Nagapattinam - Dinakaran

கொள்ளிடம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் வடரெங்கம் ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்ட கோரிக்கை

கொள்ளிடம், டிச.16: கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் மேற்கூரையின் வழியே உள்பகுதியில் கசிந்து கட்டிடத்திற்குள் வருவதால் உள்ளே வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள் மற்றும் கணினி உள்ளிட்டவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது. ஊராட்சியை சேர்ந்த அனைவரும் வந்து செல்கின்ற முக்கிய கட்டிடமாகவும் இருந்து வரும் இந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் கொடுக்கவில்லை என்றால் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

கொள்ளிடம், டிச.16: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1500 கான்கிரிட் வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது. இதற்கு காரணம் போதிய மணல் கிடைக்காதது. சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் எளிதில் கிடைத்தாலும் மணல் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இதனால் வீடு கட்டும் பணி மேற்கொண்டு நடைபெறாமல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த அரசுக்கு சொந்தமான மணல் குவாரி நிறுத்தப்பட்டு ஓராண்டாகி ஆகிவிட்டது. இதனால் மணல் கிடைக்காமல் பயனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் சில இடங்களில் மணல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு  குறிப்பிட்ட சிலரால் வசதி படைத்தவர்ளுக்கு விற்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரசின் வீடுகள் கட்டப்படும் பயனாளிகளுக்கு மணல் கிடைக்க வழி செய்யப்படவில்லை. பயனாளிகளுக்கு சிமென்ட், கம்பி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசே வழங்குவது போல மிகவும் முக்கியமாகவும் ஆதாரமாகவும் உள்ள மணலை அரசே வழங்கினால்தான் வீடுகள் கட்டும் பணி தொய்வின்றி நடக்கும். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க சீர்காழி தாலுக்கா துணைச்செயலாளர் பாக்யராஜ் கூறுகையில், கொள்ளிடம் பகுதியில் அரசின் கான்கிரிட் வீடுகள் கட்டும் பணி மணல் தட்டுப்பாட்டால் தொடர்ந்து நடைபெறவில்லை. எனவே, அரசின் சார்பில் பயனாளிகளுக்கு மணல் வழங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாய சங்கம் ஆகியவை சார்பில் வீடு கட்டும் பயனாளிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

வெளிப்பாளையத்தில் சாக்கடை அடைப்பை சரியாக சீரமைக்காததால் மக்கள் அவதி

நாகை. டிச.16: வெளிப்பாளையத்தில் சாக்கடை அடைப்பை சரியாக சீரமைக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் இருந்து சாக்கடை நாகை அவுரித்திடல் - புதிய பேருந்து நிலையம் வழியாக செல்கிறது. இந்த சாக்கடை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் அடைப்பு ஏற்பட்டதாக சாலையை கடந்த நவம்பர் 30ம் தேதி உடைத்து சீரமைக்கப்பட்டது. தற்போது உடைக்கப்பட்ட பகுதி சீரமைக்கப்படாததால் சாக்கடை திறந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது. மேலும் போக்குவரத்து பாதிப்புள்ளாகி வருகிறது. திருவாரூர், வேளாங்கண்ணி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் நாகை எல்.ஐ.சி. அருகேயே மாற்று வழியில் திருப்பி விடப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடன் நாகை நகராட்சி நிர்வாகம் சாக்கடையை சீரமைத்து துர்நாற்றம் வீசாமலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், சாக்கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி வர்த்தகர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

வேதாரண்யம், டிச.16: வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேத்தாகுடி தெற்கு குளுந்தாளம்மன் கோயில் சாலையில் வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுமானத்திற்கு பயன்படுத்த கூடிய கலவை மணல் அனுமதியின்றி ஏற்றி வந்திருப்பது தெரிய வந்தது. இதனை போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை ஓட்டி வந்த தென்னம்புலத்தை சேர்ந்த ரமேஷ் (38), உரிமையாளர் பாரதிதாசன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மதுபானம் பதுக்கி விற்றவர் கைது:  வேதாரண்யத்தில் மதுபானங்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேலு உட்பட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தேத்தாகுடி தெற்கு, குஞ்சான்காடு பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (42) என்பவர் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் சாராயம் விற்று கொண்டிருந்தார். அவர் பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி, சவுந்தரராஜனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேதாரண்யம் தாலுகாவில் மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலைகள் வழங்கல்

வேதாரண்யம், டிச.16:  மீன்வளத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மீனவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள வலைகள் வழங்கப்பட்டனவேதாரண்யம் தாலுகா பன்னாள் ஊராட்சி சக்கரன்பேட்டையில் சுமார் 125 மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கஜா புயலால் இந்த மீனவர் பகுதியில் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. கஜா புயலால் பாதித்த மீனவர் கிராமத்தில் உள்ள மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அலுவலகத்தின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலைகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் வேதாரண்யம் மீன்வளத்துறை ஆய்வாளருமான நடேசராஜா நிவாரணம் மற்றும் மீன்பிடி வலைகளை மீனவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மகாராஜன், மாநில பொருளாளர் நந்தகுமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், வட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம் கலெக்டர் தகவல்

நாகை, டிச.16: கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு லாட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.நாகை கலெக்டர் சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாகை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ம் தேதி அதிகாலை கஜா புயல் கரையை கடந்தது.  இதனால் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை  ஆகிய 4 வட்டங்கள் மிக மோசமாகவும், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்கள் குறைந்த சேதமடைந்தது. தமிழக அரசின் முதன்மை செயலாளர்கள் மற்றும் 5 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும், 5 சார் ஆட்சியர்கள், 12 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 5 துணை கலெக்டர்கள், 5 பயிற்சி துணை கலெக்டர்கள், 30 தாசில்தார்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு 5 குழுவை சேர்ந்த 125 நபர்கள், 15 மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 300 பேர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் இருந்து 125 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். கஜா புயலினால் 13 பேர் இறந்துள்ளனர்.  அறிவித்த நிவாரண தொகை 8 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 5  நபர்களுக்கு முதலமைச்சர்  பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  குடிசை வீடுகள் பகுதி சேதம் 30,878ம், முழு சேதம் 60,068ம், ஓட்டு வீடுகள் 30,053ம் என 165 கிராமத்தில்  1,20,999 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கீடு செய்யப் பட்டு ரூ.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாகை, தலைஞாயிறு, பெரியகுத்தகை ஆகிய இடங்களில்  10 நாட்களில் 29,142 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலினால் கால்நடை இறப்பு அதிகமாக ஏற்பட்டது. ஆடு 10,129ம், மாடு 804ம், கன்றுகள் 557ம், கோழி உள்ளிட்ட பறவைகள் 9508 என 21,002 கால்நடைகள் இறந்துள்ளது. இந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ.26,36,300 நிவாரண தொகை வழங்கப் பட்டுள்ளது.  இதில்  நாட்டு படகுகள் பகுதி சேதம் 1913, முழு சேதம் 857ம்,  இன்ஜின் பகுதி சேதம் 4611ம், இயந்திர படகு பகுதி சேதம் 906ம்,  இயந்திர படகுகள் முழு  9ம்  சேதம் அடைந்துள்ளது. இந்த படகுகளுக்கு ரூ.4.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.  துணை மின் நிலையங்கள் 30 சேதமடைந்து தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.  மேலும் 7,886 ஹெக்டேர்  பரப்பில்  நென்னை, மா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.  ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 27 நிவாரண பொருட்கள் கொண்ட பெட்டகம் 92,247 குடும்பங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.   இவ்வாறு நாகை கலெக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

வேதாரண்யத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு

வேதாரண்யம், டிச.16:  வேதாரண்யத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த தேவர் பேரவை மாவட்டத் தலைவர் நாகராஜ் தேவர் - கற்பகம் தம்பதி மகள் தேவசேனாவிற்கும், புஷ்கரணி ராவுத்தசாமி-பார்வதி தம்பதி மகன் பிரபாகரனுக்கும் கடந்த புதன்கிழமை (12ம் தேதி) தோப்புத்துறை அம்மன் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியன், ஒன்றிய செயலாளர் கிரிதரன், நகர செயலாளர் எழிலரசு, முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகராசு, முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கனகராஜ், கராத்தே மாஸ்டர் வாசுதேவன், முன்னாள் எம்எல்ஏக்கள் வேதரெத்தினம், காமராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் தென்னரசு, மாவட்ட தலைவர் குணசேகரன், தொழிலதிபர்கள் பிரபு, முகமதுஅலி, மாரியப்பன், கருணாநிதி, திமுக நகர செயலாளர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, நமச்சிவாயம் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை மணிகண்ட காவியன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

பெண் விஏஓவினருக்கு மாறுதல் வழங்ககோரி விஏஓவினர் தொடர் போராட்டம் நிவாரணம் வழங்குவதில் பாதிப்பு

நாகை. டிச.12:பெண் விஏஓவினருக்கு மாறுதல் வழங்க வலியுறுத்தி விஏஓவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவர்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாறுதல் வழங்க வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கம்ப்யூட்டர் இணைய தள வசதி செய்து தர வேண்டும். காலி பணியிடம் உள்ளதால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முந்தினம் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்த நாகை வட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திருமருகல் கடைத் தெருவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நேற்றுடன் இரண்டாவது நாளாக நீடிப்பதால் நாகை மாவட்டத்தில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். துண்டு பிரசுரம் வினியோகம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போராட்டத்தில் இறங்கினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பில் தலைவர் திருமலைசங்கு, செயலாளர் குமரவேல், பொருளாளர் குமரன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துண்டுபிர சுரங்களை வழங்கினர்.

பொதுமக்கள் வேதனை நாகை வேளாங்கண்ணி அருகே நிவாரண பொருள் வழங்காததால் 3 கிராம மக்கள் சாலை மறியல்

நாகை. டிச.12: நாகை வேளாங்கண்ணி அருகே நிவாரண பொருட்கள் வழங்காததால் 3 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த சின்னத்தும்பூர், கிராமத்துமேடு, ஆலமழை ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கஜா புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித் தொகை ரூ.18 ஆயிரமும், நிவாரணப் பொருட்கள் முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் வாங்கபபடாததை கண்டித்தும், அனைவருக்கும் உடன் வழங்க கோரியும், தி.மு.க. அ.தி.மு.க., சி.பி.எம்., அ.மு.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச்சியில் நாகை திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி சாலை மறியல் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை கிடைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு குண்டும் குழியுமாக மாறியுள்ள ஓதவந்தான்குடி சாலை சீரமைக்கப்படுமா?

கொள்ளிடம், டிச.12:   கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்திலிருந்து திருநீலகண்டம் செல்லும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக மாற்றப்பட்டது. பின்னர் இந்த சாலையை மேம்படுத்தாததால் முன்பு இருந்ததை போல மீண்டும் மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் திருநீலகண்டம் கிராமத்திலிருந்து ஓதவந்தான்குடி வழியாக கொள்ளிடம் மற்றும் சிதம்பரம் செல்வோர்கள் சிரமம் அடைகின்றனர். பள்ளி மாணவர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே, பாசனத்திற்கு செல்லும் சிமெண்ட் குழாய் உடைந்ததால் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் அடிக்கடி தடுமாறி விழுந்து அடிபடுகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓதவந்தான்குடியிலிருந்து திருநீலகண்டம் செல்லும் 2 கிலோ மிட்டர் தூர சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு மழை சேதத்திலிருந்து நெற்பயிரை காப்பாற்றுவது எப்படி?

நாகை,டிச.12: நாகை கலெக்டர் சுரேஷ்குமார்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த கனமழையினால் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிரில் பல்வேறு நிலைகளில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிப்பு காணப்படும் நெல் பயிரினை பாதுகாக்க தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம். வடிகால் வசதியுடைய இடங்களில் வயலில் தேங்கிய நீரினை உடனடியாக வடித்து பின்பு மேலுரமாக ஏக்கருக்கு அமோனியம் குளோரைடு 42 கிலோ அல்லது அமோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது யூரியா 22 கிலோவுடன் ஜிப்சம் 15 கிலோ மற்றும் வேப்பம்புண்ணாக்கு 4 கிலோவை முதல் நாள் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு பொட்டாஷ் 17 கிலோ கலந்து இடவேண்டும். இவ்வாறு செய்யும்போது ஊட்டச்சத்து விரையம் குறைந்து  வளர்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது. தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் பயிர் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் பயிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் துத்தநாகம் மற்றும் தழைச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், 1 கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான மூலம் தெளிக்க வேண்டும், மேலுரம் இடுவதை தவிர்க்க வேண்டும். பாக்டீரியா இலைக்கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டவுடன் தழைச்சத்து  உரமிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் 20 சதம் பசுஞ்சாணக் கரைசல் அதாவது 40  கிலோ புதிய சாணத்தை 100 லிட்டா; நீpல் கரைத்து 12 மணிநேரம் ஊறவைத்து  பின்பு தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டா; நீரைக் கலந்து 200  லிட்டராக்கி தெளிக்கவும். அல்லது ஏக்கருக்கு சூடோமோனாஸ் 1 கிலோ அல்லது  ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்டாசைக்ளின் கலந்த மருந்து கலவை 120  கிராமுடன் காப்பா; ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் அல்லது காப்பா; ஹைட்ராக்சைடு  500 கிராம் என்ற அளவில் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை  தெளிக்க வேண்டும்.இலை உறை கருகல் நோய்: நோயின் அறிகுறி  தென்பட்டவுடன் 1 ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது  புரோபிகோனாசோல் 200 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து  கைதெளிப்பான் மூலம் தெளிக்கவும். பயிர் பாதுகாப்பு மற்றும் உர மேலாண்மை  தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு நெற்பயிரை வெள்ளம் மற்றும் மழை  சேதத்திலிருந்து காப்பாற்றிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தத்துப்பூச்சி அழிக்கும் வழிமுறை ஒரு தூருக்கு ஒரு தத்துப்பூச்சி என்ற பொருளாதார சேதநிலையிலிருந்தால் ஏக்கருக்கு இமிடாகுளோப்ரிட் 60 மிலி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்கவும். மேலும், இத்தத்துப்பூச்சி துங்ரோ என்ற வைரஸ் நோயினை பரப்பக்கூடியது. கலெக்டர் விளக்கம் இலைசுருட்டு புழு, தண்டு துளைப்பான் பொருளாதார சேத நிலையான வளர்ச்சி பருவத்தில் 10 சதவீதம் பாதித்த இலைகளும் பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் பாதித்த இலைகளும் காணப்பட்டால் வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 60 மிலி 200 லி தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்கவும்.

வைத்தீஸ்வரன்கோவில் கோயிலார் வாய்க்காலை தூர்வார வேண்டும்

சீர்காழி,டிச.12: வைத்தீஸ்வரன்கோவில் கோயிலார் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் முடவன் வாய்க்காலில் இருந்து கோயிலார் வாய்க்கால் பிரிந்து கரைமேடு, எடக்குடிவடபாதி. சாந்தப்புத்தூர் வழியாக சென்று தென்னலக்குடி உப்பனாற்றில் கலக்கிறது.  இந்த ஆற்றில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இந்த கோயிலார் வாய்க்கால் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மண்டி காணப்பட்டதால், வாய்காலில் தண்ணீர் செல்வது தடைப்பட்டு இருந்து வந்தது.  இந்நிலையில் வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலார் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. ஆனால் முழுமையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால் முழுவதும் செடி, கொடி, கோரைகள் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீர் வடிவதிலும், வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வரும் 15ம் தேதி வீசும் பெத்தாய் புயலின் போது மழை பெய்ய வாய்புள்ளதால் இந்த வாய்க்காலில் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டு வைத்தீஸ்வரன்கோவில் நகருக்குள் புகுந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  உடனடியாக கோயிலார் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை புயலால் சேதமடைந்த வலைகளை புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

தரங்கம்பாடி,டிச.12: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த  வலைகளை சீரமைக்கும் பணியில் ஓய்வு நேரங்களில் மீனவர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். கடந்த மாதம் அடித்த கஜா புயலாலும் மழையாலும் மீனவர்களின்  வலைகள் பெரிதும் சேதமடைந்தன. அதனால் மீனவர்கள் மீன்பிடி தொழில் பெரிதும்  பாதித்தது. இந்நிலையில் சீர்செய்யும் அளவில் சேதமடைந்த வலைகளை சீரமைக்கும்  பணியில் தரங்கம்பாடி பகுதியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

காரைக்கால்,டிச.12: காரைக்கால் திருநள்ளாறு தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாற்றில் சனிபகவான் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில், சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கள்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடைபெற்று வந்தது. சோமவாரம் நிறைவையொட்டி அருள்மிகு தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜையுடன், 1008 சங்களுக்கும் சிறப்பு பூஜையாக கும்ப பூஜையும், மகா பூர்ணாஹுதி தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில், சதுர்வேத, ஆகம ஆசிர்வாதம், தேவாரம் பாடபட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர், சிவாச்சாரியார்கள் பிரதான சங்களை சுமந்து கோயிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீதெர்பாராண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். சிவப்பெருமானுக்கு 1008 சங்குகளில் அபிஷேகம் செய்வதை காண்பது பக்தர்களுக்கு சிறப்பை தரும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புயலினால் பாதிக்கப்பட்ட மா மரங்களுக்கு மீண்டும் புத்துயிர் அழிக்கும் வழிமுறைகள்

நாகை,டிச.12:புயலினால் பாதிக்கப்பட்ட மா மரங்களை மறு சீரமைப்பதற்கான வழிமுறைகளை நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் புயலின் காரணமாக நாகை, தஞ்சை, கருர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் மா மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மா மரங்களை மறு சீரமைப்பதன் மூலம் மீண்டும் புத்துயிர் கொடுக்க முடியும். 5 வயது வரை உள்ள மரங்கள் காற்றினால் வேர் பகுதி சேதமடையாமல், மரங்கள் சாய்ந்திருந்தால் நேராக நிமிர்த்தி மண் அணைக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, பின்பு வெட்டு பாகத்தில் காப்பர் ஆக்சி குளோரைடு பசையை 300 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து தடவ வேண்டும். ஒரு மரத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம் (10 கிலோ) வேப்பம் புண்ணாக்கு (1 கிலோ), மண்புழு உரம் (2 கிலோ) அல்லது அசோஸ்பைரில்லம் (100 கிராம்), பாஸ்போ பாக்டிரியா போன்ற உயிர் உரங்கள் (100 கிராம்) இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு பருவத்தில் உள்ள மரங்கள் வேர் பகுதி சேதமடையாமல் மரங்கள் சாய்ந்து இருந்தால் கயிறு கட்டி அல்லது இயந்திரத்தின் மூலம் மரத்தை நிமிர்த்தி மண் அணைக்க வேண்டும்.சாய்ந்த மரங்களில் 60 முதல் 80 விழுக்காடு கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டப்பட்ட இடத்தில் ஆக்சி குளோரைடு பசையை 300 கிராம் மருந்து ஒரு லிட்டர் நீரில் தடவ வேண்டும். மரத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம் (50 கிலோ) வேப்பம் புண்ணாக்கு (1 கிலோ) மண்புழு உரம் (2 கிலோ) அல்லது அசோஸ்பைரில்லம் (100 கிராம்), பாஸ்போ பாக்டிரியா போன்ற உயிர் உரங்கள் (100 கிராம்) இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். புதிய தளிர்கள் வெட்டிய கிளைகளில் துளிர்த்த பின்பு நன்கு விளைந்த 3 அல்லது 4 தளிர் குச்சிகளை கண்டறிந்து விரும்பும் இரகங்களை கொண்டு மேல் ஒட்டு செய்யலாம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். இப்பருவத்தில் தத்துப்பூச்சி தாக்குதலை தடுக்க அசிபேட் மருந்து ஒரு கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காரைக்காலில் குழந்தைகள் தின விழா

காரைக்கால்,டிச.12: காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட கல்வித்துறையில் இயங்கும் ஜவகர் பால் பவன் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, காரைக்கால் திருமலைராயன்பட்டினம் எம்எல்ஏ கீதா ஆனந்தன் தலைமை வகித்தார். கலெக்டர் கேசவன், குழந்தைகள் நல திட்ட அதிகாரி சத்யா, மாவட்ட கல்வித்துறை அதிகாரி அல்லி, மேல்நிலைப்பள்ளி துணை இயக்குனர் கேசவ், பள்ளிதுணை ஆய்வாளர் கார்த்தி மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மாறுவேடம், ஓவியம்,  நடிப்பு, வண்ணம் தீட்டுதல், வினாடிவினா, கைவினைப் பொருட்கள் செய்தல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 270 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடல் சேற்றில் சிக்கிய புஷ்பவனம் கிராமம்

வேதாரண்யம்,டிச.12: வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் வேளாண் பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் சார்பில் நடைபெற்று வரும், புயலின் போது ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் கரைக்கு தள்ளப்பட்டுள்ள சேற்றினை அப்புறப்படுத்தும் பணியினை பார்வையிட்டார். புயலின் தாக்கத்தால் கரைப்பகுதியில் வெகுதூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை தகுந்த இயந்திரங்கள் மூலம் உரிய இடத்திற்கு கொண்டு வரவும், பகுதியாக சேதமடைந்த படகுகளை விரைவில் சரிசெய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீன்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் புஷ்பவனம் மீனவ கிராமத்திலுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அங்குள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர்.

சீர்காழி தாலுகாவில் புயல் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சீர்காழி,டிச.12: மிழகத்தில் வங்க கடலில் கற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு வருகின்ற 15ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து நாகை கலெக்டர் சுரேஷ்குமார், தென்னாம்பட்டினம், கூழையார், தற்காஸ், தொடுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு செய்து புயலால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.  அப்போது மயிலாடுதுறை ஆர்டிஓ. தேன்மொழி, தாசில்தார் சங்கர், தனி தாசில்தார்கள் பிரேமச்சந்திரன், பாலமுருகன், மண்டல தனி தாசில்தார் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, தமிழ்க்கொடி, அன்பரசன், பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

1000 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்படுமா?

தரங்கம்பாடி,டிச.11: தில்லையாடியில் 1000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாதர் கோயில் சிதிலமடைந்து கோயில் என்ற உருவமே இல்லாமல் காடுமண்டி கிடக்கிறது. அந்த கோயிலை புதுப்பித்து புதிதாக கட்ட வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு தில்லையாடி, தேவாணூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகிய 5 ஊர்களிலும் ஒரே மாதியான விசாலாட்சி அம்மன் உடனாகிய காசிவிஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. பொறையார் மற்றும் தேவாணூரில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஒழுகைமங்கலம் மற்றும் கொட்டுபாளையத்தில் உள்ள கோயில்கள் சீர்கெட்டு இருந்தாலும் பக்தர்கள் சென்று வழிபடும் அளவிற்கு உள்ளது. ஆனால் தில்லையாடியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் முழுமையாக உருதெரியாமல் சிதிலமடைந்து கோயிலை சுற்றி காடு மண்டி கிடக்கிறது. அதனால் பக்தர்கள் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. இது குறித்து கோயிலுக்கு பூஜை நடத்தும் சிவாச்சாரியார் பாலமணி அய்யர் கூறியதாவது,  காசிக்கு சென்று வழிபாடு செய்யும் பலன் தில்லையாடி உள்ளிட்ட 5 ஊர்களில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் தில்லையாடியில் உள்ள கோயில் மட்டும் மிகவும் மோசமாக சீர்கெட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய  முடியாத நிலையில் உள்ளது. கோயில் முழுமையாக இடிந்து விழுந்து கற்பகிரகம் மட்டும் உள்ளது. அங்கு காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன், விநாயகர், முருகன், பைரவர், குருபகவான், உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு வருவதில்லை. இந்து சமய அறநிலையத்துறை இந்த கோயிலுக்கு 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டி பணத்தில் இருந்து ஒரு கால பூஜை செய்ய பல வருடங்களுக்க முன் அறிவித்தது. இப்போது மாதம் 232 ரூபாய் தான் ஒரு கால பூஜைக்கு கொடுக்கபடுகிறது. இந்த பணத்தில் எப்படி  தினமும் பூஜை நடத்த முடியும். என்னால் முடிந்த அளவு பூஜை நடத்தி வருகிறேன். அரசும், அறநிலையத்துறையும், ஊர் பொதுமக்களும் ஒன்றினைந்து  உடனடியாக காசி விஸ்வதாருக்கு புதிய ஆலயம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கஜா புயலால் சாய்ந்தகஜா புயலால் சாய்ந்த தேக்கு மரங்களை வெட்டி அகற்ற சான்றிதழ் பெற மக்கள் கடும் அவதி

நாகை. டிச.11: வங்க கடலில் ஏற்பட்ட புயல் புயலாக மாறி நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு நாகை & வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.  வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படும் தேக்கு மரத்திற்கு வனத்துறை சான்றிதழ் வேண்டும். கஜா புயலில் வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்பட்ட தேக்கு மரம் சாய்ந்துள்ளது. வீட்டு தோட்டங்களில் தேக்கு மரம் வளர்த்தால் வனத்துறைக்கு தெரிவித்து சான்றிதழ் பெற்றால் தான் மரத்தை வெட்டும்போது ஆலையில் மரத்தை அறுக்க முடியும். பொதுவாக வீட்டு தோட்டத்தில் இரண்டு மரம் 5 மரம் என்று வளர்க்கப்படுகிறது. இந்த மரத்தை வனத்துறையிடம் பதிவு செய்ய யாரும் முயற்சி எடுப்பதில்லை.இந்நிலையில் எதிர்பாராமல் வீட்டு தோட்டத்தில் கஜா புயலில் விழுந்த தேக்கு மரத்தை வனத்துறை சான்றிதழ் பெற முடியாமல் பொது மக்கள் உள்ளனர்.  மக்களுக்கு வனத்துறை அலுவலகம் எங்கு உள்ளது எப்படி அனுகுவது என்று தொரியாத நிலையில் வீட்டு தோட்டத்தில் சாய்ந்துள்ள தேக்கு மரத்தை வெட்டி அப்புரப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் தேக்குமரங்கள் சாய்ந்துள்ளதால் வனத்துறை அதிகாரிகள் கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து சாய்ந்துள்ள தேக்கு மரத்திற்கு சான்றிதழ் வழங்கிட ஏற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வகம் ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்று தேக்கு மரம் வைத்துள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கஜா புயல் தாக்கி 25 நாள் ஆன பின்னரும் புயலால் சாய்ந்த தேக்க மரத்தை வெட்டாமல் என்ன செய்வது என்று தெரியாத பொது மக்களுக்கு வனத்துறை உதவி செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.