Erode - Dinakaran

பெருந்துறை சிப்காட்டில் நாளை மின்நிறுத்தம்

ஈரோடு,  டிச. 19:  பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு  பணிகள் 20ம்தேதி (நாளை) நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை   பெருந்துறை கோட்டத்தை சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி,  கம்புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்படவுள்ளதாக  மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் சார்பில் நாளை மெகாமேளா

ஈரோடு,  டிச. 19: ஈரோடு தொலைதொடர்பு மாவட்டத்தில் 20ம்தேதி (நாளை) மாவட்டம்  முழுவதும் மெகாமேளா நடைபெறவுள்ளது. இந்த மெகாமேளாவில் புதிய சிம்களை நேசம்  கோல்டு பிளானை 59 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் எம்என்பி  இணைப்புகள் மினிட், செகண்ட் நேசம், கோல்டு மற்றைய அனைத்து பிளான்களிலும்  மாற்றிக் கொள்ளலாம்.

சத்தியமங்கலம் அருகே மயானத்தில் குப்பை தரம்பிரிக்கும் மையம் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

சத்தியமங்கலம், டிச.19: சத்தியமங்கலம் அருகே பொது மயானத்தில் குப்பை தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் பொதுமயானம் உள்ளது. ரங்கசமுத்திரம், நேருநகர், திம்மையன்புதூர்,அண்ணாநகர், ஜல்லிக்குழி வீதி, தேள்கரடு வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மயானத்தின் ஒருபகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்காக சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி இடத்தை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.  இதையறிந்த இப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பொது மயானத்தில் குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ, அரியப்பம்பாளையம் பேருர் கழக பொறுப்பாளர் செந்தில்நாதன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், இ.கம்யூ நகர செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், அண்ணாநகர் ஜோசப் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பணியை நிறுத்திவிட்டு சென்றனர். மேலும் இங்கு குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி நாளை ( வியாழக்கிழமை ) மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 19:  ஈரோடு கால்நடை ஆஸ்பத்திரி ரோட்டில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் நரசிம்மன், வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேங்க் ஆப் பரோட, விஜயா வங்கிகளை தேனா வங்கியுடன் இணைப்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். வங்கி கடனை திருப்பி செலுத்ததாதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக செயல்வீரர் கூட்டம்

ஈரோடு,  டிச. 19: ஈரோடு மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்,  கிழக்கு மற்றும் மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் பகுதி  திமுக செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி  தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மூத்த வழக்கறிஞர்  ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குளை பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்கி  பேசினர். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சந்திரகுமார்,  சச்சிதானந்தம்,  மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, துணை செயலாளர்  செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணி, கொல்லம்பாளையம் பகுதி கழக அவை  தலைவர் மனோகரன், கொல்லம்பாளையம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு சிறுபான்மை கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 19: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் நல ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்கள் அமைப்பு சார்பில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது. தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு அரசுத்துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கிறிஸ்தவ தேவஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் வழங்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து மரணமில்லா நாட்கள் கடைபிடிக்க முடிவு

ஈரோடு, டிச. 19:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் சாலை விபத்து மரணமில்லா நாட்களாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.சக்திகணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து தொடர்புடைய துறையினருடன் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நேரிடும் இடங்களாக 71 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டில் சாலை விபத்து மரணங்கள் 44 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை 14 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்து மரணமில்லா நாட்களாக கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா துவக்கம்

ஈரோடு, டிச.19:  ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.மேலும் வீரப்பன் சத்திரம் தெப்பக்குளத்தில் உள்ள கம்பங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டது.  இதேபோல் பெரியவலசு மாரியம்மன் கோவில், காவிரி ரோடு மாரியம்மன் கோவிலிலும் நேற்று கம்பங்கள் நடப்பட்டது. விழாவையொட்டி 25ம் தேதி மாலை 4 மணிக்கு மூன்று கோவில்களுக்கும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 26ம் தேதி மாவிளக்கு பூஜையும், பொங்கல் விழாவும் நடக்கிறது.  27ம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மனின் வீதி உலாவும்,தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. 28ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,  டிச. 19:  தண்டவாள பராமரிப்பு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி  ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு  ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் எஸ்ஆர்எம்யு  சார்பில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். துணை பொது  செயலாளர் களியபெருமாள், கோட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள்(டிராக்மென்களுக்கு) உள்ளிட்ட  அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2014ம் ஆண்டு பதவி  உயர்வு வழங்கியவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க  வேண்டும்.பராமரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு  உபகரணங்கள் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுவால் வந்த விபரீதம் திருப்பூர் பனியன் தொழிலாளி கொலை வழக்கில் உறவினர் கைது

திருப்பூர், டிச.19: திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவருடைய நண்பர் ஆறுமுகம் (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாஸ்கோ நகர் அருகில் உள்ள வசந்தம் நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.கடந்த 16ம் தேதி மாலையில், முருகன் மட்டும் அறையை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் அறைக்கு திரும்பவில்லை. இதற்கிடையில் இரவு 9.30 மணிக்கு வசந்தம் நகரில் உள்ள ஒரு வீதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடலில் பல்வேறு இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு முருகன் பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை முடிந்து உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை தொடர்பாக, 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முருகனின் தூரத்து உறவினரான திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டியை ேசர்ந்த ஈஸ்வரன் மகன் வீர மணிகண்டன் என்கிற சசிக்குமார் (22) என்பவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், முருகனை அவர் தான் கொலை செய்தார் என தெரிய வந்தது. மேலும், விசாரணையில், காலேஜ் ரோட்டில் வைத்து இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், முருகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தீ விபத்தில் வைக்கோல் எரிந்து நாசம்

அந்தியூர், டிச.19; ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மூலகடையில் வைக்கோல் ஏற்றிவந்த டிராக்டர் ன் மீது மின்சார கம்பிகள் உரசியதில் வைக்கோல் போர்கள் எரிந்து நாசனமானது. அந்தியூர் காந்திநகர் முனியப்பன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கால்நடைகளுக்காக கோபி நஞ்சகவண்டம்பாளையத்திலிருந்து டிராக்டரில் வைக்கோல் பேர்களை ஏற்றி வந்தார். மூலக்கடை சாலையில் டிராக்டர் வந்த போது மேலே இருந்த மின்கம்பத்தில் வைகோல் போர் மோதியதில் தீப்பிடித்தது.. எதிரே வாகனத்தில் வந்த நபர்கள் தங்கராஜிடம் வைக்கோல் போரில் தீப்பிடித்தை கூறவே அவர் உடனடியாக வண்டியை நிறுத்தி டிராக்டர் மற்றும் டிரைலரை தனியாக பிரித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சத்தி வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை தீவிரம்சத்தியமங்கலம்,  டிச.19. பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை தீவிரமடைந்துள்ளது. பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு கிராமம் முதல் நகரம் வரை மக்கள் வீடுகளுக்கு வெள்ளையடிப்பது  வழக்கம். சுவர்களை அழகுபடுத்த பல்வேறு நிற பெயிண்ட் மற்றும் ஒயிட் சிமெண்ட்  உள்ளிட்ட வகை பொருட்கள் விற்பனைக்கு வந்தாலும் கிராமப்புறங்களில் வசிக்கும்  பொதுமக்கள் பழமையை மறக்காமல் கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி  வெள்ளையடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.  பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தற்போது சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கிளிஞ்சல்  சுண்ணாம்பு விற்பனைக்கு வந்துள்ளது. கேரளாவில் கிடைக்கும் கிளிஞ்சல்  சுண்ணாம்பை வாங்கி விற்பனை செய்வதாகவும் கடந்த ஆண்டு கிலோ ரூ..25 க்கும்  விற்பனையான சுண்ணாம்பு இந்த ஆண்டு ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,  இந்த வாரம் சுண்ணாம்பு விற்பனை சுமாராக உள்ளதாகவும் அடுத்த வாரம் வியாபாரம்  சூடுபிடிக்கும் எனஅந்தியூரை சேர்ந்த சுண்ணாம்பு வியாபாரி கமலா  தெரிவித்தார்.

வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சத்தியமங்கலம்,  டிச:19.  வைகுண்ட ஏகாதசியையொட்டி, சத்தியமங்கலம்  வேணுகோபால சுவாமி  கோயிலில்  நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆண்டுக்கொருமுறை வைணவ  திருத்தலங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தால்  புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம். அதன்படி, சத்தியில்  நடைபெற்ற  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகாலை முதலே பக்தர்கள்  குவிந்தனர்.  விழாவையொட்டி நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி  ரங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு சாத்துமுறை  நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை  மற்றும் ஆண்டாள் பாசுரங்கள் பாடி சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.30  மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது.  பக்தர்கள் புடைசூழ, மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி,  பரமபதவாசல்  வழியாக புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திறப்பு தரிசனம் மற்றும்  சொர்க்கவாசல் வழியாக வர வேண்டும் என்பதற்காக கொட்டும் பனியையும்  பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில்  இருந்து காத்திருந்தனர். .  அதேபோல் சத்தி  அக்ரஹாரம் ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி  கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மனை பட்டாவழங்க ஆவணங்கள் சரிபார்க்கும் பணிஈரோடு,  டிச. 19: ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நல  சங்கம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 2015 ம் ஆண்டு முதல்  தர்ணா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை பட்டா  வழங்குவதாக வாக்குறுதி அளித்ததன் படி பட்டா வழங்கும் வரை சாகும் வரை  உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் நல  சங்கத்தினர் ஈடுபட்டனர்.  ஈரோடு தாசில்தார் அமுதா,  மாற்றுத்திறனாளி அலுவலர் குமார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த  இன்று(நேற்று) ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்து பட்டா வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.இதனைத்தொடர்ந்து நேற்று ஈரோடு  தாசில்தார் அலுவலகத்தில் முதற்கட்டமாக 2015ம் ஆண்டு பட்டா கேட்டு  விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் 81 பேருக்கு பட்டா வழங்க ஆவணங்கள்  சரிபார்பு பணிகள் நடந்தது.  இதுகுறித்து வருவாய் துறை  அதிகாரிகளிடம் கேட்டபோது, 2015ம் ஆண்டு பட்டா கேட்டு விண்ணப்பித்த  மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தற்போது ஆவணங்கள் சரிபார்பு செய்யப்பட்டு  வருகிறது.இதில், 22 பேருக்கு மொடக்குறிச்சி தாலுகா காகம் ஊராட்சியிலும்,  59 பேருக்கு சித்தோடு நல்ல கவுண்டன்பாளையத்திலும் வீட்டு மனை பட்டா  ஒதுக்கீடு செய்ய பட்டா தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது என தெரிவித்தனர்.

ஈரோடு ஜவுளி சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை அமோகம்

ஈரோடு, டிச. 19: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் நேற்று விற்பனை களைகட்டியிருந்தது.இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  ஈரோடு  ஜவுளிசந்தையில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை ஜவுளி சந்தை நடப்பது  வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு மந்த நிலையில் இருந்து வந்த ஈரோடு  ஜவுளி சந்தை இந்த வாரத்தில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி  மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று  நடந்த ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை அமோகமாக  நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து வாரச்சந்தை வியாபாரிகள்  சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி  ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் இரண்டுமே  திருப்திகரமாக இருந்தது.கேரளாவில் இருந்து அதிக அளவில் மொத்த  வியாபாரிகளும், இதே போல தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.  ரெடிமேடு ரகங்கள், பனியன்கள், பெட்ஷீட் உள்ளிட்டவைகள் அதிக  அளவில் விற்பனையானது என்றார்.

தலைமை தபால் நிலையங்களில் தங்க பத்திர விண்ணப்பங்கள்

ஈரோடு, டிச. 19:  ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட  கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, மத்திய அரசு தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் ஒரு  பகுதியாக தங்க பத்திர விற்பனை திட்டம் அறிவித்துள்ளது. இந்த  பத்திரத்திற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 24ம் தேதி முதல் 28ம் தேதி அனைத்து  தலைமை தபால் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில்  ஈரோடு, பவானி, கோபி ஆகிய தலைமை தபால் அலுவலகங்களில் விண்ணப்பங்கள்  பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.  ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும்  இப்பத்திரங்கள் பெற விரும்புவோர் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பேன்  கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க  வேண்டும். ஒரு நபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையிலான தங்க பத்திரத்தை  வாங்கிகொள்ளலாம். வட்டி விகிதம் பத்திரத்தின் மதிப்பில் 2.50 சதவீதம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பத்திரத்தின் முதிர்வு காலம் 8 வருடங்கள்  ஆகும். 5 வருடத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் திட்டத்தில் இருந்து  விலகிக்கொள்ளலாம்.

மதுவிற்ற 7 பேர் கைது

திருப்பூர், டிச.19: திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் வீதி, அனுப்பர்பாளையம், மில்லர் பஸ் ஸ்டாப், அங்கேரிபாளையம், கங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மாநகர ேபாலீசார் நேற்று முன்தினம் அப்பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மறைவான பகுதிகளில் வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த சக்திவேல் (34), முத்துமணி (42), சதீஸ் (38), கணேஷ் (29), தர்மதுரை (19), சதீஷ்குமார் (28), இளையராஜா (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் 3,430 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

நஞ்சை ஊத்துக்குளியில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

மொடக்குறிச்சி, டிச.19: மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் வீடுகளுக்கு அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் இந்த இணைப்புகளை துண்டித்தனர்.  மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த நல்லசிவம் என்பவர் தங்களது பகுதியில் முறையற்ற வகையில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். கோர்ட் உத்தரவின்படி நேற்று மொடக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்புரோஸ், ஒன்றிய பொருத்துநர் முருகன், நஞ்சைஊத்துக்குளி ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு நடத்தினர். அப்போது 25 வீடுகளுக்கு அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.ஒன்றிய பொருத்துநர் முருகன் கூறும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்த 25 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு குடி நீர் இணைப்பு தேவை என்றால் கலெக்டர் அனுமதி பெற்று டெபாசிட் தொகை செலுத்தி புதிய இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படித்த 105 பேருக்கு சான்றிதழ்

ஈரோடு, டிச. 19:  ஈரோடு  சென்னிமலை ரோட்டில் அரசு தொழிற்பயிற்சி மையத்தில்(ஐடிஐ) கடந்த 2016-2018ம்  ஆண்டு பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு ஐடிஐ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  ஈரோடு டிஆர்ஓ கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 40 மாணவிகள், 65  மாணவர்கள் என மொத்தம் 105 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  முன்னதாக அரசு ஐடிஐ நிர்வாக அலுவலர் மீனாட்சி வரவேற்றார். கோவை மண்டல  பயிற்சி இணை இயக்குநர் ரவி பாஸ்கர், வேலை வாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி அலுவலர் ஜெய்சங்கர் நன்றி  கூறினார்.

கோட்டை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஈரோடு, டிச. 19: ஈரோடு  கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக  கொண்டாடப்படுவது வழக்கம்.பகல் பத்து, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 8ம் தேதி பகல் பத்து  உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவு  பெற்றதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.அப்போது தேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் தங்க காப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டு வழிபட்டதோடு சொர்க்கவாசல் வழியாக கடந்து சென்றனர்.  இதே போல சத்தி  வேணுகோபாலசுவாமி கோயில், சென்னிமலை ஆதிநாராயண பெருமாள் கோயில், பெருந்துறை  பிரசன்னவெங்ட பெருமாள் கோயில், பவானி ஆதிகேசவ பெருமாள் கோயில், அந்தியூர்  பேட்டை பெருமாள் கோயில், அழகு ராஜபெருமாள் கோயில், பருவாச்சி கரிய பெருமாள்  கோயில், கொடுமுடி வீரநாராயணபெருமாள் கோயில், அவல்பூந்துறை தாமோதர பெருமாள்  கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல்  திறப்பு நிகழ்ச்சி நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு வழிபாடுகளை நடத்தினர்.பவானி: பவானி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.  பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்திலுள்ள இந்த கோயில் கடந்த 8ம் தேதி முதல் காப்பு கட்டும், பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்தது.அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மோகினி அலங்காரமும், நாச்சியார் திருக்கோல வழிபாடும் நடைபெற்றது.  நேற்று அதிகாலை வடக்குவாசல் ராஜகோபுரம் அருகேயுள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தேவி பூதேவியுடன் உடனமர் ஆதிகேசவபெருமாள் சிறப்பு அலங்காரங்களுடன் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,டிச.18: தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும் அதிகாரியை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு ரயில்வே டீசல் செட் முன் டிஆர்இயு(தக்ஷன் ரயில்வே ஊழியர் சங்கம்) சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க ஈரோடு கிளை தலைவர் ஸ்ரீ ஹரி தலைமை வகித்தார். கோட்ட துணை செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், டீசல் பணிமனையில் மண்டல மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கோட்ட துணை தலைவர் மதுசூதனன், செயலாளர் சதிஷ்குமார் மற்றும் டீசல் செட்டியில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் குறைகேட்பு கூட்டம்

ஈரோடு,டிச.18: ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதிகளில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை கேட்டறிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு காலாண்டுக்கு ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி ஓய்வு பெற்றவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகின்றது. இதன்படி நாளை(19ம் தேதி) காலை 11 மணிக்கு ஈரோடு மின் வாரிய ஆய்வு மாளிகையில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதால் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.