Headlines - Dinakaran

அச்சுறுத்தும் மசோதா

உலக அளவில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அணைகள் இந்தியாவில்தான்  உள்ளன. இந்தியாவில் 5 ஆயிரத்து 254 பெரிய அணைகள் உள்ளன. சுமார் 500 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 36  அணைகள் உடையும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அணை பாதுகாப்பு மசோதா மூலம் நாடு முழுவதும் அணை பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்த மசோதாவை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் ஆட்சேபணைகளை வெளியிட்டார். பின்னர் இந்த மசோதா காலாவதியானது.  இப்போது பாஜ அரசு அமைச்சரவையை கூட்டி இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. நாடாளுமன்றத்திலும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இம்மசோதா நிறைவேறினால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின்  நலன்கள் பாதிக்கப்படும். ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்தேக்கங்களை மாநில அரசே கட்டிக் கொள்ள அரசியல் சாசனம் உரிமைகளை வழங்குகிறது. அத்தகைய அணைகளை கட்டிய மாநிலங்களே ஆய்வு செய்து  பராமரித்து வருகின்றன. அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேறினால் இதற்கான அதிகாரங்கள் தேசிய அணை பாதுகாப்பு அமைப்பிற்கு செல்லக்கூடும்.ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் அணை கட்டினாலும், அந்த அணையானது கட்டிய மாநிலத்திற்கே சொந்தமாகும். அணையை இயக்குகிற, பராமரிக்கிற பொறுப்புகள் கட்டிய மாநிலத்தையே சாரும் என்பது உச்சநீதிமன்றத்தால்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதிய மசோதாவில் அணைகள் பாதுகாப்பு அந்தந்த உரிமையாளரை சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் மூச்சு வாங்கி கொண்டிருக்கும் தமிழக அரசிற்கு  இதனால் எழும் பிரச்னைகள் சொல்லாமலே புரியும்.மத்திய அரசின் புதிய மசோதாவால் பரம்பிக்குளம், முல்லை பெரியாறு, பெருவாரிப்பள்ளம், தூணகடவு உள்ளிட்ட கேரள ஒப்பந்தங்களுடன் கூடிய அணைகளின் பராமரிப்பில் இடையூறுகள் ஏற்படும். தமிழகத்தை பொறுத்தவரை  கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களுடன் நதிநீர் தாவாக்கள் தொடர்கதையாக உள்ளன. ஆந்திரா பாலாற்றில் தடுப்பணைகள் கட்டிக் கொண்டே இருப்பதால் வடமாவட்டங்கள் தண்ணீருக்காக தள்ளாடுகின்றன.கேரளாவோடு நெய்யாறு, முல்லை பெரியாறு, பரம்பிகுளம் ஆழியாறு, அச்சன்கோவில் வைப்பாறு உள்ளிட்ட பல்வேறு அணை பிரச்னைகளில் தமிழகத்தின் முட்டல் மோதல் தொடர்கிறது. காவிரி நீண்ட இழுபறியின் தொடர்ச்சி.  நதிநீர் உரிமையை ஒவ்வொன்றாக பறி கொடுக்கும் நமக்கு அணை பாதுகாப்பு மசோதா புதிய சிக்கல்களை உருவாக்கும். இம்மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை  மத்திய அரசு காதுகொடுத்து கேட்பதாக இல்லை. ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என பல்வேறு திட்டங்களால் தமிழகத்தின் வளம் மெல்ல மெல்ல சூறையாடப்பட்டு வருகிறது. காவிரி தண்ணீரை கடைமடைகளுக்கு விடாது டெல்டா மாவட்டங்களை  பாலைவனமாக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் தொடர்கிறது. அணை பாதுகாப்பு மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தமிழகம் தண்ணீருக்கான உரிமைகளை இழந்து ஒட்டுமொத்த பாலைவனமாகும் அபாயம் உள்ளது.

அடுத்த அதிர்ச்சி

தமிழகத்தின் தூத்துக்குடியில் வேதாந்தா குழுமம் அமைத்திருந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படு வதாக அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க  போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதன் பின்னர் ஆலையை நிரந்தரமாக மூட தொடர் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஆலையை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர் கமிட்டியின் அறிக்கை தேசிய பசுமை  தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் மாசு காட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்தும், அதன் பின்னர் ஆலைக்கு மின்சாரம் துண்டித்தல் உள்பட தொடர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல்பாடுகள்  ஏற்கக் கூடியது அல்ல என்றும் தனது உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதை நிருபிக்கும் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் தீர்ப்பாயம்  தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.கடும் நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என்று ஆய்வு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கலாம் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் ₹100 கோடியில் மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் என்ஜிடி நேற்று உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய செய்தி வெளியானதும் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.மக்கள் நலனில் அக்கறை இல்லாத நிலைதான் நீடிக்கிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். என்ஜிடி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அப்போது  வலுவான ஆதாரங்களை சமர்ப்பித்து ஆலையை நிரந்தரமாக மூட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல், தூத்துக்குடி மக்களின் அபயக்குரல் என்ஜிடிக்கு எப்படி கேட்காமல் போனதோ என்பதுதான் கேள்வியாக உள்ளது.

மாற்று வழி

தமிழகத்தில் ஜனவரி முதல் தேதி முதல் 50 மைக்ரான் எடைக்கு குறைவுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக்குகள் மக்காத தன்மை கொண்டதால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்ற காரணத்தை முன்வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தடையை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மறுசுழற்சி  பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் எளிதில் மக்குவது கிடையாது என்பதாலும், சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்பதாலும் மாநில அரசு பிளாஸ்டிக் விற்பனைக்கு தடைவிதிக்கிறது என்றால், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை முறையாக அமல்படுத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றிவிட முடியும். இந்தியா முழுவதும் 2022ல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேசமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸ்கெட், சாக்லெட் ஆகிய பொருட்கள் பிளாஸ்டிக் சுற்றி  வருகிறது. அதற்கு தடை விதிக்காமல் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடைவிதிப்பது எந்த வகையில் நியாயம் என்று சிறு வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். மத்திய அரசின் பல திட்டங்கள் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு ஒழித்துவிடும் அளவில் அமைந்துள்ளது. மேலும் பாரபட்சமான நடவடிக்கையால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களும் இந்நாட்டு மக்கள் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த திட்டத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படுத்த நினைக்காமல், மாற்றுவழியில் ஆலோசனை நடத்தி யாருடைய வாழ்வாதாரத்துக்கும் நெருக்கடி ஏற்படாத வகையில் அமல்படுத்த வேண்டும். திடீரென பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்றால், அந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன உத்தரவாதம் அளித்துள்ளது என்பன போன்ற கேள்விகள் சாதாரண மக்களிடையேயும் எழத்தான் செய்யும். எனவே மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள அரசே திட்டம் வகுத்து செயல்படுத்த முன்வர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்பணியை ஒப்படைத்து திடக்கழிவு மேலாண்மையை எந்த குறையுமில்லாமல் செயல்படுத்த முன்வர வேண்டும். இதனால் பிளாஸ்டிக் பொருள் வியாபாரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

விண்கலத்துக்கே பஞ்சர்

மனிதகுலம் எங்கேயோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் சைக்கிள், கார் போன்ற கனரக வாகனங்களுக்கு பஞ்சர் போட்டது போக, இப்போது விண்கலத்துக்கே பஞ்சர் போடும் அளவுக்கு விண்வெளி வீரர்கள் முன்னேறி உள்ளனர். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் என்று பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியில், விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 360 கிமீ உயரத்தில் தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் இந்த விண்வெளி மையம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது. பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், இதில் தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ராக்கெட் வெடித்து சிதறிய பின்னர், ரஷ்யாவின் விண்கலங்களில் மட்டுமே வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணித்து வருகின்றனர். இதுபோன்ற பயணத்துக்கு உதவும் விண்கலம் தான் சோயூஸ் எம்எஸ் 90. இது விண்வெளிக்கு சென்ற நிலையில், அதில் ஒரு பால்பாயின்ட் பேனா அளவுக்கு 1.5 மி.மீ.க்கு ஓட்டை விழுந்திருப்பது விண்வெளி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஓட்டைகள், விண்கலம் பயணிக்கும்போது அதை வெடிக்கச் செய்துவிடும். விண்வெளியில் மனிதர்களால் அனுப்பப்பட்ட விண்கலன்களில் இருந்து விழுந்த ஏதாவது ஒரு கூர்மையான பொருளினால், சோயூஸ் விண்கலத்தில் இந்த ஓட்டை விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.பூமியில் இருந்தால் விண்கலத்தில் உள்ள ஓட்டையை எளிதாக சரி செய்துவிட முடியும். ஆனால், விண்வெளியில் அதை சரி செய்வது என்பது இமயமலையின் உச்சியில் ஏறி, கொடிக்கம்பத்தை நடுவதற்கு சமமான காரியம். எனினும், விண்கலத்தின் தேவை அவசியமாக இருந்ததால், இந்த ரிஸ்கான வேலையை செய்ய, சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது இருக்கும், ரஷ்ய வீரர்கள் முடிவு செய்தனர். இதன்படி 2 நாட்களுக்கு முன்பு 2 ரஷ்ய வீரர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.வெறும் 1.5 மி.மீ ஓட்டை என்றாலும் கூட, அதை சரி செய்வதற்கு சுமார் 8 மணி நேரம் பிடித்தது. தற்போது அதில் உள்ள ஓட்டை அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வரும் 19ம் தேதி, அந்த விண்கலம் பூமிக்கு திரும்ப உள்ளது. இதில் ஓட்டையை சரி செய்த ரஷ்ய வீரர் செர்ஜி புரோகோப்யேவ் பூமிக்கு திரும்புகிறார்.

அவமானம்

3 வருடங்களில் ஒரு வாகனத்தின் உரிமையை கூட ரத்து செய்யாதது ஏன்? என்று போக்குவரத்து அதிகாரிகளை பார்த்து உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்வி இன்றைய தமிழகத்தில் பெரும்பாலான அரசு அதிகாரிகளின் அவல நிலையை உரக்கச்சொல்கிறது. கடலூர், விருத்தாச்சலம் பகுதியில் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆவேசம் அடைந்து இருக்கிறது. ஒரு கணக்கு, வழக்கு இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அதை அதிகாரிகள் முறைப்படுத்தவில்லை. கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். பிரச்னை எழும் என்பதால் அவ்வப்போது மெமோ கொடுத்து இருக்கிறார்கள். அபராதம் மட்டும் வசூலித்து இருக்கிறார்கள். தனியார் பேருந்து அதிபர்களுக்கு சாதகமாக நடந்து இருப்பது இதில் வெளிச்சம். இது ஒரு இடத்தில் நடந்த சம்பவம். இன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலையும் அதுதான். அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் செல்கிறது. ஆனால் எங்கிருந்தோ வரும் உத்தரவை நிறைவேற்ற மக்களை கசக்கிப்பிழியும் நடவடிக்கையைத்தான் இவர்கள் இன்று வரை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நலன் கொண்டு சிந்திக்கும் அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அதனால்தான் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவில் நம்பர் 1 ஆக உள்ளது. எந்த சட்டவிதிகளையும் யாரும் மதிப்பதில்லை. அதை மதிக்க கற்றுக்கொடுப்பதும் இல்லை. மதிப்பவர்களையும் நாம் மதிப்பதில்லை. அந்த அளவுக்கு அலட்சிய போக்கு அத்தனை மட்டத்திலும் புரையோடிப்போய் இருக்கிறது. ஹெல்மெட் அணியும் விஷயத்தில் நீதிமன்றமே வேதனை தெரிவிக்கும் அளவுக்கு, அதை முறைப்படுத்துவதில் அதிகாரிகள் மட்டத்தில் அலட்சியம். அரசின் திட்டங்கள் மக்களை கொண்டு போய் சேர்ப்பதில் முக்கிய பங்கு அதிகாாிகளுக்குத்தான் உண்டு. அரசின் அச்சாணி அவர்கள். ஆனால் அவர்கள் செயல்பாடுகள் அத்தனை துறைகளிலும் அச்சாணி முறிந்து போய் இருப்பதை உணர்த்துகிறது. இன்று அரசு நிர்வாகத்தை சீர்செய்யும் நடவடிக்கை அவசியம். இல்லையென்றால் ஒவ்வொரு துறைகளிலும் தமிழகம் இன்னும் வீழும். எழுச்சி மிக்க சமூகத்தை கட்டமைக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசுக்கு அதிகாரிகள் பலமாக இருந்தால்தான், ஒவ்வொரு உத்தரவுகளையும் உறுதியாக நிறைவேற்ற முடியும். இல்லாதபட்சத்தில் வருங்காலத்தில் தமிழகத்தின் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டுமே பார்க்கும் நிலை வரும். அது தமிழகத்திற்கு அவமானம்.

விவசாயத்திற்கு அச்சுறுத்தல்

ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு  முதுகெலும்பாக திகழ்வது விவசாயம் மட்டும் தான்.  இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு. உலக வங்கியின்  2013ம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இந்தியா, தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது. அப்படிப்பட்ட விவசாயம் இந்தியாவில் தற்போது மிக  நலிவுற்ற நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொள்ள முடியும். இந்நிலையில், மத்திய பாஜ அரசின் வழிகாட்டு அமைப்பாக செயல்படும் நிதி ஆயோக்கின் நடவடிக்கைகள் தமிழக விவசாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நிதியை வெட்டிச் சுருக்குகிறோம் என்ற பெயரில் அந்த அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழகத்தின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி வருகிறது.இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்  நாடு முழுவதும் 103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்  உள்ளன.  இவற்றில் 43 ஆராய்ச்சி நிலையங்களை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி தமிழகத்தில் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னையில் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை மூட வேண்டும் என்று முடிவெடுத்தது. கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையம் சுமார் 3 ஆயிரம் கரும்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமையுடையது. திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்  புதிய ரக வாழைகள் உருவாக்குதல், நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை செய்து சாதனை படைத்துள்ளது. இவற்றை மூடக்கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திடீரென நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தொரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட மத்திய அரசு  எடுத்துள்ள நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1957ம் ஆண்டு ஊட்டியில் தொடங்கப்பட்ட  உருளைக்கிழங்கு ஆராய்ச்சி  நிறுவனம் தென்னிந்தியாவில் உருளை சாகுபடியை பெருக்குவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.  நூற்புழு தாக்குதல், இலைக்கருகல்   நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இப்படி  விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கை, பல்வேறு புயல், வெள்ளப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக விவசாய வளர்ச்சிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.

நடக்கட்டும் சோதனை

தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதை பயன்படுத்தி மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது. இந்த போக்கு பற்றி அரசுக்கு புகார்கள் குவிந்தவண்ணம்  இருந்தன. இதையடுத்து, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்த 10 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் 23 மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், வட்ட அளவில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். குறிப்பாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கிறது. இதைபயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளியவர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் அவலம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன், ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பிரசவ வார்டில் சென்று பார்த்து சொல்வதற்கு 1000 லஞ்சம் கேட்கப்படுகிறது. இதேபோல் ஸ்கேன் சென்டர்களிலும், ரசீதில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. குழந்தைகள் மருத்துவமனை, பெண்கள் மருத்துவமனை ஏன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட பணம் வசூலிப்பதாக புகார்கள் குவிந்தன. அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறையில் இறந்தவரின் உடலை இலவசமாக எடுத்துச்செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் அனைத்து மருத்துவமனைகளிலும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, 5,000 வரை வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. வார்டுகளில் நோயாளிகளுடன் உதவியாளர் தங்குவதற்கும், சக்கர நாற்காலியில் அழைத்து செல்வதற்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால்தான் எடுக்க முடியும் என்ற அசாதாரணமான நிலை நிலவுகிறது. இது பற்றி பொதுமக்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் அனுப்புவது அதிகரித்தது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ வசதிக்கு லஞ்சம் பெறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அதிரடி சோதனைகளை அவ்வப்போது நடத்தினால்தான், லஞ்சம், முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதால் லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

கூடுதல் நிதி கிடைக்குமா?

கஜா புயல் சூறையாட்டத்தில் நாகை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் தங்கள் நிஜ முகத்தை இழந்து உருக்குலைந்துவிட்டன. மக்களின் அழுகுரல் ஓலங்கள் காற்றில் கலந்து கேட்பவர் மனதை பதறவைத்தது. புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் இன்னும் மின்சார இணைப்பு சீரமைக்கப்படவில்லை. பலர் இன்னும் வீடுகளை சீரமைக்க முடியவில்லை.இவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மனித நேயமிக்கவர்கள் பலவகையில்  நிவாரணப்பொருட்களை கொண்டுசென்று உதவி செய்தாலும், அவை தற்காலிகமான  நிவாரணமாகத்தான் கருதப்படும். அவர்களுக்கு நிரந்தர வருவாயை வழங்கி வந்த கால்நடைகள் இறந்துவிட்டன. விவசாயிகள் பயிர்கள், தென்னை, வாழை ஆகியன அடியோடு அழிந்து வாழ்வில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  ஏழைகள் தங்கள் குடிசை வீடுகளை முற்றிலும் இழந்துவிட்டனர். இதையெல்லாம் சீரமைத்து  அவர்களுக்கு புதுவாழ்வையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமையாகும். கஜா புயல் பாதிப்பு  நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து 13 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய  அரசு முதல்கட்டமாக ₹200 கோடியும், அடுத்தகட்டமாக 353.76 கோடியும் வழங்கியுள்ளது. இந்த நிவாரண தொகை யானை பசிக்கு சோளப்பொரி என்று தான் கருத  வேண்டியுள்ளது. லட்சக்கணக்கில் விழுந்த தென்னை மரங்களின் மதிப்பை கணக்கிட்டாலே  மத்தியஅரசு வழங்கிய நிதி நூற்றில் ஒரு பங்கு கூட வராது. மத்திய குழு  பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை  வழங்கியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதி தமிழகத்துக்கு  வழங்க வேண்டும். கேரள மாநில வெள்ள நிவாரணமாக 3,048 கோடியும், ஆந்திராவுக்கு  539.52 கோடியும், நாகாலாந்துக்கு 131.16 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக  பாதிப்பையும் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தமிழக அரசும், எம்பிக்களும் கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். தானே, வர்தா, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப்பணிகள்  நிறைவடையாமல் நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான  நிவாரண பணிகளையும் விரைந்து முடித்து கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே சமூக  ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

பருவமழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். மழை காலங்களில் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறார்கள். அதேபோல், புயல், சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் காலத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையே முகாம் அமைக்க முதல் தேர்வாக தேர்வு செய்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.பள்ளிகளில் அந்தந்த நாட்களில் நடத்த வேண்டிய பாடங்கள் பற்றிய திட்டத்தை வகுத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர். மழை காலங்களில் திடீரென விடுமுறை விடுவதால் பாடங்கள் நடத்துவது பாதிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழை பெய்தாலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால், கல்வி பணி பாதிக்கப்படுகிறது. அன்றைய தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்று கருதும்பட்சத்தில் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கலாம். அதை விரைவிலேயே ஈடு செய்ய வேண்டும். இதனால் பள்ளிகளின் வேலைநாட்கள் குறையாது. மேலும் திட்டமிட்டபடி பாடங்கள் நடத்தி தேர்வுகள் உரிய காலத்தில் நடத்தி முடிக்க முடியும் என்று கல்வித் துறை கருதுகிறது. இதில் நியாயம் உள்ளது.மேலும் மழை காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முகாம் அமைக்கப்படும்போது, அரசு பள்ளிகளையே முதல் தேர்வாக அரசு துறை தேர்வு செய்கிறது. அதற்கு பதில் சமுதாயக் கூடங்கள், சேவை மையங்கள், திருமண மண்டபங்கள் என்று கண்டறிந்து முகாம்கள் அமைக்க வேண்டும். பள்ளிகளை தேர்வு செய்வதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் தடைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டுதோறும் புயல் தாக்கும், கனமழை பெய்யும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் அமைப்பதற்கு வசதியாக நிரந்தரமாக சமுதாயக் கூடங்கள், சேவை மையங்கள் போன்றவற்றை உருவாக்கி வைத்துக்கொள்ளலாம். இப்படி செய்வதன்மூலம் அரசு பள்ளி கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பருவமழை காலத்தில் நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது சுற்றியுள்ள எந்த பகுதியில் விடுமுறை அறிவிப்பது என்பது பற்றி கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கலாம். இதன் மூலம் தேவையில்லாமல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பதை தவிர்க்கலாம். கல்வி பணி தடையின்றி நடப்பதற்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான யோசனைகள் வரவேற்கத்தக்கதுதான்.

வர்த்தக மோதல்

பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில்(ஓபிஇசி) இருந்து கத்தார் வெளியேறி இருக்கிறது. அடுத்ததாக சவுதியும் வெளியேறலாம் என்ற தகவல் கூட்டமைப்பை கலகலக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு இதில் இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகள் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் வாய் திறக்க முடியவில்லை. அப்படி ஒரு நெருக்கடி. அதுதான் அமெரிக்கா.1960ல் ஓபிஇசி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஈரான், ஈராக், குவைத், சவுதி, வெனிசுலா ஆகிய நாடுகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கின. இப்போது 15 நாடுகள் உள்ளன. இப்போது வெளியேறும் கத்தார் தினமும் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. சவுதி 1 கோடி பேரல் உற்பத்தி செய்து வருகிறது. இந்த இரண்டு நாடுகள் வெளியேறி விட்டால்?.ஏற்கனவே ஈரானுக்கு அதிக நெருக்கடி. அங்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யை யாரும் வாங்க கூடாது என்று அத்தனை நாடுகளையும் அமெரிக்கா மிரட்டி வருகிறது. அதையும் மீறி வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கிறது. இந்தியா போன்று தடை விதிக்க முடியாத நாடுகள் சில உண்டு. வேறு வழியில்லை பல்லைக்கடித்துக்கொண்டு சகித்து போகிறது.காரணம் டாலர் மதிப்பு. தங்கம், டாலர், கச்சா எண்ெணய் தான் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மூல காரணிகள். அத்தனையும் தன்கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை திணறடிப்பது அமெரிக்காவின் வழக்கம். உலக வர்த்தகம் அனைத்தும் டாலர் அடிப்படையில் தான் நடைபெற வேண்டும் என்பது மறைமுக உத்தரவு. இதையும் மீறி ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்புகள் யூரோ நோட்டுகளை உருவாக்கினாலும் அமெரிக்காவின் டாலர் வர்த்தகம் தடையின்றி நடக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர ஓபிஇசி கூட்டமைப்புகள் நாடுகள் விரும்புகின்றன. ஆனால் முடியவில்லை. இந்தியா கூட தற்போது கச்சா எண்ணெய் வாங்க டாலருக்கு  பதில் இந்திய ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்துகிறது. ஈரான் உள்ளிட்ட நாடுகள் அந்த ரூபாயை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் இருந்து அந்த நாடுகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். இங்கு டாலர் வர்த்தகத்திற்கு இடம் இல்லை. இது அமெரிக்காவிற்கு கோபம்.ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை பேரல் 30 டாலர் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து இருந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் வர்த்தக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. எனவே உற்பத்தியை குறைக்க முடிவு எடுத்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகம். ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக போர். இப்போது எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில் மோதல். இது உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்து விடக்கூடாது என்பதுதான் இப்போது அனைவரது கவலை.

மாண்பு முக்கியம்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி நடக்கவிருந்த நிலையில், அதற்கு 5 நாள் முன்பாக ஏப்ரல் 7ம்தேதி சென்னையில் உள்ள தமிழக அமைச்சர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு  89.60 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதன்அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வைரக்கண்ணன், அருண் நடராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வு, வருமான வரித்துறையின் அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் அதன் அடிப்படையில் பதிவான எப்.ஐ.ஆரில் பெயர்கள் இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அத்துடன், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை, சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவிட்டு ஒரு வருடமாகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணப்பட்டுவாடா திட்டம் தொடர்பான அபிராமபுரம் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிப்பட்டை சேர்ந்த பி.எம்.நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், எப்.ஐ.ஆர். கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  தந்திரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை கேள்விப்பட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த  உண்மை, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின்  விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இது, நீதிபதிகளையே அதிர்ச்சியடைய  செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கிழக்கு மண்டல முன்னாள் இணை ஆணையர் மனோகரன், தற்போதைய இணை ஆணையர் அன்பு ஆகியோர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். பின், வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 18ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தமிழக அரசியலில் பணப்பட்டுவாடா தலையெழுத்தை அடியோடு மாற்றி அமைக்கக்கூடிய வழக்காக இது இருக்கும் என கருதப்பட்டது.ஆனால், ஆளும் ஆட்சியாளர்களால் சப்தம் இல்லாமல் இந்த வழக்கிற்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஜனநாயக நாட்டில், ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது, சாமானிய மக்கள், கடைசி புகலிடமாக எதிர்நோக்கி காத்திருப்பது நீதிமன்றத்தை மட்டுமே. அந்த நீதிமன்றம் தனது மாண்பை இழந்துவிடக்கூடாது. அப்படி இழந்தால், தனி மனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும். நீதிப்படுகொலைக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

போராட்டத் திரி

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கெதிராக போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். அமைதி  போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸில் டீசலின் விலை கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் பிரான்ஸில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. கடந்த  வாரம் 20 சதவிகிதம் விலை ஏற்றப்பட்டது. இதன் காரணமாகத்தான் பிரான்ஸில் போராட்டம் நடைெபற்று வருகிறது. ஆனால், விலை உயர்வைக் குறைக்க முடியாது என்று  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூன் தெரிவித்துள்ளார்.தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தும் நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை தன்னெழுச்சியாக மக்கள் நடத்துவதற்கு உந்து சக்தியாக இருந்தது பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக  ஊடகங்களே.அறிவியல் வளர்ச்சியில் மக்களுடன் நெருக்கமாகி விட்ட சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கு சாதனங்களாக இல்லாமல்  உலக நாடுகள் பலவற்றில் போராட்டத்தின் முன்னெடுப்பு ஆயுதங்களாக மாறியுள்ளன.துனீசியாவில் வேலையின்மைக்கு எதிராக முதல்முதலாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் தான் அந்த நாட்டில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல் அபிடின் பென் அலி பதவி விலக நேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக  எகிப்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக  கெய்ரோவில் வெடித்த போராட்டத்திற்கும் இதே சமூக ஊடகங்கள் தான் தூண்டுகோலாக இருந்தன. இதன் காரணமாக  31 ஆண்டுகளாக பதவியில் இருந்த அதிபர் முபாரக் பதவி விலகினார்.அமெரிக்காவின் பங்குச்சந்தை  அமைந்துள்ள வால் ஸ்டிரீட்டில் பொருளாதாரச் சுதந்திரத்திற்காக போராட்டத்தை நடத்துவதற்கும் இந்த சமூக ஊடகங்கள் தான் காரணமாக இருந்தன.உலக நாடுகள் மட்டுமின்றி தமிழகத்திலும் நடந்த மிகப்பெரிய போராட்டத்திற்கும் சமூக ஊடகங்களே போராட்டத் திரியாக இருந்தன. சங்க காலத்தில் இருந்து தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து  சென்னை மெரினா, மதுரையில் லட்சக்கணக்கான  இளைஞர்களை திரட்டியது சமூக ஊடகங்கள் தான். அவர்களின் செல்போன் மெரினாவை வெளிச்சம் பெற வைத்ததுடன்,  ஜல்லிக்கட்டிற்கு தனிச்சட்டத்தையும் வாங்கித்தந்தது. அறிவியல் யுகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; மக்களின் உரிமை சார்ந்ததும் கூட என்பதை பிரான்ஸில் நடைபெறும் போராட்டம் மூலம் மீண்டும் உலகிற்கான செய்தியாக சொல்லியுள்ளன  சமூக ஊடகங்கள்.

சொல்லிட்டாங்க...

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ள ₹350 கோடியை வைத்துக்கொண்டு எந்த நிவாரணப்பணிகளையும் செய்யமுடியாது. - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.கஜா புயல் நிவாரண விவகாரத்தில் அரசை விமர்சிக்கவில்லை. அப்படி செய்ய வேண்டுமென்றால் தமிழக அரசை நிறைய விஷயங்கள் இருக்கிறது.- மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன்.களப்பிரர்கள், காலக்கேயர்களையும் விஞ்சி மிக மோசமான ஆட்சியை தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் நடத்தி வருகின்றனர்.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.ஜாக்டோ ஜியோவுடனான அரசு நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்ற முயற்சிக்காமல் அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக  நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது.-அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்.

கிள்ளித் தருவதா?

கஜா புயலில் நிலைகுலைந்த டெல்டா மாவட்டங்களின் சோகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. கடந்த 16ம் தேதி நாகப்பட்டிணம், வேதாரண்யம் இடையே கரையை கடந்த புயல் 6 மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டு சென்றது. அதிவேக காற்றுக்கு 63 பேர் பலியாகினர். புயல் வீசிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் வீழ்ந்தன. 57 ஆயிரம் குடிசை வீடுகளும், 31 ஆயிரம் ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்ததாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. ஒரு லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்சேதம் அடைந்தது.புனரமைப்புக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என மத்திய அரசிடம் முறையிட்டார். முதற்கட்டமாக ₹200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு, சேத விபரங்களை அறிந்திட மத்திய குழுவை சமீபத்தில் அனுப்பி வைத்தது. மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர்.தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்கள் மத்திய குழுவிடம் கதறி அழுதனர். மத்திய குழுவின் மதிப்பீடுகள் அடிப்படையில் ரூ.354 கோடியை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு கேட்ட மொத்த நிதியில் 25ல் ஒரு பங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியை கொண்டு காங்கிரீட் வீடுகள் கட்டுதல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் இயலாத ஒன்றாகும். குறைந்தபட்சம் விவசாய பயிர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூட இத்தொகை போதாது.புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மத்திய அரசு நிவாரண நிதியை அள்ளித்தரும் என நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் இடைக்கால நிவாரணமே கிள்ளிதான் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இயற்கை பேரிடர் தாக்கும்போதெல்லாம் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு நிதி வழங்கி வருகிறது.தானே புயல், வர்தா புயல், சென்னை பெருவெள்ளம் பாதிப்புகளின்போது தமிழகத்திற்கு  மத்திய அரசு வழங்கிய நிதி பெயரளவுக்கே இருந்தது. இவ்வாண்டு ஓகி புயலின்போது தமிழக அரசு ரூ.5 ஆயிரத்து 255 கோடி நிதி கேட்டது. மத்திய அரசு ரூ.413  கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. இயற்கை பேரிடர்களுக்கு தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு 6 சதவீதம் மட்டுமே நிதி வழங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குடிக்க தண்ணீரின்றி, குடியிருக்க வீடின்றி, மின்சாரம் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் அபலைகளாக அலையும் மக்களை, மத்திய அரசு கருணை கண் கொண்டு பார்க்க வேண்டும். சீர்குலைந்த டெல்டா  மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான நிதியை அளித்திட வேண்டும்.

அழைத்து பேசலாம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பள முரண்பாடு களைதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக  போராடி வந்த இவர்கள் ஜாக்டோ - ஜியோ என்ற ஒரே அமைப்பின்கீழ் இணைந்து போராடுகின்றனர். ஆனாலும், அரசு இவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் 7 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அரசு இவர்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகள் நிச்சயம் கலையப்பட வேண்டும். இல்லை என்றால்,அதன் தாக்கம் அரசு பணியில் நிச்சயம் இருக்கும். அரசுடன் பேச்சு நடந்தபோதிலும், அதிகாரம் இல்லாத குழுவினர் பேச்சு நடத்தினால் என்ன பயன் ஏற்படும். அதிகாரமிக்க குழுவினர் பேச்சு நடத்த வேண்டும். இரு தரப்பினரும் ஆக்கப் பூர்வமாக பேச்சு நடத்தினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். மக்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலமாக செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள், அதேபோல், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இந்த இரு சமுதாயத்தினரின் கோரிக்கைகளை அரசு பரிவுடன் கேட்டு முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். முடியாத கோரிக்கைகள் என்றால் அது பற்றி ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் எடுத்துக் கூறி உண்மை நிலவரத்தை விளக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி அளித்த பரிந்துரைகள் பற்றியும் பேச்சுவார்த்தையில் விளக்கி இருந்தால் அரசு நடத்தும் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கூறியுள்ளதில் நியாயம் உள்ளது. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதால் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசு பணிகள் தொய்வின்றி நடக்கவும் கல்வி நிறுவனங்கள் திறம்பட செயல்படவும், அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் சத்துணவு கிடைக்கவும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அப்படி என்றால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றால் அதிகாரம் மிக்க குழு பேச்சு நடத்த வேண்டும். நிச்சயம் சுமூகமான தீர்வு கிடைக்கும். அரசு பணிகளின் முழுபயன்கள் தொய்வின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் எந்தவித மனக்கவலையும் இன்றி பணியாற்ற  வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது அரசுதான் என்பதை புரிந்து கொண்டால் சரி.

தேர்தல் ஜனநாயகம்

ஆந்திர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2014 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மடக்கச்சீரா தொகுதியில் போட்டியிட்டு வென்ற தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஈரண்ணாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்துள்ள ஐதராபாத் உயர் நீதிமன்றம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சிப்தே சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு நான்கரை வருடம் ஒருவர் எம்எல்ஏவாக பதவி வகித்து, அவரது பதவிக்காலம் முடியும் தருவாயில் பதவி பறிக்கப்பட்டால் அதனால் என்ன பயன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. எனவே தேர்தல் வழக்குகள் தொடர்பான விதிமுறைகள், வழிகாட்டும் நடைமுறைகள் அவசியம் தேவை. ஏனெனில் தேர்தல் ஜனநாயகம் தான் நமது நாட்டின் முதுகெலும்பு. மத்தியிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசாங்கம் அமைக்கும் கட்சிகளை நிர்ணயிப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் வழிமுறையும் அதுதான். 6 மாதத்திற்கு மேல் ஒரு தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்பி பணியிடம் காலியாக இருக்கக்கூடாது என்று நமது தேர்தல் விதிமுறைகள் கூறுகின்றன. அப்படி இருக்கும்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் மட்டும் 6 ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடிக்க அனுமதிக்கக்கூடாது என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.தமிழ்நாட்டில் கூட ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் முருகுமரனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். இதுதொடர்பான வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளன. தேர்தல் சீர்திருத்தம், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்றெல்லாம் நாம் பேசி வரும் இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவு அறிக்கப்பட்ட தொகுதி தொடர்பான வழக்குகளின் முடிவுகளை அறிந்து கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தை முடிவுக்கு கொண்டு வர இன்னும் சிந்திக்கவில்லை. 2017 செப்டம்பர் 18ம் தேதி தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டு, அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால் இன்று வரை அந்த தொகுதியில் மக்கள் பணி நடைபெறவில்லை. இதனால் அந்த 18 தொகுதியின் வளர்ச்சி நிலை பாதிக்கப்பட்டு இருக்காதா?. இதே போல் 2016 அக்டோபரில் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் என்று நடைபெறும் என்ற விவரம் இன்று வரை தெரியவில்லை. சுமார் 2 லட்சம் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி முடங்கி கிடக்கிறது. மத்திய அரசு ஆண்டு தோறும் உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதியும் வரவில்லை. ஓகி, கஜா புயல் சீரமைப்பு பணிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படை. எனவே தேர்தல் ஜனநாயகத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

வெந்த புண்ணில்...

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் எந்தவித கருத்தும் கேட்காமல் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு. அரசாணை வௌியிட்டதும் தவறு என்று தெரிவித்து இருக்கிறது தேசிய பசுமைத்தீர்ப்பாயம்.தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையை  சுரங்கம் மற்றும் உலோக உற்பத்தி தொழிலில் உலகளவில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் தொடங்கியது. இங்கு செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த ஆலையால் நிலத்தடி நீர், காற்று ஆகியவை மாசுபடுவதாக கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி ஏற்பட்டது. ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கூட கருகின.இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. 2013 மார்ச்சில் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு  வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது. இந்த ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வலுத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். மே 22ல் நடந்த 100ம்நாள் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட் டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சீல் வைக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அடிப்படையில்தான் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆலை செயல்படலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் இழந்த 13 பேர் குடும்பங்களின் கதி என்ன?, ஸ்டெர்லைட் ஆலை மாசுவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் என்ன என்பதை பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து விட்டனர். மீண்டும் ஒருமுறை தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தீர்வு கிடைக்குமா?

தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் 2019 பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர்  ஓ.பி.ராவத் அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று  தெரிவித்திருந்தார். அதே ேநரத்தில், கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி, 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு  கடிதம் எழுதினால் அதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும், தமிழக அரசு கோரிக்கை வைக்காவிட்டால் தேர்தல் நடவடிக்கை எப்போதும்போல் துவங்கும் எனவும் கூறியுள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணி முடிவடைய இன்னும் குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஆகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருவதால் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும் என தமிழக அரசு கேட்கக்கூடும். எனவே, 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான  சாத்தியக்கூறுகள் குறைவு என்றே தோன்றுகிறது.ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடத்தவேண்டிய உள்ளாட்சி தேர்தல் இரண்டு ஆண்டாகியும் இன்னும் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாத  காரணத்தால், மத்திய அரசிடமிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு  ஆண்டுதோறும் வரவேண்டிய நிதி ரூ.3,558 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டிருந்தால், அந்தந்த பகுதிகளில் சாக்கடை அகற்றுதல், தார்ச்சாலை பராமரிப்பு, குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு என வீதிகள்தோறும் மக்கள் நலப்பணிகள் தங்குதடையின்றி நடைபெறும். ஆனால், இப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. குறிப்பாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள், தங்களுக்கு கைகொடுக்க, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் துணையின்றி தவிக்கிறார்கள்.  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அளவுக்கு, அதிகாரிகள் கீழ் இறங்கி பணியாற்றுவது இல்லை. இதன்காரணமாக, நிவாரண பணிகள் படுமந்தமாக நடக்கிறது. தற்போது, 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால், தங்கள் தொகுதிக்கு எம்எல்ஏ யார்? என தெரியாமல் மக்கள் திகைக்கின்றனர். எம்எல்ஏ.விடம் முறையிட்டு, உள்ளூர் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் தவிக்கின்றனர். இதை உணர்ந்து, மத்திய-மாநில அரசுகள், இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டும். தேர்தல் தள்ளிப்போனால், மக்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது என்பதே உண்மை.

கூனலுக்கு முற்றுப்புள்ளி

ஊ ட்டச்சத்து குறைபாட்டில் உலக அளவில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. 55.4 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள். இதன் காரணமாக ஏராளமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி 2017ம் ஆண்டு இந்தியாவில் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு இந்த நோயால் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர். தினமும் 10 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் காசநோயால் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் குன்றியவர்களாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு ஒரு குழந்தையின் அறிவாற்றலை பெருமளவு பாதிக்கிறது.கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``சராசரியாக 28 கிலோ உடல் எடை கொண்ட நான்காம் வகுப்பு மாணவன், அவனது உடல் எடையில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தரை கிலோவை தினமும் பள்ளிக்கு சுமந்து செல்கிறான். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாவது புத்தகப் பையை சுமக்க நேரிடுவதால், குழந்தைகளின் உடல்வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அன்றைய தினத்திற்கு தேவைப்படும் புத்தகங்களை மட்டும் எடுத்துச்சென்றால் ஓரளவு சுமையை குறைக்கலாம். அதற்கான வழிவகையை நீதிமன்றம் காணவேண்டும்,’’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். புத்தக பூதம் குழந்தைகளை மட்டுமின்றி பெற்றோரையும் பயமுறுத்துவதன் வெளிப்பாடு தான் இந்தக்கடிதம். இந்த சூழலில், பள்ளிக்குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வழங்கியுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘‘ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. மொழிப்பாடங்களைத் தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒருபோதும் நடத்த க்கூடாது. கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்த கூடாது,’’ என்று உத்தரவிட்டுள்ளது.மிக முக்கியமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. 3 முதல் 5ம் வகுப்பு வரை 2 கிலோ முதல் 3 கிலோ எடையும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்குள் எடை இருக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாணவர்களின் புத்தகச்சுமையை பெருமளவு குறைக்கும்.இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டிய கடமை பள்ளிகளுக்கு மட்டுமின்றி மாநில  கல்வித்துறைக்கும் உள்ளது. செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

சோற்றில் மறைத்த ஊழல்

மாணவர்களின் பசியை போக்க காமராஜரால் தொடங்கப்பட்ட சத்துணவு திட்டத்திலும் இப்போது மெகா ஊழல்  வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வாரத்தில் 5 தினங்கள் முட்டை, பாசி பயறு, கொண்டக்கடலை, உருளை கிழங்கு என சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், அத்தொகை சத்துணவு மையங்களையும், மாணவ, மாணவிகளையும் சென்றடைவதில்லை. அரசும், அதிகாரிகளும் நடத்தும் முறைகேடுகளின் உச்சமே, வருமான வரித்துறை நடத்திய சோதனை மூலம் வெளியானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் தனியார் நிறுவனமே தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக முட்டை சப்ளை செய்து வருகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு, பருப்பு வழங்குவதும் அந்நிறுவனத்தின் பொறுப்பாகும். வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை மாதம் நடத்திய அதிரடி சோதனையில் அந்நிறுவனம் பல ேகாடி ரூபாய் வரிஏய்ப்பு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ரூ.2400 கோடி லஞ்சம் அளித்தது தெரிய வந்துள்ளது. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக அமைச்சர்கள், போலீஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், விஐபிக்கள் இன்று வரை விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். அதைவிட பன்மடங்கு முறைகேடுகள் சத்துணவு திட்டத்திலும் நிகழ்ந்துள்ளது.  இந்த முறைகேடுகளின் பின்னணியில், தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு தரத்தை மதிப்பிட்டால் வெட்கப்பட தோன்றுகிறது. ஒரு குழந்தைக்கு ஒரு நாள் சத்துணவிற்கு 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய், 1.9 கிராம் உப்பு என்பது அரசின் ஒதுக்கீடாகும். ஒரு குழந்தைக்கு காய்கறி வாங்க அரசு வழங்கும் தொகை ரூ.1.40 ஆகும். அரசின் இந்த ஒதுக்கீடு தொகையும் முழுமையாக கிடைக்காமல் சத்துணவு மையங்கள் திணறுகின்றன. திட்டத்திற்கு செலவிடப்பட வேண்டிய மொத்த தொகையும் அப்படியே முழுபூசணிக்காயாக ஊழல் சோற்றில் மறைக்கப்படுகிறது. அதன் விளைவே ரூ.2400 கோடிக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், பென் டிரைவ்கள், மெமரி கார்டுகளை ஆதாரமாக கொண்டு வருமான வரித்துறை அரசு துறை அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளது. இவ்விசாரணையில் அரசின் மெகா சத்துணவு ஊழல் பூதம் வெளிப்படும். தமிழக அரசு சிக்கன நடவடிக்கையாக குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுள்ள சத்துணவு மையங்களை மூடி வருகிறது. மற்றொரு புறம் சத்துணவு திட்டத்தில் மாயமாகும் கோடிகளை கணக்கிட்டால் மாணவர்கள் பாவம் என எண்ணத் தோன்றுகிறது.