Tirunelveli - Dinakaran

தொழிலாளி மீது தாக்குதல்

மானூர், மே 19: மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் நயினார் (40)  தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன்  (42) என்ற விவசாயிக்கும் ஏற்கனவே விரோதம் இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி நயினார் தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த  மாரியப்பன், நயினாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த நயினார் நெல்லை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்குப் பதிந்த மானூர் எஸ்,ஐ  சேட்டை நாதன் விசாரித்து வருகிறார்.

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

செங்கோட்டை, மே 19:  பண்பொழி திருமலை குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது.  இதில் திரளானோர் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும்  நேர்த்திக்கடன் செலுத்தினர். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை  நடந்தது. திருவிழாவில் பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல்வலசை, இலத்தூர்,  அச்சன்புதூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த திரளானோர் தரிசித்தனர். மேலும் பக்தர்களின் பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்டனர். மேலும் அலகு குத்தியும், புஷ்ப காவடி எடுத்தும்  சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணிக்கும் சிறப்பு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையாளர் அருணாசலம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம், அச்சன்புதூர் உதவி ஆய்வாளர் சனல் குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்கத்திலான சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை

நெல்லை, மே 19:  வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மருத்துவ கடவுளான தன்வந்திரி பெருமாள் கோயிலில் உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான சனி பகவான் பிரதிஷ்டை ஜூன் 14ம்தேதி நடக்கிறது.  இது குறித்து முரளிதர சுவாமிகள் கூறுகையில், ‘‘ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகநலனுக்காகவும், மக்களின் நோய்களை தீர்க்கக்கூடிய மையமாகவும் உள்ளது. ஆண்டுமுழுவதும் சிறப்பு யாகங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இதனிடையே பக்தர்களின் நலனுக்காக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி ஆழத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் 13 படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி இந்த சனிபகவானை தரிசிக்க முடியும். உலகிலேயே முதல்முறையாக பாதாளத்தில் தனிக்கோயில் அமைக்கப்பட்டு அங்கு தங்கத்தாலான சனி பகவான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கும்பாபிஷேக வைபவம் ஜூன் 14ம்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது’’ என்றார்.

வாசுதேவநல்லூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

சிவகிரி, மே 19:  வாசுதேவநல்லூர் ராஜ பழநியாண்டவர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை முருகப்பெருமானுக்கு 21 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டாடை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ பழநியாண்டவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வைகாசி விசாக கட்டளைதாரர் ராமச்சந்திரன் பிள்ளை, பாண்டியம்மாள் குடும்பத்தினர், விழாக்குழுத் தலைவர் பொன்மாரியப்ப பிள்ளை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பூட்டிய வீட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

மானூர், மே 19:    நெல்லை ராமையன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜன். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு அறிந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிச் சென்றார். பின்னர் ராஜன் வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த ரூ.36,800, வங்கி காசோலை புத்தகம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ் மற்றும் பல்வேறு பொருட்களை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ மாடசாமி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் இதில் ஈடுபட்டது கோவை அருகேயுள்ள சரவணப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

ராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலத்துக்கு வரவேற்பு

நாங்குநேரி, மே 19:    முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவுஆண்டையொட்டி நாங்குநேரிக்கு வந்த ஜோதி ஊர்வலத்தை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில் காங்கிரசார் வரவேற்றனர்.  இதில் கர்நாடகா மாநில தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரகாசம், நெல்லை மாநகர மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆனந்த், சால்கர், நாங்குநேரி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ரவீந்திரன், முன்னாள் இளைஞர காங்கிரஸ் பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், நகரத் தலைவர்கள் நாங்குநேரி சுடலைக்கண்ணு, பைசல், சீராக் இசக்கியப்பன், மகளிர் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் வசந்தா,  மற்றும் சுவாமிநாதன், அழகியநம்பி, ராஜகோபால், உடையார், விக்டர், இளங்கவி, அன்பு, முத்துசுவாமி, எட்வின் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் புனித லூர்து அன்னை ஆலய சப்பர பவனி

சிவகிரி, மே 19:  வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் புனித லூர்து அன்னை தேவலாய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. பாளை மறை மாவட்டம், வேலாயுதபுரம் பங்கிற்கு உட்பட்டநாரணபுரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. புளியங்குடி பங்குத்தந்தை அருள்ராஜ் கொடியேற்றினார். உதவி பங்குத்தந்தை அருள்மரியநாதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். 17ம்தேதி கோத்தகிரி பங்குத்தந்தை ராஜநாயகம் திருப்பலி நிகழ்த்தினார். புனித லூர்து அன்னை சப்பர பவனியை முன்னிட்டு வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள் லூர்து எட்வின், சிங்கம்பாறை பங்குத்தந்தை செல்வராஜ்  கூட்டுதிருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட லூர்து அன்னை கரங்களில் குழந்தை இயேசுவை அரவணைத்து வீற்றிருக்கும் சொருபத்துடன் சப்பர பவனி நடந்தது. ஆலயம் முன் துவங்கிய இப்பவனி மெயின்ரோடு, வடக்குத் தெரு, பவுண்டு தொழுதெரு, கீழப்பஜார் வழியாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள்லூர்து எட்வின் தலைமையில் திருச்சிலுவை சபையினர், ஊர் பொறுப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

கடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கடையம், மே 19:  கடையம் அருகே கடனா நதி அணைப் பகுதியில் உள்ள  அனுசுயா பரமேஷ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சாமி கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முதியவர் மீது தாக்குதல்

புளியங்குடி, மே 19: குலசேகரமங்கலம்  தெற்கு தெருவை சேர்ந்தவர்  பேச்சியப்பன்(65). இவர் அதே பகுதியை சேர்ந்த வன்னியன் மகன் கணேசன்(40) என்பவருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு கேட்டதால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணேசன் மற்றும் அவரது நண்பரான வென்னி உடையார் மகன் ஜான்பாண்டியன்(35) ஆகிய இருவரும் பேச்சியப்பனை தாக்கினர். காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சேர்ந்தமரம் எஸ்.ஐ. உத்தரகுமார் வழக்குப்பதிந்து கணேசன் உள்ளிட்ட இருவரையும் தேடி வருகிறார்.

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

நெல்லை, மே 19:  விஎம் சத்திரத்தை சேர்ந்தவர் ரங்ககுமார் (50). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு 10 மணிக்கு ஆட்டோவில் பயணிகளை பாளை சாந்திநகரில் இறக்கிவிட்ட பிறகு பாளை கக்கன்நகர் நான்கு வழிச்சாலை வழியாக வீட்டிற்கு  திரும்பிக்கொண்டிருந்தார். இதில் ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

நெல்லை டவுனில் சாலையோர கட்டிடம் இடிந்துவிழுந்து சேதம்

நெல்லை, மே 19:  நெல்லை டவுனில் சந்திப்பிள்ளையார் கோயில் - காட்சி மண்டபம் சாலையோரம் இருந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. கனரக வாகனம் மோதியதில் இச்சம்பவம் நடந்ததா? என்பது போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருவதால் டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து அருணாகிரி தியேட்டர் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நெல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் செல்லும் பஸ்கள் அனைத்தும் வண்ணார்பேட்டை பைபாஸ் ரோடு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியபேரி, பழையபேட்டை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் பேட்டை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் சந்திப்பிள்ளையார் கோயில் வழியாக காட்சி மண்டபம் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் சாலை மிகவும் குறுகலானது. எனவே அவை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை கூட போலீசார் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் சந்திப்பிள்ளையார் கோயில் - காட்சி மண்டபம் சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் இருந்த கட்டிடத்தின் கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்ததுடன், கட்டிடம் சேதமடைந்தது. திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. தெற்கு மவுன்ட் ரோடு மூடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் கனரக வாகனங்களும் இந்த வழியாக பயணிக்கின்றன. எனவே கனரக வாகனம் இடித்ததில் கட்டிடம் சேதமடைந்ததா? அல்லது இடிவிழுந்து சேதமடைந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாளையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம்

நெல்லை, மே 19:  நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது.  கூட்டத்திற்கு தலைவரான ஓய்வுபெற்ற எஸ்ஐ சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணன், வானமாமலை, முன்னிலை வகித்தனர். செயலாளர் குத்தாலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் 2018- 19ம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 400 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றவர்கள் மற்றும் பிளஸ்2 தேர்வில் 450 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் கிரேடு 9 மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் இதற்கான மதிப்பெண்கள் சான்றிதழ் நகலுடன் ஜூன் 30ம் தேதிக்குள் சணமுகசுந்தரம், 173 காவலர் குடியிருப்பு, சாந்திநகர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆகஸ்ட் 11ம் தேதி 53வது பரிசளிப்பு விழாவை பாளை கேடிசி நகர் மகராசி மகாலில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் பாபநாசம், நிர்வாகிகள் வேலு, செல்வராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், விநாயகம், சுப்பிரமணியன், சுப்பையா, முருகன், பால்துரை, சங்கரன் முருகேசன், ராமதாஸ், வேலுதாஸ், வெங்கடேஸ், சுடலை முத்து, டாக்டர் அர்ச்சுனன், பண்டாரம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். துணைத்  தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா

நெல்லை, மே 19:  பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாளையஞ்செட்டிகுளம் நாராயணசாமி தர்மபதியில்  கடந்த 17ம்தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியற்றத்துடன் துவங்கியது. இன்று காலை  8 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம், மதியம் 12மணிக்கு அன்னதர்மம், மாலை 4மணிக்கு சுவாமி வாகனபவனி, நடக்கிறது. தொடர்ந்து தினமும் தீப அலங்கார பணிவிடை நடக்கிறது. 10ம்நாள் விழாவான வரும் 26ம்தேதி அதிகாலை 5மணிக்கு சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் சந்தன குடம் எடுத்தல், காலை 8மணிக்கு வாகனபவனி, மதியம் 1மணிக்கு அருள்வாக்கு, திருவிளையாடல், மாலை 4மணிக்கு வாகனபவனி பதியை சுற்றி வலம் வருதல் நடக்கிறது. மாலை 6மணிக்கு அன்னதர்மம், இரவு 9மணிக்கு இனிமம் வழங்குதல், இரவு 10மணிக்கு சுவாமி அருளாசி வழங்குதல்  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாராயணசாமி தர்மபதி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

வைகாசி விசாகம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெல்லை,  மே 19:  வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  வற்றாத ஜீவநதியான தன்பொருநை எனப்படும் தாமிரபரணி பாய்ந்து வளம்கொழிக்கும் நெல்லை சீமையில் திருவுறுமாமமலை என பக்தர்களால் அழைக்கப்படும் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக  திருவிழா கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தினம் சிறப்பாக நேற்று (18) கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.  இதில் நெல்லை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இதனிடையே குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் அதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீராடி முருகனை வழிபட்டனர். விசாகத்ைத முன்னிட்டு குறுக்குத்துறை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டது. சாலைக்குமரன் கோயில்: நெல்லை சந்திப்பில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். இதே போல் நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுகர் சன்னதி, பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், முருகன் சன்னதியிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலை முதலே வருகைதந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பாளையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக பேரிகார்டு அமைத்து மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிய போலீசார்

நெல்லை, மே 19:  பாளையில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சாலையில் பேரி கார்டுகள் அமைத்து மாற்று வழியில்  வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். பாளை எல்ஐசி அலுவலகம் அருகே சாலையில் இரண்டுக்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அங்குள்ள குறுகலான சாலையின் வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் காயம் அடைந்து வருவதாகவும், வாகனங்கள் அதிக (ஏர் ஹாரன்) சத்தம் எழுப்புவதால் இடையூறும் ஏற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாளை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட சாலையின் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்களின் போக்குவரத்தை திருப்பிவிட்டனர். குறிப்பாக அவ்வழியாக நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கூட மெதுவாகத்தான் அச்சாலையை கடந்து செல்ல முடியும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையொட்டி அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சாரணர் இயக்க மாணவ, மாணவிகளை கொண்டு தங்களது பள்ளியின் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  இதேபோல் பள்ளி மாணவ, மாணவகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட பல்வேறு சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்து மாற்று வழியில் வாகனங்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள  போலீசார் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு ஒப்புதல்

நெல்லை, மே 19:  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ராஜகுமார், செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள கூட்டறிக்கை: ஊராட்சி பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலுக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருசில வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து இதுவரை ஒப்புதலுக்கான முன்னுரிமை பட்டியல் அனுப்பப்படவில்ைல. இதுகுறித்து கல்வித்துறையில் கேட்டபோது தேவையற்ற காலதாமத்தை தவிர்க்க வேண்டும் என கடந்த மாதமே அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்கள் வட்டார அலுவலர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து வட்டார ஆசிரியர்களும் உடனடியாக அந்தந்த வட்டார கல்வி அலுவலகம் சென்று முன்னுரிமை பட்டியலை கடந்த ஆண்டு பட்டியலோடு ஒப்பிட்டு பார்ப்பதுடன் தங்களது முன்னுரிமையில் குறைகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து உரிய ஆதாரங்களுடன் மாவட்ட கல்வி அலுவலருக்கு முன்னநகலாக அனுப்பவேண்டும்.  முதன்மை கல்வி அலுவலருக்கும் நகல் அனுப்பவேண்டும். இதனால் கடந்த ஆண்டு ெபாது மாறுதல் கலந்தாய்வின் போது தேவையற்ற குழப்பம் சச்சரவுகள் ஏற்பட்டு போன்று நடைபெறாமல் தவிர்க்க முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

கடையநல்லூர், மே 17: கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷம் விண்ணை முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காலையில் துவங்கியது. விழாவை முன்னிட்டு அன்று காலையில் அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புகட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு சமுதாயத்தினரால் பால்குடம் ஊர்வலம், பூந்தட்டு, மாக்காப்பு அலங்கார தீபாராதனைகள், இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலையில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலில் துவங்கி பஜார், மெயின்ரோடு வழியாக மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை, அம்பாள் தேர் தடம் பார்த்தல் நடந்தது. இன்று 17ம் தேதி காலையில் பால்குடம், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருணாசலம், செயல் அலுவலர் முருகன் மற்றும் அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி இருவர் படுகாயம்

பாவூர்சத்திரம், மே 17: நெல்லை பாரதியார் தெருவைச் சேர்ந்த நெல்லைநாயகம் மகன் ராமசுந்தரம் (43), இவரது நண்பர் கருங்காடு மேலத்தெரு இசக்கி மகன் சுப்பையா (32). இவர்கள் இருவரும் கேரளாவில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் நெல்லை திரும்பி கொண்டிருந்தனர். தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே வரும் போது தூத்துக்குடியில் இருந்து கொல்லம் நோக்கி அண்டித்தோடு ஏற்றி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் ராமசுந்தரம், சுப்பையா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னத்தூர் வீடு பாஸ்கரன் மகன் அனில்குமார் (49) என்பவரிடம் பாவூசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழுந்துமாமலை கோயிலில் நாளை வைகாசி விசாக விழா

வீரவநல்லூர், மே 17: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை முருகன் கோயிலில் நாளை வைகாசி விசாக விழா நடைபெறவுள்ளது. சேரன்மகாதேவி - களக்காடு மெயின்ரோட்டில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலானது சேரன்மகாதேவியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர். இதுபோல் வைகாசி விசாக விழா மற்றும் திருக்கார்த்திகை விழா இக்கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இவ்விரு நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். இந்த ஆண்டிற்காண வைகாசி விசாக விழா மற்றும் வருஷாபிஷேக விழா நாளை (18ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்

திசையன்விளை, மே 17: உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று காலை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாலை 5 மணிக்கு சொற்பொழிவும், 6 முதல் 9 மணி வரை தேவார இன்னிசையும், இரவு 9 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது. நாளை (18ம்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி குமார் நாதஸ்வரம், 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை சிறப்பு பூஜையும், தொடர்ந்து சமய சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜையும், 10 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 2 மணிக்கு சுவாமி பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வாணவேடிக்கை முழங்க வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.