Politics - Dinakaran

சமக புதிய நிர்வாகிகள்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சரத்குமார் கூறியுள்ளார்.  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாக வசதிக்காக தமிழகம் முழுவதும் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக பிரபு,  முதுகுளத்தூர், பரமக்குடி  தொகுதிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக பன்னீர் செல்வம் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், ஆசிரியர், பட்டதாரி அணியின் மாநில துணை செயலாளராக அப்துல்பாஷித்  நியமிக்கப்படுகிறார்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கருணாநிதி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய, நலிந்தோர்க்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த  5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வந்தது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரம். தற்போது 2018, நவம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தபால் மூலம் வரைவு காசோலையாக நிதி பெற்றவர்கள் விவரம்: கி.முருகன், வடஒத்தவாடைத் தெரு, திருவண்ணாமலை ரூ.25,000, கே.பழனிசாமி, கழுமரம் அஞ்சல், திருக்கோவிலூர், விழுப்புரம் ரூ.25,000, பெ.ஆறுமுகம், வடக்கு காலனி தெரு, சிந்தாமணி, தா.பழூர் ஒன்றியம், அரியலூர் ரூ.25,000, பி.பாப்பாத்தி, வவ்வாக்காடு தோட்டம், இளநர் அஞ்சல், திருச்செங்கோடு, நாமக்கல் ரூ.25,000, சி.ஆறுமுகம், வீரமுடையான் மெயின் ரோடு, முத்துப்பட்டி, மதுரை ரூ.25,000, எம்.தமிழரசன், நரிப்பட்டி கிராமம், கொட்டகுடி ஊராட்சி, போடிநாயக்கனூர், தேனி ரூ.25,000, து.வேலுச்சாமி, கல்லூரணி அஞ்சல், திருப்புவனம், சிவகங்கை ரூ.25,000, கே.செல்வசிவலிங்கம், புதூர், தர்மபுரம் ஊராட்சி, பொழிக்கரை அஞ்சல், கன்னியாகுமரி ரூ.25,000, மொத்தம் ரூ.2 லட்சம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலன்களை முதல்வர் புறக்கணிக்கிறார்: கமல் பேட்டி

சென்னை: தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது பிரச்னை, கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியது சரியான செயல். அதுபோன்ற அழுத்தங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தொடரவும் வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று கூறியது அவரது கருத்து. அவர் நினைத்தால், கொள்கை முடிவு எடுக்கலாம். ஆனால், தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார். அதில் இதுவும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

வலைதளங்களின் செய்தியை வைத்து தான் பேட்டி அளித்தேன் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் திடீர் பல்டி

சென்னை: சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை வைத்து தான் பேட்டி அளித்தேன். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, போயஸ் கார்டனில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டாரா? ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து, கொலை செய்யப்பட்டார் என்று கூறி வருகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா. ஜெயலலிதா கன்னத்தில் ஆணிக்கட்டைகளால் அடித்ததால் தான், 3 புள்ளிகள் ஏற்பட்டது என்று கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகச்சாமி எழுப்பினார். அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து பேட்டி கொடுத்தேன். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டதால் தான் அவர் உடல்நிலையில் கடும் பாதிக்கப்பட்டதாக டாக்டர் ஒருவர் அளித்த பேட்டியை குறிப்பிட்டு தான் நானும் சந்தேகம் எழுப்பினேன் என்று கூறினார்.அதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் பொன்னையனிடம், ‘ஆணி கட்டையால் ஜெயலலிதா கன்னத்தில் அடித்தார்கள், ஜெயலலிதா கால் வெட்டி எடுக்கப்பட்டது என்று எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் எனக்கு ஞாபகம் இல்லை என்றார். இது போன்று பல கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை. தெரியாது என்றே பதில் அளித்தார். இதனால், ஆணைய நீதிபதி எந்த அடிப்படையில் நீங்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பினீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து சந்தேகம், அந்த அடிப்படையில் தான் நான் பேட்டி கொடுத்ததாக கூறினார். இந்த விசாரணைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறுகையில், ஆணையத்தில் சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆணையம் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், பொன்னையன் தன்னிடம் இருக்கும் ஆவணங்களை 123 பக்கங்களை புத்தகமாக கொடுத்துள்ளார். அவை அனைத்தும் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தி தான்.  இந்த சந்தேகத்திற்கு சசிகலாவும், டிடிவி.தினகரனும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேட்டியின் போது தெரிவித்ததாக பொன்னையன் கூறினார். போயஸ் கார்டனில் உள்ள பாதாள அறையில் உள்ள ெசாத்துக்களை எடுப்பதற்காக ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்தார்கள் என ஏன் பேசினீர்கள் என்று கேட்டதற்கு, அது குறித்து நான் பேசியதாக ஞாபகம் இல்லை என பொன்னையன் கூறினார். மேலும், அவர் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை வைத்து தான் நான் தெரிவித்தேன். பல சந்தேகங்களுக்கு தெளிவான நிலை வர வேண்டும் என்று தான் நான் கூறினேன் என்று கூறினார். இவ்வாறு அவர் கூறினார். ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லைஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனிப்பட்ட காரணத்திற்காக நேற்று ஆணையத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், மற்றொரு நாள் ஒதுக்குமாறும் ஆணையத்திடம் கேட்டு கொண்டுள்ளார். அதே போன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு நேற்று முன்தினம் கடிதம் அளித்துள்ளார். எனவே இரண்டு பேருக்கும் அடுத்து வரும் நாட்களில் நேரம் ஒதுக்கப்படும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சொல்லிட்டாங்க...

நாங்கள் எதைச் செய்தாலும் அதை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்து வருகிறோம்.- பிரதமர் நரேந்திர மோடி.  அனைத்து விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம்.- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார்.- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.கர்நாடகா, தமிழ்நாடு இடையே நீடிக்கும் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது இயலாத காரியம்.- கர்நாடக முதல்வர் குமாரசாமி.

வழக்கமாக டிசம்பரில் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூடுவது எப்போது? : தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்பதால், அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அதிமுக செயற்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கடைசியாக அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுக்குழு ஆண்டு இறுதியில் (டிசம்பர் 31ம் தேதிக்குள்) நடத்தப்படலாம் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழுவை இந்த ஆண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 தினங்களுக்கு முன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு கடிதம் அனுப்பப்படும். ஆனால் இதுவரை யாருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்படவில்லை.இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடத்தில் கேட்டபோது, “பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுவிட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பும் வகையில் மாவட்ட செயலாளர்களிடம் பெயர் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பட்டியலை இன்னும் வழங்கவில்லை. எனவே இந்த மாதம் நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை” என்றனர்.மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை சார்பில் கடிதம் எழுதப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் பொதுக்குழு குறித்த பேச்சு தொண்டர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரபேலில் காங்கிரஸ் பொய் பிரசாரம் ஊழலுக்கு எதிரான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் : பாஜ தேசிய பொதுச்செயலாளர் பேட்டி

சென்னை: ரபேலில் காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், மோடி ஊழலுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். பாஜ தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மோடி ஊழலுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறார். ரபேல் போன்ற பெரிய ஒப்பந்தங்கள் வெளிப்படையாக நடந்து வருகிறது. இதில் எந்தவித இடைத்தரகர்களும் குறுக்கீடுவது இல்லை.ரபேல் குறித்து பொய்யான தகவலை கூறி வரும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர் நாடாளுமன்றத்திலும், மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழக பாஜ தலைவர் தமிழிசை உடன் இருந்தார். ரஜினி, கமல் உன்னிப்பாக கவனிப்பு: பாஜ தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் கூறுகையில், “ரஜினி, கமல் போன்ற புதிய வரவுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறோம். மோடி தலைமையை ஏற்று பாஜவுடன் கூட்டணி சேர விரும்பும் எல்லா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிப்போம். பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கப்படும் என்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் தனி ஆளாக நின்று மோடியின் தலைமை வெற்றிக் கொள்ளும்” என்றார்.

தாமரை மலரும் என தமிழிசை ஆர்வ கோளாறில் பேசுகிறார் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தாமரை மலரும் என, தமிழிசை ஆர்வ கோளாறில் பேசுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, கலெக்டர் சண்முகசுந்தரம், சிபிசிஎல் நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ₹55 லட்சம் செலவில், 520 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர்.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான நிதி ஒதுக்கி, உபகரணங்கள் வழங்கப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தை பொறுத்தவரை கொள்கை முடிவாக இருந்தாலும், தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும். அதே நேரத்தில், ஸ்டெர்லைட் விவகாரத்தை பொறுத்தவரை அரசு தெளிவான முடிவில் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான். இனி அதை திறப்பதற்கு அரசு அனுமதிக்காது.குட்கா வழக்கில் சிக்கி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம் மட்டுமே. சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. நீதிமன்றம் குற்றவாளி என கூறும்போது, அமைச்சராக இருந்தாலும், அரசு சார்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை கூறுவது, அவருக்குள்ள ஆர்வ கோளாறில் பேசுகிறார். அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

சென்னையில் ஜன.2ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் ஜனவரி 2-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கட்சி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு  கூட்டம் ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்த யாராலும் முடியாது : அருண் ஜேட்லி பேட்டி

டெல்லி; ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் கூறுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ரூ.2.5 லட்சம் கோடி என கூறியதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்தாக கூறியுள்ள ஜேட்லி, வங்கித்துறையை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது என்றார். விஜய் மல்லையா விவகாரத்தில் ராகுல்ங தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக சாடினார். மல்லையாவிற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கடன் வழங்கப்பட்டது. நீண்ட கால அரசியலுக்கு ராகுல் காந்தி உண்மையை பேச கற்று கொள்ள வேண்டும் என்றார்.ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார். உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு அங்கமாகி விட்டது. இந்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்த யாராலும் முடியாது. உலக நாடுகள் சந்திக்கும் சவாலை தான், இந்தியாவும் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பொருளாதாரம் பாதிக்கிறது. டாலர் பலப்படும்போது, இந்திய ரூபாயில் வீழ்ச்சி காணப்படுகிறது. 2008 சர்வதேச பொருளாதார நிலை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என ஜேட்லி கூறியுள்ளார்.

தலைமை பொறுப்பிலிருந்து மோடியை நீக்கி கட்கரியை நியமியுங்கள் : RSS தலைமையை அதிர வைத்த கடிதம்

மும்பை: விவசாய சங்கத் தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விவசாய மேம்பாட்டிற்காக மராட்டிய மாநில அரசால் வி.என்.எஸ்.எஸ்.எம் என்னும் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதன் தலைவருக்கு ஏறக்குறைய மாநில அமைச்சர் பதவிக்கு நிகரான அந்தஸ்து உள்ளது. தற்போது அதன் தலைவராக இருப்பவர் கிஷோர் திவாரி. இவர் தான் பிரதமர் பதவியிலிருந்து மோடியை நீக்கி நிதின் கட்கரியை நியமியுங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் பையாஜி சுரேஷ் ஜோஷி ஆகிய இருவருக்கு கிஷோர் திவாரி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் தீவிரப்போக்கு மற்றும் சர்வாதிகார மனப்பான்மையை கடைப்பிடிக்கும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது என்பது நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆபத்தானதாகும். இதற்கு முன்பும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே வரலாறு மீண்டும் திரும்ப நடக்க கூடாது என்றால், 2019-ம் ஆண்டு தேர்தலில் தலைமைப் பொறுப்பில் இருந்து மோடியை நீக்கி விட்டு, நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கடந்த வாரம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானபோது கூட, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய மோடி மற்றும் அமித் ஷாவால் தான் பாஜக தோல்வியுற்றது. எனவே மோடி மற்றும் அமித் ஷா இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கிஷோர் திவாரி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்களுக்கெதிரான கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரஸிலிருந்து விலகல்

டெல்லி: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகி கொள்வதாக கூறியுள்ளார். கட்சியிலிருந்து விலகும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, சஜ்ஜன் குமார் அனுப்பி வைத்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக நடந்த  கலவரத்தின்போது டெல்லியின் ராஜ்நகரில், சீக்கிய குடும்பத்ைத சேர்ந்த கேகர் சிங், குர்பீரித் சிங், ரகுவேந்தர் சிங், நரேந்தர் பால் சிங் மற்றும் குல்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன்குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சஜ்ஜன் குமார் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று நீதிபதிகள் முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சஜ்ஜன் குமார் வருகிற 31ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அதற்கு முன்னர் டெல்லியைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட ராகுலின் தலைமையை ஏற்றிடுவோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு, ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட ராகுல் காந்தியின் தலைமையை தோழமைக் கட்சிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிவதாக தெரிவித்தார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வந்திருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த, ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப்படையை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான், ராகுல் காந்தியை முன்மொழிந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள், இதனைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் தோழமைக் கட்சிகளுக்குள் இதுகுறித்து விவாதங்கள் ஏற்படலாம் என்றும், ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியேதான் விடிவுகள் பிறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவுபெற, இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

கொடைக்கானல்: புயல் பாதித்த பகுதிகளில் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பார்வையிட்டார். மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புயல் பாதித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக கூறியுள்ளனர். இந்த கிராமத்தை தத்தெடுக்கிறோமோ இல்லையோ, இவர்களுக்கு அரசு செய்ய வேண்டியதை எங்களது மக்கள் நீதி மய்யம் கவனிக்கும்.புயல் பாதித்த பகுதிகளில் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நான் சந்தித்த பகுதிகளில் எல்லாம்  அரசு அதிகாரிகள் வரவில்லை என்றுதான் கூறுகிறார்கள். அவர்களுக்கு வேறு என்ன வேலை உள்ளதோ தெரியவில்லை. வந்திருக்க வேண்டும். வரவில்லை என்றால் இனிமேலாவது வர வேண்டும். கூட்ட‌ணி குறித்து நேரம் வ‌ரும்போது கூறுவேன். இப்போது விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியை கண்டித்து போராட்டம் புதுவை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ. முயற்சி

புதுச்சேரி: புதுவையில் ராகுல்காந்தியை கண்டித்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற நியமன எம்எல்ஏக்கள் உள்பட பாஜகவை சேர்ந்த 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கக் வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பாஜக மாநில தலைவரும், நிமயன எம்எல்ஏவுமான சாமிநாதன்  தலைமையில் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் முன்னிலையில் ஏராளமானோர் பாலாஜி தியேட்டர் சந்திப்பில் நேற்று திரண்டனர்.அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ராகுல்காந்திக்கு எதிராக கோஷமிட்டபடி வைசியாள் வீதியிலுள்ள மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை கொசக்கடை வீதி- அண்ணா சாலை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சொல்லிட்டாங்க...

தற்போது அமைச்சர்களாலும், அமைச்சரவையாலும் தமிழகத்துக்கு வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.தமிழத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணியை பாஜ தொடங்கி விட்டது.கடந்த 7 ஆண்டுகளில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி திமுகவின் முன்மொழிவை வரவேற்கிறோம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததை விசிக சார்பில் வரவேற்பதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருப்பது  வரலாற்றுச் சிறப்புக்குரிய  ஒன்றாகும். இதனை விசிக சார்பில் வழிமொழிந்து, வாழ்த்தி வரவேற்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்தி ராகுல்காந்தியை பிரதமராக்குவதற்கு பாடாற்றுவோம் என உறுதியேற்கிறோம்.‘சமத்துவப் பெரியார்’ கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சோனியாகாந்தி , ராகுல்காந்தி, ஆந்திரா, கேரளா, புதுவை ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்களின் முன்னிலையில்  திமுக தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது பொருத்தமானதாகும். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில் அவருடைய பணிகளைப் பாராட்டி பரிசளிப்பது போல் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. ராகுல் காந்தி மதச்சார்பற்ற சக்திகளின் அணியை  தலைமையேற்று வழிநடத்தத் தகுதியானவர் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப்  பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் தீர்மானிக்கக் கூடிய ஆற்றல் மிக்க  கட்சியாகத் திகழும் திமுக, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பது நாளைய வெற்றிக்கான முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. இந்தியாவெங்கும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வரும் ராகுல்காந்தி மற்றும் அவருக்கு உற்றத் துணையாக தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் அணியை தலைமையேற்று வழிநடத்தும் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினையும் உளமாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் அவதூறு காங்கிரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: தமிழக பாஜ தலைவர் அறிவிப்பு

சென்னை: “ரபேல் விவகாரத்தில் அவதூறு பரப்பும் காங்கிரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம்” நடைபெறும் தமிழக பாஜ தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: ரபேல் தீர்ப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது. ஆனால் அதை ஒப்பு  கொள்ளாமல் இன்னும்  காங்கிரஸ் தலைவரும், அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறு பரப்பி வருகின்றனர். இதை கண்டித்து வருகிற 19ம் தேதி(நாளை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அன்றைய தினம் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைக்கும் விதமாக மாவட்ட கலெக்டர்களிடம்  பாஜ சார்பில் மனு அளிக்கப்படும்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பணியை பாஜ தொடங்கி விட்டது. நேற்றைய முன்தினம் 5 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். 19ம்  தேதி விழுப்புரம், காஞ்சிபுரம், தென் சென்னை, வேலூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் மோடி பேச உள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அவர் பேச உள்ளார். மீண்டும் பாஜ  தலைமையில் ஆட்சி அமையும். மறுபடியும் மோடி தான் பிரதமாக வருவார் என்று மக்கள் உறுதியாக உள்ளனர். நாங்களும் உறுதியாக உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் ரீதியாக நான் சந்திக்கவில்லை.தமிழகத்தில் கூட்டணி நிச்சயம் அமையும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லாதவர்களுடன் அந்த கூட்டணி இருக்கும். ஸ்டெர்லைட் விவகாரத்தில்  மக்கள் பாதிக்கப்படக்கூடாது. மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள்  பாதிக்கப்படாமல் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் துணையாக இருக்கும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது, தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.அண்ணா, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழகத்துக்கு பல நல்ல செயல்கள் நடந்தன. காங்கிரஸ் ஆட்சியின்போது, நல்ல செயல்கள் நடந்துள்ளன. ஆனால், தற்போது அமைச்சர்களாலும், அமைச்சரவையாலும்  தமிழகத்துக்கு வரலாறு காணாத வகையில் மிக பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள், சிபிஐ அலுவலகத்தில் பலமணி நேரம் காத்து நின்று விசாரணையை எதிர்கொண்டு  வருகின்றனர். இது மிக பெரிய வெட்கக்கேடு. இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க மாட்டார். ஏனென்றால் அவர் மீதே ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், அவர் இந்த ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க  முடியாது. எடப்பாடியும் பதவி விலக வேண்டும்  ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்.பாஜ அரசின் ஊழலை மறைப்பதற்காகவே திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது பாஜவும் அதிமுகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக, அலட்சியமாக  செயல்படுகிறது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில், தமிழக அரசு சரியாக கையாளவில்லை. இனிமேல் உச்ச நீதிமன்றத்திலாவது சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதிட்டு நல்ல தீர்ப்பை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பேச்சு ‘இடைத்தேர்தல் தமிழக அரசின் எடைத்தேர்தல்’

அரக்கோணம்: வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து  காவேரிப்பாக்கம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை  கூட்டம் சாலை கிராமத்தில் நேற்று நடந்தது.  இதில், அமைச்சர்  எம்.சி.சம்பத் பேசியதாவது: தமிழகத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது அதிமுகவுக்கும், அரசுக்கும் கவுரவ பிரச்னை. எனவே, பிப்ரவரி மாதம் அல்லது எம்பி தேர்தலுடன் சேர்த்து  இடைத்தேர்தல் என எப்போது வந்தாலும் அதை நாம்  சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.  இது இடைத்தேர்தல் அல்ல, அரசின் எடைத்தேர்தல். எனவே, சோளிங்கர் தொகுதியில் நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்றார்.