Karur - Dinakaran

கரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

கரூர், பிப். 15: திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நேற்று கரூர் ஒன்றியத்தில் புஞ்சைகடம்பங்குறிச்சி, ஆத்தூர், காதப்பாறை. மின்னாம்பள்ளி ஊராட்சிகளில் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி, ரமேஷ்பாபு, மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

கரூர், பிப். 15: கரூர் ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு நேற்று மதியம் ரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வழக்குகளின் விவரம், தேங்கியுள்ள வழக்குகள், பயணிகள் பாதுகாப்பு குறித்தான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே போலீசாரை சந்தித்து குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, டிஎஸ்பி சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

எழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு

குளித்தலை, பிப். 15: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ ராமர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், பொதுக்குழு சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ரகுபதி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலம் கிராமம் வழியாக தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகள் மட்டும் பேருந்து வசதி உள்ளது. இதனால் மற்ற நேரங்களில் 2 கிமீ தூரம் நடந்து சென்று தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் தற்போது உதவித்தொகை கிடைக்காததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உதவித்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எழுநூற்று மங்கலம் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு உரிய மயானப்பாதை வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு இடையே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் இறந்தவர்கள் உடலை எடுத்துச்செல்வதற்கு மயானப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இப்பகுதியில் அதிக மக்கள் தொகை இருப்பதால் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், சமுதாயக்கூடமும் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதில் அளித்த எம்எல்ஏ ராமர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் பேரூர் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர் சந்திரமோகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் தாந்தோணிமலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதி

கரூர், பிப். 15: கரூர் தாந்தோணிமலை பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கரூர்  நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாய்களின்  தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரு  நாய்களை பிடித்து குக செய்து திரும்ப அனுப்பி வைக்கும் முயற்சியை நகராட்சி  மேற்கொண்டது. தற்போது அந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளதால்  நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி,  இனாம்கரூர், வெங்ககல்பட்டி, வேலுசாமிபுரம் போன்ற பகுதிகளில் தெரு நாய்களின்  வளர்ச்சி அதிகளவு உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வேலை  முடித்து எளிதாக செல்ல முடியாத நிலையே நிலவி வருகிறது. மேலும், சிறுவர்,  சிறுமிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கரூர்  நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சிவசக்தி நகரில்   அதிகளவு தெரு நாய்களின்  நடமாட்டம் காரணமாக, இந்த பகுதியினர் பீதியில் உள்ளனர். எனவே, தெரு  நாய்களை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்  என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், பிப். 15: தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் உள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட மில்கேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து குமரன் சாலை வரை சிறிய அளவிலான தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நர்சரி பள்ளி முதல் கடைகளுக்கு வந்து செல்லும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மட்டும் இடைவெளி ஏற்படுத்திட வேண்டும் அல்லது முற்றிலும் அதனை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்

கரூர், பிப். 15: கரூர் பாலம்மாள்புரம் அருகே மயில்களின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் நெல் விளைவித்து வரும் விவசாயிகள் வயல்களை சுற்றிலும் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.கரூர் பாலம்மாள்புரம் அரசு காலனி போன்ற பகுதிகளை சுற்றிலும் அமராவதி ஆற்றங்கரையோரம் நெல் முதல் பல்வேறு விவசாயப் பொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலம்மாள்புரம் அருகே ஏக்கர் கணக்கில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் அறுவடை பக்குவத்தில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் வயலில் இறங்கி, நெற்மணிகளை தின்று செல்வதால் பல முறை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.மேலும் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அறுவடை சமயத்தில் விவசாயிகள், சாகுபடி நிலங்களை சுற்றிலும் பந்தல் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். பந்தலை பார்த்து மயில்கள் வராமல் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்களில் துணிகளை வைத்து பந்தல் அமைக்கப்பட்டு பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயனூர் அருகே துணிகரம் மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

கரூர், பிப். 15: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்துள்ள நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நேற்றுமுன்தினம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனது தாயின் கழுத்தில் கிடந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை இரண்டு பேர் பைக்கில் வந்து பறித்துச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். போலீசார் மர்ம ஆசா மிகளை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு

கரூர், பிப். 15: நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் பணியாற்றவுள்ள மண்டல பொறுப்பாளர்களுக்கும், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்களுக்குமான பயிற்சி வகுப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியது:நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019ல் வாக்குச்சாவடி மையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மண்டல அலுவலர்களுக்கும், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்களுக்கும் பயிற்சி அளிக்க இக்கூட்டம் நடத்தப்படுகிறது. கருத்துக்களை கவனமாக கேட்டு அனைவரும் உங்கள் மண்டலத்திற்குட்பட்ட, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும். தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தேர்தல் நாளன்று செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மேலும் இந்த தேர்தலில் புதிதாக பயன்படுத்தப்பட உள்ள வாக்களித்தமைக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்தும் இந்தபயிற்சியில் விளக்கப்படுகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். குளித்தலை ஆர்டிஓ லியாகத் பயிற்சி அளித்தார். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 91 மண்டல அலுவலர்கள், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

வழித்தடம் இருந்தும் அலட்சிய போக்கு அரவக்குறிச்சி ஊருக்குள் வராமல் பைபாசில் செல்லும் பேருந்துகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, பிப். 15: வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் வழியாக சேலம், மதுரை சென்று விடும் பேருந்துகள் அரவக்குறிச்சி உள்ளே வந்த செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி நகரம் சேலம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் என்ற இடத்திலிருந்து 3 கிமீ உள்ளே அமைந்துள்ளது. இங்கிருந்து வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு அலுவல்கள் மற்றும் தொழில் தொடர்பாக சென்று வருகின்றனர். கரூர் திண்டுக்கல் மார்க்கத்தில் சென்று வரும் பேருந்துகள் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கிமீ அரவக்குறிச்சி நகருக்குள் வந்து பள்ளபட்டி மண்மாரி வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து செல்கின்றது. சேலம் மற்றும் மதுரை செல்லும் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்ல வழித்தடம் உள்ளது.ஆனால் இந்த பேருந்துகள் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. ஏற்கனவே பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பேருந்து வழித்தடங்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கின்றது. இதனால் பேருந்துகளில் கூட்டம் எப்போதும் பிதுங்கி  வழிந்து பணிகள் தொங்கிக் கொண்டு செல்லும் ஆபத்தான நிலை உள்ளது.இதேபோல் சேலம் மதுரை போன்ற நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் கரூர் மற்றும் திண்டுக்கல் சென்று அங்கிருந்து சேலம் மற்றும் மதுரை பஸ் மாற்றி செல்ல வேண்டும். இதனால் குடும்பத்துடன் குழந்தைகள், முதியவர்கள்  மற்றும் சுமைகளுடன் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் ஊர் திரும்பும் வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போதுமான பேருந்து இல்லாமல் அவதிப்படுகின்றனர்.வழித்தடம் உள்ள இந்த 20க்கும் மேற்பட்ட சேலம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் அரவக்குறிச்சி வழியாக உள்ளே வந்து சென்றால் அரவக்குறிச்சி மட்டுமல்லாமல் பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட  வெளியூரில் தொழில் செய்யும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வணிகர்களுக்கும் வசதியாக இருக்கும். ஆகையால் வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் மற்றும் மதுரை சென்று விடும் பேருந்துகள் அரவக்குறிச்சி உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி

கிலோ ரூ.8க்கு விற்பனைகரூர், பிப். 15: தக்காளி விலை வீழ்ச்சியடைந்து உழவர் சந்தைகளில் கிலோ ரூ.8க்கு விற்பனை செய்யப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் கிணற்றுப்பாசனத்தில் அறுவடை செய்யப்படும் தக்காளி பழங்கள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் தர்மபுரி அருகே உள்ள ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்தும் வரத்து அதிகமாக இருக்கிறது. கிலோ ரூ.30 முதல் ரூ.35வரை விற்பனையான தக்காளி கடந்த மாதம் கிலோ ரூ.20 ஆக இருந்தது.கடந்த சில தினங்களாக விலை வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தது. நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் கிலோ ரூ.8 ஆக விலை சரிந்தது. கடைகளில் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். தக்காளியை 2 நாளைக்கு மேல் வைத்திருந்து விற்க முடியாது என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. தக்காளியை சேமித்து வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் நகரில் சா க்கடை வடிகால் இல்லாத அவலம்

கரூர், பிப். 15: கரூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் நகர் பகுதி முழுவதும் சாக்கடை வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் இருந்து காந்திகிராமம் மற்றும் ஏமூர் செல்லும் சாலையின் மையப்பகுதியில் தெற்கு காந்தி கிராமம் வள்ளலார் நகர், கேகே நகர் போன்ற ஏராளமான நகர்ப்பகுதிகள் உள்ளன. நகராட்சியின் விரிவாக்கப்பகுதியில் ஒன்றாக தெற்கு காந்திகிராமம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஏமூர் செல்லும் சாலை வரை நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. ஆனால் இந்த பகுதியின் பெரும்பாலான தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் குடியிருப்போர் அனைவரும் தங்களின் வீடு முன்பே பள்ளம் தோண்டி கழிவுகளை தேக்கி வருவதால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும் சாக்கடை வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சாக்கடை வடிகால் வசதி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் அரசு காலனி செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் பீறிடும் அவலம்

கரூர், பிப். 15: கரூர் அரசு காலனி செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் அரசு காலனி வழியாக கரூர் பகுதிக்கு பிரதான குழாய்கள் மூலம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு காலனி அடுத்துள்ள சாலையோரம் செல்லும் குழாயில் கடந்த சில நாட்களாக லேசான உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியே செல்கிறது. சாலையோரம் அனைவரின் பார்வைபடும் வகையில் இந்த உடைப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பணியாளர்கள் மூலம் இதனை சரி செய்ய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குளித்தலை பகுதியில் நகர நில வரி திட்டம் இணையதளத்தில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ததில் குளறுபடி உதவித்தொகை கிடைக்குமா என விவசாயிகள் கவலை

குளித்தலை, பிப். 15: குளித்தலை பகுதியில் நகர நிலவரி திட்டத்தின்கீழ் அரசு இணையதளத்தில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளன. இதனால் பிரதமர் அறிவித்த ஊக்க உதவித்தொகை கிடைக்குமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மணத்தட்டை, கடம்பர்கோவில், வைகநல்லூர் வடக்கு கிராமத்தின் ஒரு பகுதி ஆகிய வருவாய் கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகர நிலவரி திட்டம் தொடங்கப்பட்டு சர்வேயர் மூலமாக விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் அனுபவத்தின் படியும், பத்திரத்தின் படியும் அளவீட்டு பணிகள் செய்யப்பட்டு வார்டு மற்றும் பிளாக்குகள் புதிய நகர புல எண்கள் உட்பிரிவுகள் செய்யப்பட்டது.அதன் பிறகு புகைப்படத்துடன் கூடிய பட்டாக்களை அமைச்சர்கள் அரசு விழாக்களில் விவசாயிகளுக்கு வழங்கினர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நகர நிலவரி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் அரசு இணைய தளத்தில் சரிவர பதிவேற்றம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள் பெயரிலும், நிலத்தை விற்றவர்கள் பெயரிலும் விவசாய நிலங்களும் வீட்டுமனைகளும் குளறுபடியாக செய்யப்பட்டுள்ளதால் சிறு குறு விவசாயிகள் பிரதமர் அறிவித்த உதவி தொகை கிடைக்குமா என்ற கவலையில் ஏக்கத்துடன் உள்ளனர். எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி அரசு இணைய தளத்தில் சரிவர பதிவேற்றம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் நகராட்சியையொட்டிய காதப்பாறை ஊராட்சி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், பிப். 15 காதப்பாறை ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர். நகரையொட்டிய பகுதியில் குடிநீருக்காக பரிதவிக்கின்றனர்.கரூர் நகராட்சியை அடுத்துள்ள ஊராட்சி பகுதி காதப்பாறை. இங்கு வெண்ணெய்மலை, காதப்பாறை பகுதி உள்ளிட்ட 9 சிற்றூராட்சி வார்டுகள் உள்ளன. இதன் அருகே உள்ள இனாம் கரூர் நகராட்சி தற்போது கரூர் நகராட்சி நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டு பெருநகராட்சியாக இருக்கிறது. காதப்பாறை ஊராட்சியாக இருந்தாலும் நகரை ஒட்டியிருக்கிறது. நகர பகுதியில் இருப்பது போன்ற குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருகி தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகையில் ஒரு சிறிய நகரத்தை போல இருக்கிறது. ஊராட்சிக்கு இதுவரை ஆண் தலைவர்கள் இருந்த நிலையில் இம்முறை தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் தொகை. ஆண்கள் 3816. பெண்கள் 4124. மொத்தம் 7940. வருங்காலத்தில் கரூர் மாநகராட்சியாகும்போது காதப்பாறை ஊராட்சி கரூருடன் இணைக்கப்படும் நிலை உள்ளது. தற்போது நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தல் தான் கடைசி தேர்தலாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்பட்வில்லை. மாநில அரசின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகள் அதில் இரண்டு ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் தனி அதிகாரிகளின் பதவி தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் பூதாகரமாகி கொண்டிருக்கிறது.இது குறித்து பொதுமக்கள் கூறியது:சுசீலா: தங்கநகர் பகுதியில் கடந்த 3 மாதமாக ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புதான் வருகிறதே தவிர நடைமுறையில் எதுவும் செய்வதில்லை. இதற்காக தனி போன் நம்பர் எல்லாம் கொடுக்கின்றனர். ஆனாலும் தீர்வு கிடைப்பதில்லை. 3 மாதமாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். தண்ணீர் கிடைக்காமல் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது. ஆண்கள் வேலைக்குப் போனால் மாலை தான் வருகின்றனர். போர்வெல் தண்ணீர் கூட கிடைக்காமல் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். உடனடியாக போர்வெல்லை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும்.கிருஷ்ணவேணி: காதப்பாறை ஊராட்சி பகுதி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் என்பது 25 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. இப்படி வரும் நீரும் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. மேடான பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை எடுக்கின்றனர். அதற்கு அப்பால் உள்ள பகுதிக்கு எப்படி குடிநீர் கிடைக்கும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.நல்லம்மாள்: காதப்பாறை ஊராட்சியில் வீடுகள் கட்டிடங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இந்த ஏரியாவை அடுத்து இருக்கின்ற வெங்கமேடு பகுதி கரூர் நகராட்சி பகுதியில் இருக்கிறது. எங்கள் பகுதி பஞ்சாயத்து பகுதியில் இருக்கிறது.பெருகி வரும் வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்றி தவித்து கொண்டிருக்கிறோம். ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் வீடுகளை கட்டிக்கொண்டு சிரமப்படுகிறோம்.செல்வி: குடிநீர் இணைப்புக்காக பொருத்தப்பட்ட குழாய்கள் அனைத்தும் மிகவும் சன்னமாக இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு குழாய்களை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் அனைத்து பகுதிக்கும் குடிநீர் விநியோகிக்கும் சமயத்தில் முறையாக கிடைப்பதில்லை. 25 நாட்களுக்கு ஒருமுறை வரும் நீரை எத்தனை நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியும். குடிநீரை சேமித்து வைத்து ஓரவுக்குத்தான் பயன்படுத்த முடியும். காந்திநகர், தில்லைநகர், நேதாஜி நகர் என அனைத்து பகுதியிலும் இதே பிரச்னை தான் இருக்கிறது. கோடை காலம் வருவதற்கு முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.சாந்தி: வடிகால் வசதி செய்யப்படவில்லை. பஞ்சாயத்தில் இருந்து வரிவசூல் செய்ய மட்டுமே வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். வடிகால் வசதியில்லாததால் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து சுகாதாரகேடு ஏற்படுகிறது. டெங்கு போன்ற கிருமிகள் பரவி கொண்டிருக்கிறது. டெங்கு சமயத்தில் மட்டும் பஞ்சாயத்தில் இருந்து வந்து அறிவுரைகளை சொல்லி விட்டு போகின்றனர். அருகில் நகராட்சி குப்பைகளை எரிப்பதால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாந்தோணிமலை அங்கன்வாடி எதிரே பழுதடைந்த மினி டேங்க் சீரமைத்து பயன்பாட்டிற்கு விட கோரிக்கை

கரூர், பிப்.14: கரூர் தாந்தோ ணிமலை அங்கன்வாடி எதிரே பழுதடைந்த நிலையில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியினை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர்  நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே  அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட  குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடி மற்றும் அருகில் உள்ள  துவக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால்,  மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த குடிநீர் தொட்டி தற்போது  பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரும்  பட்சத்தில், அங்கன்வாடி குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினர்களும்  பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. எனவே, இதனை பார்வையிட்டு சிறுமின்விசை குடிநீர் தொட்டி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள  வேண்டும் என பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க ஆயத்த பணிகள் மும்முரம்...

கரூர், பிப்.14: குப்பையில் இருந்து மண் புழு உரம் தயாரிக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.    மண்புழு உரம் ரசாயன உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. வீடு மற்றும்  கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம்  தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர்  ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது கள்ளப்பள்ளி  முதல்நிலை ஊராட்சியில் மண்புழு உரம் மக்கும் குப்பையில் இருந்து  தயாரிக்கப்பட உள்ளது. லாலாப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி அருகே இயற்கை சூழலோடு  கீற்றில் குடில் அமைக்கப்பட்டுள்ளது. குப்பைகளில் மண்புழுவை விட்டு உரம்  தயாரிப்பதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கள்ளப்பள்ளி ஊராட்சியில்  ஏற்கனவே பணியில் உள்ள 20 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1750 வீடுகள்,  200 கடைகளில் இருந்து 750 கிலோ குப்பைகள் சேகரமாகும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து மாதந்தோறும் 400 முதல் 500 கிலோ வரை  மண்புழு உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாழை,  வெற்றிலை சாகுபடி அதிகம் உள்ள பகுதியில ரசாயன உரத்திற்கு மாற்றாக  விவசாயிகள் மண்புழு உரத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கினால் அதற்கேற்ப  இன்னும் கூடுதலாக உரம் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு  தயாரிக்கப்படும் உரம் கிலோ ரூ.10க்கு ஊராட்சி அலுவலக்தில் விற்பனை  செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ரூ.2000 சிறப்பு நிதி கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் தீவிரம்

கரூர், பிப்.14: கரூர் நகராட்சி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற  அறிவிப்பின்படி கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சட்டமன்ற  தொடரின்போது, ஏழை எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும்  என 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாத இறுதிக்குள்ளேயே  வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதற்கான பயனாளிகளை தேர்வு  செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தூய்மை இந்தியா  திட்ட பணியாளர்கள் சிலர் இதற்கென தேர்வு செய்யப்பட்டு ஒரு நபருக்கு 4  வார்டுகள் ஒதுக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வறுமைக்  கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என நகராட்சியின் மூலம் அடையாளம்  காணப்பட்டுள்ளவர்கள் மட்டுமே இந்த பணியாளர்கள் தற்போது தேர்வு செய்து  வருகின்றனர். தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு ரேஷன்  கார்டில் உள்ள ஒருசில குறியீடுகள் மூலம் இதற்கான பயனாளிகள் தேர்வு  செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளதால் பொதுமக்களும், ஆர்வத்துடன் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை,  வங்கி கணக்கு விபரம் போன்றவற்றை அளித்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சின்னதாரபுரம் கடைவீதி போலீசார் சரி செய்ய வலியுறுத்தல்

க.பரமத்தி, பிப்.14: சின்னதாராபுரம் கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து  போலீசார் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.க.பரமத்தி  ஒன்றியம் சின்னதாராபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் கரூர்,  தாராபுரம் சாலையில்   வங்கி, காவல் நிலையம் பல்வேறு வர்த்தக  நிறுவன கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ஏராளமான  வாடிக்கையாளர்கள் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.  அவ்வாறு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங்  வசதி இல்லாததால் சாலையின் நடுவே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியால்  ஊர்ந்து செல்லவேண்டி உள்ளது. முக்கிய விரத நாட்களில் பழனி முருகன் கோயிலுக்கு வாகனங்கள் மூலமாகவும், பாதசாரிகளாகவும் செல்லும் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்குக்கு இடையூறு இல்லாத  வகையில் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை அமர்த்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு

கரூர், பிப்.12: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக, கிரிக்கெட், சதுரங்கம், மாரத்தான் மற்றும் கபடி போன்ற போட்டிகள் திருவள்ளுவர் மைதானம் உட்பட பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. இதில், 1,302 மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.45 லட்சம்  மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உட்பட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கரூர்-ஏமூர் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கற்கள் வாகனஓட்டிகள் கடும் அவதி

கரூர், பிப்.14: கரூர் ஏமூர்  செல்லும் சாலையின் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கற்களால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை அகற்ற  வேண்டும் என்பதே அனைத்து தரப்பினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கரூர்  நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் இருந்து ஏமூர் செல்லும் சாலையில்  முத்துலாடம்பட்டி அருகே சாலையின் குறுக்கே சாக்கடை வடிகால் செல்கிறது.  இந்நிலையில், சாலையின் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக  உடைப்பு ஏற்பட்ட பகுதியின் மையத்தில் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால்,  இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரூரில் இருந்து ஏமூர் பகுதிக்கு நான்கு  சக்கர வாகனங்களும், பேருந்துகளும் இந்த சாலையின் வழியாக செல்கிறது.  இந்நிலையில், கற்கள் உள்ளதால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு  வருகின்றனர். எனவே, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக கற்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.