Perambalur - Dinakaran

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு

பெரம்பலூர், டிச.16:  பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம்வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 5 மையங்களில் 71 பள்ளிகளை சேர்ந்த 773 பேர் பங்கேற்றனர். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வுகள் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 173 பேர், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 167 பேர், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 126 பேர், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 149 பேர், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 158 பேர் என மொத்தம் மாவட்ட அளவில் 773 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வினை நேற்று எழுதினர்.பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) வெங்கடேசன், துறைத்தலைவர் இந்திராநேரு ஆகியோர் பணிபுரிந்து தேர்வுகளை நடத்தினர். இங்கு மட்டும் 20 பள்ளிகளைச் சேர்ந்த 173 பேர் தேர்வெழுதினர். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு 9, 10, 11, 12ம் வகுப்புகளில் பயிலும்போது மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எருத்துக்காரன்பட்டி ஜெ. நகரில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு

அரியலூர்,டிச,16: அரியலூர் மாவட்டம். எருத்துக்காரன்பட்டி. ஊராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியத்தால்  கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வீடுகளில் கழிவு நீர் செல்ல, குப்பைகள் கொட்ட வசதி கிடையாது, அதுபோல் தெரு விளக்குகள்,சாலை வசதிகளும் கிடையாது எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் வீடுகளை விற்றுள்ளனர் வீட்டுவசதி வாரியம். அதனால் தற்போது சுகாதாரமற்ற ஜெ.நகரில் வியாபாரி அன்பழகன்(45) என்பவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மாவட்ட மருத்துவமணையில் சிகிச்சை பெற்று பலன் இல்லாமல் திருச்சியில் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரசு அதிகாரிகள் அரசால் கட்டிதரப்பட்ட ஜெநகரை கண்டுகொள்ளுமா மேலும் டெங்கு நோய் பரவாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.  மேலும் கழிவு நீர் சாக்கடைகளை கட்டி அன்றாட பயன்படுத்தும் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெ. ஜெ நகர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ஜெயங்கொண்டத்தில் போலீசாருக்கான கவாத்து பயிற்சி

ஜெயங்கொண்டம், டிச.16:  ஜெயங்கொண்டம்  பகுதி போலீசாருக்கான வருடாந்திர கவாத்து பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு  மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் காவல் கோட்டத்திற்கு  உட்பட்ட ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம், விக்கிரமங்கலம்,  தா.பழுர், தூத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல்  நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும்  இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் ஆகியோருக்கான வருடாந்திர கவாத்து  பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி  பார்வையிட்டார். மேலும் காவலர்களுக்கான தமிழக அரசு வழங்கும் பொருட்களை  ஆய்வு செய்யப்பட்டன. சட்டை, தொப்பி, பெல்ட், பட்டன், ஷூ, பேட்ஜ்,  துப்பாக்கி, தோட்டாக்கள், போர்வை உள்பட அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள்  அனைத்தும் காவலர்களிடம் உபயோகப் படுகின்றனவோ நல்ல நிலையில் உள்ளனவா எனவும்  ஆய்வு செய்த பொருட்களை மாற்றிக்கொள்ளவும் பரிந்துரைக்க விசாரணை செய்தார்,  இந்த பயிற்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, உட்பட  சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமைக் காவலர்கள் காவலர்கள் உள்ளிட்ட 250க்கும்  மேற்பட்டோர் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

டிஎஸ்பி ஆய்வு மது விற்ற 2 பேர் கைது

கறம்பக்குடி, டிச.16:   கறம்பக்குடியில் எஸ்ஐ  பெரியசாமி தலைமையில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கறம்பக்குடி அருகே ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (58) என்பவர் அம்புக்கோவில் முக்கம் சாலையில் உள்ள காய்கறி கடை அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்ததும்,  அதேபோல் நரங்கியப்பட்டு  அன்பரசன்  (27) கறம்பக்குடி முருகன் கோயில் அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்த போது அவரிடம் இருந்து 5 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  இருவரையும் கைது செய்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரம்பலூரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு புதிய டிஎஸ்பி அலுவலகம் திறப்பு

பெரம்பலூர், டிச.16:   பெரம்பலூர் கலெக்டர்அலுவலகம் அருகே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் புதிய டிஎஸ்பி அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு அரசுத் துறையினரின் லஞ்சப் புகார்கள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.  தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகங்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த புகார்களை, பாதிக்கப்பட்ட நபர்கள், பொதுமக்கள் தொலை தூரங்களுக்குச் சென்றோ, பக்கத்து மாவட்டங்களுக்கு சென்றோ கொடுக்க வேண்டிய நிலையிருந்தது. இதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பிரிவு அலுவலகங்கள் தொடங்கும்படி தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையொட்டி பெரம்பலூர், திருவாரூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல வருவாய் மாவட்டங்களில் ஊழல் தடுப்புப்பிரிவு அலுவலகங்கள் கடந்த 15ம்தேதி தொடங்கப்பட்டன.   இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கென பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே, அபிராமபுரத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் லஞ்சம் கேட்பவர்கள் அரசுத்துறைகளில் வருவாய்த்துறை, காவல்துறை என எந்த துறைகளில் பணிபுரிந்தாலும் அவர்கள் குறித்து பாதிக்கப்பட்டோர், பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தைரியமாக தெரிவிக்கலாம். செல்போன்கள் மூலமாகத் தொடர்புகொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்களின் 94981 10576, 94981 57718 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் பெரம்பலூர் டிஎஸ்பி அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய அலுவலகத்திற்கான டிஎஸ்பி பணியிடம் மட்டும் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலத்தியூர் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிய 200 மாட்டு வண்டிகள்

செந்துறை,டிச.16:           அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூர் வெள்ளாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மட்டுமே மணல் எடுத்துக்கொள்வதற்காக கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆலத்தியூர் பகுதியில் மணல் எடுத்துக்கொண்டு தளவாய் அருகேயுள்ள சேந்தமங்கலம் வழியாக வெளியே வரவேண்டும் எனவும் வழி ஏற்படுத்தி கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்டத்தினர் எங்களுக்கும் மணல் அள்ள அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என கோரினர். தகவலறிந்து சென்ற தளவாய் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த குவாரிக்கு சென்று அங்கு மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டிகளின் அனுமதி சீட்டை சோதித்தனர். அதில் பலர் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. அனைத்து வண்டிகளில்  உளள மணலையும் கீழே கொட்டுமாறு இன்ஸ்பெக்டர் மோகன் கூறினார். சம்பவ இடம் வந்த அரியலூர் டிஎஸ்பி சங்கர் விசாரணை செய்ததில் ஆலத்தியூர் பகுதியில் மணல் எடுக்க அனுமதி பெற்று தளவாய்(வ) வருவாய் கிராமமான சேந்தமங்கலத்தில் மணல் ஏற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு மணல் ஏற்றியிருந்த 200  வண்டிகளில் இருந்த மணலை கீழே கொட்டினர். மேலும் பொதுபணித்துறையினரால் அமைக்கப்பட்ட அனுமதி சீட்டு வழங்கும் கொட்டகையும் அகற்றுமாறு உத்தரவிட்டார்.

ஜெயங்கொண்டம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு

ஜெயங்கொண்டம் ,டிச.16: ஜெயங்கொண்டம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி னிவாசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் ஜெயங்கொண்டம் உட்பட்ட 9 காவல் நிலையங்களில் இருந்து வரப்பெற்ற பதிவு செய்த வழக்குகள், பெரிய அளவில் நடைபெற்ற திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளில் ஆவணங்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வில் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், வேலுச்சாமி, செல்வகுமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் அருகே சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்திற்கு வெளிமாவட்ட கலெக்டரால் தடை

பெரம்பலூர்,டிச.12: பெரம்பலூர்அருகே சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்திற்கு வெளிமாவட்ட கலெக்டர் ஒருவர் தடையாகவுள்ளதால் தமிழக அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னமுட்லு பகுதியை பார்வையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டி அடுத்த பச்சைமலை அடிவாரத்தில் சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலாளர் சண்முகம் மற் றும் மாநிலச் செயலாளர் சாமிநடராஜன் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் கோகுலகிருஷ்ணன் பிரபு ஆகியோருடன் சென்று பார்வையிட்டனர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம், மேட்டூர் அணைக்கட்டைப் போல மிகப்பெரிய நீர்த்தேக்க திட்டமாக அமைந்தால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதியைப் பெறும். 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்வசதி உள்பட நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணைக்கட்டு அமைவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு மத்தியஅரசு நிலம் கையகப்படுத்தும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்டஈட்டைப் பெற்றுத்தர வேண்டும். இந்த நிலம்தவிர வேறு நிலம் இல்லாதவர்களுக்கு மாற்றுநிலம் வழங்கவும் மாவ ட்ட நிர்வாகம் கூடுதல் அக்கரை காட்டவேண்டும். லட்சக் கணக்கான பொதுமக்களு க்கு, விவசாயிகளுக்கு நன்மைதரக்கூடிய இத்திட்டத்திற்கு தமிழகஅரசின் உயர் பதவியிலுள்ள ஒரு வெளிமாவட்டத்தின் கலெக்டரே அப்பகுதியில் நிலங்களை வாங்கி வைத்துக்கொண்டு தடையாகவுள்ளார் என்பதால் தமிழகஅரசு இந்தவிஷயத்தில் தலையிட்டு சின்னமுட்லு அணைக்கட்டுத்திட்டம் விரைந்துநிறைவேற நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவாரி நிலங்க ளெல்லாம் பாசனவசதிபெற்று டெல்டா மாவட்டங்களைப் போல பசுமையாகக் காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையும் அதனுடைய பயன்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில், நீர்த்தேக்கத்துடன் கூடிய எவ்வித சுற்றுலாத்தலங்களும் இல்லாததால் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையொட்டி பெரம்ப லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, ரூ.2கோடி மதிப்பிலான பூங்கா அமையப்பெற்று மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதோடு இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தேவையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளைச் செய்துதர பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அரியலூரில் 2வது நாளாக பணிகளை புறக்கணித்து விஏஓவினர் போராட்டம்

அரியலூர், டிச.12: அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிகளை 2வது நாளாக புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேனாபதி கிராம நிர்வாக அலுவலர் ராயர் கடந்த 7ம் தேதி அரியலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி, ஆர்.ஐ கார்த்தியிடம் போட்டி தேர்வு எழுதுவதற்காக இரண்டு நாள் விடுப்பு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ராயர் ஆதரவாளர்களான வெங்கனூர் விஏஓ பிரபாகரன், குலமாணிக்கம் விஏஓ சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தாக்கியதில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் காயமடைந்தார். இது குறித்து துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், விஏஓக்கல் ராயர், சுபாஷ் சந்திரபோஸ், பிரபாகரன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆர்டிஓ சத்தியநாரயணன் உத்தரவிட்டார். இந்நிலையில் உரிய விசாரணை செய்யாமல் 3 விஏஓக்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்றுமுன்தினம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுக்க வந்த விஏஓக்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 43 பேரை போலீசார் கேட்டின் முன் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அன்றிரவு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதையடுத்து, 2வது நாளாக நேற்று பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் 89 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூர், டிச. 12: பெரம்பலூரில் பொதுமக்களோ, இருசக்கர வாகனங்களோ செல்ல வழியின்றி போஸ்ட் ஆபீஸ் தெரு ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இப்பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகராட்சி மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கொண்டது. இங்கு கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.குறிப்பாக புது துணிமணிகள் எடுக்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் அதிகம் வலம் வருவது பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகள் தான்.பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்களில் வந்திறங்கும் பொதுமக்கள் துணிகள், பாத்திரங்களை வாங்க பெரிய கடைவீதிக்கு செல்ல போஸ்ட் ஆபீஸ் தெருவைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தெருவுக்கு அடையாளமான போஸ்ட் ஆபீஸ் செல்வதற்குக்கூட வழியின்றி இந்த சாலை ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு கிடப்பதுதான் வேதனையளிக்கிறது.காரணம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருபுறங்களில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் எல்லை வரம்புகளை மீறி தெருக்களை ஆக்கிரமிப்பது மட்டுமன்றி, சாலையோர தரைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்த தெருக்களின் வழியாக இருசக்க வாகனங்கள் வந்தாலே கடைக்காரர்கள் எதிரிகளைப் பார்ப்பதுபோல் முறைப்பதும், நடக்க வழியின்றி இருசக்கர வாகனங்களை நிறுத்தி பாதைகளை ஆக்கிரமிப்பதும் சகஜமாகி விட்டது. இது குறித்து சுட்டிக்காட்டும்போது மட்டும் நகராட்சி நிர்வாகம் கண்துடைப்புக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது.பிறகு 2 நாட்களில் எல்லைமீறும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு சரக்குகளை கொட்டிவைத்து பாதைகளை ஆக்கிரமிக்கின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பாதசாரிகளும் எதிர்பார்த்துள்ளனர்.

பெரியவெண்மணி கிராமத்தில் பாலத்தில் பெயர்த்த குழாய்களை விரைவில் சீரமைக்க வேண்டும்

பெரம்பலூர், டிச.12: பெரியவெண்மணி கிராமத்தில் கண்துடைப்புக்காக போடப் பட்ட சிறுபாலத்தில் பெயர்த்து போடப்பட்ட குழாய்களை சீரமைக்காததால் தண்ணீர் வீடுகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரியவெண்மணி கிராமம். இவ்வூர் நடுத்தெருவில் சிவன்கோயில் உள்ளது. இதன ருகே பல்வேறு தெருக்களில் இருந்து வழிந்தோடிவரும் கழிவுநீர், மழைநீர் ஒன்றி ணைந்து கடந்துசெல்ல தரமான பாலம்அமைத்து முழுமையாகத் தீர்வு காணாத ஊராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் கான்கிரீட் குழாய்களை பொறுத்தி மண்ணை நிரப்பி கண்துடைப்புக்காக கழிநீர் வாய்க்காலை மூடியது.கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த கனமழையின்போது மழைநீர் அடைப்பு ஏற்பட்டதால் குழாய்கள் பெயர்த்தெடுத்து போடப்பட்டது. பிறகு அதனை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டதால் தற்போது பெய்துவரும் சிறுமழைக்கும் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. அதோடு மழைநீர் வழிந்தோட வழியின்றி இனி கனமழை பெய்தால் மழைநீர் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெயர்த்து போடப்பட்ட கான்கிரீட் குழாய்களை தரமான சிறுபாலமாக மாற்றி அமைத்தாவது உடனடித் தீர்வு காணவேண்டும். அல்லது தரமான கான்கிரீட் பாலம் அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேப்பூர் ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

பெரம்பலூர், டிச. 12: ஆன்லைன் கட்டணம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2ம் நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினிவழிச் சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும். விஏஓ பணியிடத்திற்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்ளிட்ட 14 சேவைகள் வழங்குவதை நிறுத்தினர். 2ம் கட்டமாக தாலுகா தலைநகரங்களில் 5ம் தேதி மாலை 6 மணி முதல் 6ம் தேதி காலை 6 மணிவரை இரவுநேர தர்ணா போராட்டம் நடத்தினர். 3ம் கட்டமாக 7ம் தேதி பெரம்பலூர் கலெக்டர்அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் 83 கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் 2ம் நாளான நேற்று தங்கள் போராட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜா, வேப் பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலன் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தால் வருவாய் துறையால் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் பெரம்பலூரில் ஸ்டார் விற்பனை விறுவிறுப்பு

பெரம்பலூர், டிச. 12: பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் ஸ்டார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.உலக அளவில் கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் பெருவிழா வருகிற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்து இயேசுவின் பிறப்பை முன் கூட்டியே அறிவிப்பதற்காக வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தை அடையாளப்படுத்தும் வகையிலும், கிறிஸ்து இயேசுவை வரவேற்கும் விதமாகவும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதத்தில் தங்கள் வீடுகளில் ஸ்டார்களில் மின்விளக்குகளைப் பொருத்தி வீடுகளின் முகப்பிலும், உச்சியிலும் தொங்கவிட்டு அலங்கரிக்கின்றனர். இதனையொட்டி பெரம்பலூர் என்எஸ்பிரோடு, பள்ளிவாசல்தெரு, காமராஜர் வளைவு, போஸ்ட்ஆபீஸ் தெரு என பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஸ்டார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

விலையில்லா கறவைமாடு வழங்கும் திட்டம் பயனாளிகளிடம் அதிகாரிகள் ஆய்வு

தா.பழூர், டிச.12: அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இலவச கறவைமாடு வழங்குவதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக ஜெயங்கொண்டம் சின்ன வளையம் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தை பெண்கள் நேற்று முன்தினம்  முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதையடுத்து கால்நடை துறை கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமையில், மண்டல இணை இயக்குனர் விழுப்புரம் மனோகரன், மண்டல இணை இயக்குனர் அரியலூர் முகமது ஆசிப், தீவன அபிவிருத்தி இணை இயக்குனர் முருகன், கால்நடை உதவி மருத்துவர் வெற்றி வடிவேலன், வீரேந்திரன், கால் நடைகறவை மாடுகளை தேர்வு செய்யும் மருத்துவ குழுவினர் கோடாலிக ருப்பூர், இடங்கண்ணி,வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் சென்று பயனாளிகளை சந்தித்து அவர்கள் கோரிக்கையின் படி மாடுகள் தேர்வு செய்வதாக கூறினர். கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வெளிமாநிலங்களில் தேர்வு செய்வதாகவும் மற்ற இடங்கண்ணி,வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு செய்வது எனவும் முடிவு செய்து பயனாளிகளிடம் கூறி சென்றுள்ளனர். பயனாளிகள் தினம் தினம் அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் முடித்து தர வேண்டும் என கோரிக்கை   விடுத்துள்ளனர்.

செந்துறை காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

செந்துறை,டிச.12: அரியலூர் மாவட்டம் செந்துறை  காவல் நிலையத்தில் அரியலூர்  எஸ்பி சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி சீனிவாசன்  செந்துறை காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்யாத வழக்குகள் பற்றி கேட்டறிந்தார். பொதுமக்கள் தங்களிடம் விசாரணை செய்யாத வழக்குகள் பற்றி மனு அளித்தனர் அதனை பெற்றுக்கொண்ட சீனிவாசன் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து போலீசாருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அதன் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.பின்னர் குழுமூர் கிராமத்தில் பொதுமக்களை அழைத்து போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தினை நடத்தினார். அப்போது பேசிய அவர் போலீசார் மற்றும் பொதுமக்கள் நட்புறவுடன் இருக்க வேண்டும் ரவுடித்தனம் செய்பவர்களை  அடக்குவோம்  என்றார்.  அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து எந்த நேரத்திலும் தங்களது பிரச்னை தொடர்பாக என்னை அழைக்கலாம் என்று கூறினார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால்,

தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்கள் பாதிப்பு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வியாபாரிகள் கோரிக்கை

ஆலங்குடி, டிச.12: ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால்  வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு விவசாய சார்ந்த பகுதியாகும். விவசாய விளைபொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் சந்தையாகவும் ஆலங்குடி திகழ்ந்து வந்தது.  நிலக்கடலை வியாபாரம் நன்றாக நடந்தது. தற்போது அது முடங்கி போயுள்ளது.இதனால் தொழிலில் மாற்றத்தை விரும்பிய வியாபாரிகள் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும், அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் மட்டைகளை லாரிகளில் ஏற்றிவந்து, தேங்காய் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழில்களில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு தயாரிக்கப்படும் கேக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் ஓரளவு பணப்புழக்கம் இருந்தது. மேலும், இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் கடந்த நவ.16-ம் தேதி வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதோடு, தேங்காய் மட்டையும் கிடைக்காமல் உள்ளது. இதனால், கஜா புயலின் போது பெரும் பாதிப்புக்குள்ளான தேங்காய் மட்டையிலிருந்து நார் மற்றும் கேக் தாயாரிக்கும் தொழிற்சாலைகளை சீரமைக்காமலேயே உள்ளனர்.இந்த தொழிலை நம்பியிருந்த வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னைநார் தொழிற்சாலைகளை நடத்திவரும் வியாபாரிகள் சிலர் கூறுகையில், . வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்திவந்த வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி இந்த தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகளும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு தேங்காய் மட்டையிலிருந்து, நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழிலுக்காக வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உலக மண்வள தினவிழா

ஜெயங்கொண்டம், டிச.12: ஆண்டிமடம் வேளாண்மைத் துறை சார்பில் உலக மண்வள தினவிழா ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுகந்தி மண் ஆய்வுகள் அடிப்படையில் உரமிடுவதால் உரச்செலவு குறைவதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும், உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம், மண்வள அட்டையில் உள்ள விபரங்கள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினார். திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தகூடாது என்றும் விளக்கினார். மேலும் பிகோ புரொஜக்டர் மூலம் மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து கானொளி காட்சி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இறுதியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. விழாவில் உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் கொளஞ்சி நன்றி கூறினார்.

வேப்பூர் வட்டாரத்தில் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர், டிச.12: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா நேற்று வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறைகளின்மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை களஆய்வு செய்தார். இதனையொட்டி முதலாவதாக பேரளி கிராமத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வேப்பூர் வட்டாரம் பேரளி கிராமத்தில் படைகாத்து என்றவிவசாயியின் வயலில் திருந் திய நெல்சாகுபடி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள ஏடிடி&39 மத்திய கால நெல்ரக விதைப் பண்ணையை ஆய்வுசெய்தார். பிறகு தோட்டக்கலைத்துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலமாக கிருஷ்ணசாமி என்பவரது வயலில் பாலிதீன் சீட்கொண்டு மூடாக்குஇடப்பட்ட சம்மங்கி மலர் வயலைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.அப்போது விவசாயி கிருஷ்ணசாமி கூறும்போது, இந்த வயலானது சொட்டுநீர்ப் பாசனமுறையில் அமைக்கப்பட்ட வயலா கும். பாலிதீன் சீட்கொண்டு மூடாக்கு இடுவதனால் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடிகிறது. பயிருக்கு பாய்ச்சிய நீர் சூரியவெப்பத்தால் ஆவியாவதைத் தடுக்க முடிகிறது. பிளாஸ்டிக் மூடாக்கு இடுவதற்கு ஒருஹெக்டேருக்கு ரூ32ஆயிரம் செலவா கிறது, அதில் 50சதவீதமான ரூ16ஆயிரம் மானியமாக பெறப்பட்டது எனத் தெரிவித் தார். அதோடு கிருஷ்ணசாமியின் நிலத்தில் வாழைக்கன்று நடவை கலெக்டர் சாந்தா நட்டு வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், டிச.12: பெரம்பலூரில் ஐஓபி சார்பில் இலவசமாக நடத்தப்படும் பாஸ்ட் புட் தயாரிப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குனர் அகல்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெரம்பலூர் சங்குப்பேட்டை, ஷெரீப் காம்ப்ளக்சில் இயங்கிவரும் ஐஓபி கிரா மிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வரும் 18ம்தேதி முதல் பாஸ்ட் புட் தயாரிப்பு குறித்த பயிற்சிவகுப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 10நாட்கள் நடைபெறும் இந்தப்பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டை, மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபிவங்கியின் மாடியிலுள்ள கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்றத் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் அகல்யா தெரிவித்துள்ளார்.

குண்டும், குழியுமான தத்தனூர் -குடிகாடு சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜெயங்கொண்டம். டிச.11:  ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் ஊராட்சியில் 7  குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில்உள்ள கிராமங்களில் தத்தனூர் மட்டுமே பெரிய கிராமமாக உள்ளது. இதை சுற்றியுள்ள வளவெட்டிகுப்பம், குடிகாடு, வடகடல், பருக்கல், சோழங்குறிச்சி, காக்காபாளையம், சுத்தமல்லி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியூர் செல்ல வேண்டுமானாலும், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் தத்தனூர் வந்துதான் அனைத்து வெளியூர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இக்கிராமத்தின் வழியாக ஒரு மினி பஸ் மட்டுமே சென்று வருகிறது. சில கிராமமக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து சென்று வருகின்aறனர்.  தற்பொழுது கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையினால் சாலைகள் மிக மோசமாகி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சைக்கிளில் செல்ல முடியாத அளவிற்கு ஜல்லிகள் பெயர்ந்தும் ஆங்காங்கு சேறும் சகதியுமாகி சாலையிலேயே குழியில் உள்ளன. இதனால் அவ்வழியே பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ,வாகனங்களில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேளாண்மை விளைபொருட்களை லாரிகளில் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.