Kanchipuram - Dinakaran

அரசு மதுபானங்களை விற்ற 4 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின்  அருகே அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதிமானிக்கு அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு  போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் போலீசார் காஞ்சிபுரம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் மதுபானக் கூடங்களை கண்டறிந்து  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை ரெட்டிபேட்டையில் விற்பனை செய்த   பார் ஊழியர் கிருபானந்தன் (43), சாலியர் தெரு பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட நாகராஜ் ( 26 ), மேட்டு தெரு  பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர் முருகன் ( 40 ), நெல்லுக்கார தெருவில்  பசுபதி ( 25 )  ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் தற்கொலை

சென்னை: திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பரத் (35). நடன கலைஞரான இவர், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் டான்சராக பணியாற்றி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடன குழுவிலும் பணிபுரிந்து வந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குழந்தைகளுக்கும் இவர்தான் நடன பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.மேலும், இவர் பல ஆண்டுகளாக திருமணம் ெசய்ய பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சரியான வாழ்க்கை துணை அமையவில்லை. இதுபற்றி சக நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரமாக மன வேதனையில் இருந்து வந்த பரத், அறையில் உடன் தங்கியுள்ள சக நண்பர்களிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பரத் வழக்கம்போல் அறையில் படுத்து இருந்தார். நேற்று காலையில் சக நண்பர்கள் எழுந்து பார்த்தபோது பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் பரத்துடன் தங்கி இருந்த சக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாலபதங்கீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணி: தொல்லியல் வல்லுநர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலூர் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். தற்போதுள்ள கோயில் முதலாம் பராந்தக சோழன் கட்டியதாகும். அகத்திய முனிவர், பதங்க முனிவர், மார்க்கண்டேயர், சூரியன் ஆகியோர் இங்கு வந்து வணங்கி அருள் பெற்றுள்ளனர் என்பது ஐதிகம். இக்கோயில் புனரமைக்கப்பட்டு 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் செய்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய ஊர் பெரியோர்கள் கோயில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பணிகளை தொடங்குவதற்கு முன்பாக  முதற்கட்டமாக மத்திய தொல்லியல் வல்லுநர் ஜெயகரன்  நேற்று பாலூர் கோயிலுக்கு வருகை தந்து கோயில் திருப்பணிகள் குறித்து செயல் அலுவலர் செந்தில்குமாருடன் முழுவதுமாக ஆய்வு செய்தார்.

திருப்போரூரில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூரில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் மேற்கு மாடவீதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நகைக்கடன் நிறுவனம் உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணி வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நான்கு பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த நகைக்கடன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அவர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்வையிட்டனர். மின் கோளாறு அல்லது எலி வயரைக் கடித்ததால் அலாரம் ஒலித்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த நிறுவனத்தில் அடிக்கடி அலாரம் ஒலிப்பதால் அதில் உள்ள கோளாறை உடனடியாக சரி செய்யுமாறு போலீசார் நிறுவன ஊழியர்களை எச்சரிக்கை செய்தனர்.

செங்கல்பட்டில் பரபரப்பு கழிவுநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு மே 17: செங்கல்பட்டில் கழிவுநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. யாராவது அடித்து கொலை செய்து வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அண்ணாநகர் 4வது குறுக்கு தெரு அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில், நேற்று முன்தினம் மாலை, 45 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.  அவ்வழியாக சென்றவர்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து, கால்வாயில் வீசினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பகுதிகளில் விபத்து வாகனங்களில் திருடும் கும்பல் கைது

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் கடந்த மாதம் சரக்கு வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த வேனை வெண்குடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேனில் இருந்து, 3 மர்ம நபர்கள் டயர்களை திருடுவதாக நேற்று வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று 3 நபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.  இவர்கள், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரபாகரன் (21), சூர்யா (20) மற்றும் வள்ளல் பச்சையப்பன் தெரு தேவகுமார் (30) என தெரிய வந்தது. இவர்கள், சாலையோரம் இருக்கும் விபத்துக்குள்ளான, வாகனங்களிலிருந்து திருடுவது தெரியவந்தது. இச்சம்பவத்திற்கு முன், வாலாஜாபாத் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்த ஒருவரிடம் செல்போனை பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பிரபாகரன் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. வாலாஜாபாத் போலீசார் வழக்கு  பதிவு செய்து,  3 பேரையும் கைது செய்தனர்.

சுங்குவார்சத்திரம், வல்லம் சிப்காட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு: வாகனஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் மற்றும் வல்லம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. பைக், கார், லாரி, கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கபடும் பொருட்களை ஏற்றி செல்ல, கனரக மற்றும் இலகுரக வாகனங்களை, சிப்காட் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்துள்ளனர்.  மேலும் தொழிற்சாலைக்கும் வரும் கார், கன்டெய்னர் லாரிகளை இந்த சாலையினை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி வைகப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.   மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் சுங்குவார்சத்திரம், வல்லம் சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொது மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆனால், ஒரகடம், சுங்குவார்சத்திரம் போலீசார் கண்டுகொள்வதில்லை என்று  குற்றம்சாட்டபடுகிறது.   இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்காட்டு பன்னாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் சிப்காட் சாலையை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி வைக்கின்றனர். இதனால் வல்லம் சிப்காட் பகுதியில் குடிநீர், கழிவறை, தங்கும் அறை அடங்கிய கன்டெய்னர் நிறுத்தும் இடம் அமைக்கபட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.  ஆனால் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கண்டெய்னர் நிறுத்தும் இடத்தை பயன்படுத்தாமல், சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்துகின்றனர் என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுராந்தகம் சுற்று வட்டார பள்ளி வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில்  இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு நேற்று மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இதில், சுமார் 33 பள்ளிகளை சேர்ந்த 115 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த வாகனங்களை செங்கல்பட்டு சாலை போக்குவரத்து அதிகாரி நடேசன், மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதி, மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், தீயணைப்பு துறை அலுவலர் குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வாகனங்களில் அவசர வழிகள், முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் போன்றவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர். அப்போது, வாகனங்களில் ஆவணம், ஓட்டுனர்களின் உரிமங்கள் மற்றும் உதவியாளர்களின் தகுதிகள் குறித்து சரிபார்த்தனர். மேலும், வாகன பராமரிப்பு, அனைத்து பேருந்துகளும் மாணவர்கள் பயணிக்க கூடிய அளவிற்கு தகுதியானவையாக உள்ளதா என பார்க்கப்பட்டன. டிரைவர்கள், உதவியாளர்கள் ஆகியோர் சாலை போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர், மாணவர்களுக்கான முதலுதவி சிகிச்சை பற்றி எவ்வாறு அளிப்பர் என ஆய்வு செய்தனர். இதில், மொத்தத்தில் கலந்துகொண்ட 115 பேருந்துகளில், இரண்டு பேருந்துகள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் இல்லை எனக்கூறி போக்குவரத்து துறை அதிகாரிகள் நிராகரித்தனர். மற்ற வாகனங்கள் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவை கலைக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ்: ஊழல் முறைகேடுக்கு முகாந்திரம் உள்ளதால் அதிரடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித்துறை கட்டுப்பாட்டில் 22 அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் தவிர மற்ற சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கூட்டுறவு சங்கத்தில் அதிமுக சங்க நிர்வாகக் குழுவினரின் ஊழல் முறைகேடுகள் காரணமாக லாபத்தில் செயல்பட்ட அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும்  முருகன் பட்டு கூட்டுறவு சங்கமும் தற்போது  நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.34 கோடி ஊழல் நடந்தது  நிரூபணமானதால் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அதில் தொடர்புடைய மற்ற இயக்குநர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு நோட்டீஸ் வழங்க கைத்தறித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திலும்  கடந்த 2017-18ம் ஆண்டில் சுமார் ரூ.2 கோடி ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் ஊழல் முறைகேடு குறித்து, இணை இயக்குநர் சாரதிசுப்புராஜ் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக சங்க மேலாண் இயக்குநர் உள்பட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2017- 18ம் ஆண்டின் சங்க தணிக்கை முடிக்கப்படாமல்  காலதாமதப்படுத்தி வந்த சங்க நிர்வாகக்குழுவினரின் போக்கால் சங்க உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு பொங்கல் போனஸ் மறுக்கப்பட்டது. சங்க தணிக்கை அறிக்கை வெளியானால் நிர்வாகக்குழுவினரின் ஊழல் முறைகேடுகள் வெளிவரும் என்பதால் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர். நீண்டநாட்களாக சங்க தணிக்கை அறிக்கை வெளியிடாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் தணிக்கை அதிகாரிகளால் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தணிக்கை சான்று வெளியிடப்பட்டது. மேலும்  மறு தணிக்கை கோரிய சங்கத் தலைவரின் கோரிக்கை தணிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம், சங்கத் தலைவர் வள்ளிநாயகம், துணைத்தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம், இயக்குநர்கள் கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், சம்பத், பாஸ்கர், கீதா உள்ளிட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். அதில், சங்கத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதால் சங்க நிர்வாகக்குழுவை ஏன் கலைக்கக்கூடாது என்றும், சம்மன் அனுப்பப்பட்ட 15 நாட்களில் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவும் விரைவில் கலைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. சங்க நிர்வாகக்குழுவை கலைத்துவிட்டு கைத்தறித்துறை சார்பில் தனி அதிகாரியை நியமிக்க  வேண்டுமென்பது சங்க நெசவாளர்களின்  பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்போரூர் பேரூராட்சியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: கடைகளில் திடீர் சோதனை

திருப்போரூர்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி சார்பில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து  துண்டு பிரசுரம், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.   இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று திருப்போரூர் பேருந்து நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை, ரவுண்டானா, பஜார் வீதி, இள்ளலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றியும், தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் கூறி வியாபாரிகளுக்கு அளவு வைத்திருந்த நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 72 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதற்கட்டமாக 1300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடப்பாக்கம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு: டிரைவர் படுகாயம்

செய்யூர்: அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். கல் வீசிய   மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு அரசு விரைவு பஸ் சென்னை நோக்கி சென்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். செய்யூர் அடுத்த கடப்பாக்கம் அருகே வந்தபோது, புதுச்சேரி நோக்கி செல்லும் எதிர் சாலையில் 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர். அவர்கள் திடீரென அரசு பஸ்சின் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். எனினும், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை கட்டுக்குள் கொண்டு வந்து ஓட்டியதால் பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து படுகாயம் அடைந்த டிரைவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து டிரைவர் கொடுத்த புகாரின்படி, சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

குன்றத்தூர் அருகே போராட்டம்

பல்லாவரம்: குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் என்னும் இடத்தில், தாம்பரம்-  மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள அணுகு சாலையில் தனியாருக்கு  சொந்தமான ஏராளமான தண்ணீர் கம்பெனிகள்  உள்ளன. இங்கு எடுக்கப்படும் தண்ணீர்  சென்னை முழுவதும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில்  நேற்று, இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி, தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஊராட்சி பகுதியை  சேர்ந்த  பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்,அந்த தண்ணீர் கம்பெனியை  மூடக்கோரி முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில்  ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  குன்றத்தூர் போலீசார் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமாவதி ஆகியோர் சாலை  மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும்  பிரச்சினை தீரும் வரை தனியார் தண்ணீர் கம்பெனிகளை மூடி வைக்குமாறு,  தாசில்தார் தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக தண்ணீர் கம்பெனிகள் அனைத்தும்  மூடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து  சென்றனர்.

மதுராந்தகத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

மதுராந்தகத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, 24 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை நாள்தோறும் குடிநீர் வினியோகப்பட்டது.  கடந்த சில வாரங்களாக பல இடங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீரும், ஒருசில பகுதிகளில் 2 நாளைக்கு ஒருமுறை பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு குழாய்களில் வரும் குடிநீரும் சுமார் அரைமணி நேரத்துக்குள் நிறுத்தப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் பல இடங்களில் சுற்றி அலைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, மதுராந்தகம்-சென்னை நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் நுழைவாயில் எதிரே மற்றும் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 8 மணியளவில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அனைத்து வார்டுகளிலும் போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒத்திவாக்கம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு: ஒத்திவாக்கம் ஊராட்சியில், குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஒத்திவாக்கம் ஊராட்சி செல்வி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மணப்பாக்கம் பாலாற்று பகுதியில் இருந்தும், செல்வி நகரில் உள்ள கிணற்றில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. கிணற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.  இதுபற்றி ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். அப்போதும், நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் செங்கல்பட்டு-பொன்விளைந்தகளத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போராட்டம் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் குமார், சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தார். அப்போது, ‘எங்கள் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக குடிநீர் வராமல் உள்ளது. அனுமதியின்றி பாலாற்று குடிநீர் பைப் லைனில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. வீட்டு மனைகளுக்கும் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால், குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்’’ என்று பொதுமக்கள் கூறினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், ‘மனு கொடுங்கள். அதன் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்குகிறோம்’’ என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் புகுந்து பேராசிரியர் பைக்கை திருடிய இருவர் கைது

செங்கல்பட்டு, மே15: செங்கல்பட்டு பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற அரவிந்தன் தனது பைக்கை கல்லூரி வளாகத்தில் நிறுத்தினார். பின்னர் வகுப்புக்கு சென்றுவிட்டார். மாலையில் வகுப்பு முடிந்ததும் பைக்கை எடுக்க வந்தபோது மாயமாகி இருந்தது. கல்லூரி வளாகம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காட்டாங்கொளத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். விசாரணையில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (28), திருப்போரூர் அடுத்த காயராம்பேடு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (20) ஆகியோர் என்பதும், அரவிந்தன் பைக்ைக திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போரூர் அருகே காரம்பாக்கத்தில் கணவன் இறந்த சோகத்தில் கர்ப்பிணி திடீர் தற்கொலை

பல்லாவரம், மே 15: போரூர் காரம்பாக்கம் பொன்னி நகர், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவரது மனைவி இளந்தென்றல் (25). தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமனார் ரவி கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளந்தென்றல் தூக்கிட்டு சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தகவலறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளந்தென்றல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் கல்லூரியில் படிக்கும்போது பிரவீன் குமார் என்பவரை இளந்தென்றல் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி நடந்த சாலை விபத்தில் பிரவீன்குமார் இறந்துள்ளார்.   இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இளந்தென்றல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விபத்தில் இருவர் பலி

வாலாஜாபாத், மே 15: வாலாஜாபாத், ஆனம்பாக்கம் கிராம பள்ள தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் கலைச்செல்வன் (33). லாரி டிரைவர். கலைச்செல்வனும், அதே பகுதியை சேர்ந்த லோகு (55) என்பவரும் காஞ்சிபுரம் சென்றுவிட்டு வாலாஜாபாத் நோக்கி பைக்கில் திரும்பி  கொண்டு இருந்தனர். தர்மராஜன்பேட்டை வந்தபோது எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ் திடீரென இவர்களது பைக் மீது மோதியது. இதில் கலைச்செல்வன் சம்பவ இடத்தில் இறந்தார். லோகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அப்பகுதி மக்கள் லோகுவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அடுத்த சம்பவம்:  ஊத்துக்காடு தலைப்பாலத்தின் மீது வாலாஜாபாத் நோக்கி வந்த பைக் நேற்று மோதியது. இதில் ஒருவர் பலியானார்.  மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

காஞ்சிபுரம், மே 15: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று மழை வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது.தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கோயில்களில் மழை வேண்டி, சிறப்பு யாகம் நடந்து வருகிறது. அந்தவகையில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி நேற்று காலை காஞ்சி சங்கரமட பாடசாலை ஆசிரியர் குருமூர்த்தி தலைமையில் பாடசாலை மாணவர்கள் வருண வேள்வி, வருண காயத்ரி ஜெபம், வருண பாராயணம் உள்ளிட்ட விசேஷ மந்திரங்கள் ஓதி வருண ஜெபம் செய்தனர். இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் நீரில் நின்றபடி வேதபாட சாலை மாணவர்கள் வருண ஜெபம் செய்தனர். இந்த வருண ஜெபம் நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், கோயில் பணியாளர்கள் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேருந்து மோதி மூதாட்டி பலி

குன்றத்தூர், மே 15: குன்றத்தூர், நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (62). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு சென்று முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டு மீண்டும் நேற்று நந்தம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருவதற்காக குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மூதாட்டி லட்சுமி மீது பலமாக மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் முன் சக்கரம் லட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாயை கொன்ற ஆசாமி கைது

சென்னை, ேம 15: சென்னை மூலக்கொத்தளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தெருவில் சுற்றித்திரிந்த நாயை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக அடித்து தரதரவென இழுத்துச்சென்று கூவம் ஆற்றில் மூழ்கடித்து கொன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ேவகமாக பரவியது. இதுகுறித்து ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த மகேஸ்வரன் வீடியோ ஆதாரத்துடன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குமார் (42) என்பவர், நாயை அடித்து கொன்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய தந்தையை நாய் கடித்ததால் ஆத்திரத்தில் நாயை அடித்து கொன்றதாக கூறினார். இதையடுத்து, மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் குமாரை போலீசார் கைது செய்தனர்.