Pudukottai - Dinakaran

அரங்குளலிங்கம் நாயகி கோயிலில் விசாக தேர்திருவிழா

புதுக்கோட்டை, மே 19:  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் சோழர்காலத்து அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் வெள்ளி, அன்னம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் காலை, மாலை என இரு வேளைகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முதல் தேரில் அரங்குளலிங்கம், சுவாமி அம்பாளையும் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுகையில் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, மே 19: புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் செல்வராசு தலைமை வகித்தார். இதில் கேரம் போர்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் கைவினை பொருட்கள் தயாரிக்க கற்று கொடுக்கும் ஆசிரியர் சித்ரா மாணவ, மாணவிகளுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்தார். இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் நிலை நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுகையில் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்புதுக்கோட்டை, மே 19: புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் செல்வராசு தலைமை வகித்தார். இதில் கேரம் போர்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் கைவினை பொருட்கள் தயாரிக்க கற்று கொடுக்கும் ஆசிரியர் சித்ரா மாணவ, மாணவிகளுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்தார். இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் நிலை நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் மயிலை கொன்று விற்க முயன்றவர் கைது

புதுக்கோட்டை, மே19: புதுக்கோட்டையில் மயிலை கொன்று விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுளள கிராமப்புறங்களிலும், வனப்பகுதியிலும் மயில்கள் கோழிகள் போல ஹாயாக சுற்றித்திரிகின்றனர். தேசியப்பறவையான இவைகள் ஆற்றங்கரை, புதர்கள் நிறைந்த பகுதிகளில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனத்தை பெருக்கி வருகிறது. முருகப்பெருமானுக்கு உகந்த வாகனம் என்பதால் மயிலை யாரும் துன்புறுத்துவது கிடையாது. இந்நிலையில் புதுக்கோட்டை  மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின் பேரில் கீரனூர் வனச்சரக அலுவலர்  சங்கர் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  செம்பட்டூர் கன்மாய் அருகே இறந்த மயிலுடன் வந்தவரை பிடித்து வன அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுக்கோட்டை  ரெங்கம்மாள் சத்திரம் மணி மகன் கமல்ஹாசன் (35) என்பதும், இவர்  கண்ணி வைத்து 2 மயில்களை பிடித்து கொன்று, கால்களை வெட்டி அதன் தோகைகளை பிடுங்கு வான்கோழிபோல வைத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து மயிலை பறிமுதல் செய்து  கமலஹாசனை கைது செய்த வன அலுவலர்கள், கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

பொன்னமராவதி அருகே பூவாடைக்காரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி, மே 19: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பூவாடைக்காரி அம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடந்தது. வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு 310 பெண்கள் பங்குபெற்று விளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெயிலான் கரை பங்காளிகள் செய்திருந்தனர். இதில் ஆலவயல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

கண்ணிய குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

புதுக்கோட்டை, மே 19:  கண்ணிய குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர் மூர்த்தி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கண்ணிய குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நாக்கினை அறுக்க வேண்டும் என கூறினார். கருத்து சொல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. தேர்தல் பிரசாரத்தின் போது கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க அமைச்சர் உள்ளிட்ட அனைத்து குடிமகனுக்கும் உரிமை உள்ளது. எனவே அத்துமீறி பதவியினை துஷ்பிரயோகம் செய்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இலுப்பூர் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

இலுப்பூர், மே19:  இலுப்பூரில் உள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்  நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இலுப்பூரில் அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்ஸவ திருவிழா கடந்த 10 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா துவங்கிய நாள் முதல் தினமும் காலை மாலை இருவேளையும் சுவாமி பல்வேறு  வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில்  தேரோடும் திருவீதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் மற்றொரு நிகழ்சியான பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவத்தை முன்னி–்ட்டு  சீர் வரிசை கொண்டு வரப்பட்டு  கடந்த 16ம் தேதி திருக்கல்யாணம்  நடைபெற்றது. நேற்று முன் தினம் வேடுபறி நிகழச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் நேற்று காலை  நடைபெற்றது. பக்தர்கள்  கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரினை  தேரோடும் வீதிகளில் வடம் பிடித்து இழுத்து  வந்து பின்னர் தேர்நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று  காலை தீர்த்தவாரி மற்றும் மாலை கருட சேவையுடன் விழா நிறைவடைகிறது.

அன்னவாசலில் பஸ் மோதி 3 பேர் படுகாயம்

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறைக்கு ஒரு தனியார் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை இலுப்பூரை சேர்ந்த சையது முகமது (27) ஓட்டினார். பஸ் அன்னவாசல் காவல் நிலையம் அருகே சென்றபோது சாலையோரத்தில் நடந்து சென்ற 3 பேர் மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் பேருந்தை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு  ஓட்டுநனரும், நடத்துனரும் போலீசில் தஞ்சமடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமுற்றவர்களை மீட்டு ஆம்புலன்சில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தடந்து சென்ற 3 பேரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (35), பாலகிருஷ்ணன் (55), சின்னத்துரை (42) ஆகியோர் என்பதும், அன்னவாசலுக்கு பெயின்டிங் வேலை செய்ய வந்ததாகவும், இரவு சாப்பிடுவதற்காக சாலையோரத்தில் நடந்து வந்தபோது விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் முதியவர் பலி:

விராலிமலை  தாலுகா காளப்பனூர் அரசகுடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்(65).  விவசாயி. இவர் நேற்று மாலை விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  சைக்கிளில் விராலிமலைக்கு சென்றார். விராலூர்  பிரிவு சாலை அருகே சென்ற போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி   சைக்கிள்மீது மோதியது. இதில் தங்கராஜ்  சம்பவ இடத்திலேயே  இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.                                       லாரி மோதி பெயிண்டர் பலி:புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன் (20). பெயிண்டரான இவர் நேற்று சொந்தவேலை காரணமாக மொபட்டில் புதுக்கோட்டைக்கு வந்து திரும்பி சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரத விதமாக லாரி மொபட் மீது மோதியது. இதில் பவித்ரன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் பவித்ரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி அருகே தந்தை, மகனுக்கு கம்பி அடி இருவருக்கு வலை வீச்சு

கறம்பக்குடி, மே17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலை கடி விடுதி கிராமம் நட்டுப்பட்டி  பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  வீரையா குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பத்தன்று  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்  வீரையா  மகன்கள்  விஸ்வநாதன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து கருணாநிதி மற்றும் அவரது மனைவி இருவரையும்  அவதூறாக பேசி  கம்பி மற்றும் உருட்டு  கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதி மகன் ஸ்டீபன்  கேட்டபோது, அவரையும் தாக்கி மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் விஸ்வநாதன், விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுகை நகராட்சி குப்பை கிடங்கில் தீ புகை மூட்டத்தால் மக்கள் அவதி

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். இருப்பினும் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. புதுக்கோட்டை  நகராட்சி பகுதி முழுவதும்  சேமிக்கும்  குப்பைகளை  இங்கு  கொட்டி வருவதால்  பெரும்  குப்பைமேடாக உள்ளது.இந்நிலையில் இந்த  நகராட்சி குப்பை கிடங்கில் மாலை மூன்று மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது காற்றின்  வேகம்  அதிகமாக இருந்ததால்  தீ  மளமளவென பரவி  பெரும் புகையை  கக்கியபடி  எரியத் தொடங்கியது. இந்த தீவிபத்து குறித்து அப்பகுதியினர் புதுக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தீ பரவியதால் மேலும் 3 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுமாவடியில் சேதமடைந்த மயான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மணமேல்குடி, மே 17:  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கட்டுமாவடி மீனவர் தெருவில் ராமநாதசுவாமி கோயில் அருகே மயானம் உள்ளது. இந்த மயானம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய்த் திட்டம் மூலமாக 2012-2013 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.  இந்த மயானத்தை கட்டுமாவடி, செம்பியன்மஹாதேவிப்பட்டினம், கணேசபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த மயானம் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இதன் சிமெண்ட் சாலை இருபுறமும் பெயர்ந்து மிகப்பெரிய பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே நடந்து செல்லும் மக்கள் கால் இடறி கீழே விழுந்து காயம் ஏற்படக் கூடிய சூழல் ஏற்படுகிறது. இதேபோல இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால் வழிதெரியாமல் பள்ளத்தில் இறங்குவதாலும், கருவேல முள் குத்துவதாலும் சிலருக்கு காயம் ஏற்படுகிறது. இந்த மயானம் ஆற்றின் கரையோரம் இருப்பதால் மழைக் காலங்களில் நீர்வரத்து இருந்துகொண்டே இருக்கும். இதனால் இந்த மோசமான சாலைகளில் நடக்க முடியாமலும், ஆற்றில் இறங்கி வர முடியாமலும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிமென்ட் சாலையை சரி செய்வது  தருவதுடன் இதனை சுற்றியுள்ள கருவேல மரங்களையும் அகற்றி, இரவு நேரங்களில் பாதுகாப்பாக வந்து செல்ல மின்விளக்கு வசதியையும் ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய கோரி விசி கட்சியினர் திடீர் சாலை மறியல் கறம்பக்குடி அருகே பரபரப்பு

கறம்பக்குடி, மே 17: கறம்பக்குடி அருகே ஆட்டியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். இவர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விசி துணைச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எம்பி தொகுதி தேர்தல் பணி சம்பந்தமாக வேலைகளை முடித்துவிட்டு இரவு 8 மணியளவில் தனது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கறம்பக்குடி அருகே  வடக்கு புதுப்பட்டிகுளம் அருகில் மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு சென்றனர். படுகாயமடைந்த சந்திரபாண்டியனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இதுநாள் வரை குற்றவாளிகளை கண்டு பிடிக்காத காவல்துைறயை கண்டித்தும்,  தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி கறம்பக்குடி புதுப்பட்டி சாலையில் விசி கட்சியினர் திரண்டு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.  அவர்களிடம் ஆலங்குடி டிஎஸ்பி மோகன்தாஸ் மற்றும் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் கழனியப்பன்  ஆகியோர் தலைமையில் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் குற்றவாளிகளை  விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விராலிமலை அருகே 4 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

விராலிமலை, மே 17: விராலிமலை  அருகே நடைபெற இருந்த 4 குழந்தை திருமணத்தை  புதுக்கோட்டை மாவட்ட சையில்டு லையின் அமைப்பினர் மற்றும் சமூக நலத்துறையினர்  போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தினர். விராலிமலை தாலுகா கோமங்கலம்  கிராமத்தை சேர்ந்த  ஒருவருக்கும், பெருமாம்பட்டி  கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நடைபெற இருந்த திருமணத்தை  விராலிமலை வருவாய் துறையினர் மற்றும் சையில்டு லைன் அமைப்பினர் போலீசாரின்  உதவியோடு தடுத்து நிறுத்தினர். இதேபோல் விராலிமலை அடுத்த கல்குடி  ஊராட்சிக்குட்பட்ட கோவில்காட்டுபட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்,  திருச்சி மாவட்டம் தாயனூரை சேர்ந்த  என்ற 23 வயது  இளைஞருக்கும் தாயனூர் விநாயகர் கோயிலில் இன்று (மே, 17) திருமணம் நடைபெற  உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள்  மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு  சென்று உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருமணத்தை தடுத்து  நிறுத்தினர்.விராலிமலை அருகே உள்ள ராஜகிரியை சேர்ந்த 17 வயது  சிறுமிக்கும், அன்னவாசல் அடுத்த வயலோகத்தை சேர்ந்த 27 வயது  இளைஞருக்கும் இன்று (மே, 17) வயலோகத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.  தகவலின்பேரில் நேற்று முன்தினம் (புதன்) அங்கு சென்ற அலுவலர்கள் திருமணத்தை தடுத்து  நிறுத்தினர். அப்போது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையொட்டி போலிசாரின்  உதவியோடு அந்த சிறுமியை மீட்டு புதுக்கோட்டை குழந்தைகள் நலகாப்பகத்தில்  சேர்த்தனர்.  இதேபோல்  இலுப்பூர் அருகே உள்ள வௌ்ளாஞ்சார் பகுதியில்  உள்ள நேற்று 17 வயதுள்ள ஒரு சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமியின்  உறவினர் 24 வயது இளைஞருக்கும் நடைபெற  இருந்த திருமணம் தடுத்து  நிறுத்தப்பட்டது.

கறம்பக்குடி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது

கறம்பக்குடி, மே 17:  கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(32). இவர் கடந்த சில நாட்களாக மதுபானம் பதுக்கி விற்பனை செய்வதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி நெய்வேலி சாலை அருகே இளங்கோவன் மதுபானம் விற்பனை  செய்து கொண்டிருந்தார். இதையடுத்து கையும் களவுமாக அவரை கைது செய்த கறம்பக்குடி போலீசார், அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அரசு பள்ளிகளில் கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்

புதுக்கோட்டை, மே 17:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறை காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடக்கிறது. பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி ஆண்டு தொடக்கத்தில் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்கள் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் தற்போதே மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 மாணவர்கள் புதியதாக சேர்ந்து உள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என எங்களுக்கு கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே நான் மற்றும் என் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் விடுமுறை காலங்களில் பள்ளிக்கு வந்து குழந்தைகளின் பெற்றோர்களோடு சேர்ந்து மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினோம். தொடர்ந்து அரசு வழங்கும் விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினோம். எங்கள் பள்ளியின் சிறப்பு குறித்து துண்டு பிரசுங்கள் அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கி வந்தோம். இதன் பயனாக தற்போது வரை 11 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்றார்.

குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை நகராட்சி, ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைத்து பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து நேற்று ஆய்வு நடைபெற்றது.பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வினை கலெக்டர் உமாமகேஸ்வரி  பார்வையிட்டார். பின்னர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையிலும், சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலை பாதுகாப்புக்கென பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் செயல்பட உள்ளது. இந்நிலையில்  பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துதல், தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி, டயர், சீட், கண்ணாடி, பிரேக், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற 16 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பள்ளி வாகனங்களில்  புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி வட்டாரத்தில் உள்ள 70 பள்ளிகளை சேர்ந்த 303 பள்ளி வாகனங்களும், அறந்தாங்கி வட்டாரத்தில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த 176 பள்ளி வாகனங்களும், இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த 82 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 561 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக அனுமதியில்லாத வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து செல்லுதல், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அபாயகரமான நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  சட்டரீதியான கடும் நடவடிக்கையினை உடனுக்குடன் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வாகனங்களை பள்ளி வாகனங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் வாகனங்கள் மூலம் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.  எனவே, அனைத்து பள்ளிகளிலும் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பள்ளி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்றார். இந்த ஆய்வின் போது எஸ்பி செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கார்த்திகேயன், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னையில் 21ம் தேதி நேர்முக தேர்வு

புதுக்கோட்டை, மே 16: முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். செனனையில் 21ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது. இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு  மைய விடுதி செயல்பட்டு வருகின்றன. இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கணையராக விளங்குவதற்கு 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றம் 8ம் வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான தேர்வு வரும் 21ம்  தேதி, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. சிறுவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டியும், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியிலும் தேர்வு நடக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும்  ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் 2019-2020ம் ஆண்டுக்குரிய விண்ணப்ப படிவங்களை www.sdat.tn.gov.in எனும்  இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப  வேண்டும். மேலும் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெறும்போது  நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் திருச்சி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

இலுப்பூர், மே 16: அன்னவாசலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பிடித்து திருச்சி சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். அன்னவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் அன்னவாசலில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன், அன்னவாசல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்தது.மேலும் விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள அடையமழவராயன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், 8 வகுப்பில் தேர்ச்சி பெறாததால் பள்ளிக்கு செல்லவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை பகுதியில் பைக் திருடிய வழக்கில் தண்டனை பெற்று செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்கு ஐடிஐ படித்ததும், பின்னர் அங்கிருந்து தப்பி வந்து அன்னவாசல் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்து திருச்சி சீர்திருத்த பள்ளியில்  அன்னவால் போலீசார் அடைத்தனர்.

தற்கொலை இறப்புகளை தவிர்க்க எலி பேஸ்ட் விற்பனை வரைமுறைப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை, மே 16: புதுக்கோடடை  மாவட்டத்தில் பல தற்கொலை இறப்புகளை தவிர்க்க எலி பேஸ்ட் விற்பனையை  வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில்  எலி தொல்லையை போக்க பலர் எலி பேஸ்ட் மருத்தை வாங்கி  பயன்படுத்துகின்றனர். இதனால் பல இடங்களில் எலி பேஸ்ட் விற்பனை அமோகமாக உள்ளது. இந்நிலையில் மணரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவோர் தற்கொலையில் ஈடுபட எலி பேஸ்ட்டை வாங்கி சாப்பிடுகின்றனர். இதுபோன்ற  தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. எலி பேஸ்ட் சாப்பிட்ட உடனே அதன் வீரியத்தை காண்பிக்காது  மூன்று நாட்கள் கழித்து அதன் ஆட்கொல்லி வேலையை வேகமாக ஆரம்பித்து விடுகிறது. இதனை மருத்துவத்தால் தடுக்க முடிவது கடினமாக மாறிவிடுகிறது. ஏலி  பேஸ்ட்டில் பல மோசமான வேதிபொருட்கள் சேர்க்கப்படுகிறது. தற்கொலை  செய்துகொள்பவர்கள் எவ்வளவு சாப்பிட்டார். அதில் எவ்வளவு வேதி பொருட்கள்  இருந்தது என்று தெரிந்துகொள்வதற்குள் இறப்பு நேர்ந்து விடுகிறது. இந்த பேஸ்ட்டின்  இறப்பு  அதிகமாகி நடுத்தர  மக்கள் பல குடும்பங்கள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கு எலி பேஸ்ட் விற்பனையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை  வைத்துள்ளனர். இதுகுறித்து  புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம்  கூறியதாவது: எலி பேஸ்ட் சாப்பிடும் நபர்கள் முதல் 3 நாட்கள் நல்லா  இருப்பதுபோல் இருப்பார்கள். நான்காவது நாளில் இருந்து அதன் வேலையை  காண்பிக்க தொடங்கிவிடும். பூச்சி மருத்து சாப்பிட்டால் அவர்களுக்கு செயற்கை  சுவாசம் கொடுத்து அவர்களை காப்பற்ற முடியும். ஆனால் எலி பேஸ்ட்  சாப்பிட்டால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் ஈரலையும், சீறுநீரகத்தையும்  கடுமையாக தாக்கும். மேலும் மஞ்சல் காமாலை தாக்குதல் அதிகமாக இருக்கும்.  இதனால் எலி பேஸ்ட் சாப்பிடுபவர்களை பிழைக்க வைப்பது மிகவும் அரிது என்றார்.

திருமயத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகளுடன் தனிநபர் வாக்குவாதம்

திருமயம், மே 16: திருமயத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகளுடன் தனிநபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருமயத்தில் உள்ள பொன்னமராவதி விலக்கு சாலை அருகே இருந்த அரசு குடிநீர் கிணறு உட்பட சுற்றுப்புற இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை திருமயம் தாசில்தார் சுரேஸ் தலைமையில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதற்கு பிரச்னைக்குரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதன்பின்னர் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை கண்டறிந்து அளவீடு செய்து அளவை கல்லை அதிகாரிகள்  நட்டனர். பின்னர் திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.