Puducherry - Dinakaran

மத்தியமைச்சருக்கு கவர்னர் பரபரப்பு கடிதம்

புதுச்சேரி, பிப். 15: புதுவை முதல்வரின் அரசியல் விளையாட்டை நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தின் காரணமாக புதுச்சேரியில் போராட்டம் வெடித்துள்ளது. 39 கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக கவர்னர் மாளிகை முன் முதல்வர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஜ்நிவாசில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார். பின்னர் அவர் வரும் 20ம் தேதி புதுச்சேரி திரும்பவுள்ளார்.இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியின் தற்போதைய நிலவரம் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், புதுச்சேரியில் மோட்டார் வாகன சட்டத்தின்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வரின் அனுகுமுறை குறித்து உங்கள் கவனத்துக்கு சில விஷயங்களை கொண்டுவர விரும்புகிறேன்.  ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு வார விழா மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  புதுச்சேரியில் ஒவ்வொரு மூன்றாவது நாளின் போதும், விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு ஒருவர் உயிரிழக்கிறார்.  முதல்வர் நாராயணசாமி தன்னுடைய பொதுவான அறிவிப்பில், ஹெல்மெட் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தலாம், தற்போதைக்கு அப்படியே விட்டுவிடுமாறு கூறுவதால், மக்கள் குழப்பம் அடைகிறார்கள், அதோடு சட்டத்தை தீவிரமாக அமலாக்குவதில் பிரச்னையை ஏற்படுகிறது. இது போலீசாரையும் இரட்டை மனநிலைக்கு உள்ளாக்குகிறது. இதன் மீது முதல்வர் மென்மையான போக்கினை கையாண்டு வருகிறார். மேலும் அவரது இந்த இரட்டை பேச்சு, சாலை பாதுகாப்பு மற்றும் விதிகளை அமலாக்குவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது.  எனவே தங்கள் துறை மூலமாக தெளிவான வழிகாட்டுதல்களை அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் முதல்வரின் சட்டவிரோதமான உத்தரவுகளை பின்பற்றியதால், முன்னாள் டிஜிபி சுனில்குமார் கவுதமின் செயல்திறன் அறிக்கையில் என்னுடைய கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன்.  எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு சாலை பாதுகாப்பு விஷயத்தில் முதல்வரின் அரசியல் விளையாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் காக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

காங்கிரசார்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரி,  பிப். 15:  புதுவை கவர்னர் மாளிகை அருகே காங்கிரசார், போலீசார் இடையே  திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த முதல்வர்  நாராயணசாமி, அறவழியில் போராடுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.  புதுவையில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதல்வர்  மற்றும் அமைச்சர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று காங்கிரஸ் மட்டுமின்றி  திமுக, கம்யூனிஸ்ட், வி.சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி கவர்னர் மாளிகை முன்பு திரண்டனர்.  ஆனால் யாரும் கவர்னர் மாளிகை நுழைவு வாயில் அருகே வந்துவிட முடியாதபடி 4  புறமும் பேரிகார்டுகள் அமைத்து பலத்த தடுப்புவேலி போடப்பட்டிருந்தது.  ஒவ்வொரு தடுப்பு கட்டைகள் முன்பாக உள்ளூர் காவல்துறையினர் மட்டுமின்றி துணை  ராணுவப் படையைச் சேர்ந்த 10, 15 பேர் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்வர், அமைச்சர்களை  சந்திக்க யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கட்சியின் முன்னணி நிர்வாகிகள்  சிலர் மட்டும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வேண்டுகோளை ஏற்று  அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் ராஜ்நிவாசை சுற்றியுள்ள  பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே தலைமை தபால் நிலையம்  வழியாக கவர்னர் மாளிகை வரும் சாலையில் திரண்ட 100க்கும் மேற்பட்ட  காங்கிரசார், தடுப்புக் கட்டைகளை மீறி கவர்னர் மாளிகைக்குள் நுழைய  முயன்றனர். இதை துணை ராணுவமும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால்  இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தகவல்  கிடைத்து அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்தியில் பேசினார்.  அப்போது காங்கிரஸ்- திமுக ஆட்சி இங்கு நடைபெறுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள்  அனைத்தும் நமக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எனவே இந்த தர்ணா போராட்டம்  மிகவும் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட பிரச்னைகள் எதையும் எழுப்பக்  கூடாது. நமது தலைவர்கள் நமக்கு எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்களோ?  அதன்படி காந்திய வழியில் போராடி வெற்றிபெற வேண்டும் என்று அறிவுரை  கூறிவிட்டு மீண்டும் அங்கு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.  இதற்கிடையே முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 2வது நாளாக தர்ணாவில்  ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரில் வந்த சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களுடன்  இருக்கையில் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். இப்பிரச்னையில் கவர்னர்  கிரண்பேடி தீர்வு காண அவருக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாக அவர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி

விழுப்புரம், பிப். 15: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்புரை வழங்கினார். இஎஸ்எஸ்கே கல்விக் குழுமத்தின் தலைவர் சாமிக்கண்ணு நோக்கவுரை வழங்கினார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அருணகுமாரி, சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பற்றி அறிமுகவுரை ஆற்றினார். பின்னர் மத்திய அமைச்சர் பேசும் போது, இந்தியாவின் எதிர்கால தூண்கள் இளம் தலைமுறையினர். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு சிறந்து விளங்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் முதலாக பெண்களுக்காக போராடியவர். பெண்கல்வி அவசியம். 55 ஆண்டுகளில் பெண் கல்வியை 4 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியால் கல்வி கற்றுள்ளனர் என கூறினார். இந்நிகழ்ச்சியில் லயன் ஆர்.சந்திரன், சரவணன், சண்முகம், ஜெயகுமார், ராமமூர்த்தி மற்றும் பல்வேறு தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்

காரைக்கால், பிப். 15:  மக்களுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி, காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, காரைக்கால் டாக்டர் அம்பேத்கர் வீதியில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம்  அமர்ந்து கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் முன்னாள் அமைச்சர் நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் கிரண்பேடி மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் ஆட்டிப் படைத்து வருகிறார். இதனை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். கிரண்பேடி வந்த நாள் முதல், குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் மக்களையும், மக்கள் நலத் திட்டங்களை பாழ்படுத்தி வருகிறார். இந்த போக்கு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், -திமுக கூட்டணி கவர்னரின் அதிராக போக்கை இனியும்  அனுமதிக்காது. காரைக்கால் காவல் நிலையங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. கவர்னருக்கு புதுச்சேரியில் வேலையில்லை என்றால், அவற்றில் போலீஸ் ஏட்டாக பதவி ஏற்று சிறப்பான பணியை செய்ய முன்வரவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு

திருபுவனை, பிப். 15: விழுப்புரம் மாவட்டம் சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாரிவள்ளல். இவரது மனைவி அம்சவள்ளி (26). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரிடம் கோபித்துக் கொண்டு திருபுவனை பிள்ளையார் கோயில் வீதியில் அம்சவள்ளி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பாரிவள்ளல் தனது குழந்தைகளை சின்னக்குப்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அம்சவள்ளி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம், தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சவள்ளி இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிஆர்டிசி டிரைவர் மீது சரமாரி தாக்குதல்

வில்லியனூர், பிப். 15: வில்லியனூர் அருகே சேந்தநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன் (44). இவர் பிஆர்டிசி பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். வில்லியனூர் எம்ஜிஆர் சிலை அருகே பேருந்து வந்தபோது, எதிரே சென்ற இருசக்கர வாகனத்தை வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தை வழிமறித்து ஏன் ஹாரன் அடித்தாய் என கேட்டு தேவநாதனை தாக்கியுள்ளனர். இதில் தேவநாதனுக்கு பல் உடைந்தது. இதை தடுக்க சென்ற கண்டக்டரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.இதுதொடர்பாக தேவநாதன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு கிருபாகரன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரண்பேடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் தர்ணா

புதுச்சேரி, பிப். 15: புதுவை கவர்னர் கிரண்பேடியின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று தர்ணா நடைபெற்றது. கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமச்சந்திரன், தமிழ்செல்வன், பிரபுராஜ், சீனுவாசன், சத்யா, கட்சியின் மூத்த உறுப்பினர் முருகன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு உடனடியாக வெளியேறக்கோரி கோஷமிட்டனர். மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாக கிரண்பேடி, புதுச்சேரியில் கவர்னராக செயல்பட்டு புதுச்சேரி வளர்ச்சியை முடக்கி விட்டதாக குற்றம் சாட்டினர். மாநில அரசின் ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர்.  அப்போது அங்கு வந்த சீனியர் எஸ்பி அபூர்வ குப்தா, போராட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னரை திரும்ப பெற அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி, பிப். 15: புதுச்சேரி சட்டமன்ற அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அளித்த பேட்டி: கடந்த 2 நாட்களாக முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஹெல்மெட் சம்பந்தமாகவும், பல்வேறு நிர்வாக ரீதியான செயல்பாடுகள் குறித்தும், கவர்னரின் செயலை கண்டித்தும் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் என்பது பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மலிவு விளம்பரத்துக்காக நடத்தப்படுகிறது.  இன்று புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் பயம் கலந்த பீதியுடன் நடக்கக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர துணை ராணுவம் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய கவர்னர் மற்றும் முதல்வரின் மலிவு விளம்பர அரசியல் போட்டிதான் காரணம். எனவே, மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவையும், கெட்டப் பெயரையும் ஏற்படுத்திய கவர்னரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

எம்விஐடி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி, பிப். 15: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனைத்து பொறியியல் துறை சார்பில் மிடிலென்ஸ்-2019 எனும் தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மலர்க்கண்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ, செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராமன் கருத்தரங்க அறிக்கை வாசித்தார்.தலைமை விருந்தினராக புதுவை மண்டல சிஐஐ தலைவர் மற்றும் லிப்ராக்ஸ் ரப்பர் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகுமார் கலந்து கொண்டு, தொழில்துறையில் தன்னியமாக்கல் தொழில்புரட்சி பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஆய்வு கட்டுரைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மின் மற்றும் மின்னணு துறை தலைவர் அருண்மொழி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சிவக்குமர் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 வாலிபர்கள் அதிரடி கைது

வில்லியனூர், பிப். 15: வில்லியனூர் அடுத்த கீழூர் பகுதியில் மங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் கோயில் அருகில் 3 பேர் பீர்பாட்டில் மற்றும் கத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கீழூர் பகுதியை சேர்ந்த கவுதமன், மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சூர்யா, சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், கவுதமனுக்கும் கீழூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருவதால், அவரை தாக்குவதற்காக கவுதமன் அடியாட்களை அழைத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி அவசர ஆலோசனை

புதுச்சேரி, பிப். 15:  புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் தற்போது வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் துணை ராணுவம் பாதுகாப்புடன் கிரண்பேடி சென்னை புறப்பட்டு சென்றார். இருந்தாலும் ஆட்சியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சுந்தரி நந்தா அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு போலீசார் துணை ராணுவத்துடன் இணைந்து நகர பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே ஹெல்மெட் மீதான கண்காணிப்பை புதுச்சேரி காவல்துறை நேற்று முற்றிலும் நிறுத்தியது. முக்கிய சிந்திப்புகளில் எந்த காவலரும் வண்டி நம்பர்களை குறிப்பெடுக்கும் பணியில் ஈடுபடவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் இப்பணியை தொடர முடியாத நிலையில் காவல்துறை இருப்பதாக கூறப்பட்டது.

புதுவையிலிருந்து சென்னைக்கு மது கடத்த முயற்சி நபர் கைது

காலாப்பட்டு, பிப். 15: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இங்கு இசிஆர் சாலை வழியாக தினமும் புதுவையிலிருந்து சென்னை செல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரின் பின்புறம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 22 மதுபாட்டில்கள் இருந்தன. போலீசார் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் அருகே வெங்களூர் பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் பாண்டியன் (39) என்பதும், புதுவையிலிருந்து சென்னைக்கு மது கடத்தி சென்று நண்பர்களுடன் குடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மரக்காணம் கலால்துறையில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கலால்துறை அதிகாரிகள் பண்டியன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு பேரணி

புதுச்சேரி, பிப். 14:  புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு மேலாண்மை குழு உறுப்பினர் சிவா எம்எல்ஏ., சங்க தலைவர் முத்து ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு-2019 வருகிற 16, 17ம் தேதிகளில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. முன்னதாக நாளை (15ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு ஏஎப்டி திடலில் இருந்து புறப்படும் மாநாட்டு பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். பேரணியில் தமிழர் நலன் சார்ந்த கலைக்குழுக்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் மாணவ, மாணவிகள் திருவள்ளுவர் படம் பொறித்த பனியன், முகமூடி அணிந்து பங்கேற்கின்றனர். இது உலக சாதனை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.  16ம் தேதி காலை 8.15 மணிக்கு மாநாட்டு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்து ெகாள்கின்றனர். முதல்வர் நாராயணசாமி தொடக்க உரையாற்றி, மாநாட்டு மலரை வெளியிடுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை நடத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுச்சேரி, பிப். 14:   இந்திய கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் காமராஜ்நகர் தொகுதியில் துரை.செல்வம் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் கீதநாதன் அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா, மூத்த தலைவர் விஸ்வநாதன், மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் அபிஷேகம், பொருளாளர் வ.சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும். இறக்குமதி மணலை அரசே நேரடியாக கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விநியோகம் செய்ய வேண்டும். வீட்டுவரியை குறைப்போம் என்ற முதல்வரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணிவதை சட்டத்தின் மூலம் நிர்பந்தப்படுத்த அமல்படுத்தக்கூடாது. ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவதற்கு புதுச்சேரியை சார்ந்த ஏழைகளுக்கான வருமான வரம்பை, ஜிப்மர் நிர்வாகம் உயர்த்த வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 69 சத இடஒதுக்கீடு மசோதாவை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆக்ரோஷமான தொண்டர்களை அமைதி படுத்திய முதல்வர்

புதுச்சேரி, பிப். 14:  முதல்வர் போராட்டம் அறிந்து கவர்னர் மாளிகை முன் குவிந்த தொண்டர்களை அமைதிப்படுத்திய முதல்வர், அகிம்சை வழியில் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கவர்னர்  மாளிகை உள்ளே நுழைய முடியாதபடி நான்கு பக்கமும் பேரிகார்டர்கள் போட்டு  தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். நேரம், செல்ல, செல்ல தொண்டர்கள், பொதுமக்கள்  ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டு வந்தனர். இதில் காங்கிரஸ்  தொண்டர்கள் இடைவிடாது கிரண்பேடியே வெளியேறு என கோஷமிட்டு வருகின்றனர். சிலர்  தடுப்பு கட்டைகளை தாண்டி உள்ளே குதித்து ஓட முயன்றனர். அப்போது  போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை  சீரியசாவதை உணர்ந்த போலீசார், முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு  சென்றனர். பின்னர் நாராயணசாமி அங்கு சென்று, அமைதியான வழியில் போராட்டம்  நடத்தி வருகிறோம். எனவே இது போன்று நடந்து கொள்ளக்கூடாது. நம்முடைய  கோரிக்கை வெற்றி பெறும் வரை அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்ய  வேண்டும். சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தினார். இதனை  தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியானார்கள்.பறை அடித்து சங்கு ஊதி போராட்டம்: கவர்னருக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு தொண்டர்கள் கொண்டு சென்றுள்ளனர்.அதன்படி  நேற்று மாலை காங்கிரஸ் தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் கவர்னரை கண்டித்து  பறை அடித்து, சங்கு ஊதி மணி அடித்து போராட்டம் நடத்தினர்.  கவர்னர் மாளிகையை சுற்றி அமைந்திருக்கும் சாலைகளில் சங்கு ஊதி, மணியடித்தபடி சுற்றி வருகின்றனர்.அராஜக  கவர்னரே, மக்களாட்சிக்கு எதிரானவரே வெளியே போவது எப்போது? என பாடல் பாடி  சங்கு ஊதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்ட களத்துக்கு வந்த சபாநாயகர்:இதற்கிடையே சபாநாயகர்  வைத்திலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை  நடத்தி சென்றார். போராட்டம் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கவர்னர் மாளிகை  அருகே விளக்கு, சேர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. அமைச்சர்கள் தங்கள் அன்றாட பணிகள் பாதிக்கப்படக்கூடாது  என்பதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு மாத சுயதொழில் பயிற்சி

புதுச்சேரி, பிப். 14: புதுச்சேரி குருமாம்பட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 19ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை புதுவை பகுதியை சேர்ந்த விவசாய சுயதொழில் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் அங்கக (இயற்கை வழி) வேளாண் மற்றும் நுண்பாசன தொழில் நுட்பவியலாளர் என்ற திறன் வளர்க்கும் தலைப்புகளிலான பயிற்சிகள், இந்திய விவசாய திறன் கழகத்தின் நிதியுதவியுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் 40 வயதிற்கு உட்பட்ட 20 நபர்கள் தேர்வு செய்து, தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதி அடிப்படையில், முன்னால் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புதுவை பகுதியை சேர்ந்தவர்கள் கீழ்க்கண்டவர்களிடம் தொடர்பு கொண்டு, வருகிற 18ம் தேதிக்குள் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் பெறலாம். பங்கு பெறும் பயிற்சியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இதில் அங்கக (இயற்கை வழி) வேளாண்மை பயிற்சிக்கு முனைவர் விஜயகுமார் (பூச்சியியல் நிபுணர் - கைபேசி: 9442525675), நுண்பாசன தொழில் நுட்பவியலாளர் பயிற்சிக்கு பொறியாளர் பாஸ்கரன் (பயிற்சி உதவியாளர் - கைபேசி: 9489052305) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

புதுச்சேரி,  பிப். 14:   புதுச்சேரியில் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார  வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடிக்க  வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 2வது நாளாக அவர்களின்  ஸ்டிரைக் நீடித்தது. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில்  வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தேங்காய்த்திட்டு  மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும், முகத்துவாரத்தின்  இருபுறங்களிலும் கருங்கற்களை கொட்டி நிரந்தர தீர்வு காண வேண்டும் என  வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

ஹெல்மெட் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

புதுச்சேரி, பிப். 14:  புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:  புதுச்சேரியில் தற்போது ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பொதுமக்களுக்கு  மனஉளைச்சலை அரசு ஏற்படுத்தி உள்ளது. முதல்வருக்கும், கவர்னருக்கும்  நடைபெறும் பனிப்போரில் பாதிக்கப்படுவது புதுச்சேரி மக்கள்தான் என்பதை உணர  வேண்டும்.பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் மக்களிடையே  திணிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தி செயல்படுத்தவோ கூடாது. மாநிலத்திற்கு  ெஹல்மெட் அவசியமில்லாத ஒரு திட்டம். இதனால் மக்களை பாதிக்கும் பல்வேறு  பிரச்சனைகள் தான் ஏற்படுமே அன்றி, தீர்வு ஏற்படாது.அனைத்தையும்  கருத்தில் கொண்டு கவர்னரும், முதல்வரும் மக்களுக்கு தேவையற்ற இந்த  திட்டத்தை திரும்பபெற வேண்டும். இந்த திட்டத்தை மக்களின் விருப்பத்திற்கு  ஏற்ப விட்டுவிட வேண்டும்.நாட்டிற்கும்  வீட்டிற்கும் தீமை அளிக்கக் கூடிய சீர்கெட்ட காதலர் தின கொண்டாட்ட  கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

புதுவை பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்

காலாப்பட்டு, பிப். 14:  புதுவை அரசு பொறியியல் கல்லூரியில்,  தனியார் ஐடி நிறுவனத்தில்  பணிபுரிவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரியும், பேராசிரியருமான இளஞ்செழியன்  வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனஞ்செழியன் தலைமை தாங்கி பேசுகையில்,  `இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐடி துறை மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இளம்  பொறியியல் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை முழு மனதோடு அளிக்க வேண்டும்.  இதுபோல் தொடர்ந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கல்லூரி  மாணவர்கள் அதிகமாக தேர்வாக வேண்டும்’ என்றார். சென்னை தனியார் ஐடி  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் கோபிநாத் கலந்து கொண்டு, 83  மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட  இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணை பெற்றவர்கள் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் பணியில் சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிடிடிசி ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

புதுச்சேரி, பிப். 14:  புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (பிடிடிசி) 290 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில் முறைகேடான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு, கவர்னருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் முறைகேடான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை சீரமைக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு போட்டிருந்தார். அதன்படி சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் நடந்த இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.தற்போது பதவி உயர்வை சீரமைக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை கண்டித்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதேநிலை நீடித்தால் மேலும் ஒரு உத்தரவை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். ஏற்கனவே முறைகேடாக பதவி உயர்வு பெற்று, அதில் கிடைத்த ஊதியத்தையும் திரும்பப்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தற்போது சுற்றுலா வளர்ச்சி கழகம் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப பதவிகளை உருவாக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். அதனை முறையாக செய்ய வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம், நிர்வாக சீர்திருத்த துறையின் பணி விதிகளை மீறி, இல்லாத பதவிகளை உருவாக்கியது தான். எனவே ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.