Ramanathapuram - Dinakaran

முதுகுளத்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்

சாயல்குடி, பிப்.14:  முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கீழத்தூவல் முத்துராமலிங்கம் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரின் மறைவால் அந்த பொறுப்பு காலியாக இருந்தது. தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளராக கீழக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகத்தை திமுக தலைமை நியமித்துள்ளது. சண்முகம் இளைஞரணி அமைப்பாளர், ஊராட்சி செயலர், மாவட்ட பிரதிநிதி போன்ற பதவிகளை வகித்துள்ளார். இவருக்கு மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் காலமுறை ஊதியம் தொடர்பான அறிவிப்பு ஊர்ப்புற நூலகர்கள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம், பிப்.14:  பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் ஊர்ப்புற நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆயிரத்து 800 ஊர்ப்புற நூலக பணியிடம் உருவாக்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி விதிகள் உருவாக்கப்படாததால், இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாமல் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணி வரன்முறை, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித பலன்களும கிடைப்பதில்லை. காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் மனுக்கள் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊர்ப்புற நூலகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப்பணத்தை வைத்து எப்படி வாழ முடியும். போதிய ஊதியம் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். பணி ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணப்பலன், ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலனும் கிடையாது. இதுகுறித்து பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர்.

டூவீலர் விபத்தில் பெண் பலி

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் அருகே எட்டிவயல் அனுசியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கண்ணகி. கணவர் இறந்து விட்ட நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு கூலித்தொழிலாளி கோவிந்தன் டூவீலரில் லிப்ட் கேட்டு வந்துள்ளார். லாந்தை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டூவீலர் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் காயம் அடைந்த கண்ணகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த கண்ணகிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

விபத்து, குற்றங்களை தெரிவிக்க தொலைபேசி எண்ணுடன் விளம்பர போர்டுகள்

சாயல்குடி, பிப்.14: சாலை விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் குறித்த விளம்பர போர்டுகளை போலீசார் அமைத்தனர். நெடுஞ்சாலைகளில் நடக்கும் போக்குவரத்து குற்றங்கள், மற்றும் சாலை விபத்துகள் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற தொலைபேசி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அலைபேசி எண் நேரடி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு உடன் தெரிவிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் சாலை விபத்துகள் மற்றும் சாலை குற்றங்கள் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் குறித்த விளம்பர பலகைகளை எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா மாவட்டம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் பகுதி, விபத்து பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்க உத்திரவிட்டார். இதன்படி கடலாடி, சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் அந்தந்த காவல் எல்கை பகுதிகளில் போலீசார் விளம்பர பலகைகளை வைத்து வருகின்றனர். கடலாடியில் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையிலும், எஸ்.ஐகள் நாகராஜபிரபு, சரவணக்குமார் முன்னிலையிலும், முதுகுளத்தூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் பென்ஷாம், எஸ்.ஐ அமுதாவள்ளி, சாயல்குடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் எஸ்.ஐ காளிமுத்து முன்னிலையில் போலீசார் விளம்பர போர்டுகளை அமைத்தனர். வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.14:  கோட்டை கரை ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள கோட்டைகரை ஆற்றில் புல்லமடை வருவாய் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மாட்டுவண்டி தொழிலை நம்பி வாழ்ந்த ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. அனைவரும் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் புகார் அளித்தனர். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் புள்ளியியல் துறை அனுமதியோடு ஒவ்வொரு மாட்டு வண்டியும் அதற்கான அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை செலுத்தி விட்டு ஆற்று மணலை அள்ளி கொள்ளலாம் என்ற ஒரு சில நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. இதற்காக அனுமதியளித்துள்ள ஆற்றுப்பகுதியை தாசில்தார் தமீம்ராஜா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடங்களில் மணல் எடுப்பது, முறையான அனுமதி சீட்டுகளை பெறாமல் மணல் எடுப்பதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஏராளமான மாட்டு வண்டிகளை சிறைபிடித்து காவல் நிலையத்தில் உள்ளது. இந்த பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மணல் தட்டுப்பாட்டால் ஏராளமான கட்டிட பணிகள் முழுமையடையாமல் அரையும் குறையுமாக நிற்கிறது. ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது மாட்டு வண்டிகள் மூலமாக மணல் எடுப்பதற்கு அனுமதி அளித்ததற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் சார்பாக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது போல் டிராக்டர்கள் மூலமும் மணல் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்கினால், கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடன் மணல் கிடைப்பதுடன் அதிகமான தொகை செலவழிக்க கூடிய சூழல் வராது என்றும் கூறி வருகின்றனர். விதிமீறினால் நடவடிக்கை தாசில்தார் தமீம்ராஜா கூறுகையில், ‘‘மாட்டு வண்டிகளை வைத்து தொழில் செய்து வருபவர்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகம் கோட்டைகரை ஆற்றில் புல்லமடை குருப்பிற்கு உட்பட்ட குறிப்பிட்ட புலப்பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்ல அனுமதியளித்துள்ளனர். மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்பவர்கள் அனைவரும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை முதல் மதியம் 1 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி சீட்டை பெற்ற மாட்டு வண்டிகளில் மாலை 3 மணிக்குள் ஆற்றை விட்டு வெளியேறி விட வேண்டும். சட்ட திட்டங்களை மதிக்காமலும், அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு, வேறு எந்த இடத்திலாவது மணல் அள்ளினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பசுமை படையை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

ராமநாதபுரம், பிப்.14: ராமநாதபுரத்தில் மாவட்ட பசுமைப்படையின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வனச்சரகர் சதீஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். அனைத்துப் பள்ளிகளிலும் பசுமைத் தோட்டம் அமைக்க வேண்டும். ஒரு சில பூச்செடியை வைத்தால் மட்டும் தோட்டம் இல்லை. பள்ளியின் மாடிகளில் தோட்டம் அமைக்கலாம். பசுமை தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை சத்துணவு மையங்களில்  பயன்படுத்தலாம். மூலிகைச் செடிகளை வளர்த்தால் சுத்தமான மருத்துவ மணம் கொண்ட  காற்றை சுவாசிக்க முடியும். மாணவ,மாணவியரை பசுமையான இடங்களுக்கு அழைத்து சென்று மரம் செடிகள் பசுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என பேசினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.2.30 லட்சம் மோசடி புகார் பெண் மீது வழக்கு

மண்டபம், பிப்.14: ரூ.2.30 லட்சம் மோசடி புகாரில் கோர்ட் உத்தரவுபடி பெண் மீது, மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த சம்பத் மகள் பிரீத்தி. இவர் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் கடந்த 2016 ஜன. 20ம் தேதி ரூ.2.30 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நான்கு மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்ததாக தெரிகிறது. கால அவகாசம் முடிந்தும் கொடுத்த பணத்தை பழனிவாசகம் பலமுறை கேட்டும் தராமல் பிரீத்தி ஏமாற்றிய கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் பழனிவாசகம் சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்க வில்லை. இது தொடர்பாக ராமேஸ்வரம் ஜே.எம் கோர்ட்டில் பழனிவாசகம் வழங்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பிரீத்தி மீது மண்டபம் போலீசார் 420 பிரிவு படி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் கொசு தொல்லை

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் அரசு அலுவலர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் வளாக பகுதியில் அரசு குடியிருப்புகள் அமைந்துள்ளது. இதில் டி. பிளாக், சி பிளாக் போன்ற பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அரசு கடைநிலை ஊழியர்கள், அரசு வாகனங்கள் ஓட்டுனர்கள் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் பல இடங்களில் சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் அங்கு தங்கியுள்ளவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்குவதால் குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் தினந்தோறும் கொசுத் தொல்லையால் அப்பகுதி ஊழியர்கள் அவதிபட்டு வருகின்றனர். அப்பகுதி அரசு ஊழியர்கள் கூறுகையில், கலெக்டர் வளாக பகுதியில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. கழிவுநீர் செல்வதற்கான வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் உடைந்து விட்டது. அதனால் கழிவுநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தமிழ் பேச்சு போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்

தொண்டி, பிப்.14:  மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகளில் தமிழ் பேச்சு போட்டியில், நம்புதாளை அரசு பள்ளி மாணவி வட்டார அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மாவட்டம் அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியம், கதை, கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் திருவாடானை வட்டார அளவில் தமிழ் பேச்சு போட்டியில், நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி வைரஜேதி முதலிடம் பிடித்துள்ளார். இவர் வரும் 15ம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளார். இவரை பாராட்டி பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். ஆசிரியை வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் சேவியர், ரமேஷ் உட்பட பொதுமக்கள் பாராட்டினர்.

கானாட்டாங்குடி கிராமத்தினர் புகார் ஊர்காவல் படையில் சேர நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள ஆண்கள் 55, பெண்கள் 8 என 63 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்ப எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நாளை (15ம் தேதி) முதல் 21ம் தேதி வரை சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து 23, 24ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படையினர் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நல்ல உடற்தகுதி உடையவராகவும், பொதுத்தொண்டு, பொதுச்சேவையில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக  இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடற்தகுதி கொண்டவராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாதவர்களும் இருக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் மூலமாக 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ரூ.2,800 மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தை பாதுகாக்க மனு கொடுத்தும் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை

தொண்டி, பிப்.14: தொண்டி அருகே கானாட்டாங்குடி கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால், கால்நடைகள் இறங்கி விடுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் அதிகாரிகள் இக்குளத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அருகே கொட்டகுடி ஊராட்சி கானாட்டாங்குடி கிராமத்தில் கடந்த சில வருடங்களாக கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்னையை போக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரி தண்ணீரும் குடம் 15 ரூபாய்க்கு விற்பதாக தெரிகிறது. முற்றிலும் விவசாயிகள் மற்றும் நடுதர வர்க்கத்தினர் வசிக்கும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் இப்பகுதி மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள பொது குளத்தில் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்த தண்ணீரை சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவு செய்து தேக்கி வைத்துள்ளனர். இக்குளத்தில் தான் புதுப்பட்டினம், தோப்பு, சேனதிகோட்டை, கடுக்களுர் உள்ளிட்ட கிராம மக்களும் தினமும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.தற்போது இக்குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால் ஆடு, மாடு குளத்தில் இறங்கி நாசம் செய்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தாலுகா மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் தண்ணீர் குறையை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், குளத்தை சுற்றிலுமாவது வேலி அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கிராம தலைவர் அண்ணாமலை கூறியது, தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு இருந்த தண்ணீரை குடிப்பதற்கு சேமித்து வைத்துள்ளோம். தண்ணீருக்குத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பிற்காவது வேலி போட்டு தாருங்கள் என்று கலெக்டர் வரையிலும் மனு கொடுத்து விட்டோம் எவ்வித பயனும் இல்லை. மக்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்ட வில்லை. விரைவில் குளத்தை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

நோய் ஆபத்து உள்ளதால் டேங்கை திறந்து குடிநீர் எடுக்க கூடாது அதிகாரிகள் வேண்டுகோள்

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையால் காவிரி கூட்டு குடிநீர் டேங்கை திறந்து பொதுமக்கள் குடிநீர் சேகரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்க கடந்த 2007ல் ரூ.617 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கின. இதற்காக ராட்சத சிமெண்ட் குடிநீர் குழாய்கள் கிராம, நகர பகுதிகளில் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பல நகராட்சி, ஊராட்சிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பல இடங்களில் பொதுமக்களே குடிநீர் டேங்கை திறந்து குடிப்பதற்கும், துணி துவைக்கவும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் டேங்க் பகுதியிலேயே தண்ணீர் எடுத்து அதில் குளிக்கின்றனர். இதனால் குடிநீர் விரையமாவதோடு, தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. தற்போது வரை அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ராமநாதபுரம்-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் டேங்கை திறந்து அப்பகுதி பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் குடிநீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் டேங்கின் அருகே அலசி ஊற்றப்படும் குடிநீர் மீண்டும் டேங்கின் உள்ளே செல்கிறது. சுகாதாரமற்ற முறையில் உள்ள குடிநீரையே பிற இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் டேங்கை திறந்து குடிநீர் எடுப்பதை தடுத்து, உரிய முறையில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, பல இடங்களில் டேங்கை திறந்து பொதுமக்களே குடிநீர் எடுத்து வருகின்றனர். டேங்கின் அருகிலேயே குளிக்கவும் செய்வதால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பொதுமக்கள் இதுபோன்ற தவறான செயல்களை செயல்களை செய்ய கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினர்.

பரமக்குடி பகுதியில் கடன் தருவதாக ஏமாற்றும் போலி நிறுவனங்கள் அதிகரிப்பு

பரமக்குடி, பிப்.14: பரமக்குடி பகுதியில் போலியாக இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் லோன் கொடுப்பதாக கூறி பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் புதிது புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் தனிநபர், தொழில், தங்கநகை, தினசரி, மாதம், வார சீட்டுகள் எனற பெயரில் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களை குறிவைத்து பணம் பறித்து வருகின்றனர். பரமக்குடியில் கண்ட இடங்களில் பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களிலும், புதிய பெயர்களிலும் சிறிய கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பணம் கொடுப்பதும், கட்டவில்லை என்றால் சொத்துக்களையும், நகைகளையும் பறித்து வருகின்றனர்.இதுபோன்ற ஏமாற்றுபவர்களை நம்பி மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் கூட்டாக பணம் பெறுவதற்கு நிதி நிறுவனங்களுக்கு முன் கால் கடுக்க காத்து கிடக்கின்றனர். பணம் பெற்று குறைந்த காலத்தில் இருமடங்காக தருவதாக கூறி, மக்களை ஏமாற்றும் நோக்கில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல் இருக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மகளிர் மன்றங்களை சேர்ந்த பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் பல இடங்களில் நிதிநிறுவனங்களுக்கு முன் பெண்கள் பணத்திற்காக காத்திருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை கொடுத்து விட்டு வீடு,சொத்துக்களை எழுதி வாங்கி கொள்கின்றனர். பணத்தை குருகிய காலத்தில் இரண்டு மடங்காக தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பொற்றுகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. பணத்தை முதலீடு செய்வதற்கு முன் தீர விசாரிக்க வேண்டும். அரசு நிதி நிறுவனம் மற்றும் அரசு வங்கிகளில் முதலிடு செய்யவேண்டும்’’ என்றார்.

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் வறட்சியால் மிளகாய், மல்லி நிலக்கடலை விவசாயம் பாதிப்பு  உலர்களம் இன்றி விவசாயிகள் அவதி  பயிர்காப்பீடு வழங்கப்படுமா?

சாயல்குடி, பிப். 14:  முதுகுளத்தூர், கடலாடி தாலுகாவில் வறட்சியால் மிளகாய், மல்லி, நிலக்கடலை பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்காப்பீடு தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை, கம்பு, சோளம் போன்ற  தானியவகை பயிரிடப்படுகிறது. குறிப்பாக கடலாடி. முதுகுளத்தூர் தாலுகாவில் இதம்பாடல், கடுகுசந்தை, மேலச்செல்வனூர், தரைக்குடி, டி.எம், கோட்டை, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, கிடாத்திருக்கை, சித்திரங்குடி, மேலச்சிறுபோது, சவேரியார்பட்டணம், கீழத்தூவல், மகிண்டி, மீசல், பொசுக்குடி, கீரனூர், கீழக்கொடுமலூர், தட்டனேந்தல், சாம்பக்குளம் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் முக்கிய பயிராக மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் ஜூன், ஜூலை மாதங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இந்தாண்டு பருவமழை பொய்த்து போனது. ஆனால் காலம் கடந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மிளகாய், மல்லி, நிலக்கடலை போன்ற பயிர்களை காலம் கடந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிட துவங்கினர். களையை அகற்றுதல், பூச்சிக் கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர். இதனால் பயிர்கள் வளர துவங்கியது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததாலும், கண்மாய், குளங்களில் மழைதண்ணீர் தேங்காததாலும் பயிர்கள் வெயிலுக்கு கருக துவங்கியது. இதனால்  வட்டிக்கு பணம் வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவழித்து காய்காய்க்கும் தருவாயில் கருகி வரும் செடிகளை டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வந்தனர்.  இதனால் சில இடங்களில் மிளகாய், மல்லி மட்டும் ஓரளவிற்கு வந்தது. இதனை உலர்த்துவதற்கு கிராமங்களில் உலர்களம் இல்லாததால், விவசாயிகள் சுடுகாடு போன்ற காலியிடங்களில் காய வைக்கின்றனர், மண், குப்பை, தூசு போன்றவையால் மிளகாய் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். எனவே கிராமங்களில் மிளகாய் போன்ற தானியங்களை உலர்த்துவதற்கு  உலர்தளம் அமைக்க வேண்டும். கடும் வறட்சியிலும், விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்றப்பட்ட செடியின் மூலம் வந்த மிளகாய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக உள்ளது. எனவே அரசு போதிய விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் மிளகாய் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த மூன்று வருடங்களாக காப்பீடு தொகை செய்யப்பட்ட மிளகாய்க்கு காப்பீடு தொகை வழங்கவில்லை. அதனை விரைந்து வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவில் நெல் விவசாயத்திற்கு,  அடுத்தப்படியாக மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. போதிய மழையின்றி கடந்த 4 வருடங்களாக மிளகாய் விவசாயம் பொய்த்து போனது. கடந்தாண்டு 8ஆயிரத்து 218 ஹெக்டேரில்  பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்களுக்கு, சுமார் 10 ஆயிரத்து 444 விவசாயிகள், அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் ஏக்கருக்கு ரூ.960 முதல் ரூ.1010 வரை பிரிமீயம் செலுத்தினர். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாகியும், காப்பீடு தொகை வழங்கப்பட வில்லை. இந்நிலையில் இந்தாண்டு மிளகாய் பயிர்களுக்கு பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் வங்கிகளில் காப்பீடு தொகை கட்டினாலும் கூட, காப்பீடு தொகை வருமா என சந்தேகம் உள்ளது. எனவே கடந்தாண்டு காப்பீடு தொகையாவது மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும் கடலாடி தாலுகாவில் நிலக்கடலையும், மல்லியும், முதுகுளத்தூர் தாலுகாவில் மிளகாயும், மல்லியும் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டது, வறட்சியால் அப்பயிர்களும் பாதிக்கப்பட்டது. எனவே மிளகாய் போன்று நிலக்கடலை, மல்லிக்கும் பயிர்காப்பீடு செய்ய வழிவகை செய்யவேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாசில்தாரின் தங்கையை தாக்கிய 2 பேர் கைது

ராமநாதபுரம், பிப்.14:  முதுகுளத்தூர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் தெருவில் புதிதாக கட்டும் வீட்டிற்கு நுழைவு வாயில் நிலை வைக்கும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில் கலந்து கொள்ள கொடைக்கானலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவியும், ராஜேஸ்வரியின் தங்கையுமான முனீஸ்வரி (49) வந்துள்ளார். அப்போது வீடு கட்டும் இடப்பிரச்னையில் முன்விரோதம் ஏற்பட்டதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுப்பு மகன் மாரிஸ்வரன், அவரது  மனைவி சத்யா, உறவினர்கள் ஆர்.எஸ்.மடை செந்தில் (29),  ராமநாதபுரம் சிவன்கோவில் தெரு கார்த்திக் (30), செல்வநாதன் மனைவி காளீஸ்வரி ஆகியோர் முனீஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், ராமநாதபுரம் டவுன் போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செந்தில், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

ராமநாதபுரம்-பரமக்குடி சாலையில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்

ராமநாதபுரம், பிப்.13: ராமநாதபுரம்-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு கால்நடைகள் பலியாகி வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல், எட்டிவயல், சத்திரக்குடி, மஞ்சூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசு மாடுகள் ஆகியவை தனியாக கொட்டகை அமைத்து வியாபார ரீதியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. காலையில் அவைகளை வெளியில் விடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் பின்னர் அதைபற்றி கண்டுகொள்வதே கிடையாது. கால்நடைகளை வாங்குவதற்காக வியாபாரிகள் வரும் நேரங்களில் மட்டும் தங்களுடைய கால்நடைகளை தேடிப் பிடித்து விற்பனை செய்கின்றனர். பகல் நேரங்களில் வெளியில் விடப்படும் இந்த கால்நடைகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சமீப காலமாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து செய்திகள் வெளிவந்தும் கால்நடைகள் உரிமையாளர்கள் கண்டுகொள்ளாததால் சாலைகளில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை. சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் திரியும் கால்நடைகள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக வாகனங்களை வளைத்து ஒடித்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சமயங்களில் எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பெரிய வாகனங்கள் எந்த வழியாக வளையும் என்று வழிதெரியாமல் விபத்துக்களை சந்திக்கின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. சில சமயங்களில் வழியில்லாமல் கால்நடைகள்  மீது மோதி உயிர்பலியை ஏற்படுத்துகின்றனர். இதனால் பலமுறை தாங்கள் வளர்த்த கால்நடைகளை பொதுமக்கள் இழந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் ராமநாதபுரம், பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க கால்நடைகளின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடாமல் இருக்க வேண்டுமென்று வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்தனர். வாகன ஒட்டுநர் முத்துகுமார் கூறுகையில், கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். வாகன சத்தத்தை கேட்டு கால்நடைகள் சாலையின் குறுக்கே ஓடிவருவதால் வாகனங்களில் மோதி பலியாகின்றன. கால்நடைகளின் உரிமையாளர்கள்தான் கால்நடைகளை சாலைக்கு வரவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

திருவடி மிதியூரில் காட்சி பொருளாய் தண்ணீர் தொட்டி

திருவாடானை, பிப்.13: திருவாடானை அருகே திருவடி மிதியூரில் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 6 மாதங்களாக குடிதண்ணீர் வினியோகம் இல்லாமல் தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூர் ஊராட்சியை சேர்ந்த திருவடி மதியூரில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு திருவாடானையில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டி ஒன்று நிறுவப்பட்டு குடிநீர் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் நாள் மட்டும் இந்த தொட்டியில் தண்ணீரை நிரப்பி வினியோகம் செய்தனர். அதன் பிறகு ஒருநாள் கூட எங்கள் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வரவே இல்லை. இதுகுறித்து ஆதிதிராவிட குடியிருப்பு மக்கள் கூறுகையில், எங்கள் குடும்பங்களுக்கு என தனியாக தண்ணீர் தொட்டி நிறுவி தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரே ஒரு நாள் மட்டும் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு அதன்பிறகு அப்படியே போட்டு விட்டனர். இதனால் நாங்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பல மைல் தூரம் தலையில் குடங்களை சுமந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். எங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. பலமுறை இது பற்றி கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

ஊராட்சி சபைக்கூட்டம்

கமுதி, பிப்.13: கமுதி அருகே முதல்நாடு ஊராட்சியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அய்யனார், பொதுக்குழு செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். இக்கூட்டத்தின் மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை பகுதி விவசாயிகள் வலியுறுத்தல் கீழக்கரை அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

கீழக்கரை, பிப்.13: ரெகுநாதபுரம் சேதுநகர் ஒத்தக்கடையில் டூவீலரும், நெல் அறுக்கும் இயந்திரமும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியாகினார். கீழக்கரை அருகே ரெகுநாதபுரம் காரான் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(24). இவர் பெரியபட்டிணத்திற்கு நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றுள்ளார். சேதுநகர் ஒத்தக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே வந்த நெல் அறுக்கும் இயந்திரம் பொருத்திய வாகனத்தில் மோதினார். இதில் விக்னேஷ்வரன் தலை துண்டாகி பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்படுமா?

ராமநாதபுரம், பிப்.13: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு பயணிகள் வசதிக்காக போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டியுள்ளது. கூட்ட நேரங்களில் பஸ்ஸிற்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் பயணிகளின் நலன் கருதி விரைவில் இருக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பயணி லதா கூறுகையில், நகர பஸ்களுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்த சமயங்களில் ஒவ்வெடுக்கலாம் என்றால் குறைந்த அளவு இருக்கைகள் உள்ளதால், தினந்தோறும் சிரமப்படுகிறோம். நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.