Kanyakumari - Dinakaran

ஆட்டோவில் கடத்திய 200 கி.ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை, அக்.18: நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் இருந்து ஆட்டோவில் ேரஷன் அரிசி கடத்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜாசிலின், சோபனராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நித்திரவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்வதாக தெரிகிறது. இதையடுத்து ஆட்டோ மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆட்டோ டிரைவருடன் நாகர்கோவில் குடிமைப்ெபாருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

31ம்தேதி தலைமை செயலகம் முற்றுகை

குளச்சல், அக்.18: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஊழியர் கூட்டம் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் குளச்சலில் நடந்தது. ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட தலைவர் சுசீலா, மாநில செயற்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா, நிர்வாகிகள் மணவை கண்ணன், கணபதி, சுமதி, கார்மல், ஐயப்பன், ஆக்னஸ், ஞானசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊழல் முறைகேடுகளை கண்டித்து வரும் 31ம்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவது, திக்குறிச்சி மகாதேவர் கோயில் கொள்ளையர்களை கண்டுபிடித்து சிலைகளை விரைவாக மீட்கவும், ரப்பர் வாரிய ஊழலில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது, பேயன்குழி முதல் காரங்காடு, குருந்தன்கோடு வரை குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட கேட்பது, வரும் 27ம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் குமரி மாவட்டத்திலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கார் டிரைவருக்கு 11 ஆண்டு சிறை

மார்த்தாண்டம், அக். 18: குலசேகரம் புறாநேரிவிளை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.  வண்டிப்பிலாங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் மணி மகன் விஜயகுமார் (32). கார் டிரைவர். இவர், கடந்த 2016ல் சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றி தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.வீட்டில் வைத்து சிறுமிக்கு டிவியில் ஆபாச படங்களை காண்பித்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.இதன் பேரில், போலீசார் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில், சிறுமி 8ம் வகுப்பு படிக்கும் போதே பல முறை தனியாக அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை குமரி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கில் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மீனாட்சி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதன் படி, விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில்தண்டனையும், ₹30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து விஜயகுமார் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிஎஸ்என்எல் அன்லிமிடெட் மொபைல் பிரிபெய்ட் திட்டங்கள்

நாகர்கோவில், அக்.18: நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிஎஸ்என்எல் மிக குறைந்த தினசரி கட்டண விகிதங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புக்கள் மட்டும் உள்ள பிரிபெய்ட் பூஸ்டர்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா வசதி உள்ள பிரிபெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. சிறப்பு சலுகையாக அனைத்து மொபைல் பிளான்கள் மற்றும் பூஸ்டர்களோடு ஒரு நாளைக்கு எக்ஸ்ட்ராவாக 2.2 ஜிபி அளவுக்கு டேட்டா பயன்படுத்தும் வசதியை பி.எஸ்.என்.எல் நவம்பர் 14 வரை அறிவித்துள்ளது.பிளான்-429 ல் ஏற்கனவே நாளொன்றுக்கு 1 ஜிபி அளவுக்கு இலவச டேட்டா பயன் படுத்தும் வசதி உள்ளது. இத்துடன் சிறப்பு சலுகை எக்ஸ்ட்ரா டேட்டா 2.2 ஜிபி யை சேர்த்து பிளான்-429 வாடிக்கையாளர் தினமும் 3.2 ஜிபி அளவுக்கு டேட்டா பயன்படுத்த முடியும். தரைவழி பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான டெய்லி ஜிபி டேட்டா வசதியுடன் புதிய அன்லிமிடெட் கோம்போ திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு அம்சமாக அனைத்து திட்டங்களிலும் 24 மணிநேரமும் இலவச வாய்ஸ் அழைப்புக்கள் இந்தியா முழுவதும் பேசும் வசதி உண்டு.பி.எஸ்.என்.எல் உயர் வேகத்திலான இன்டர்நெட் சேவைகளை ஆப்டிகல் பைபர் டெக்னாலஜி  மூலம் பைப்ரோ காம்போ யுஎல்டி 777 மற்றும் ஃபைப்ரோ காம்போ யுஎல்டி1277 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிளான்களில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புக்கள் உண்டு. குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து இல்லங்களையும் அதிவேக கண்ணாடி இழை இன்டர்நெட் சேவை வாயிலாக இணைக்க பி.எஸ்.என்.எல் உறுதி பூண்டுள்ளது. பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல் சிறப்பு மொபைல் பூஸ்டர்- 78ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த பூஸ்டரை பயன் படுத்தி 10 நாட்களுக்கு அன்லிமிடெட் ஆக வாய்ஸ், வீடியோ அழைப்புகள் பேசும் வசதியுடன் தினமும் 2 ஜிபி அளவுக்கு டேட்டாவும் உபயோகப்படுத்தலாம். மாத வாடகையாக ₹399க்கு மேல் செலுத்தும் பி.எஸ்.என்.எல் மொபைல் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் மேலும் ₹745க்கு மேல் செலுத்தும் பி.எஸ்.என்.எல் லேன்ட் லைன், பிராட்பேன்ட் மற்றும் கண்ணாடி இழை வாடிக்கையாளர்களுக்கும் ₹999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் பேக்கேஜ் இலவசம். இதற்காக வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்தில் சென்று பதிவு செய்திடலாம்.

மார்த்தாண்டத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெருக்கடி

மார்த்தாண்டம், அக். 18:  குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக மார்த்தாண்டம் விளங்கி வருவதோடு, கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளின் தலைநகரம் போலவும் விளங்கி வருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியாக மார்த்தாண்டம் உள்ளது. மலையோர மற்றும் கடலோர மக்கள் உட்பட பலரும் மார்த்தாண்டம் பகுதிக்கு தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். ஆனால், பெருகி வரும் மக்கள்தொகை, வாகனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப மார்த்தாண்டம் பகுதி சாலைகள் விரிவாக்கப்படவில்லை. மார்த்தாண்டம் சந்திப்பை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி, வடக்கு தெரு மற்றும் மார்க்கெட் ரோடு மிகவும் குறுகலாகவே உள்ளன. இதனால் மார்த்தாண்டம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மார்த்தாண்டம் வடக்குத்தெரு, மார்க்கெட் ரோடு உட்பட சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக குறுகலான மற்றும் வளைவான நெருக்கடி மிகுந்த பகுதிகளில் டூ-வீலர்களை வரிசையாக நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், பஸ்கள் உட்பட வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மார்த்தாண்டத்தில் தாறுமாறாக நிறுத்தியிருந்த பைக்குகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து பைக்குகளை அப்புறப்படுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.எனவே, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கருங்கல் அருகே விஷம் குடித்த தொழிலாளி சாவு

கருங்கல் அக்.18:  கருங்கல் அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தை சேர்ந்தவர் சேம்ராஜ் (52). தொழிலாளி. இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி சேம்ராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை சேம்ராஜ் இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தக்கலை அருகே மெக்கானிக்கை கடத்தி பணம், செல்போன் பறிப்பு 8 பேர் மீது வழக்கு

தக்கலை, அக்.18 :  தக்கலை அருகே டூ வீலர் மெக்கானிக்கை கடத்தி சென்று சரமாரி தாக்கி பணம், செல்போன் பறித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை செக்காலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவரது மகன் சுபின்(23). இவர் அழகியமண்டபம் சந்திப்பில் டூ வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். கடந்த 15ம்தேதி, சுபின் தனது ஒர்க்ஷாப்பில் இருந்த போது, வாலிபர் ஒருவர் தனது நண்பனின் பைக் பழுதாகி நிற்கிறது.  வந்து சரி செய்து தரும்படி கூறினார். இதையடுத்து சுபின், அந்த வாலிபருடன் பைக்கில் சென்றார். அங்கிருந்து மாம்பழத்துறையாறு அணைக்கு செல்லும் வழியில் சுபினை அழைத்து சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு இறங்குமாறு அந்த வாலிபர் கூறினார். இதையடுத்து சுபின் இறங்கிய போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த மேலும் சில வாலிபர்கள் வந்தனர்.அவர்கள் அனைவரும் சேர்ந்து சுபினை சரமாரி தாக்கினர். தன்னை எதற்கு அடிக்கிறீர்கள் என கேட்ட போது, அவர்கள் எதுவும் சொல்லாமல் சரமாரியாக தாக்கியதுடன்,  அங்கிருந்து சுபினை பைக்கில் மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்தும் சரமாரியாக அடித்து உதைத்து, சுபினிடம் இருந்த செல்போன் மற்றும் ₹1700 பணம், ஏடிஎம் கார்டு, லைசென்சு உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் சுபின் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து வந்து, தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சாமியார்மடத்ைத சேர்ந்த சுல்பிகர் அலி, முளவிளை பகுதியை சேர்ந்த சுபின், சாமியார்மடத்தை சேர்ந்த பிரேம்குமார், ஜோஸ், பிரசாந்த் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் என மொத்தம் 8 பேர் மீது கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில், அக்.18:  குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார், தொழில்நுட்ப பிரிவு மேலாளர் பிரதீப் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பு: மத்திய அரசின் சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மூலம் கேரளா, தமிழ்நாடு எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலும் புதிய 4 வழி சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 36 குழாய் பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. 35 குழாய் பால பணிகள் நடைபெற்று வருகிறது. 33 சதுரபால பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 35 சதுரபால பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. 13 வாகன கீழ்பாதை பணிகள் நடைபெற்றுள்ளது. 9 பாதசாரிகள் கீழ்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பெரிய பாலம் கட்டும் பணி நடந்துள்ளது. ஒரு வாகன மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. 5 சிறிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.8 பாலப்பணிகள், 2 ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காவல்கிணறு முதல் தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சுமார் 14 கிலோ மீட்டர் காங்கிரீட் சாலை அமைக்கபட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை சுமார் 6 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் உள்ளது. 4 வழிசாலை பணிகள் 24 மணி நேரமும் இரவு பகலாக நடந்து வருகிறது.2 ரயில்ேவ மேம்பாலங்களும், குழித்துறை தாமிரபரணி ஆற்றுபால பணிகளும் நடந்து வருகிறது. தாமிரபரணியில் நீர் வரத்து அதிகரித்த நிலையிலும், மழை காரணமாகவும். குளங்களில் நீர் நிரம்பி மண் எடுக்க முடியாததாலும் சில வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்களில் நவீன தொழில்நுட்ப பணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் எதிர்கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு பணிகள் தர உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை ₹1000, மல்லி ₹1250

தோவாளையில் பூக்கள் விலை உயர்வுஆரல்வாய்மொழி, அக். 18: ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்தது.குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கும் பூக்கள் விற்பனை ஆகின்றன. இதுதவிர வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பூக்களை வாங்கி செல்கின்றனர். கேரளாவை உலுக்கிய கோர மழையால் இந்த மார்க்கெட்டில் ஓணப்பண்டிகையை தொடர்ந்து பூக்கள் விலை குறைவாகவே இருந்து வந்தது.இந்நிலையில், ஆயுதப்பூஜையை யொட்டி நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்கள் விலை நிலவரம் (ஒரு கிலோ): மல்லி ₹1250, பிச்சி ₹1000, முல்லை ₹1000, வாடாமல்லி ₹150, சம்பங்கி ₹350, கனகாம்பரம் ₹400, பாக்கெட் ரோஸ் ₹50, பட்டன்ரோஸ் ₹170 (பாக்கெட்), கொழுந்து ₹100, மரிக்கொழுந்து ₹120, மஞ்சள் கிரேந்தி ₹120, ஆரஞ்சு கிரேந்தி ₹120, மஞ்சள் செவ்வந்தி ₹200, வெள்ளை செவ்வந்தி ₹200, துளசி ₹50, கோழிப்பூ ₹50, தாமரை ₹20 (ஒன்று) என விற்பனையானது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:ஓணப்பண்டிகையை தொடர்ந்து பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. தற்போது ஆயுதப்பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை குறையாது என்றார். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அழிக்காலில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கலெக்டருடன் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ சந்திப்புநாகர்கோவில், அக்.18:  அழிக்காலில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கலெக்டரை சந்தித்து வலியுறுத்தினார்.அழிக்கால் பகுதி அடிக்கடி கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுகிறது. இங்கு கடலரிப்பு தடுப்புச்சுவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவை சந்தித்து அழிக்கால் பகுதியில் கடலரிப்பு தடுப்புச்சுவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அப்போது அழிக்கால் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்படுகின்ற பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. இரண்டு மாதத்தில் கற்கள் போடப்படும் என்று கலெக்டர் உறுதியளித்துள்ளார். மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் பணியாளர்களின்றி உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர், பிரேக் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இல்லை. இதனால் வாகனங்களுக்கு எப்சி சான்றிதழ் பெற முடியவில்லை. புதிய வாகனங்கள் பதிவுசெய்வதிலும் சிரமங்கள் இருந்து வருகிறது. பிரேக் இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் உள்ள இடத்தில் ஒருவர் கூட இல்லை. திருநெல்வேலியில் இருந்து இங்கு அதிகாரிகள் வருகின்றனர். மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி வாரத்திற்கு ஒருமுறை வகிறார். தினமும் 200 வாகனங்கள் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மூன்று மாதமாக இந்த நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்ந்த கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கூறினார். இந்த சந்திப்பின்போது திமுக பேரூர் செயலாளர் பிரபா எழில், ஜாண்சன், அழிக்கால் பங்குதந்தை சோரிஸ் மற்றும் அழிக்கால் ஊர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.நாகர்கோவிலில் மரணமடைந்தஅதிமுக பேச்சாளர் குடும்பத்துக்கு ₹50 ஆயிரம் நிதிநாகர்கோவில், அக்.18:  நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை (53). இவர் அதிமுக தலைமைக்கழக பேச்சாளராக இருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இவர் மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், நேற்று முன் தினம் காலை மாதவன் பிள்ளை வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ₹50 ஆயிரம் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் தொகுதி கழக செயலாளர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அரசு போக்குவரத்து கழக மாற்று திறனாளி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில். அக்.18:  அரசு போக்குவரத்து கழகங்களில் பணி செய்யும் மாற்று திறனாளர்கள் இந்திய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பதால் அவர்களின் பணி பதிவேட்டில் மாற்று திறனாளி என அடையாளப்படுத்தி, அவர்களை மாற்று திறனாளி பணியாளர் என பதிவு செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான ஊர்திப்படி ரூ.2500ஐ உடனடியாக வழங்க வேண்டும். என்ட் டூ என்ட் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மாற்று திறனாளி கண்டக்டர்கள் அனைவருக்கும் இலகுவான பணி வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் மாற்று திறனாளிகளுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்று திறனாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் மரிய ஸ்டீபன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கவுரவ தலைவர் வக்கீல் ஜெரால்டு, மாற்று திறனாளர்களுக்கான தென் மாநில தேசிய அமைப்பான சக்ஷம் மாநில செயலாளர் வேலுமயில், மாவட்ட  தலைவர் என். சுப்பிரமணி, மாவட்ட ஆலோசகர் கோபக்குமார், நகர தலைவர் மகிழ்வண்ணன், நகர செயலாளர் தங்ககுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ஆர். காமராஜ், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், மாற்று திறனாளர்கள் சங்க முன்னாள் சங்க தலைவர் தேவதாசன்,  மாற்று திறனாளர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் முருகன், மாநில இணை செயலாளர் அந்தோணி, மாநில பொருளாளர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாகர்கோவில், அக்.18 :  அதிமுக தொடங்கப்பட்டு 47ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அதன் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதன் அருகில் உள்ள ெஜயலலிதா மணல் சிற்பத்துக்கும் மலர் தூவி வணங்கினர். இந்த நிகழ்ச்சியில்  அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், இளைஞர் பாசறை செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் பொன் சுந்தரநாத், வக்கீல் சுந்தரம், சந்துரு, சுகுமாரன், ரபீக், இ.என். சங்கர், கார்மல் நகர் தனிஸ், ரயிலடி மாதவன், வக்கீல் ெஜயகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு  இனிப்பும் வழங்கினர்.

பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

கன்னியாகுமரி, அக். 18: சாமிதோப்பை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்  (38). மார்பிள் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி  (34). நேற்று மதியம் வீட்டின் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஜெயலட்சுமியின் அருகில் சென்று கழுத்தில் ஒங்கி அறைந்துள்ளார்.இதில், நிலைகுலைந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார். ஜெயலட்சுமி கூச்சலிட்ட சப்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் பைக்குகளில் சென்று மர்மநபரை ேதடினர். ஆனால் எந்த விபரமும் கிடைக்கவில்லை.சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கோயிலில்  பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில், கொள்ளையன் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவி உள்பட 3 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதி

மேலும் பலர் காய்ச்சலால் பாதிப்புநாகர்கோவில், அக்.18 :  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  நாகர்கோவில் வடக்கு சற்குண வீதி நர்ஸ் லேன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் கோட்டார் வட்டவிளையை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரும், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தற்போது நாகர்கோலிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் குடும்பத்தாருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை மருத்துவ பணியாளர்கள் கண்காணித்தனர். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணின் குழந்தையான 5ம் வகுப்பு மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதே போல் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் தொடர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.  இவர்கள் 3 பேரும் தற்போது பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தற்போது சாதாரண வார்டில் உள்ளனர். பரிசோதனை முடிவு வந்த பின்னர் நோய் தாக்கி இருப்பின் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே காய்ச்சல் பாதித்து வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெண்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்து உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாகர்கோவில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில், தொற்று நோய் பரவுவதை தடுக்க மாணவ, மாணவிகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் கைகளை கழுவுவதன் அவசியம் குறித்து டாக்டர் கிங்சால் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாளை நவராத்திரி பரிவேட்டை

கன்னியாகுமரி, அக். 18: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவினை  முன்னிட்டு நாளை (19ம் தேதி) அம்பாள் பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நடக்கிறது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா கடந்த 10ம் தேதி அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.விழா நாட்களில், தினமும் காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அம்மன் வாகனத்தில் பவனி வருதல்,  சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பரிவேட்டை: நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.நிகழ்ச்சியில், அம்மனுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிப்பார்கள். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்கும். ஊர்வலத்தில் பஜனை, யானைகள், குதிரைகள் ஊர்வலம், பெண்களின் முத்துக்குடை அணிவகுப்பு, கரகாட்டம், தையம் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் மேள தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் அம்மன் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம் வழியாக மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு பாணாசூரனை அம்மன் அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நடக்கிறது. தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோயிலை சென்றடைந்து, பின்னர் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடக்கிறது. இதன் பின்னர் அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிக்கிறார்.விழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோயில் மேலாளர் சிவராமசந்திரன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ87ஐ கடந்தது

நாகர்கோவில், அக்.17:  எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை தினசரி உயர்த்தி வருகின்றன. நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ86.95 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ87.07க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் நாகர்கோவிலில் ரூ87 என்ற உச்சபட்ச விலையை பெட்ரோல் மீண்டும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். நாகர்கோவிலில் ஒரு லிட்டர் டீசல் ரூ80.74 ஆக நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ80.99 ஆக விற்பனை செய்யப்பட்டது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வு பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

நாகர்கோவில், அக்.17 : பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டு உள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். பன்றி காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் உள்ளதா? என்பதை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பன்றி காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் விளக்கினர். பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது : குமரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ேவகமாக பரவி வருகிறது. குறிப்பாக நாகர்கோவிலில் 2 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். போதிய மருந்துகள்  உள்ளதாக டாக்டர்கள் கூறினர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் ெகாசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் முறையாக சுத்தம் செய்வதில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். கொசுக்களை ஒழிக்க முறையாக புகை மருந்து அடிக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திமுக நகர செயலாளர் வக்கீல் மகேஷ், நிர்வாகிகள் சவுந்தர், மணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

‘பிஎச்எச்’ ரேஷன்கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவர் பெயர், புகைப்படம் திருத்த பணிகள் தொடக்கம்

நாகர்கோவில், அக்.17: பிஎச்எச் ரேஷன் கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவர் என்பதால் அவ்வாறு இடம்பெறாத ரேஷன்கார்டுகளில் பெண்களின் புகைப்படம் சேகரித்து திருத்தம் செய்யும் பணிகளில் வழங்கல் துறை ஈடுபட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் 1.11.2016 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 4 நபர்கள் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்குதலில் எவ்வித மாற்றமும் இல்லை. இவை என்பிஎச்எச் கார்டுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 4 நபர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி  கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட ரேஷன்கார்டு பிஎச்எச் (பிரியாரிட்டி ஹவுஸ் ஹோல்டு) எனப்படும் முன்னுரிமை பெற்றவர் ரேஷன்கார்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்ணே இனி குடும்ப தலைவர் ஆவார். இதில் ஆண்கள் மட்டுமே அல்லது 18 வயது நிரம்பாத பெண் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டுக்கு வயதில் மூத்த ஆண் உறுப்பினர் குடும்ப தலைவர் ஆவார். இதனால் பிஎச்எச் ரேஷன்கார்டுகளில் குடும்ப தலைவராக வயதில் மூத்த ஆண்கள் படம், பெயர் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பான விபரங்களை திருத்தம் செய்யவும், அக்குடும்பத்தில் வயதில் மூத்த பெண்ணை குடும்ப தலைவராக தெரிவித்து அவரது புகைப்படத்தையும் ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று வழங்கல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பிஎச்எச் ரேஷன் கார்டுகளில் ஆண்கள் படம் இடம்பெற்றிருந்தால் அந்த கார்டு வைத்திருப்போரிடம் இருந்து ரேஷன்கார்டில் இடம்பெற்றுள்ள வயதில் மூத்த பெண்ணின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு நகல், அவரது புகைப்படம் ஆகியவற்றை ரேஷன்கடை விற்பனையாளர்களே பெற்று வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் குறைந்தபட்சம் 20 முதல் 30 பேரின் ரேஷன்கார்டுகளில் இந்த திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 164 ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்றும், இவற்றில் மொத்தம் 18 லட்சத்து 70 ஆயிரத்து 854 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

18, 19 வயது நிரம்பியவர்கள் குமரியில் 16,877 இளம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம்

நாகர்கோவில், அக்.17: குமரி மாவட்டத்தில் 18, 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 877 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்ப இருப்பவர்களும் பட்டியலில் சேர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றபோதிலும் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 615 வாக்குப்பதிவு மையங்களில் 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து 31ம் தேதி வரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளம் வாக்காளர்கள் பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். சிறப்பு முகாம்கள் வாயிலாக 16 ஆயிரத்து 877 பேர் இளம் வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18, 19 வயது நிரம்பியவர்கள் ஆவர். இவர்கள் உட்பட மொத்தம் 28 ஆயிரத்து 188 பேரிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 வது முறையாக போட்டியின்றி தேர்வு குமரி மாவட்ட பால் வள தலைவராக அசோகன் மீண்டும் பொறுப்பேற்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - தளவாய்சுந்தரம் பங்கேற்பு

நாகர்கோவில், அக்.17 : குமரி மாவட்ட பால்வள தலைவராக 2 வது முறையாக எஸ்.ஏ. அசோகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் ராேஜந்திரபாலாஜி, தளவாய்சுந்தரம்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். குமரி மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பால் வள தலைவருமான எஸ்.ஏ. அசோகன் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியினர் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் எஸ்.ஏ. அசோகன் 2வது முறையாக பால் வள தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆவின் அலுவலகத்தில நடந்த பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை எஸ்.ஏ.அசோகனிடம் வழங்கினர். இதில் எஸ்.பி. நாத், ஆவின் பொதுமேலாளர் தியானேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் ஆவின் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு வரவேற்றார். பால்வள தலைவர் எஸ்.ஏ. அசோகன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசுகையில், மாவட்ட பால்வள தலைவராக 2 வது முறையாக எஸ்.ஏ. அசோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு மாநில பால் வள தலைவராக பொறுப்பு வழங்க வேண்டும் என தளவாய் சுந்தரம் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் அந்த பொறுப்புக்கு வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். ஆனால் இதை நான் மட்டும் செய்ய முடியாது. தளவாய் சுந்தரமும் அதற்கான முயற்சி எடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் சி.என். ராஜதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், பாசறை செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் வக்கீல் சுந்தரம், பொன். சுந்தரநாத், சுகுமாறன், சந்துரு, விக்ரமன், ரயிலடி மாதவன், கோபாலகிருஷ்ணன், கார்மல் நகர் தனிஸ், இ.என்.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.