நீர் உட்புகு திறனை பாதிக்கிறது. மண்புழுக்கள் எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. எனவே பொதுமக்கள் மனமாற்றத்திற்கு தயாராக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்து விடலாம்’’ என்றார்.

கஜா புயலுக்கு காற்றில் பறந்த ஓடுகள் 1 - 5ம் வகுப்பு வரை ஒரே கட்டிடம்

குஜிலியம்பாறை, டிச: 19 குஜிலியம்பாறை அருகே ஒரே கட்டிடத்தில் 5 வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் கற்க முடியாமல் மிகவும் அவதியடைகின்றனர். எனவே, கஜா புயலால் சேதமடைந்த பள்ளியின் மெயின் கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளது. குஜிலியம்பாறை அருகே புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, இடைநிலை ஆசிரியர் என 2 பேர் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் காங்கீரீட் மற்றும் ஓடுகளாலான 2 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. 2012ம் ஆண்டு கட்டப்பட்ட ஓட்டுக் கட்டிடம் கட்டப்பட்ட நாள் முதல் பராமரிப்பின்றி இருந்து வந்தது. மேலும், கடந்த மாதம் வீசிய கஜா புயல் பாதிப்பால் மேற்கூரை ஓடுகளின் ஒரு பகுதி காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதனால் ‘டாப் கழன்ற நிலையில்’ பள்ளி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இங்குதான் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். மேலும், மழை நாட்களில் வகுப்பறையில் மழைநீர் ஒழுகிறது. மேலும் சேதமடைந்த ஓடுகளால், பிற ஓடுகளும் எப்போது விழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, காங்கீரீட் கட்டிட வகுப்பறையில் பயிலும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து அமர வைக்கப்பட்டு படித்து வருகின்றனர். இதனால் தற்போது ஒரே கட்டிடத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். அருகருகே ஐந்து வகுப்புகளும் நடப்பதால் மாணவர்கள் எழுப்பும் அதிக சப்தம் காரணமாக ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதிலும், மாணவர்கள் கல்வி கற்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி சேதமடைந்த ஓடுகளை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனி தேங்காய் சட்னிதான் தக்காளி விலை ‘கிடுகிடு’ பெட்டிக்கு ரூ.60 உயர்வு

ஒட்டன்சத்திரம், டிச. 19: வரத்து குறைவானதை தொடர்ந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டிக்கு ரூ.60 வரை உயர்ந்துள்ளது. தக்காளிக்கும், பனிக்கும் என்னைக்குமே செட் ஆகாது. பனிக்காலத்தில் தக்காளி செடிகளில் காய்கள் உதிர்தல், செடிகளிலே அழுகுதல், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகளால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். தற்போது ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.  குறிப்பாக, ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கரியாம்பட்டி, தேவத்தூர், இடையக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விவசாயம் அதிகளவு நடக்கும்.தற்போது இப்பகுதிகளில் விளைச்சல் குறைவால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவு தக்காளியே விற்பனைக்கு வந்துள்ளது. மார்க்கெட்டில் கடந்த மாதம் 14 கிலோ பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் இருந்து தக்காளி பெட்டிகள் சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.  வரத்து குறைந்துள்ள நிலையில், விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பழநி, டிச. 19: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திண்டுக்க மாவட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் சிறப்பு பூஜையுடன் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சுமி  நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் தம்பதி சமேதரராக லக்குமி நாராயண பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதுபோல் பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு தம்பதி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு பரமதவாசல் வழியை கடந்து சென்றனர். கோயிலில் புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்ளுக்கு 1 டன் அளவில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பயறு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், சுவாமி, மகாலட்சுமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று சொர்க்கவாசல் திறப்பு

பழநி, டிச.18: பழநி பெருமாள் கோயில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்படுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பழநி நகர் மேற்கு ரதவீதியில் லக்குமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெறும். இந்நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. லக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கும், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

பஸ் மோதி விவசாயி பலி

பழநி, டிச.18: ஆயக்குடியில் பஸ் மோதி விவசாயி உயிரிழந்தார். பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் ராஜப்பன் (65). விவசாயி. ஆயக்குடியில் பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது உடுமலை நோக்கிச் சென்ற தனியார் சுற்றுலா பஸ் ராஜப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராஜப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆயக்குடி போலீசார் பஸ்சை ஓட்டிச் சென்ற திண்டுக்கல் தாலுகா, கொல்லப்பட்டியைச் சேர்ந்த பதி (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.