Science - Dinakaran

பிக் ஆப்பிள்

நன்றி குங்குமம் முத்தாரம் *அறுவை  சிகிச்சைக்குப் பின் தையல் போடும் முறையை உருவாக்கியவர் மருத்துவர் ஆம்ப்ரூஸ் பாரே.*கடலுக்குள் பல தட்டையான உச்சியைக் கொண்ட கூம்பு வடிவ மலைகள் உள்ளன. இவை ‘கயாட்’ என்று அழைக்கப்படுகின்றன.*முதன்முதலில் தமிழில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரின் பெயர் பாரதி.*சீனர்கள்தான் முறையான நெல்சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.*கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்ஸ்.*ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.*பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியூயார்க்.*உலகிலுள்ள மொத்த விவசாயிகளில் 8 சதவீதத்தினர் பெண்கள்.*உலகிலேயே உப்புத்தன்மை குறைவாக உள்ள கடல் வட பசிபிக் கடல்.

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலையமைப்பு

இந்திய விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் ராஜகோபாலன் வாசுதேவன். கழிவு மேலாண்மையில் இவர் ஆற்றி வரும் பணி பிரசித்திபெற்றது. முக்கியமாக பிளாஸ்டிக் கழிவு களைப் பயன்படுத்தி சாலை அமைக்க முடியும் என்னும் ஆச்சர்யத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறார். இந்தச் சாலைகளுக்கு ஆகும் செலவு குறைவு. தவிர, பிளாஸ்டிக்  கழிவுகள் சாலையாக மாறுவதால் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கும் தடுக்கப்படுகிறது. இதுபோக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார். மட்டுமல்ல, கான்கிரீட் சாலைகள் உருவாவதற்கான நேரத்தைவிட பிளாஸ்டிக் சாலையை உருவாக்க நேரம் குறைவாகத்தான் தேவைப்படும். மழையால் பெரிதும் பாதிக்கப்படாது.  இந்தியா வின் கிராமப்புறங்களில் இவரின் பிளாஸ்டிக் சாலை முறையத்தான் பரவலாக கடைப்பிடித்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது.

விநோத மழை

நன்றி குங்குமம் முத்தாரம் 1939ம் ஆண்டு ஜூன் பதினேழாம்  நாள் ஈரானிய நகரமான டாப்ரெஜில் விநோத மழை பெய்தது. அது, தவளை மழை! நம்புங்கள்... வானிலிருந்து உயிருள்ள தவளைகள் தரையில் விழுந்து கொண்டிருந்தன. உலகமே வியந்த அந்த விநோத மழைக்குக் காரணம், ஒரு நீர்ப்பீச்சு (Water spout)!நீர்ப்பீச்சு உருவாக முக்கியக் காரணம், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். கூடவே, மிக விரைவான வானிலை மாற்றங்கள்! கடலின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாக்கப்பட்டால், அது விரைந்து மேலெழும்புகிறது. காற்று மேலெழும்பியவுடன், அந்த வெற்றிடத்தை நோக்கி கடல் நீர் எழும்பி வரும். கடல் நீர் உறிஞ்சப்படும்போது அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் என யாவும் நீருடன் மேல்நோக்கிப் பயணமாகின்றன. மேலே சென்ற கடல் நீர், காற்றுடன் பயணித்து சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாகப் பொழிகிறது. நீர்ப்பீச்சு மிகப் பெரிய ஏரிகளிலும் ஏற்படும். டாப்ரெஜ் நகர தவளை மழைக்குக் காரணம், அந் நகரை ஒட்டியுள்ள ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான். இதேபோன்ற ஒரு நீர்ப்பீச்சால் 1881ம் ஆண்டு இங்கிலாந்தி லுள்ள வொர்செஸ்டர் நகரில் ‘மீன் மழை’ பெய்தது. நல்லவேளை... திமிங்கலங்களை உறிஞ்சும் அளவுக்கு நீர்ப்பீச்சுக்கு சக்தியில்லை. அப்படி ஈர்த்தால் என்னவாகியிருக்கும்!தொகுப்பு: நெ.இராமன்

மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவர் கண்டுபிடிப்பு

பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.  பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் உள்ள செயிண்ட் பாவோ கிறிஸ்தவ தேவாலய சுவரினை இறந்து போன மனித எலும்புகளை  கொண்டு கட்டியுள்ளனர். இந்த சுவரினை பார்த்து வியந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த எலும்புகூடுகளை ஆராய்ச்சி செய்த போது அதற்கு சுமார் 500  வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர். செயிண்ட் பாவோவில் 942- ல் உள்ள செயிண்ட் பாப்டிஸ்டின் தேவாலயத்தை புதுபித்து செயிண்ட் பாவோ என்ற புதிய தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தேவாலயமானது 1566 ஆம் ஆண்டு சில காரணங்களால் இடிக்கபட்டுள்ளது. பின்னர் இடிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் முன் உள்ள கல்லறையில் புதிய தேவாலயம் ஒன்றை கட்ட முடிவெடுத்துள்ளனர். இதற்கென அந்த கல்லறையை முழுவதும் அகற்றி அங்கு புதைக்கப்பட்டுள்ள மனித எலும்புகளை கொண்டு புதிதாக உருவாக்கபட்ட தேவாலயத்தின் சுவரில் புதைத்து கட்டியுள்ளனர். மேலும் 17 ம் நூற்றாண்டு சுவரில் புதைக்கட்ட அந்த எலும்பின் வயதானது 200 ஆக இருக்கும் நிலையில் தற்போது 500 வயது இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கிறிஸ்தவ மத வழக்கபடி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றி வந்துள்ளனர். அதற்கென கிறிஸ்தவ தேவாலயத்தை சுற்றி இறந்தவர்களை புதைக்க கல்லறை அமைக்கபட்டிருக்கும். அங்கு அடுத்தடுத்து வரும் இறந்தவர்களின் உடல்களை புதைக்க இடம் இல்லாத நிலையில் கல்லறை முழுவதும் அகற்றபட்டு அங்கிருக்கும் மனித எலும்புகளை கொண்டு தேவாலய சுவர்கள் கட்டுவது பழங்கால கிறிஸ்தவ பழக்க வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் இந்த தேவாலய சுவரில் உள்ள எலும்புகளானது போரில் இறந்தவர்களின் உடல்களாக கூட இருக்கலாம் என கணித்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டுபிடிப்பு

சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் ((horned lark)) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபிரியாவின் வடகிழக்கிலுள்ள பெலாய கோராவில் அந்த பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது.. இதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் எனப்படும் ராட்சத யானை, கம்பளி காண்டாமிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

50 ஆண்டுகளில் முதன்முறையாக காட்டில் கண்டறியப்பட்ட வானவில் பாம்பு

அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா எனும் உயிர்க்கொல்லி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிஉலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் ஹூகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற ஒரு வகை வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. இது முதன்முதலாகக் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்த இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். கடந்த இரு தினங்களாக ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். முதல் நாள் 324 பேரும், மறு நாள் 323 பேரும் இந்தியா வந்தடைந்தனர்.சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாணவர்களுக்காக, ஹரியானா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா–்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தில்லியிலுள்ள சஃப்தா–்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லதுதானே. ​கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக் கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல்,உடல் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள்தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பதுதானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆகாயத்தாமரையின் தாயகம் தென் அமெரிக்கா!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டு அழியா தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் Water Hyacinth எனவும் அழைக்கின்றனர். இந்தத் தாவரம் வெப்பமண்டலமான தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. பிறகு அழகுக்காக வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது இலைகளுக்குக்கீழ் தன்னகத்தே கொண்டுள்ள  வெங்காயம் போன்ற அமைப்பினால் வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் தண்டுகளில் காற்று நிரப்பட்டிருப்பதால் மிதப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இதில் ஊதா நிறப் பூக்கள் பூக்கின்றன. இவையே இதன் கவர்ச்சிக்கும் உலகை ஆட்கொண்டதற்கும் காரணம்.தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் விக்டோரியா மகாராணி கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது கொண்டுவரப்பட்டு ஊக்ளி நதியில் விட்டதாகக் கூறப்படுகிறது. ஊக்ளி நதியானது லண்டனிலுள்ள தேம்ஸ் நதி போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள சில ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர்வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் காணாமல்  போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.

வாசனைத் திரவியம் தரும் ரோஜா இதழ்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிரோஜா அத்தர் எனப்படும் ரோஜா நறுமணப் பொருட்கள் ரோஜா பூவிதழ்களை கசக்கி வடிகட்டுவதனால் பெறப்படும் எளிதில் தீப்பற்றக்கூடியதான ரோஜா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றது. இம்முறை ஆரம்பத்தில் பாரசீகத்திலும் பல்கேரியாவிலுமே வளர்ச்சியடைந்தது. இவ்வாறு ரோஜா எண்ணெய் பெறப்படும்போது உண்டாகும் பக்க விளைபொருளே பன்னீர் ஆகும். இது வெறும் வாசனைத் திரவியமாக மட்டுமில்லாமல் உணவுப் பொருட்களை மணமூட்டவும், சில அழகுசாதன மற்றும் மருத்துவப் பொருட்களின் பகுதியாகவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சமய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.பண்டைக் காலம் தொட்டே ரோஜா அதன்  நறுமணம், மருத்துவப் பயன்பாடு காரணமாக விலைமதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே, பண்டைய கிரேக்கரும் ரோமானியரும் தங்களது கோதுமை வயல்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போன்றே பரந்து விரிந்த அரச ரோஜாத் தோட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினர். பன்னீர் ஏனைய நறுமணப் பொருட்களை விட மிகவும் வித்தியாசமான மணத்தைக் கொண்டது. இது ஈரானிய சமையலில், குறிப்பாக குலாப்ஜாமூன் போன்ற இனிப்புப் பண்டங்களிலும் தேநீர், உலர்ரொட்டி போன்றவற்றிலும்  பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பால், சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து பண்டுங் எனப்படும் ஒரு வகை பானம் தயாரிக்கப்படுகிறது.மேற்கு ஐரோப்பாவில் சில வகையான உயர்தரக் கேக்குகளைச் செய்வதற்குப் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வனிலா மணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் பரவும் வரையில் அமெரிக்க, ஐரோப்பிய உணவு உற்பத்தியாளர்கள் பன்னீரைக் கொண்டே தமது உணவுப் பொருட்களுக்கு நறுமணமூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவில் சிலரால் இயற்கையான நறுமணத்தைப் பெறுவதற்காக பன்னீரை முகத்தில் தெளித்துக் கொள்ளப்படுவதுமுண்டு. மேலும் இந்தியப் பலகாரங்களிலும் ஏனைய உணவுப் பொருட்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது. இந்தியத் திருமண வைபவங்களின்போது விருந்தினரை வரவேற்பதற்காகவும் பன்னீர் தெளிக்கப்படுகிறது.

சூறாவளியைத் தாங்கும் வீடு

நன்றி குங்குமம் முத்தாரம் கனடாவின் நோவா ஸ்காட்டியாவில் உள்ள ஒரு கிராமம். அங்கே உள்ள ஒரு வீடு தான் இப்போது ஹாட் டாக். அந்த வீட்டைத் தூரத்திலிருந்து பார்த்தால் மர வீட்டைப் போல காட்சிதருகிறது. ஆனால், அருகில் போய் பார்த்தால்தான் தெரிகிறது அது மர வீடு அல்ல; பிளாஸ்டிக் வீடு என்று. ஆம்;  6 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த வீட்டைக் கட்டியிருக்கின்றனர்.   இந்த வீட்டின் சுவர் 6 இன்ச் தடிமன் கொண்டது. அதே நேரத்தில் குறைவான எடையைக் கொண்டது. மழை, வெப்பம், சத்தம், குளிர் என்று எதுவும் நுழைய முடியாது. தவிர, 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூறாவளியைக் கூடத் தாங்கும் வல்லமை வாய்ந்தது இந்த வீடு. இது ஒரு சோதனை முயற்சி. இந்த வீட்டில் மனிதர்கள் தங்கி, அவர்கள் வாழ உகந்ததாக என்று பார்த்தபிறகு தான் இது விற்பனைக்கு வரும்.

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் பார்க்கப்பட்ட இருநிற மணல் ஆக்டோபஸ்

ஆஸ்திரேலியாவில் இருநிறம் கொண்ட மணல் ஆக்டோபஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் தென்பட்டது. ஆக்டோபஸ்கள் பொதுவாக பாறைகள் மற்றும் செடிகளுக்கு நடுவே மறைந்திருந்து வாழ்க்கை நடத்துபவை. அங்கிருந்தபடியே தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடியும், எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை ஆக்டோபஸ்கள். இதேபோல் மணலில் புதைந்து வேட்டையாடியும், தற்காத்துக் கொள்ளும் திறன்கொண்ட அரியவகை ஆக்டோபஸ்களும் ஆங்காங்கே தென்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் போர்ட் பிலிப் வளைகுடா பகுதியில் சில கடலடி ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அரியவகை இரு நிறம் கொண்ட ஆக்டோபசைக் கண்டனர். அவர்களைக் கண்டதும் ஆக்டோபசும் தனது எட்டுக் கரங்களால் மணலைக் குடைந்து உடலை மறைத்துக் கொண்டது.

விண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்! பூமிக்கு பாதிப்பு இருக்கிறதா?

விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூமியிலிருந்து சுமார் 58 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் அந்த குறுங்கோளை அதிநவீன தொலை நோக்கி மூலமே காணமுடியும் என்று நாசா கூறியுள்ளது. கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசையால் அவை ஒன்றோடொன்று மோதி அழிவுக்கு ஆளாகின்றன. ஆனால் பூமியிலிருந்து வெகு தொலைவில் அந்த குறுங்கோள் செல்வதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு

மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டனர். இந்த மீன்கள் இமாலய ஆறுகளில் உள்ள கோல்டன் மஷீர் வகை மீன்களுடனான பண்புகளை ஒத்திருந்தன. ஆனாலும் இவை தனி இனமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி மீன் இனங்களிலேயே தற்போது பார்க்கப்பட்ட மீன்கள்தான் மிகவும் பெரியவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நிலத்தடி மீன்களின் சராசரி அளவு எட்டரை சென்டி மீட்டர் வரை இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மேகாலயா மீன்கள் 30 சென்டி மீட்டர் வரை இருப்பதால் உலகிலேயே மிகவும் பெரிய நிலத்தடி மீன்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.

அமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின் தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்: சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தகவல்

தங்களது உளவு செயற்கைக்கோளை ரஷ்யாவின் 2 செயற்கைக்கோள் பின்தொடர்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க ராணுவ விண்வெளி படைப்பிரிவு தளபதி ஜான் ரெமான்ட் அளித்துள்ள பேட்டியில், கடந்த நவம்பர் மாதம் செலுத்தப்பட்ட உளவு செயற்கைக்கோளை 2 அமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின்தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தெரிவித்துள்ளார். ரஷ்ய செயற்கைக்கோள்களின் செயல்பாடு அசாதாரணமாகவும், இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவிடம் இருந்து தகவல்கள் வந்திருப்பதாகவும், அதை முழுவதும் படித்தபிறகு பதில் அளிக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி!

கின்னிக்கோழி (Guinea fowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையிலுள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் உட்பிரதேசத்துக்குரிய உயிரி. நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக உள்ளது. தலைக்கவசக் கின்னிக்கோழியிலிருந்து வளர்ப்பினமாக ஆக்கப்பட்டதுதான் வளர்ப்புக்கின்னிக்கோழி. இது மற்ற பிற விளையாட்டுப் பறவைகளான பெசன்ட்கள் (pheasants), வான்கோழிகள் மற்றும் கௌதாரிகளுடன் தொடர்புடையது. இது 25 முதல் 30 முட்டைகளை இடும். இதன் முட்டைகள் சிறிய, கறுப்பான மற்றும் மிகவும் தடித்த ஓடுடையதாக இருக்கும். பெண் கோழிகளுக்குத் தங்கள் கூட்டை மறைத்து வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. அடைகாக்கும் காலம் 26-28 நாட்கள் ஆகும். குஞ்சுகளுக்கு ஈரம் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் இவை ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவை. ஈரமான புற்களின் வழியே தாயைப் பின்தொடர்வதன் மூலம் குஞ்சுகள் இறந்துவிடலாம். முதல் இரண்டிலிருந்து ஆறு வார வளர்ச்சிக்குப் பிறகு, வளர்ப்புக் கோழிகளிலேயே ஒரு கடினமான வகையாக இவை உருவாகின்றன. கின்னிக்கோழிகளில் ஆண் பெண் வேறுபாடு அறிவது சேவல்களிலிருந்து பெண் கோழிகளை வேறுபடுத்துவதுபோல் அவ்வளவு எளிதல்ல. இவை பெரியவையாக வளரும்போது, ​​ஆண்களின் தலைக்கவசம் மற்றும் தாடி போன்ற சதையானது பெண்களைக் காட்டிலும் பெரியவையாக உள்ளன. பெண் கோழி மட்டுமே “பக்-விட்” அல்லது “பொட்-ரக்” என்ற இரண்டு வகைச் சத்தத்தை எழுப்புகின்றன. இதைத் தவிர ஆண் பெண் இரண்டும் பெரும்பாலும் தோற்றத்தில் ஒன்றாகவே உள்ளன. வளர்ப்புக் கோழியாக இவை உண்ணிகள் மற்றும் குளவிகள் போன்ற பல பூச்சிகளை உண்பதன் மூலம்  பூச்சி கட்டுப்படுத்திகளாக உள்ளன. இவை அரிதாகவே அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் இனங்களில் தலைக்கவசக் கின்னிக்கோழியின் “முத்து” அல்லது இயற்கையான வண்ணம் தவிர பல வண்ண வேறுபாடுகள் உடைய கின்னிக்கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. வெள்ளை, ஊதா, கரும்பலகை நிறம், சாக்லேட், வெளிர் ஊதா, பவள நீலம், வெண்கலம், காரீயம், பொன்னிறம் மற்றும் பல்வேறு வண்ணங்கள் இதில் அடங்கும்.

சூரியனின் மேற்பரப்பு

நன்றி குங்குமம் முத்தாரம் உலகளாவிய அறிவியல் பத்திரிகை களில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பு புகைப்படம் தான் ஹாட் டாக். கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி வழியாக சூரியனின் மேற்பரப்பைப் புகைப்படமாக்கியவர் டேனியல்.ஹவாய் தீவிலுள்ள ஒரு எரிமலையின் உச்சியில் அமர்ந்துகொண்டு இதைச் சாதித்திருக்கிறார் டேனியல். இவ்வளவு ரெசல்யூசனுடன் யாரும் சூரியனை இதுவரை புகைப்படமாக்கவில்லை. இந்தப் புகைப்படம் வருங்காலத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான ஆய்வுகள் மேற்கொள்ள அடித்தளமாக இருக்கப்போகிறது.

விண்வெளி - 2020

நன்றி குங்குமம் முத்தாரம் கடந்த வருடம் விண்வெளியில்  பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 2020-ல் விண்வெளியில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.செவ்வாய் கிரகம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அருகருகே பூமியும் செவ்வாய்  கிரகமும் வரும். சாதாரண காலகட்டத்தை விட அப்போது  நெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஓடங்களை அனுப்ப நாடுகள் முயற்சிக்கும். இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு மூன்று பயணங்கள் இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா மார்ஸ் - 2020 என்ற ரோவரை அனுப்ப உள்ளது. இதில் ஒரு சிறிய ஹெலி காப்டரும் இருக்கும். இது ஜெசி ரோ என்ற எரிமலை வாயிலில் இறங்கும். இங்கே ஒரு காலத்தில் ஏரி இருந்தது. அதனால் அந்த ஏரி இருந்தபோதுஅங்கே ஜீவ ராசிகள் வாழ்ந்திருக்குமா? என்ற கோணத்தில் ஆய்வை நடத்தப்போகின்றனர்.  அடுத்து சீனா முதல் தடவையாக செவ்வாய் கிரகத்திற்கு ரோவரை அனுப்புகிறது. இதன் ஸ்பெஷல் என்ன வென்றால் இதனுடன் கூடுதலாக ஒரு ஆர்பிட்டரும் இருக்கும்.ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ரஷ்யாவுடன் இணைந்து ரோஸலிண்ட் ஃப்ராங்கிளின் என்ற ரோவரை அனுப்ப உள்ளது. ரோஸலிண்ட் ஃப்ராங்கிளின் என்பவர் ஒரு இங்கிலீஷ் கெமிஸ்ட். இவர் டி.என்.ஏ-வின் உடற்கூறு பற்றி ஆய்வு செய்தவர். இதுபோக ஐக்கிய அரபு நாடுகள் ஹோப் என்ற ஆர்பிட்டரை ஜப்பானிய ராக்கெட் மூலம் மேலே அனுப்புகிறது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால் மேலும் பல நாடுகள் இதுபோல விண்வெளி பயணத்துக்கு உற்சாகமாக களமிறங்கும்வால் நட்சத்திரம்கடந்த செப்டம்பரில்  சூரிய மண்டலத்தில் ஒரு வால் நட்சத்திரம் தென்பட்டது. இதனை பூமியில் உள்ள சுழலும் டெலஸ்கோப் மூலம் கண்காணிக்கத்துவங்கியுள்ளனர். இந்த வால் நட்சத்திரம், திரும்பவும் விண் மீன்களுக்கு இடையே பயணித்து விடுமா அல்லது சூரிய வெப்பம் அதனைத் தாக்கி விண்ணிலேயே வெடித்துச் சிதறுமா என்பது வருங்காலத்தில்தான் தெரிய வரும்.சந்திரன்கடந்த வருடம் சந்திரனில் இதுவரை யாருமே இறங்காத, மறைந்துள்ள பகுதிக்குச் சென்று உலகையே மிரளவைத்தது சீன ரோவர். இஸ்ரேலும் ஒரு  ஓடத்தை சந்திரனுக்கு அனுப்பியது. ஆனால், அது சந்திரனில் மோதி நாசமாகி விட்டது. இந்தியாவின் விக்ரம் இறங்கும்போது, தரைக்கு மிக அருகில் விழுந்துவிட்டது. 2020-ம் ஆண்டின் முடிவிற் குள் சீனா ‘Chang-5’ என்ற ரோபோ சோதனைக் கருவியைச் சந்திரனுக்கு அனுப்பப் போகிறது. சந்திரனில் தென் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை இது பூமிக்கு எடுத்துவந்து சோதனைக்கு உதவுமாம். கடைசியாக1976-ல் சோவியத் விண்கலம் ஒன்று சந்திரனிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்தது. இதுபோக உலகின் பெரு நிறுவன முதலாளிகளான ரிச்சர்ட் பிரான்ஸன், ஜெஃப் பெஸோஸ், எலன் மஸ்க் போன்றோர் எப்படியாவது இந்த வருடத்தின் இறுதிக்குள் மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துப் போவதில் மும்முரமாக உள்ளனர். இதற் கான சோதனை ஓட்டங்கள் துரிதகதியில் நடந்துவருகின்றன.

பாக்டீரியா தொற்றுக்களை கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்

விஞ்ஞானிகள் அதிநவீன் ஸ்மார்ட் பேண்டேஜ் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்த பேண்டேஜ் ஆனது ட்ராபிக் மின் விளக்குகள் போன்று வர்ணம் மாறக்கூடியதாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி பாக்டீரியா தொற்றுக்கு ஏற்றாற்போல் சரியான மருந்தினை வெளியேற்றக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த பேண்டேஜ் பச்சை நிறத்தில் காணப்படின் எந்தவிதமான பாக்டீரியா தொற்றும் இல்லை அல்லது மிகவும் குறைந்தளவு பாக்டீரியா தொற்று என்று அர்த்தம். அதேபோன்று மஞ்சள் நிறத்தில் காணப்படின் மருந்து வழங்கப்படவேண்டிய பாக்டீரியா தொற்று உள்ளது என்றும், இதற்காக ஆன்டிபயோட்டிக் வழங்கப்பட வேண்டும் எனவும் அர்த்தப்படும். சிவப்பு நிறத்தில் காணப்படின் வலிமையான பாக்டீரியா தொற்று உள்ளது எனவும் இதனை நீக்குவதற்கு மேலதிக மருத்துவ உதவி தேவை எனவும் அர்த்தப்படும். மேலும் இதனை E.coli வகை பாக்டீரியா தொற்று ஏற்பட்ட எலிகளில் வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்? கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்

ஆராய்ச்சியாளர்கள் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி உணவில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அறிந்துகொள்ள முடியும். உணவிற்கான மாதிரியை வழங்கி இரசாயனப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இச் சாதனம் செயற்படக்கூடியதாக இருக்கின்றது. அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இச் சாதனத்தினை உருவாக்கியுள்ளனர். இதனைப் பரீட்சிக்கும் போது குறைந்த வெளிச்சத்திலும் E.coli வகை பாக்டீரியாவை கண்டறிந்து வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள விரியலாக்கும் இலத்திரனியல் சுற்றானது லேப்டொப் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றிற்கு புளூடூத் மூலம் தரவுகளை வழங்கக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்!

எரிமலை குமுறும்போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பை லாவா என்பார்கள். இது எரிமலையின் துளையிலிருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஓடக்கூடியது. சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்திலிருந்து வெளிவருவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் தீப்பாறைகள், எரிமலைக் குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளிலிருந்து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளைக்கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. லாவா குழம்பின் வேதியியல் பண்புகளின்படி, மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, மிகுந்த பாகுத்தன்மை கொண்ட பெல்சீக் வகை (felsic), இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட வகை, குறைந்த பாகுத்தன்மை கொண்ட மாபிக் வகை (mafic) ஆகும். பெல்சீக் வகை லாவாவில், சிலிக்கா, அலுமினியம் பொட்டாசியம், சோடியம், கால்சியம், குவார்ட்சு ஆகிய வேதியியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. மிகுந்த பாகுத்தன்மை கொண்டதனால், இவ்வகை லாவா மிகக்குறைவான வேகத்தில் பாயும் தன்மையைப் பெற்றுள்ளது. மேலும், பெல்சீக் வகை லாவா, மற்ற லாவா வகைகளை விட குறைந்த வெப்பநிலையான 650 °C முதல் 750 °C வரையிலான வெப்பநிலையிலே அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகை லாவா பல கிலோமீட்டர் பாயும் ஆற்றல் கொண்டவை. இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட லாவாவின் வெப்பநிலை பெல்சீக் வகை லாவாவை விடக் கூடுதலாகவும்(சுமார் 750 முதல் 950 செல்சியஸ் வரை), பாயும் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது. இவ்வகை லாவாவில், அலுமினியம் மற்றும் சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாகவும், இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாகவும் காணப் படுகிறது. இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றினால், இக்குழம்பு கருஞ்சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. மூன்றாவது வகையான மாபிக் லாவாவின் வெப்பநிலை மிக உயர்ந்ததாகவும் (950 செல்சியஸ்), விரைவாக ஓடக்கூடியதாகவும் இருக்கும்.