Krishnagiri - Dinakaran

நிலுவை தொகையை வழங்கக்கோரி ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை

ஓசூர், பிப்.15: ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த 1994ம் ஆண்டில் கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக இழப்பீடு தொகையையும் வழங்கியது. பின்னர், பாக்கி தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை என்றும், இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தொகையை ஈடு செய்யும் வகையில், ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப், கம்ப்யூட்டர்கள், மேசை, நாற்காலி, பேன் உள்ளிட்ட ₹30 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நீதிமன்ற ஊழியர்கள் 3 பேர் அங்கு சென்றனர். அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாததால், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களில் சிலர், அலுவலகத்தில் இருந்த அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மீண்டும் ஓரிரு நாளில் உயர் அதிகாரியை சந்தித்து நிலுவைத்தொகையை கேட்டு முறையிடப்போவதாக தெரிவித்து, நில உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாமல்பள்ளம் அருகே பிரமாண்ட பெருமாள் சிலை 7வது நாளாக நிறுத்தம்

கிருஷ்ணகிரி, பிப்.15: சாமல்பள்ளம் அருகே, பிரமாண்ட பெருமாள் சிலை ஏற்றப்பட்ட லாரி 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கார்கோ லாரியில் புறப்பட்டது. கடந்த ஜனவரி 16ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றது. இந்நிலையில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்ற போது, லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்தது. பின்னர், சாலையில் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கிய பின், கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால், சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால், மீண்டும் லாரி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பின், கடந்த 8ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கார்கோ இன்ஜின்கள் மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள், சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. ஆனால், லாரி கடந்தால் பாலம் உடைந்துவிடும் என்பதால், அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, பாலத்தின் அருகே புதியதாக தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பணி நிறைவடைந்த உடன், அருகில் உள்ள மற்றொரு ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைத்து முடித்தனர். இந்நிலையில் நேற்று, சின்னார் என்ற இடத்தில், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணி நிறைவடைய மேலும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால், தொடர்ந்து 7 நாட்கள், சிலை ஏற்றப்பட்ட லாரி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களும் தினமும் அங்கு கூடி, சிலையை வணங்கி வருகின்றனர்.  

காதலர் தினத்தன்று கிருஷ்ணகிரி அணை பூங்கா வெறிச்சோடியது

கிருஷ்ணகிரி, பிப்.15: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வர். காதல் ஜோடியினர் சுற்றுலா தலங்களுக்கு சென்று நாள் முழுவதும் ஜாலியாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காதலர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவார்கள். அவ்வாறு வரும் காதலர்களில் சிலர் தனிமையில் ஒதுங்குவது வழக்கம். அதுபோல் தனிமையில் ஒதுங்கும் காதல் ஜோடிகளை உள்ளூரை சேர்ந்த சில ரவுடிகள் குடிபோதையில் போய் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு விரட்டுவது போன்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட கிருஷ்ணகிரி அணை பகுதியில் மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர் உத்தரவின்படி சாதாரண உடையில் ஆண், பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வழக்கம் போல் அதிக அளவில் காதல் ஜோடிகள் வரவில்லை. ஒரு சில காதல் ஜோடிகள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் பூங்காவில் உள்ள மரங்களின் அடியில் அமர்ந்திருந்தனர். சுற்றுலா பயணிகளோ, காதலர்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்ததால், அவர்களும் சிறிது நேரத்திலேயே இடத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

உலக புற்று நோய் வார விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரியில், உலக புற்று நோய் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. 5 ரோடு ரவுண்டானா அருகே தொடங்கிய இப் பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் ரோடு, காந்தி ரோடு வழியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது. இந்த பேரணியில், பத்மாவதி மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மணணவிகள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் புகையிலை தவிர்த்தல், மது உள்ளிட்ட போதை பொருட்களை தவிர்த்தல், புற்று நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து முழுவதும் குணமடைவது குறித்து வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறு சென்றனர். தொடர்ந்து, கலெக்டர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், வன்முறை தடுப்பு  சட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ் மற்றும் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

ஓசூர், பிப்.15: சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, பள்ளிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.சேலம் ஏ.என்.மங்களம் செயின்ட்மேரீஸ் பள்ளி மைதானத்தில், மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், ஓசூர், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்குட்பட்ட பிரிவிலான போட்டியில், ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதையொட்டி, நேற்று ஓசூர் பெண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் லதா, வாலிபால் பயிற்சியாளர் தாயுமானவன், உதவி பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை

கிருஷ்ணகிரி, பிப்.15: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19ம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ₹10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ₹13 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 1.7.2017 முதல் 30.6.2018 முடியவுள்ள காலக்கட்டத்தில், தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். குழுப் போட்டிகளாயின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஊக்க உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வருகிற மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடடு ஆணைய தலைமை அலுவலக தொலைபேசி எண். 044-28364322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ராஜ்ய புரஷ்கார் விருதுக்கு மாநில அளவில் பயிற்சி முகாம்

திருச்செங்கோடு, பிப்.15:  திருச்செங்கோட்டில் நடைபெற்ற ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான மாநில அளவிலான பயிற்சி மற்றும் தேர்வு முகாமில் 130 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திரிசாரணர், திரிசாரணியர்களுக்கான மாநில அளவிலான கவர்னர்(ராஜ்ய புரஷ்கார்) விருதுத் தேர்வு முகாம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற முகாமை கல்வி நிறுவன செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல்,  மேலாண் இயக்குனர்கள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் சாரண இயக்க வரலாறு, நிலப்படம், முதலுதவி, கயிற்றுக்கலை, பகுத்தறியும் திறன், உலகளாவிய சாரண இயக்க அமைப்பின் நோக்கங்கள், சமூக  மேம்பாட்டு திட்டங்களில் மாணவர்களது பங்கேற்பு உள்ளிட்டவை சோதித்தறியப்பட்டது. முகாமை சென்னை ஜெய்னுலாபுதின் தென்னக ரயில்வே சங்கீதா, கோவை சக்தி கைலாஷ்  ஆகியோர் அடங்கிய குழுவினர் நடத்தினர். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், மாவட்ட முதன்மை ஆணையருமான உஷா,  முதல்வர்  பூர்ணபிரியா, மாவட்ட தலைமையிட ஆணையர் குமார், பயிற்சி ஆணையர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல், கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த திரிசாரணர், திரிசாரணியர்கள் 130 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு கல்வி மாவட்ட செயலர் விஜய், ரகோத்தமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

சேலம், பிப்.15: கோடை விடுமுறையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியே நாகர்கோவில், எர்ணாகுளத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில்(06007) இடையே ஏப்ரல் 2,9,23 மற்றும் மே 7,14,21, 28ம் தேதிகளில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். இதேபோல், நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் (06008) இடையே ஏப்ரல் 3,10,17,24 மற்றும் மே 1,8,15,22,29ம் தேதிகளில் இயக்கப்படும், இந்த சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்கிறது. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம்

சேலம், பிப்.15:  தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 மண்டலங்களுக்கு உட்பட்ட  இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், இதுவரை  9.7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ₹3 லட்சத்து 79,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே,  கண்காணிப்பு குழுவினர்  அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பட்டை கோவில் அருகில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ₹30 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆட்டோவில் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இந்த ஆட்டோவுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோ டிரைவர் எந்த கடையில் இருந்து வாங்கி வந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கலைநிகழ்ச்சி மூலம் பெண் சிசு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ஓசூர், பிப்.15: பெண் சிசு, பெண் குழந்தை படிப்பு பாதுகாப்பு குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பெண்சிசு கொலைகளால், நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இசை மற்றும் நாடகப்பிரிவு சார்பில் நாடு முழுவதும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் கல்வி, இளம்வயது திருமணங்களை தடுத்தல், பெண்குழந்தைகளுக்கான உரிமைகள் போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தெருக்கூத்துகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓசூர் பழைய நகராட்சி எதிரில், தர்மபுரி சீனிவாச நாடக குழு ஆசிரியர் ராமகிருஷ்ணன்  தெருக்கூத்து கலைஞர்களின் பெண் கல்வி, பாதுகாப்பு, இளம்வயது திருமணங்கள் தடுத்தல் போன்றவை குறித்து நாடகங்கள் நடித்தும், தாளங்களை இசைத்து நடனங்கள் ஆடியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  ராஜா, ராணி, மந்திரி, கோமாளி ஆகிய வேடங்கள் போட்டு, அரசின் மூலம் மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வும், தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்து வருகிறது.

கங்கலேரி அரசு பள்ளியில் தேசிய நுகர்வோர் தினவிழா

கிருஷ்ணகிரி, பிப்.15:  கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்குமார் தலைமை வகித்தார். பெட்காட் பொதுச்செயலாளர் சக்தி மனோகரன், மாநில தலைவர் ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், கேசவன் உள்ளிட்டோர், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய நுகர்வோர் தினவிழா குறித்த வரலாற்று குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, பேசினர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் பங்கேற்று பேசினார். சுகையில், அரசாணையின் அடிப்படையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வையை பொதுமக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரதான பங்கு உண்டு. எனவே, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளிஇருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

ஊத்தங்கரையில் திமுக கிராம சபை கூட்டம்

ஊத்தங்கரை, பிப்.15:  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டையில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சேட்டு வரவேற்றார்.  இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி,  தொண்டரணி துணை அமைப்பாளர் முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பெருமாள், நகர இளைஞரணி வினோத்குமார், வேடி, ஜாவித், மகளிரணி கெளவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை தேவைகள் சரிவர செய்து தரப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ஊத்த ங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் பொது மக்கள் மனுஅளிக்கலாம் என திமுக நிர்வாகிகள் தெரிவி த்தனர்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஓசூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்

ஓசூர், பிப்.15: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ம் தேதி, வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஓசூர் வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, ஓசூரில் இன்று நகர திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நகர பொறுப்பாளர் சத்யா விடுத்துள்ள அறிக்கை: ஓசூர்-தளி சாலையில் அமைந்துள்ள சென்னீஸ் மஹாலில், ஓசூர் நகர திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று(15ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஓசூர் வார்டு செயலாளர்கள், மேலவைப் பிரதிநிதிகள், வாக்கு சாவடி முகவர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துண அமைப்பாளர்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குப்பை தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வெங்கடசமுத்திரத்தில் இருந்து மோளையானூர் செல்லும் சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சேகரமாகும் கட்டிட கழிவுகள் மற்றும் உணவு பொருட்கள், குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கவும், தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டத்தில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவியும், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், 460 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வீதம் 3.6 கிலோ கிராம் தங்கமும், ₹1.8 கோடி மதிப்பில் திருமண நிதி உதவியும், 220 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களையும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சப் கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் காளிதாசன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வி மாவட்ட அளவில் உலகத்திறனாய்வு தடகள போட்டி 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி கல்வி மாவட்ட அளவில் நடந்த உலகத்திறனாய்வு தடகள போட்டியில், ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலகத்திறனாய்வு தடகள போட்டி, நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில், 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் பங்கேற்றனர். கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மண்டல போட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மண்டல போட்டிகளில் 7 கல்வி மாவட்ட அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற்று, நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டினை பெற்றவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாநில அளவிலான ஸ்பிரின்ட்ஸ் அன்டு ஜம்ப்ஸ் அகாடமி, மிடில் டிஸ்டன்ஸ் அகாடமி, லாங் டிஸ்டன்ஸ் அகாடமி, த்ரோஸ் அகாடமி, புட்பால் அகாடமி, ஹாக்கி அகாடமி, டைவிங் அகாடமி ஆகிய சிறப்பு அகாடமிக்கு, 1 முதல் 10 இடங்களை பெற்ற வீரர்வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், பிக்கிலியில் நடந்தது. கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கிளை தலைவர் சின்னசாமி வரவேற்றார். கவுரவ தலைவர் அரங்கநாதன் சங்க கொடி ஏற்றினார். மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாநில துணை தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பிக்கிலி, பெரியூர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியுதவி ₹5லட்சம், விபத்து இழப்பீடு ₹10 லட்சம் வழங்க வேண்டும். கட்டட தொழிலாளி குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் அரசே வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் நலத்திட்ட உதவிகளை  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.

விவசாய தொழிலாளர்களுக்கு ₹25 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தர்மபுரி, பிப்.14: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ₹25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, தற்போது வரை பல்வேறு தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, வறட்சி நிவாரணமாக ₹25 ஆயிரத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் ₹7.71 லட்சம் காணிக்கை

தர்மபுரி, பிப்.14:  அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் உண்டியலில் ₹7.71 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது.தர்மபுரி அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்துகொள்வர். 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நித்யா, நகை மதிப்பீடு உதவி ஆணையர் குமரேசன், ஆய்வாளர் இந்திரா, செயல் அலுவலர் சித்ரா, அர்ச்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், மொத்தம் ₹7லட்சத்து 71,983, ஒன்றரை பவுன் தங்க காசு, 92 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மலையூர் அடிவாரம் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி அருகே கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை செல்லும் குண்டும், குழியுமான சாலை சீரமைக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அடுத்துள்ள கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை வள்ளூர், சொரக்காப்பட்டி, அம்பேத்கர் காலனி, சொரக்காப்பட்டி கொட்டாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மலையூர் மலை கிராமத்தில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் கோரிக்கையின் ேபரில், கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரையிலான தார்சாலை சீரமைப்பு பணிக்காக, பொக்லைன் மூலம் சுமார் 4கி.மீ தொலைவிற்கு தோண்டி ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளது. பின்னர், சீரமைப்பு பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பணியை விரைவில் முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.