Tiruvannamalai - Dinakaran

செல்போன் பயன்படுத்த தடை வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏஜென்டுகள் காலை 8 மணிக்குள் வரவேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, மே 17: வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏஜென்டுகள் காலை 8 மணிக்குள் வர வேண்டும், செல்போன் கொண்டுவரக் கூடாது என ஆலோசனை கூடத்தில் கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி தொகுதிக்கும் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதையொட்டி, அங்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், வாக்கு எண்ணிக்ைகயின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.அதில், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, ஆர்டிஓக்கள் தேவி(திருவண்ணாமலை), மைதிலி(ஆரணி), அன்னம்மாள்(செய்யாறு) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ம் தேதி காலை 8 மணிக்குள், வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வந்துவிட வேண்டும். செல்போன் கொண்டுவர அனுமதியில்லை. ஒருமுறை மையத்தில் இருந்து வெளியே சென்ற பிறகு, மீண்டும் அனுமதிக்க மாட்டோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேசைக்கும், தலா ஒரு ஏஜென்ட் பார்வையிட அனுமதி உண்டு. அதேபோல், தபால் வாக்கு எண்ணும் இடம், தேர்தல் நடத்தும் அதிகாரியின் இருக்கை, ஒப்புகை ரசீது எண்ணும் இடங்களிலும் ஏஜென்டுகளுக்கு அனுமதி உண்டு. எனவே, அதற்கு தகுந்த எண்ணிக்ைகயில் ஏஜென்டுகளை நியமிக்க வேட்பாளர்கள் கடிதம் அளித்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ள முகவர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல முடியும். மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்குள் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும், அதிகாரப் பூர்வமாக தகவல் பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறோம். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன்பிறகு, சுமார் 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த எண்ணிக்கை அனைத்தும் முடிந்த பிறகு, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் என்ற அடிப்படையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்கள், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஒரு சுற்றுக்கு 84 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். மேலும், தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை என அனைத்தையும் கண்காணிக்க ஒரு வேட்பாளருக்கு தலா 90 ஏஜென்டுகளை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதா தேர் பவனியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் மின்வாரிய முதன்மை பொறியாளர் விசாரணை

திருவண்ணாமலை, மே 17: செங்கம் அருகே கிறிஸ்தவ தேவாலய தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, மின்வாரிய முதன்மை பொறியாளர் விசாரணை நடத்தினார். செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் கடந்த 14ம் தேதி இரவு தூய லூர்துமாதா தேவாலய தேர் பவனி நடந்தது. அப்போது, முத்துவீதி வழியாக மாதா தேர் பவனி வந்த போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்கம்பத்தில் இருந்த மின்வயர் தேர் மீது உரசியது. அதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது, தேர் அருகே இருந்த ஜெபராஜ், அன்பரசு ஆகியோர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம், விழுப்புரம் மண்டல முதன்மை பொறியாளர் சிவராஜன், திருவண்ணாமலை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் ஆகியோர், அல்லியந்தல் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தேர் மீது மின்வயர் உரசி விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டனர். மின் விபத்து நடந்த முத்துவீதியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர் பவனிக்கு முறையாக மின்வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டதா, சம்பவம் நடந்த போது மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணியில் இருந்தனரா, தேர் உயரம், வீதிகளில் உள்ள மின்கம்பங்களின் உயரம் ஆகியவை குறித்து ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டது.கீழ்பென்னாத்தூர், மே 17: கீழ்பென்னாத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நெடுங்காம்பூண்டி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7 மணியளவில், திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலை, கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு பகுதியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி (பொறுப்பு) மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பேரூராட்சி செயல் அலுவலர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேட்டவலத்தில் பரபரப்பு குப்பைமேட்டில் கிடந்த மரகதலிங்கம் மீட்பு சம்பவ இடத்தில் ஐஜி விசாரணை

வேட்டவலம், மே 17: வேட்டவலம் ஜமீன் கோயிலில் திருட்டு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் கோயில் அருகே குப்பைமேட்டில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டு விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருட்டு போனது. கோயிலின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்தாண்டு இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜமீன் ஊழியர் பச்சையப்பன் என்பவர், நேற்று முன்தினம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைமேட்டில், திருட்டுப் போன மரகதலிங்கம் இருப்பதை பார்த்து, ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பாதுகாப்பாக வைத்தார். பின்னர், வேட்டவலம் போலீசாருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, ரவி ஆகியோர் மரகதலிங்கத்தை நேற்று முன்தினம் மீட்டு காவல் நிலையத்தில் வைத்தனர். தகவல் அறிந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி மாதவன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், மரகதலிங்கம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, திருவண்ணாமலைக்கு எடுத்து செல்லப்பட்டது.இதற்கிடையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று காலை வேட்டவலம் ஜமீன் வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள மனோன்மணி அம்மன் கோயிலையும், கோயிலில் மர்ம ஆசாமிகளால் துளையிடப்பட்ட சுவரையும் பார்வையிட்டார். கோயிலின் எதிரே உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள சுவாமி கற்சிலைகளை பார்வையிட்டு குறிப்பெடுத்தார். பின்னர், மரகதலிங்கம் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, லிங்கம் கண்டெடுக்கப்பட்ட குப்பைமேடு ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தார். மேலும், ஜமீன் மகேந்திர பந்தாரியார் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரமேஷ் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து, சிலை மீட்கப்பட்டது தொடர்பாக, ஜமீன் ஊழியர் பச்சையப்பன், அகத்தீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் சத்தியமூர்த்தி, சிலை திருட்டு நடந்தபோது மனோன்மணி அம்மன் கோயிலில் குருக்களாக இருந்த சண்முகம் ஆகியோரிடம் நேற்று ஏடிஎஸ்பி மாதவன், டிஎஸ்பி ரமேஷ் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர்.

செய்யாறு அருகே துணிகரம் வீட்டின் பூட்டு உடைத்து 48 சவரன், ரூ 80 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

செய்யாறு, மே 17: செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் தங்க நகைகள், ரூ80 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அப்துல்லாபுரம் கிராமம், விநாயகா நகரை சேர்ந்தவர் கார்த்தி(38). இவர் சென்னை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மீனா(32), மகன்கள் கவுதம்(7), நிதின்(4) ஆகியோருடன், கடந்த 10ம் தேதி இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து, அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மாமனார் பிரகாஷ் என்பவர் வீட்டை அடிக்கடி பார்வையிட்டு வந்தாராம். இந்நிலையில், பிரகாஷின் மனைவிக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால், அவர் கார்த்தி வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்நிலையில் சுற்றுலா சென்று திரும்பிய கார்த்தி, நேற்று அதிகாலை அப்துல்லாபுரம் கிராமம் அருகே வரும்போது, மாமனாருக்கு போன் செய்து வீட்டை திறக்கும்படி கூறினார். அதன்பேரில் பிரகாஷ், அங்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிதுநேரத்தில் கார்த்தி குடும்பத்தினரும் அங்கு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மற்றும் ஹாலில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதிறிக் கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 48 சவரன் நகை மற்றும் ரூ80 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து கார்த்தி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா சென்றவர் வீட்டில் நகை, பணம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கமலஹாசன் மீது கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும் போலீசில் இந்து முன்னணி புகார்

திருவண்ணாமலை, மே 16: இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமலஹாசன் மீது கிரிமினல் வழக்குப்பதிய எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை போலீசில், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை டவுன் போலீசில் நேற்று, மாவட்ட இந்து முன்னணி தலைவர் வக்கீல் சங்கர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிற மதத்தினரை திருப்திபடுத்த, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசி, இந்துக்களை கேவலப்படுத்தியதுடன், இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தி, சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தூண்ட முற்படுகிறார். இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுகிறார். எனவே அவரின் தேர்தல் பரப்புரையை ஆராய்ந்து வழக்குப்பதிவு செய்து உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டவலம் ஜமீன் கோயிலில் மாயமான பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் குப்பைமேட்டில் கண்டெடுப்பு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை

வேட்டவலம், மே 16: வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான வேட்டவலம் மலைக்கோயிலில் மாயமான பல கோடி மதிப்பிலான மரகதலிங்கம் நேற்று ஜமீன் அரண்மனை வளாக குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது பழம்பெருமை வாய்ந்த மனோன்மணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருட்டு போனது. கொள்ளையர்கள் கோயிலின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை மரகத லிங்கம் மற்றும் அம்மன் தங்கத்தாலி, வெள்ளியால் செய்யப்பட்ட அம்மன் கிரீடம், பாதம், ஒட்டியாணம், பச்சை மரகத லிங்கம் மீது வைக்கப்படும் வெள்ளி நாகாபரணம் ஆகியவற்றையும் திருடிச் சென்றனர்.இதுகுறித்து ஜமீன்தார் மகேந்திரபந்தாரியார் மற்றும் கோயில் குருக்கள் சண்முகம் கொடுத்த தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டடன. இந்த வழக்கு கடந்த ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மாதவன், டிஎஸ்பி ரமேஷ், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சிலை திருட்டு தொடர்பாக கோயில் குருக்கள் சண்முகம், ஜமீன்தார் மகேந்திர பந்தாரியார் மற்றும் ஜமீன் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஜமீன் ஊழியர் பச்சையப்பன் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டச் சென்றார். அப்போது குப்பைக்குள் இருந்த மரகத லிங்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை ஏற்கனவே மனோன்மணி அம்மன் கோயில் குருக்களாக இருந்து பின்னர் வேட்டவலம் அறம்வளர்த்த நாயகி சமேத அகதீஸ்வரர் கோயிலில் பணியாற்றும் குருக்கள் சத்தியமூர்த்தியிடம் காண்பித்தார். அவர் இது ஜமீன் கோயிலில் திருட்டுப்போன மரகத லிங்கம் தான் என்று கூறினார்.இதையடுத்து பச்சையப்பன் அந்த மரகத லிங்கத்தை ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு ஜமீனுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையில் மரகத லிங்கம் கிடைத்த தகவலை குருக்கள் சத்தியமூர்த்தி, தற்போது மனோன்மணி கோயிலில் குருக்களாக இருக்கும் சண்முகத்திடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சண்முகம் இதுகுறித்து வேட்டவலம் போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக வேட்டவலம் சப் இன்ஸ்பெக்டர் மதன்குமார், எஸ்எஸ்ஐக்கள் கருணாநிதி, ரவி ஆகியோர் மரகத லிங்கத்தை கண்டெடுத்த பச்சையப்பனை பிடித்து ஜமீன் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். பச்சையப்பன் அங்கு தொட்டியில் வைத்திருந்த மரகத லிங்கத்தை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து எஸ்ஐ மதன்குமார், மரகத லிங்கத்தை ஜமீன்தார் குடும்பத்தினரிடம் காண்பித்து அது காணாமல் போன மரகத லிங்கம்தானா என்பதை உறுதி செய்தார். இதையடுத்து இந்த தகவல் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி மாதவனிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடியும் வரை மரகத லிங்கம் வேட்டவலம் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று வேட்டவலம் வந்து மரகத லிங்கத்தை பார்வையிட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டு பகுதிகளில் கருகி வரும் கரும்பு பயிர்களால் விவசாயிகள் வேதனை நிவாரணம் வழங்க கோரிக்கை

சேத்துப்பட்டு, மே 16: சேத்துப்பட்டு பகுதிகளில் நிலவும் வறட்சியால், கரும்பு பயிர்கள் கருகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய கிணறுகள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. கிணற்று நீரை நம்பி வைத்த பயிர்கள் எல்லாம் தண்ணீரின்றி கருகி வருகிறது. சேத்துப்பட்டு பகுதிகளில் கரும்பு விவசாயிகளின் நிலை படுமோசமாக உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர்கள் கருகி போயுள்ளன. வங்கிக்கடன், உரம் வாங்க கடன் என பல்வேறு இடங்களிலும் கடன் வாங்கி, பார்த்துபார்த்து பயிரிட்ட கரும்புகள் தற்போது கருகி வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையே கசப்பாகி உள்ளது.மேலும், சேத்துப்பட்டு, நம்பேடு, தேவிமங்கலம், முடையூர், தேவிகாபுரம், ஆத்துறை, பெரணம்பாக்கம், போளூர், கலசபாக்கம் என பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து, அரசு நிர்ணயித்த பணம் கூட கைக்கு கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இயற்கையும் சதி செய்ததால், அவர்களது வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது. வாங்கிய கடனை எப்படி தீர்ப்பது என திக்கு தெரியாமல் வேதனையில் மூழ்கி வருகின்றனர். எனவே, சேத்துப்பட்டு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் அருகே பரிதாபம் முக்கிய வீதிகள் வழியாக மாதா சிலை பவனி வந்தபோது கிறிஸ்தவ ஆலய தேரில் மின்வயர் உரசி 2 பேர் பலி

செங்கம், மே 16: செங்கம் அருகே கிறிஸ்தவ ஆலய தேர் திருவிழாவில், மாதா சிலை பவனி வந்தபோது தேரில் மின்வயர் உரசியதில், மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் தூயலூர்து மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், மாதா சிலை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. முத்துவீதி வழியாக வந்தபோது, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த மின்வயர் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சியில் உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசு(50), ஜெபராஜ்(40) ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே கிராமத்தை சேர்ந்த பிரேம்ராஜ்(37) என்பவர் லேசான காயமடைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நாலாப்புறமும் சிதறி ஓடினர். பின்னர், காயமடைந்த பிரேம்ராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீடு திரும்பினார். தேர் பவனியின்போது 2 ேபர் பலியானதையொட்டி தேர் திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்பரசு மனைவி அன்னபூரணி பாச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்ெபக்டர் ெஜயந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தேரின் மீது மின்வயர் உரசி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் பரபரப்பு நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் பொதுமக்கள் பரிதவிப்பு

திருவண்ணாமலை, மே 15: திருவண்ணாமலையில் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால், அங்கு குடியிருந்த பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஈசான்யம் லிங்கம் எதிரே நகராட்சிக்கு சொந்தமன சுடுகாட்டு பகுதி உள்ளது. இங்கு காலியாக இருந்த பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், செங்கள் சூளை நடத்தி வந்தனர். இதையடுத்து, சித்ரா பவுர்ணமியின் போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கிரிவலப்பாதையை ஆய்வு மேற்கொண்ட போது, இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையொட்டி நகராட்சி நிர்வாகம் அங்கு வீடுகட்டி குடியிருந்தவர்களுக்கு அப்பகுதியினை காலி செய்ய கோரி நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும், அவர்கள் அப்பகுதியில் இருந்து காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே இருந்து வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். அப்போது டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் ஆயுதப்படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து, அங்கு வசித்து வந்தவர்கள் அதிகாரிகளிடம் வீடுகளை இடிக்க கூடாது என கூறி எங்களுக்கு வேறு இடம் கிடையாது. இதற்கு மாற்றும் இடம் வழங்கும் படியும், மாற்று இடம் வழங்கும் வரை நாங்கள் இந்த வீட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கு செல்வது என கூறி பெண்கள் கதறி அழுதனர். இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் உரிய மாற்று இடம் தேர்வு செய்து வழங்கப்படும் என கூறினார். இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் மற்றும் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், வேலூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த பெட்டிக்கடையை அகற்றினர். மேலும், இங்குவசித்து வந்தவர்கள் சுமார் 30 ஆண்டு காலம் வசித்து வந்ததாகவும், அவர்களுக்கு இந்த முகவரியில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வரி செலுத்தி வந்ததாக அங்கு வசித்து வந்தவர்கள் தெரிவித்தனர். பாக்ஸ்பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வீடுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள். இதேபோல் நகரில் பல்வேறு பகுதியில் ஆக்கிரமித்து கடை, விடுகள் கட்டப்பட்டுள்ளது. அதையெல்லம் அவர்கள் அகற்றாமல் குறிப்பிட்ட இந்த பகுதியில் மட்டும் அகற்றியுள்ளார்கள். இதுபோல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையெல்லாம் அவர்கள் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வசதி படைத்தவர். எங்களை போன்றவர்களை தான் அதிகாரிகள் அப்புறப்படுத்துகின்றனர் என கண்ணீர் மல்க வேதனையோடு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் தினக்கூலியை குறைத்ததால் தவிப்பு ஒட்டுமொத்தமாக காலில் விழுந்ததால் பரபரப்பு திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை, மே 15: தினக்கூலியை குறைத்து வழங்கி பழிவாங்கும் அதிகாரியால் பாதிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட சுகாதார பணியாளர்கள், திருவண்ணாமலை கலெக்டரின் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 36 பெண்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு மாதம் ₹750 என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, கலெக்டரின் உத்தரவுபடி படிப்படியாக நாளொன்றுக்கு ₹150 வீதம் மாதம் ₹4,500 வழங்கப்பட்டது. இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் செயல் அலுவலரின் திடீர் நடவடிக்கையால், தினக்கூலியை குறைத்து மாதம் ₹3,850 வழங்கப்படுகிறது. மேலும், பணி செய்யும் நாட்களை முறையாக கணக்கிடாமல் கூலி குறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மகளிர் குழு பெண்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் மனு வாங்க மறுத்தனர். அதனால், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அலுவலகத்துக்கு வந்தார். காரில் இருந்து கீழே இறங்கிய கலெக்டரின் காலில், திடீரென பெண்கள் அனைவரும் விழுந்தனர். இதனால், பதற்றம் அடைந்த கலெக்டர் கந்தசாமி, அவர்களை தடுத்து நிறுத்தி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். அப்போது, கண்ணீருடன் மகளிர் குழுவினர் கலெக்டரிடம் தெரிவித்ததாவது: பேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டம் இல்லை. விவசாய வேலையும் கிடைப்பதில்லை. எனவே, குறைந்த கூலிக்கு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதார பணியாளர்களாக வேலை செய்கிறோம். ஆனால், காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் என தினமும் வேலை செய்கிறோம். ஆனால், எங்கள் வேலை நாட்களை முறையாக செயல் அலுவலர் கணக்கிடுவதில்லை. கூலியையையும் திடீரென குறைத்துவிட்டார். இதுகுறித்து, செயல் அலுவலரிடம் நேரில் முறையிட்டோம். அப்போது, எங்களை மரியாதைக்குறைவாக ேபசி அலுவலகத்தில் இருந்து வெளியே விரட்டினார். எனவே, வேறு வழியின்றி முறையிட வந்தோம் என்றனர். மேலும், துப்புரவு பணி செய்யும் போது விபத்தில் சிக்கி ஒரு பெண் ஏற்கனவே உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆனாலும், எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றனர். தொடர்ந்து, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வல்லம் கிராமத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து மழை வேண்டி தவளையை குளத்தில் விட்டு நூதன பூஜை

கண்ணமங்கலம், மே 15: கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன பூஜை செய்தனர். தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் ஆங்காங்கே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மழை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதரமே கேள்விக்குறியாகி உள்ளது. போதிய நீர் இல்லாமலும், கடும் வெப்பத்தாலும் கால்நடைகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள ஏரியில் கிராம தேவதை மஞ்சியம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, சிறிய செயற்கை குளம் அமைத்து அதில் தவளைகளைவிட்டனர். பின்னர், பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து மழை வேண்டி அழுதனர். இதுபோல் பூஜை செய்வதால் மழை வரும் என்பது ஐதீகம் என கிராமமக்கள் கூறினர். பின்னர், இதில் கலந்து கொண்டவர்களுக்கு கலியும், கருவாட்டு குழம்பு விருந்து அளிக்கப்பட்டது.

பெரணமல்லூர் அருகே மழை வேண்டி சவ ஊர்வலம் எடுத்து நூதன வேண்டுதல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

பெரணமல்லூர், மே 15: பெரணமல்லூர் அருகே மழை வேண்டி பாடைகட்டி சவ ஊர்வலம் எடுத்து சென்று எரித்து நூதன வேண்டுதலில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் அடி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் வறட்சியை சமாளிக்க திண்டாடி வருகின்றனர். இதுதவிர குடிநீர் பிரச்னைகளுக்காக ஆங்காங்கே சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோயில்களில் மழை வேண்டி யாகமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மழை வேண்டி சவ ஊர்வலம் நடத்தி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர்.முன்னதாக கிராமத்தில் நடுவே கொடும்பாவி காட்டி பாடை கட்டி மேள, தாளத்துடன் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதி வழியே எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள வறண்ட கல்ஏரிக்கு எடுத்து சென்றனர். பின்னர், அங்கு கொடும்பாவியை இறக்கி வைத்து சவத்திற்கு செய்யும் சடங்குகளை செய்து சுற்றி நின்று ஒப்பாரி வைத்து பெண்கள் அழுதனர். பின்னர், கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மழை பெய்தது. தற்போது மழை இல்லாததால் இப்பகுதிகளில் கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. மேலும், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் பயிர்கள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகி வருகிறது. எனவே, மழை வேண்டி குடிநீர் பிரச்னை தீர்த்து, விவசாயம் செழிக்க வருண பகவானை நினைத்து மனமுருகி ஒப்பாரி வைத்து கொடும்பாவியை எரித்து வழிபாடு நடத்தினோம்' என்றனர். தொடர்ந்து எரியில் படையலிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கலசப்பாக்கம் அருகே 13 பேரை கடித்து குதறிய வெறிநாய்

கலசபாக்கம், மே 15: கலசபாக்கம் ஊராட்சி விண்ணுவாம்பட்டு, சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற 6 பேரை கடித்து குதறியது. இதனால், நாயை பொதுமக்கள் விரட்டியடித்தனர். பின்னர், அங்கிருந்து பில்லூர் கிராமத்திற்கு சென்ற அந்த நாய், அங்கிருந்த 3 பேரையும், பூண்டி கிராமத்தில் 4 பேரையும், 1 பசுமாட்டை கடித்து குதறியது. இதனால், பொதுமக்கள் தெருவில் நடமாடுவதற்கு அச்சமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த சுகாதாரத்துறையினர் கிராமங்களுக்கு சென்று வெறிநாய் கடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், ஆத்திரமடைந்த பூண்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெறி பிடித்த நாயை அடித்து கொன்றனர். பின்னர் அந்த நாயை ஏரியில் குழிதோண்டி புதைத்தனர்.

5 ஆண்டுகளில் இரட்டிப்பு தருவதாக மோசடி தனியார் நிறுவன சேமிப்பு திட்டத்தில் ₹10 லட்சம் இழந்த கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருவண்ணாமலை, மே 14: 5 ஆண்டுகளில் இரட்டிப்பு தருவதாக கூறி தனியார் நிறுவன சேமிப்பு திட்டத்தில் ₹10 லட்சத்தை இழந்த பெண்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறையால் கடந்த மார்ச் 10ம் தேதி முதல் நடைபெறவில்லை. ஆனாலும், ஒவ்வொரு திங்கள் கிழமையும், மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிகின்றனர்.அதன்படி, நேற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆனால், பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெறவில்லை. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ள புகார் பெட்டியில், தங்களுடைய மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில், சேத்துப்பட்டு தாலுகா, பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை சேமித்து ஏமாந்ததாக புகார் அளிக்க வந்தனர். அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, கோரிக்கை மனுவை, புகார் பெட்டியில் செலுத்தினர்.பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 53 பெண்கள், ராயல் அக்ரோ டைரி லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் பணத்தை சேமித்தோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், அதற்கு ஏஜென்டாக செயல்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மொத்தம் ₹10 லட்சம் சேமிப்பு தொகையை தனியார் நிறுவனத்தில் பணத்தை செலுத்தினோம். ஐந்து ஆண்டுகள் முடிந்ததும், சேமிப்பு பணத்தை இரட்டிப்பாக தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், சேமிப்பு கால அவகாசம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை சேமித்த பணத்தையும் தரவில்லை, இரண்டு மடங்கு பணத்தையும் தரவில்லை. தொடர்ந்து அலைகழிக்கின்றனர். எனவே, எங்களுடைய சேமிப்பு பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். அதேபோல், போளூர் தாலுகா கரிகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுடைய கிராமத்துக்கு அருகே செல்லும் செய்யாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடப்பதாக புகார் மனு அளிக்க வந்தனர். கிராமத்துக்கு குடிநீர் சப்ளை செய்ய அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு அருகே மணல் எடுப்பதால், நீராதாரம் பாதிப்பதாக புகாரில் தெரிவித்திருந்தனர். மேலும், மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் மீது போளூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்ததும் தொடர்ந்து மணல் கடத்தல் நடக்கிறது. மணல் கடத்தலை தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் அதிகாரிகள் சமரசம்

செய்யாறு, மே 14: செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ெசய்யாறு அடுத்த தண்டரை ஊராட்சி தண்டரை மேட்டுகாலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நீர் தேக்கத்தொட்டி மற்றும் 4 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், தண்டரை ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யவில்லையாம். குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து, செய்யாறு பிடிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை செய்யாறு- ஆரணி சாலையில் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு பிடிஓ பாரி, தாசில்தார் மூர்த்தி, செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், ‘செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றை தூர்வாரி எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'''''''' என கோரிக்கை விடுத்தனர். உடனடியாக குடிநீர் வழங்கவும், செய்யாற்றில் உள்ள கிணற்றை தூர்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கோயில்மேடு பகுதியில் உள்ள பழைய காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு வெயில் காரணமாக வறண்டு விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீரான குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை- சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அவ்வழியாக வந்த கீழ்பென்னாத்தூர் தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் பிடிஓ மாகதேவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக பிடிஓ உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

கடனை திருப்பி செலுத்திய பிறகும் வீட்டை பூட்டிச் சென்ற அண்ணன் மீது நடவடிக்கை வலியுறுத்தி தம்பி உட்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 14: கடனை திருப்பி செலுத்திய பிறகும் வீட்டை பூட்டி விட்டு சென்ற அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பி உட்பட 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்குட்பட்ட நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் என்பவரின் மகன் திருப்பதி(42), இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி, தனது வீட்டிலேயே டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மீனா(16), துர்கா(14) என்ற மகள்களும், விமல்ராஜ்(13) என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில், திருப்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவசர பணத் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், தனது அண்ணன் பாஸ்கரன் என்பரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து ₹2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை அவ்வப்போது, தவணை முறையில் திருப்பதி தனது அண்ணனிடம் திருப்பி செலுத்தி வந்துள்ளார். பெற்ற கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து ₹3 லட்சத்திற்கு மேல் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, தனது வீட்டின் அடமான பத்திரத்தை திருப்பி தரும்படி திருப்பதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனிடம் கேட்டார். அதற்கு அவர், நீ வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ₹10 லட்சம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் வீட்டை எனது பெயருக்கு எழுதி தரவேண்டும் என கூறியுள்ளார். அதற்கு திருப்பதி வாங்கிய கடன் தொகையை செலுத்தி விட்டேன் வீட்டை எழுதி கொடுக்க முடியாது என கூறிவிட்டு வந்தார். இதனிடையே, திருப்பதி வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் சுமதி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த 11ம் தேதி இரவு பாஸ்கரன் தனது தம்பி வீடான திருப்பதி வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டை பூட்டி சாவி எடுத்து சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சுமதி தனது குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வெளியிலேயே கடந்த 2 நாட்களாக இருந்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து திருப்பதி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தவர், திடீரென கலெக்டர் அலுவலகம் போர்டிகோ பகுதியில் பையில் வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து அனைவர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனை கண்ட அங்கிருந்த சிலர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சுமதி அதிகாரி காலில் விழுந்து நடந்தவற்றை கூறி தங்களை காப்பாறுமாறு கதறி அழுதார். பின்னர், விசாரணை நடத்தி பாஸ்கரனிடமிருந்து சாவியை பெற்று திருப்பதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தனித்துறை ஆட்சியர் தனது வாகனத்தில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும், உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கடலாடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் அனல் காற்றில் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலையில் நேற்று 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால் அனல் காற்றில் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் ெதாடங்கியதில் இருந்து திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியாக திகழும் தேரடிவீதி, கடலைக்கடை சந்திப்பு, ரவுண்டானா, பெரியதெரு, திருவூடல்தெரு, பேகோபுர தெருக்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.. வெயிலின் கொடுமை தாங்காமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். நேற்று பகலில் அனல் காற்று வீசியது. நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது.வீட்டில் உள்ள எந்த பொருளை தொட்டாலும் சூடாகவே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் குளம், கிணறுகள், குளங்களில் குளித்து மகிழ்கின்றனர். குளிர்பான கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலின் தாக்கமும் அனல் காற்றையும் தாங்கி கொள்ள முடியாத நடைபாதை வியாபாரிகள் குடைபிடித்தபடி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுக்கக்கூறி தந்தை, சித்தி கொடுமையால் கடத்தல் நாடகமாடிய அக்காள், தம்பி மீட்பு ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, மே 14: பிச்சை எடுக்கக்கூறி தந்தை, சித்தி கொடுமை செய்ததால் கடத்தல் நாடகமாடிய அக்காள், தம்பி மீட்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(32), கூலிதொழிலாளி. இவரது மனைவி ராணி(30). இவர்களுக்கு சந்தியா(10) என்ற மகளும், குரு(8), நாகராஜ்(6) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராணிக்கும், சரண்ராஜிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ராணி கோபித்துக்கொண்டு 2வது மகன் குருவுடன், விழுப்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சரண்ராஜ் பலமுறை அழைத்தும் ராணி குடும்பம் நடத்த வரவில்லையாம். இதனால், சரண்ராஜ் கடந்த ஆண்டு கவுரி(29) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று கொசப்பாளையம் பகுதியில் எட்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதை பார்ப்பதற்காக சென்ற சந்தியா, நாகராஜ் ஆகிய இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரண்ராஜ், அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடினார். இதற்கிடையே ஆரணி அடுத்த பத்தியாவரம் பகுதியில் சந்தியா, நாகராஜ் இருவரும் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் கேட்டபோது, ‘ஆரணியில் இருந்து எங்களை யாரோ கடத்தி வந்து, இங்கே விட்டுவிட்டு சென்றனர்' எனக்கூறினர். இதுகுறித்து கிராம மக்கள் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தனர். அவர்கள் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார், சரண்ராஜிடம் விசாரித்தனர். திருவிழாவிற்கு சென்ற தனது குழந்தைகளை காணவில்லை. அவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்' என சரண்ராஜ் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சரண்ராஜ், கவுரி இருவரையும் அழைத்துக்கொண்டு பத்தியாவரத்திற்கு சென்று சந்தியா, நாகராஜ் இருவரையும் மீட்டனர். சந்தியாவிடம் ேபாலீசார் விசாரித்தபோது, ‘ஆரணியில் இருந்து பைக்கில் வந்த ஒருவர் எங்களை அழைத்து வந்து இங்கே விட்டு சென்றார்' என கூறினார். ஆனால் நாகராஜிடம் விசாரித்தபோது ‘விழுப்புரத்தில் உள்ள எங்களது அம்மாவை பார்ப்பதற்காக, ஆரணியில் ஒரு இடத்தில் நிறுத்தியிருந்த ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு நானும், எனது அக்காவும் வந்தோம். சைக்கிள் எடுத்து வந்ததை தெரிந்தால் யாராவது அடித்துவிடுவார்கள் என பயந்து, சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, எங்களை கடத்தி வந்துவிட்டதாக தெரிவித்தோம்' என தெரிவித்தான்.இதுகுறித்து சந்தியாவிடம் கேட்டபோது, பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும், இருவரிடமும் நடத்திய விசாரணையில், ‘தந்தையும், சித்தியும் எங்களை சரியாக கவனிப்பதில்லை. பள்ளிக்கு அனுப்புவதில்லை. சாப்பாடு கேட்டாலும் போடுவதில்லை. எங்களது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து எங்களை, பிச்சை எடுக்கும்படி கூறி கட்டி வைத்து அடிக்கிறார். இதனால் விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக வந்தோம்' என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சரண்ராஜ், கவுரி இருவரையும் கடுமையாக எச்சரித்து, நாகராஜ், சந்தியா இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தி.மலை) 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணி பலி சிசுவும் இறந்த பரிதாபம் வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, மே 10: வந்தவாசி அருகே பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணி பலியானார். வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா(30). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ராகுல்(2) என்ற மகன் உள்ளான். உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.இந்நிலையில், கடந்த 7ம் தேதி மதியம் உமா வீட்டில் பிரியாணி செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டனர். பின்னர், மீதமான பிரியாணியை பிரிட்ஜில் வைத்திருந்தார். அன்று இரவு பிரிஜ்ஜில் வைத்திருந்த பிரியாணியை உமா சாப்பிட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உமா பரிதாபமாக இறந்தார். மேலும், உமா வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது. இதுகுறித்து, உமாவின் அண்ணன் ஏழுமலை வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்தார். உமாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு சப்-கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார். பிரிட்ஜில் வைத்திருந்த பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணியும், சிசுவும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘போலி பெயின்ட்’ விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு ₹74 ஆயிரம் மதிப்புள்ள பெயின்ட் பறிமுதல் வேட்டவலத்தில் உள்ள கடையில் பிரபல கம்பெனி பெயரில்

வேட்டவலம், மே 10: வேட்டவலத்தில் உள்ள கடையில் பிரபல கம்பெனி பெயரில் போலி பெயின்ட் விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் பிரபல தனியார் பெயின்ட் கம்பெனி பெயரில் போலியாக பெயின்ட் விற்பதாக கம்பெனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனியார் பெயின்ட் நிறுவனத்தை சேர்ந்த தரக்கட்டுப்பாட்டு அலுவலரான, புதுடெல்லி மயூர்விகார் பேஸ் பகுதியை சேர்ந்த அருண்பிரசாத்(23) என்பவர், கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி வேட்டவலத்திற்கு வந்தார்.அங்கு அந்த குறிப்பிட்ட கடைக்கு சென்ற அவர் தன்னை வாடிக்கையாளராக அறிமுகம் செய்து ₹930க்கு 40 கிலோ வால் பட்டியும், 12ம் தேதி ₹1250க்கு 10 லிட்டர் பெயின்ட்டும் வாங்கினார். அந்த பெயின்ட்களை கம்பெனி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது, வேட்டவலத்தில் உள்ள கடையில் தனது கம்பெனி பெயரில் போலி வால் பட்டி மற்றும் பெயின்ட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து, அருண்பிரசாத் கடை உரிமையாளர் மீது வேட்டவலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அங்கு ₹74 ஆயிரம் மதிப்புள்ள 5 வகையான போலி பெயின்ட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கடை உரிமையாளர் போலி பெயின்ட் விற்று மோசடி, பதிப்புரிமை சட்டத்தின்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.