Special - Dinakaran

எலி காய்ச்சல் எச்சரிக்கை

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, மனிதனுக்குப் பல வகையிலும் பிரச்னைகள்தான். ஒரு பக்கம் வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு, ஆடு, மாடு முதலான கால்நடைகள் உயிரிழப்பு என பொருளாதாரம் அடிப்படையில் இழப்பு உண்டாகி ஏராளமான சிக்கல்களால் அவதிப்படுவான். இன்னொரு பக்கம் கொசு, எலி போன்ற உயிரினங்களிடம் இருந்து தண்ணீர் மூலமாகப் பரவும் மலேரியா, டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் (Leptospirosis) ஆகிய உயிர்க்கொல்லி நோய்களால் தொல்லைக்கு ஆளாவான். இதில் சமீபகால அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது எலிக்காய்ச்சல். இதுபற்றி பொதுநல மருத்துவர் செல்வி விளக்குகிறார்.‘‘மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் நடக்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் லெப்டோஸ்பைரா எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் (Leptospirosis) வரும். எலிகளின் கழிவுகளான சிறுநீர், மலம் கலந்த தண்ணீரைச் சுகாதாரம் அற்ற நிலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துதல் நீரை கொதிக்க வைத்து, நன்றாக வடிகட்டி குடிக்காதது, எலிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து போதல் (தகுந்த காலணிகள் உபயோகிக்காமல் இருத்தல்; இதனால், நகக்கண் வழியாக அக்கழிவுகளில் உள்ள கிருமிகள் உடலினுள் செல்லுதல்) போன்றவை காரணமாக எலிக்காய்ச்சல் பெரும்பாலானோரைத் தாக்குகிறது.பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்கள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், எலிக்காய்ச்சல் பற்றி இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே, நோய்த்தடுப்பு முயற்சியில் அரசும், பொதுமக்களும் இன்னும் எச்சரிக்கையோடு இருப்பதே நம்மை எலிக்காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். இது எலி என்று மட்டும் அல்லாமல் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் கழிவுகளாலும் ஏற்படலாம். இதுபோன்ற பிராணிகளின் கழிவுகள் கலந்த தண்ணீரை சமையலுக்குப் பயன்படுத்துவது, குடிப்பது, உடலைச் சுத்தம் செய்வது போன்ற சூழல்களினால் இந்த நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, முகம் கழுவும்போதும் குளிக்கும்போதும் எலிக்காய்ச்சலை உருவாக்குகிற பாக்டீரியாக்கள் கண்களின் மூலமாக பரவிவிடுகின்றன. அதேபோல் சாலைகளில் தேங்கும் மழைநீர், கழிவுநீர் ஆகியவற்றில் நடந்து செல்லும்போது கை, கால்களில் உள்ள காயங்கள், பாதங்களின் அடிப்பகுதியில் உள்ள வெடிப்புகள் வழியாகவும் இந்த வகை கிருமிகள் பரவி எலி காய்ச்சலை உண்டாக்குகின்றன. எலிக்காய்ச்சலின் ஆரம்ப நிலையில் சாதாரண காய்ச்சலைப் போன்றுதான் தென்படும். தலைவலி, வாந்தி ஏற்படலாம். உடல் மற்றும் தசைப்பகுதிகளில் தாங்க முடியாத வலி தென்படும். எனவே, சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிடாமல், ரத்தப்பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அந்த பரிசோதனை முடிவில் எலிக்காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் கட்டமாக மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிட்டு வரலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசி அல்லது மாத்திரைகள் வழியாக, இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் எலிக்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தால் அந்த நபருக்கு நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்பு அடையக் கூடும். மேலும் ரத்தக்கசிவும் உண்டாகும். 10 சதவீதம் வரை மூளைக்காய்ச்சலும் வரலாம். எனவே, எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், சமயங்களில் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். எலிக்காய்ச்சல் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு அரிதாகவே பரவும். அதேவேளையில், தாய்மை அடைந்த பெண்களுக்கு எலி காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அவர் மூலமாக முதல் 3 மாதங்கள் வரை சிசுவுக்கு எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே, 10 நாட்களுக்கு ஆன்டி பயாடிக் மாத்திரைகளைக் கருவுற்ற பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டும்.எலிக்காய்ச்சலுக்கு தற்போது நம்மிடம் மருந்துகள் இல்லை. Supportive medicine-தான் இருக்கிறது. எனவே, நோயின் தீவிரம் என்பது சிகிச்சையை மீறி நடைபெறுகிறது. இதனால், மழைக்காலங்களில் வெளியே சென்று வந்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கை, கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும். குளிக்க வேண்டும். கழிவு நீரை வெளியேற்றுதல், அந்நீர் செல்லும் வழியில் உள்ள அடைப்பை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவோர், வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு சாதனங்களான மாஸ்க், கிளவுஸ், ஷூ அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் எலி காய்ச்சல் போன்ற உயிர்கொல்லி நோய்களின் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் பொது நல மருத்துவரான செல்வி.தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்து கொள்வதும், வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் எலிக் காய்ச்சலை  தவிர்க்க உதவும்.- விஜயகுமார்

முதியோர் நலன் காப்போம்!

‘‘மழை, பனி போன்ற குளிர்காலங்கள் முதியவர்களுக்குக் கொஞ்சம் சவாலானவை. இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்னைகளிலிருந்து ஏற்கெனவே இருக்கும் ஆஸ்துமா போன்ற வேறு உடல்நலக் கோளாறுகளும் தீவிரமாகும் காலம் இது. எனவே, உடல்நலனில் போதுமான அக்கறை செலுத்துவது அவசியம்’’ என்கிற முதியோர் நலன் மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் முதியோர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் பற்றி நினைவுபடுத்துகிறார்.* மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள், முதியவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான நோய்கள் தொற்றுமூலமாகத்தான் பரவுகின்றன. இவற்றில் வைரல் இன்ஃபெக்ஷன், நீர் வழியாக பரவும் தொற்று முக்கியமானவை. * மழை மற்றும் பனி காலங்களில் Adult vaccination போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் H1N1 இன்ஃபெக்ஷனைத் தடுக்க முடியும். இதன்மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சர்க்கரை அளவு இருப்பவர்கள் வாக்ஸின் போட்டுக் கொள்வது நல்லது. * ஈரப்பதம் அதிகமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் தொற்றுகளால் அதிகளவில் பாதிப்புக்கு ஆளானவர்கள். இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்தையும், தங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது அவசியம். குடிக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும். * வயோதிகக் காலத்தில் பலர் விடியற்காலையில் நடைப்பயிற்சி போவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மழை மற்றும் குளிர்காலத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை வாக்கிங் செல்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், மப்ளரால் காதுகளை நன்றாக மூடியும், உல்லன் ஸ்வெட்டர் அணிந்தும் செல்வது நல்லது.* மழை, குளிர்காலங்களில் நிறைய பசியெடுக்கும். அதற்காக, ஒரே நேரத்தில் தேவையைவிட, கூடுதலாக சாப்பிட்டுவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவ்வப்போது கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடலாம். தண்ணீர் அடிக்கடி குடிப்பதும் அதிக பசியைக் குறைக்கும்.* பொதுவாக, முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தொற்று மூலம் பரவக்கூடிய நோய்கள்(Communicable Diseases), தொற்றா நோய்கள்(Non Communicable Diseases) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தொற்றா நோய்களின் பாதிப்புகளால்தான் வயதானவர்கள் சமீபகாலமாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். * இன்ஃபெக்ஷன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளும், அதனால் ஏற்படுகிற விளைவுகளும் தொற்றுநோய்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயோதிகம் காரணமாக ஏற்படுகிற கை, கால் மூட்டுகளில் உண்டாகிற வலி, ஞாபக மறதி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தொற்றாநோய்கள் ஆகும். இவற்றின் தாக்கம் முதுமை பருவத்தில் அதிகமாக காணப்படும்.* 60 வயதைக் கடந்தவர்கள், ‘எனக்கு எந்த நோயும் இல்லை; இனியும் எந்த பாதிப்பும் வராது’ என்று நினைப்பதைவிட, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம் உங்களுடைய அடிப்படை உடல்தகுதி என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.     மேலும், மருத்துவருக்கும் உங்கள் உடல்நலனைப் பற்றி ஒரு தெளிவான பார்வை கிடைத்துவிடும். அதன்பின்னர், ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமாக நீங்கள் மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால், தகுந்த சிகிச்சை அளிக்க அவருக்கும் எளிதாக இருக்கும். * மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சுவையுணர்வு குறையத் தொடங்கும். இதை சரி செய்ய, தேநீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடிக்கலாம். உணவுக்கு முன்பு தக்காளி சூப் எடுத்துக் கொள்ளலாம்.   மேலும், புளிசாதம், எலுமிச்சை சாதம் சாப்பிட்டு வருவதும் பசியைத் தூண்டி சுவையுணர்வை அதிகரிக்கும்.* 3 மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புத் தேய்மானம் என ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகள் இருந்தால், அடிக்கடி மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.- விஜயகுமார்

இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்

மழை, பனி போன்ற குளிர்காலத்தில் கண்ட நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடத் தோன்றும். அப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இரண்டு உணவுகளைப் பற்றியும், அதன் செய்முறையையும் உணவியல் நிபுணரான வினிதா கிருஷ்ணன் இங்கே வழங்குகிறார்.முருங்கைக் கீரை சூப்தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை     - 100 கிராம்சின்ன வெங்காயம்     - 10 கிராம்கடுகு, சீரகம், தவிட்டு எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, உப்பு     - தேவையான அளவு.செய்முறை: 50 கிராம் முருங்கைக் கீரையை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு டம்ளர் அளவு கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, வெங்காயம், சீரகம் கறிவேப்பிலை, மஞ்சள் போட்டு தாளித்து 50 கிராம் முருங்கைக் கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் கொதித்த முருங்கைக் கீரை சாறினை அதில் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி அதில் தேவையான அளவு மிளகுப் பொடியை தூவினால் முருங்கைக்கீரை சூப் ரெடி. பயன்கள் முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து சாப்பிடும்போது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டி ஆக்ஸிடென்டாகவும் ஆன்டிபயாட்டிக்காகவும் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்திகரித்து ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்கிறது.ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறச் செய்கிறது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து மழை மற்றும் குளிருக்கேற்ற உணவாக இருக்கிறது. இது பெரியவர் சிறியவர் என அனைவரும் பருகலாம். உடலுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 சதவீதம் முருங்கைக் கீரையில் உள்ளது. ஹீமோகுளோபின் அளவு இதனால் பல மடங்கு அதிகரிக்கும். வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.பாலக்கீரை-பாகற்காய் பக்கோடாதேவையான பொருட்கள்: பாகற்காய்     - 50 கிராம்பாலக்கீரை     - 50 கிராம்கடலை மாவு     - 100 கிராம்அரிசி மாவு     - 50 கிராம்சின்ன வெங்காயம்     - 10 கிராம்நசுக்கப்பட்ட பூண்டு     - 10சோம்பு     - 5 கிராம்இஞ்சி     - 10 கிராம்சீரகம்     -  5 கிராம்எண்ணெய்     - தேவைக்குமஞ்சள் பொடி     - தேவையான அளவு.செய்முறை: பாலக்கீரையை தனித்தனியாக எடுத்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயையும் வட்ட வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவையும், அரிசி மாவையும் நன்றாக நீர்விட்டு வடை சுடும் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, நசுக்கப்பட்ட பூண்டு, மஞ்சள், சீரகம் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைய வேண்டும். சின்னதாக ரவுண்டு சேப்பில் வெட்டி வைத்து கொள்ள வேண்டும். இப்போது கடாயில் தவிட்டு எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, கடலைமாவில் பாலக்கீரையையும், பாகற்காயையும் ஒவ்வொன்றாக மாவில் நனைத்து போட வேண்டும். பொன்னிறமாக மாறும்போது அதை எடுத்துவிட வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரிக்கும்போது பாலக்கீரை, பாகற்காயின் கசப்பு, துவர்ப்பு சுவை நீங்கிவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.பாலக்கீரையில் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அடங்கியுள்ளன.இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் பாகற்காயில் ஏராளமாக நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.இதன் கசப்புச்சுவை உடலில் உள்ள நச்சுக்களை போக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மழைக்காலத்தில் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது!- க.இளஞ்சேரன்

குளிர்கால சருமப் பராமரிப்பு

குளிர் காலம் வந்தாலே பலருடைய சருமம் முழுவதும் வெள்ளை வெள்ளையாகப் பூத்துக் காணப்படும். மாயிச்சரைசர், எண்ணெய் உபயோகித்தும் பலன் இருக்காது. இதற்கு என்னதான் தீர்வு? சரும நல மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கவனிப்போம்…பொதுவாக சருமத்தின் PH அளவு 5.5 இருப்பதே சரியானது. அந்த அளவுக்குக் கீழே போனால் அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். இந்த அளவுக்கு மேலே போனாலோ காரத்தன்மை கொண்டதாகி விடும். எனவே, சருமத்தின் பி.ஹெச் அளவை சமமாக வைக்கிற பாடி வாஷ் பயன்படுத்தி குளியுங்கள். சோப்பிலும் PH அளவு எந்த நிலையில் இருக்கிறது என பார்த்து பயன்படுத்த வேண்டும். அமிலம் மற்றும் காரத்தன்மையின் அளவு  சருமத்தில் நடுநிலையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாயிச்சரைசிங் பொருட்கள் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவி வரவேண்டும். இதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலத்தில் ஷவரில் குளிப்பதையும், அதிக சூடான நீரில் குளிப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். ஷவரில் இருந்து  வேகமாக உடலில் அடிக்கும் நீரும், சூடான நீரும் சருமத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகளின் வேலையை தடை செய்துவிடும்.  இதனால் சருமம் எளிதில் உலர்ந்து போய்விடுவதால் வெள்ளை  திட்டுகள் ஏற்படுகின்றன. மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில்  குளிப்பது நல்லது. ஷவரில் குளிக்காமல் தண்ணீரை எடுத்து ஊற்றிக் குளிப்பது நலம் தரும். குளித்தவுடன் டவலை வைத்து  அழுத்தி சருமத்தை துடைக்கக் கூடாது. இதனாலும் சருமம் விரைவில் உலர்ந்துவிடும். பிளாஸ்டிக் நார் அல்லது சிந்தடிக் நார் கொண்டு தேய்த்து குளிக்கும்போது சருமத்தில் பிக்மென்ட்டேஷன் எனப்படுகிற மங்கு அதிகமாகி சருமம் கருப்பு நிறமாக மாறிவிட வாய்ப்பு அதிகம். எனவே, பாடி வாஷை கொண்டு கையால் தேய்த்து குளிப்பதே சிறந்தது. குளித்த பின் டவலை சருமத்தில் வைத்து மெதுவாக ஒற்றி எடுத்து மாயிச்சரைசிங் க்ரீம்களை  தடவிக்கொண்டால் நாள் முழுவதும் சருமம் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.- விஜய் மகேந்திரன்

மழைக்கால நோய்களை சமாளிப்பது எப்படி?

பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மக்கள் மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள் பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழல் உருவாகிறது. அப்போது ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வைரஸ் காய்ச்சல்மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளு காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளி தும்மும்போது, இருமும்போது, மூக்கைச் சிந்தும்போது சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலை குறைக்க பாரசிட்டமால்’ மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற தொல்லைகளைக் கட்டுப்படுத்த ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்’ பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பும் வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ உணவுகளையும், சுத்தமான குடிநீரையும் தரவேண்டியது முக்கியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரண தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும். இந்தக் காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. குழந்தைகள் முதன் முறையாக இதைப் போடும்போது ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இதைப் பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும்.நிமோனியா காய்ச்சல்நியூமோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெபெலோகாக்கஸ், மைக்கோபிளாஸ்மா போன்ற பாக்டீரியா கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது, நிமோனியா காய்ச்சல். இது பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகப் பாதிக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும். இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும். ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இதைக் கண்டறியலாம்.நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்கு சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனை செலுத்தியும் சிகிச்சை தரப்படும். நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்கத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.‘பிசிவி 13’ தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ‘முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும். 50 வயதைக் கடந்தவர்கள் ‘பிசிவி 13’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக் கொண்டு, ஒரு வருடம் கழித்து ‘பிபிஎஸ்வி 23’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக் கொள்ள வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்குப் பரப்புகின்றன.
நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தர வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரையும் தரலாம் அல்லது எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சலைன் ஏற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.சீதபேதிஅமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மை பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்கள், குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் வெளியாகும் இந்தக் கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடை நீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, வாந்தி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சையைப் பெறவேண்டும். மஞ்சள் காமாலைமாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் ஹெபடைடிஸ்-ஏ’ வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கும்போது மஞ்சள்காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி,  சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்த உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஆறு மாதம் கழித்து ஒரு முறை என இரண்டு முறை போட வேண்டும்.டைபாய்டு காய்ச்சல்சால்மோனெல்லா டைபை’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல் வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்று வலியுடன் உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் விரைவில் குணமாகும். கவனிக்கத் தவறினால், குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர் சுத்தம் இந்தக் காய்ச்சலைத் தடுக்க உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு வராது.கொசுக்களால் பரவும் நோய்கள் மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகுவதால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை ஏற்படுகின்றன. விட்டு விட்டு குளிர்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன்குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி. கொசுக்களை ஒழித்தால்தான் இந்த நோய்களைத் தடுக்க முடியும். அதுவரை வீட்டு ஜன்னல், படுக்கையைச் சுற்றி கொசுவலையைக் கட்டி சமாளிக்க வேண்டியதுதான்.- டாக்டர் கு.கணேசன்

TAKE CARE

இப்போதெல்லாம் மழை அல்லது குளிர் சீஸன் துவங்குவதற்கு முன்பே புதுப்புது வைரஸ் தொற்றுகள் புதுவித காய்ச்சல்களாய் மாறி அலறவிடுகின்றன. தொண்டைத் தொற்று, வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு அபாயங்களும் காத்திருக்கின்றன.குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இது போன்ற நோய்களின் தொற்றுக்கு எளிதில் ஆளாகிறார்கள்.இந்த மழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய சில எளிய மாற்றங்கள் உங்களுக்காக இங்கே...* தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பலரும் காய்ச்சல் தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுவதைப் பார்க்கிறோம். அதனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகளை முதலில் தடுக்க வேண்டும்.* தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் வழியாகத் தான் பலவித காய்ச்சல்களும் பரவுகின்றன. எனவே, உங்கள் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீர் இருப்பின் அகற்றி விடுங்கள். தண்ணீர் தேங்கும் உடைந்த பொருட்களையும் அப்புறப்படுத்துங்கள்.* பெரும்பாலான நோய்கள் மழைக்காலத்தில் தண்ணீரின் வழியாகவே பரவுகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம். சமைப்பதற்கும் சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.* மழைக்காலத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டில் கையில் இருக்கட்டும். சுகாதாரமற்ற தண்ணீரை வெளியில் குடிக்க நேர்ந்தால் கண்டிப்பாக நோய்த்தொற்றுக்கு வாய்ப்புண்டு.* சாலையோரக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளின் வழியாகவும் வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால், மேலும் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் இதுபோன்ற விஷயங்களை கவனித்து சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.* மழையில் நனைவதை அலட்சியமாக நினைக்காமல் மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வது அவசியம். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மழை கோட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். * நனைந்த ஈரத்துடன் அலுவலகம் செல்பவர்கள் மாலை வரை ஈர உடையிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்று உடையை பயன்படுத்தி இது போன்ற சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.* மழைக்காலமாக இருந்தாலும் போதிய நீர்ச்சத்து உடலுக்கு வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.* சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களை கழுவிப் பயன்படுத்துவதன் மூலமும் கிருமித்தொற்றைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் பிரச்னை ஏற்படலாம். குளிரால் இப்பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கக் கூடும். இந்நிலையைத் தவிர்க்க பாதங்களுக்குப் பயிற்சி அவசியம். காலையில் எழும்போதே படுக்கையில் இருந்தபடி பாதங்களை அசைத்து பயிற்சி செய்யலாம்.* மழையில் நனைந்து விட்டால் உடனடியாக ஈர உடையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக நேரம் வெளியில் பயணிப்பவர்கள் கூடுதலாக ஒரு உடையை கையில் வைத்துக் கொள்வதும் உதவியாக இருக்கும்.* காலையில் சமைத்த உணவை இரவு வரை வைத்திருந்து சாப்பிடுவது மற்றும் ஃபிரிட்ஜில் வைத்த உணவுகள் சாப்பிடுவதையும் இந்த காலத்தில் தவிர்க்கலாம். அந்தந்த வேளைக்கு ஃப்ரஷ்ஷாக சூடாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியம்.* வழக்கமாக நடைப்பயிற்சி செல்பவர்கள் கூட மழைக்காலத்தில் வெளியில் செல்லாததால் பயிற்சியைத் தவிர்ப்பதுண்டு. உடலையும் மனதையும் உற்சாகமாக வைப்பதில் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மழைக்கு இதமான வெப்பத்தையும் உடற்பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள்.* அதிக எடை, மெனோபாஸ் ஆகிய காரணங்களால் ஏற்கனவே மூட்டுகளில் பிரச்னை உள்ள பெண்களுக்கு மழைக்காலத்தில் வலி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வைரஸ் காய்ச்சல்களால் கை கால் வலி மற்றும் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் சரியான உணவு, மருத்துவ முறைகளை பின்பற்றி வலிகளைக் குறைக்கலாம்.தொகுப்பு: கே.கீதா

புதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர்

காம்பேக்ட் செடான் ரகத்தில் மிக குறைவான பட்ஜெட் கொண்ட மாடல் டாடா டிகோர். இந்நிலையில், காம்பேக்ட் செடான் ரகத்தில் முன்னணி மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்துவிட்ட நிலையில், டாடா டிகோர் காரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. புதிய டாடா டிகோர் காரின் உட்புறத்தில் சாம்பல் மற்றும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலி, ரிவர்ஸ் கேமரா மற்றும் வீடியோ பிளேபேக் வசதிகளை இந்த சாதனத்தின் மூலமாக பெற முடியும். புதிய டாடா டிகோர் கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும்,, 114 என்எம் டார்க் திறனையும், டீசல் இன்ஜின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே தேர்வுக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா டிகோர் கார் 5 பெட்ரோல் வேரியண்ட்டுகள் மற்றும் 4 டீசல் வேரியண்ட்டுகளில் என 9 வேரியண்ட்டுகளில் தேர்வுசெய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 6 விதமான வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய டாடா டிகோர் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.20 லட்சம் முதல் ரூ.6.65 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.09 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வரையிலான விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பெரிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நீல வண்ணத்திலும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இனி கிடைக்கும். கருப்பு வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியை அதிகரிக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் 154.8 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.4 பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ் அல்லது காம்பி பிரேக் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம். எனினும், வரும் 2019ம் ஆண்டு முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த டிசைனில் மாற்றம் இல்லை என்றாலும், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் வந்துள்ளது ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் அறிமுகம்

பண்டிகை காலத்தையொட்டி, பல புதிய கார் மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டி வருகின்றன. அந்த வகையில், புதிய மாற்றங்களுடன் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும், கோ ப்ளஸ் 7 சீட்டர் எம்பிவி ரக காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு கார்களிலும் புதிய 14 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் இந்த மாடலின் முக்கிய அம்சங்கள் ஆகும். புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டூயல் ஏர்பேக்குகள் ரியர் விண்டோ வைப்பர் போன்ற வசதிகளும் உள்ளன. இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். வெளிநாடுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த கார்கள் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் நிச்சயம் இந்த கார்களின் விற்பனைக்கு வலு சேர்க்கும் வாய்ப்புள்ளதால், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புதிய கார்களிலுமே ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன் பிரவுன் என்ற இரண்டு புதிய வண்ணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வண்ணங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று கருதலாம். புதிய டட்சன் கோ கார் ரூ.3.29 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் கார் ரூ.3.83 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மின்சார வேகன் ஆர் கார்களை களமிறக்கியது மாருதி

நாட்டின் கார் விற்பனையில் 50 சதவீத மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கும் மாருதி கார் நிறுவனம் ஓரிரு ஆண்டுகளில் தனது முதல் மின்சார கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. முதல் மாடலாக பேட்டரியில் இயங்கும் வேகன் ஆர் காரை மாருதி கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த மூவ் மாநாட்டில் பேசிய சுஸுகி கார்ப்பரேஷன் தலைவர் ஒசாமு சுஸுகி,” 2020ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதற்காக, 50 மின்சார வாகனங்களை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளோம்,” என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது 50 மின்சார வேகன் ஆர் கார்களை மாருதி கார் நிறுவனம் சாலை சோதனைகளுக்காக களமிறக்கி இருக்கிறது. குர்கானில் உள்ள ஆலையில் நடந்த நிகழ்ச்சியில், மாருதி கார் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு மூத்த அதிகாரி சி.வி.ராமன் இந்த 50 மின்சார கார்களையும் கள சோதனை ஓட்டத்திற்காக கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த 50 மின்சார கார்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இப்புதிய வேகன் ஆர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்த காரின் மின்சார மாடல் தற்போது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கார்களை ஜப்பானை சேர்ந்த சுஸுகி கார்ப்பரேஷன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கி இருக்கிறது. குர்கானில் உள்ள மாருதி கார் ஆலையில் இந்த 50 கார்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்

நீண்ட தாமதத்திற்கு பின்னர், புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக ஹோண்டா சிஆர்வி கார் டீசல் இன்ஜின் ஆப்ஷனிலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன்கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், சிறப்பான கையாளுமையை பெறுவதற்கான அஜில் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, தடத்தை காட்டும் கேமரா ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சஙகள் உள்ளன. இதன் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் ஐ-விடெக் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் டீசல் மாடலிலும் வந்துள்ளது. டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும், டீசல் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜ், டீசல் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜ் வழங்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. ஒயிட் ஆர்ச்சிட் பியர்ல், ரேடியண்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் வெளிவந்துள்ளது. பெட்ரோல் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.28.15 லட்சத்திலும், பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.30.65 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.32.75 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போலீஸ் சேனல்

வசூல் குவியுது... கேமராவை ஆப் பன்னு...கோவை சூலூர் மேற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது காமாட்சிபுரம் போலீஸ் செக்போஸ்ட். இது, சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் ஒரு அங்கம். இதன் அருகிலுள்ள மாடியில் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அதன் இணைப்பு நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்தபடியே, இவ்வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியும். ஆனால், இந்த கேமரா, மாலை 6 மணிக்கு பிறகு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விடுகிறது. காரணம், இந்த செக்போஸ்ட்டை கடந்து செல்லும் சரக்கு வாகனங்களை ஒன்றுவிடாமல் மடக்கி, வசூல் வேட்ைட நடத்துகின்றனர். இந்த காட்சி கேமராவில் பதிவாகிவிட்டால் ஐயா வேட்டு வெச்சிருவாரு.... என்ற பயத்தில் டெக்னிக்கலாக இப்படி சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். மீண்டும் இந்த கேமரா மறுநாள் அதிகாலை 6 மணிக்கு சுவிட்ச் ஆன் செய்யப்படுகிறது. ஏம்பா...’’ உங்க ஏரியா கேமராவில் இருந்து சிக்னல் வரவில்லையே...’’ என காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் யாரேனும் கேட்டால் அய்யா, அது கொஞ்சம் ரிப்பேரா இருக்கு... காலையில சரியாகிவிடும்...’’ என பதிலளிக்கிறார்கள் செக்போஸ்ட் புத்திசாலிகள். இந்த செக்போஸ்டில் பணிபுரியும் எஸ்.ஐ., ஏட்டு, காவலர், இவர்களை கண்காணிக்க அவ்வப்போது வந்து செல்லும் ஆய்வாளர் என எல்லோரும் ஒரே ஜாலிதான். மணல் கொள்ளையரிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம், சிலைமான், திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆறு மற்றும் ஓடை பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. அந்தந்த பகுதி போலீசார் மணல் வியாபாரிகளிடம் மாதந்தோறும் மாமூல் வசூலித்துக் கொண்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. மணல் கடத்தி வரும் மாட்டுவண்டி, லாரி, வேன்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் பணத்தை வாங்கி கொண்டு அவர்களை விட்டு விடுகின்றனராம். இதனால் சோழவந்தான் உள்ளிட்ட வைகை ஆற்று பகுதிகளில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் வரும்போது உயிர் பலி அதிகரிக்கிறது. தற்போது லாரி, வேன்களில் மணல் திருடுவதை தவிர்த்து சாக்குப்பைகளில் மணல் அள்ளி டூவீலரில் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. டூவீலரில் திருடி வரும் நபரிடம் 100 தொடங்கி, லாரிகளில் வரும் நபர்களிடம் 5,000 வரை போலீசார் வசூல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்றனர் பொதுமக்கள்.மரத்தடியில் கமிஷனை கறக்கும் அதிகாரிகள்விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி அறைக்கு கீழே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணமோசடி, வேலைவாய்ப்பு மோசடி  புகார்கள் அதிகளவு குவியும். இந்த அலுவலகத்தில்  கிங் மேக்கராக முன்னாள் முதல்வரும், பேரறிஞரின் பெயரைக்கொண்ட ஒருத்தரும்,  பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெயமான சங்கர்  பெயரைக்கொண்டவரும் இருக்கிறார்கள். பணமோசடி, வேலைவாய்ப்பு மோசடி புகார்களை இவர்கள் தான் விசாரிப்பார்கள். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு இரண்டு தரப்பினரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாம். நீதிமன்றம், வழக்குன்னு போன பணம் கிடைக்காது, நாங்கள் பேசி பணத்தை வாங்கி தருகிறோம் என பைசா கறப்பதில் இவர்கள் கில்லாடிகளாம்.  30 சதவீத கமிஷனுக்கு ஒப்புக்கொண்டால் டீல் ஓகே செய்துவிடுவார்கள். இந்த மாதிரியான டீலிங்கை அலுவலகத்தில் வைத்துக்கொள்ளாமல் பின்புறமாக உள்ள டிபிஓ மைதான மரத்தடியில் தான் அரங்கேற்றுவார்கள். ஆளுக்கொரு மரத்தடியில் நின்று டீலை முடிப்பதும், பின்னர் அலுவலகத்திற்கு வந்து வாபஸ் மனுவில் கையெழுத்துபோடுவதுமாக குற்றப்பிரிவு அலுவலகமே மரத்தடியே கதியோ என்று கிடக்கிறதாம்.வட போச்சேநாகர்கோவிலில் மது விலக்கு பிரிவு டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்தது. சமீபத்தில் தான் புதிய டி.எஸ்.பி.யாக ஜெயராஜ் என்பவரை நியமித்துள்ளனர். டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்த சமயத்தில் மதுவிலக்கு பிரிவில் இருக்கும் போலீசார் சிலர் மாமூல் வசூலில் கொடி கட்டி பறந்துள்ளார்கள். மாதம் 30 ஆயிரம் வீதம் டி.எஸ்.பி. பணியிடத்துக்கு என தனியாக வாங்கி பங்கிட்டுள்ளனர். இல்லாத டி.எஸ்.பி.க்கு மாமூல் வசூலித்த பெருமை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தான் உண்டு என்று உள்ளூர் போலீஸ்காரர்களே மூக்கில் விரல் வைத்து பேசி வந்தனர். இப்போது டி.எஸ்.பி. பணியிடத்துக்கு நியமிக்கப்பட்டு இருப்பவர் எப்படி டைப் என்று தெரியாததால், மாமூல் வசூலிப்பவர்கள் கப்சிப் ஆகி இருக்கிறார்கள். எப்படியும் புதிதாக வருபவர் கண்டிப்பாக அதிரடி நடவடிக்கையை காட்டுவது வழக்கம் தான். எனவே தங்களுக்கு மாமூல் அள்ளி தருபவர்களிடம், கொஞ்ச நாளைக்கு வெளியே தெரியும் படி திருட்டு மது விற்பனை செய்யாதீர்கள். புதியவரை மோப்பம் பிடித்து அவர் எப்படி என்று தெரிந்த பிறகு, வெளிப்படையாக வியாபாரம் வைத்துக் கொள்ளலாம். எனவே அதுவரை பொறுமையாக இருங்கள் என்று தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாச வேலையை செய்து வருகிறார்களாம் காக்கிகள் சிலர். எனவே புதியவர் எப்படி? என்ற எதிர்பார்ப்பில் மாமூல் வசூலிக்கும் காக்கிகள் மட்டுமின்றி, திருட்டு மது விற்பனையாளர்களும் உள்ளார்களாம். டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்ததால், மாதந்தோறும் ஒரே கல்லில் இரு மாங்காய் போல் இரட்டை வசூல் கிடைத்து வந்தது. இப்போது காலி பணியிடம் நிரப்பப்பட்டதால், நமக்கு ஒரு வசூல் காலியாகி விட்டதே என்று நடிகர் வடிவேல் பாணியில் வட போச்சே என்ற கவலையில் கண்ணத்தில் கை வைத்து நொந்து போய் உள்ளார்களாம். புதியவர் மிகவும் கண்டிப்பானவராக இருந்தால் என்ன செய்யலாம்? என்ற மாற்று யோசனையும் செய்து வருகிறார்களாம். நாங்களும் நாலு காசு  பார்க்க வேண்டாமா...?ஈரோடு மாவட்டம் மலைப்பகுதி சப்-டிவிஷனில் பணியாற்றி வந்த டிஎஸ்பி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால், இந்த பணியிட மாற்றத்தை அவரே விருப்பப்பட்டு வாங்கிச் சென்றுள்ளார். காரணம், ஈரோடு மாவட்ட எஸ்.பி.யின் டார்ச்சர் என்கிறார். பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர்களை ஈரோடு எஸ்.பி., விட்டு வைப்பதில்லை. வறுத்தெடுத்து விடுகிறார். இதற்கு பயந்தே அவர் மாவட்டம் விட்டு, மாவட்டம் ஓடிவிட்டார். இவரைப்போலவே இதர சப்-டிவிஷன் டி.எஸ்.பி.க்களும் வேறு மாவட்டத்துக்கு தப்பி ஓட தயார் நிலையில் உள்ளனர். தொடர் மனஅழுத்தம் காரணமாக, பவானி டிஎஸ்பி ஒருவர், உள்ளூர் அமைச்சரிடம் சென்று, ஐயா... எனக்கு வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் வாங்கித்தாருங்கள்... என கெஞ்சியுள்ளார். அவரோ, போய் வேலையை பாரு... நான் பாத்துக்கிறேன்... என ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார். ஏம்பா.. இப்படி ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடுறீங்க... என ஆய்வுக்கு சென்ற எஸ்.பி., கூலாக கேட்க, எங்களை விட்டுருங்க ப்ளீஸ்... என சில அதிகாரிகள் கெஞ்சியுள்ளனர்.’’ வசூலும் இல்ல.. நிம்மதியும் இல்ல... பிறகு எப்படி இங்கு பணியாற்ற முடியும். ஏதோ கொஞ்சம் கண்டுக்காம விட்டாதானே நாங்களும் நாலு காசு பார்க்க முடியும்... என புலம்பியபடி பணியாற்றி வருகின்றனர்.குற்றவாளியை காப்பாற்றிய அமைச்சர்; உடந்தையான உச்ச அதிகாரிதிருச்சியில்  பல்வேறு இடங்களில் வீடுகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்  கதையாக இருந்து வந்தது. அவர்களை பிடிக்க எஸ்பி ஜியாவுல் ஹக்  உத்தரவின் பேரில், ஸ்பெஷல் டீமே அமைக்கப்பட்டது. அந்த டீம் குற்றவாளிகளை  சல்லடை போட்டு தேடி வந்த நிலையில் சமீபத்தில் 2 பேர்  சிக்கினார்களாம்....அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் பாணியில்  நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 2 பேரும் எங்கெல்லாம் திருடினோம் என்ற உண்மையை  ஸ்பெஷல் டீமிடம் கக்கியதோடு, மொத்தம் 150 பவுன் திருடியதும், அதில் 90 பவுனை கரூரில் ஒரு பிரபல நகைக்கடையில் விற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.அந்த  2 பேரையும் குறிப்பிட்ட அந்த நகைக்கடைக்கு அழைத்து சென்ற ஸ்பெஷல் டீம்  நகைக் கடையில்  விசாரணை நடத்தினார்களாம்... இதில் தங்களிடம் தான் 90 பவுன்  விற்றதை நகை கடை அதிபர் ஒத்துக் கொண்டாராம்... இதையடுத்து அந்த 90 பவுன்  நகையை பறிமுதல் செய்யும் நேரத்தில், மத்திய மண்டல உச்ச அதிகாரியிடம் இருந்து ஸ்பெஷல் டீம் இன்ஸ்பெக்டருக்கு அழைப்பு வந்ததாம்... ஜமுக்காளம் பகுதி அமைச்சர் தன்னிடம் நகைக்கடை பற்றி பேசியதாவும், குறிப்பிட்ட நகைக் கடையில் இது பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம்... நகையை பற்றி எதுவும் பேச வேண்டாம் என கூறி விட்டாராம்.... இதனால் அந்த ஸ்பெஷல் டீம், 90 பவுனை உடனே பறிமுதல் பண்ணி இருந்தால் மாவட்டத்தில் ஸ்டேஷன்களில் உள்ள பாதி கேஸை முடித்திருக்கலாம்....  90 பவுனையும் பறிமுதல் பண்ண முடியல... மீதியுள்ள 60 பவுன் எங்கு இருக்கிறது  என கண்டுபிடிக்க முடியாமலும், குற்றவாளி 2 ேபரையும் அரஸ்ட் காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை காட்ட வேண்டும். அரஸ்ட் காட்ட வேண்டும் என்றால் 2 பேர் மீது எந்த பிரிவின் கீழ் கேஸ் போடுவது என்றும், அரஸ்ட் காட்ட முடியாமல் ஸ்பெஷல் டீம் விழிபிதுங்கி இருக்கிறார்களாம்..வசூல் வேட்டையில் கொடிகட்டி பறக்கும் டிஎஸ்பிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போலீஸ் உயர் அதிகாரியாக இப்பவர், சேலத்தை சேர்ந்த குருவின் பெயரை கொண்டவர் உள்ளார். அறந்தாங்கி பகுதியில் லாட்டரி, கஞ்சா, குட்கா, மணல் விற்பனையை ஊக்குவித்து வருகிறார். அதன்மூலம் மாதந்தோறும் பல ஆயிரங்களை மாமூலாக பெற்று வருகிறார். மாமூல் வசூலிப்பதற்காகவே ஐவர் கொண்ட குழு வைத்துள்ளார். இதுதவிர இவரது சப்டிவிசனுக்குள் யாராவது சிறிய அளவில் பெட்டிக்கடைகளில் வைத்து மதுபானம் விற்பது தெரியவந்தால், அங்கு செல்லும் இவரின் ஐவர் குழுவின் ஒருவர் அங்கிருந்து போனில் அதிகாரியை தொடர்பு கொள்வார். அந்த போன் மூலம் மது விற்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவார். கடைக்காரர் குறைந்த அளவிலான பாட்டில் தான் விற்கிறேன் என்றால் அதெல்லாம் தெரியாது, ஒழுங்காக பணத்தை கொடு இல்லை என்றால் உன்மீது வழக்கு போடுவேன் எனக்கூறி போனை கட்பண்ணி விடுவார். இதற்கு பயந்து வேறு வழியின்றி கடைக்காரர் கடன்வாங்கி மாமூலை கொடுத்து அனுப்புவார். இதுதவிர அறந்தாங்கி நகரில் 22, ஆவுடையார்கோவிலில் 20, நாகுடியில் 5, ஆவணத்தான்கோட்டையில் 3, சுப்பிரமணியபுரத்தில் 2, அரசர்குளத்தில் 2 என 54 லாட்டரி சீட்டு கடைகள் மூலம் மாதம் குறைந்தது 3 லட்ச ரூபாய் பெற்று வருகிறார். மேலும் சமீபத்தில் ஐவர் குழுவில் உள்ளவர்கள் மீது அதிகாரிக்கு சந்தேகம் வந்ததால், அந்த குழுவை நம்பாமல் தற்போது தனது கேம்ப் ஆபிசில் வேலை பார்க்கும் சிறப்பு எஸ்.ஐ மூலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.யாரேனும் புகார் அளித்தால் நான் முதல்அமைச்சர் ஊர்க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகிறார். அதிகாரியின் பணி ஓய்வுக்கு 7 மாதம் உள்ள நிலையில் இவரின் வசூல் வேட்டை படுவேகமாக செல்கிறது. இவருக்கு யார் மணி கட்டுவது என தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி உள்ளனர்.

நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மழைக் காலம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. நுண்ணுயிர்கள் வரை பேருரியர்கள் வரை அனைத்துக்குமே ஆரவாரமான, கொண்டாட்டமான காலம்தான். பூமிப் பந்தே பச்சைப் பசேல் என்று புதுப்பெண் போல் அலங்கரித்து நிற்கும் காலம் மழைக்காலம்தான். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. நுண்ணியிர்களின் பெருக்கத்தால் மனிதர்களுக்கு நோயைக் கொண்டுவரும் காலமாகவும் மழைக் காலமே இருக்கிறது. சளியில் தொடங்கி காலரா வரை எண்ணற்ற நோய்களின் உற்பத்தி கேந்திரமாகவே இம்மழைக் காலம் இருக்கிறது என்பதால் இந்த சீதோஷ்ணத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது உள்ளது.குளிர்ச்சியான, ஈரப்பதமான சூழ்நிலை நுண்ணியிர்களுக்கு சாதகமானது என்பதால் அவை நன்கு பெருகும். ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்து விடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. மழைக் காலத்தை எப்படி எதிர்கொள்ள… இதோ சில அட்டகாசமான டிப்ஸ்… சளி, இருமல் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால், சளி இருமல் பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். சிலருக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாக  சளி இருமல் வரும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.நுரையீரல் தொந்தரவுகள்மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, சைனஸ், நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, தீவிரமான தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.கொசுநீர் நிலைகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு. ‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி, உடலுக்குள் சென்று, சாதகமான காலம் வரும் வரை காத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் காய்ச்சல் வரும்.

மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான்  இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.‘ப்ளேவி வைரஸ்’ என்ற வைரஸ் காரணமாக ஏற்படும் நோய், ‘யெல்லோ ஃபீவர்’.  
இதுவும் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம்தான் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள். சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.மெட்ராஸ் ஐமெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாகப் பரவும். கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா’ எனும் பகுதியை அடினோ  வைரஸ் தாக்குவதால் கண் சிவந்துவிடும். இதனால், சில நேரங்களில் கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். அடினோ வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.வயிற்றுப்போக்குமழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம்.மழைக்காலத்தை எதிர்கொள்ள டிப்ஸ்… மழைக்காலத்தில் முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் இரண்டுமுறை வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடும் ஆபத்து. நன்கு தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுரையின் பேரில் தாராளமாகத் தலைக்குக் குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் உடனடியாக நன்றாகக் காயவைப்பது அவசியம். காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும். ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக, உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும். மழைக்காலத்தில்  துணி துவைத்தால் காயாது என, சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. பகல் வேளையில் வெயிலில் துணிகளைத் துவைத்து உலர்த்தினால்தான் கிருமிகள் அழியும். உள்ளாடைகளைத் துவைக்காமல் அணியும்போது, தோல் நோய்கள் வரும். வருடத்துக்கு ஒருமுறை ‘இன்ஃப்ளூயன்சா’ (Influenza) தடுப்பூசி போட்டுக்கொள்வது, ஃப்ளூ காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலைத் தடுப்பதற்கான  நியூமோகோக்கல் தடுப்பூசி போட வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த முதியவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும். கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு  முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சாலை ஓரங்களில் விற்கப்படும்  ஃப்ரூட் சாலட், நறுக்கப்பட்ட பழங்கள் போன்றவற்றில் கிருமித்தொற்று இருக்கக்கூடும். எனவே அவற்றைச் சாப்பிடக் கூடாது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் புதிதாகச் சமைத்து சாப்பிட வேண்டும். எல்லோராலும் மதியம் சுடச்சுட வீட்டு சாப்பாட்டைச் சாப்பிட முடியாது. ஆனால், காலையில் சமைத்த உணவை ஐந்தாறு மணி நேரங்களுக்கு உள்ளாகச் சாப்பிட்டுவிட வேண்டும். நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும். மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.- என்.யுவதி

பூ ஒன்று தொழிலானது!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற கிராமம். இந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறுமணத்தால் பூரித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அங்கிருக்கும் ‘ஹெல்ப் அஸ் க்ரீன்’ என்று பெயர் சூட்டப்பட்ட கட்டிடம். இங்கே தினமும் ஏராளமாக பூக்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நண்பர்களான அங்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகி என்கிற இரு இளைஞர்கள்தான் பூவை வைத்து கவிதை எழுதி காலத்தை வீணாக்காமல், அதை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார்கள்.அங்கித் அகர்வாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “என்னோட சொந்த ஊர் புனே. நான் காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சேன். ஐடி என்ஜினியரிங் முடிச்சிட்டு புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுயதொழில் தொடர்பான முதுநிலைப் படிப்பும் படிச்சேன். ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலை. செக்குமாடு மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிற இந்த வேலை கொஞ்சம் போரடிச்சது. லைஃபுன்னா அட்வெஞ்சர் வேணும்னு நெனைச்சேன். சொந்தத் தொழில் தொடங்கினாதான் சவால் இருக்கும். அதுக்குன்னு திடீர்னு வேலையை விட்டுட்டு, பெரிய முதலீடு போட்டு தொழில் தொடங்கக்கூடிய சூழலும் எனக்கு இல்லை. எனக்கான நேரத்துக்காக நான் காத்துக்கிட்டு இருந்தேன்.”“கரண், உங்களோட எப்படி சேர்ந்தார்?” “அவனும், நானும் சின்ன வயசுலே இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒண்ணாதான் டியூஷன் படிச்சோம். அப்போ ஏற்பட்ட நட்பு, இப்போ தொழில் வரை தொடர்ந்துக்கிட்டு இருக்கு. எங்க ரெண்டு பேருக்குமே எப்போதும் சுற்றுச்சூழல் மீது அக்கறை உண்டு. அதுக்கு ஏதாவது செய்யணும்னு பேசிக்கிட்டு இருப்போம். கரண் படிப்பு முடிச்சிட்டு காலநிலை மாற்றம் மற்றும் கார்பன் பாதிப்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார்.  நானோ வாகன டயர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தேன். சுற்றுச்சூழல் குறித்து 13 ஆய்வு கட்டுரைகளை எழுதி இருக்கேன். இப்படி எங்களுக்குள் சுற்றுச்சூழல் ஒரு கொள்கையாக ஊறிப்போய் இருந்த சமயத்தில்தான், ஒரு நாள் நானும் கரணும் கங்கை கரை ஓரமா அமர்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். கங்கை புனிதமான நதின்னு சொல்றோம். ஆனா அதை எவ்வளவு மாசு படுத்தி இருக்காங்கன்னு நேர்லே பார்த்தாதான் தெரியும். புனிதம்ன்னு சொல்லி சொல்லியே கங்கையில் எல்லா குப்பையையும் கொட்டுவது வழக்கமாயிடுச்சு. கான்பூரில் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வார்களில் இருந்து மட்டும் வருடத்துக்கு பல லட்ச டன் பூக்களை கங்கையில் கொட்டுவது வழக்கம். கோயில் பூக்களை குப்பையில் கொட்டக்கூடாது அதற்கு பதில் ஆற்றில் கொட்டலாம் என்பது அவர்களது வாதம். ஆற்றில் கொட்டுவதால், அதில் உள்ள உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. தண்ணீர் மாசு அடைவது மட்டும் இல்லாமல், நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம்  இறந்துவிடும் அபாயம் உள்ளது. இது எங்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு இதனை புரிய வைக்க முடியுமா? முயற்சி செய்தால் கண்டிப்பா செயல்படுத்த முடியும்ன்னு தோணுச்சு. பூக்கள் நதியில் கொட்டுவதற்காக அல்ல, அதை வெச்சு தொழில் பண்ணலாம்னு தோணுச்சி. ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்னு பேசினோம்.” “எப்படி ஆரம்பிச்சீங்க?”‘‘என் அம்மாகிட்ட சொன்ன போது, ‘என்ன, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குற வேலையை விட்டுட்டு குப்பையில் இருக்கும் பூவை சேகரிக்க போறியா’ன்னு கோபமா கேட்டாங்க.கரண் வீட்டிலும் அதெல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க. ஆனா, நாங்கதான் தீவிரமா இருந்தோம். என்னதான் பூவாக இருந்தாலும், அது குப்பை தான். குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். பூவில் இருந்து ஏன் தயாரிக்க முடியாதுன்னு தோணுச்சு. கையில் இருந்த எழுபத்தி ரெண்டு ஆயிரத்தை முதலாக போட்டுத் துவங்கினோம். நிறுவனம் துவங்கியதும் முதலில் அதற்கான ஆய்வில் ஈடுபட்டோம். நாங்க இருவருமே சுற்றுப்புறச்சூழல் மேல் ஈடுபாடு கொண்டவர்கள் தான். ஆனால், முறையான ஆய்வாளர்கள் கிடையாது. தாவிரவியல் பேராசிரியர்கள், விவசாயிகள், உரம் தயாரிப்பவர்கள், பூ விற்பனையாளர்கள், கோயில் நிர்வாகிகள்ன்னு ஒருத்தரையும் விட்டு வைக்கல. எல்லாரிடமும் பேசினோம். அதே போல பூக்களை எப்படி மக்க செய்வது, அதில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பதுன்னு யோசிச்சோம். ஆடு, மாடு, குதிரைன்னு எல்லாவற்றின் சாணத்தையும் பயன்படுத்தி பார்த்தோம். ஆறு மாசம், ஏகப்பட்ட ஆய்வு. கடைசியாக காபி பொடி சேர்த்துப் பார்த்தோம். அதில் தான் நாங்க நினைச்சப்படி மண்புழு உரம் தயாராச்சு. எந்த ஒரு ரசாயனமும் கலக்கப்படாத முழுக்க முழுக்க ஆர்கானிக் உரம். ‘மிட்டி’ (மண்) ன்னு பெயர் வச்சோம்.”“ஊதுபத்தி, சாம்பிராணியெல்லாம் பிற்பாடு சேர்ந்ததா?”‘‘உரத்தோடு நிக்கல. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். பூக்களுக்கு நறுமணத்துக்கு ஏற்ப ஏதாவது செய்யலாம்ன்னு கரண் சொன்னான். ரோஜா மல்லிகைன்னு நறுமண திரவியங்கள் மார்க்கெட்டில் இருக்கு.அதை வேறு விதமாக பயன்படுத்த நினைச்சோம். ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கலாம் பல்ப் எறிஞ்சது. அதற்கான ஆய்வில் இறங்கினோம். பொதுவாக ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகள் நிலக்கரித் துண்டில்தான் தயாரிப்பாங்க. விரும்பி வடிவம் செய்து அதை நறுமண திரவியத்தில் முக்கி எடுத்து காயவைத்தால் ஊதுபத்தி சாம்பிராணி தயார். நிலக்கரிக்கு பதில் ஏன் பூக்களை பயன்படுத்தக்கூடாதுன்னு தோணுச்சு. சேகரிச்ச பூக்களை காயவச்சு பொடித்து, அதில் தேவையான நறுமணங்களை சேர்த்து ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை தயாரிக்க ஆரம்பிச்சோம்.”“குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கலாம். நீங்க பூவை மட்டும் எப்படி பிரிச்சி எடுத்தீங்க?”‘‘குப்பைகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியை சார்ந்தது. அவங்க வேலையில் நாம் ஈடுபடுவது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு அவர்களிடம் நாம் முறையாக அனுமதி பெறணும். அதற்கு பதில் குப்பைக்கு வரும் முன் அந்த பூக்களை அதன் ஆதிமூலத்தில் இருந்தே சேகரிக்க நினைச்சோம். பெரும்பாலான பூக்கள் கோயில்களில் தான் அதிகம் கடவுளுக்கு சாத்தப்படுகிறது. அங்கிருந்துதான் குப்பை தொட்டிக்கு செல்கிறது. நேரடியாக கோயில் நிர்வாகிகளை அணுகினோம். கோயிலில் இருந்து பெறப்படும் பூக்களுக்கு நகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. கான்பூரை சுற்றியுள்ள கோயில் மற்றும் மசூதிகளுக்குச் சென்று, அவர்களிடம் பூக்களை நாங்க எடுத்துக் கொள்வதாக கூறினோம். அவர்களுக்கும் வேலை மிச்சம் என்பதால் சரி என்றனர். ஒவ்வொரு கோயில் மற்றும் மசூதிகளில் நீலநிற குப்பைத் தொட்டியை வைச்சோம். அவங்க அதில் பயன்படுத்திய பூக்களை போட்டு வைப்பாங்க. தினமும் காலை எங்க நிறுவன வண்டி சென்று, பூக்களை சேகரிக்கும். பூக்களை ரக வாரியாக பிரிப்போம். பிறகு பூக்களை நாரில் இருந்து தனியாக பிரித்து அதன் இதழ்களை மட்டும் சேகரிப்போம். இதில் மிகவும் மக்கி இருக்கும் பூக்களை தனியாக எடுத்து அதை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்வோம் மற்ற பூக்கள் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க. தற்போது எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கிறார்கள். எங்களின் நோக்கமே, பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான். பூக்களை பிரிப்பது முதல் அதை ஊதுபத்தியாக மாற்றுவது வரை எல்லாமே இங்கு பெண்கள்தான்.” “எங்க தமிழ்நாட்டில் ‘தெர்மாக்கோல்’ ரொம்ப ஃபேமஸ். பூக்களிலிருந்து தெர்மாக்கோல் தயாரிக்க முடியுமா?”‘‘அதை வெச்சு அணையில் தேக்கி வைத்த நீர் ஆவியாகிறதை தடுக்கலாம்னு தமிழ்நாட்டில் கண்டுபிடிச்சிருக்காங்கன்னு நாங்களும் பேப்பரில் படிச்சோம் (சிரிக்கிறார்). எங்களின் தொழில் பூக்கள் என்றாகிவிட்டது. அதனால் இதில் இருந்து என்னென்ன செய்ய முடியும்ன்னு யோசிப்பது தான் எங்க வேலையே. தெர்மாக்கோல், பேக்கேஜிங்  மெட்டீரியல் உலகம் முழுக்க பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. ஃப்ரிட்ஜ், டீவி, வாஷிங் மெஷின் எதுவாக இருந்தாலும் அதை தெர்மாக்கோல் கொண்டுதான் பேக் செய்வது வழக்கம். இது ஒரு ஸ்பாஞ்ஜ். பொருள் சேதமடையாமல் பாதுகாக்கும். மக்கிப் போகாது. அதற்கு மாற்று ‘புளோரா ஃபோம்’. பூக்கள் மூலமாக தயாரிக்கப்படும் தெர்மாக்கோல்தான் அது. இது எளிதாக மக்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து இல்லை. புளோரா ஃபோமை பிரபலமாக்கும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.”“அடுத்து?”‘‘ஊதுபத்தி, சாம்பிராணி கடவுளின் பொருள் என்பதால் சாம்பிராணி பாக்கெட்டில் சாமி படம் போட்டு இருந்தோம். சாமிப்படம் இருப்பதால் அதை குப்பைத்தொட்டியில் போட மக்கள் தயங்கினாங்க. அதையே விதை பாக்கெட்டாக மாத்தினால் என்னன்னு யோசிச்சோம். சாம்பிராணியை பயன்படுத்திட்டு பாக்கெட்டை மண்ணில் புதைச்சிடலாம். அதில் இருந்து ஒரு அழகான செடி முளைக்கும். அடுத்து லெதர் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வறோம். கூடிய விரைவில் மக்கி போகும் லெதர் பொருட்கள் மற்றும் பைகளை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. தற்போது எங்களின் பொருட்கள் ஆன்லைனில் தான் கிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் எல்லா முக்கிய நகர சூப்பர் மார்க்கெட்டிலும் விற்பனை செய்ய இருக்கிறோம்.’’- ப்ரியா

திருக்குறள் பரப்பும் காகித பென்சில்!

பென்சிலைக் கொண்டு காகிதங்களில் எழுதலாம். காகிதங்களைக் கொண்டு பென்சிலைத் தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் சித்தார்த்தன். பென்சிலுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கிறது இவரது முயற்சி. தவிர, இப்பென்சில் ஒவ்வொன்றும், ஒரு திருக்குறளைத் தாங்கி வந்து குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்கிறது. இந்த ‘திருக்குறள் பென்சிலு’க்கு அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனி மவுசு.‘‘திருக்குறள் பென்சிலுக்கு அப்பா தான் முழு முதற்காரணம்...’’ என்று நெகிழ்வாக ஆரம்பித்தார் சித்தார்த்தன்‘‘சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பா இசை இறை சேரலாதன். திருக்குறள்னா அவருக்கு உயிர். திருக்குறள் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கார். அதில் பல கட்டுரைகள் தமிழின் பிரபலமான பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கு. அரசு வேலையில அப்பா இருந்ததாலே ஊர் ஊரா மாறிகிட்டே இருப்போம். கடைசியில மதுரையில செட்டில் ஆகிட்டோம். எனக்கு அக்காவும், அண்ணனும் இருக்காங்க. சின்ன வயசுல காலையில எழுந்தவுடன் நாங்க மூவரும் அப்பாகிட்ட பத்து திருக்குறளை மனப்பாடமா சொல்லணும். அப்படிச் சொன்னாதான் எங்களுக்கு தேன் கலந்த சர்பத் கிடைக்கும். டீ, காபி எல்லாம் எங்க வீட்டுல கிடையாது. எல்லாமே தமிழ் மரபுப்படி தான். ஸ்கூலுக்குப் போகும்போதே 1330 குறளும் எங்களுக்கு அத்துப்படி. திருக்குறளைச் சொல்லாம, படிக்காம ஒரு நாளும் கழிந்ததே இல்லை. திருக்குறளை மந்திரமா சொல்லித்தான் எனக்கு கல்யாணமே நடந்ததுனா பாத்துக்குங்க...’’ என திருக்குறளுக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள நெருங்கிய பந்தத்தை விவரித்த சித்தார்த்தன் தொடர்ந்தார்.‘‘படிப்பு முடிஞ்சதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டே ‘குறள் நெறி’னு ஒரு பதிப்பகம் தொடங்கி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வந்தேன். இடையில அப்பா இறந்துட்டார். பிசினஸும் சரியா போகலை. அதனால பதிப்பகத்தை மூடிட்டேன். வீட்டுல மாட்டியிருக்குற அப்பாவோட போட்டோவைப் பார்க்கறப்ப எல்லாம் திருக்குறளும், குழந்தைப்பருவமும் தான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். அப்பா மாதிரி திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்னு தோணுச்சு. பாடப்புத்தகத்துல இருந்தாலும் அதை குழந்தைங்க பரீட்சைக்காக மட்டுமே படிக்கிறாங்க. புத்தகமா போட்டு மலிவான விலையில் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டங்கிறாங்க. குழந்தைகளோடு நெருக்கமா இருக்குற ஒரு பொருளோடு திருக்குறளையும் சேர்த்துக் கொடுத்தா சுலபமா அது அவங்களோடு சேர்ந்திடும்னு நம்பினேன். அப்படி நெருக்கமா இருக்குற ஒண்ணுண்ணா அது பென்சில் தான். இப்படித்தான் இந்த திருக்குறள் பென்சில் உருவாச்சு...’’ என்றவர் இதை காகிதத்தில் தயாரிப்பதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.‘‘பொதுவா பென்சில்களை மரத்தில் இருந்துதான் செய்றாங்க. செயற்கையா சில வேதிப்பொருட்களைக் கொண்டும் தயாரிக்கிறாங்க. இதனால இயற்கை பெருமளவுல அழிக்கப்படுது. நாம செய்யப் போகிற காரியம் இயற்கையைப் பாதிக்காத வகையில இருக்கணும்ங்கிற விஷயத்துல உறுதியா இருந்தேன். இதையும் திருக்குறள்ல இருந்துதான் கத்துக்கிட்டேன். சீனா போன்ற நாடுகள்ல காகிதங்களைப் பயன்படுத்தி பென்சில்கள் தயாரிப்பதைப் பற்றி கேள்விப்பட்டேன். நாமும் ஏன் அந்த மாதிரி செய்யக்கூடாதுனு எண்ணி இதுல இறங்கினேன். ஆரம்பத்துல சரியா வரலை. போகப்போக பிரமாதமா வந்தது. இப்ப முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைக் கொண்டு பென்சில்களைத் தயாரிக்கிறோம். உண்மையில என்னோட நோக்கம் பென்சிலைத் தயாரிப்பது அல்ல; அதன் மூலமா திருக்குறளைப் பரப்புவது. அதனால பென்சிலோட மேல்புறத்துல திருக்குறளைப் பிரின்ட் செய்து, எழுத்து அழியாத அளவுக்கு லேமினேட்டும் செய்றோம்...’’ என்கிற சித்தார்த்தனின் திருக்குறள் பென்சில் 1330 குறள்களுடன் கிடைக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு அதிகாரத்தை தாங்கி வரும் 10 பென்சில்கள். இதுபோக எளிதான கணக்கு வாய்ப்பாடு, போக்குவரத்து விதிகள், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளைத் தாங்கியும் பென்சில்கள் வருகின்றன.‘‘முகநூல் வழியாவும் ஆன்லைனிலும் வேண்டியவர்களுக்கு அனுப்பறோம். கடைகளுக்குக் கொடுப்பதில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர்ல இருக்குற தமிழ்ப் பள்ளிகள் நிறைய ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்காங்க. அங்கே இந்த பென்சிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு. திருக்குறள் எல்லா குழந்தைகளையும் சென்றடையணும்...’’ என்றார் நிறைவாக.பென்சில் வரலாறு!பென்சிலைப் பற்றி பல வரலாறுகள் இணையத்தில் உலா வருகின்றன. ‘‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ரோமானியர்களின் காலத்திலேயே பென்சில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அது நீளமான கம்பி வடிவத்தில் இருந்தது...’’ என்கின்றனர் சிலர். இன்னொரு பிரிவினர் ‘‘16-ம் நூற்றாண்டில் இத்தாலியில் மரத்தாலான பென்சில் கண்டுபிடிக்கப்பட்டது...’’என்கின்றனர். ஆனால், ‘‘1795-இல் பிரான்ஸை சேர்ந்த ஓவியரான நிக்கோலஸ் கான்டே என்பவர் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பென்சிலுக்கு காரணகர்த்தா...’’ என்கின்றனர் வேறு சிலர். ‘‘பென்சிலின் மையத்தில் ‘கிராஃபைட்’ என்கிற வேதிப்பொருள் உள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள சீத்வைட் பள்ளத்தாக்கில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராஃபைட்டை களிமண்ணுடன் சேர்த்து செங்கல் சூளையில் பென்சிலை உருவாக்கியது நிக்கோலஸ் தான்...’’ என்று உறுதியாகச் சொல்கின்றனர் அந்த வேறு சிலர். - த.சக்திவேல்

இட்லி, தோசைக்கு ஏற்ற அரிசி!

பசுமைப் புரட்சியின் இன்னொரு முகம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். பசுமைப் புரட்சியால் நம் பஞ்சம் தீர்ந்தது. சோற்றுப் பிரச்சனை ஓரளவு தீர்ந்தது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டுகளாக நவீன நெல், கோதுமை ரகங்களையும் செயற்கையான வேதி உரங்களையும் பூச்சிகொல்லிகளையும் நிலத்தில் கொட்டியதில் உருவான பாதிப்புகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சூழலியலில் மட்டும் அல்லாமல் வேறு பல விஷயங்களிலும் பசுமைப் புரட்சியின் விளைவாய் உருவான நவீன வேளாண்மையால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். நீர் வளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தனியே நூலே எழுதும் அளவுக்கு சிக்கல்கள் உள்ளன.
பாரம்பரிய நெல், கோதுமை ரகங்களைவிட நவீன ரகங்களுக்கு அதிகமான நீர் வளம் தேவை. இதனால் இருநூறு முதல் முன்னூறு சதவீதம் வரை அதிகமான நீர் தேவையை நாம் எதிர்கொள்ள நேரிட்டது. பாரம்பரிய கோதுமைப்பயிருக்கு பனிரெண்டு அங்குலம் நீர் தேவைப்படும் என்றால் கலப்பின ரகங்களுக்கு முப்பத்தாறு அங்குலம் தேவைப்பட்டது. இதனோடு கோதுமை, நெல் போன்ற பயிர்களையே திரும்ப திரும்ப ஆண்டு முழுதும் ஒரே வயலில் சாகுபடி செய்ததால் நீர் தேவை முன்பைப் போல் பத்து மடங்கு அதிகமாக உயர்ந்தது. இன்னொருபுறம் அரசு பெருகிவரும் நீராதாரங்களைக் கருத்தில் கொண்டு பெரிய பெரிய அணைகளை உருவாக்கியது. வெள்ளங்களைக் கட்டுப்படுத்த என உருவாக்கப்பட்ட இவற்றால் காட்டு வெள்ளங்கள் ஏற்பட்டு பயிர்கள் பல்லாயிரக்கணக்கில் நாசமாகின. பெரிய அணைகள் மிகப் பெரிய பிற்போக்குத் தொழில்நுட்பம் என்று வேளாண் அறிஞர்களுமேகூட சொல்லும் நிலை உருவானது. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாய நிலங்களில் எல்லாம் நிலத்தடி நீரில் அளவு ஆண்டு தோறும் இரண்டு மூன்று அடி குறைந்துகொண்டே வந்தது. தற்போது தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. ஐந்து நதிகளின் பெயரால் மாநிலம் அமைந்திருக்கும் பஞ்சாபிலேயே தொடர்ச்சியான நெல், கோதுமை சாகுபடியால் கடந்த நாற்பதாண்டுகளில் நிலத்தடி நீர் சுமார் இரு நூறு அடி வரை குறைந்திருக்கிறது.ரசாயன உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது நோய்களின் பெருக்கத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. பூச்சி மருந்துகளால் சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, சரும பாதிப்புகள் போன்ற தொந்தரவுகள் கிராமப்புறங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. வயல்களில் ரசாயன உரங்கள் போடுவதாலும் வேதியியல் பூச்சி மருந்துகள் தெளிப்பதாலும் இந்த வேலைகளைச் செய்யும் விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களில் பாடுபடுபவர்களுக்கும் இப்படியான நோய்கள் ஏற்படுகின்றன. ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டால் அதில் விளையும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கும் மேற்சொன்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்று ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் இல்லாமல் உற்பத்தியாகும் உணவுப்பொருளே இல்லை எனலாம். அதிலும், முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவை எல்லாம் முழுமையாக ரசாயனத்தில் மூழ்கவைத்துத்தான் நம் வீட்டுக்கே வருகின்றன. இப்படியான உணவுகளை கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உண்டதன் விளைவுதான் தோல் நோய், ஆஸ்துமா, அலர்ஜி, பார்கின்சன்ஸ் போன்றவை. கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் என்பது யாரோ ஒருவருக்கு வருவது என்பதாகத்தான் கேள்விப்பட்டிருப்போம். இன்றோ புற்றுநோய் என்பது ஏதோ தலைவலி, காய்ச்சல் என்பதைப் போன்ற நோயாக மாறிவிட்டது. உடலின் எல்லா பாகங்களிலும் புற்றுநோய் வருகிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயும், மலக்குடன் புற்றுநோயும் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவில் உள்ள ரசாயனங்கள்தான். பசுமைப் புரட்சியை முதலில் கொண்டுவந்த பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு ‘புற்றுநோய் விரைவு ரயில்’ ஒன்று தினசரி இயக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் நூறு பேருக்கு மேல் இந்த ரயிலில் ஏறிச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்புகிறார்கள். எண்டோசல்பான் என்ற ரசாயன உரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு சூழலியல் ஆர்வலர்கள், மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எண்டோசல்பானை கேரளத்தின் காசர்கோட்டில் இருக்கும் முந்திரிக்காடுகளின் மேல் விண்ணிலிருந்து தெளித்ததால் அங்கு நிலமே மலடாகிவிட்டது. அங்கு பிறக்கும் குழந்தைகள் பல உடல், மனக் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. மேலும், பருந்து போன்ற பறவைகள் அரியவகை உயிரினங்கள் பட்டியலுக்குள் நுழைந்திருக்கின்றன. பூச்சிகொல்லிகளில் ஒருவகை அழியாத தன்மை கொண்டவை இதை, POPs அதாவது Persistent Organic Pollutants என்பார்கள். இந்த வகை பூச்சி கொல்லிகள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எவ்வளவு தொலைவு பயணித்தாலும் அழியாது நம் உணவுச் சங்கிலியிலேயே தங்கியிருக்கும். DDT, ஆல்ட்டிரின், லிண்டேன், என்ட்ரின், டை என்ட்ரின் போன்ற ரசாயனங்களை மேற்கத்திய நாடுகளில் தடைவிதித்திருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அவை இன்றும் தாராளமாகப் புழங்குகின்றன. தொடர்ச்சியான பயன்பாட்டால் புற்றுநோயைக்கூட உருவாக்கும் மோசமான விஷம் இது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட உரங்களையும், பூச்சிகொல்லிகளையும் இந்தியாவில் தாராளமாக நடமாடவிட்டிருக்கிறார்கள். நமது அரசும் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இதன் பின்னணியில் பூச்சிகொல்லி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் மிகப்பெரிய லாபி இயங்குகிறது. அவர்கள் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து இப்படியான பூச்சி மருந்துகளை தடை செய்வது குறித்த விஷயங்களோ உரையாடல்களோ எழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுப்பாக எழும் எதிர்ப்புகளையும் மிகுந்த கவனமுடன் அமுக்கிவிடுகிறார்கள்.இத்தனை ஆண்டு காலமாக பூச்சிகொல்லிகளைத் தெளிப்பதால் அந்தப் பூச்சிகள் ரசாயனங்களின் பாதிப்பை எதிர்கொள்வதற்கான பரிணாம வளர்ச்சியைப் பெற்று தங்களை தகவமைத்துக்கொண்டுள்ளன. இதனால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரண்டு, மூன்று வகையான மருந்துகளைக் கலந்து தெளிப்பது என்ற உத்தியை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் சுற்றுச் சூழலும் ஆரோக்கியமும் மேலும் கெட்டுப்போகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் சுமார் இருபது லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். பசுமைப் புரட்சியால் உற்பத்தி அதிகரித்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஏன் நிகழ்கிறது. இங்குதான் இருக்கிறது பசுமைப் புரட்சி யாருக்கு லாபமானது என்கிற சூழ்ச்சி வலையின் முக்கிய கண்ணி.பசுமைப் புரட்சியின் பலன்கள் பணக்கார விவசாயிகளை, நில உடமையாளர்களை மட்டுமே சென்றடைந்தது. இதனால், பெரிய மற்றும் சிறிய விவசாயிகள் இடையே இருந்த வித்தியாசம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. விதைகள், உரங்கள், பூச்சிகொல்லிகள், இடுபொருட்கள், ட்ராக்டர், மின்சாரம் என உற்பத்திப் பொருட்கள் நாளுக்கு நாள் விலையேற விவசாயிக்கு அந்த விலையேற்றத்தின் நியாயமான பங்கு கிடைக்கவில்லை. வணிகத்தில் ஒரு பக்கம் தரகர்கள், குத்தகைதாரர்களின் தலையீடும் பேராசையும் விவசாயிகளை நிரந்தரக் கடனாளிகளாக்கிவிட்டன. பட்டுக்கோட்டையார் பாடியது போல ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையில் காலும்தானே மிச்சம்’ என்ற நிலைக்கு விவசாயி தள்ளப்பட்டார்.இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது என்றால் அது பருத்தி விவசாயிகள்தான். நம் பாரம்பரிய பருத்தி ரகங்களும் பாரம்பரிய உற்பத்தி முறையும் இருந்தவரை பருத்தி சாகுபடியில் பூச்சிக் கட்டுப்பாடு என்பது விவசாயிகளின் கைம்மீறிச் செல்வதாய் இல்லை. ஆனால், நவீன பருத்தி ரகங்களும் நவீன பூச்சி மருந்துகளும் வந்தபோதுதான் சீரழிவு தொடங்கியது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியா முழுதும் மூன்று லட்சம் பருத்தி விவசாயிகள் இறந்திருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அந்நிய ரகங்களைத் தாக்கும் அந்நியப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மேலும் மேலும் ரசாயன உரங்கள் தெளித்ததால் பூச்சிகள் மேலும் மேலும் தகவமைப்பு பெற்றன. ஒரு கட்டத்தில் இடுபொருட்களுக்கான அடக்கத்துக்குக்கூட உற்பத்தியான பருத்தி தேறாமல் போகவே வரிசையாகத் தற்கொலை செய்துகொள்ள தொடங்கினர் நமது விவசாயிகள். இப்படி, ஒவ்வொரு உணவு தானிய உற்பத்திகளிலும் பிற பணப் பயிர் உற்பத்திகளிலும் ரசாயன உரங்களின் நுழைவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தின. சரி, இந்த இதழின் நெல்லான பெருங்கார் நெல்லைப் பற்றி பார்த்த பின் நவீன விவசாயம் பற்றி அடுத்த இதழில் தொடர்ந்து பார்ப்போம்.பாரம்பரிய நெல் ரகங்களில் பெருங்கார் எனும் நெல் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டாரத்தில் புகழ்பெற்றது. குறிப்பாக, அங்கு உள்ள தக்கண்டாபுரம் எனும் பகுதியில் இது அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1500 கிலோ வைக்கோலும், மகசூலாகக் கிடைக்கும். குறுகியகால நெல் வகையைச் சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற்பயிரான பெருங்கார் பயிரிடப்படுகிறது. மேலும் ஜூன், மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்கக்கூடிய குறுவைப் பட்டத்தில் கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இதைப் பயிரிட்டு குறுவை சாகுபடி செய்கிறார்கள். நேரடி நெல் விதைப்பு மற்றும் ஒற்றை நாற்று முறை என இரண்டுக்குமே ஏற்ற நெல் ரகம் இது. நேரடி விதைப்புக்கு முப்பத்தைந்து கிலோ விதை நெல்லும் ஒற்றை நாற்றுமுறையில் பயிரிட நாற்பது கிலோ விதை நெல்லும் தேவைப்படும். நாலரை அடி உயரத்துக்கு வரும் இந்தப் பயிர் தண்டு துளைப்பான், கதிர் நாவாய்ப் பூச்சிகளையும் இயற்கையாக எதிர்த்து வளரும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர் வளம் கொடுத்து, ஊட்டச்சத்துகள் கொடுத்து, களை நீக்கிப் பயிரிட்டால் நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகம் இது. இட்லி, தோசை போன்ற டிபன் வகைகள் செய்யவும், முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்யவும் ஏற்ற ரகம் இது. எளிதில் ஜீரணமாகும் என்பதால் வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள், செரிமானம் எளிதாக நிகழத் தேவையுள்ள பைல்ஸ் நோயாளிகள், மலக்குடல் புற்றுநோய் உள்ளவர்கள், வயதானவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம். உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் என்பதால்  குழந்தைகளுக்கும் நல்லது.(செழிக்கும்)- இளங்கோ கிருஷ்ணன்

சுஸுகியின் 2 ஆப்ரோடு அசத்தல் பைக் அறிமுகம்

சுஸுகி   நிறுவனம் சார்பில், RM-Z250 மற்றும் RM-Z450 ஆகிய இரண்டு ஆப்ரோடு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளன. இதில், சுஸுகி   RM-Z250 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு DOHC   இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோக்ராஸ் பந்தயம் மற்றும் ஆப்ரோடு   சாகசங்களின்போது எளிதில் கையாளும் விதத்தில், இலகு எடை கொண்ட அலுமினிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக், 106 கிலோ எடை கொண்டது. சுஸுகி RM-Z450 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 449சிசி லிக்யூடு கூல்டு   DOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மூன்று விதமான டிரைவிங்   மோடு உள்ளது. இவை, சுஸுகியின் விசேஷமான Holeshot Assit Control சிஸ்டத்துடன் இணைந்து இயங்குகிறது. சுஸுகி RM-Z450 பைக்கில் BFRC என்ற   விசேஷ தொழில்நுட்பம் இருக்கிறது. இதன்மூலமாக, டர்ட் டிராக்குகளில்   ஓட்டும்போது மிகச்சிறந்த தரைப்பிடிப்பையும், அதிர்வுகளையும் வெகுவாக உள்வாங்கி குறைக்கும் நுட்பத்தையும் பெற்றிருக்கிறது. புதிய சுஸுகி  RM-Z450 பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல  சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில்  அப்சைடு  டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இந்த பைக் 112 கிலோ எடை கொண்டது. இந்த புதிய ஆப்ரோடு பைக்குகள் அறிமுகம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா   நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதோஷி உச்சிடா கூறுகையில்,”கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆப்ரோடு மற்றும் சாகச ரக பைக்குகளுக்கான வரவேற்பு   தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. இந்த துறையில் இந்தியர்கள்   காட்டும் ஆர்வத்தையும், சந்தை தேவையை கருதியும், இந்த இரண்டு புதிய   மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு   மிக திரில்லான அனுபவத்தை வழங்கும்,” என்றார். சுஸுகி RM-Z250  பைக் 7.10 லட்சம் விலையிலும், சுஸுகி RM-Z450 பைக் 8.31 லட்சம்  விலையிலும் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வந்துள்ளன.  இரண்டு பைக்குகளையும் சாதாரண  சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இந்த  பைக்குகள் இந்திய ஆப்ரோடு  மற்றும் சாகச பிரியர்களை வெகுவாக கவரும் என  நம்பலாம்.

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் ஸ்பெஷல் எடிசன்

பண்டிகை  காலத்தை முன்னிட்டு, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்  விரைவில் வெளிவர உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல், டிவிஎஸ் ஜுபிடர்  கிராண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன்  மாடலில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு  இருக்கின்றன. முன்புற அப்ரானின் மேற்புறத்தில் கிராண்ட் எடிசன் பேட்ஜ்  பதிக்கப்பட்டு இருக்கிறது. புட்போர்டில் பீஜ் வண்ண பிளாஸ்டிக் பேனல்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, லெதர் இருக்கையும் இந்த ஸ்கூட்டரின்  மதிப்பை உயர்த்துகிறது. ஜுபிடர் கிளாசிக் மாடலில் இருப்பது  போலவே, இந்த ஸ்கூட்டடரில் மட்கார்டில் கிரோம் பீடிங் கொடுக்கப்பட்டு  இருக்கிறது. இது, நிச்சயம் இந்த ஸ்கூட்டரின் தனித்துவத்தை காட்டுவதோடு,  பார்க்க பிரிமியம் ஸ்கூட்டர் போலவே தோற்றமளிக்கிறது. இப்புதிய டிவிஎஸ்  ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட்  இடம்பெற்றுள்ளது. அனலாக் மானி மற்றும் மின்னணு திரையுடன்கூடிய  இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும்  109.7 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்  திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ‘’அராய்’’  சான்றுபடி, இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 56 கி.மீ மைலேஜ் தரும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான  தேர்வை வழங்கும் விதத்தில், இச்சிறப்பு பதிப்பு மாடலை டிவிஎஸ் விரைவில்  விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் விரைவில் அனைத்து  டீலர்களுக்கும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல்  எடிசன் மாடல் நிச்சயம் டிவிஎஸ் ஜுபிடருக்கு அதிக வாடிக்கையாளர்களை  பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

ரெனோ கிவிட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ரெனோ  கிவிட் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரின்  கான்செப்ட் மாடல் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. ரெனோ  கிவிட் காரின் அடிப்படையிலான இந்த எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல்  ரெனோ K-ZE என்ற பெயரில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த காரின்  ஒட்டுமொத்த வடிவமைப்பு, ரெனோ கிவிட் காரை ஒத்திருக்கிறது. அதேநேரத்தில்,  டிசைனில் சிறிய மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. மெல்லிய  ஹெட்லைட் வடிவம், புதிய கிரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்புடன் ரெனோ  கிவிட் காரிலிருந்து வேறுபடுகிறது. இந்த காரில், அளவில் பெரிய சக்கரங்கள்  பொருத்தப்பட்டு இருப்பதால், முழுமையான எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி  வெகிக்கிள்) போல் தோற்றமளிக்கிறது. கான்செப்ட் மாடலில் ஆகாய நீல வண்ண  ஸ்டிக்கர் அலங்காரமும் அசத்துகிறது. ரெனோ K-ZE கான்செப்ட் மாடலின்  தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கான்செப்ட்  அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார் 250 கி.மீ தூரம் வரை  பயணிக்கும் திறன்வாய்ந்ததாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில்  எளிதாக சார்ஜ் செய்யும் விதத்தில், டூயல் போர்ட் சார்ஜருடன் இந்த கார்  வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தோற்றத்தில் எஸ்யூவி போல் இருந்தாலும்  ஹேட்ச்பேக் ரகத்தில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக இதனை  நிலைநிறுத்த ரெனோ திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு சீனாவில் இந்த காரை  முதலில் களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிக  எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு, வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு இந்த காரின் விலையை நிர்ணயிக்க  ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனா மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட  வளரும் நாடுகளிலும் இந்த மின்சார கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட  இருக்கிறது. இந்தியாவில், அடுத்த சில ஆண்டுகளில், மின்சார கார்களுக்கான  கட்டமைப்பு வசதி ஓரளவு வந்தவுடன், இந்த மின்சார கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன என ரெனோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆபீஸ் பாய் வேலை பார்க்கவா காக்கி சட்டை

குமரி மாவட்ட ஆயுதப்படையில் ஆண்கள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் 2016ல் பணிக்கு சேர்ந்தவர்களே, சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், குமரி மாவட்டத்தில் 2006, 2007ல் பணிக்கு சேர்ந்தவர்கள் கூட இன்னும் ஆயுதப்படையில் தான் உள்ளனர். இவர்களில் பெண் போலீசாரும் உண்டு. ஆயுதப்படையில் உள்ள போலீசார் மற்றும் பெண் போலீசாரை எஸ்.பி. அலுவலக அமைச்சு பணிகள் மற்றும் காவல் நிலையங்களில் எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மாவட்ட எஸ்.பி.யாக துரை இருந்த சமயத்தில் இதை கண்டுபிடித்து கடுமையாக எச்சரித்தார். ஆயுதப்படையில் உள்ள போலீசார் ஆயுதப்படை பணியை மட்டுமே பார்க்கவேண்டும். ‘‘ஆபீஸ் பாய் வேலை பார்க்க காக்கி சீருடை போட வில்லை’’ என உத்தரவிட்ட அவர், எஸ்.பி. அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் எடுபிடி வேலை செய்து கொண்டு இருந்த ஆயுதப்படை போலீசார் 90 பேரை, ஆயுதப்படைக்கே மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் எஸ்.பி. துரை மாற்றப்பட்டு, நாத் பொறுப்பேற்றார். இவர் பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதால் மீண்டும் ஆயுதப்படை போலீசாரை குறிப்பாக பெண் போலீசார் அதிகம் பேரை எடுபிடி வேலைக்கு மாற்றி உள்ளனர். சுமார் 130 பேர் இதுபோன்று மாற்றப்பட்டு தற்போது காவல்துறை சீருடையுடன் ஆபீஸ் பாய் வேலை பார்க்கிறார்கள். இது மட்டுமின்றி, ஆயுதப்படையில் உள்ள சில அதிகாரிகள், தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆயுதப்படையில் இருந்து அதர் டூட்டி பணி கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். இதனால் ஆயுதப்படையில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான போலீசார் தான் மாறி, மாறி பாதுகாப்பு பணி உள்பட எல்லா பணிக்கும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பெண் போலீசார் பாடு, கடும் திண்டாட்டமாகி உள்ளது. இயற்கையாக உள்ள பிரச்னை, உடல் உபாதைகள் பற்றி கூறினாலும் வெளி மாவட்ட பாதுகாப்பு பணிக்கு தொடர்ச்சியாக அனுப்பி விடுகிறார்கள். இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் வேலைக்கு வந்த பெண் போலீஸ் ஒருவர், எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் மயங்கி விழுந்த பின்னரே எஸ்.பி.க்கு இந்த பிரச்னை தெரிய வந்துள்ளது. இருப்பினும் முழுதாக எதையும் கூறாமல் மூடி மறைத்து விட்டனர். எனவே ஆயுதப்படை போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். எஸ்.பி. நாத் நேரடியாக அழைத்து விசாரணை நடத்தினால் அனைத்து தகவல்களை அள்ளி விட போலீசார் சிலர் தயாராகி வருகிறார்கள்.மணல் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தால் சிறைமணல்  கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை  எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. இந்த   உத்தரவுக்கு பிறகு, புதுவிதமான டெக்னிக்கை திருச்சி போலீஸ்   கையாள்கிறதாம்....அதாவது மணல் கொள்ளை குறித்து புகார் செய்பவர்கள், இனி  அவர்கள் மணல் கொள்ளை நடப்பது பற்றி வாயே திறக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட  புகார்தாரர் மீதே போலீசார் ஏதாவது கேஸ் போட்டு சிறைக்கு அனுப்பி  விடுகிறார்களாம்... மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க இரவு, பகல்  பாராமல் பணி செய்து போலீசில் ஒப்படைத்தாலும், அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில்  உள்ள அதிகாரிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவ தில்லையாம்.... அப்படி ஆர்வம்  காட்டினால் அவர்களுக்கு வரவேண்டிய மாமூல் வராமல் போய் விடுமாம்...  சமீபத்தில் மணல் கொள்ளை குறித்து தகவல் கொடுத்த திருச்சி குட்டப்பட்டு  கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், பெலிக்ஸ், செவந்தலிங்கம் ஆகியோர் மீது  போலீசார் வழக்கு பதிந்து அவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளார்களாம்.. இப்படி  திருச்சியில் பல இடங்களில் மணல் கொள்ளையர்களை பிடித்து கொடுத்தாலும்  அவர்கள் மீது எந்தவித வழக்கு போடுவது கிடையதாம்.... புகார்  தெரிவிப்பவர்கள் மீதுதான் வழக்கு பாய்கிறதாம்.