Tamilnadu - Dinakaran

கடலூரில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

கடலூர் : கடலூரில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புபவர்கள் http://WWW.JOININDIANARMY.NIC.IN  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நுழைவு அட்டையை பெறலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

கும்பகோணம் அருகே மருத்துவர் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளை

கும்பகோணம்: கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே மருத்துவர் செல்வராஜ் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நகைகளை திருடியதாக செல்வராஜ், மருத்துவமனையில் பணியாற்றும் கீதா என்பவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவமனை ஊழியர் கீதாவிடம் 65 சவரன் நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாபநாசம் அணை நீர் மட்டம் குறைந்தது

நெல்லை : பாபநாசம் அணை நீர் மட்டம் 75 ஆண்டுகளில் முதல்முறையாக 10 அடிக்கும் கீழ் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 143 அடி உள்ள நிலையில் 10 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தது.

சாலை விபத்துகளில் 3 பேர் பலி

பெரம்பூர்: மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார் (20),  தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சையது ஜமீம் அன்சாரி (19) ஆகியோர், நேற்று முன்தினம்  இரவு ஒரே பைக்கில், வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கொடுங்கையூர் என்.எஸ்.கே. சாலையை சேர்ந்த சர்தார் (56) என்பவரை கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்: பள்ளிக்கரணை, மயிலை  பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா (55). இவரது மகன் மோகன்ராஜ் (27). இவர்கள்  இருவரும் நேற்று மதியம் கோயம்பேடு சென்றுவிட்டு பைக்கில்  வீட்டுக்கு புறப்பட்டனர். வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே  சர்வீஸ் சாலையில் சென்றபோது, வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி  இறங்கியதால் கீழே விழுந்த சந்திரா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ்  லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மவுண்ட் போக்குவரத்து  புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி

கோவை: கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி.ஆா்.நடராஜன் 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பி.ஆர்.நடராஜன் தோற்கடித்துள்ளார்.

பொல்லாத ஆட்சி அதுக்கு பொள்ளாச்சியே சாட்சி... அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை உடைத்தெறியும் திமுக

பொள்ளாச்சி: நாடாளுமன்ற தேர்தலில் 39 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சியில் திமுக வெற்றி பெற உள்ளது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 337 இடங்களிலும், காங்கிரஸ் 95 இடங்களிலும், மற்றவை 110 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 37 மக்களவை தொகுதிகளில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சண்முகசுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 18வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,48,967 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980-ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானியும்,  திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா, 1999, 2004 மதிமுக வென்றது. இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 3,90,411 வாக்குகள் முன்னிலை

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்  3,90,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் 2019..: 28,000 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிய அன்புமணி ராமதாஸ்! 7 தொகுதியிலும் பாமகவுக்கு தோல்வி முகம்

தருமபுரரி; தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸூம் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கிடையே சரிசமமான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சரிக்கு சமமான போட்டியில் முன்னிலை இருந்து வந்தனர். இதையடுத்து, சற்று முன்னிலை வகித்த அன்புமணி ராமதாஸ், தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பிற்பகல் நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். திமுக வேட்பாளர் செந்தில் குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி வேட்பாளர்களும் தோல்வியடையும் நிலையில் உள்ளனர். இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் சோக அலை வீசி வருகிறது.

மக்களவைத் தேர்தல் 2019..: 28,000 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கிய அன்புமணி ராமதாஸ்! 7 தொகுதியிலும் பாமகவுக்கு தோல்வி முகம்

தருமபுரரி; தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸூம் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கிடையே சரிசமமான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சரிக்கு சமமான போட்டியில் முன்னிலை இருந்து வந்தனர். இதையடுத்து, சற்று முன்னிலை வகித்த அன்புமணி ராமதாஸ், தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பிற்பகல் நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். திமுக வேட்பாளர் செந்தில் குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி வேட்பாளர்களும் தோல்வியடும் நிலையில் உள்ளனர். இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் சோக அலை வீசி வருகிறது.

மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்யும் காப்பக உரிமையாளர்: சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள மனவளர்ச்சி குன்றியோர் தனியார் காப்பகத்தில் இருப்பவர்களை, அதன் உரிமையாளர் ஈவு இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்யும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனியில் அன்பின் சிகரம் என்ற பெயரில் இயங்கி வரும் மனநலம்  குன்றியோர் காப்பகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த, ஆதரவற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் தங்கியுள்ளனர். அந்தக் காப்பகத்தின் உரிமையாளராக கிருஷ்ணமணி என்பவர் உள்ளார். இந்த நிலையில் அவர், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை பிரம்பால் தாக்கி, காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அங்குள்ள காப்பக நிர்வாகிகள் தங்களை கட்டி வைத்து அடிப்பதாக, ஏதும் அறியாத நிலையில் உள்ள சிறுவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிருஷ்ணமணி மீது சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதி: தோல்வி முகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி

தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி பின்தங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் எந்திரம் மாறிவிட்டதாகக் கூறி மோதல்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் எந்திரம் மாறிவிட்டதாகக் கூறி மோதல் ஏற்பட்டுள்ளது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எந்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படூர் ஊராட்சி வாக்குசாவடியில் பதிவான வாக்குகளில் சந்தேகம்

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படூர் ஊராட்சி வாக்குசாவடியில் பதிவான வாக்குகளில் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. படூர் வாக்குச்சாவடியில் திமுகவுக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதால் சந்தேகம் என திமுக முறையிட்டுள்ளது. திமுக புகாரை அடுத்து வாக்கு எண்ணும் இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில்  விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் உள்ளார். திருமாவளவன் 2885 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நாகையில் தொடர் மின்வெட்டால் நெல் சாகுபடி பாதிப்பு: மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகை: நாகை மாவட்டம், சீர்காழி அருகே தொடர் மின்வெட்டால் கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சீர்காழி தாலுக்கா, ராதாநல்லூர் ஊராட்சியில் 700 ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு விட்ட நிலையில் நிலத்தடி நீரை நம்பியே இவர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைத்து நெல் சாகுபடி செய்து வரும் நிலையில், தற்போது 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகின்றது. இதனால் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாகுபடிக்கான நாற்றுகள் தயாராக இருந்தும் தண்ணீர் இல்லாததால் பலர் நடவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் நாற்றுகள் முற்றி கருகி வருகின்றன. கோடை விவசாயத்தை காப்பாற்ற தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ராதாநல்லூர் விவசாயிகளும்,கிராம மக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்னடைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி, சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தமிழிசையும், எச்.ராஜாவும் பின்தங்கி வருகின்றனர்.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மலைப்பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகு சாகுபடியை சில விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து, மிளகு விளைச்சலில் வருவாய் வருவதால் சற்று ஆறுதலாக உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், அறந்தாங்கி உட்பட இதர பகுதியிலும் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகின்றன. இங்கு தென்னை, மா, பலா, வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள் உட்பட பல்வேறு பயிர்கள் விளைகின்றன. வறட்சி பகுதியாக இருப்பதால் ஆறு, குளங்கள் இல்லாமல் 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவமபர் 16ம் தேதி வீசிய கஜா புயலால் மாவட்டம் முழுவதும் பல லட்சம் அனைத்து வகை மரங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள், பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட விவசாயங்கள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டு பல விவசாயிகள் இதுவரை பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மலைப்பிரதேசங்களில் மட்டும் விளைய கூடிய மிளகு விவசாயத்தை கேரள பகுதிக்கு சென்று மிளகு கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். மிளகு ரகங்கள் 36 வகைகளாக இருந்த போதும் அதில் எந்த ரகம் இங்கு விளையும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இங்கு நன்றாக விளையும் என தேர்வு அதனை அவரது, தென்னை மற்றும் காப்பி, சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டு, ஆண்டுக்கு 1 ஏக்கருக்கு மிக குறைந்த செலவில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மிளகு விற்பனை செய்துள்ளனர். கஜா புயலால், தோட்டத்தில் இருந்த தென்னை, சந்தனம், உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மிளகு சாகுபடி பாதிக்கப்பட்டன. தற்போது, கொடி மிளகு பதிலாக செடி மிளகு பயிரிட்டு அதிக அளவில் மகசூல் செய்து, நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனை அறிந்த விவசாயிகள் பலர் இங்கு வந்து பார்வையிட்டு கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதா மிளகு செடியை தங்களது தோட்டத்தில் பயிரிட்டு சில மாதங்களில் வருவாய் கிடைப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி சற்று ஆறுதலாக உள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கஜா புயலால் எனது தோட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை, காபி, சந்தனம் மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. அதிலிருந்த மிளகு கொடிகள் வளருவதற்கு அருகே மாற்று மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறேன்.இந்நிலையில், கொடி மிளகுக்கு பதிலாக, செடி மிளகு உற்பத்தி செய்து, அதனை எனது தோட்டத்தில் பயிரிட்டு தற்போது நல்ல விளைச்சலில், ஒரு செடியில் குறைந்தது 2 கிலோ வரை மிளகு காய்க்கிறது. எந்த ஒரு விவசாயத்தில் லாபம் கொடுக்காத அளவில் மிளகு நல்ல லாபத்தை கொடுக்கிறது. உற்பத்தி செய்த மிளகை எப்போதும் விற்பனை செய்வதில் பிரச்னையே இல்லாத பயிராக உள்ளது.இங்கு விளைந்த மிளகு ஏற்றுமதிக்கு, ஏற்ற மிளகாக உள்ளதால் அதிகளவு லாபம் கிடைக்கும். கஜா புயலால் நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டாலும் மிளகு விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கிறது என்றனர்.மிளகு ரகங்கள் 36 வகைகளாக இருந்த போதும் அதில் எந்த ரகம் இங்கு விளையும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இங்கு நன்றாக விளையும் என தேர்வு அதனை அவரது, தென்னை மற்றும் காப்பி, சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டு அதிக லாபம் பெறுகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்

கும்பகோணம்: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகி–்ன்றனர்.கோடை காலத்தை சமாளிக்கவும், கடும் வெப்பத்தால் உடல்கள் உஷ்ணம் அடைவதால் குளிர்ந்த தண்ணீர் மற்றும் இயற்கையாக உள்ள பாத்திரங்களில உள்ள தண்ணீர் மற்றும் உணவுகளை சமைக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கும்பகோணம் அடுத்த மாத்தி பகுதியில் இயற்கை உணவுகளுக்காகவும், மண் பானைகள், நீர் அருந்துவதற்கான  மண் டம்பளர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பானைகள் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்கு போதுமான மண் எடுப்பதற்கு அனுமதியில்லாததால் அருகில் உள்ள கோயில் குளத்திலிருந்து அதிக விலைக்கு வாங்கி வநது மண்பாண்ட பொருட்களை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். போதிய மண் கிடைக்காததாலும், மண் எடுப்பதற்கு அனுமதி வழங்காததாலும் தற்போது மண்பாண்ட தொழிலாளா–்களின் வாழ்க்கை அழிந்து வருகிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தும் வகையிலும், தொழிலை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாத்தி பகுதியை சோ்ந்த கண்ணன் கூறுகையில், தமிழகத்தில் ஆறு, வாய்க்காலகளில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால்,  கோடை வெயிலின்  தாக்கம் அதிகமாகியுள்ளது. இயற்கை உணவு, இயற்கை பாத்திரங்களை பயன்படுத்தி வந்தால் உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று முன்னோர்கள் கூறுவர். இதையடுத்து மண்ணால் கப், ஜார், தண்ணீர் பானைகள் தயாரித்து வருகிறோம்.வெயில் காலத்தில் மண்பானையில் குடிநீர் குடித்து வந்தால் உடல் உஷ்ணங்கள் குறையும் என்று ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். மேலும் நாங்கள் வெயில் காலத்தில் உணவுகளை இயற்கையாகவும், உணவுகளின் தன்மை மாறாமலும் பாதுகாக்கும் வகையில் மண்ணாலான பிரிட்ஜ் தயாரிக்கிறோம்.இதில் மூன்று மண்பானைகள் அடுக்குகள்போல் இருக்கும். அதில் பெரியளவில் உள்ளதற்குள் சிறிய மண் பாத்திரத்தை வைத்து மேலே கூம்பு வடிவிலான மூடி போட்டு மூடிவிட வேண்டும். பின் பெரிய பாத்திரத்தில் ஒரத்தில் துளை வழியாக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். இந்த மண்ணால் செய்யப்பட்ட பிரிட்ஜில் இட்லி மாவு மற்றும் உணவு பொருட்களை வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். காய்கறிகள் மற்றும் பழவகைகளை வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பிரிட்ஜ் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.மேலும் மண்ணால் ஜார் பைப் வைத்தது ரூ.300 முதல் 400 வரையிலும், இட்லி பானை ரூ.400, குடுவை, தயிர் கப், ஜூஸ் கப், பணியாரம் சட்டி, ஆப்ப சட்டிகள்  தலா ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பிரிட்ஜ், இட்லி பானைகள், குடுவைகள், கப்புகள் ஆகியவை சென்னை, கேரளா, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். ஆனால் தரைக்கு அடியில் மண்ணை எடுக்ககூடாது என்று அரசின் உத்தரவு இருப்பதால் மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. இதனால் மண் கிடைக்காமல் குளங்களில் உள்ள மண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து மண்ணால் பாத்திரங்களை செய்து வருகிறோம்.எனவே கோடை காலத்துக்கு உகந்த பாத்திரமான மண்பாண்டங்களை தயாரிக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்க, உதவி தொகையும், மண் எடுப்பதற்கு அங்கீகாரமும் வழங்கினால் தான், இனி வருங்காலத்தில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் இருக்கும். எனவே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மண்பாண்ட தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றார்.

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று பழநி கிராமங்களில் மின்சார சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி

பழநி: பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றால் ஏராளமான கிராமங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. சாலையில் உள்ள புழுதிகளுடன் காற்று வீசுவதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரிவதில்லை. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சூறைக்காற்றின் காரணமாக பழநி அருகே உள்ள பாப்பம்பட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. நேற்று பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாகவே இப்பகுதிகளில் கேபிள் டிவிக்களும் பழுதடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது,காற்று பலமாக வீசுவதால் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், காற்று பலமாக வீசும்போது மின்தடை தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இவ்வாறு கூறினர்.

குறைந்த பெட்டிகளோடு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ்: சிலிப்பர் வசதி செய்யப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை:  நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் குறைந்த பெட்டிகளோடு இயக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்த ரயிலில் சிலிப்பர் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் அந்த வழித்தடத்தில் கடந்த ஓராண்டாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாசஞ்சர் ரயில்களே அதிகம் புனலூர் வரை இயக்கப்பட்ட நிலையில், நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் முதல் நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பை, கடையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த எக்ஸ்பிரஸ் 11 பெட்டிகளோடு இயக்கப்பட்டது.இந்த ரயில் காலப்போக்கில் பெட்டிகள் குறைக்கப்பட்டு தற்போது 6 அல்லது 7 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கூட்டம் தினமும் பாலருவி எக்ஸ்பிரசில் அலைமோதுகிறது. பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். நெல்லையை பொறுத்தவரை பாலருவி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமாகவும் செங்கோட்டைக்கு இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் திரளாக அதில் செல்கின்றனர். எனவே பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் இரவு ரயில்கள் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முன்பு 9 பொது பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகளோடு இயக்கப்பட்டு வந்தது. இப்போது வெறும் 7 பெட்டிகளோடு பெயரளவுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். கேரளாவில் பல இடங்களுக்கு செல்வோர் இந்த ரயிலை நம்பியே பயணிக்கின்றனர். எனவே பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்’’ என்றார்.மேலும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று வரை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஸ்லிப்பர் பெட்டி வசதிகளோடு, ஏசி பெட்டிகளோ ஒன்று கூட இல்லை. சாதாரண பொதுப்பெட்டிகளை கொண்டே இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. எனவே பாலருவி எக்ஸ்பிரசில் ஸ்லிப்பர் பெட்டிகளையும் விரைந்து இணைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.