Theni - Dinakaran

மண்ணுக்குள் புதைந்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு மூணாறில் பரபரப்பு

மூணாறு,பிப்.14: மூணாறில் தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி இடையே ரூ.381 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை மூணாறு காவல் நிலையம் அருகே இப்பணியின் போது ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த சின்னான், வாசு ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து மண்ணில் இருந்து அவர்களை வெளியே எடுத்தனர்.நூலிழையில் உயிர் தப்பிய சின்னானுக்கு கால், வாசுவிற்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள், மூணாறு தனியார் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்,`` மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது இதனால் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண் இளகிய நிலையில் இருந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகளை அதிகாரிகள் தருவது இல்லை. எனவே இதுபோன்ற ஆபத்து அரங்கேறி வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

ரூ.2 ஆயிரம் வழங்கிட தமிழகஅரசு உத்தரவு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் பட்டியல் சர்வே வங்கி கணக்கு வாங்கும் பணி தொடங்கியது

உத்தமபாளையம், பிப்.14: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என தமிழகஅரசு உத்தரவிட்டதை அடுத்து உத்தமபாளையம் தாலுகாவில் இதற்கான பட்டியலை சர்வே செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் ஊராட்சிகளான ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், டி.சிந்தலைசேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது.இந்த பட்டியலை எடுத்து கொண்டு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது குடியிருக்கிறார்களா, குடும்ப நபர்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் திரட்டப்படுகின்றன. மேலும் வெளியூர்களுக்கு சென்றவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்ட விபரங்களும் பெறப்படுகிறது. இதனை வாங்கி சரியான முறையில் தகவல்களை பெற்ற பின்பு மொத்த பட்டியலும் அரசு உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கம்பம் பள்ளியில் பணம், காமிரா திருட்டு

கம்பம், பிப். 14: கம்பத்தில் தனியார் பள்ளி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி காமிரா திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கம்பம் எல்.எப்.மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பெரோஸ் ஜாபர் குரைஷ் (49) இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம்போல் பள்ளிகூடத்தினை பள்ளி மேலாளர் திறக்க சென்றுள்ளார். அப்போது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணமும், சிசிடிவி காமிரா, டிவிஆர், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பெரோஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

விளைச்சல் அதிகம் விலையில்லாமல் வீழ்ந்தது சவ்சவ் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, பிப்.14: மயிலாடும்பாறை அருகே விளைச்சல் அதிகமானதால் சவ்சவ் விலை குறைந்துள்ளது. இதனால் நஷ்டமடைந்த தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மயிலாடும்பாறை அருகே கருப்பையாபுரம் கிராமத்தில் சவ்சவ் (சொச்சக்காய்) விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை போன்ற நகரங்களுக்கு காய் அனுப்பப்படுகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ,8லிருந்து 9 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் சவ்சவ் விவசாயம் செய்வது இதுவே முதல்முறையாகும். விளைச்சல் அதிகமாக இருக்கிறது. ஆனால் விலை கிடைக்கவில்லை. கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறோம். எனவே, இப்பகுதியில் சௌ சௌ காய்கறி விளைச்சலில் நஷ்டமைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பு

போடி, பிப். 14: போடியில் உள்ள டாஸ்மாக் கடையில் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் கடை ஊழியர் சக்தி கடையை திறந்த போது உள்ளே பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், போடி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள், டாஸ்மாக் கடையில் ஏழரை அடி நீள சாரைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து போடி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையம் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு சர்வர் கோளாறாம்

உத்தமபாளையம், பிப்.14: உத்தமபாளையம் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை இன்னும் கிடைக்காத நிலையில் தினமும் முதியவர்கள் திண்டாடி வருகின்றனர்.உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்ளிட்ட நகராட்சிகள், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, ஓடைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளன. இதில் வயதானவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், முதிர்கன்னிகள் போன்றவர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை வாங்கியே பெரும்பாலான முதியோர் மருத்துவசெலவு, சாப்பாட்டு செலவு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்தின் 7ந்தேதிக்குள் இந்த தொகை முதியவர்களுக்கு கிடைத்துவிடும்.உத்தமபாளையம் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் அதிகாரிகள் மாதந்திர பட்டியலை தயார் செய்து சார்நிலைக்கருவூலத்திற்கு அனுப்புவார்கள். இதனை ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து சம்பந்தப்பட்ட வங்கிகள், மற்றும் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாக கிடைக்கும். இதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் இன்னும் பணம் கிடைக்கவில்லை. கடந்த 1 வாரமாகவே முதியோர் உதவிதொகை பெறுபவர்கள், வங்கி வணிக தொடர்பாளர்களை சந்திக்கின்றனர். ஆனால் பணம் இன்னும் கணக்கில் ஏறவில்லை என வங்கி அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். இதனால் முதியவர்கள் திண்டாடி வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `` ஆன்லைன் பரிவர்த்தனையில் சர்வர் குளறுபடியால் பணம் கடந்த 1 வாரமாக ஏற்றமுடியவில்லை. உத்தமபாளையம் சார்நிலைகருவூலத்தில் இந்த பிரச்னை உள்ளது. இதனை சரிசெய்து பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

தேவாரத்தில் 5 பவுன் திருட்டு

தேவாரம், பிப்.14: தேவாரத்தில் வீட்டில் வைக்கப்பட்ட 5 பவுன் தங்கநகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேவாரம் டி.முணான்டிபட்டியை சேர்ந்தவர் குருநாதன்(60), டீக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் உள்ள மேஜை டிராயரில் 5பவுன் தங்க நகை வைத்துள்ளார். இதனை தேவைப்படும்போது எடுப்பது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நகையை தேடிய போது காணவில்லை. இதுகுறித்து தேவாரம் காவல்நிலையத்தில் குருநாதன் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ அப்துல்ரஹீம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாவட்டம் முழுவதும் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா

உத்தமபாளையம், பிப்.14: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர், ஞானம்பிகை கோயிலில் நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.உத்தமபாளையத்தில் தென்காளகஸ்தி என அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோவில் ராகு, கேது பரிகாரஸ்தலங்களாக உள்ளன. நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு எந்தவிதமான உருவமும் இல்லை. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரண்டு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாக சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்கி இருப்பர். நேரெதிராக ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் இடப்பெயர்ச்சி அடைவர். தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசிற்கும் நேற்று சரியாக பகல் 2.02 மணிக்கு பெயர்ச்சியானார்கள். இதனை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை, சிறப்புயாகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கம்பம், கூடலூர், சின்னமனூர், போடி, தேவாரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம்பெரியகுளம் ஞானம்பிகை சமேத காளஹஸ்திஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி நடைபெற்றது. குருக்கள் கணேசன் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி தனி சன்னதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. பாலசுந்தரம் தாசில்தார் (ஓய்வு), பழனி ராஜாராம், தங்கபாண்டி, ராம், காமாட்சி விஸ்வநாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி அளவில் ராகு கேதுகளுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெறுகிறது.போடிபோடியில் சுப்ரமணியர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு நவக்கிரகத்தில் அமர்ந்திருக்கும் ராகு கேதுவிற்கு 18 வகையாக சோடாபிஷேகமும்,அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாதிரி வாக்குப்பதிவு 538 வாக்குப்பதிவு மையங்களில் 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர்

தேனி, பிப். 14: தேனி மாவட்டத்தில் 538 வாக்குச்சாவடி மையங்களில் நடமாடும் வாக்குப்பதிவு உறுதிசெய்யும் இயந்திரம் மூலம் 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.வாக்குப்பதிவு உறுதி செய்யும் முறையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திர முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1128 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 538 வாக்குச்சாவடி மையங்களுக்கு நடமாடும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்துடன் தேர்தல் பணியாளர்கள் சென்று வாக்காளர்களிடம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, இதில் தாங்கள் வாக்களித்த வாக்கு தான் வாக்களித்த சின்னத்தில் பதிவாவதை உறுதிபடுத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று வாக்குப்பதிவை கடந்த 9ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இத்தகைய வாக்குப்பதிவு நாளை முடிவடைய உள்ளது. கடந்த 9ம் தேதி முதல் நடந்த வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாமில் 538 வாக்குச்சாவடி மையங்ஙகளிலுமாக மொத்தம் 26 ஆயிரம் பேர் மாதிரி வாக்களித்து, தாங்கள் வாக்களித்த வாக்கு பதிவானதை உறுதி செய்யும் இயந்திரம் மூலம் அறிந்து கொண்டுள்ளனர்.

போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போடி, பிப். 14: போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் பசுமாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போடி அருகே சில்லமரத்துப்பட்டி பொதுநூலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்.பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டுத் தீவனங்களுக்கு 50 சதம் மானியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில் அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், பசுமாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியகுளத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மந்தம்

பெரியகுளம், பிப்.14: பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சிறு சந்துகளில் பேவர்பிளாக் கற்கள் அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் கற்கள் பதிக்கவில்லை. இதனால் அப்பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் வடகரை 3வது வார்டு பகுதியில் உள்ள தெற்கு பூந்தோட்ட தெருவில் கற்கள் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது.இந்த தெருவில் குறிப்பிட்ட தூரம் வரை கற்கள் பதித்துவிட்டு 20 மீட்டர் அளவிற்கு கற்கள் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த இடம் மட்டும் பள்ளமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் அவ்வப்போது தெருவிளக்கும் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் கீழே விழுந்து விடுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். அங்கு பதிக்கப்பட்ட கற்களும் சீராக பதிக்கப்படவில்லை என்றும் புகார் கூறினர். அதே பகுதியில் பாதாளச்சாக்கடை இணைப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாக்கடையில் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் தெரிவித்தனர். எனவே, நகராட்சி நிர்வாகம் கற்கள் அமைக்கும் பணியை முடிக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோட்டக்கல்லூரிக்கு புதிய முதல்வர் பொறுப்பேற்பு

பெரியகுளம்,பிப்.14: பெரியகுளம் தோட்டக் கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய முதல்வராக டாக்டர் டி. ஆறுமுகம் பதவியேற்றுள்ளார். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில் காய்கறித்துறை பேராசிரியர் மற்றும் தலைவராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று பெரியகுளம் தோட்டக்கலைகல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.எஸ்எம்எஸ்., இண்டர்நெட் மூலமாக உலகப்பிரபலமான ‘ஸ்மைலி’ எனும் புன்சிரி சின்னம் தனது 36வது பிறந்தநாளை விரைவில் கொண்டாட உள்ளது. 1982 செப்.19ம் தேதி பிட்ஸ்பர்க்கில் கார்னெகிமெலன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட்ஃபான்மேன் தனது ஆன்லைன் புல்லட்டின் போர்டிற்கு அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஸ்மைலி பிறந்தது.புல்லட்டினின் சிறு சிறு கிண்டல், கேலிகள் கூட சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே ஸ்காட் இந்த ஸ்மைலியை உருவாக்கினார்.

இன்று முதல் 4 நாட்கள் கொண்டாட்டம் தேனி நாடார் உறவின்முறை நூற்றாண்டு விழா அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

தேனி, பிப். 14: தேனி நாடார் உறவின்முறையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இதுகுறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தொடங்கி 100 ஆண்டுகளாகிறது. இந்த உறவின்முறையின் கீழ் 12 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனவே, உறவின்முறை மற்றும் கல்விநிறுவனங்களில் நூற்றாண்டு விழா இன்று(14ம்தேதி) முதல் பிப்.17 ம்தேதி வரை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.இன்று(14ம்தேதி) தேனி நகர் பெரியகுளம் ரோட்டில் உள்ள உறவின்முறை தலைமை அலுவலகத்தின் கட்டிட முகப்புத் தோற்றம் திறக்கப்பட உள்ளது. இதேபோல தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவுவாயில் திறக்கப்பட உள்ளது. மாலையில் இசைத் திருவிழா நடக்க உள்ளது. நாளை (15ம்தேதி) சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்டு மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரிதும் துணை வீட்டுச்சூழலே, பள்ளிச்சூழலே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட உள்ளது. 16ம்தேதி நாடார் சரசுவதி துவக்கப்பள்ளியில் புதிய கேண்டீன் திறப்பு விழா நடக்க உள்ளது. வருகிற 17ம்தேதி நடக்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நாடார் சரசுவதி துவக்கப்பள்ளியில் கடடப்பட்டுள்ள காமராஜர் கல்வி வளாகத்தையும், காமராஜர் கலையரங்கத்தையும் திறந்து வைப்பதோடு, நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகின்றனர் என்று கூறினார். பேட்டியின் போது உறவின்முறை தலைவர் முருகன், பொருளாளர் ஜவஹர், உபதலைவர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

திமுக சார்பில் போடி, வருசநாட்டில் ஊராட்சி சபைக்கூட்டம்

போடி, பிப். 14: போடி அருகே சிலமலை, மணியம்பட்டி, நாகலாபுரம் போன்ற கிராம பஞ்சாயத்துகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நடைபெற்றது.போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். சிலமலை கிளை செயலாளர் ராமர் லட்சுமணன், மணியம்பட்டி கிளை செயலாளர் அய்யப்பன், நாகலாபுரம் கிளை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், முன்னாள் போடி ஒன்றிய குழுத்தலைவர் செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் மயில்சாமி அன்புசெழியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வருசநாடுகடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, முருக்கோடை, செங்குளம் தும்மக்குண்டு ,சிங்கராஜபுரம் , கருப்பையாபுரம், போன்றகிராமப் பகுதிகளில் திமுக கட்சி சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசன், மாவட்ட மருத்துவ அணி துணைச்செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்ேபாது கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகையில், `` மலைக்கிராம வெளியேற்ற வேண்டும் என வனத்துறை துடிக்கிறது. ஆனால், அதிமுக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மலைக்கிராம மக்களின் நலனுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும். மலைக்கிராம மக்களுக்காக போராட எப்போதும் தயங்காது’’ என்று கூறினார்.

கருநாக்கமுத்தன்பட்டி அரசு விழாவில் பரபரப்பு

கம்பம், பிப். 14: கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். சப்கலெக்டர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார்.சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைபட்டா, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை என 61 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 26 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் டிஎஸ்பி சீமைச்சாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றம் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சியின்போது திடீரென மேடைக்கு அருகே மக்கள் கூட்டமாக சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே மேடையிலிருந்த அனைவரும் மனுவாங்கினர். உடனே நிகழ்ச்சி முடிந்ததாக தேசியகீதம் இசைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் உட்பட அதிகாரிகள் வெளியேறிச் சென்றனர். ஆனால் அப்போது மனுவுடன் காத்திருந்த பொதுமக்கள் மனுவாங்க ஆளில்லை என்ற விரக்தியில் மனுவை கீழே வீசினர். இதை பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்ததும், சிறிது நேரத்தில் அதிகாரிகள் யாரும் வராமல் ஒரு தலையாரி மட்டும் வந்து அங்கு கிடந்த மனுக்களை எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

போடி அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழும் அபாயம் பீதியில் மாணவர்கள்

போடி, பிப். 14: போடி அருகே மேலசொக்கநாதபுரம் ஆரம்ப பள்ளியின் ஓடுகள் மேயப்பட்ட மேற்கூரை உடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.போடி அருகே போ.மேசொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேலசொக்கநாதபுரம், கீழசொக்கநாதபுரம், வினோபாஜிகாலனி, தர்மத்துப்பட்டி,ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி என கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் விவசாய, விவசாயக் கூலித்தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளுக்காக போடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது. பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்களும், 90 மாணவ, மாணவியரும் படித்து வருகின்றனர்.இப்பள்ளியின் வகுப்பறை மேற்கூரை ஓடுகள் பதித்திருப்பதால் கட்டைகள் பழுதாகியும் ஒடுகள் அவ்வப்போது கீழே ஒவ்வொன்றாக வகுப்பறைக்குள் விழுந்து வருகிறது. காற்று காலங்களில் வேகமாக வீசுகின்ற போது தூசி மற்றும் மண் வகுப்பறைகள் விழுவதால் மாணவ, மாணவியர், ஆசிரியர் கண்கள் பாதிக்கும் நிலை உள்ளது.குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீரும் வகுப்பறைக்குள் உள்ளே கொட்டுவதால் மாணவ, மாணவியர் மட்டுமின்றி பாடப் புத்தகம், நோட்டுகள் நனைந்து பாதுகாப்பு இல்லா நிலை ஏற்படுகிறது. எனவே, துவக்கப்பள்ளியில் பழுதான மேற்கூரை இடிந்து உயிர்ப்பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் வாங்காததால் மனுக்களை தரையில் வீசிச் சென்ற மக்கள் இரண்டரை ஆண்டாக இழுத்தடித்த தங்கம், உதவித்தொகை கிடைத்தது போடி மக்கள் மகிழ்ச்சி

போடி, பிப். 14: இரண்டரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கமும், திருமண உதவித் தொ கையும் கிடைக்காமல் இழுத்தடிக் கப்பட்டு வந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் அவை கிடைத்துள்ளது போடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையில் படித்த இளம்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகையும், 12ம் வகுப்பிற்கு மேல் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவித் தொகையாக உயர்த்தி வழங்கி வருகிறது.இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை உள்பட நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.தாலிக்கு தங்கம் கேட்டு மனு செய்தவர்களுக்கும், திருமண உதவி தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கும் ஆயிரத்திற்கும் மேலானோர் இனி கிடைக்காது என்ற நம்பிக்கையை இழந்தனர். பல தம்பதியினர்களுக்கு குழந்தைகளும் பிறந்து பெற்றோர்களாகி விட்டனர். அதன்படி தேனி, போடி, சின்னமனூர் ஒன்றியங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் போடி சட்டமன்ற தொகுதியில் திருமண உதவித்தொகை கேட்டு அலைந்து வந்தனர். வட்டிக்கு கடனாக வாங்கி திருமணத்தை நடத்திய பலர் உதவி தொகை கிடைக்காமல் வட்டி கட்ட சிரமப்பட்டனர்.இதுகுறித்து தினகரனில் செய்தி பிப்.7ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக இரண்டு நாட்களுக்கு முன்பாக தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டம் முழுவதும் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியால் இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகையும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளளனர். தினகரன் நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு ‘குடிமகன்கள்’ ஓய்வறையாக மாறிய பயணிகள் நிழற்குடை

சின்னமனூர், பிப். 13: சின்னமனூரில் பயணிகள் நிழற்குடை ‘குடிமகன்களின்’ ஓய்வறையாக மாறியதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் காந்தி சிலை அருகே தேனி மற்றும் போடிக்கு செல்லும் பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் உள்ளன. தேனி மற்றும் போடிக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடைகளில் அமர்ந்து பஸ்களுக்காக காத்திருப்பர். இந்நிலையில் சில மாதங்களாக இந்த நிழற்குடையை மறைத்து பேனர்கள் வைக்கப்படுகின்றன. நிழற்குடைகள் முழுவதும் மறைக்கப்படுவதால் பயன்பாடின்றி உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த ‘குடிமகன்கள்’ சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.மது அருந்திய ‘குடிமகன்கள்’ ஓய்வெடுக்கும் அறையாக இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் நிற்க வேண்டியுள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, நிழற்குடையில் குடிமகன்கள் ஓய்வெடுப்பதை தடுக்க வேண்டும். நிழற்குடையை மறைத்து பேனர்கள் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘டெமோ’

தேவதானப்பட்டி, பிப். 13: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் டெமோ செய்து அதிகாரிகள் காண்பித்தனர்.ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்கள் டெமோ செய்து பார்ப்பதற்கு வைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் வாக்காளர் தாம் அளித்த வாக்கு குறித்து ஏற்படும் சந்தேகத்திற்கு தனி வட்டாட்சியர் குமார் விளக்கமாக பதிலளித்தார். ஏராளமான பொதுமக்கள் மாதிரி வாக்களித்து சந்தேகத்தினை கேட்டு தெரிந்துகொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், விஏஓ சோனை, ஊராட்சிமன்ற செயலாளர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

தேனி மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

தேனி, பிப். 13: தேனி மாவட்டத்தில் 16ம் தேதி நடக்க உள்ள ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.தேனி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தேனியில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணித் தலைவர் எல்.மூக்கையா, தீர்மானக்கு இணைச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். தேனி நகர பொறுப்பாளர் முருகேசன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தின்போது வருகிற 16ம்தேதி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர் ஆய்வுக்கூட்டங்கள் நடக்க உள்ளது. மேலும், பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டியிலும், ஆண்டிபட்டி ஒன்றியம் திருமலாபுரத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 15ம்தேதி தேனி மாவட்டத்திற்கு வரஉள்ளார். திமுக தலைவரான பிறகு தேனி மாவட்டத்திற்கு முதல்முறையாக வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேனி மாவட்ட எல்லையான காட்ரோட்டில் 15 ம்தேதி இரவு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், 16 ம்தேதி நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பெருந்திரளாக தொண்டர்கள் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல்.பாஸ்கரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மயில்வாகணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ஜீவா, நகர செயலாளர்கள் பெரியகுளம் முரளி, கூடலூர் லோகன்துரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியகுளம் பாண்டியன், ஆண்டிபட்டி மகாராஜன், கடமலைக்குண்டு வக்கீல்.சுப்பிரமணி, கம்பம் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.