Namakkal - Dinakaran

நாமக்கல்லில் கலாஞ்சலி விற்பனை கண்காட்சி

நாமக்கல், அக்.18: நாமக்கல்லில் நடைபெற்று வரும் கலாஞ்சலி விற்பனை கண்காட்சி நாளை 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.  நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில்,  உத்தரப்பிரதேச மாநில கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பில், கலாஞ்சலி விற்பனை  கண்காட்சி, கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் ராஜஸ்தான்,  குஜராத் மாநில ஆடை வகைகள், காஷ்மீர் சால்வை, ஜோத்பூர் கைவினைப் பொருட்கள்,  நவராத்திரி கொலு பொம்மைகள், பல்வேறு மாநில கைவினை கலைஞர்களால்  தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் 10 முதல் 20 சதவீதம்  தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை  கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி நாளையுடன் (19ம் தேதி) நிறைவு  பெறுகிறது  என கலாஞ்சலி  விற்பனை மேலாளர் துபேல் தெரிவித்துள்ளார்.

திருச்ெசங்கோடு கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருச்செங்கோடு, அக்.18:  திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்று விழா நேற்று நடைபெற்றது.திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு, திருச்செங்கோடு வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.  மல்லசமுத்திரம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் கிளைகளை  கொண்டு செயல்படும் இந்த கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் 60 ஆயிரம் பேர்  உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், தென்கிழக்கு ஆசியாவின் பெரிய  கூட்டுறவு சங்கமாக, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கம் விளங்குகிறது. இந்த சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர்  மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 9 பதவிகளுக்கான தேர்தல்  அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில் வெற்றிபெற்ற  புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். சங்கத்தின் தலைவராக  திருமூர்த்தி, துணைத்தலைவராக ராணி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக  சபரி தங்கவேல், சிவசாமி, எஸ்.சரவணன், ஆர்.சரவணன், தனசேகரன், மணி,  அன்னக்கிளி, இன்பதமிழரசி, வனிதா ஆகியோர் பொறுப்பேற்றனர். பதவியேற்பு   விழாவிற்கு மேலாண் இயக்குனர் ரவிக்குமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பொன்.சரஸ்வதி, சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் நகர பிரமுகர்களும்,  அதிமுகவினரும் திரளாக கலந்து கொண்டனர்.எர்த் மூவர்ஸ் சங்க ஆலோசனை கூட்டம்இடைப்பாடி, அக்.18: தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நலச்சங்கம் சார்பில், இடைப்பாடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சாமி செல்வமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கௌரவத்தலைவர் ராமசாமி, திருச்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார், சேலம் மாவட்ட தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் சூரியா, தர்மபுரி மாவட்ட தலைவர் சாமிநாதன், பார்த்திபன், வெங்கடேஷ், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவில் ஹைட்ராலிக் மற்றும் எர்த்மூவர்ஸ் ஜேசிபி போன்ற வாகனங்கள் வைத்து தொழில் செய்து வந்தோம். ஆனால், தற்போது எங்களை தொழில் செய்ய விடாமல் தொடர்ந்து திருப்பி அனுப்புகின்றனர். இவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்னை நீடிக்குமானால், தமிழக ஆபரேட்டர்கள் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

சேலத்தில் நர்சிங் மாணவி மர்மச்சாவு

சேலம், அக்.18: சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகர் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் விஷாலி (22). திருவாக்கவுண்டனூரில் நர்சிங் படித்து வந்தார். அப்போது அவருக்கும், டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்து நர்சிங் படிப்பை நிறுத்தி விட்டனர். சில வருடங்களுக்கு முன்பு மாடியில் இருந்து கீழே விழுந்ததில் விஷாலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தலைவலி வருமாம். தற்போது வசித்துவரும் வீட்டை காலி செய்து விட்டு, அதே பகுதியில் உள்ள ராஜநகரில் வேறு வீட்டை பார்த்தனர். இந்நிலையில் விஷாலியை கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர். கண்டுபிடிக்க முடியாததால், அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் விஷாலியின் பெற்றோர் வாடகைக்கு பார்த்த வீட்டின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு காணாமல்போன விசாலி சடலமாக மிதந்தார்.  இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அவர் டிரைவருடனான பழக்கத்தை கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் அந்த கிணற்றுக்கு எப்படி வந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துணவு அமைப்பாளர் பணி கிடைக்காததால் விரக்தி 46 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா?

சேலம், அக்.18: சத்துணவு அமைப்பாளர் பணி கிடைக்காததால், சேலம் 46வது வார்டு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். சேலம் வரும் முதல்வரிடம் கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. ஆனால் அதிமுகவினருக்கு மட்டுமே அந்த பணி வழங்கப்பட்டு வருவதாகவும், பெரும் தொகை லஞ்சமாக பெறப்படுவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் வழங்காததால், அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள தகவல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட பகுதியில் 7 சத்துணவு அமைப்பாளர் பணியிடமும், 14 உதவியாளர் பணியிடமும் காலியாக இருக்கிறது. இதில் 46வது டிவிஷனுக்குள் 2 சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதற்கு அதிமுக நிர்வாகி ஒருவர் மகளுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார். இதற்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளரும் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த இடத்தை வழங்குவதற்கு பேரவை செயலாளர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், கொண்டலாம்பட்டி பகுதிக்குள் தொடர்ந்து பேரவை செயலாளர் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி  அனைவரும் கூண்டோடு கட்சி பதவியை ராஜினாமா செய்து, வருகிற 20ம் தேதி சேலம் வரும் முதல்வரிடம் கடிதத்தை கொடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர்.இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லாத நிலை கொண்டலாம்பட்டி பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் எங்களது பதவிகளையெல்லாம் ராஜினாமா செய்ய இருக்கிறோம்’ என்றனர். இதுகுறித்து 46வது வார்டு செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், எனது வார்டு நிர்வாகிகள் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்றார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த வார்டன் எழுதிய கடிதம் குறித்து விசாரணை

சேலம், அக்.18: சேலம் மத்திய சிறை வார்டன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்த போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த கடிதத்தை மறைத்து விட்டார். அதில், தனது சாவுக்கு சிறை விஜிலென்ஸ்  ஏட்டுக்கள் 2 பேர் காரணம் என எழுதி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது சிறை வட்டாரத்தில் கசிந்துள்ளது.தற்கொலை செய்து கொண்ட வார்டன் எழுதி வைத்துள்ள 2 பேர் மீதும், தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. இதுகுறித்து அவர்கள் மீது சிறை அதிகாரிகள் சென்னை உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கடிதம் மறைத்து வைத்தது குறித்து, சேலம் மாநகர ேபாலீஸ் கமிஷனர் சங்கர் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட வார்டன் எழுதி வைத்துள்ள கடிதம் குறித்து விசாரணை நடத்தப்படும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சல் பாதித்த கிராமத்தில் மருத்துவ குழு முகாமிட்டு சிகிச்சை

ராசிபுரம், அக்.18: ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில், மருத்துவ குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில், தறித்தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, கெங்கவல்லி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டி, துண்டு உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் இரவு பகலின்றி தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் சிலர் ஒரு வித மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தொழில் செய்ய முடியாமல் முடங்கினர். கை, கால்களில் மூட்டு வலி மற்றும் நடப்பதில் சிரமம் என அவதிக்குள்ளாகினர். இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். கை, கால்களில் தான் அதிக வலி ஏற்படுகிறது. மூட்டு வலியால் நடக்க முடியவில்லை. தொடக்கத்திலேயே சிகிச்சை பெறலாம் எனில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2 ஆண்டாக செயல்படாமல் பூட்டிகிடக்கிறது. நாமக்கல்லுக்கு செல்ல வேண்டி உள்ளது. கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த ேவண்டும் என நோய் பாதித்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், பிள்ளாநல்லூர்  அரசு மருத்துவமனை டாக்டர். செல்வி தலைமையில் மருத்துவ  குழுவினரை நேற்று கூனவேலம்பட்டிக்கு அனுப்பிவைத்தனர். கிராமத்தில் முகாமிட்ட மருத்துவ குழுவினர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, சிகிச்சையளித்தனர். மேலும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு பொடி வழங்கி, அறிவுரைகளை வழங்கினர்.

பேரறிவாளனை விடுவிக்க கவர்னருக்கு கடிதம்

நாமக்கல், அக்.18 முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரை விடுதலை செய்யக்கோரி, நாமக்கல் மக்கள் பாதை இயக்கத்தினர், கவர்னருக்கு  கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும்  பொதுமக்களிடம் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை, அந்த  அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பெற்று வந்து,  நாமக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, தமிழக கவர்னருக்கு  அனுப்பியுள்ளனர். 

20 சதவீத போனஸ் கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர் பிரசாரம்

குமாரபாளையம், அக்.18: குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்த  ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள்  சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு 8.25 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடந்தது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை  நடக்கும் போதே, இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள், தங்களிடம் வேலை பார்க்கும்  தொழிலாளர்களுக்கு, விருப்பப்படி போனஸ் கொடுத்தனர். இந்த ஆண்டு  விசைத்தறி தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்கள் முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டுமென  வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் தொடர் பிரசார போராட்டத்தில்  இறங்கியுள்ளனர். இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர்  அசோகன் கூறுகையில், ‘குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளோம். ஆனால், இதுவரை தொழிற்சங்கத்தின்  கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையத்தில்  மட்டும் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல, இந்த  ஆண்டும் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, முன்கூட்டியே பேச்சுவார்த்தை  நடத்தி 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தெருமுனை பிரசாரத்தை அடுத்து 23ம்தேதி  தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்,’ என்றார்.

பரமத்திவேலூர் அருகே பரபரப்பு கிரானைட் குவாரிக்கு வந்த 9 லாரிகள் சிறைபிடிப்புபரமத்திவேலூர் அருகே பரபரப்பு கிரானைட் குவாரிக்கு வந்த 9 லாரிகள் சிறைபிடிப்பு

பரமத்திவேலூர், அக். 18: பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி கிராமத்தில், பிரச்னைக்குறிய கிரானைட் குவாரியில் கல் எடுக்க வந்த 9 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த சித்தம்பூண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் ேமலாக 5 கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் பாறைகளை உடைக்க அதிக சக்தி கொண்ட வெடிகளை பயன்படுத்துவதால், சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் பாறையை உடைக்க வைக்கும் வெடியால் குழந்தைகள், இருதய பாதிப்புள்ள முதியவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளனர். மேலும், குவாரியில் விதிமுறை மீறி 100 அடி ஆழம் வரை பாறைகளை வெட்டி எடுத்துள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, தண்ணீர் தாழ்ந்து போனது. இந்த குவாரிகளை முடக்கோரி, கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய ேபாதிலும், மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று, கிரானைட் குவாரிகளை மூடக்கோரி, கிராமத்தில் வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றியதுடன், கிராம சபை கூட்டத்தையும் மக்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து, கடந்த வாரம் திங்கட்கிழமை, நாமக்கல் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், கிரானைட் குவாரிகளை மூடக்கோரி, கலெக்டரிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரண்டு நாட்களில் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று கிரானைட் குவாரிகளில் உள்ள ராட்சத கற்களை எடுத்துச்செல்ல 9 லாரிகள் வந்தன. இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாரிக்கு சொந்தமான 2 லாரிகளை மட்டும் சிறை வைத்து, மற்ற 7 லாரிகளை திருப்பி அனுப்பினர். மேலும், கனமவளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நல்லூர் போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து மற்ற 2 லாரிகளையும் விடுவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அவர், ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சனிக்கிழமை வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை பதிவு தபால் மூலம் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

ஆயுத பூஜையையொட்டி தேங்காய், பழம் விற்பனை ஜோர்

நாமக்கல், அக்.18: நாமக்கல் உழவர்சந்தையில் தேங்காய், பழம் விற்பனை அதிகரித்தது. நகரில் பல இடங்களில் புதியதாக கடைகள் போடப்பட்டு, ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை நடைபெற்றது.ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விவசாயிகள் அதிகளவில் காய்கறி, பழம், தேங்காய் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 8 டன் வாழைப்பழம், 3.5 டன் தேங்காய் நேற்று உழவர் சந்தையில் விற்பனையானது. ஒரு கிலோ தேங்காய் ₹32க்கும், ஒரு கிலோ வாழைப்பழம் ₹40க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 27 டன் காய்கறி மற்றும் பழங்கள் நேற்று உழவர் சந்தையில் விற்பனையானது. காலை 5 மணி முதல் 9 மணிக்குள் உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தது. இதே போல, நகரின் பல இடங்களில் ஆயுதபூஜையையொட்டி பொரி, பூக்கள் விற்பனை கடைகள் அதிகமாக போடப்பட்டிருந்தது. இங்கு மக்கள் கூட்டம் அதிகமான காணப்பட்டது.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்ைட பேரூராட்சி பகுதிகளில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதை மீறி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.நேற்று நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், வாரசந்தை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஓட்டல்கள், மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட 60 கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மளிகை கடை, பேக்கரியில் இருந்து 12 கிலோ அளவில் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக்கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வில் செயல் அலுவலர் சதீஸ், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் பாலு உள்ளிட்டோர் ஈடுபட்டனர். பின்னர் செயல் அலுவலர் கூறுகையில், தொடர்ந்து இது போல் பிளாஸ்டிக் கவர் மற்றும் கேரி பேக்குகளை விற்பனை செய்தால், கடையின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்றார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.17: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்புக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு அதிகாரம் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பழனியப்பன், தம்பிராஜா, ஏஐடியூசி. பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்று விளக்கி பேசினர்.

ராசிபுரத்தில் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்

ராசிபுரம், அக்.17: ராசிபுரத்தில், கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், முதலாவது பொதுக்குழு கூட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் நடந்தது. நடேசன் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் சிதம்பரம் தலைமை வகித்தார். நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இயக்குனர் துரைசாமி பேசினார். வேளாண்மை துணை இயக்குநர் சிதம்பரம் பேசியதாவது: தமிழக அரசு விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டு பண்ணையம் உழவர் திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 20 பேர் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 10 உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த 1000 விவசாயிகளை கொண்டு, ராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கி உள்ளது என்றார். கூட்டத்தில, வேளாண்மை துணை இயக்குநர் அசோகன், ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால், வல்வில் சுதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் தியாகராஜன், நிறுவன இயக்குனர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

பள்ளிபாளையம், அக்.17: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதை கவர்னருக்கு அனுப்பியும் விடுதலை செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு வேட்டுவர் பேரவை, தமிழக தேசிய கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து  பள்ளிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் 1000 அஞ்சல் அட்டைகளை வாங்கி அதில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என எழுதி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழக தேசிய கட்சி நிர்வாகிகள் ஆதவன், அன்பரசு, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் தெற்கு ஆண்கள் பள்ளியில் மன அழுத்தத்தை போக்க சிரித்து மகிழ்ந்த ஆசிரியர்கள்

நாமக்கல், அக். 17: நாமக்கல் தெற்கு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், மன அழுத்தத்தை போக்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாட்டை சிஇஓ செய்திருந்தார். நாமக்கல் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரிய, ஆசிரியைகளின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில், சிரிப்பு யோகா, தியான நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று, நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மகிழ்ச்சி மன்ற நிறுவனர் ராஜேந்திரன், இயற்கை மருத்துவர் தங்கராஜ் ஆகியோர் தலைமை ஆசிரியர்களுக்கு சிரிப்புயோகா மற்றும் தியான பயிற்சி அளித்தனர். மகிழ்ச்சி மன்ற நிறுவனர் ராஜேந்திரன், பல்வேறு பயிற்சிகளை செய்து காட்டி அதை திரும்ப செய்யும்படி கூறினார். இதை பின்பற்றி அந்த பயிற்சிகளை செய்து தலைமை ஆசிரிய, ஆசிரியைகள்  விழுந்து, விழுந்து சிரித்து மகிழ்ந்தனர். சுமார் 3 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசுகையில், தலைமை ஆசிரியர்கள் மன அழுத்தம் இல்லாமல் பணியாற்றினால் தான் பள்ளியை மகிழ்ச்சியான முறையில் வழிநடத்த முடியும். ஹேப்பிஸ்கூல்ஸ் என்ற நிலையை ஏற்படுத்த இது போன்ற புத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியருக்கும் இது போன்ற பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், கல்வி மாவட்ட அலுவலர்கள் ரமேஷ், தங்கவேல், துணை ஆய்வர்கள் சந்திரசேகரன், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு மரக்கன்று

சேந்தமங்கலம், அக்.17: சேந்தமங்கலத்தில், அப்துல்கலாம் நண்பர்கள் குழு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவ பட்டதாரி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ரத்தினம் சேந்தமங்கலம் எஸ்ஐ அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்கள் சரவணன், பெரியசாமி, சிவக்குமார், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்ேகாடு ஒன்றியத்தில் அதிமுகவினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர்

திருச்செங்கோடு, அக்.17: நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சியில், எல்.ஐ.சி செல்வராஜ் தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி,   திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வர்த்தகர் அணி அமைப்பாளர் கிரிசங்கர், திருச்செங்கோடு நீதிமன்ற அமைப்பாளர் ரமேஷ், மாணிக்கம், அருள்குமார் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான தடகள போட்டி மோகனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல், அக்.17: மாவட்ட அளவிலான தடகள போட்டியில், மோகனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். திருச்செங்கோட்டில், மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. மாவட்ட முழுவதும் 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 மீட்டர், 200 மீ, 400 மீ, 800 மீ,1500 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 400 மீ, 800 மீ, 1500, மீ, 3000 மீ, 5000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் நடராஜன், சதீஸ், நந்தினி ஆகியோர் பாராட்டினர்.

அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச இந்தி பயிற்சி

குமாரபாளையம், அக்.17: அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச இந்தி பயிற்சி வழங்கப்படுகிறது. குமாரபாளையம் அருகே, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இலவச இந்தி பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சியாளர்கள் ராஜபொம்மன், சின்னையன், தளிர்விடும் பாரதம் அமைப்பின் செயலாளர் பிரபு, செந்தில், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்பயிற்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில், 70 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

பைக் மோதி விவசாயி பலி

பரமத்திவேலூர், அக்.17: பரமத்திவேலூரை அடுத்துள்ள கோனூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன் (63). இவர் நேற்று கீரம்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சக்திவேல் (27) என்பவர் வந்த பைக்குடன் நேருக்கு நேராக மோதிக்கொண்டார்.  பலத்த காயமடைந்த செங்கோடனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.