Thanjavoor - Dinakaran

பருவநிலை மாற்றத்தால் குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்

கும்பகோணம்,அக்.16: கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் மின்மோட்டார் உதவியுடன் குறுவை நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடுதுறை 36, 45, சாவித்திரி 1009 உள்ளிட்ட நெற்பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர். இந்நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தற்போது பகலில் கடுமையான வெயில் அடித்த போதும், அதிகாலையில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ேமலும் லேசான குளிர் காற்று அடித்ததால் பருவநிலை மாறி நெற்பயிரில் புகையான் நோய் தாக்கி வருகிறது. தற்போது குறுவை நெற்பயிர்கள் சூழ் பருவமான பால் பருவத்தில் இருக்கும் நிலையில் புகையான்  நோய் தாக்கினால் பதராகி வீணாகிவிடும்.கும்பகோணம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அனைத்தும் சூழ் பருவத்தில் இருந்தன. கடந்த சில நாட்கள் பெய்த மழையாலும், பகலில் வெயில், அதிகாலையில் பனி பெய்வதால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வீணாகி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறுவை நடவு செய்துள்ள விவசாயிகள், வயலில் உள்ள தண்ணீரை வடிகட்ட வேண்டும். அதன்பின் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பான் மூலம் தெளித்தால் தான் புகையான் நோய் தாக்குதலில் இருந்து குறுவை பயிரை காப்பாற்ற முடியும் என்று மூத்த விவசாயிகள் தெரிவித்தனர்.எனவே பருவநிலை மாறியதால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 மாத சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 15வது நாளாக உண்ணாவிரதம்

பாபநாசம், அக். 16: 6 மாதம் சம்பளம் வழங்ககோரி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் 15வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் சம்பளத்தில் பிடித்தம் செய்த எல்ஐசி, ஈபிஎப், கிரெடிட் சொசைட்டி, ஸ்டோர், வங்கி கடன் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்தவில்லை. 2012 முதல் ஈட்டிய விடுப்பு பணம் வழங்கவில்லை. 22017ம் ஆண்டு போனஸ், பண்டிகை முன்பணம் வழங்கவில்லை. எனவே இதை கண்டித்து சர்க்கரை ஆலை முன் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று 15வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தேசிய நீர் விருதுகளை பெறவிண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, அக்.16: நீர்சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன் உடையோர், தேசிய நீர் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய அரசின் நீர் ஆதாரம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தால் நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன் உடையோருக்கு வழங்கப்படும் தேசிய நீர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், சிறு மற்றும் குறு, பெரிய வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.mowr.gov.in, www.cgwb.gov.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மத்திய நில நீர்வாரியத்திற்கு நவம்பர்  30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

வரி உயர்வை கைவிட வலியுறுத்தி பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, அக். 16: பேரூராட்சி பகுதியில் பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சித்திரவேல் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் சந்தானம், ஸ்டாலின் பிரபு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 4வது வார்டுக்கு உட்பட்ட பாந்தக்குளம், அண்ணாநகர் பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் மின் வசதி, குடிமனை பட்டா வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். கடைமடை பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். ஆனந்தவள்ளி வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலை பாலத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் எப்போதும் கிடைக்குமாறு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கோபால், ரவி, முருகேசன், நீலா, பாரதி நடராஜன் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

கும்பகோணம், அக். 16:  கும்பகோணம் பெருநகர திமுக கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், முன்னாள் நகர  மன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. நகர திமுக அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராசாராமன், நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமிழழகன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 18ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது. 20 பேர் கொண்ட வாக்குச்சாவடி குழு பட்டியலை இறுதி செய்ய வேண்டும். பெண்கள், இளைஞர்கள் இணைந்து இன்று முதல் ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை சொல்வதோடு ஊழல் முறைகேட்டில் உள்ள அதிமுக அரசின் வேதனைகளை எடுத்துக்கூறி வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். உறவினருக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என நீதிமன்றத்திலேயே வாதாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ளதை வரவேற்கிறோம். எனவே தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தொமுச ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாபநாசம், அக். 16: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். அப்போது மாணவர்கள் தங்களது இருப்பிடத்தில் மழைநீர் தேங்காதவாறு செயல்பட வேண்டும், சாலைகளில் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷ், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் பங்கேற்றனர். இதேபோல் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமையாசிரியர் மணியரசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கும்பகோணம் கல்லூரி மாணவர் சாதனை

கும்பகோணம், அக். 16: டெல்லியில் இந்திய அளவில் உள்ள என்சிசி வீரர்களுக்கான  சிறப்பு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற என்சிசி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த  மாணவர்கள் ஏராளமான பதக்கங்களை பெற்றனர். இதில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி சார்பில் பங்கேற்று தடை தாண்டுதல் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று 2 தங்க பதக்கங்களை இளநிலை கணிதவியல் துறை 3ம் ஆண்டு மாணவர் லால்மோகன் பெற்றார். சாதனை மாணவரை கல்லூரி முதல்வர் குருசாமி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மகிமாலையில் சிறப்பு குறைதீர் முகாம்

பாபநாசம்,  அக். 16:  அம்மாப்பேட்டை அடுத்த மகிமாலையில் அரசின்  சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், சமூக  பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அருட்பிரகாசம், அம்மாபேட்டை ஆர்ஐ  சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் பங்கேற்றனர். முகாமில்  பயனாளிகளிடம் இருந்து 34 மனுக்கள் வரப்பெற்றன.

வெளிவயலில் 24ம் தேதி கடற்கரை குழு விளையாட்டு போட்டி

தஞ்சை, அக். 16: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள், பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டிணம் வெளிவயல் கிராமத்தில் வரும் 24ம் தேதி துவங்குகிறது. இதில் கையுந்து பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் அணியினர் மாநில போட்டியில் கலந்து கொள்வர். மாநில அளவிலான போட்டியில் கடற்கரை கால்பந்து விளையாட்டில் ஆண்கள் 5 பேரும், பெண்கள் 5 பேரும், கடற்கரை கையுந்து பந்து போட்டியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 2 பேரும், கடற்கரை கபடி போட்டியில் ஆண்கள் 6 பேரும், பெண்கள் 6 பேரும் தேர்வு செய்யப்படுவர்.  மாவட்ட அளவிலான கடற்கரை குழு போட்டியில் முதலிடம் பெறும் அணியில் உள்ள அனைவருக்கும் தலா ரூ.500, 2ம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.350, 3ம் இடம் பிடிப்போருக்கு தலா ரூ.200ம் பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறனை வெளிப்படுத்தலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் கண்டறியும் முகாம்

திருவையாறு, அக். 16: திருவையாறு அடுத்த புதுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகளிர்களுக்கான மார்பக பரிசோதனை மற்றும் ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம் நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்க தலைவர் மருதுதுரை, செயலாளர் அரவிந்தன், பொருளாளர் கார்த்திகேயன், பேராசிரியர் பிரேமலதா, உதவி பேராசிரியர்கள் முத்துவிநாயகம், மருத்துவர் வானதி வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக பரிசோதனை மற்றும் ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை,அக்.16:குரு பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் 4 நாட்கள் நடந்த பரிகார ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் அந்த பேரூழி காலத்திலும் அழியாத பெருமை உடையது தஞ்சை அடுத்துள்ள திட்டை குருஸ்தலமாகும். இந்த கோயிலில் கடந்த 4ம் தேதி குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி நடந்த குரு பெயர்ச்சியையொட்டி கடந்த 10ம் தேதி நடந்த ஏகதின லட்ச்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்கள் வேத விற்பன்னர்கள் தலைமையில் நடந்தது. வேறு வெளி இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கேற்பதை விட குருபகவான் சன்னதியில் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் நற்பலன்களை தரும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். பரிகார ஹோமத்தில் பங்கேற்க நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனை மற்றும் ஹோமத்துக்கு கட்டணம் செலுத்தி தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை அனுப்பி வைத்தவர்களுக்கு அர்ச்சனை சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாதம், பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்பட்டன. குரு பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் முரளிதரன், நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, அக். 16: திருக்காட்டுப்பள்ளியில் பூதலூர் வடக்கு ஒன்றிய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம், பதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது. ஒன்றிய தலைவர் கவியரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். புதிய தலைவராக சக்திவேல், துணைத்தலைவராக ராஜ்குமார், செயலாளராக ஸ்ரீதர், துணை செயலாளராக கவியரசன், பொருளாளராக செபஸ்டின்ராஜா தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் காந்தி, ஒன்றியக்குழு சிவசாமி, சம்சுதீன், முருகேசன், ரமேஷ், மாதர் சங்க கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 16: பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமலிங்கம், மாநில இணை செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தருமகருணாநிதி, துணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பணியாளர்களின் முன்பு பொருட்கள் அனைத்தையும் எடையிட்டு வழங்க வேண்டும்.பொது விநியோக திட்ட பணிகள் முழுவதும் பயோமெட்ரிக், டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்குதல் உள்ளிட்டு பயோமெட்ரிக் மின்னணு குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணியாளர்களை எவ்வித நிபந்தனையின்றி பணிவரன் செய்ய வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்ய கூடாது. 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும். பழுதடைந்த சாக்குகளுக்கு பணியாளர்களிடம் பணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும்.பணியாளர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மருத்துவ செலவினங்களும் பொருந்தும்படி செய்ய வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்களின் லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, மின் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்யக்கூடாது. அரசு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் மாதம்தோறும் மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அரசலாற்றில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்

பாபநாசம், அக். 12: பாபநாசம் அருகே அரசலாற் றில் இருந்து மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்து. மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் படுகை பகுதியில் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் தர்மராஜ், கபிஸ்தலம் ஆர்ஐ ஜெயமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், சிவப்பிரகாசம், சதீஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் அரசலாற்றிலிருந்து அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

584 நிவாரண மையங்கள் தயார்: கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சை, அக். 12: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளருமான பிரதீப் யாதவ் தலைமை வகித்து பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் கனமழை காலத்தில் பாதிப்புகள் ஏற்பட கூடியதாக கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் 1,278 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் காலங்களில் அரசு துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கக்கூடிய கிராமங்களுக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவர் வீதம் முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பாதிப்புகளின்போது கால்நடைகளை பாதுகாப்பது, பராமரிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளனர். மழை, வெள்ள காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் பாதிக்கக்கூடிய பகுதிகளில் 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 195 நிவாரண மையங்கள், இதர பகுதிகளில் 389 நிவாரண மையங்கள் என மொத்தம் 584 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளநீர் தேங்காதவாறு பாலங்கள், மதகுகளுக்குகீழ் உள்ள புதர்கள் மற்றும் செடிகள் அகற்றப்பட்டு நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு ஏதுவாக பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆறு, கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய ஏதுவாக 106 இடங்களில் 42,327 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகர் பகுதிகளில் உள்ள வெள்ளநீர் வழிந்தோடும் வடிகால்களை 305 கி.மீ. நீளத்துக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கு ஏதுவாக மரம் வெட்டும் இயந்திரங்கள், சவுக்கு கம்புகள், பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், டீசல் இயந்திரங்கள் போதுமான அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. அவசர காலங்களில் செய்திகளை பரிமாறி கொள்ள ஏதுவாக வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிடம் விஎச்பி கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் 792 ஏரிகள், 31 குளங்கள் முழு கொள்ளளவையும், 45 நீர்நிலைகள் 70 சதவீதம் கொள்ளளவையும் எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களை உள்ளடக்கி மாவட்ட அளவில் ஒரு குழு, கோட்ட அளவில் 3 குழுக்கள், வட்ட அளவில் 9 குழுக்கள், சரக அளவில் 50 குழுக்கள், சமுதாய அடிப்படையிலான பேரிடர் இன்னல் குறைப்பு திட்டத்தின்கீழ் ஒரு கிராமத்திற்கு 5 குழுக்கள் வீதம் கடலோரத்தில் உள்ள 27 கிராமங்களுக்கு 135 குழுக்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ன் மூலம் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கலாம். இம்மையம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார். பின்னர் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் ஊராட்சியில் கல்யாணஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்யும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் ஆய்வு செய்தார். எஸ்பி செந்தில்குமார், டிஆர்ஓ சக்திவேல் உடனிருந்தனர். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ன் மூலம் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கலாம்.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரைக்கடைக்கு அனுமதி மறுப்பு

கும்பகோணம், அக். 12: தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கும்பகோணம் நகரத்தின் மையத்தில் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதற்காக கோயில் சார்பில் வைக்கப்படும் அலங்கார பொம்மைகள், ராஜ தர்பார் போன்ற குழு காட்சிகளை பார்க்க தினசரி பக்தர்கள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஏல முறையில் விடப்பட்டு அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ெசய்யப்படும். நவராத்திரி விழா நாட்களில் கடைகளில் வியாபாரம் களைகட்டும். இந்நிலையில் இந்தாண்டு தரைக்கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதுடன் வியாபாரம் மந்தமாகிவிட்டது. மேலும் தரைக்கடைகளின் மூலம் கோயிலுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா களையிழந்து காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுகச்சேரியில் இயங்கும் டாஸ்மாக் கடையை விரைந்து மூட வேண்டும்

தஞ்சை, அக். 12: ஒழுகச்சேரியில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை  கலெக்டரிடம் திருவிடைமருதூர் அருகே அணைக்கரை ஊராட்சி ஒழுகச்சேரி கிராமத்தை  சேர்ந்த காந்தி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் ஒழுகச்சேரியில்  டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி பல கட்ட  போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கடை திறக்கும் முடிவை அரசு கைவிடுவதாக  அறிவித்தது. இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் எங்கள் கிராமத்தை  சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இதில் அந்த வழக்கின்  மனுவின் பேரில் கலெக்டர் விசாரித்து முடிவெடுக்க கூறி வழக்கு முடித்து   வைக்கப்பட்டது. ஆனால் அம்மனுவை பரிசீலிக்காமலேயே கடந்த 10ம் தேதி இரவு 7  மணிக்கு திடீரென மேற்கண்ட கிராமத்தில் டாஸ்மாக் கடையை அதிகாரிகள்  திறந்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும். காசி மடத்துக்கு சொந்தமான  இடத்தை 99 ஆண்டு குத்தகைதாரராக பெற்று அதன்பேரில் வழங்கப்பட்ட மற்றும்  பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மடத்தினுடைய விதிகளுக்கு புறம்பாக அரசு,  மடம் சார்ந்த நிலங்கள், சொத்துகளுக்கு வழிகாட்டி வகுத்துள்ள நெறிமுறைகளை  மீறி கட்டிடம் கட்டி மடத்தினுடைய ஆகம மற்றும் நடைமுறை விதிமுறைகளுக்கு  புறம்பாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பது என்பது சட்டவிரோத செயலாகும். சட்டம்  ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று  தெரவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மனு 6 மாதம் சம்பளம் கேட்டு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 11வது நாளாக உண்ணாவிரதம்

பாபநாசம், அக். 12: 6 மாதம் சம்பளம் வழங்ககோரி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் 11வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் சம்பளத்தில் பிடித்தம் செய்த எல்ஐசி, ஈபிஎப், கிரெடிட் சொசைட்டி, ஸ்டோர், வங்கி கடன் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்தவில்லை. 2012 முதல் ஈட்டிய விடுப்பு பணம் வழங்கவில்லை. 22017ம் ஆண்டு போனஸ், பண்டிகை முன்பணம் வழங்கவில்லை. எனவே இதை கண்டித்து சர்க்கரை ஆலை முன் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று 11வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் திருப்புறம்பியம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

கும்பகோணம், அக். 12: திருப்புறம்பியம் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பதிக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. திருப்புறம்பியம் உத்திரை கிராமத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. ேமலும் அந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்று வந்ததால் குடிநீர் குழாயில் விரிசல் பெரிதாகி சாலை உள்வாங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் வந்து கடமைக்காக சாலை உள்வாங்கிய இடத்தில் மண்ணை கொட்டி விட்டு சென்றனர்.இந்நிலையில் குழாயின் விரிசல் மேலும் பெரிதாகி சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் அரசு பேருந்து, இன்னம்பூர் கிராமத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் திருப்புறம்பியம், குடிதாங்கி, உத்திரை கிராமத்திலிருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 கிலோ மீட்டர் துாரமுள்ள இன்னம்பூர் கிராமம் வரை நடந்து சென்று பேருந்தில் ஏறி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து ேபாக்குவரத்தை துவங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கூறுகையில், திருப்புறம்பியம் சாலையில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் குழாய் உடைந்ததையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குடிநீர் குழாய் உடைந்த இடத்தை பார்வையிட்டு கலெக்டரை தொடர்பு கொண்டு விரைந்து சீரமைக்க வலியுறுத்தினேன். மாணவர்கள், பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற அவலநிலை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.

தஞ்சையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

தஞ்சை, அக். 12: தஞ்சை கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் பள்ளி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாமன்னன் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை, ராபின்சன் ஜூனியர் கூடைப்பந்து கிளப் சார்பில் 6வது அகில இந்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நாளை துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. இதில் தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, அரியானா மாநிலம் மற்றும் கரூர், சென்னை, நாகர்கோவில், சேலம் மற்றும் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பிரிவில் 12 அணி பங்கேற்கிறது. இதேபோல் மகளிர்  பிரிவில் 12 அணிகள் பங்கேற்கிறது. போட்டிகளை கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர்  இளவரசு, நிறுவனரும் சர்வதேச கூடைப்பந்து நடுவரான துரைராஜ், ரமேஷ்குமார் செய்து வருகின்றனர்.