Sports - Dinakaran

விஜய் ஹசாரே டிராபி: இறுதி போட்டியில் இன்று மும்பை - டெல்லி பலப்பரீட்சை

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.தேசிய அளவில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான விஜய் ஹசாரே டிராபி தொடர், கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 37 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.  இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று (5வது இடம்) ஏமாற்றத்துடன் வெளியேறியது.கால் இறுதி ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்த மும்பை, டெல்லி, ஜார்க்கண்ட், ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.  முதலாவது அரை இறுதியில் ஐதராபாத்துடன் மோதிய மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது. 2வது அரை இறுதியில் ஜார்க்கண்ட் - டெல்லி அணிகள் நேற்று முன்தினம் மோதின. டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன் குவித்து ஆல் அவுட்டானது. விராத் சிங் 71, ஆனந்த் சிங் 36, நதீம் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி பந்துவீச்சில் நவ்தீப் சாய்னி 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 30 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. எனினும், கடுமையாகப் போராடிய அந்த அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது.நிதிஷ் ராணா 39, கேப்டன் கவுதம் கம்பீர் 27, உன்முக்த் 17, ஷோரி, விஜய்ரன் தலா 15 ரன் எடுத்தனர். பவான் நேகி 39 ரன், சாய்னி 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் இன்று களமிறங்குகின்றன. வெஸ்ட் இண்டீசுடன் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் ரோகித் ஷர்மா இடம் பெறாவிட்டாலும், மும்பை அணி மிக வலுவாகவே அமைந்துள்ளது. அஜிங்க்யா ரகானே, பிரித்வி ஷா, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள். அதே சமயம், கம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் கோப்பை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.

373 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி: தொடரை கைப்பற்றி பாக். அசத்தல்

அபு தாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 373 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன் குவித்தது. பகார் ஸமான், சர்பராஸ் அகமது தலா 94 ரன் விளாசினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார் இதைத் தொடர்ந்து, 137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 400 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பகார் ஸமான் 66, அசார் அலி 64, ஆசாத் ஷபிக் 44, பாபர் ஆஸம் 99, கேப்டன் சர்பராஸ் அகமது 81 ரன் விளாசினர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.538 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 164 ரன்னுக்கு சுருண்டு (49.4 ஓவர்) 373 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. ஆரோன் பிஞ்ச் 31, ஹெட் 36, லாபஸ்சேன் 43, ஸ்டார்க் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். உஸ்மான் கவாஜா காயம் காரணமாக களமிறங்கவில்லை.  பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 17 ஓவரில் 2 மெய்டன் உட்பட 62 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். யாசிர் ஷா 3, ஹம்ஸா 1 விக்கெட் கைப்பற்றினர். இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட் வீழ்த்திய அப்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை, பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி அபு தாபியில் 24ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போராடி தோற்றது சென்னையின் எப்சி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், சென்னையின் எப்சி அணி 3-4 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியிடம் போராடி தோற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், நார்த்ஈஸ்ட் வீரர் ரோலின் போர்ஜஸ் தடுக்க முனைந்த பந்து ‘ஓன் கோல்’ ஆக அமைய சென்னையின் எப்சி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 15வது நிமிடத்தில் தோய் சிங் அபாரமாக கோல் அடிக்க 2-0 என சென்னை அணியின் முன்னிலை அதிகரித்தது. பதில் தாக்குதல் நடத்திய நார்த்ஈஸ்ட் அணியின் பார்தலோமி ஓக்பெச்சே 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் தோய் சிங் மீண்டும் கோல் அடிக்க, சென்னையின் எப்சி 3-1 என முன்னிலை வகித்தது.எனினும், உறுதியுடன் போராடிய நார்த்ஈஸ்ட் அணி அடுத்தடுத்து கோல் அடித்து சென்னை அணியை திணற வைத்தது. அந்த அணியின் பார்தலோமி ஹாட்ரிக் கோல் (29வது, 37வது, 39வது நிமிடம்) போட்டு அசத்தினார். இடைவேளையின்போது இரு அணிகளும் 3-3 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியில் ரோலின் போர்ஜஸ் (54வது நிமிடம்) வெற்றி கோல் அடித்து ‘ஓன் கோல்’ தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார்.ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி 3 போட்டியில் 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்க, சென்னையின் எப்சி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

ட்வீட் கார்னர்...: சர்ப்ரைஸ் சந்திப்பு!

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா... கிரிக்கெட் சரித்திரத்தில் மகத்தான சாதனை வீரர்களான இருவரும் நல்ல நண்பர்களும் கூட. இந்திய அணிக்காக சச்சினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக லாராவும் ரன் குவிப்பில் தனி முத்திரை பதித்தவர்கள். டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் சராசரி 53+ என்றால், லாராவும் சராசரியாக 52.88 ரன் குவித்திருக்கிறார். பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொண்ட இந்த நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்து உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வார இறுதியைக் கொண்டாட அருமையான வாய்ப்பு. அன்பு நண்பரின் திடீர் வருகையால் ஆனந்தம்... பிரையன் லாராவுடன் கொண்டாட்டம்’ என்று பதிவிட்டுள்ளதுடன் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மின்டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் சீன நட்சத்திரம் லின் டானுடன் மோதிய கிடாம்பி 18-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கடுமையாகப் போராடிய அவர் அடுத்த 2 செட்களையும் 21-17, 21-16 என வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.  ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் மற்றும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான லின் டானுன் 5 முறை மோதியுள்ள கிடாம்பி 2வது வெற்றியை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் சக இந்திய வீரர் சமீர் வர்மாவுடன் கிடாம்பி மோதுகிறார்.  

அர்ஜென்டினாவை வீழ்த்தியது பிரேசில்

அர்ஜென்டினா - பிரேசில் அணிகள் மோதிய நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெறாத நிலையில், பிரேசில் அணிக்காக நெய்மர் களமிறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன. காயம் காரணமாக வீணான நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி விநாடிகளில் (93வது நிமிடம்), கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி நெய்மர் பறக்கவிட்ட பந்தை மிராண்டா மின்னல் வேகத்தில் தலையால் முட்டி வலைக்குள் திணித்தார். பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இரு அணிகள் 105 முறை மோதியுள்ளதில் பிரேசில் 41-38 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது (26 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன).

பைனலில் மும்பை

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில், 60 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஐதராபாத் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய ரோகித் ராயுடு ஆட்டமிழக்காமல் 121 ரன் (132 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிமார். சந்தீப் 29, மெகதி ஹாசன் 23, பண்டாரி 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். மும்பை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 3, டயஸ் 2, குல்கர்னி, துபே, முலானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 25 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா 17, பிரித்வி ஷா 61 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 55 ரன் (53 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அஹிங்க்யா ரகானே 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாத நிலையில், மும்பை அணி 60 ரன் வித்தியாசத்தில் (விஜேடி முறை) வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கும் 2வது அரை இறுதியில் டெல்லி - ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - ஒமான் இன்று மோதல்

மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஒமான் அணியுடன் இன்று மோதுகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர், மஸ்கட்டில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று ஒமான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.40க்கு தொடங்குகிறது. முன்னதாக, இரவு 8.25க்கு தொடங்கும் தொடக்க போட்டியில் மலேசியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜப்பான் (அக். 21), மலேசியா (அக். 23), தென் கொரியா (அக். 24) அணிகளுடன் இந்தியா மோதுகிறது.

ஆஸ்திரேலியா 145 ரன்னில் ஆல் அவுட் பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை

அபு தாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பகார் ஸமான், கேப்டன் சர்பராஸ் அகமது தலா 94 ரன் விளாசினர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 4, லாபஸ்சேன் 3, ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுதிருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 50.4 ஓவரில் 145 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. ஆரோன் பிஞ்ச் 39, லாபஸ்சேன் 25, மிட்செல் ஸ்டார்க் 34 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5, பிலால் ஆசிப் 3, யாசிர் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்துள்ளது. பகார் ஸமான் 66 ரன், முகமது ஹபீஸ் 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அசார் அலி 54, ஹரிஸ் சோகைல் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் அணி 281 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இன்று பரபரப்பான 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

யூத் ஒலிம்பிக்ஸ்: ட்ரிபிள் ஜம்ப்பில் சுவிஸ் வீராங்கனை அசத்தல்

* வெளிநாட்டு தொடர்களின்போது, வீரர்களின் மனைவியர் தொடர் முழுவதும் உடன் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோஹ்லி விடுத்திருந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. * இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து சொநத காரணங்களுக்காக விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டித் தொடர் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. லூயிசுக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் கியரன் பாவெல் மற்றும் டி20 போட்டிகளில் நிகோலஸ் பூரன் சேர்க்கப்பட்டுள்ளனர்.* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார். * ஐசிசி ஊழல் தடுப்புக்குழு விசாரணையில், இலங்கை அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.* யூத் ஒலிம்பிக்ஸ் தொடரின் ஆண்கள் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சுராஜ் பன்வார்

புரூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.  அர்ஜென்டினாவின்  புரூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டி  நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஐந்தாயிரம் மீட்டர் நடை ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பாக 18 வயதான சுராஜ் பன்வார் கலந்து கொண்டார். இப்போட்டியின் மொத்த தூரத்தை  40 நிமிடங்கள் 59.17 வினாடியில் கடந்து 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் பன்வார் நிகழ்த்தினார். இதேபோல், ஆடவர் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களுடன் 12வது இடத்தில் உள்ளது.

விளைாயட்டு துளிகள்

* வெஸ்ட் இண்டீசுடன் நடைபெற உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார்.* ஐசிசி ஊழல் தடுப்புக் குழு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயசூரியா தான் ஒருபோதும் விதிமுறைகளை மீறி நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.* ஆஸ்திரேலிய தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஆல் ரவுண்டர் ஜீன் பால் டுமினி தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.* மால்டாவை சேர்ந்த வாலெட்டா எப்சி அணிக்காக விளையாட ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.* ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் தனது பயிற்சியாளர் விம் பிஸ்ஸெட்டியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.* கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) விலகியுள்ளார்.

விளைாயட்டு துளிகள்

* வெஸ்ட் இண்டீசுடன் நடைபெற உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார்.* ஐசிசி ஊழல் தடுப்புக் குழு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயசூரியா தான் ஒருபோதும் விதிமுறைகளை மீறி நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.* ஆஸ்திரேலிய தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஆல் ரவுண்டர் ஜீன் பால் டுமினி தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.* மால்டாவை சேர்ந்த வாலெட்டா எப்சி அணிக்காக விளையாட ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.* ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் தனது பயிற்சியாளர் விம் பிஸ்ஸெட்டியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.* கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) விலகியுள்ளார்.

யூத் ஒலிம்பிக்ஸ்: ரஷ்யா ஆதிக்கம்

அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டித் தொடரில் ரஷ்ய அணி இதுவரை 24 தங்கம், 15 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சீனா, ஜப்பான் அடுத்த இடங்களில் உள்ளன. இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களுடன் 12வது இடத்தில் உள்ளது. இந்த தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. முதல் படம்: மகளிர் உயரம் தாண்டுதலில் ரஷ்ய வீராங்கனை மரியா கொச்சனோவாவின் சாகசம். 2வது படம்: கொலம்பியா - கனடா அணிகளிடையே நடந்த மகளிர் ரக்பி செவன்ஸ் போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் பெய்வன் ஸாங்குடன் முதல் சுற்றில் நேற்று மோதிய சிந்து 17-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-16 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.இரு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறிய நிலையில், அமெரிக்க வீராங்கனை 21-17, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 56 நிமிடத்துக்கு நீடித்தது. பெய்வன் ஸாங்கிடம் தொடர்ந்து 3வது முறையாக சிந்து மண்ணைக் கவ்வியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்தியன் ஓபன் தொடரின் பைனலிலும் ஸாங்கிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.

விஜய் ஹசாரே டிராபி முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் மோதல்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. தேசிய அளவிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான விஜய் ஹசாரே டிராபி தொடரில் மொத்தம் 37 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.  சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று (5வது இடம்) ஏமாற்றத்துடன் வெளியேறியது.கால் இறுதி ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்த மும்பை, டெல்லி, ஜார்க்கண்ட், ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. பெங்களூருவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லி - ஜார்க்கண்ட் மோதும் 2வது அரை இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியில் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாட உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கால் இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பீகார் அணியை வீழ்த்தியதால் மிகுந்த உற்சாகமாக உள்ளது. அந்த போட்டியில் 23 வயது வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஸ்பின்னர் ஷாம்ஸ் முலானி 3 விக்கெட் கைப்பற்றினார். அனைத்து வகையிலும் மிக வலுவான அணியாக உள்ள மும்பைக்கு, அம்பாதி ராயுடு தலைமையிலான ஐதராபாத் அணி கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. ஆந்திர அணியுடன் நடந்த கால் இறுதியில் 14 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற ஐதராபாத் அணி, பேட்டிங்கில் சந்தீப், அம்பாதி ராயுடு, அகர்வால், ரோகித் ராயுடு, சுமந்த் ஆகியோரை பெரிதும் நம்பியுள்ளது. ரவி கிரண், முகமது சிராஜ் வேகமும் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நடுவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார்: வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா சஸ்பெண்ட்

புதுடெல்லி: இந்திய அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது நடுவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா 2 ஒருநாள் போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில், கியரன் பாவெல் ஆட்டமிழந்ததை தொடர்ந்து டிவி நடுவரின் அறைக்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீரர்கள் முன்னிலையில்யே 4வது நடுவரையும் தரக்குறைவாகப் பேசினார். இதைத் தொடர்ந்து, கள நடுவர்கள் புரூஸ் ஆக்சன்போர்டு, இனான் கவுல்டு, 3வது நடுவர் நிகெல் லாங், 4வது நடுவர் நிதின் மேனன் ஆகியோர் லா மீது புகார் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி, இந்திய அணியுடன் அக். 21 (கவுகாத்தி) மற்றும் 24ம் தேதி (விசாகப்பட்டிணம்) நடக்க உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்ததுடன் அவருக்கு போட்டிக்கான ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்தது. மேலும், 3 தரக்குறைவு புள்ளிகளும் வழங்கப்பட்டன.

அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசின் வேலைவாய்ப்பில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு அறிவித்ததையொட்டி, முதல்வருக்கு விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா மற்றும் தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.  விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இளைஞர்களுக்கு படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும். இதன் மூலம் அறிவுசார்ந்த,  ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த  இளைஞர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் தங்கள் திறமைகளை உயர்த்திக் கொள்ள ஏதுவாக  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங்கள் நிரப்புவதில்   விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குறைபாடு நிலவுகிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தேன். இங்கே பேசியவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார்கள். அதை பரிசீலித்து, 2 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு பதிலாக 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் பாகிஸ்தான் 282 ரன்னில் சுருண்டது: 6 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார் லயன்

அபுதாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பகார் ஸமான், முகமது ஹபீஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹபீஸ் 4 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஸ்மான் - அசார் அலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. அசார் அலி 15 ரன் எடுத்து நாதன் லயன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹரிஸ் சோகைல், ஆசாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோர் லயன் பந்துவீச்சில் (20வது மற்றும் 22வது ஓவர்) அடுத்தடுத்து டக் அவுட்டாகி அணிவகுத்தனர். பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன் என்ற கவுரவமான நிலையில் இருந்து, 21.4 ஓவரில் 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. லயன் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தாவிட்டாலும் 6 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இந்த நிலையில், பகார் ஸமான் - கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 147 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். சதத்தை நெருங்கிய நிலையில், பகார் ஸமான் 94 ரன் எடுத்து (198 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) லாபஸ்சேன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். பிலால் ஆசிப் 12 ரன், சர்பராஸ் அகமது 94 ரன் (129 பந்து, 7 பவுண்டரி) எடுத்து லாபஸ்சேன் பந்துவீச்சில் பலியாகினர். அடுத்து வந்த யாசிர் ஷா 28, முகமது அப்பாஸ் 10 ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81 ஓவர்). ஆஸி. பந்துவீச்சில் லயன் 4, லாபஸ்சேன் 3, ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்துள்ளது. கவாஜா 3 ரன், சிடில் 4 ரன் எடுத்து அப்பாஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் 'கிங்' கோஹ்லி

மும்பை: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி 116 புள்ளிகள்ளுடன் முதலிடத்தில் உள்ளது.  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகள் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 812 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், அஸ்வின் 8-வது இடத்திலும்,  இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்திலும்,  அஸ்வின்  5-வது இடத்திலும் உள்ளனர்.