India - Dinakaran

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கேரள மீன்வளத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: மங்களூரில் இருந்து மீன்பிடிக்க சென்று கேரள மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுர மீனவர்கள் 40 பேர், கேரள மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

கொச்சி:கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக, சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஆண்களின் திருமண வயதை குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : ஆண்களின் திருமண வயதை 18ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்கக் கோரி அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும், ராணுவத்தில் சேர அனுமதி ஆகியன 18 வயதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும் என மனுவில் கூறப்பட்டது. இந்த மனு விசாரிப்பதற்குத் தகுதியற்றது என கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். அத்துடன் மனுதாரரான அசோக் பாண்டேக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் 18 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனிடேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெண்களின் திருமண வயதைப் போல் ஆண்களுக்கும் திருமண வயதை 18ஆக நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. ஆண்-பெண் சமத்துவம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கிவரும் நிலையில் இந்த வயது வேறுபாடு தேவையற்றது என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதலாவதாக டெல்லியில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இதேபோல் பட்டாசு உற்பத்திக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு பொதுநல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என சிவகாசி உற்பத்தியாளர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக்பூஷண் அடங்கிய அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குகிறது.  

சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு!

குஜராத் : குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதையடுத்து 'ஒருமைப்பாட்டு சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக மோடி அரசு கூறிய நிலையில், இதுவரை எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கத்தினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரையோரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சாலைப்பணி டெண்டரை உறவினருக்கு ஒதுக்கியதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் திருமண வயதை குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி

டெல்லி: ஆண்களின் திருமண வயதை 21-லிருந்து, 18-ஆக குறைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#MeToo விவகாரம்...உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுப்பு

டெல்லி: #MeToo விவகாரத்தை தானே முன்வந்து உடனடியாக விசாரிக்க கோரியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #MeToo புகார் விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு கருதி சபரிமலையிலிருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

திருவனந்தபுரம் : சபரிமலையில் துலாம் மாத பூஜைக்காக திறக்கப்பட்ட நடை இன்று இரவுடன் அடைக்கப்பட உள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியே கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பராம்பரிய வழிபாட்டு கொள்கை காக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு கலவரம் நிலவியது. எனவே சபரிமலை, நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவானது இன்று இரவு வரை நீடிக்கிறது. துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு இன்று 6வது நாளாகும் நிலையில், இன்று இரவு 10 மணிக்கு நடையடைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சபரிமலைக்கு 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிப்பது குறித்து நாளை அறிவிப்பு

டெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான அனைத்து சீராய்வு மனுக்களையும் அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கறிஞர் மாத்யூ நெடும்பரா என்பவர் முறையிட்டார். இந்த முறையீடு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், அவசரமாக விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்

புதுடெல்லி: வாட் வரியை குறைக்க மறுக்கும் அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் டெல்லியிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வாட் வரி குறைவாக உள்ள மாநிலங்களில் எரிபொருளை நிரப்புவதால் டெல்லியில் பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களில் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 25 சதவிகிதமும் குறைந்துள்ளதாக டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பாதிப்பை சரிகட்ட மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை டெல்லி அரசு ஏற்காததால் டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் விளைவாக இன்று காலை 6 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. இதனால் கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கியுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் இந்நிலையில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம், இலவங்கல், நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று இரவுடன் நடை சாத்தப்படவுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பந்தள மன்னர் குடும்பம் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.  பந்தள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா வர்மா சிறப்பு பூஜையில் பங்கேற்றுயுள்ளார். எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை பந்தள மன்னர் குடும்பம் நடத்துவததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு

ஹிமாச்சலப்பிரதேசம்: கினாவூரில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆகப் பதிவாகியுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது: 6 நாட்கள் ஆகியும் இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்கவில்லை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு சாத்தப்படுகிறது. நடை திறந்து 6 நாட்கள் ஆகியும் கூட இளம்பெண்கள் கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. நிறைவுநாள் என்பதால் இன்று பெண்கள் வழிபட கோயிலுக்குள் அதிகளவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் இன்றும் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக ஆந்திராவை சேர்ந்த மாதவி, டெல்லியை சேர்ந்த பெண் நிருபர் சுகாசினி ராஜ், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா, எர்ணாகுளத்தை சேர்ந்த மாடல் அழகி ரெஹ்னா பாத்திமா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மேரி ஸ்வீட்டி, கொல்லத்தை சேர்ந்த மஞ்சு ஜோசப் ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல முயற்சித்தனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்களாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்குள் செல்லும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் சபரிமலையில் இன்றும் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு

அகமதாபாத்: இந்திய மீனவர்கள் 16 பேர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் தங்கள் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து மீனவர்களின் விசைப்படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கராச்சி நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று, நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 27 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசாருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உளவுத்துறை தகவலை அடுத்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப்பில் ரயில் மோதி 62 பேர் பலி விபத்து நடந்த இடத்தில் மேலும் பலரை காணவில்லை: மக்கள் போராட்டம்; கல்வீச்சு

அமிர்தசரஸ்:  பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதி 62 பேர் கொல்லப்பட்ட விபத்தில் இன்னும் பலரை காணவில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது அவர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோதக் பகுதியில் கடந்த வெள்ளிகிழமை தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, ராவணன் உருவ ெபாம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் தண்டவாளத்தில் நின்றிருந்தபோது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், 61 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 57 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் அமிர்தசரஸ் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஹர்ஷ் (19) என்ற இளைஞர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.விபத்து நடந்த இடத்தில் மக்கள் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த மேலும் பலரை காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ரயில் மோதி இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  தண்டவாளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பஞ்சாப் ேபாலீஸ் கமாண்டோ, பத்திரிக்கையாளர் ஒருவர் காயமடைந்தனர்.  நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தண்டவாளத்தில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்ை–்த தொடர்ந்து, விபத்தில் இறந்தவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்கும்படி அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.உபியை சேர்ந்த 10 பேர் பலிரயில் விபத்து நடந்து 40 மணி  நேரத்துக்கு பிறகு நேற்று பிற்பகல் 2.16 மணிக்கு அந்த வழித்தடத்தில்  ரயில் போக்குவரத்து தொடங்கியது. ரயில் விபத்தில் பலியானவர்களில் 10 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில நிவாரண ஆணையாளர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,` சுல்தான்பூர் மாவட்டத்தின் சோன்பர்சா கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர். இது தவிர அமேதி, காஜிபூர், அசாம்கார், ஹர்ேடாய் பகுதியை சேர்ந்தவர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களை காணவில்லைபோராட்டத்தில் கலந்து கொண்ட ராஜூ என்பவர் கூறுகையில், ‘‘ரயில் மோதியதில் எனது தந்தை இறந்து விட்டார். அவரது சடலத்தை மூடுவதற்காக துணியை எடுக்க சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய சடலத்தை காணவில்லை” என கதறி அழுதார். இதேபோல், காய்கறி வியாபாரி காஜல் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காணவில்லை என உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

முஸ்லிம் மதத்திலிருந்து ரெஹ்னா நீக்கம்

கேரள முஸ்லிம் ஜமா அத் கவுன்சில் தலைவர் குஞ்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: லட்சக்கணக்கான இந்து சமூகத்தினரின் மத நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபரிமலைக்கு சென்ற முஸ்லிம் மதத்தை சேர்ந்த ரெஹ்னா பாத்திமாவை சமுதாயத்தில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது. அவரையும், அவரது குடும்பத்தையும் மஹல் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்று எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமா அத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.