Madurai - Dinakaran

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்திற்கு செப்.9ல் சிறப்பு முகாம் தொடக்கம்

மதுரை, ஆக. 20:  மதுரையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய செப்.9ல் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அக்.14ம் தேதி வரை 4 முறை முகாம் நடைபெற உள்ளது.    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்.1ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக செப்.9, செப்.23, அக்.7 மற்றும் அக்.14 ஆகிய தேதிகளில், அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அன்றைய தினம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.இதில் 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2000 டிச.31 மற்றும் அதற்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். இந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம் (6) ஐ பூர்த்தி செய்து தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம். மேலும் பெயர் நீக்கத்திற்கு படிவம்-7, வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம்-8, முகவரி மாற்றத்திற்கு படிவம்-8ஏ வழங்கலாம். இதுதவிர, ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்கள், தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ளலாம். இது குறித்து கலெக்டர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா

மதுரை ஆக 20: காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மதுரை மாவட்ட குழு சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ‘ஊரக வளர்ச்சித் துறையில் 7 ஆண்டு பணிபுரிந்த மேற்பார்வையாளர்களுக்கு இளநிலை பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் உலகநாதன், மாவட்ட செயலாளர் பாலாஜி அலுவலகர் சங்க மாநிலச் செயலாளர் முருகையன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா, பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும்  விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருமங்கலம், ஆக. 20: திருமங்கலத்தில், குமரன் கோயில் அருகே, கஞ்சா விற்பதாக  டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்ஐ இளங்கோ தலைமையில் அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருமங்கலம் ஊத்துமேட்டைச் சேர்ந்த வெயிலா (36), சந்திரா (45) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டீக்கடைக்காரர் கொலையில் ஒருவர் சரண்

மதுரை, ஆக. 20: மதுரை கிருஷ்ணாபுரம் காலனி டீக்கடைக்காரர் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று சரணடைந்தார். மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, பாரதி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவர், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கடந்த 17ம் தேதி,  ஓசி டீ கேட்டு தகராறு செய்த 6 பேர் கொண்ட கும்பல், மாரிமுத்துவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த வீரகார்த்திக், விக்னேஷ்பாண்டி, அருண்குமார், காவிரி மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முட்டகண்ணு பிரசாத், மதுரை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சிதைந்த மண்டபங்களை சீரமைப்பது எப்போது?

மதுரை, ஆக. 20: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீயில் சிதைந்த மண்டபங்களை சீரமைக்கும் பணி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 6 மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என அமைச்சர்களின் அறிவிப்பு காற்றில் பறந்தது. இதனால், கோயிலைக் காண வரும் பக்தர்களும், ஆயிரம் கால்மண்டபத்தை காணவரும் சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018 பிப்.2 இரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதி கிழக்கு கோபுர வாயில் அருகே உள்ள வீரவசந்தராயர் மண்டபம் இடிந்தது. ஆயிரங்கால் மண்டபம் மற்றும் அதன் அருகே உள்ள கலைத்தூண்கள், மேற்கூரைகளில் சிதைவு ஏற்பட்டது. தீயில் சிதைந்த பகுதிகளை 6 மாதத்தில் சீரமைக்கப்படும் என அரசு சார்பில் அமைச்சர்கள் அறிவித்தனர். சிதைந்த மண்டபத்தில் தூண்கள் மற்றும் இடிபாடுகள் அகற்றப்பட்டன. ஆனால், சீரமைப்பு பணி இன்னும் தொடங்கப்படவில்லை. சீரமைப்பு பணிக்கு அரசு சார்பில்  நிதி ஒதுக்கப்படும் என முதலில் அமைச்சர்கள் தெரிவித்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் நிதி ஒதுக்கும் என கூறி கைவிரித்து விட்டனர்.  இந்நிலையில், ஓராண்டாக மூடி வைக்கப்பட்ட கிழக்கு கோபுர வாசல், 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டாலும், அந்த வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், அதன் பிரதான வாயில் வழியாக செல்ல முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.  தீ விபத்து ஏற்பட்டு ஒன்றரை ஆண்டைக் கடந்தும்,  சீரமைப்பு பணி தொடங்காமல், இடிபாடுகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. இதில், அரசும், கோயில் நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. சீரமைப்பு பணிக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள குவாரி கல் பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுனர் குழு 10 மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த கல் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை.  இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கல்லுக்காகதான் சீரமைப்பு பணி காத்திருக்கிறது. கல் வந்து சேர்ந்ததும் பணி தொடங்கும்’ என்றார். ஆனால், எப்போது பணி ஆரம்பமாகும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கின்றனர். கோயிலில் சிதைவுகள் சீரமைக்கப்படாததை கண்டு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும்  வேதனை அடைகின்றனர்.குடமுழுக்கு வரை இழுத்தடிப்பா?மீனாட்சி அம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறுவது உண்டு. இதன்படி வருகிற 2021ல் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதோடு சேர்த்து சிதைந்த பகுதிகளை சீரமைக்க திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகிறதா? என்ற கேள்வி பக்தர்களிடம் எழுந்துள்ளது.

பால் விலை உயர்வால்ஓட்டல்களில் காபி, டீ விலை கூடியது பொதுமக்கள் அதிருப்தி

மதுரை, ஆக. 20: பால் விலை உயர்வால் கடைகள் மற்றும் ஓட்டல்களில் டீ, காபி விலையை ரூ.2 முதல் 5 வரை  உயர்த்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை நேற்று முதல் அரசு உயர்த்தியுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் அச்சாகி இருந்த பழைய விலைக்கு பதில், புதிய விலையை அச்சடித்து விற்பனை செய்தனர். குழந்தைகள், முதியோர்களின் முக்கிய உணவுப் பொருளாக பால் உள்ளது. அத்தியாவசியப் பட்டியலில் முதலிடம் உள்ள பாலின் விலையை உயர்த்தியது, சாமானிய மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடைகள், ஓட்டல்களில் டீ, காபி விலை ரூ.2 முதல் ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நெய், வெண்ணெய், ஸ்வீட் உள்ளிட்ட பால் பொருட்களையும் கூடுதல் விலைக்கு கடைக்காரர்கள் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை நகருக்குள் மட்டுமே 3 ஆயிரத்திற்கும் அதிக டீ, காபி கடைகள் இருக்கும் நிலையில் நகர், புறநகரின் அனைத்து கடைகளிலுமே நேற்று அதிகாலை முதல் டீ, காபி விலையை உயர்த்திவிட்டனர். இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.   இது குறித்து ஓட்டல்கள் சங்க தலைவர் டெம்பிள்சிட்டி குமார் கூறுகையில், ‘பொதுவாக அனைத்து ஓட்டல்களிலும் ஆவின் பால்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த விலை உயர்வை சமாளிக்கும் வகையில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது’ என்றார்.

மேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும்

மேலூர், ஆக. 20: மேலூர் நீதிமன்றங்களில்  இடப்பற்றாக்குறையால் பொதுமக்கள், வக்கீல்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூரில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள், ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில், குற்றவியல் நீதிமன்றம் தனியாகவும், மற்ற இரண்டு நீதிமன்றங்கள் ஒரே கட்டிடத்திலும் செயல்பட்டு வருகின்றன. வழக்குகளின் பெருக்கம் காரணமாக, பொதுமக்களின் வருகையும் அதிகமாக உள்ளது. இதனால், நீதிமன்ற கட்டிடங்களில் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டாக, பகுதி நேர நீதிமன்றமாக செயல்பட்டு வந்த, மேலூர் சார்புநீதிமன்றம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு நிரந்தர சார்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டது. இதனால், இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இலலி. குற்றவியல் நீதிமன்றத்திலும் இதே நிலைதான் உள்ளது. 3 நீதிமன்றங்களையும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டினால் பொதுமக்கள், வக்கீல்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர். எனவே, மேலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலூர் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘இதுவரை பகுதி நேரமாக செயல்பட்ட சார்பு நீதிமன்றம் கடந்த ஏப்.27 முதல் நிரந்தர நீதிமன்றமாக மாறிவிட்டது. இதற்கென தனி இடம் இல்லாததால், பழைய நீதிமன்ற கட்டிடத்தின் ஓர் அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கூடுகின்றனர். இவர்களுக்கு உட்கார போதிய இடம் இல்லை. நீதிபதி அழைக்கும்போது உடனடியாக செல்ல முடியவில்லை. பெண்களுக்கு கழிப்பறை, ஓய்வறை இல்லை. எனவே, மேலூரில் 3 நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் மிகுந்த பயன் பெறுவர்’ என்றார்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

பேரையூர், ஆக. 20: பேரையூரில் டொம்பர் சமூகமக்கள், பேரூராட்சி குப்பை கொட்டும் இடத்தில், குடிசை அமைத்து வசித்து வந்தனர். இதனால், இவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போதைய பேரையூர் தாசில்தார் இளமுருகன், இந்த சமூக மக்களுக்கு, பேரூராட்சி பூங்கா பின்புறம் உள்ள மலையடிவாரத்தில், அரசு புறம்போக்கு இடத்தை ஒதுக்கி கொடுத்தார். அங்கு அவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி, தற்போதைய தாசில்தார் ஆனந்தியிடம் அச்சமூக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் நில அளவையர், இடத்தை அளவீடு செய்து, தெருக்களை அமைத்து திருநங்கை உட்பட 18 பேர்களுக்கு அளவுக்கல் ஊன்றப்பட்டது. ஆனால், பட்டா வழங்கப்படவில்லை.  இந்த நிலையில் பட்டா வழங்கக்கோரி, பேரையூரில் தாலுகா அலுவலகத்தை, டொம்பர் சமூக மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் ஆனந்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பட்டா வழங்க உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது வக்கீல்கள், பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, ஆக. 20: மதுரை சுந்தராஜபுரம் ஜே.ஜே.ரோடு, நகுல் காம்பவுண்டில் வசித்து வந்தவர்  தென்னரசு (38). கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ம் தேதி, தென்னரசு வீட்டில் மயங்கிவிழுந்ததாக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மருத்துவமனை வந்து விசாரணை நடத்தி, தற்செயல் மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தென்னரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  அவரது குடும்பத்தினர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் எஸ்.ஐ. வேம்புலு மற்றும் போலீசார் பல்வேறு ேகாணங்களில் நடத்திய விசாரணையில், தென்னரசுவை அவரது மனைவி விஜயலெட்சுமி,  கள்ளக்காதலன் சரவணக்குமார் (24) என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு  நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. போலீசார் கூறுகையில்,  `தென்னரசுவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த சரவணக்குமாருடன், விஜயலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தென்னரசு இதைக் கண்டித்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கணவரை தீர்த்துக்கட்ட, டிரைவர் சரவணக்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டார். இத்திட்டப்படி, கடந்த 15ம் தேதி இரவு, விஜயலெட்சுமியும்  சரவணக்குமாரும் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தென்னரசுவை, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்ததாக நாடகமாடினர். தற்போது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.

பெண்ணிடம் நகை வழிப்பறி சிசிடிவியில் பதிவான நபர்களுக்கு வலை

மதுரை, ஆக.20: மதுரையில் பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிய 2 பேரின், சிசிடிவு பதிவுகளை வெளியிட்டு, போலீசார் தேடி வருகின்றனர். மதுரை  சோச்சடை அசோக் நகரைச் சேர்ந்தவர் கலாவதி (44). இவர், அழகர்கோவில்  மெயின்ரோட்டில் புதூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது    டூவீலரில் பின் தொடர்ந்த இருவரில் ஒருவர், திடீரென கலாவதி  அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த்துக் கொண்டு தப்பினர். கூச்சலிட்டும் பயனில்லை. இது குறித்து கலாவதி அளித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய   வழிப்பறிக்கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி கண்காணிப்பு  கேமராவில் பதிவான வழிப்பறி செய்த இருவரின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் மின்விளக்குகள்

மேலூர், ஆக. 14: கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் தெருவிளக்குகளால், மின்சாரம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சியில் பல இடங்களில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன. நகரில் உள்ள பழைய காவல்நிலையம் முன்புள்ள தெருவிளக்கு பகலில் எரிகிறது. இதேபோல, ஊராட்சியில் சில இடங்களில் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிகின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது. பொதுமக்களிடம் மட்டும்தான் மின்வாரியம் மின்சிக்கனத்தை வலியுறுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கொட்டாம்பட்டியில் பகலில் எரியும் மின்விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திரதின அணி வகுப்பு ஒத்திகை வாலிபர் ஓட, ஓட வெட்டிக் கொலை

மதுரை, ஆக. 14: மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மணிகண்டன (30). இவர், நேற்று இரவு 12 மணியளவில் தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துரத்தி வந்த மர்மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினார். இதில், மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில், அவர் இறந்தார். இது குறித்து மதிச்சியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்துணவு மையங்களில் கீரை வளர்க்க திட்டம்

திருமங்கலம், ஆக. 14: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக காய்கறிகள், கீரைகள் வெளியே வாங்கப்படுகின்றன. இந்தநிலையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் ‘போஷன் அபியான் திட்டம் மூலம், அந்த மையங்களுக்கு தேவையான காய்கறி, கீரை வளர்க்க தமிழகம் முழுவதும் தண்ணீர் வசதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சிகளில் ஆணையாளர், ஒன்றியங்களில் பிடிஓக்கள், பேரூராட்சிகளில் செயல்அலுவலர்கள் தண்ணீர் வசதியுள்ளன் சத்துணவு, அங்கன்வாடி மையங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிவந்தவுடன் அந்தந்த மையங்களில் காய்கறிகள், கீரைகள் வளர்த்து அவை சத்துணவில் பயன்படுத்தப்படும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் அரசு விளையாட்டு விடுதி அணி வெற்றி

மதுரை, ஆக. 14: மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மதுரை அரசு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக் கிளை உள்ளது. இங்கு மதுரை அரசு விளையாட்டு விடுதி உள்ளது. இதில் கால்பந்து வீரர்கள் தங்கி ‘ஏசி’ பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்த கால்பந்து பயிற்சியாளர், வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் அலட்சியம் காட்டியதால், விளையாட்டு விடுதி கால்பந்து அணி, தோல்வி அடைந்து வந்தது. இது தொடர்பாக பயிற்சியாளர் மீது வீரர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அவர் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர் ராஜா நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, மாநில அளவிலான கோத்தே சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் சென்னையில் நடந்தது. இதில், அரசு விளையாட்டு விடுதி அணி, சென்னை வேலம்மாள் பள்ளி அணியுடன் மோதியது. இரு அணிகளும் கோல்கள் போடாததால், ‘டை பிரேக்கர்’ முறையில் மதுரை விளையாட்டு விடுதி அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதுபோல மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சியில் நடந்தது. இதில், விளையாட்டு விடுதி அணி கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பாராட்டு விழா, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ெலனின் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் முருகன் (ஹாக்கி), குமரேசன் (கைப்பந்து) மற்றும் ராஜா (கால்பந்து) உள்பட பலர் பங்கேற்றனர்.

தும்பைப்பட்டியில் ஆடித்தபசு விழா

மேலூர், ஆக. 14: மேலூர் அருகே, தும்பைப்பட்டியில் உள்ள சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோமதி அம்மன், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணர் சுவாமிகளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தி கலந்து கொண்டார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் செய்திருந்தனர்.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருமங்கலம், ஆக. 14: உசிலம்பட்டி அருகே, வி.பாறைப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (45), இவர் அருகிலுள்ள தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்றார். புல் கட்டை தூக்கிக் கொண்டு ராஜேந்திரன் என்பவரது தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் மகன் செல்லப்பாண்டி (24), தோட்டத்தில் படித்து கொண்டிருந்தார். அவரை பார்த்த பாண்டியம்மாள் ‘என்ன தம்பி போலீஸ் தேர்வுக்கு போகவில்லையா’ என கேட்டுள்ளார்.தேர்வை தள்ளிவைத்தாக கூறிய செல்லப்பாண்டி, திடீரென அவர் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். பாண்டியம்மாள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த செல்லப்பாண்டி தப்பியோடி விட்டார். இது குறித்து பாண்டியம்மாள் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

நான்குவழிச்சாலையில் குழாய் சீரமைப்பு பணி இழுத்தடிப்பு

திருப்பரங்குன்றம், ஆக. 14: மதுரை மேலக்கால் சந்திப்பு நான்குவழிச்சாலையில், குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மேலக்கால் சாலை சந்திப்பில் கன்னியாகுமரி-பெங்களுரூ நான்குவழிச்சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே, பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு, மேலக்கால் நீரேற்று நிலையத்தில் இருந்து மதுரை நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாநகராட்சி சார்பில், நான்குவழிச்சாலை நடுவே பள்ளம் தோண்டி, குழாய் சீரமைப்பு பணியை தொடங்கினர். ஆனால், வேலையை முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், நான்குவழிச்சாலையில் தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது. நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி போக்குவரத்து அருகிலுள்ள சர்வீஸ் ரோடு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மதுரை மேலக்கால் சாலை சந்திப்பு உள்ளதால், நான்குவழிச்சாலையில் திருமங்கலம் நோக்கி வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் வேகமாக வந்து திரும்பும்போது, நான்குவழிச்சாலையை கடக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையை கடக்க முயலும் டூவீலர்களில் செல்வோர் அதிக பாதிப்படைகின்றனர். எனவே, நான்குவழிச்சாலையில் குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலம் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

மேலூர், ஆக. 14:  மேலூர் நாகம்மாள் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் திருவாதவூர் ரோட்டில் நாகம்மாள் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா 15 நாட்களுக்கு முன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். திருவிழாவையொட்டி நேற்று காலை மண்கட்டி தெப்பக்குளம் முதல் நகைக்கடை தெரு வரை சாலையின் இருபுறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பால்க்குடம் எடுத்து பெரிய கடை வீதி, திருச்சி ரோடு, செக்கடி வழியாக கோயிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் 5 அடி முதல் 30 அடி நீளமுள்ள அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். ஒரே அலகை 2க்கும் மேற்பட்ட பக்தர்கள் குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். திருநங்கைகளும் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பல்லாயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிறைவாக இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

பாலப் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி மனு

மதுரை, ஆக. 14: உத்தபுரத்தில் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை மறித்து பாலம் கட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஒரு சமூகத்தினர் கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர். மதுரை மாவட்டம், உத்தப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது தலைமையில் ஒரு சமூகத்தினர் நேற்று கலெக்டர் ராஜசேகரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் சமூகத்திற்கும் பட்டியல் சமூகத்திற்கும் பிரச்னை உள்ளது. பட்டியல் இன மக்கள் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அச்சமூகத்தை சேர்ந்த ஒரு வீட்டிற்காக கண்மாய் கால்வாயை மறித்து குறுக்கே பாலம் கட்ட முயற்சிக்கின்றனர். பாலம் கட்டும் பகுதி எங்கள் சமூகத்தினர் பயன்படுத்தும் பொது இடம். இரண்டு சமூகத்தினரும் அமைதியாக வாழ கால்வாயை மறித்து பாலம் கட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உசிலம்பட்டி ஆர்டிஓ விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மண்ணால் அமைக்கும் சர்வீஸ் சாலைகள் சரியில்லை வாகன ஓட்டிகள் புகார்

திருமங்கலம், ஆக. 14: திருமங்கலத்திலிருந்து சேடபட்டி வரை 24 கி.மீ தூரத்திற்கு சாலை பராமரிப்பு பணி மூன்று மாதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சேடபட்டியிலிருந்து கிழவனேரி வரையிலும், இரண்டாம் கட்டமாக கிழவனேரியிலிருந்து திருமங்கலம் வரையிலும் பணிகள் நடக்கின்றன. இதில், திருமங்கலம் ஆலம்பட்டியிலிருந்து கிழவனேரி வரையிலான 7 கி.மீ தூரத்திற்கு 9 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிஆர்ஐடி திட்டத்தின் கீ்ழ் 130 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், நடுவக்கோட்டையிலிருந்து ஆலம்பட்டி வரையில் கட்டப்பட்டு வரும் சிறுபாலங்களுக்கான சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோடுகளை முறையாக அமைக்காமல் மண்ணால், அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து கிழவனேரி, சவுடார்பட்டி வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பாலப் பணிகளுக்காக நெடுஞ்சாலை மூடப்பட்டு, அதன் அருகே சர்வீஸ் ரோடு அமைத்துள்ளனர். இதில் ஜல்லிகற்கள் போடாமல் மண்ணை நிரப்பி ரோடு போட்டுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சர்வீஸ் சாலைகளை பயன்படுத்துகின்றனர். வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மழை காலங்களில் சர்வீஸ் சாலைகள் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, பாலம் கட்டும் பணி முடியும் வரை சர்வீஸ் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும்’ என்றனர்.