Tirupur - Dinakaran

தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டபொம்மன் பண்பாட்டுகழகம் வரவேற்பு

உடுமலை, பிப். 15: சுதந்திர  போராட்ட வீரர் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என சட்டசபையில்  அமைச்சர் அறிவித்துள்ளதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர்  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.உடுமலை  அருகே உள்ள தளியை தலைமையிடமாக கொண்டு, எத்தலப்பர் வம்சா வளியினர்  பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில்,  வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவாக எத்தலப்பர் வம்சாவளியினர் செயல்பட்டனர்.  ஆங்கிலேயர் அனுப்பிய தூதுவனை தூக்கிலிட்டனர். பின்னர் நடந்த பேரில் தளி  பாளையம் அழிக்கப்பட்டது.ஆங்கிலேயேரை தூக்கிலிட்ட தூக்குமர தோட்டத்தின்  கல்வெட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து தளி வம்சாவளியினர் சிலைகள்,  வரலாற்று ஆய்வுகள் கண்டறியப்பட்டு வெளிவந்தது.திருமூர்த்திமலையில்  எத்தலப்பர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள சுற்றுக்கோவில் அமைச்சர்கள் உடுமலை  ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில்,  சட்டசபையில் பேசிய மடத்துக்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன்,  எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு  பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ மணிமண்டபம் கட்ட ஆவன செய்யப்படும் என  உறுதி அளித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அமைச்சரின் அறிவிப்புக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம்  வரவேற்பு தெரிவித்துள்ளது.

கருங்கல்பாளையத்தில் மாடு வாங்க சந்தையில் குவிந்த பயனாளிகள்

ஈரோடு, பிப்.15: அரசின் இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் கறவை மாடுகளை வாங்கி செல்லவதற்காக ஈரோட்டில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஏராளமான பயனாளிகள் வந்தனர்.மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் நடக்கும் கால்நடை சந்தைகளில் கலந்துகொண்டு மாடுகளை வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் கால்நடைத்துறை சார்பில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள், விற்பனைக்கு வந்த கறவை மாடுகளை வாங்கிச்சென்றனர்.இது குறித்து மாட்டு சந்தை வியாபாரிகள் கூறியதாவது:ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடந்து வருகிறது. பசு மாடுகள், எருமைகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மாடுகளை வாங்கி செல்வதற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.  நேற்று நடந்த சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வழக்கம் போல் வந்த போதிலும் கால்நடைதுறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக மாடுகளை வாங்குவதற்காக தேனி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாடுகளை வாங்கிச்சென்றனர். சந்தையில் 500 பசு மாடுகள், 400 எருமைகள், 250 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையிலும், எருமைகள் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விலை போனது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

அவினாசி அருகே போலீஸ் ஜீப் மீது பைக் மோதி தொழிலாளி பலி

அவிநாசி,பிப்.15: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுகாவை சேர்ந்தவர் நாகபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (32). இவருக்கு ராஜலட்சுமி(28) என்கிற மனைவியும், சுபீன்(7), தருண்(4) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அவிநாசி அடுத்து தெக்கலூர் வெள்ளாண்டிபாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் ஏற்றுமதி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பனியன் நிறுவனத்தில் இருந்து பைக்கில், கோவை - சேலம் பைபாஸ் ஆறுவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக சென்றபோது, ரோட்டின் ஓரமாக நின்றுகொண்டிருந்த போலீஸ் ஜீப்பின் பின்புறத்தில், எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகேயன் உயிரிழந்தார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருப்பூர், பிப்.15: திருப்பூரில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில்  உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  கையாளுதல் குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு ஏற்கனவே செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,  வாக்குப்பதிவு தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள்  குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ஒரு  சட்டமன்ற தொகுதிக்கு 5 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தலைமையில்  கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள் துவக்கி வைத்தார். இதில்,  தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உட்பட  பலர் பங்கேற்றனர்.

விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்பூர், பிப்.15: இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் இணைந்து கட்டிய நவசக்தி விநாயகர் கோயிலின் கும்பாபிஷேக விழா வருகிற 18ம் தேதி நடக்கிறது.திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் நவசக்தி விநயாகர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களால் கட்டப்பட்டது. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் ஒற்றுமையுடன், ஆண்டுதோறும் விழாக்களை சிறப்பாக நடத்தி, அன்னதானம் வழங்கி வருகின்றனர். இங்கு வருகிற 18ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, வருகிற 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, மகாலட்சுமி ஹோமம், கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூஜை, நில தேவர் பூஜை, காப்பு கட்டுதல், கும்ப அலங்கார மண்டல பூஜை,  முதற்கால வேள்வி பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. 18ம் தேதி காலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை, வேத பூஜை, இரண்டாம் கால வேள்வி, பூஜை நாடி சந்தனம், 9 மணிக்கு மேல் கலசம் வலம் வருதல், கும்பாபிஷேகம் அலங்கார பூஜை, தச தரிசனம், பிரசாதம் வழங்குதல், 10.30 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்டோ டிரைவர்கள் செய்து வருகின்றனர்.

காங்கயத்தில் நாளை மின்தடை

காங்கயம்,பிப்.15: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக   காங்கயம் நகரம், நால்ரோடு, படியூர்,  அகஸ்திலிங்கம்பாளையம்,  செம்மங்காளிபாளையம்,  அர்த்தநாரிபாளையம்,  பொத்தியபாளையம், சிவன்மலை ஆகிய இடங்களில் நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய  காங்கயம்  செயற்பொறியாளர்  சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கிணற்றில் விவசாயி சிக்கி தவிப்பு

வெள்ளகோவில், பிப். 15: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வள்ளியிரச்சல் பொன்முடியான் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (52). விவசாயி. இவருடைய தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது. இதில் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. இந்தக் கிணற்றில் ஏராளமான கெண்டை, கெழுத்தி, அயிரை மீன்கள் இருக்கின்றன. இவற்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து மிதந்ததால், கிணற்றுத் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.  தண்ணீரில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்த வியாழக்கிழமை கயிறு கட்டி படிகளில்லாத அந்தக் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. அவரால் கிணற்றிலிருந்து மேலே வர முடியவில்லை. கிணற்றுச் சுவரைப் பிடித்துக் கொண்டு பரிதவித்துள்ளார். தகவலறிந்து வந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் விவசாயி சாந்தகுமாரை கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். விவசாயி உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பு சிறப்பு முகாம்

திருப்பூர், பிப்.15: திருப்பூரில், வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பில் இருந்து கோழிகளை காப்பாற்ற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த புறக்கடை கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பை தடுக்க அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதம் 2 வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தற்போது தொடங்கி வரும் 22ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு முகாம் மேற்கொள்ளப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்  கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடப்படும். நடப்பாண்டு மாவட்டத்தில் மாவட்டத்தில் 1.4 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போரும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ரூ.6 ஆயிரம் பெறும் திட்டம் விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு

திருப்பூர்,  பிப்.15: ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறும் திட்டத்துக்கான சிறு, குறு  விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதுஇதுகுறித்து திருப்பூர் கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளதாவது:பிரதமரின் பிஎம் கிசான்  திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக  ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள்  பெறப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும்  வகையில், சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்காக வருவாய்  கிராமங்கள் தோறும் அரசு அலுவலர்களை கொண்ட கிராம அளவிலான குழுக்கள்  அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முழு  வீச்சில் நடந்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி இந்த  கணக்கெடுப்பு பணி மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை துறை சார்ந்த அலுவலர்கள்  கண்காணித்து விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கிராம  நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யாமல் உள்ள தகுதியான சிறு, குறு  விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். எனவே, விவசாயிகள்  தங்களது பட்டா, நில உரிமையாளரின் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம்,  ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன்  சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்து  பயன்பெறலாம். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

பழங்கால சிற்பங்களை பாதுகாக்க பயிற்சி முகாம்

ஊட்டி, பிப். 15: ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓலைசுவடிகள் போன்றவற்றை பதப்படுத்தி பாதுகாக்க, அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊட்டி அரசு கலைக்கல்லூாி அருகே கல் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தர், தோடர், குறும்பர், பனியர் போன்ற பழங்குடியின மக்கள் வசித்த வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.  அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஓவியங்கள், பழங்காலத்து சிலைகள், பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிாிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம், மரசிற்பங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பது தொடர்பாக வரலாற்றுத்துறை மாணவ,மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமின் போது அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள் தூய்மை பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுகிழமை வரை நடக்கிறது.இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறுகையில், ‘‘அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள் காலநிலை மாற்றத்தால் சேதமடையாமல் இருக்க அவற்றை பதப்படுத்தி பாதுகாக்கும் பயிற்சி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது’ என்றார்.

தபால் நிலைய செயல்பாடு மாணவர்களுக்கு களப்பயிற்சி

ஊட்டி, பிப். 15:ஊட்டியில் உள்ள தபால் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் நேரடியாக சென்று அறிந்து கொண்டனர்.  பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு அறைகளிலேயே அமர வைத்து பாடங்களை கற்றுக் கொடுப்பதை விட, கள பயிற்சி மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஒரு சில பள்ளிகள் மட்டுமே இது போன்று கள பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள அகலார் குருகுலம் பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கு மாணவர்களுக்கு தபால் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த கள பயிற்சி  அளிக்கப்பட்டது. தபால் துறை அதிகாரிகள் உமாமகேஸ்வரி, சுஜாதா, சிவகுமார், சேகர் ஆகியோர் தபால் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விளக்கினர்.

பிரன்ட்லைன் பள்ளியில் கராத்தே திறனாய்வு தேர்வு

திருப்பூர், பிப்.15: திருப்பூரில் இந்தியன் ஷிட்டோ கராத்தே பள்ளியின் சார்பில் தி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளியில் கராத்தே தேர்வு நடந்தது. இதில், தி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அகில இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் ரென்சி சத்பத் தகுதி பட்டைகளை வழங்கினார். பள்ளித் தாளாளர் சிவசாமி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஸ்வரன், திருப்பூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாலசந்தர், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளக்கோவில் விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்து 93 ஆயிரத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளக்கோவில், பிப். 15: சூரியகாந்தி விதை சீசன் துவங்கியதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் சூரியகாந்தி ஏலம் நடந்தது.கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த 21 விவசாயிகள்,  693 மூட்டை சூரியகாந்தி விதைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 34 ஆயிரத்து 282 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி விதைகள் 12 லட்சத்து 92 ஆயிரத்து 947 ரூபாய்க்கு ஏலம் நடந்தது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 9 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் தரமான சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ 40 ரூபாய் 79 காசுக்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 35 ரூபாய் 82 காசுக்கும் ஏலம் நடந்தது.  கடந்த வருடம் அக் 25ம் தேதி நடந்த சூரியகாந்தி விதை ஏலம் சீசன் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சீசன் துவங்கியதால் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. தொடர்ந்து பிரதிவாரம் வியாழக்கிழமை சூரியகாந்தி ஏலம் நடைபெறும் என  விற்பனைக்கூட அலுவலர் தெரிவித்தார்.

ஆனைமலை- பழனி ரோட்டில் பாலத்தை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, பிப்.14: உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையில், ஆனைமலை- பழனி ரோட்டில் இருந்த குறுகிய பாலத்தை இடித்துவிட்டு, புதிய அகலமான பாலம் கட்டப்பட்டது. தினசரி இதன் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், இரவு நேரங்களில் இந்த பாலத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.இதையடுத்து, தற்போது பாலத்தின் இருபுறமும் முள்வேலி போட்டுள்ளனர். இதனால் கழிப்பிடமாக பயன்படுத்துவது நின்றாலும், வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. பாலத்தை அகலப்படுத்தியும் பயன் இல்லாமல் உள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இங்குள்ள சுடுகாடு அருகே பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சிலர் பாலத்தை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.

திருப்பூரில் கொசு உற்பத்தியாகும் செயல்படாத செயற்கை நீருற்றுகள்

திருப்பூர், பிப்.14:  திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள செயற்கை நீருற்றுகள், செயல்படாமல் இருப்பதால், கொசு உற்பத்தியாகும் மையமாக மாறி வருகிறது.திருப்பூர் ரயில் நிலையம் அருகே, அம்மா உணவகம் அமைந்துள்ள வளாகத்தை, அழகுபடுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் செயற்கை நீருற்று ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர் ‘பம்ப்பிங்’ செய்யப்பட்டு கற்குவியல் மீது அருவி போல் கொட்டும் வகையில் அமைக்கப்பட்டது. அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் அதை கண்டு ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு செயற்கை நீரூற்று செயல்படாமல் போனது. அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்தனர். சில நாட்கள் மட்டுமே இயங்கிய நீருற்று, மீண்டும் பழுதானது. மாதக்கணக்கில் ஆகியும் அதிகாரிகள் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதிகாரிகள் தரப்பில் கேட்டால், ‘நீரூற்று இயங்குகிறது’ என்கின்றனர். நேரில் பார்த்தால், காட்சிப்பொருளாகவே தென்படுகிறது. ‘நீரூற்றை’ சுற்றிலும், குப்பை குவியல்கள் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீரும் நீரூற்று தொட்டியில் தேங்குகிறது. இதனால் நீருற்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள செயற்கை நீருற்றும் செயல்படாமல் உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

பேரறிவாளன் விடுதலைக்கு மக்களின் ஆதரவு அதிகம் திருப்பூரில் அற்புதம்மாள் பேட்டி

திருப்பூர், பிப்.14: ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய பொதுமக்களிடத்தில் அதிகளவில் ஆதரவு இருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.திருப்பூரில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலைக்காக ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கவர்னர் கையெழுத்து இடமாமல் காலம் தாழ்த்துவது குறித்து  மக்களை சந்தித்து வருகிறேன். இதன் ஒருபகுதியாக திருப்பூர் வந்துள்ளேன். சட்டம் சொல்லியும், அரசு முடிவு எடுத்தும் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கையொப்பம் இடவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கவர்னர் மவுனம் காத்துவருகிறார். பேரறிவாளன் உட்பட ஏழு பேர்  28 ஆண்டு முழுமையாக தண்டனை அனுபவித்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றம் சொல்லியுள்ளது 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு, ஆளுநர் கையொப்பத்துடன் விடுதலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றம் தான் முன்னர் குற்றவாளி என்று சொன்னதை தலைவணங்கி ஏற்றுக் கொண்டோம். இப்பொழுது அதே நீதிமன்றம் விடுவிக்கச் சொல்லியும் அது நடைபெறவில்லை.  இந்த ஒரு வழக்கில் தான் மூன்று முறை விடுதலை அறிவிக்கப்பட்ட பின்னரும் சிறைவாசிகளாகவே இருக்கின்றனர். இது ஏன் என்று புரியவில்லை. ஆகவே, மக்களிடம் ஆலோசனை கேட்டு ஆளுநரை எவ்வாறு அனுகுவது என்று வந்துள்ளேன். என்னுடைய வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வந்துள்ளேன். கவர்னர் மனது வைத்தால் அனைவரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 12 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். ஆகவே, அனைத்து மாவட்ட மக்களையும் சந்தித்த பின்னர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆளுநரிடம் ஒப்புதல் வாங்க முடிவு செய்துள்ளேன். அமைச்சரவை கூட்டி முடிவு எடுப்பதே தமிழக ஒட்டு மொத்த மக்களின் உணர்வுதான். தமிழகம் முழுவதும் பொது மக்கள் அனைவரும் பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

விளை நிலத்தில் மின்கோபுரங்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு

காங்கயம், பிப்.14: காங்கயம் பகுதியில் விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் காங்கயம் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கயம் தாலூக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர், மாவட்ட நிர்வாகம் என அனைத்து வழிகளிலும் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர். மேலும் போலீசார் மூலம் விவசாயிகளை மிரட்டி நிலத்தில் மின்கோபுரத்தை நட்டு வருகின்றனர். ஆனால் இதற்காக அனுமதி ஏதும் இல்லாமல் அதிகாரிகள் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  காங்கயம் அருகே உள்ள ராமபட்டினம் மற்றும் நிழலிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்கும் இடத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ பார்வையிட்டார். அதே போல 31 மின் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் விவசாயிகளின் போராட்டத்தால். 12 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊதியூர் அருகே உள்ள நீலிக்கவுண்டம்பாளையத்தில் உயர்மின் கோபுரம் தொடர்பாக விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், முத்துவிஸ்வநாதன், தலைவர் ராஜாமணி, ஈரோடு முன்னால் எம்.பி கணேசமூர்த்தி, தற்சார்பு விவசாய சங்கதின் பொன்னையன், ஏர்முனை இளைஞர் அணி சுரேஷ், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் என 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாட்களில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ விவசாயிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துளார். நீதிமன்ற அனுமதியுடன் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும், விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டிலை ஆங்காங்கே வீசிச் செல்வதால் பயணிகள் அவதியடைகின்றனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கும் குடிமகன்கள் பஸ் ஸ்டாண்டில் ஓரங்களில் நின்று குடிக்கின்றனர். இதனால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். குறிப்பாக தனியார் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் குடித்துவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இவை உடைந்து பயணிகளின் கால்களை பதம் பார்க்கின்றன. மேலும், நடைபாதை சந்துகளில் நின்றுக்கொண்டு மது அருந்துகின்றனர். சிலர் போதை தலக்கேறி அலங்கோலமான நிலையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், மாணவிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.மது விற்ற இருவர் கைதுதிருப்பூர், பிப்.14: திருப்பூர்  பெருமாநல்லுார்  செல்லும் வழியிலுள்ள இரு டாஸ்மாக் மதுக்கடை அருகே  மது விற்பனை செய்த முத்துகுமார்(38), வல்லரசு(27) ஆகியோரை மதுவிலக்கு  போலீசார் கைது செய்தனர்.

பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கில் தற்கொலை

திருப்பூர், பிப்.14: திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள மும்மூர்த்தி நகரைச்சேர்ந்த குமாரசாமி. இவரது மகன் மணிகண்டன்(37) மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். வேலைக்கு செல்லாமல் தாய் செல்வியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் மணிகண்டனை திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்து  மணிகண்டன் நேற்றுமுன்தினம் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

காங்கயம்,பிப்.14: காங்கயம் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து காங்கேயம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.  காங்கயம் அருகேயுள்ள காத்தாங்கண்ணி கிராமம் பள்ளநாயக்கன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் மாரம்மாள் (60) கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி வீட்டின் அருகே உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரை சேர்ந்த துரை என்கிற செந்தில்குமார் (36) என்பவர் மூதாட்டி மாரம்மாளை தாக்கியதில் அவரது இடது கண் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார். இது  தொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.வழக்கை  விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன் குற்றவாளி துரை  என்கிற செந்தில்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.