Sivagangai - Dinakaran

மாவட்ட கபடி போட்டி அரசுப் பள்ளி மாணவிகள் அசத்தல்

காரைக்குடி, அக்.18: தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தனர். நேற்று முன்தினம் தேவகோட்டையில் நடைபெற்ற தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான, கபடி போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இதில் ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராமன், உடற்கல்வி ஆசிரியர் முத்து மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை, அக்.18:சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், கல்வித்துறை, ஊராட்சி ஒன்றியங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் சார்பு நீதிபதி வடிவேலு தொடங்கி வைத்து பேசினார். நீதித்துறையின் சட்ட உதவி, அடிப்படை சட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு, மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள், குழந்தை திருமணம், பாலியல் ரீதியான தொந்தரவு, கல்வி இடைநிறுத்தம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, 1098 இலவச தொலைபேசி எண் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவழகன், மரியதெரசா மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சட்ட பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

காரைக்குடியில் மூதாட்டி கொலை வழக்கில் மாணவன் உட்பட 5 பேர் கைது

காரைக்குடி, அக்.18:  காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வயிரவன். இவரது மனைவி  இளஞ்சியம் (60). கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பாக வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் இளஞ்சியம் இறந்து கிடந்தார். இரவு பணியை முடித்து வீட்டுக்கு சென்ற வைரவன் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அழகப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கொலை செய்யப்பட்ட இளஞ்சியத்தின் நகைகள் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் வந்து ஆய்வு செய்தார். காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைத்தார். இவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`` இலுப்பகுடி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(52), இவரது மகள் பவித்ரா (19). இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பவித்ராவின் ஆடுகள் இளஞ்சியத்தின் வீட்டில் புகுந்ததாக தெரிகிறது. இதனால் அவரை இளஞ்சியம் அடித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பவித்ராவும், பள்ளியில் படிக்கும் அவரது 14 வயது தம்பியும் கிரிக்கெட் மட்டையால் இளஞ்சியத்தின் பின்னந்தலையில் ஓங்கி அடித்து உள்ளனர். அத்துடன் பவித்ரா அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த இளஞ்சியம் சரிந்து உள்ளார். இதுகுறித்து வீட்டில் உள்ள தனது அக்கா பாரதபிரியாவிடம் (23) நடந்தவற்றை கூறியுள்ளனர். பாரதப் பிரியா நேரில் வந்து சம்பவ இடத்தை பார்த்து விட்டு, தாய் பாண்டி மீனா( 40), தந்தை ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் பவித்ராவையும், சிறுவனையும் இரவே வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவை அனைத்தும் சிறுவன் மூலமாக தெரிய வந்துள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக பவித்ரா, பாரதிபிரியா, பாண்டிமீனா, சிறுவன், இவர்களுக்கு உதவிய அேத பகுதியைச் சேர்ந்த  சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த மூன்றே நாளில் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் தேவிகா, எஸ்.ஐ சுகன்யா, பழனி உட்பட சிறப்பு படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செயலாளர் மாற்றத்தை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திருப்புவனம், அக். 18:  திருப்புவனம் அருகே அச்சங்குளம் ஊராட்சி செயலரை மாற்றுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை நேற்று  முற்றுகையிட்டனர். திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது அச்சங்குளம் ஊராட்சி. இங்கு செயலாளராக சுமதி என்பவர் 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  செல்லப்பனேந்தல் ஊராட்சிக்கு  மாறுதல் செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அச்சங்குளத்திலேயே பணியாற்றி வருகிறார். இதனால் இவரை செல்லப்பனேந்தலில் பணியாற்றுமாறு ஒன்றிய அதிகாரிகள் வலுயுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சுமதி, அச்சங்குளத்தில் தான் பணியாற்ற வேண்டும். வேறு இடத்திற்கு மாறுதல் செய்யக்கூடாது என நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) ஜஹாங்கீர் கூறுகையில், `` திருப்புவனம் ஒன்றியத்தில் ஒரே இடத்தில் அதிக நாள் பணியாற்றும்  ஊராட்சி செயலர்கள் 10க்கு மேற்பட்டோர் கலெக்டர் உத்தரவின் பேரில் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான மாறுதல் தான். எனவே, சம்பந்தப்பட்ட கிராம மக்களின் கோரிக்கை மனு  கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்’’ என்றார்.

பவளப்பாறைகள் வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு

மண்டபம், அக்.18: மண்டபம் அருகே மன்னார் வளைகுடா தீவில் 16 ஆண்டுக்கு பிறகு பவளப்பாறைகள் வளர்ச்சி குறித்து மத்திய கடல் வள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இத்தீவில் பவளப்பாறை, டால்பின் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இத்தீவுகளை வனத்துறை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மன்னார் வளைகுடா கடலில் உள்ள முயல்தீவில் பவளப்பாறைகளின் வளர்ச்சி குறித்து மத்திய கடல் வள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மேலும் முயல்தீவு கடல் பகுதியில் செயற்கையாக பவளப்பாறைகள் வளர அடித்தளத்தை நிறுவினர். ஆய்வை வனஉயிரின காப்பாளர் அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தனர். மண்டபம் வனஉயிரின சரக அலுவலர் சதீஷ், வனச்சரக அலுவலர் ரகுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது போன்று வரும் காலங்களில் 21 தீவுப்பகுதிகளிலும் பவளப்பாறைகள் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

சிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள் விழா

திருப்புத்தூர், அக். 18: திருப்புத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளான நேற்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது.திருப்புத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊராகும். நேற்று அவரது நினைவு நாளையொட்டி கண்ணதாசன் இலக்கியப் பேரவையினர், கவிஞரின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து கண்ணதாசன் சிலைக்கு பேரவை பொதுச்செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு திருப்புத்தூர் அபிமன்யு, வழக்கறிஞர் கணேசன், ஊர் அம்பலக்காரர் வயிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குணாளன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், கவிஞரின் கவிதைகளை நினைவு கூர்ந்தார். மேலும் விழாவில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் பணிக்கு கைவிரல் ரேகை பதிவு

சிவகங்கை, அக்.18: சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் கை விரல் ரேகை பதிவு நடந்தது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்போர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 19 பெண்கள், 91 ஆண்கள் உள்பட 110 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கைவிரல் ரேகை பதிவு நடந்தது. மருத்துவ தகுதியில் தேர்ச்சி பெற்றவுடன் பணி வழங்கப்பட உள்ளது.

பெண் வங்கி ஊழியரிடம் 11 பவுன் செயின் பறிப்பு

திருப்புத்தூர், அக். 18:  திருப்புத்தூர் அகிழ்மனைத்தெருவைச்சேர்ந்தவர் வருண். இவர் காளையார்கோவில் பாண்டியன் கிராம வங்கயில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சிவசந்தியா(27) திருப்புத்தூர் பாண்டியன் கிராம வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சிவசந்தியாவுக்கு 3 நாட்கள் கூடுதல் பணியாக நெற்குப்பை பாண்டியன் கிராம வங்கிற்கு அனுப்பப்பட்டார். இதற்காக திருப்புத்தூரில் இருந்து சிவசந்தியா நேற்று காலையில் டூவீலரில் நெற்குப்பை வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை இரண்டு டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்தும், துணியால் முகத்தை மறைத்தும் வந்த 4 பேர் பின் தொடர்ந்து வந்தனர். திருக்களாப்பட்டி அருகே செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத போது, சிவசந்தியாவின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க தாலிச்செயினை பறித்து கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல்நிலையத்தில் சிவசந்தியா புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அழகப்பா பல்கலை. சாதனை இளைஞர் சங்க கலந்தாய்வு கூட்டம்

காரைக்குடி, அக்.18: காரைக்குடியில் பட்டாளி இளைஞர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வசந்தகுமார் வரவேற்றார். ராஜீவ் தலைமை வகித்தார். பிரவின் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆல்பர்ட்ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாநில துணை பொதுச்செயலாளர் திருஞானம், மாநில துணை அமைப்பு செயலாளர் கபிலன், இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் நன்றி கூறினார். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும். யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நட நிரந்தர தடை விதிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நினைவு மண்டபத்தில் கோட்டாட்சியர் ஆய்வு ‘கியு எஸ்’ பல்கலைக்கழக தரவரிசையில் தேசிய அளவில் 20வது இடம்

காரைக்குடி, அக்.18: ‘கியூ எஸ்’ இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில், அழகப்பா பல்கலைக்கழகம் 20வது இடம் பிடித்துள்ளது என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறுகையில், ‘‘பிரிட்டனில் உள்ள ‘கியூ எஸ்’ என்ற நிறுவனம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி வழங்கல், கட்டமைப்பு, ஆராய்ச்சி, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர் மாணவர் சதவிகிதம், வேலை வழங்கும் நிறுவனங்களின் நம்பிக்கை ஆகியவற்றை பொறுத்து ‘கியூஎஸ் ரேங்கிங்’ என்ற தரவரிசை வழங்கி வருகிறது. இந்த ‘கியூ எஸ் இந்தியன் யூனிவர்சிட்டி ரேங்கிங்-2019’ தரவரிசையில், இந்தியாவில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும், எஸ் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பல்கலைக்கழக தரவரிசையில் 104வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த 15ம் தேதி டெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் மற்றும் கியூ எஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜேசன் நியூமென் ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு ‘கியூ எஸ் தரவரிசை சான்றிதழ்’ வழங்கினார். இச்சான்று பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைக்கல். உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகத்தை கொண்டு வருவதே இலக்காகும்’’ என்றார்.

திருப்புத்தூரில் அக்.24ம் தேதி மருதுபாண்டியர்கள் 217 வது குருபூஜை

திருப்புத்தூர், அக். 18:  திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் அக்.24ம் தேதி நடைபெறவிருக்கும் குருபூஜைககாக நடைபெறும் பணிகளை கோட்டாட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார். வெள்ளையரை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்கு முதல் போர்ப்பிரகடனம் செய்து  இன்னுயிர் ஈந்தவர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள்.இவர்களுடன் சேர்த்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை வெள்ளையர்கள் திருப்புத்தூரில் 1801ம் ஆண்டு தூக்கிலிட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட 217ம் ஆண்டு நினைவு நாள் அக்.24ம் தேதி  அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும், திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவு ஸ்தூபியிலும், அரசு சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக மண்டபத்தை வண்ணம் தீட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்புத்தூரில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள கடைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கீதா, வட்டாட்சியர் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், விஏஓ மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

கூட்டுறவு சங்கத்தில் உரம் வாங்கலாம்

சிவகங்கை, அக்.18: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உரம் முந்தைய விலைக்கே விற்கப்படுவதால் வாங்கலாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் டான்பெட் மூலமாக விற்பனை செய்யப்படும் உரங்கள் முந்தையை விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த உரங்கள் டி.ஏ.பி ரூ.ஆயிரத்து 290க்கும், யூரியா ரூ.266.50க்கும், பொட்டாஷ் ரூ.950க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

திருப்புவனம்,அக்.18: திருப்புவனம் ரயில்வே பீடர் ரோடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த செப். 17ம் தேதி இரவு வீட்டில் பின்வாசல் கதவை திறந்தபடி வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.. அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போனை திருடிச் சென்றனர். இது தொடர்பாக திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சேது தலைமையில் குற்றப்பிரிவு எஸ்.ஐக்கள் நாகராஜ், பக்ருதீன், தலைமைக் காவலர் முத்துராஜன் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர்.  விசாரணையில் திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த மாயன் மகன் கருப்புச்சாமி (23) இவற்றை திருடியது விசாரணையில் தெரிந்தது. கருப்புச்சாமியை நேற்று கைது செய்து திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். அப்போது கழுகேர்கடையில் வீட்டுக்குள் புகுந்து திருடியதை கருப்புச்சாமி ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து  8 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து கருப்புச்சாமியை ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு கலெக்டர் ஆபீஸ் முன் மறியல் ரேஷன் ஊழியர்கள் 70 பேர் கைது

சிவகங்கை, அக். 16: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ரேசனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டலமுறை, ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகம் முன் திருப்பத்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மாயாண்டி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட பொருளாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தினகரன், மாநில இணைச் செயலாளர் மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 70 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர். மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கால்வாய்கள் சீரமைப்பால் 22 ஆண்டுக்குபின் தெப்பக்குளம் வந்த பெரியாறு நீர்

சிவகங்கை, அக்.18: சிவகங்கை தெப்பக்குளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு பெரியாறு நீர் ெகாண்டு வந்து தேக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகரின் மைய பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள தெப்பக்குளம் 300 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மக்களின் அன்றாட பயன்கள், கோவில் சடங்குகள், இறப்பு சடங்குள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது. குளத்தில் நீர் இருந்தால் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆழ்குழாய் அமைக்கும் போது நிலத்தடி நீர் பிரச்சனை இருக்காது. ஆனால் தெப்பக்குளத்திற்கான கால்வாய்கள் சிதைந்தது, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் கடந்த பல ஆண்டுகளாக குளத்தில் நீர் இல்லை. நீர் இல்லாமல் வறண்டு கிடந்த குளத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு நீர் நிரப்பப்பட்டது. அதன் பிறகு மீண்டும் நீர் இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் இருந்த சேறும் சகதியும் 2013ம் ஆண்டில் அகற்றப்பட்டது. இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் பராமரிப்பு பணி நடந்தது. ஆனால் கால்வாய்கள் பராமரிப்பு சரிவர இல்லாததால் சிவகங்கை நகரில் கூடுதல் மழை பெய்தும் குளத்தில் நீர் இல்லை. தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய மழை நீர் சேகரிப்பு பகுதியான காஞ்சிரங்கால் கிராமம், புதூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பகுதி முழுவதுமிருந்து மழை நீர் செட்டியூரணி வந்து அங்கிருந்து தெப்பக்குளம் செல்கிறது. தற்போது மழை நீர் செல்லும் பகுதிகளில் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு முழுமையான குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தாலும் வரத்து கால்வாய்கள் சரி வர இல்லாததால் தெப்பக்குளத்திற்கு நீர் வருவதில்லை. இந்நிலையில் பெரியாறு நீரை தெப்பக்குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குளத்திற்கான கால்வாய்களை கண்டறிந்து சீரமைக்கப்பட்டன. பெரியாறு நீர் நிரப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போது தெப்பக்குளத்தில் நீண்ட காலத்திற்கு பின் நீர் தேங்கியுள்ளது. இதனால் நகரின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ‘‘நீண்ட ஆண்டுகளுக்குப்பின் தெப்பக்குளத்திற்கு பெரியாறு நீர் திறந்துவிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குறைவான அளவே நீர் திறக்கப்பட்டுள்ளது. முழுமையாக திறந்து தெப்பக்குளத்தை நிரப்ப வேண்டும். தெப்பக்குளத்தில் நீர் இல்லாததால் நகரின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வந்தது. தற்போது சீரமைக்கப்பட்ட நீர் வரத்து கால்வாய்களை தொடர்ந்து பராமரித்து மழை நீரும் குளத்திற்கு வரும் வகையில் செய்ய வேண்டும்’’ என்றனர்.

யோகா போட்டியில் மாணவிகள் தங்கம்

காரைக்குடி, அக். 17:  மாநில அளவிலான யோக போட்டியில் காரைக்குடி அழகப்பா பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தங்க பதக்கம் பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தமிழ்நாடு யோக பெடரேஷன் சார்பில் தமிழ்நாடு யோகா விளையாட்டு சேம்பியன் ஷிப் போட்டிகள் நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜனனி, பிரியதர்ஷினி, வள்ளியம்மை, மோனாஜாஸ்மின், அட்சயா, தர்ஷினி ஆகியோர் முதல் 6 இடங்களை பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி செயலாளர் உமையாள்ராமனாதன், பள்ளி தாளாளர் ராமனாதன்வைரவன், தலைமைஆசிரியர் சுமதி உள்பட பலர் பாராட்டினர்.

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி மக்களை ‘மொட்டையடிக்கும்’ தனியார் நிதி நிறுவனங்கள் நாளுக்குநாள் குவியும் புகார்கள்

சிவகங்கை, அக்.17:  சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்திய நபர்கள் ஏமாறுவது அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளம் இல்லை. இதனால் பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் ஆங்காங்கே அதிகப்படியாக முளைத்து வருகின்றன. இதன் நம்பகத்தன்மை குறித்து அறியாமல் ஏராளமானோர் பணம் செலுத்தி பின்னர் ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது. தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மன்றத்தில் உள்ள உறுப்பினர்களை நிதி நிறுவனத்தில் முகவராக நியமனம் செய்கின்றனர். மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர் அடையாள அட்டை, ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெறுகின்றனர். மகளிர் குழுவினரும் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. இவ்வாறு பெற்ற விண்ணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனங்கள் நடத்தும் சிட் பண்ட், சிறு சேமிப்பு, ஏலச்சீட்டு உள்ளிட்டவற்றில் மகளிர் மன்ற உறுப்பினர்களை சேர்க்கின்றனர். மகளிர் மன்றத்தை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களே இதுபோல் செய்வதால் யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை. இவர்கள் மூலம் பொதுமக்களும் பணம் கட்டுகின்றனர். கூடுதல் வட்டி, தவணை முறையில் பணம் கட்டினால் இடம், மரம் வளர்த்து குறிப்பிட்ட ஆண்டுக்கு பின் மரத்தை விற்று பணம் பெறுவது என பல்வேறு விதங்களில் நிதி நிறுவனங்கள் பணம் வசூல் செய்கின்றனர். இந்நிலையில் கட்ட வேண்டிய கால கட்டம் முழுவதும் பணம் செலுத்திய பின்னர், பணம் குறித்து கேட்கும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. நிறுவன அலுவலகங்களுக்கு சென்றால் சில மாதம் பதில் தெரிவிப்பவர்கள் பின்னர் அலுவலத்தை காலி செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பணம் கொடுத்தவர்கள், வசூல் செய்து கொடுத்தவர்கள் இருவருமே கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவ்வாறு தொடர்ந்து பலகோடி ரூபாய் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில் புகார் அளிக்கின்றனர். தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். சில ஆண்டுகளாக இதுபோன்ற மோசடி புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுவரை பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், வசூல் செய்து கொடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு அதிகப்படியான கமிசன் தருவதாக கூறி அவர்களை வசூலில் ஈடுபடுத்துகின்றனர். கூடுதல் வட்டி மற்றும் இடம், பொருள் என அதிகப்படியான தொகைக்கு ஆசைப்பட்டு இதுபோல் பணம் கட்டி ஏமாறுகின்றனர். முன்பு தனியார் சீட்டு நடத்துகிறோம் என வசூல் செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. தற்போது மகளிர் மன்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோரை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால் அவர்கள் பணி எளிமையாகிறது. இதுகுறித்து மகளிர் மன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் மண் வாசனையுடன் உணவு திருவிழா

காரைக்குடி, அக்.17: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த உணவு திருவிழாவில் மாணவர்கள் சிறுதானியங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட வகையான உணவு பொருட்கள் செய்து கண்காட்சியாக வைத்திருந்தனர். காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவு தினத்தை முன்னிட்டு உணவு கண்காட்சி நடந்தது. இதில் மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் செய்யப்பட்ட சிறுதானிய உணவு பொருட்களை வைத்து அசத்தினர். நம் பராம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் செய்த புட்டு, களி, கட்லட், அடை, கூழ் போன்ற உணவு பொருட்களும், வெண்டிக்காய் அல்வா, வாழைப் பூ அடை என 100க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றது. தவிர அந்த உணவுகளில் அடங்கியுள்ள சத்துக்களையும், நன்மைகளையும் பார்வையாளர்களுக்கு விளக்கியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக நடந்த துவக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.  திருச்சி தனியார் ஓட்டல் இயக்குநர் பொன்னிளங்கோ, மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன், ஸ்ரீவித்யாகிரி பள்ளி தாளாளர் சுவாமிநாதன், மகரிஷி பள்ளி நிர்வாக இயக்குநர் அஜய்யுக்தேஷ், ரோட்டரி துணை ஆளுநர் முத்துக்குமார், ரோட்டரி பேர்ல் சங்கமம் பட்டய தலைவர் நாச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் கோமதிஜெயம் நன்றி கூறினார்.

தலித் மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை தேவை தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்

மானாமதுரை, அக். 17: மானாமதுரையில்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமூக நீதி மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக கந்தசாமி, செயலாளராக பொன்னுச்சாமி, பொருளாளர் தங்கராஜ் மற்றும் துணைத்தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநில துணைத்தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் பேசினர்.மாநாட்டில், ‘கச்சநத்தம் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால், தலித் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி பாதுகாப்பு, பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும். தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பாமல், இடியும் வீடுகளுக்கு மாற்றாக, புதிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். பூவந்தி, திருப்புவனம், நாகநாதபுரம், முனைவென்றி உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை நில அளவை செய்து தரவேண்டும். கொம்புக்கரனேந்தலில் பாழடைந்த தலீத் குடியிருப்பை மாற்றி, புது குடியிருப்பை உருவாக்க, ஆதிதிராவிட ஆணைய உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். தலித் மாணவர்களுக்கான கல்வித்தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மல்லல், அதிகரை, உஞ்சனை ஆகிய ஊர்களில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் செய்து தர வேண்டும்.2013 ஆக.15ல் பாப்பான்குளத்தில் இடித்து தள்ளப்பட்ட தலித் பொதுமக்களின் வீடுகளுக்கு, பதிலாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். கருசற்குளம் கிராமத்தில் தலித் மக்கள் சாமி கும்பிடும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. தீரமானங்களை விளக்கி மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இளையான்குடி பகுதியில் கால்வாய்கள் சீரமைப்பு மும்முரம்

இளையான்குடி, அக்.17:  இளையான்குடி ஒன்றியத்தில் வரத்து கால்வாய் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது. இளையான்குடி ஒன்றியத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாசன வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. அதனால் அண்மையில் பெய்த மழைக்கு தண்ணீரை தேக்கவும், நிலத்தில் உள்ள தண்ணீர் வடிப்பதற்கும் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர். விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. அதனால் இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பாசன வரத்துகால்வாய்களை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சுந்தனேந்தல், திருகள்ளி, நெடுங்குளம், இட்டிசேரி, அளவிடங்கான், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் தற்போது பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் ஆணையாளர் அழுகுமீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புத்துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.