Trichy - Dinakaran

துறையூர் அருகே நடந்து சென்ற பெண்கள் மீது பைக்கால் மோதியவர் சாவு

துறையூர், மே 19: துறையூர் அருகே  பைக் மோதிய  விபத்தில் 2 பெண்கள் காயமடைந்தனர். பைக்கை ஓட்டி வந்தவர் கீழே விழுந்து பலியானார். துறையூர் அருகே வெங்கடாசலபுரம் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த  பழனியாண்டி மகன் முருகன்(50). இவர் தனது பைக்கில் நேற்று  முன்தினம் இரவு வெங்கடாசலபுரத்திலிருந்து துறையூர் நோக்கி சென்றார்.  அப்போது புடலாத்தி பிரிவு ரோடு அருகே கரட்டடியான் கோயில் சாமி கும்பிட  சென்று கொண்டிருந்த கோத்தகிரி பாண்டிநகர்  பகுதியைச் சேர்ந்த யோகராஜ் மனைவி சரிதா(28),  திருப்பூர் மாவட்டம, ஊத்துக்குளி முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த  பெருமாள் மனைவி சரசு(40) ஆகிய இருவர் மீதும் முருகன் ஓட்டிச் சென்ற பைக்  மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த முருகன் துறையூர் அரசு  மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும்  வழியில் புலிவலம் அருகே இறந்தார்.  காயமடைந்த 2 பெண்களும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெறுகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை, மே 19:  மணப்பாறை அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். ஸ்வீட் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர் நேற்று விராலிமலை சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிவசங்கரி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து சிவசங்கரி மணப்பாறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ரங்கத்தில் உள்ள இசைப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை நாளை துவக்கம் கலெக்டர் தகவல்

திருச்சி, மே 19: ரங்கத்தில் உள்ள இசைப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை நாளை (20ம் தேதி) துவக்கப்படுகிறது என  கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி 1997 முதல் தொடங்கப்பட்டு தற்போது ரங்கம் மேலூர் ரோடு, மூலத்தோப்பில்  செயல்பட்டு வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய இசைப்பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது மூன்றாண்டு சான்றிதழ் படிப்பாகும்.இதில் 12 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். குரலிசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டிய பயிற்சிக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம், நாதசுரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்பக் கல்வித் தகுதியில் சலுகை உண்டு. இப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேர பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.152 மட்டுமே வசூலிக்கப்படும். மாதந்தோறும் ரூ.400 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக தங்கிப் பயிலவும்,  பஸ் பாஸ், இலவச சைக்கிள் அரசால் வழங்கப்படுகிறது.  இசைப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும். இதில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க கஞ்சா பொட்டலத்துடன் சென்ற வாலிபர் சிக்கினார்

திருச்சி, மே 19:  திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம்தெருவை சேர்ந்தவர் தர்மா(எ)தர்மராஜ்(26), கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார். இவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தர்மா மத்திய சிறைக்கு சென்றார். அப்போது சிறை வளாகத்தில் பணியில் இருந்த காவலர் ரமேஷ் என்பவர் தர்மாைவ சோதனை செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த டவுசரில் 2 கஞ்சா  பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரமேஷ், கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற போலீசார் தர்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி சிங்காரதோப்பில் 110 ஆண்டுகளாக செயல்பட்ட சிட்டி கிளப் இடித்து தரைமட்டம் மாநகராட்சி அதிரடி புதிய வணிக வளாகம் கட்ட முடிவு

திருச்சி, மே 19:   திருச்சி சிங்காரதோப்பில் 110 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிட்டி கிளப்பை மாநகராட்சி நிர்வாகம் நேற்று அதிரடியாக இடித்தது. இந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. திருச்சி மாநகரின் மையப்பகுதி சிங்காரத்தோப்பு. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இந்த பகுதியில் தான் உள்ளது. இங்குள்ள மேலரண்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 ச.மீ. பரப்பளவு உள்ள இடத்தை அப்போதைய நகராட்சி 1905ம் ஆண்டு முதல் சிட்டி கிளப் என்ற பொழுது போக்கு மன்றத்துக்கு 85 ஆண்டுகளுக்கு குத்தகைவிட்டது. 85 ஆண்டு கால குத்தகை முடிந்ததும், 28.5.1989ல் அப்போதைய சிட்டி கிளப் தலைவர், மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடித்து தரும்படி திருச்சி நகராட்சிக்கு கடிதம் எழுதினார். அதன்படி, 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீடித்து கொடுத்தது. சிட்டி கிளப்பில் அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், திருச்சி மாநகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சிட்டி கிளப் குத்தகைக்கு 2012-13ல் வருட வாடகையாக ரூ.1,613 என நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடம் மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு தேவைப்படுவதால் கடந்த 25.9.2013ம் தேதி மாமன்ற தீர்மானம் எண்.226படி குத்தகை ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என 3 மாத கால அவகாசம் வழங்கி சிட்டி கிளப் செயலாளருக்கு 4.10.2013ல் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிட்டி கிளப் செயலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், குத்தகை நீடிப்பு காலமான 25 ஆண்டுகள் 2014ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் அதன்பின்பு குத்தகை உரிமத்தை நீட்டிப்பு செய்து தரக்கோரி விண்ணப்பமும் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த இடம் திருச்சி மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அபிவிருத்தி பணிக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகை இடத்தை கையகப்படுத்த 7.12.2018ல் மாநகராட்சி சார்பில் சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிட்டி கிளப்பை காலி செய்துவிட்டு அந்த இடத்தில் பன்அடுக்கு வாகனம் நிறுத்திமிடம் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5.12.2018ம் தேதி ஒப்பந்த புள்ளி விடப்பட்டு அபிவிருத்தி பணி தொடங்கப்பட்டது. இதற்கு தடை கோரி சிட்டி கிளப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கடந்த 27.3.2019ம் தேதியன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிட்டி கிளப் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் விளக்க கடிதம் கொடுத்தனர். 3,889 ச.மீ. பரப்பில் அமைந்துள்ள சிட்டி கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை மாநகராட்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாலும், இதற்கு தடை கேட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டதாலும், சிட்டி கிளப் நிர்வாகத்தினரை அனுமதியின்றி குடியிருப்பவராக கருதி குத்தகை இடத்திலிருந்து வெளியேற மாநகராட்சி உத்தரவிட்டது. இதனால் அனுமதியின்றி குடியிருப்பவர் நேற்று (18ம் தேதி) காலை 6 மணிக்குள் வெளியேற மாநகராட்சி உத்தரவிட்டது. தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்டு சுவாதீன செலவினங்கள், அனுமதியின்றி குடியிருப்பவரிடம் (சிட்டி கிளப்பிடம்) வசூல் செய்யப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் சிட்டி கிளப் செயல்படும் கட்டிடத்தில் ஒட்டப்பட்டது. எனவே இரவோடு இரவாக அந்த இடத்தை நிர்வாகிகள் காலி செய்து விடுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நிர்வாகிகள் யாரும் அந்த இடத்தை காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு திருச்சி கோட்டை போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நகர ெபாறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் குணசேகர், பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் ரவீந்திரன், ராஜேஸ்கண்ணா, ஜெயகுமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் 5 பொக்லைன் இயந்திரங்கள், 10 டிப்பர் லாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை திறந்தவெளிக்கு கொண்டு வந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து ெபாக்லைன் இயந்திரங்கள் மூலம் சிட்டி கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த இடத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பன்அடுக்கு வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என தெரிகிறது.அமைச்சரும் உறுப்பினர் சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் மலர்செழியன் ஆகியோர் அளித்த பேட்டி: சிட்டி கிளப் மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தி வந்தது. மாநகராட்சி இப்போது அராஜகமாக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி உள்ளது. இந்த சிட்டி கிளப்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உறுப்பினராக உள்ளார். இது குறித்து ஏற்கனவே அவரிடம் முறையிட்டோம். மேலிட பிரஷர் இருக்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். முதல்வரின் உறவினர் நிறுவனம்தான் இந்த இடத்தில் கட்டுமான பணிகளை செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம். சட்டரீதியாக சந்திப்போம்’ என்றனர். ரூ.4.64 கோடி வருவாய் இழப்பு சிட்டி கிளப் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்திருந்தும் குத்தகை தொகை மிக சொற்ப அளவில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநில கணக்காயர் தணிக்கையில் 1989-90 முதல் 2016-17 ஆண்டுகள் வரை மட்டும் குத்தகை தொகையாக ரூ.4.64 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.18.70 லட்சம் மோசடி திருவண்ணாமலை இன்ஜினியர், டிரைவர் கைது

லால்குடி, மே 17: மேட்ரிமோனி மூலம் திருமண ஆசைக்காட்டி திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு அவரை ஏமாற்றிய சிவில் இன்ஜினியர் மற்றும் அவரது கார் டிரைவரை லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் சக்கரவர்த்தி (34), சிவில் இன்ஜினியர். திருமணமான சக்கரவர்த்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் சக்கரவர்த்தி மேட்ரிமோனி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில், தான் ஒரு டாக்டர் எனவும், அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜாசரவணன் என பல பெயர்களிலும் தன்னை திருமணமாகாதவர் என்று போலியாக பதிவு செய்துள்ளார்.  திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் பிச்சாண்டார் கோயில் வி.என்.நகரை சேர்ந்த செல்வராஜ் மகள் தாமரைச்செல்வி(33). கணவரை இழந்து, ஒரு பெண் குழந்தை உள்ள இவர் புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். தாமரைச்செல்வியும் சக்கரவர்த்தியும் ஒருவரை ஒருவர் தங்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள தகவல்களை பார்த்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு காதல் கொண்டுள்ளனர். இந்நிலையில் தாமரைச்செல்வியை திருமணம் செய்துகொள்வதாக சக்கரவர்த்தி ஆசைவார்த்தை கூறி காதலித்தார். அதனை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகினார். இந்நிலையில் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கத்தை சக்கரவர்த்தியிடம் தாமரைச்செல்வி கொடுத்தார்.   இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தாமரைச் செல்வி சக்கரவர்த்தியை வற்புறுத்தினார். ஆனால் சக்கரவர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. தாமரைச்செல்விக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த தாமரைச்செல்வி திருச்சி எஸ்பி., ஜியாவுல்ஹக்கிடம் புகார் கொடுத்தார். எஸ்பி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து மதுரை ஐகோர்ட் கிளையில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி தாமரைச்செல்வி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டில் தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தி மற்றும் சக்கரவர்த்தியின் கார் டிரைவர் முருகன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்கரவர்த்தி தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சக்கரவர்த்தி, முருகன் ஆகியோர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து, அவர்களை லால்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சக்கரவர்த்தி தன்னை டாக்டர் என கூறி மேட்ரிமோனியில் போலியாக கணக்கு தொடங்கி அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் போன்ற பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் யூபிஎஸ் வசதியில்லை மின்தடை நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதி

தா.பேட்டை, மே 17: முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து பணிகள் செய்யும் வகையில் மின் பேட்டரி (யூபிஎஸ்) வசதி இல்லாததால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு வாரிசு சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா, சிட்டா, சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அரசு வழங்கும் பல்வேறு சான்றிதழ்களை இ-சேவை மையத்தில்  அதற்குரிய கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது இ-சேவை மையத்தில் யுபிஎஸ் எனும் மின் பேட்டரி வசதி இல்லாமல் உள்ளது.  இதுகுறித்து முசிறியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் கூறுகையில், இ-சேவை மையம் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது. தற்போது அரசு வளாகத்திலேயே அமைந்து இ-சேவை மையத்தில் மின்தடை ஏற்பட்டால் கணினி உள்ளிட்ட இயந்திரங்களை இயக்க முடியால் போகிறது. இதனால் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க பயனாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கூலித்தொழிலாளர்கள் தங்களது வேலைக்கு விடுமுறை கூறிவிட்டு சான்றிதழை விண்ணப்பிக்க வரும்போது மின்தடை ஏற்பட்டால் அவர்களின் அன்றைய நாள் முழுவதும் வீணாகிறது. மின்தடை நேரத்தில் ஊழியர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்படுவதால் கூட்டம் அதிகமாகிறது. மின்சாரம் வந்தவுடன் அனைவருக்கும் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் பயனாளிகள் மீண்டும் மறுநாள் தங்களது வேலைகளை விட்டுவிட்டு வரும் நிலை ஏற்படுகிறது. எனவே இ-சேவை மையத்திற்கு மின் பேட்டரி வசதி ஏற்படுத்துவதற்கான அறிவுறுத்தலை திருச்சி கலெக்டர் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீராத நோய் சிகிச்சைக்கு ஆயூஷ் கிளப் துவக்கம் சித்த மருத்துவ அலுவலர் தகவல்

திருச்சி, மே 17: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி புத்தூர் அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சகல நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, ஓமியோபதி மருத்துவ சிகிச்சை, யுனானி மருத்துவ சிகிச்சை, சுகப்பிரசவம் ஏற்பட மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் சிறப்பு சிகிச்சை பிரிவு நாள்பட்ட நோய்களுக்கு வர்ம சிகிச்சை பிரிவு மூளை நரம்பு பாதிப்பு குழந்தைகளுக்கு (ஆட்டிசம் குழந்தைகள்) சிறப்பு சிகிச்சை பிரிவுகள் ஒரே வளாகத்தில் பொதுமக்களுக்காக செயல்பட்டு வருகிறது. காலை 7.30-12 மணி வரையிலும் மதியம் 3-5 மணி வரையிலும் மருத்துவமனை திறந்திருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள்பட்ட, தீராத நோய்களுக்கு சித்தா, ஆயுர்வேதா ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களைக் கொண்டு ஆயுஷ் கிளப் செயல்பட்டு வருகிறது.  மாலை 3-5 மணிவரை இந்த ஆயுஷ் கிளப் திறந்திருக்கும்.தீராத நாள்பட்ட நோய்களுக்கு சிறப்பு யுனானி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மூட்டுவலி, சர்க்கரை நோய், தோல் நோய், உடல் பருமன், கருப்பைக்கட்டி, சினைப்பைக்கட்டி, மார்பகக்கட்டி, வெள்ளைபடுதல், மாதாந்திர தீட்டு பிரச்னை, ஆஸ்துமா, தைராய்டு, பித்தப்பை கற்கள், சிறுநீரகக்கற்கள், பித்தவெடிப்பு, முடி உதிர்தல், முகப்பரு, ஆண்மை குறைவு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு  நோய்களுக்கு அரசு ஆயுஷ் மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றார்கள். ஆங்கில மருந்துகளுடன் ஆயுஷ் மருத்துவ முறைகளில்  ஏதாவது ஒன்றை தனித்தோ அல்லது சேர்த்தோ எடுத்துக்கொண்டால் சகல நோய்களும் தீரும், கட்டுப்படும். அனைத்து நோய்களுக்கும் அறுவை மருத்துவம் இன்றி மருந்துகளைக்கொண்டும் புற சிகிச்சையைக் கொண்டும் நோய்களை குணப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி நோயின்றி வாழலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

குடியை மறக்க சிகிச்சை மருத்துவமனையில் டிரைவர் திடீர் சாவு

திருச்சி, மே 17: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மதுரை ரோடு பகுதிைய சேர்ந்தவர் கண்ணன்(40), டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் தினமும் கண்ணன் குடித்துவிட்டு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குடியை மறப்பதற்காக கே.கே.நகர் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென கண்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் டாக்டர்கள் விரைந்து உடனடி சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் இறந்தார். இதுகுறித்து மனைவி துர்காதேவி போலீசில் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக கோவையில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர் பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

திருச்சி, மே 17: தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக கோவையில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று (17ம் தேதி) கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2019-20ம் கல்வியாண்டின் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த ெதாழில் புரிவோர் மற்றும் சுய தொழில்புரிவோர் சேர்ந்து பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18வயது நிரம்பியவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சரளாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

முசிறியில் இந்தியன் வங்கி கிளை புதிய கட்டிடம் திறப்பு

திருச்சி, மே 17: முசிறியில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கட்டிடத்தை மண்டல மேலாளர் திறந்து வைத்தார். இந்தியன் வங்கி முசிறி கிளையின் புதிய கட்டிடம் முசிறியில் துறையூர் பைபாஸ் ரோட்டில், அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டது. இக்கிளையை இந்தியன் வங்கி திருச்சி மண்டல மேலாளர் சாமிநாதன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இக்கிளையோடு இணைந்த ஏடிஎம்., பிஎன்ஏ., போன்ற வசதிகள் கொண்ட இ-லாஞ்சை இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் ராஜாமணி திறந்து வைத்தார். இந்த விழாவைத் துவக்கி வைத்து மண்டல மேலாளர் சாமிநாதன் பேசுகையில், இந்தியன் வங்கி, வாடிக்கையாளர் சேவைக்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும், வாடிக்கையாளர் சேவையில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியன் வங்கி அனைத்து விதங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். விழாவின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முசிறி, குளித்தலை, வளையெடுப்பு, மெய்க்கல்நாயக்கன்பட்டி இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மண்டல மேலாளர் கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினார். இதில் 154 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி கடன்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் நாளை 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம்

திருச்சி, மே 17: திருச்சி மாநகரில் நாளை 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த முகாம் ரங்கம் கோட்டத்தில் 6வது வார்டு டி.வி.கோயில் கிழக்கு 5ம் பிரகாரத்தில் பாரதியார் நகரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி, அரியமங்கலம் கோட்டத்தில்  27வது வார்டில் செந்தண்ணீர்புரம் மருந்தகம், பொன்மலை கோட்டத்தில், 42வது வார்டில் கே.கே.நகர் பெரியார் மணியம்மை மெடிக்கல் மிஷன், கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் 55வது வார்டில் குறத்தெருவில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இ.சி.ஜி.,  பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை  முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை அருகே ஊருக்குள் புகுந்த செந்நாய்களை விடிய விடிய விரட்டிய மக்கள்

மணப்பாறை, மே 17:  மணப்பாறை அருகேயுள்ள குப்பனார்பட்டியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவர்,  குருமலை வனப் பகுதியை ஒட்டிய குருமலை களம் காட்டில்  ஆட்டுக்கொட்டகை அமைத்து 25 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், வடிவேல், கடந்த 11ம் தேதி  காலை ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது ஆட்டுகொட்டகைக்கு வந்து பார்த்த போது ஆடுகள் காயமடைந்தும், மர்ம விலங்குகளால் ஆடுகளின் கழுத்து, வயிறு, கால் பகுதிகளில் கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தன. உடனடியாக பன்னாங்கொம்பு கால்நடை  மருத்துவமனை உதவி மருத்துவர்  தலைமையிலான குழுவினர், கொட்டகையில் இறந்த நிலையில் கிடந்த செம்மறி ஆடுகளை பரிசோதனை செய்தனர். இதில், 8 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காயமடைந்த 6 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மருங்காபுரி தாசில்தார் பன்னீர்செல்வம் உள்பட வருவாய்த்துறையினரும், வனத்துறையினரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருகில் உள்ள காடுகளில் இருந்து காட்டு விலங்குகள், ஓநாய் அல்லது நரி இவை, ஆடுகளை கடித்து இருக்கலாம் என இப்பகுதி மக்கள், அப்போதே அச்சம் தெரிவித்த நிலையில், நேற்று காலையிலிருந்து இரவு வரை 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம், ஊருக்குள் புகுந்துள்ளது.  இதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து விரட்டியுள்ளனர். ஆனால், மீண்டும், மீண்டும் செந்நாய்கள் கூட்டம் - கூட்டமாக ஊருக்குள் வரவே, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  எனவே, வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டு செந்நாய்களை வனப்பகுதிக்கே நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுத்து தங்கள் குழந்தைகளையும் பிழைப்புக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, மே 17: மத்திய அரசை போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஓய்வூதியர்சங்கம் வலியுறுத்தியுள்ளது.  ரங்கத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ரெங்கசாமி கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் கலியமூர்த்தி வரவு, செலவு தாக்கல் செய்தார். கூட்டத்தில் மத்திய அகவிலைப்படி 3 சதவீத வழங்கியுள்ளது போல தமிழக அரசும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் வரவேற்றார்.  துணைச்செயலாளர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

அரசு மருத்துவமனை மகப்பேறு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு அருகே கூடுதல் ஓய்வறையின்றி வெட்ட வெளியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அவலம் இரவில் உறக்கமில்லாமல் தவிப்பு

திருச்சி, மே 17: திருச்சி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எலும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு உள்பட 16 வார்டுகள் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள்  தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரே கட்டிடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் தீவிர மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கென கட்டிடம் கட்ட உலக வங்கி உதவியுடன் ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு 3 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில் டிசம்பர் 30ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.மிக பிரம்மாண்டமாக கட்டிய இந்த மருத்துவமனையில், பார்வையாளர்கள் தங்குவதற்கான அறை கட்டப்படாமல் இருந்ததால் நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக முதன்முதலில் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்துறை சார்பில் மருத்துவமனை அருகில் பார்வையாளர்களுக்கான ஓய்வு அறை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனாலும் நாளுக்குநாள் மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவதால் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்தது. இதனால் அருகில் உள்ள ஓய்வு அறை நிரம்பி வழிவதால் மீதமுள்ள பார்வையாளர்கள் வெட்ட வெளியிலும், மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவமனையின் பக்கவாட்டிலும் இரவில் படுத்து தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே கூடுதலாக மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவமனை அருகில் ஓய்வறை கட்ட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, பணம் கொள்ளை

துறையூர், மே 17: துறையூர் தங்கநகரைச் சேர்ந்தவர் மைக்கேல்துரை(48). இவர் கடந்த 7ம் தேதி குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றுவிட்டு நேற்று காலை துறையூருக்கு வந்தார். வீட்டிற்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது டிவி, பீரோவில் இருந்த 5 பவுன் செயின், ரூ.75 ஆயிரம் ஆகியவை கொள்ளையிடப்பட்டிருந்தது தெரிந்தது. தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

முசிறி தாலுகாவில் அரசு அங்கீகாரமின்றி செயல்படும் பயிற்சி மையங்கள் ஆர்டிஓ ஆய்வு செய்ய வலியுறுத்தல்

தா.பேட்டை, மே 16:  முசிறி தாலுகாவில் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படும் பயிற்சி மையங்களை ஆர்டிஓ ஆய்வு செய்து மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  முசிறி தாலுகாவில் உரிய அரசு அங்கீகாரமில்லாமல் பல்வேறு பெயர்களில் பயிற்சி மையங்கள் நடைபெறுவதாகவும் அவற்றை ஆய்வு செய்து மாணவ, மாணவிகள் படிப்பதற்கு தகுந்த கல்வி மையங்களா என்பதனை ஆய்வு செய்வதோடு அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களை நடத்துவோர் மீது முசிறி ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதுகுறித்து முசிறியை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், முசிறி தாலுகாவில் அரசு உரிய அங்கீகாரம் இல்லாமல் நர்சிங், கேட்டரிங், லேப்டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்கள் தங்கள் நிறுவனத்தை கல்லூரிகள் என தவறாக விளம்பரம் செய்வதோடு அரசின் உரிய அங்கீகாரம் இல்லாத பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகளை சேர்த்து வருகின்றனர். இது போன்ற அரசு அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களில் கிராமப்புறத்தை சேர்ந்த பெற்றோர்களிடம்  கல்வி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கின்றனர். மாணவ, மாணவிகள் இது போன்ற அங்கீகாரம் அற்ற கல்வி நிறுவனங்களில் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ படித்து முடித்த பின் அவர்கள் கொடுக்கும் சான்றிழை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. அரசு வேலைக்கும் செல்ல முடியாது. படிக்கும் அனைவரும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க முடியாது  என்ற போதிலும் உரிய அங்கீகாரம் பெற்று அதற்குரிய பயிற்சியை நடத்தும் தகுதி உள்ளவர்களிடம் சேர்ந்து படித்தால் தனியார் நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பினை பெற்று அதற்குரிய ஊதியத்தினை பெற்று வாழ முடியும். தவறான அங்கீகாரம் இல்லாத பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிலும்போது மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விகுறியாகும் என்பதால் திருச்சி கலெக்டர், முசிறி ஆர்டிஓ, தாலுகாவில் உள்ள பயிற்சி மையங்கள் அரசின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

வீட்டை காலி செய்ய சொன்னதால் மாநகராட்சி ஊழியரின் வீட்டுக்கு தீ வைப்பு

திருச்சி, மே 16: திருச்சி சுப்ரமணியபுரம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். மாநகராட்சி ஊழியர். இவருக்கு சொந்தமான வீடு பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது. இதில் அந்த வீட்டில் இவரின் நான்கு சகோதரிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்த சகாயராஜ் 4 சகோதரிகளையும் வீட்டை காலி செய்ய சொன்னார். அவர்கள் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 4 பேரை காலி செய்ய சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சகாயராஜ் அவர்களை வீட்டை காலி செய்யும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சகாயராஜின் அக்கா மகன் லோடுமேன் ஜூடு என்ற ரூடல் ஜோசப் பிரான்சிஸ்(40) வீட்டின் முன் இருந்த பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தினார். இதில் பந்தல் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சகாயராஜ் அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் ரூடல் ஜோசப் பிரான்சிசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவெறும்பூர் பகுதியில் வாகன தணிக்கை ரூ.1.46 லட்சம் அபராதம் வசூல்

திருவெறும்பூர், மே 16:   வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவெறும்பூர் எல்லைக்குட்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் வாகன தணிக்கை செய்ததில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். திருவெறும்பூர் பகுதி வட்டார போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன்  கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருவெறும்பூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 249 வாகனங்களை தணிக்கை செய்தார். அப்போது தகுதி சான்று புதுப்பிக்காத, சாலை வரி செலுத்தாத 7வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு இணக்க கட்டணமாக ரூ.16 ஆயிரத்து 500ம், சாலை வரியாக ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ. 25 ஆயித்து 500 இணக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.  வாகன தணிக்கையின்போது புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் தமிழக அரசு சாலை வரி செலுத்தாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுந்தர்ராமன் தெரிவித்தார்.

உப்பிலியபுரம் அருகே அதிகாலையில் வீட்டில் திருட முயற்சி சிக்கிய திருடன் போலீசில் ஒப்படைப்பு

துறையூர், மே 16:  உப்பிலியாபுரம் அருகே அதிகாலையில் வீட்டில் திருட முயன்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.  துறையூர் உப்பிலியபுரம் அருகேயுள்ள சோபனபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாலு மனைவி நித்யா(34). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நித்யா பீரோ திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது அங்கே வாலிபர் ஒருவர் பீரோவை திறந்து நகை பணம் இருக்கிறதா, என பார்த்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட நித்யா எழுந்து வெளியே ஓடி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டினுள் இருந்து தப்ப முயன்ற திருடனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரை உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட முயன்றவர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வரதராஜ் மகன் கார்த்திக்(21) என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.