Tiruvalloor - Dinakaran

வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, அக்.12: கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணபுரம் பகுதியியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (60). நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டாமல் பஜாருக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. அறையில் இருந்த 2 செல்போன்கள் கொள்ளை போய் இருந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிப்காட் பகுதியை சேர்ந்த ஆந்திரா மாநிலம் குண்டுர் பகுதியை சேர்ந்த புஜா ரமேஷ் (27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

புழல் காந்தி பிரதான சாலையில் பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவருக்கு வலை

புழல், அக். 12: புழல் காந்தி பிரதான சாலையில் பைக் மீது சிமென்ட் கலவை லாரி மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.புழல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் கண்ணப்பன் (19). பிளஸ் 2 முடித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் புழல் காந்தி பிரதான சாலையில் கண்ணப்பன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த தனியார் சிமென்ட் கலவை லாரி அவர் மீது மோதியது. இதில் கண்ணப்பன் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணப்பன் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் பகுதிகளில் பைக் திருடிய வாலிபர் கைது

ஆவடி, அக். 12: அம்பத்தூர், பாடி காமராஜர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் உள்ள பாக்கியத்தம்மன் நகரில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றார். நண்பரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவர் நிறுத்தி வைத்திருந்த பைக்  மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசில் வீரமணிகண்டன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்குப்பதிந்து விசாரித்தார்.இந்நிலையில் அம்பத்தூர் தொழிபேட்டை சாலை சர்ச் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் பைக்குக்கு ஆவணம் எதுவும் இல்லை. எனவே அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.விசாரணையில் திருமங்கலம் என்விஎன் நகரை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், ஓட்டி வந்தது வீரமணிகண்டனின் பைக் என்பதும் தெரிந்தது. மேலும் ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் பகுதியில் 2 பைக்குகளை திருடியதையும் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

திருவள்ளூர், அக். 12: திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து உடனடியாக நடவடிக்கையை எடுக்கக்கோரி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கோரிக்கை மனு கொடுத்தார்.திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரம், திருவாலங்காடு, கடம்பத்தூர், பூண்டி ஆகிய ஒன்றியங்களில் 150 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள மேல்நிலை மகுடிநீர் தேக்கத் தொட்டிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனகவல்லிபுறம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் நிலுவையில் உள்ள இரு மேம்பாலங்களை உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிர்வாக அனுமதி பெற்றும் நிலுவையில் உள்ள பைபாஸ் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.திருப்பாச்சூர் ஏரிக்கு செல்லும் வரவு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். திருவள்ளூர் வரதராஜ நகர், மணவாளநகர் தரைப்பாலத்தை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்’’ என பல கோரிக்கைகள் குறித்து விளக்கியதோடு, கோரிக்கை மனுவும் கொடுத்தார்.மேலும், இதுகுறித்து ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளதை கூறினார். இதையடுத்து, கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் விசிக மனு

திருவள்ளூர், அக். 12: ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் நீலவானத்துநிலவன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தாராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் உள்ளது.கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரிடம் மனு அளித்தனர். அப்போது, நீலவானத்து நிலவனுடன் நேசகுமார், சாம்சன், அறிவுச்செல்வன், மகளிரணி செயலாளர் சுதா உட்பட பலர் உடனிருந்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருத்தணி, அக். 12: திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியதை அடுத்து தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் முதல் நவராத்திரி விழா துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை நடந்தது. உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.முன்னதாக நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். தினமும் மாலை 6.30 மணியளவில் உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.இதேப்போல் திருத்தணி, சேகர்வர்மா நகர், சக்தி விநாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நேற்று முன்தினம் நவராத்திரி விழா துவங்கியது.

கோரமங்கலம் காலனியில் ₹7 லட்சத்தில் அங்கன்வாடி மையம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருத்தணி,  அக். 12: திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் காலனியில் ₹7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கோரமங்கலம் காலனியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் நடைபெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் கோரமங்கலம் காலனியில் நேற்று முன்தினம் புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடந்தது.இதில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், திருத்தணி தாசில்தார் செங்கலா, ஒன்றிய ஆணையர் லட்சுமணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், முன்னாள் ஆவின் தலைவர் சந்திரன், அங்கன்வாடிகள் ஒருங்கிணைப்பாளர் திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.எம்.ஜெயின் பள்ளியில் வாழ்வு வளமடைய தன்னம்பிக்கை விழா

திருவள்ளூர், அக்.12: திருவள்ளூர்  ஆர்.எம்.ஜெயின் பள்ளியில், வாழ்வு வளமடைய ‘‘தன்னம்பிக்கை விழா’’ நேற்று நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தாளாளர் என்.சி.தரன் தலைமை வகித்தார். பி.பதம்சந்த் ஜெயின், எஸ்.விமல்சந்த் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்வு வளமடைய அனைவருக்கும் தன்னம்பிக்கை தேவை. மக்களிடம் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தினால் வாழ்வில் தோல்வியுறும்போது தவறான முடிவுகளுக்குச் சென்று விடுகின்றனர்.இதையடுத்து மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமணத்துறவி வினோத்முனி, நடிகர் மதன் பாப், மாவட்ட எஸ்.பி., ஆர்.பொன்னி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை உறுதி மொழி ஏற்றனர். முடிவில், பள்ளி அறங்காவலர் கிஷோர் குமார் ஜெயின் நன்றி கூறினார்.

கன்னிகைப்பேர் கிராமத்தில் சமூக முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் கூட்டம்: மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, அக்.12: கன்னிகைப்பேர் கிராமத்தில், தேசிய அளவிலான சமூக முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசு  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தமிழக வாழ்வாதார இயக்கம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தின் சார்பில் மனநல திட்டம், கிராம ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தேசிய அளவிலான கள ஆய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் வீரண்ணன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் (பொ) வின்சென்ட், மாநில வல்லுநர் ரவி, உதவி திட்ட அலுவலர் வீரமணி, களப்பகுதி பணியாளர்கள்  உஷாராணி, ராமதாஸ், ஜோதிர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோரிமதி அனைவரையும் வரவேற்றார்.இதில் ஆந்திரா, மிசோராம், உத்திரபிரதேசம், பீகார், ஒடிசா, புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர்கள், மத்திய அசின் மனநல திட்டம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு போன்ற திட்டங்களால் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தனர். இறுதியில் பிரவீணா நன்றி கூறினார்.

பெண்ணிடம் 15 சவரன் பறிப்பு

அம்பத்தூர், அக். 12: சென்னை நந்தம்பாக்கம், ராமர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (52). மாநகர பஸ் டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (46). அரிசி கடையை நடத்தி வருகிறார். வாரம் ஒருமுறை பாக்கியலட்சுமி செங்குன்றத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, பாக்கியலட்சுமி மொபட்டில் தந்தையின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாக்கியலட்சுமி வந்தபோது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவன் இறங்கி வந்து பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 15 சவரன் செயினை பறித்துவிட்டு. இருவரும் பைக்கில் தப்பினர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல ரவுடி வெட்டி கொலை

சென்னை, அக். 12: சென்னை திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பிரபு (எ) கிளி பிரபு (35). பிரபல ரவுடி. இவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சுனாமி குடியிருப்பின் இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்தபடி ஓடிவந்து, மயங்கி விழுந்தார். \உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு இறந்தார். புகாரின்படி எண்ணூர் இன்ஸ்பெக்டர் சத்யன் வழக்குப்பதிவு செய்து, ரவுடி பிரபுவை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.

போலீஸ்காரருக்கு டெங்கு காய்ச்சல்

திருவள்ளூர், அக். 12: திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு சென்னை அரசு  மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம புறங்களில், கழிவுநீர் வெளியேற முறையான வடிகால்வாய் இன்றி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கி உள்ளது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஜஸ்டின் (26) என்பவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜஸ்டின் சென்னையில் இருக்கும் போலீஸ் விளையாட்டு பயிற்சி பள்ளியில் ஜிம் மாஸ்டராக உள்ளார்.எனவே அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: இன்று முடிவு அறிவிப்புதிருத்தணி, அக். 12: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனர்கள் தேர்வுக்கு மொத்தம் 86 பேர் போட்டியிடுகின்றனர். இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 7 உட்கோட்ட கரும்பு அலுவலங்கள் உள்ளன. இந்த ஆலையின் நிர்வாக இயக்குனர்கள் 5 பெண்கள் உள்பட மொத்தம், 17 பேர் நியமிக்கப்படுவர். இந்த இயக்குனர்கள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் 6 பெண்கள் உள்பட மொத்தம் 93 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த, 8ம் தேதி வேட்பு மனு பரிசீலனையின் போது 6 மனுக்கள் தகுதியில்லாதவை என தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒருவர் மட்டுமே வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தற்போது, 6 பெண்கள் உள்பட மொத்தம், 86 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நேற்று (11ம் தேதி) காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற்றது. இன்று (12ம் தேதி) காலை ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற இயக்குனர் பெயர்கள் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட, 17 இயக்குனர்களில் ஒருவரை நிர்வாகக் குழுத் தலைவராகவும், மற்றொருவர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 32,289 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பல விவசாயிகள் வாக்களிக்க முன்வரவில்லை. 4,752 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்ததாகவும், வெறும் 8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார். திருவாலாங்காடு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கூளுர் ராஜேந்திரன், கஸ்தூரி உள்பட பலரும் வாக்களித்தனர்.

கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும்: கலெக்டர் தகவல்

அம்பத்தூர், அக். 12: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பராபட்சம் இல்லாமல் அகற்றப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி உள்ள கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரட்டூர் ஏரியின் உட்பகுதியான முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய இடங்களில் 598 ஆக்கிரமிப்பு வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் 1000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் குடும்பத்தினருடன் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தாசில்தார் சிராஜ்பாபு தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஏற்க மறுத்தார்.மேலும், பேச்சுவார்த்தையில் இன்று (12ம் தேதி) கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைத்த 17 வீடுகள் முதற்கட்டமாக அகற்றப்படுகிறது. மேலும், வரும் 15ம் தேதி மீதியுள்ள 581 ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதில், கலந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், கலெக்டர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின் பெயரில் 8 வாரங்களுக்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 2 வாரங்களுக்குள் அதனுடைய தகவல்களை கொடுக்கவேண்டும். மீறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் (12ம் தேதி) ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும். அவர்களுக்கு மாற்று இடம் குறித்த விபரங்களை குடிசைமாற்று வாரியத்துடன் ஆலோசித்து வருகிறோம். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கல்லூரி, வணிக வளாகம், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அகற்றப்படும். இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏரி நிலங்களை விற்ற மாபியா கும்பல் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்தின் பொழுது பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்என்று தெரிவித்தார். அப்போது, அம்பத்தூர் தாசில்தார் சிராஜ்பாபு உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சிண்டிகேட் வங்கி நிறுவன தின கொண்டாட்டம்

சென்னை: சிண்டிகேட் வங்கி 93வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது.  சிண்டிகேட் வங்கி 93வது நிறுவன தினத்தை முன்னிட்டு இரு வார விழாவை இந்த மாதம் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடுகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. 5.6 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல், வங்கி வணிகத்தை பொருக்குதல், சேமிப்பு, கடன் சேவைகள் உள்ளிட்டவை இந்த இரு வார கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும். வங்கியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் வாடிக்கையாளர்கள், இளம் தொழில் முனைவோருக்கு, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய் மகாபத்ரா ஊக்கம் அளித்து வருகிறார் என, சிண்டிகேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லிப்டில் சிக்கி 13 பேர் பரிதவிப்பு

சென்னை, அக் 11: சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் தினமும் வக்கீல்கள், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதே வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் கேன்டீன் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் கணக்கு வழக்குகளை பார்க்கும் அலுவலகம் என மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்ட்டில் நேற்று 13 பேர் ஏறி உள்ளனர். லிப்ட் முதல் மாடிக்கு செல்லும்போதே நின்றது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து, 1 மணி நேரம் போராடி அனைவரையும் மீட்டனர்.

இ- சேவை மையங்களில் சர்வேயர்களுக்கு அனுப்பும் பட்டா விண்ணப்ப இணையவழி முடக்கம்

திருவள்ளூர், அக். 11: திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, இ- சேவை மையங்களில் பட்டா, உட்பிரிவு பட்டா விண்ணப்பங்களை சர்வேயர்களுக்கு அனுப்பும் இணையவழி முடங்கிக் கிடைப்பதால், விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மீண்டும், பழைய முறையில் சர்வேயர்களிடம் பட்டாவுக்கு மக்கள் அலைய, இணைய வழி முடக்கப்பட்டுள்ளதா என மக்கள் சந்தேகிக்கின்றனர்,வருவாய்த்துறை மூலம், நேரடி பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் பணிகள், வருவாய் மற்றும் நில அளவைத் துறை பணியாளர்களால் தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் பலரது சொத்துக்கள், தங்கள் மூதாதையர்கள் பெயரிலேயே இருப்பதால் அரசு வழங்கக்கூடிய விவசாய கடன் மற்றும் சலுகைகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் சொத்துக்கள் உரிமையாளர்களின் பெயரில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் கைகளால் எழுதப்பட்ட பட்டா நில பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அரசு கம்ப்யூட்டர் வழி பட்டா வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பொது மக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தி இணைய வழி வசதிகள் மூலம் செயல்படுத்திட ஏதுவாக பட்டா மாறுதலுக்கான ‘’தமிழ் நிலம்’’ மென்பொருள் இணையதள வசதியுடன் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘’தமிழ் நிலம்’’’’ மென்பொருள் வசதி திருவள்ளூர் உட்பட மாநிலம் முழுவதும் உள்ளது.இந்த வசதியினைக் கொண்டு பொது மக்களும், பொது சேவை மையங்களான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் போன்றவற்றில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதள வழியாக கொடுக்கலாம்.விண்ணப்பம் செய்வோர்களின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை, இங்கு கொடுத்து அவை சேவை மையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு மீண்டும் மனுதாரருக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு, சேவை மையத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும். இந்த மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவினை பொது சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் ‘’க்யூ ஆர் கோடு’’ உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம் பொது மக்கள் வட்ட அலுவலகம் சென்று மனு அளிப்பது தவிர்க்கப்பட்டு, தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சேவை மையங்களில் பட்டா மாறுதல் மனுக்கள் அளித்து பட்டா மாறுதல் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட நடைமுறைப்படி பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் விண்ணப்பங்கள் அதனுடைய தன்மைக்கேற்ப உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதலாக இருப்பின் (முழு புல எண்ணாகவோ, கூட்டு பட்டாவாகவோ இருந்தால்) கிராம நிர்வாக அலுவலருக்கும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலாக இருப்பின் குறு வட்ட சர்வேயருக்கும் இணைய வழி மாற்றம் செய்யப்படும்.ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், ஸ்கேன் செய்யப்பட மனுதாரரின் பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு விண்ணப்பங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட விஏஓக்களுக்கும், குறுவட்ட சர்வேயர்களுக்கும் செல்வதில்லை. இதற்கான இணையவழி முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளதாக சேவை மைய ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், பொது மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் ஆகிய விண்ணப்பங்களை கடந்த 10 நாட்களாக வாங்காமல், ஊழியர்களை அலைக்கழிக்கின்றனர். இதேநிலை தமிழகம் முழுவதும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி பட்டா மற்றும் உட்பிரிவு மனுக்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட சர்வேயர்களுக்கு செல்லும் இணையவழி முடக்கத்தை உடனடியாக சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு அலைக்கழிப்பு: பொதுமக்கள் புகார்

திருவள்ளூர், அக். 11:திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பட்டியலில் திருத்தம் செய்த வாக்காளர்கள், அடையாள அட்டை பெற முடியாமல் ஓராண்டாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர் என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.கடந்த 2017க்கு முன்பு வரை கருப்பு, வெள்ளை வாக்காளர் அடையாள அட்டைகள், தாலுகா அலுவலக தேர்தல் பிரிவுகளில் வழங்கப்பட்டன. வண்ண அடையாள அட்டையாக மாற்றப்பட்டபின் தாலுகா அலுவலகங்களுக்கு அதற்கான பிளாஸ்டிக் அட்டை, பிரின்டர், கலர் இங்க் வழங்கப்படவில்லை. இதனால் வண்ண வாக்காளர் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக பெயர், முகவரி, போட்டோ உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் பிளாஸ்டிக் அட்டை, பிரின்டர், கலர் இங்க் வழங்கப்படவில்லை. இதனால் புதிய அட்டைக்காக ஆயிரக்கணக்கானோர் காத்துக் கிடக்கின்றனர். இவ்வாறு, தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.  புதிய வாக்காளர்களுக்கு மட்டும் மும்பையை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மூலம் தற்போது வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்கள் தாலுகா அலுவலகத்திற்கும், தேர்தல் பிரிவுக்கும், இ-சேவை மையங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்து இ-சேவை மையங்களிலும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு: அம்பத்தூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

அம்பத்தூர், அக். 11: கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. இந்நிலையில், கொரட்டூர் ஏரியின் உட்பகுதியான முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய இடங்களில் 598 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது வருவாய்த்துறையினர் ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர். இதன்பிறகு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்தனர். இதனை அடுத்து, ஆகஸ்ட் 30ம் தேதி 2வது முறையாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். செப்டம்பர் 3ம் தேதி அம்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தை புறக்கணித்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறினர். பின்னர், கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரம் காட்டினர். நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க இருப்பதாக மின்வாரியம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் பெண்கள், மாணவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் வீடுகளை காலி செய்யமாட்டோம் என அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிராஜ்பாபு தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக சென்னை மாவட்ட நிர்வாகத்துடன் பேசி முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு 12.30 மணி அளவில் கலைந்து சென்றனர்.அலுவலகத்துக்கு பூட்டுஆக்கிரமிப்பாளர்களின் முற்றுகை போராட்டத்தால் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தின் முன் கதவை பூட்டி வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் 2 மணி நேரம் பணிகள் முடங்கியதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி படுகொலை

சென்னை, அக். 11: சென்னை கோயம்பேடு மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் விறுவிறுப்பாக காணப்பட்டது. மார்க்கெட்டில் இருந்து வாகனங்கள் வெளியே செல்லும் நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் கல்லைபோட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதைபார்த்து பொதுமக்கள் உடனே கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், படுகொலை செய்யப்பட்ட நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் கருப்பு (எ) குகன் (38) என்று தெரியவந்தது. இவர் எப்போதும் கோயம்பேடு மார்க்கெட்டில் தான் இருப்பார். இதனால், மூட்டை தூக்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குகனை யாரேனும் கொலை ெசய்தார்களா?அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் உடன் வேலை செய்து வரும் மூட்டை தூக்கும் தொழிலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணி, அக். 11:  திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. திருத்தணி மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட திருத்தணி நகரம் 1, 2 பகுதிகளான கூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, குத்தாலம் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்கள், மின் வினியோகம் உள்ளிட்ட குறைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.பொன்ேனரி:பொன்னேரி கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளி) காலை 10.30 மணியளவில் பொன்னேரி துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.