Tuticorin - Dinakaran

ஆறுமுகநேரியில் மாணவிகள் விடுதிகளை கலெக்டர் திடீர் ஆய்வு

ஆறுமுகநேரி, அக்.18: ஆறுமுகநேரியில் நேற்று மதியம் ஆதிதிராவிட மாணவிகள் விடுதிக்கு திடீரென வந்த கலெக்டர் சந்தீப்நந்தூரி அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை பார்வையிட்டார். மேலும் மொத்தம் எத்தனை மாணவிகள் தங்கியுள்ளனர்,  அவர்களுக்கு எவ்வளவு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது? என வார்டனிடம் கேள்வி கேட்டார். இதற்கு வார்டன் முன்னுக்குப்பின் முரணாக மாணவிகளின் எண்ணிக்கையை கூறியதால், கோபமடைந்த கலெக்டர், 20 மாணவிகளுக்கு மேல் மதிய உணவு சாப்பிட வந்தால், வார்டனுக்கு ஜார்ஜ் சீட் கொடுக்கும் படி திருச்செந்தூர் ஆர்டிஓக்கு உத்தரவிட்டார்.  தொடர்ந்து விடுதி கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டதில், கட்டிடங்கள் மோசமாக இருப்பதால் உடனடியாக அருகில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு விடுதியை மாற்றும் படி கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.     பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதிக்கு சென்ற கலெக்டர் சந்தீப்நந்தூரி அங்குள்ள சமயலறைக்குசென்று உணவுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் ஆர்டிஓ கோவிந்தராஜு, தாசில்தார் தில்லையாண்டி, மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

ஏரலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தேக்குமரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது

ஏரல், அக்.18: ஏரலில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயிலில் முட்டளவுக்கு மேல் மழைநீர் சாக்கடை தண்ணீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ஏரல் பஸ் நிலையம் அருகில் பஜார் நுழைவு வாயிலிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தேக்குமரம் ரோட்டில் சரிந்து விழுந்ததால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் சாயர்புரம் செல்லும் பஸ்கள் மாற்றிவிடப்பட்டன. ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி நடவடிக்கை எடுத்து ரோட்டில் விழுந்த தேக்குமரத்தை வெட்டி அப்புறபடுத்தியதால் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக போக்குவரத்து தொடங்கியது.

மகன், மகளுடன் பெண் மாயம்

தூத்துக்குடி,அக்.18: தூத்துக்குடியில் மகன், மகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி திரவியரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(38). இவரது மனைவி மாரியம்மாள்(34). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  பேச்சிராஜா(13) என்ற மகனும், முத்துமாரி(10) என்ற மகளும் உள்ளனர்.முத்துக்குமாருக்கும் அவரது மனைவி மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 14ம் தேதி மாரியம்மாள் தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை பற்றி தகவல் இல்லாததால் முத்துக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குபதிவு செய்து மாரியம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்.

வெடி விபத்தில் பெண் காயம்

சாத்தான்குளம், அக்.18: சாத்தான்குளம் அருகே உள்ள வடக்குராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பழம் மனைவி காசிகனி(55). வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் மகன் கனகராஜ். முருங்கை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தசரா விழாவை யொட்டி நேற்று முன்தினம் கனகராஜ், காசிகனி வீட்டு அருகில் பட்டாசு வெடித்ததாக தெரிகிறது. இதில் பட்டாசுவெடித்து சிதறியதில் காசிகனி படுகாயம் அடைந்தார். இதுபோல் ஆடுகளும் மிரண்டுஓடின. காயம் அடைந்த காசிகனி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் மணி, பட்டாசு வெடித்த கனகராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெண்ணை வெட்டிய வாலிபர் கைது

திருச்செந்தூர்,அக்.18: குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் சாத்தான்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (35). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முனியசாமி(26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முனியசாமியின் மனைவி மகராசி கடந்த 15ம் தேதி தெருவில் நடந்து செல்லும் போது அவரது காலடி மண்ணை ஜெயலட்சுமி எடுத்து விட்டதாக, முனியசாமியிடம் அவரது மனைவி புகார் கூறினார். இதுகுறித்து முனியசாமி, ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்படவே, முனியசாமி அரிவாளால் ஜெயலட்சுமியின் இடது கையில் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் வை. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குரும்பூர் போலீசார் விசாரித்து முனியசாமியை கைது செய்தனர்.

முடிவைத்தானேந்தல் அரசு பள்ளியில் தினகரன் நாளிதழ் வினா-விடை வழங்கல்

தூத்துக்குடி, அக்.18: கமலஹாசன் 64வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தினகரன் நாளிதழின் வினா-விடை புத்தகம்  ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ்2 பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேகர், உதவி தலைமைஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தனர்.ஜவஹர், அலெக்ஸ், நடராஜன், ரத்தினராஜா, பாலா, மணவை யோகேஷ் சிவகுமார், அக்பர், இ.எம்.முருகன், வக்கீல்கள் ரெங்கநாதன், ரமேஷ், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மக்கள் நீதிமய்யம் கட்சி உறுப்பினர்கள் மணிகண்டன், சேகர், சாமிகண்ணு, ஆனந்தராஜ், மணிராஜ், ராஜா, கமல்பொன் சேர்மதுரை, பிரிட்டோ, ஆட்டோ சந்தனம், காளிதாஸ், ஜோசப், ரூபிங்டன் விமல், சத்யா சங்கர், ஸ்ரீதர், பசுபதி, ராம்சிங், விக்ரம், ராஜா, மோகன், சினி செந்தில்குமார், பூக்கடை சுப்பையா, ஸ்ரிபன், சண்முகராஜா, பாக்கியராஜ், முத்துசாமி, ஞானராஜன், ராபர்ட், செல்வராஜ், சுடலை, செல்வகுமார், ரமேஷ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

ஆறுமுகநேரி, அக்.18: ஆத்தூர் பேரூராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் தினகரன் எதிரொலியால் அகற்றப்பட்டன.  வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முக்காணி மற்றும் ஆத்தூர் வட்டாரத்தில் கடைசி தீர்த்த கட்டங்களான முக்காணி பெருமாள் கோயில் அகஸ்தியர் தீர்த்த கட்டம், முக்காணி சிவன் கோயில் சங்கமேஷ்வரர் தீர்த்த கட்டம், சேர்ந்தபூ மங்கலம் கைலாசநாதர் கோயில் சன்டிகா படித்துறை தீர்த்த கட்டம், சங்குமுக தீர்த்த கட்டங்களில் மகா புஷ்கர விழாவை யொட்டி தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் ஆத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பல ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றில் குப்பை, கழிவுகளை கொட்டி வந்துள்ளனர். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன்,  சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் இங்கு குளிக்க வரும் மக்களுக்கும், எதிரேயுள்ள சங்கமேஷ்வரர் தீர்த்த படித்துறையில் குளிக்க வரும் பக்தர்களுக்கும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து கடந்த அக்.12ம் தேதி தினகரனில் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை கவனித்த கலெக்டர் சந்தீப்நந்தூரி, ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகள், மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் படி நேற்று முதல் ஜேசிபி இயந்திர உதவியுடன் இரண்டு டிராக்டர்களில் குப்பைகள் அள்ளும் பணி நடந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சொத்துவரி உயர்வை கண்டித்து கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, அக்.18:  கோவில்பட்டி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யவும், நகராட்சியில் ஏபிசிடி என இருந்த 4 வரிவிதிப்பு மண்டலங்களை ஏபிசி என 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், வரிவிதிப்பு மண்டலங்களை பழைய நிலையிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி நகர திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நகர திமுக செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதில் திமுக சார்பில் நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், முனியசாமி, ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி, நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், ராஜேந்திரன், நகர மதிமுக செயலாளர் பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து கட்சியினர் தங்களது கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ.நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் அளித்தனர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, அக்.18:  மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், அரசு பணியில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி சிதம்பரநகர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐஎன்டியூசி கதிர்வேல், சிஐடியு ரசல், ஏஐடியுசி மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ரவீந்திரன், ஏஐசிசிடியு சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி ராஜகோபால், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முருகன், ஏஐசிசிடியு சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதியுலா

உடன்குடி,அக்.18: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 7ம் நாள் விழாவில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம்நாள் விழாவில் காலை 8மணி முதல் மாலை 6.30மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மாலை 4.30மணிக்கு மகிசாசூரன் திருவீதியுலாவும் மாலை 4.30மணி முதல் மாலை 5மணி வரை சமயசொற்பொழிவும், மாலை 6மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8மணிக்கு பல்சுவை நிகழ்ச்சியும், இரவு 9மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு

செய்துங்கநல்லூர்,அக்.18: தாமிரபரணி மகா புஷ்கர திருவிழாவை யொட்டி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீர்த்தகட்டங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். முறப்பநாடு குரு தீர்த்தக்கட்டத்தில் நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி காலையில் சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நதி ஆராத்தி வழிபாடு நடந்தது.  முறப்பநாடு அருகே ஆழிகுடியிலும் சிறப்பு யாகம் நடந்தது. இங்கு சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு ஆராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டனர். பின்னர் தாமிரபரணிக்கு  தீபஆராதனை காட்டப்பட்டது.   அகரம் தசவதார தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிஷேகமும் செய்யப்பட்டு 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கருங்குளத்தில் மகாபுஷ்கர தினவிழாவை முன்னிட்டு காலையில் யாக சாலை நடந்தது. மாலையில் தாமிரபரணி நதிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.   ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் படித்துறை அருகிலுள்ள ஞானதீர்த்த கட்டத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நேற்று 6 வது நாளாக தாமிரபரணி மகா புஷ்பக விழா கமிட்டி சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம் மற்றும் மலர் தூவி சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தாரும், தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டி தலைவருமான கருத்தப்பாண்டிய நாடார் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்ததில் புனித நீராடினர். இதேபோல் சிறுத்தொண்டநல்லூர் ஊர்மக்கள் சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்று தீர்த்தக்கரை சுந்தரவிநாயகர் கோயில் அருகில் ஏற்பாடு செய்திருந்த ஞானதீர்த்த கட்டத்தில் நேற்று 6வது நாளாக கோ பூஜை நடத்தப்பட்டது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்தத்தில் புனித நீராடினர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ரூ.1 கோடியில் புதுப்பிப்பு

கயத்தார், அக். 17: பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்ைட ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கயத்தாறில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் அவரது 219வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தார் தாசில்தார் லிங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகானந்தம், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் ஐயப்பன், ஆர்ஐ செல்வராணி, விஏஓ ராஜசேகரன்,கிராம உதவியாளர் அழகர்சாமி  மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ரூ.65 லட்சத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது. ரூ.35 லட்சத்தில் சுற்றுச்சாலை என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு  தினத்தைெயாட்டி கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர்  விநாயகா  ஜி.ரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் டி.பால்ராஜ், திருநெல்வேலி மாநகர்  மாவட்ட செயலாளர் கே.ஏ.எம்.நிஜாம், திருநெல்வேலி புறநகர் மாவட்ட  செயலாளர்  தி.மு.ராஜேந்திரன், கயத்தார் ஒன்றிய செயலாளர் கொம்பையா, கயத்தார்  நகர  செயலாளர் கட்டபொம்மன் முருகன், மரைக்காயர்  உட்பட ஏராளமானோர் கலந்து   கொண்டனர்.அமமுக சார்பில் கணபதிபாண்டியன் தலைைமயில்  கட்டபொம்மன்  உருவசிலைக்கு மாலை அணிவித்தனர். தெற்கு  இலந்தைகுளம்பஞ்சாயத்து  முன்னாள்  தலைவர் சுப்பையா, உட்பட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.வீரபாண்டிய  கட்டபொம்மன் நினைவு  அறக்கட்டளை நிறுவனர் குட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன்  பண்பாட்டுக்கழக  நிர்வாகிகள், கட்டபொம்மன்  வாரிசுதாரர் பீமராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர்.பாதுகாப்பு பணிகளை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், கயத்தார் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் செய்தனர்.நினைவு மண்டபமாக்க வேண்டும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டு  விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நான் மதிக்கிறேன். அதனால் தான்  மாமன்னர்  பூலித்தேவருக்கு கழுகுமலை அருகே சிதம்பராபுரத்தில் சிறிய  மணிமண்டபம் கட்டி அவரது சிலை அமைத்துள்ளேன். கயத்தாறில் வீரபாண்டிய   கட்டபொம்மன் அடைக்கப்பட்டிருந்த கட்டிடம் பாழடைந்து விட்டது. அதனை அவரது   நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக குரல் கொடுத்து  வருகிறேன்  என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த சிறப்பு முகாம்

தூத்துக்குடி,அக்.17: தூத்துக்குடி மாநகராட்சி செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் தொடர்பான, அரசாணை எண். 78 மற்றும் 172 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் முறைப்படுத்துதல் மற்றும் இத்திட்டம் சம்பந்தமாக தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்.16, 17ம் தேதியும், மேற்கு மண்டல அலுவலகத்தில் அக்.23, 24ம் தேதியும், தெற்கு மண்டலத்தில்  அக்.30, 31ம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் மனைஉரிமையாளர்கள் மனைபிரிவு வரைபடம், சுற்று சார்பு வரைபடம், பத்திர நகல், பட்டா சிட்டா நகல், மற்றும் வில்லங்கசான்று ஆகியவற்றுடன் ஆன்லைன் பதிவேற்றம் செய்து உரிய கட்டணங்களை செலுத்தி விண்ணப்பித்து மனையினை வரன்முறைபடுத்தி கொள்ளலாம். நவ.3ம்தேதி இப்பணிக்கான காலக்கெடு முடிவடைவதால், பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மனையில் கட்டிடம் கட்ட இனிவருங்காலங்களில் கட்டிட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வரி விதிப்புகள் மற்றும் இதர அரசு சலுகைகள் எதுவும் வழங்க இயலாத நிலை ஏற்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி, அக்.17: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க கோரி அவரது உறவினர்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத்துமுனியன், இசக்கிமுத்து ஆகிய 8 பேர் கடந்த ஆக.18ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ஆக.21ம் தேதி கைது செய்து அங்குள்ள புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கல்பட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதமும், வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் அளித்து  உத்தரவிட்டார். இதனை அடுத்து மீனவர்கள் 8 பேரையும் புத்தளம் சிறையில் அடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று மாலை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து 8 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கண்ணீர் மல்க மனு அளித்தனர். இதுகுறித்து அரசிற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சாத்தான்குளம், அக். 17: சாத்தான்குளம் அருகே மீரான்குளம் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். விழாவில் மாணவர்களுக்கு அப்துல்கலாமின் பொன் மொழிகள் மற்றும் வாழ்க்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கை கழுவதன் அவசியம் குறித்து விவரிக்கப்பட்டது. இதில் ஆசிரியைகள் கெத்சியாள் சுகந்தி, செல்வராணி, சாந்தமலர், அன்னாள், அமலா, தயாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜயராமபுரம் _முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்ததினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் கனகா முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.  வென்ற மாணவர்களுக்கு சிவகாசியைச் சேர்ந்த சுப்பையா, மகாலட்சுமி, ஆசிரியை மோனிஷா நந்தினி ஆகியோர் வழங்கினர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார். சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நடந்த அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.  நூலகர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் அப்துல்கலாம் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாரதி கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா, யோகா ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். இதில் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.  குளத்தூர்: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள்விழா கொண்டாப்பட்டது. இதில் கல்வி சங்கத்தலைவர் தாளமுத்து தலைமை வகித்தார். ஊர்த்தலைவர் சின்னச்சாமி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை திலகசெல்வி வரவேற்றார். ஆசிரியை காந்திக்கனி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அப்துல்கலாம் வாழ்க்கை குறித்து நாடகம், பேச்சுப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குட்ஷெப்பர்டு மாடல் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ மாணவியர் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் டாக்டர். பத்மினி வள்ளி, ஆசிரியர் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

திருச்செந்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர், அக். 17:     2016-2017 பயிர் காப்பீடு செய்து விடுபட்ட அனைத்து பயிர்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் கால அளவு ஒர் ஆண்டாக நீடிக்க வேண்டும்.      விவசாயிகளுக்கு கடன், விதை, உரம், பூச்சி மருந்து குறித்த காலத்தில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் எந்தவித நிபந்தனையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன் ஆகியோர் தலைமை வைத்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, தாலுகா விவசாய சங்க செயலாளர் ராஜா, தாலுகா துணை செயலாளர்கள் முருகன், ராஜலிங்கம், பொருளாளர் பாண்டி, முனியம்மாள், பட்டு, நயினார், ராஜேந்திரன், அரசகுமார், முனிஸ்வரன், கணேசன், சேகர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகலாபுரம் மனோ கல்லூரியில் தேசிய நீர் மேலாண்மை கருத்தரங்கு

விளாத்திகுளம், அக்.17: விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்புக் கல்லூரியில் தேசிய அளவிலான நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பாக தமிழகமும் நீர் மேலாண்மையும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.பொருளாதாரத்துறை தலைவர் சுரேஷ் பாண்டி வரவேற்றார். கேரள மாநில கொச்சின் பல்கலைக்கழக பேராசிரியர் அருணாசலம் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களிடம் பேசினார். திருவனந்தபுரம் மத்திய வளர்ச்சி மைய பேராசிரியர் ஜெயமோகன் கிராமப்புறங்களில் நீர்நிலைகள் பாதுகாப்பு பற்றி பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முத்துராஜா, தேனி மேரிமாதா கல்லூரி பேராசிரியர் அரிமோகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இக்கருத்தரங்கில் 13 கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.கணிதத் துறை பேராசிரியர் அன்னகுமார் நன்றி கூறினார்.

ஆறுமுகநேரி பகுதி இளைஞர்கள் தமாகாவில் ஐக்கியம்

தூத்துக்குடி, அக். 17: தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் முன்னிலையில் திருச்செந்தூர் வட்டாரம் ஆறுமுகநேரி பகுதியிலுள்ள தேரடி முத்து தலைமையில் மாடசாமி, மணிகண்டன், சக்தி, பாலமுருகன், தியாகராஜன், வனராஜ், நாகராஜ், அண்ணாமலை, பரத்ஆனந்த், முத்தரசு, சுடலைமுத்து, ஐயப்பன், பிரேம்குமார், செல்வலிங்கம், முத்து, மணிகண்டபாரத், ஜெயக்குமார், ரட்சன், சிவா உட்பட பல இளைஞர்கள் மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலனுக்கு மாலை அணிவித்து த.மா.காவில் இணைந்தனர். ஆழ்வை கிழக்கு வட்டார தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்நேருராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் பொன்ராஜ் மற்றும் மகாராஜன்,     மாநகர செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தர்லிங்கம், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

எட்டயபுரம்,அக்.17:  எட்டயபுரம் கே.என்.சுப்பாராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி சார்பில் எட்டயபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி தாளாளர் ராமச்சந்திரன்  தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். எட்டயபுரம் தாசில்தார் வதனாள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகை ஏந்தியும், துண்டுபிரசுரங்கள் வழங்கியும், கோசம் எழுப்பியபடி நடுவிற்பட்டி, மேலவாசல், உள்ளிட்ட முக்கிய வழியாக பாரதிமண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர். கல்லூரி பேராசிரியர் தவசி, கார்த்திகைசெல்வி, பூபதிராஜா, ராஜூ, எட்டயபுரம் ஆர்ஐ பிரபாகரன், விஏஓ செந்தில்குமார், கிராமவருவாய் உதவியாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வல்லநாடு அருகே கிறிஸ்தவ ஆலய வேலியை அகற்றியதால் பரபரப்பு

செய்துங்கநல்லூர், அக்.17:தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள வசவப்புரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. அப்பகுதி கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி ஆலயத்தை முள்வேலியை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் வைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் வசவப்பபுரம் வந்து அந்த ஆலயத்தைச் சுற்றி அமைத்திருந்த வேலியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் சபையினர் ஆலயத்தின் முன்  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புனித அன்னம்மாள் ஆலயத்தில் வழிபாடு நடத்தி வருகிறோம். மேலும் ஆலய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி சுற்றி வேலி அமைத்திருந்தோம். நேற்று மதியம் வைகுண்டம் தாசில்தார் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆலயத்தை சுற்றி அமைத்திருந்த முள்வேலியை அகற்றிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து வைகுண்டம் தாசில்தார் சந்திரன் கூறியதாவது, இந்த ஆலயம் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. ஆனாலும் ஆலயத்தை சுற்றி முள்வேலிகள் அமைத்ததால் அதன்பின் பகுதியில் உள்ளவர்கள் தங்களது இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் பேசினோம். உடன்பாடு ஏற்படாததால் முள்வேலி அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டது என்றார்.