Selam - Dinakaran

அதிமுக 47ம் ஆண்டு துவக்கம் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம், அக்.18: அதிமுக 47வது ஆண்டு துவக்கத்தையொட்டி சேலத்தில் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கினர்.அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ராஜகணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்பி, சக்திவேல் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் நடேசன், கூட்டுறவு தலைவர் கே.சி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி செயலாளர் ஜமுனாராணி, உமாராஜ், பாமாகண்ணன், பாலு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜை முடிந்ததும் சர்க்கரை பொங்கலும், லட்டும் வழங்கப்பட்டது.

சேலம் மாநகாில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

சேலம், அக்.18:  சேலத்தில், சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுப்ரீம் மொபைல்ஸ்-ன் 34வது புதிய கிளை, சேலம் புதிய பேருந்து நிலையில் மெயின்ரோடு, மெய்யனூரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஷோரூமை எல்ஜி மொபைல்ஸின் கோவை விநியோகஸ்தர் வஸ்திபால் மேத்தா திறந்து வைத்தார். வாரி ஷாப்பிங் மால் உரிமையாளர் தங்கவேல், ஆர்எஸ்எம் அருள்ஜோதி, டெவலப்மென்ட் ஆபீசர் சுரேஷ் மற்றும் மேலாளர் னிவாசன் முன்னிலை வகித்தனர். சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், பகவதிராஜா மற்றும் பாரதிசெல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். திறப்பு விழா சலுகையாக ₹2000க்கு மேல் மொபைல் அல்லது அக்சசரீஸ் வாங்குபவர்களுக்கு ₹1000 மதிப்பிலான கேமரா மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், டெக்னோ ட்வின் 145 மொபைல் வாங்கினால் சைக்கிள், எல்ஜி க்யூ மொபைல் வாங்கினால் ₹4000 மதிப்பிலான 4ஜி மொபைல் போன், 1000 மதிப்பிலான கேமரா மொபைல் வாங்கினால் ₹1000 மதிப்பிலான சவுபாக்யா குக்கர், எல்ஜி கீ மொபைல் வாங்கினால் கேமரா மொபைல், சோனி ஆர்ஐ பிளஸ் வாங்கினால் ஹெல்மெட், பானோசோனிக் ராய் 100 வாங்கினால் சவுபாக்யா தவா இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சுப்ரீம் மொபைல்சுக்கு வருகை தந்து, அப்ரூவ்டு லோன் லிமிட்-ஐ 2 நிமிடங்களில் தெரிந்து கொண்டு, விருப்பமான புதிய ஸ்மார்ட் போனை சுலப தவணையில் பெற்றுக்கொள்ளலாம் என மண்டல விற்பனை மேலாளர்கள் மகேந்திரன், சிவராஜ், பூபாலன், தனசேகர் மற்றும் ராஜசேகர் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களுக்கு எலைட் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் வாங்கும் மொபைல்களுக்கு அவர்களது கணக்கில் போனஸ் புள்ளிகள் ஏற்றப்பட்டு விரும்பும் பொருட்களை சுப்ரீம் ஆப்-ல் வாங்கிக் கொள்ளலாம் என மண்டல விற்பனை மேலாளர் சீனிவாசன், வினோத், தவ்பிக் தெரிவித்தனர்.சேலத்தில்

கலெக்டரை பார்க்க வந்ததாக கூறிய இளம்பெண் சேலத்தில் மீட்பு

சேலம், அக்.18: சேலம் நோக்கி வந்த ஐலேண்ட் ரயிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இளம்பெண் தனியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மீட்டு, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜேனட் ஷீபா (30) என்பது தெரியவந்தது. இது குறித்து சேலம் ரயில்ேவ போலீசார், ஜேனட்ஷீபாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லி, அவர்களை சேலத்திற்கு வரவழைத்தனர். நேற்று காலை 6 மணியளவில் ஜேனட்ஷீபாவை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஜேனட்ஷீபா சேலம் கலெக்டர் ரோகிணியை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.
4 கைதிகள் விடுதலைசேலம், அக்.18: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் சிறையில் இருந்து நேற்று 4 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 5ம் தோட்ட சிறையில் இருந்து 2 பேரும், மத்திய சிறையில் இருந்து 2 பேரும் விடுதலையாகினர்.

விதி மீறிய 5 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு

சேலம், அக்.18: சேலம் மாநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலை மற்றும் சலவை பட்டறைகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். களரம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி 3 சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2 பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ெவளியேற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, எருமாபாளையம் வனிதா என்பவருக்கு சொந்தமான ஜெயசக்தி ப்ராசஸ் யூனிட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எருமாபாளையம் செந்தில்குமார், களரம்பட்டி சுரேஷ், சீலநாயக்கன்பட்டி மணி, செவ்வாய்ப்பேட்டை வினோத்குமார் பட்டறைகளின், மின்சார இணைப்புகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.18: மத்திய, மாநில அரசை கண்டித்து சேலம் மாநகர, மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தலைமை தபால் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அபுதாகீர், சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தலைவர் வேலாயுதம் பேசினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களை சந்தித்து மனு வாங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இடைப்பாடியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிப்பு

இடைப்பாடி, அக்.18: இடைப்பாடி நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலகம், கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசை பஸ் நிலையம், அம்மா உணவகம் ஆகிய 4 இடங்களில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் முருகன்(பொ), முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் தலைமை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ராமன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் தங்கவேல், முருகன், ஜான்விக்டர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க நிர்வாகிகள், வணிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கைகளை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பூலாம்பட்டி பேரூராட்சி சார்பில் பஸ்நிலையம், பில்லுகுறிச்சி, கூடக்கல் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. பூலாம்பட்டி செயல் அலுவலர் சசிகலா தலைமை வகித்தார். பூலாம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் காளியண்ணன், ஐயப்ப சேவா சங்க  தலைவர் சித்தன், ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப், உழவர் மன்ற  அமைப்பாளர் நடேசன், பால் சொசைட்டி சங்க தலைவர் மணி முன்னிலை வகித்தனர். இதேபோல், தேவூர் அருகே மயிலம்பட்டி, புள்ளிக்கவுண்டம்பட்டி அரசு பள்ளியில் கை கழுவும் தினம், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. கொங்கணாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் குலோத்துங்கன் தலைமையில் கைகழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சபரிமலை கோயில் விவகாரம் சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தவர் அதிரடி கைது

சேலம், அக்.18: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சேலம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டி இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த திருமுருகன் (42). என்பவர் நேற்று காலை ‘சேவ் சபரிமலா’ என ஆங்கிலத்தில் எழுதிய தட்டியை கையில் ஏந்தியவாறு சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்திற்கு வந்தார். திடீரென அவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அங்கு வந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதா என கேட்டனர். அதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என கூறினார். இதையடுத்து அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது எனவும், இங்கிருந்து செல்லுமாறும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் மறுக்கவே, போலீசார் திருமுருகனை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கவல்லி, அக்.18: கெங்கவல்லியில், குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். குடிநீர் விநியோகத்துக்காக பேரூராட்சி சார்பில் 1834 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ₹70 ஆக இருந்த குடிநீர் கட்டணத்தை முறைப்படி அறிவிப்பு செய்யாமல் ₹150 ஆக உயர்த்தியுள்ளனர். இதனை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளர் அகிலன் தலைமை வகித்தார். காங்கிரஸ் பிரமுகர்கள் முகமது ஷெரீப், முருகானந்தம் முன்னிலை வகித்தனர். முருகவேள், ஷேக் மொய்தீன், வையாபுரி, தர்வேஸ், இளவரசு, வேல்முருகன், முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கெங்கவல்லி பேரூராட்சி சார்பில், எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து நேரில் கேட்கலாம் என பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றால், செயல் அலுவலர் சரியாக வருவது இல்லை. பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்,’ என்றனர்.

7 ஆண்டாக மனு கொடுத்தும் பலனில்லை ஓய்வூதியம் வழங்காமல் மூதாட்டிைய அலைக்கழிப்பு

சேலம், அக்.18:ஓய்வூதியம் வழங்காமல் 7 ஆண்டுகளாக அலைகழித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மூதாட்டி மனு அளித்துள்ளார். மேட்டுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பழனியம்மாள் (74). நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த இவர், அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பட்டி காலனி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் சமையலராக இருந்து, கடந்த 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். கடந்த 2009ம் ஆண்டு, சத்துணவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து எனக்கு ஓய்வூதியம் வழங்கும்படி அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தேன். பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 7 வருடமாக இதற்காக அலைந்து வருகிறேன். ஓய்வூதியம் வழங்க கலெக்டர் மற்றும் அவரது நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் அறிவுறுத்தியும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்சேலம், அக்.18: சேலத்தில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துைற அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில், மாநில பிரச்சாரக்குழு செயலாளர் சுகமதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். 500 ரேசன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் குமார், துணை செயலாளர்கள் ராஜீ, சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

இடைப்பாடி, அக்.18: இடைப்பாடி நகராட்சியில் 1வது வார்டுக்குட்பட்ட மோட்டூர் அச்சம்பட்டி ஏரியில், பொக்லைன் கொண்டு தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மண் அள்ளப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலர் அழகேசன் தலைமையில் திரண்ட 100க்கும் மேற்பட்டோர், ஏரியில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். மேலும், மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக மண்ணை தோண்டி எடுத்துச்செல்வதால், மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மண் அள்ளிச்செல்வதை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விதி மீறி மண் அள்ளினால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து, தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, முறைப்படி அனுமதி பெற்றே மண் அள்ளுவதாக தெரிவித்தனர். ஆனால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் அள்ளிச்செல்வது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கேசவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மோட்டூர் கிராம மக்கள் மற்றும் எஸ்.ஐ. வெங்கடாசலம், ஆர்ஐ பிரபு, விஏஓ சங்கிலிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஏரியில் மண் அள்ள கட்டுப்பாடு விதிக்கப்படும். ஏரியில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி, கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்படும் என தாசில்தார் கேசவன் தெரிவித்தார்.

மதுக்கடை திறக்க கடும் எதிர்ப்பு டாஸ்மாக் மேலாளர் வீட்டை முற்றுகையிட திட்டம்

மேட்டூர், அக்.18: மேட்டூரில் உள்ள ரயில் நிலையத்திற்கு இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மேட்டூரிலிருந்து சேலம் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரும், அலுவலகங்களுக்கு செல்வோரும் சீசன் டிக்கெட்டு எடுத்து மிகுந்த பயனடைந்து வந்தனர்.  இதையடுத்து, மேட்டூரிலிருந்து சென்னை செல்ல ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டன. இந்த ரயில் வசதி இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. குழந்தைகளுடன் சென்னை செல்வோரும், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரக்கூடிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக இருந்து வந்தது. இந்நிலையில், இப்பகுதியில் இருந்து இயக்க கூடிய பஸ்களில் வசூல் குறைந்ததால், பயணிகள் ரயிலை நிறுத்துவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சரியான நேரத்திற்கு வரும் பயணிகள் ரயிலை நேரம் மாற்றி இயக்கிட நடவடிக்கை எடுத்தனர். மேலும், சென்னை செல்லும் பயணிகள் ரயில் பெட்டியும் சேலத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது, பயணிகள் ரயிலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையத்தையொட்டி மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ரயில் நிலையத்திற்கு பயணிகள் செல்லும் பாதையில் கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் அச்சத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், ரயில் நிலையத்திற்கு வந்து பயணத்தை தவிர்க்கும் வேளையில் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், சேலம்-மேட்டூர் பயணிகள் ரயிலை நிறுத்தக்கூடிய கட்டாயம் ஏற்படும். எனவே, இப்பகுதியில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். கடும் எதிர்ப்பையும் மீறி திறந்ததால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.சமூக ஆர்வலரும், சேலம் மாவட்ட மக்கள் நலச்சங்க நிறுவனருமான பாரதி கூறுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயிலை நிறுத்த சில பேருந்து உரிமையாளர்கள் முயற்ச்சித்து வந்தனர். தற்போது, டாஸ்மாக் நிர்வாகமே அந்த வேலையை செய்கிறது. ரயில் நிலையம் செல்லும் பாதையில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்களை திரட்டி டாஸ்மாக் மேலாளர் வீட்டை முற்றுகையிடுவோம் என்றார்.

மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

சேலம், அக்.18:சேலம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்களை சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்தார். இதில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரகுநந்தனன், மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, நோய்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது. பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் செயல்படும் தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரைகள், டாமிப்புளு மற்றும் சுயபாதுகாப்பு சாதனங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பின், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், அதிக அளவு திரவ உணவை உட்கொள்ள வேண்டும். மேலும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் ரத்த கொதிப்பு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உடனடியாக சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க, தனியார் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைகால தொற்று நோய்களான டெங்கு, சிக்குன்குனியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில், அரசு மருத்துவமனை டீன் ராஜேந்திரன், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) சத்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, தொழுநோய் துணை இயக்குநர் குமுதா, மாநகர நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சேலம், அக்.17: கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் பெரியபுதூர் சத்யா நகரை சேர்ந்தவர் குமார் (45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவருக்கும் இடையே கோயில் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.  2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வெங்கடேஷ், குமாரை கத்தியால் குத்தி, கல்லால் தாக்கினார். இதில் குமாருடைய ஒரு கண் பார்வை பறிபோனது. இதுகுறித்து பேர்லாண்ட்ஸ் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், வாலிபர் வெங்கடேஷ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹ 3000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

பாங்க் ஆப் பரோடா சார்பில் நடந்த விவசாய கண்காட்சியில் ₹40 லட்சம் கடனுதவி

சேலம், அக்.17: சேலம் அருகே பாங்க் ஆப் பரோடா சார்பில் நடந்த விவசாய கண்காட்சியில், ₹40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. உலக உணவு தினத்தை முன்னிட்டு, பாங்க் ஆப் பரோடா சார்பில் விவசாய கண்காட்சி சேலத்தில் நடந்தது. அயோத்தியாபட்டணம் கஸ்தூரிபாய் மண்டபத்தில் நடந்த கண்காட்சிக்கு, பாங்க் ஆப் பரோடாவின் கோவை பிராந்திய துணை பொதுமேலாளர் தோமசன் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில், நபார்டு துணை பொதுமேலாளர் பாமா புவனேஸ்வரி கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். வேளாண் இடுபொருட்கள் விற்பனை, சொட்டுநீர் பாசனம், பட்டுக்கூடு வளர்ப்பு, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு, பசுமை நர்சரி, தோட்ட வேலி மற்றும் சேகோ யூனிட் சார்பில், 30 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டன. அயோத்தியாபட்டணம் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது, பாங்க் ஆப் பரோடா சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன், நகைக்கடன், வாகன கடன், வீட்டுக்கடன், கால்நடைக்கடன், உணவு மற்றும் தானிய உற்பத்தி கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய கடன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கண்காட்சியையொட்டி, 20 விவசாயிகளுக்கு ₹40 லட்சம் கடனுதவியும், சிறந்த விவசாயிகள் 10 பேருக்கு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்

சேலம், அக். 17: காதலனுடன் சேர்த்து வைக்க கோரி சேலம் டிஐஜி அலுவலகத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார். ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நேற்று சேலம் சரக டிஐஜி அலுவலத்திற்கு வந்தார். பின்னர், காதலனோடு சேர்த்து வைக்க வலியுறுத்தியும், பாதுகாப்பு கேட்டும் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பட்டதாரியான நானும், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் படித்து வரும் ஒருவரை, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதுகுறித்த அறிந்த பெற்றோர் என்னை உறவினருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால், காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தேன். என்னை வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, தாலியை கழற்றி வீசி விட்டு, அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன். எனவே, என்னை காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம், அக். 17:  தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வந்த லதா, அரியலூரில் பணியாற்றிய வந்த புஷ்பராணி ஆகியோர் சேலம் மாநகருக்கும், தூத்துக்குடியில் பணியாற்றி வந்த கணேஷ்குமார், சென்னையில் பணியாற்றி வந்த ரஞ்சித், அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த கோமதி, கடலூரில் பணியாற்றிய ஆரோக்கியஜான்சி, கோவை மாவட்டத்தில் பணியாற்றிய தனலட்சுமி, திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சந்திரலேகா, விழுப்புரம் மாவட்டம் கடும் குற்றப்பிரிவில் பணியாற்றிய மகாலட்சுமி, கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் பணியாற்றிய கவிதா ஆகியோர் மேற்கு மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு ரயில்வே பிரிவில் பணியாற்றிய சங்கீதா, தேனி மாவட்டத்தில் பணியாற்றிய ஆனந்த் ஆகியோர் கோவை மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி ராஜேந்திரன் பிறப்பித்தார். 

அன்னதானப்பட்டியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், அக்.17: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அன்னதானப்பட்டியில் இருக்கும் மேற்கு கோட்ட அலுவலகத்தில் இன்று (17ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் குறைகளை கேட்டறிகிறார். இதில், சேலம் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு, மின்சாரம் சம்பந்தமான தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் மௌலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டாத்துப்பட்டியில் அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் இணைந்தனர்

வாழப்பாடி. அக்.17: வாழப்பாடி அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் இனைந்தனர். வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைத்தலைவர் மாதேஸ்வரன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ராயப்பன் வெங்கட்ராசு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராஜன்முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி,முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் தங்கவேல், திமுக ஊராட்சி கழக செயலாளர் நாகராஜன், ஜம்பு, இன்ஜினியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுபான்மை இன மக்களின் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம்

சேலம், அக்.17: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிறுபான்மை இன மக்களின் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில ஆணையர் வள்ளலார் தலைமை வகித்து பேசினார். அப்போது, ஒரே மாதிரியான புதிய கொள்கை வழியில் மகளிர் சங்கங்கள் வளர்ச்சிக்கு புதிய விதிகளை வகுத்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாநிலம் முழுவதும் இயங்கி வரும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் நிர்வாகிகள் கமாலுதீன், ஹாஜியார் சையத் அஹமத் தெக்ரீப் ஜகான் முகமது வெய்ர், உமைபானு, அப்துல் காதர், அலாவூதீன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து ஆணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஐவிடிபி சுய உதவிக்குழு சார்பில் கேரள வெள்ள நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரியை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து, கிராமப்புற ஏழை எளிய மகளிரை பொருளாதார ரீதியில் உயர்வடைய செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 800 சுய உதவிக்குழுக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் உள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான கேரள மக்களின் துயர்துடைக்க ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தலா ₹50 வழங்க முன்வந்தனர். உறுப்பினர்கள் வழங்கிய தொகையுடன், ஐவிடிபி நிறுவனம் இணைந்து ஒரு கோடி ரூபாய் சேர்க்கப்பட்டது. அவ்வாறு சேர்த்த ஒரு கோடி ரூபாயை வங்கி வரைவோலையாக எடுத்து, கேரள மாநில தலைமை செயலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயிவிஜயனிடம், ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அம்மாநில முதல்வர், ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கேரள மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.