Thiruvarur - Dinakaran

வேறு இடத்திற்கு நிரந்தரமாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, பிப்.15:  மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு 32வது வார்டு  டெப்போ ரோட்டில் ஏழு ஏக்கர் பரப்பளவில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நகரம் முழுவதிலும்  உள்ள 33 வார்டுகளில் சேரும் 50 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை கூளங்கள் இந்த கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைக் கிடங்கை சுற்றி உள்ள பல்வேறு நகர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து உரம் தயாரிக்க போவதாகவும், மக்கா குப்பைகளை தனியாக பிரித்து திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் முலம் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடுவதற்கு பயன்படும் வகையில் பொது ஏலம் விட்டு நகராட்சிக்கு வருமானம் ஈட்டப்படும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு அவைகள் பயன்படுத்தாமல் கிடப்பதாக மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து நகர அமமுக செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் துருப்பிடித்து கிடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் மக்கும் குப்பைகளோடு கலந்து மலை போல் குவிந்து கிடக்கிறது. கோழி இறைச்சிகளை சாக்கு பைகளில் கட்டி குப்பைகளோடு சேர்ந்து கிடப்பதால் மிகக் கடுமையான துர்நாற்றத்தை அப்பகுதி மக்கள் தினமும் அனுபவிப்பது வாடிக்கையாகி விட்டது. மிகப் பெரிய குப்பைக் கிடங்கை கண்காணிப்பதற்கு குறைந்த அளவிலான  துப்புரவு பணியாளர்களை  மட்டும் நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த குப்பை கிடங்கை நகராட்சி பணியாளர்கள் சிலரே கோடை காலங்களில் தீ வைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுவதை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இக்குப்பை கிடங்கை வெகு விரைவில் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.   15வது வார்டு திமுக செயலாளர் பழனிச்செல்வன் கூறுகையில், மழை காலங்களில் குப்பைக் கழிவுகளில் தேங்கும் நீர் முலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் என பரவி பொதுமக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நகராட்சியின் இக்குப்பை கிடங்கை நகருக்கு வெளியே வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்ததோடு இல்லாமல் பல்வேறு போராட்டங்களையும்  நடத்தியுள்ளனர். கிடங்கு தீப்பிடித்து எரியும்போது  ஏற்படும் கடுமையான புகை மூட்டத்தால் குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் ஏராளமான முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த பழ.மணி நகர் மன்ற தலைவராக  இருந்தபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இக்குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற ரூ.25 லட்சம் நிதி  ஒதுக்கி மாளிகை மேடு, தருசுவேலி போன்ற பகுதிகளில் புதிய இடத்தை தேர்வு செய்தும் இருந்தார். ஆனால்  பல்வேறு அரசியல் காரணங்களினால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கை நகருக்கு வெளிய வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.  இதுபற்றி மன்னார்குடி நகராட்சி நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, டெப்போ ரோட்டில் இயங்கும் குப்பை கிடங்கு வெகு விரைவில் அப்புறபடுத்தப்பட உள்ளது. அதற்கு பதிலாக நகரம் முழுவதிலும் உள்ள வார்டுகளில் சேரும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே மக்கும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கவும். மக்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யவும் வடசேரி ரோடு, ஆர்பி சிவம் நகர், டெப்போ ரோடு ஆகிய 3 இடங்களில் பெரிய யூனிட்டுகளும், மேலும் பல்வேறு வார்டுகளில் 8 இடங்களில் யூனிட்டுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறினர்.

திருவாரூரில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டு பராமரிப்பில்லாத நவீன எரிவாயு தகன மேடை

திருவாரூர், பிப்.15:   திருவாரூரில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு பராமரிப்பில்லாத நவீன எரிவாயு தகன மேடையினை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 ஆயிரம் குடியிருப்புகளில் 54 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ள நிலையில் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் வசிப்பவர்களுக்கு நகரின் நெய்விளக்கு தோப்பில் உள்ள சுடுகாடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மழை காலங்களில் விறகு மற்றும் வரட்டிகள் தட்டுபாடு ஏற்படும் நிலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் இதே சுடுகாட்டின் ஒரு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன எரிவாயு தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட தகனமேடைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எப்படி பராமரிப்பது போன்ற பல்வேறு காரணங்களினால்  பணிகள் முடிந்தும் சுமார் 2 ஆண்டு காலம் வரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாத நிலையில் இதனை பராமரிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகமானது கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி நபர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக பெறப்படும் நிலையில் அதில் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.100 மட்டும் பங்கு தொகையாக செலுத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும் இந்த தகன மேடையானது தற்போது சரிவர பராமரிக்கப்படாததன் காரணமாக  இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு சரிவர இடம் கிடைக்காததால் இதனை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரகத் திறனாய்வுத் தேர்வு நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் தேர்ச்சி

திருத்துறைப்பூண்டி, பிப்.15:  ஊரக திறனாய்வுத் தேர்வில் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். 2018-19ம் ஆண்டு ஊரகத் திறனாய்வு தேர்வில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரித்திகா, தாட்சாயினி, வினிதா, ராமேஸ்வரி, விக்னேஷ், மாதவன், பழனிதாஸ், நரேஷ்ஜி, ஜவஹர், கார்தீஸ்வரன், பாலமுருகன் ஆகிய 11 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படும். அந்த காசோலைகளை மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தங்கராசு வழங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வன், யோகராசன், அன்புகுமார், யோகேஸ்வரி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

நெல் தரிசு, உளுந்து பயிரில் ஏற்படும் புரோடினியா புழு, மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை

மன்னார்குடி, பிப்.15:  நெல் தரிசில் உளுந்து பயிரில் புரோடினியா புழு மற்றும் மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா, ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் தரிசு, உளுந்து மற்றும் பச்சை பயிர்களில் புரோடினியா  புழுவானது அதிக அளவில் சேதத்தை உண்டாக்குவதால் மகசூல் பாதிப்படைகிறது. இப்புழுவானது இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும். இப்புழுவின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் புழுக்களானது மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களின் பதுங்கி இருக்கும். இதன் அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிற கோடுகளுடனும், பின் இறக்கை பழுப்பு நிறமாகவும், பழுப்பு நிறத்திட்டுகளுடனும் காணப்படும். ஒரு பெண் அந்துப்பூச்சி 200 முதல் 300 முட்டைகள் வரை இலைகளின் மேற்பரப்பில் குவியலாக இட்டு தன் உடம்பில் செதில்களால் முடி வைத்திருக்கும். இப்பூச்சியின் முட்டை குவியலையும், முட்டையில் இருந்து பொரித்து கூட்டமாக மேயும் வளர்நிலை புழுக்களையும் சேகரித்து அழித்திட வேண்டும். இப்பூச்சியினை அழிக்க வீட்டிலுள்ள ஊதா அல்லது கறுப்பு நிற துணிகள் அல்லது கிழிந்த சாக்கை சிறு சிறு துண்டாக வெட்டி காலை வேளையில் ஆங்காங்கே வைக்கும்போது புரோடினியா புழுக்கள் இருட்டை தேடி இத்துணிக்குள் வந்தடையும். அப்போது புழுக்களை சேகரித்து அழிக்கலாம். இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோர் பைரிபாஸ் 20 இசி 500 மிலி அல்லது டைகுளோர்வாஸ் 76 டப்பிள்யூ எஸ் சி 400 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து இப்பூச்சியினை கட்டுப்படுத்தலாம். உளுந்தில் மஞ்சள் தேமல் நோய்:    நெற்பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யப்படும் உளுந்தில் மஞ்சள் தேமல் நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும். இந்நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவும் ஒரு வகை நச்சுயிரி நோயாகும். இளம் இலைகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் முதலில் தோன்ற ஆரம்பிக்கும். புதியதாக தோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுக்கள் மாறி மாறி காணப்படும். பயிர்களானது வளர்ச்சியின்றி குட்டையாக காணப்படும். இவற்றின் தாக்குதலால் மிகக் குறைந்த பூக்கள் மற்றும் காய்களை மட்டுமே உற்பத்தியாவதால் மகசூல் இழப்பு ஏற்படும். இந்நோயை கட்டுப்படுத்த விதைகளை இமிடாகுலோபிரிடு 5 மிலி மருந்தினை 1 கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் வரப்புகளில் சோளப்பயிரை வரப்பு பயிராக வளர்த்து அதில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இந்நோய் தாக்கப்பட்ட செடியினை கண்டவுடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். 1 ஏக்கருக்கு டைமீத்தோயேட் 300 மிலி அல்லது தயாமித்தாக்சாம் 50 கிராம் மருந்தினை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுத்து நிறுத்த

திருவாரூர், பிப்.15:    திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் நகராட்சியின் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி மூலம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலானது கழிவுநீர் செல்லும் சாக்கடையாகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இவ்வாறு இருந்து வரும் நிலையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் பட்சத்தில் இந்த கழிவுநீர்கள் அனைத்தும் பாதாள சாக்கடைக்கு சென்றுவிடும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பாதாள சாக்கடை திட்டமானது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததன் காரணமாக மழை காலம் உட்பட பெரும்பாலான நேரங்களில் கழிவுநீரானது வீடுகளுக்குள் புகும் நிலை இருந்து வருவதால் இந்த திட்டத்தில் இணைப்புகளை பெறுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.  இதன் காரணமாக தற்போது வரையில் நகரில் மழைநீர் வடிகால் என்பது கழிவுநீர் செல்லும் சாக்கடையாகவே இருந்து வருகிறது. மேலும் இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் அதன் முடிவில் ஏதாவது ஒரு பாசன வாய்க்கால் அல்லது பாசன ஆறுகள் ஆகியவற்றில் முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கழிவுநீர் அனைத்தும் தற்போது வரையில் நகரில் செல்லும் பி.சேனல் பாசன வாய்க்கால், பழவனக்குடி பாசன வாய்க்கால் உட்பட பல்வேறு வாய்க்கால்களில் கலந்து வருகின்றன.  இதேபோல ஓடம்போக்கி ஆறு என்பது திருவாரூர் அருகே எண்கன் என்ற இடத்தில் வெட்டாற்றிலிருந்து பிரிந்து அம்மையப்பன், திருவாரூர், கிடாரங்கொண்டான், ஆண்டிபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக நாகை மாவட்டத்திற்கு செல்கிறது. இந்நிலையில் இந்த பாசன ஆறானது திருவாரூர் நகரை ஓட்டியவாறு செல்வதால் நீர் வரும் காலங்களில் நகரில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் இந்த ஆற்று நீரினை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதில் நகராட்சியின் கழிவுநீர் கலப்பதால் இந்த நீரினை பயன்படுத்தும் பொது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடலில் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதால் இந்த ஆற்று நீரினை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.   எனவே  இந்த கழிவுநீர் கலப்பதனை  தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணி துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ைஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் 19வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

திருவாரூர், பிப்.15:   திருவாரூர் அருகே திருக்காரவாசலில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று 19வதுநாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகன் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருவாரூர் மாவட்டம்  திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த மாதம் 27ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் நேற்றும் 19வது நாளாக இந்த போராட்டமானது போராட்ட குழு பொறுப்பாளர்கள் தியாகராஜன், சுப்பையன், சரவணன் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.   இதில் பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற கூட்டதொடரில்  இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தினை ரத்து செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மன்னார்குடி அருகே பின்பக்க கதவை உடைத்து அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி

மன்னார்குடி, பிப்.15:    மன்னார்குடி அருகே பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள் பீரோவை உடைத்ததில் நகைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.    மன்னார்குடி அருகே அசேசம் ராஜராஜன் நகரில் வசிப்பவர் முகமது அபூபக்கர்(54). இவரின் மனைவி ரசியாபானு(48). இவர் ராதா நரசிம்மபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு ரசியாபானு பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலை வீட்டிற்கு வந்த அவர் முன்புறம் இருந்த கதவை திறக்க முயற்சித்த போது பூட்டு திறக்கவில்லை. அதனால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பின்புறத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது முன்புற கதவு உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் ரசியாபானு வீட்டின் அறைக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்துள்ளது.  பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்தபோது அதில் தங்க  நகைகள் மற்றும் பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர். மேலும் நகை கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த மர்ம நபர்கள் அங்கு மேஜையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றனர். ஆனால் ஆசிரியை ரசியாபானு பீரோவில் தனது தங்க நகைகளை வைக்காமல்  வீட்டில் வேறு ஒரு இடத்தில் மறைவாக வைத்து சென்றதால் அந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மன்னார்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றப்பிரிவு எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் நேரில் சென்று கொள்ளை முயற்சி நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவாரூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர். இதுகுறித்து ஆசிரியை  ரசியாபானு மன்னார்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டியில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் செயல்விளக்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.15:  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பிறகு எந்த சின்னத்திற்கு  வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில்  வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் வேதை சாலையில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.  வாக்குப்பதிவு இயந்திரங்கள்  குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில்   வாக்களித்தவாக்காளர்கள் தான் அளித்த வாக்கு சரியான சின்னத்தில்  பதிவாகி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய  தொழில்நுட்பத்தை இந்தியதேர்தல் ஆணையம்அறிமுகப்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி நகரில் வேதாரண்யம் சாலையில் உள்ள அரசு பள்ளியில் தாசில்தார் மகேக்ஷ்குமார் மேற்பார்வையில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேதநாயகம், துணை ஆணையர் சாமிநாதன், நகராட்சி வருவாய் ஆர்வர்டு  கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.  இதில் வாக்களித்த பின்னர் 7 விநாடிகளுக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர்  எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்  என வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

முத்துப்பேட்டை அருகே 320 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசை கண்டதும் கும்பல் தப்பியோட்டம்

முத்துப்பேட்டை, பிப்:15  முத்துப்பேட்டை அருகே 320 லிட்டர் கள்ளச்சாரயம், 4 பேரல்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.  முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு ராமன்கோட்டகம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்த 320 லிட்டர் கள்ளச்சாராயம், காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 பேரல் மற்றும் தளவாட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

தில்லைவிளாகத்தில் புயல் நிவாரணம் வழங்காத வங்கியை கண்டித்து நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு

முத்துப்பேட்டை, பிப்.15:   முத்துப்பேட்டை  அடுத்த  தில்லைவிளாகத்தில் புயல் நிவாரண தொகையை வழங்காத வங்கி நிர்வாகத்தை  கண்டித்து இன்று நடக்கவிருந்த தொடர் உண்ணாவித போராட்டம் அதிகாரிகளின் சமரச  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டது.  முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம், ஊராட்சி ஒன்றியத்தில் பெரியது. இங்கு 50க்கும் மேற்பட்ட கிராமம் புயலின் கோரத்தாண்டவத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் உள்ள ஐஓபியில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்படி நிவாரண தொகையை இப்பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எடுக்க வங்கிக்கு சென்றதுபோது. அந்த நிவாரண தொகையை அவரவரின் விவசாய கடனில் வரவு வைக்கப்பட்டதாக வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கண்டிப்பாக கடன் தொகையில் தான் பணத்தை வரவு வைப்போம் என்று   திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வங்கி நிர்வாகத்தை கண்டித்து இன்று (15ம்தேதி) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து துண்டு பிரசுரமும் வெளியிட்டனர்.  நேற்று (14ம்தேதி) தினகரனில் செய்தியும் வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக வங்கியின் திருத்துறைப்பூண்டி வட்ட மேலாளர் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த இருந்த  முன்னாள் ஊராட்சி தலைவர் யோகநாதன், சமூக ஆர்வலர்  கோவிந்தராசு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வந்த நிவாரண தொகையை விவசாய கடனில் வரவு வைக்காமல் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடக்க இருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எல்ஐசியில் ஏற்பட்ட தேக்கநிலையை சரி செய்ய உறுதி எடுக்க வேண்டும் ஊழியர்களுக்கு சங்கத்தலைவர் அறிவுறுத்தல்

திருவாரூர், பிப்.15:   எல்ஐசியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய ஊழியர்கள் உறுதி எடுத்துகொள்ள வேண்டும் என தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.   எல்ஐசி ஊழியர் சங்கமான தஞ்சை கோட்ட  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் 1962ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி துவங்கப்பட்டதையடுத்து 58வது ஆண்டு தினத்தையொட்டி திருவாரூரில் நேற்று எல்ஐசி அலுவலகம் முன்பாக ஊழியர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்கள் சார்பில் வாயில் கூட்டமானது  எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையிலும், கிளை பொறுப்பாளர்கள் நிதிஷ்சண்முகசுந்தர், பூங்குன்றன் மற்றும் முகவர் சங்க தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைவர் தெட்சிணாமூர்த்தி பேசுகையில், ஊழியர்களின் போராட்டங்கள் காரணமானவே எல்ஐசி எனப்படும் மாபெரும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக இன்றுவரை காக்க முடிந்துள்ளது. பொருளாதார  அறிஞர்கள், தொழிலாள வர்க்கத்தினர் ஆகியோரின்  கடும் எதிர்ப்புக்கிடையிலும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு 49 சதவீதமாக அதிகரித்ததுள்ளது. இதன் விளைவாக தனியார் நிறுவனங்களின் மூலதனம்  அதிகரித்துள்ளது. மேலும் மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் வேலை இழப்பு போன்றவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் சேமிப்பு குறைந்துள்ளதால் அதன் தாக்கமானது எல்ஐசி பிரிமியம் வருவாயிலும்  எதிரொலிக்கிறது. உயர்தர வர்க்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் சாமானிய மக்களுக்கும் காப்பீடு வழங்கி வரும் எல்ஐசியின் வளர்ச்சியில் தற்போது ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே  இந்த தேக்க நிலையை உடைத்தெறிய ஊழியர்கள் அனைவரும் உறுதி எடுத்துg;கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்ததில் தாய், குழந்தை காயம்

திருத்துறைப்பூண்டி, பிப்.15:   திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி ஊராட்சி  தகரவெளிஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி வினிதா(24). இவர்  பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மாமியம்மன் கோயில்  தெருவில் உள்ள தந்தை வெற்றிமணியின் தொகுப்பு  வீட்டில் பிரசவமாகி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தொகுப்பு  வீட்டில் குழந்தையுடன் படுத்திருந்தபோது தொகுப்பு வீட்டின்  மேற்கூரை திடீரென்று இடிந்து விபத்தில் படுகாயமடைந்தார். குழந்தை சிறு  காயங்களுடன் தப்பியது. உடனடியாக இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து  திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் கிராம ஊராட்சி பணியாளர்கள் 22ம் தேதி போராட்டம்

முத்துப்பேட்டை, பிப்.14:   திருவாரூர் கலெக்டர்  அலுவலகம் முன்பு கிராம ஊராட்சி பணியாளர்கள்  22ம் தேதி போராட்டம் நடத்துகின்றனர். இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்  பொறுப்பாளர்சற்குணம் தலைமையில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் குமார், ஐயப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட்ட செயலாளர்தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு சங்க பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்க சம்பந்தமாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் எந்த கூட்டமாக இருந்தாலும் ஒன்றியத்தின் சார்பில் கலந்து கொள்பவர்களுக்கு அன்றைய செலவை சங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான தொகையை சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும், அதேபோல் 2019ம் ஆண்டு சந்தா பதிவு,  மாவட்ட பேரவைகூட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் ஆகியவை முன்னெடுப்பது, 2019ம் ஆண்டு சந்தாவை மார்ச் 15ம் தேதிக்குள் முடித்துக் கொடுப்பது நீடாமங்கலத்தில் நடைபெறும் மாவட்ட பேரவை கூட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றியத்திலிருந்து அனைத்து   பணியாளர்களும்  கலந்து கொள்வது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 22ம் தேதி நடக்கும் போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், சங்க நிர்வாகிகள் சற்குணம், கணேசன், சிவசுப்பிரமணியன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

மன்னார்குடி, பிப். 14; மன்னார்குடி அடுத்த வடுவூர் வடபாதி உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வடபாதியில் பிரசித்தி பெற்ற  கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தை மாதத்தை யையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடத்தப் பட்டது. இதில் உற்சவர் கோவிந்தராஜ பெருமாளை தேவி, பூதேவி சமேதராக அலங்கரித்து ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தனர்.சுவாமிகளை  சுற்றிலும் ஏராளமான விளக்குகள் ஏற்றி வைத்து இருந்தனர். திருப்பதி உற்சவர் சீனிவாச பெருமாள் போல கோவிந்தராஜ சுவாமிக்கு  அலங்காரம் செய்திருந்தனர்.தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மகாதேவப்பட்டிணம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

மன்னார்குடி, பிப். 14: மகாதேவப்பட்டிணம்  அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு  எழுதும் 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப் பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு  மாணவர்களுக்கு தேர்வை எதிர் கொள்வது குறித்த தன்னம்பிக்கை பயிற்சி முகாம்  நேற்று நடைபெற்றது முகாமிற்கு  பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்  பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிடிக்களை பயன் படுத்தி பொதுத் தேர்வை எழுதுவது குறித்த விளக்கங்களை மாணவர்களுக்கு  அளித்ததோடு தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதுவதற்குரிய பயிற்சி களையும்  அளித்தார்.மாவர்களுக்கான பயிற்சி வகுப்பை திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயா ஆய்வு செய்தார்முகாமில் ஆசிரியர்கள் சோமசுந்தரம், கார்த்திகேயன், பாண்டியன்,  இன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 367 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்

நீடாமங்கலம்,பிப்.14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்து மூக்கு கண்ணாடி வழங்கும் விழா மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஸ்டான்லி மைக்கேல் உத்தரவுபடி நீடாமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலட்சுமி தலைமையில் நடந்தது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதணையை வட்டார மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை கடந்த மாதம் கண் பரிசோதனை செய்து தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 6014 மாணவ, மாணவிகளுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 25 நடுநிலைப்பள்ளி,9 உயர்நிலைப்பள்ளி 9 மேல்நிலைப்பள்ளிகளில் 367 இலவச மூக்கு கண்ணாடிகள் முதற்கட்டமாக நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி,ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையில்  வழங்கப்பட்டது.

வயிற்று வலியால் அவதி பெண் தீக்குளித்து தற்கொலை

நீடாமங்கலம்,பிப்.14:  வயிற்றுவலியால் அவதியுற்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலம் போலீஸ் சரகம் அரிவலூர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி தீபா(29)கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. .இந்நிலையில் மனமுடைந்த தீபா கடந்த 7ம் தேதி உடலில் தீ வைத்து கொண்டார். தீக்காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.இவருக்கு .ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இது தொடர்பாக தீபாவின்  தாய் சாந்தி(55) வடபாதிமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் பொறுப்பு சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காடுவெட்டி அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா

முத்துப்பேட்டை, பிப்.14:  காடுவெட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் -காடுவெட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கல்வி சீர்வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். சீர்வரிசை ஊர்வலத்தை பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் ரூ. 54ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள், நாற்காலிகள், மேஜை, எவர்சில்வர் குடங்கள், கடிகாரங்கள், ஸ்டூல், பேன், பீரோ, குத்துவிளக்குகள் ஆகியவற்றை பள்ளிக்கு சீர்வரிசை பொருளாக பெற்றோர்கள் வழங்கினர். இதனை தலைமை ஆசிரியர் முருகேசன் பெற்றுக்கொண்டார். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, ஆசிரியர் பயிற்றுநர் சக்திவிநாயகம், பெற்றோர்ஆசிரியர்கழக பொருளாளர் இளம்பரிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர்அருளானந்தம் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் துரைராசு நன்றி கூறினார்.

முத்துப்பேட்டை விசி பிரமுகர் படுகொலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

முத்துப்பேட்டை, பிப்.14:  முத்துப்பேட்டை விசி  பிரமுகர் படுகொலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  கண்டனம் தெரிவித்துள்ளது. முத்துப்பேட்டையை சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் உப்பூர் ராஜேந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் முத்துப்பேட்டை அடுத்த கோவிலில் நடந்த சாதிய படுகொலையை (விசி ஒன்றிய செயலாளர் செல்வரசூன் கொலை) வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் இழப்பால் வேதனை உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவர் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை மாணவர்கள் கவனமுடன் கையாள வேண்டும் நீதிபதி அறிவுறுத்தல்

திருவாரூர், பிப் 14: சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் அதனை மாணவர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என நீதிபதி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இயங்கி வரும்  தனியார் மேல்நிலைப் பள்ளியில் நன்னிலம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் வெற்றிச்செல்வன் தலைமையிலும், இயக்குனர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்  பேசுகையில், சாலை விதிகளை கடைபிடிப்பது மற்றும் அது குறித்து சட்ட விதிகள், பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் மற்றும் அது குறித்து சட்ட விதிகள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி பேசியதுடன்  சமூக வலைதளங்களால் பல்வேறு நேரங்களில் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுவதால் அதனை  மாணவ, மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும்  என்றார். முகாமில் வழக்கறிஞர்கள் வீரமணி,  தெய்வீகன், பழனிராஜா, சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.