Vellore - Dinakaran

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட கிராம மக்கள் எதிர்ப்பு: விஏஓ அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

குடியாத்தம், அக்.16: குடியாத்தம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மேல் விழுந்த மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோயில் உள்ளது. கடந்த 9ம் தேதி 300 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கோயில்மீது விழுந்தது. இதில், கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இந்த மரத்தை ஏலம் விடுவதாக தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் நேற்று அறிவித்தார். இதையறிந்த கிராமமக்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மீது விழுந்த மரத்தை வருவாய் துறையினர் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, தட்டப்பாறை விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மரம், கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. எப்படி ஏலம் விடலாம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் தரணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வந்த தாசில்தார் கோபி, வருவாய் ஆய்வாளர் சத்தியநாராயணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் மரத்தை ஏலம் விட சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மற்றும் கிராமமக்கள் கோயிலில் விழுந்த மரத்தின் மீது ஏறி காவிகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் துறையினர் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் தட்டப்பாறை கிராமத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் நேற்று 25க்கும் மேற்பட்ட ஆயுதபடை போலீசார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றிய ஆசிரியை மீது நடவடிக்கை கோரி விதவை பெண் மகன், மகளுடன் தீக்குளிக்க முயற்சி : வேலூர் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

வேலூர், அக்.16: இன்சூரன்ஸ் பணத்தை ஆசிரியை ஏமாற்றியதாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், விதவை பெண் மகன், மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேலூர் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. அப்போது பள்ளிகொண்டாவை சேர்ந்த திருநங்கைகள் 13 பேர் கொடுத்த மனுவில், ‘நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள எங்களுக்கு தங்குவதற்கு இடமோ, வீடோ இல்லை. எனவே அணைக்கட்டு ஒன்றியம் செதுவாலை கிராமம், வல்லண்டராமத்தில் அரசு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேல்விஷாரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே தனியார் மணல் குவாரிக்கு விடப்பட்ட ெடண்டரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவ்லாக் பகுதியில் மாட்டுவண்டிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி அதிகளவு மணல் கடத்தப்படுகிறது. இதனை தட்டிக்கேட்கும் பொதுமக்களை அடியாட்கள் வைத்து கடத்தல்காரர்கள் மிரட்டுகின்றனர். மணல் கடத்தலால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாலாறு சீரழிந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) என்பவர், தனது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென அலுவலக போர்டிகோ அருகே கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பெண் போலீசார், ரேவதியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவர் டிரைவர் ரகு இறந்து விட்டார். அப்போது கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தை அப்பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை பெற்றுத்தரும்படி பலமுறை புகார் அளித்தும் ேபாலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். இதனை கண்டித்து பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றேன்’ என்றார். இதையடுத்து அவரை எச்சரித்து அனுப்பிய போலீசார், மனுவை வாங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.பாக்ஸ்...மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது எப்படி?கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் சோதனை செய்யப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த தீக்குளிப்பு முயற்சியில் மண்ணெண்ணெண் கேன் எப்படி உள்ளே கொண்டுவரப்பட்டது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகனிடம் சால்வையில் கேனை சுற்றி பையில் போட்டு கொடுத்துள்ளார். போலீசாரும் பள்ளி மாணவன் தானே என்று பையை சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர். பின்னர், அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் தீக்குளிக்க முயற்சித்தது தெரியவந்தது.

தவறான ஆவணங்கள் சமர்ப்பித்த 99 பள்ளிகளின் அந்தஸ்து ரத்து மத்திய அரசு முடிவு : மாநில அரசுகளிடம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம்

வேலூர், அக்.16: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க மத்திய அரசு தயாராகி வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கற்றல் முறையில் செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறன் சோதிக்கும் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையில் உள்ளதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 20 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளும், தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைய விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில் மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன்பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்கள் ஆகியவற்றை சிபிஎஸ்இ வாரியத்துக்கு பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவரங்களை சரிபார்த்து, சிபிஎஸ்இ இணைப்பு பெறுவதற்கான ஒப்புதல் அளிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமலேயே சிபிஎஸ்இயிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்தும், தங்களது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், சிபிஎஸ்இ பாடத்திட்ட இணைப்பு பெற்றுள்ளன. இதுகுறித்து சிபிஎஸ்இ ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 99 பள்ளிகளின் இணைப்பையும், அதன் அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் காலதாமதத்தை தவிர்க்க மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் காலங்களில் மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில கல்வித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல் பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிப்பார்த்து, ஒப்புதல் ஆணை கிடைத்த பின்னர், சிபிஎஸ்இ சார்பில் இணைப்பு கடிதம் மட்டுமே பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு சிபிஎஸ்இ கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் சிறைகளில் சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு முடக்கம்மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகாரிகள் தகவல்

வேலூர், அக்.16: தமிழக பெண்கள் சிறையில் சானிடரி நாப்கின் தயாரிப்பு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதனை தயாரிக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகளை தண்டிக்கும் தண்டனை கூடமாக மட்டும் அல்லாமல், அவர்களை சமூகத்துக்கு ஏற்றவர்களாக மாற்றும் பணியையும் செய்து வருகின்றன. வேலூரில் ஆண்கள் சிறையில் விவசாயம், காவல் துறைக்கு தேவையான புட்வேர், உணவு பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இதேபோல், பெண்கள் சிறையில் புடவை ஜரிகை, கைவினை பொருட்கள், அரிசி வற்றல், மிளகாய் வற்றல், ஜவ்வரிசி வற்றல், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பெண்கள் சிறையில் நன்னடத்தை கைதிகளான சுமார் 12 பேரை கொண்டு நாப்கின்கள் நவீன இயந்திரத்தின் மூலம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு தயாரிக்கப்படும் நாப்கின்கள் அரசு பள்ளிகளில் மாணவிகளின் தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதற்காக பள்ளிகளிலேயே ஏடிஎம் இயந்திரத்தைபோல நாப்கின்களை எடுக்கும் இயந்திரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. வேலூர் பெண்கள் சிறையில் இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னை புழல், திருச்சி சிறையில் நாப்கின் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் நாப்கினுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டது.மேலும் நாப்கின் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க தமிழகத்தில் வேலூர், புழல், திருச்சி சிறைகளில் 10 மாதங்களுக்கு மேலாக நாப்கின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் வழங்க தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பெண்களுக்கு நாப்கின் வழங்குவதற்கு முதற்கட்டமாக 91 ஆயிரத்து 400 நாப்கின்களுக்கான ஆர்டர்கள் கடந்த மே மாதம் கிடைத்தது. ஆர்டர்கள் கிடைத்து 5 மாதத்திற்கு மேலாகியும் நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெண்கள் சிறைகளில் நாப்கின் தயாரிக்கும் பணிகள் ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர், டிஆர்ஓ கார் ஜப்தி முயற்சி: பேச்சுவார்த்தையில் 2 மாத கால அவகாசம்

வேலூர், அக்.16: நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர், டிஆர்ஓ காரை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சமரச பேச்சுவார்த்தையில், 2 மாத காலம் அவகாசம் பெறப்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூரில் அணை கட்டுவதற்காக 2001ம் ஆண்டு 330 பேரிடம் இருந்து 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் இழப்பீடு போதவில்லை எனக்கூறி வாணியம்பாடி கோர்ட்டில் நில உரிமையாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டிலும் நடந்து வந்தது. மேலும் கடந்த 2013ம் ஆண்டு வேலூர் நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நிலம் கொடுத்தவர்களுக்கு மொத்தம் ₹40 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தது.ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் கலெக்டர் காரை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்தில் நிலம் இழந்தவர்கள், ‘நிறைவேற்றுதல் மனு’ தாக்கல் செய்தனர். அதன்படி, தற்போது வட்டியுடன் சேர்த்து ₹60 கோடி வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால் கலெக்டர், டிஆர்ஓ வாகனங்கள், அலுவலகத்தில் உள்ள கணினிகள், மேஜை உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து உத்தரவு நகலுடன் கோர்ட் அமீனா பூங்கோதை, வழக்கறிஞர்கள் ரவிக்குமார், ஊழியர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் மற்றும் டிஆர்ஓ காரை ஜப்தி செய்ய முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பிக்கள் தரன் (வேலூர்), லோகநாதன் (காட்பாடி) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 மாதங்கள் அவகாசம் கேட்டனர். இதை ஏற்று ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் கண்டக்டர் உரிமம் ரத்து கலெக்டர் நடவடிக்கை வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு

திருவண்ணாமலை, அக்.12: வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் கண்டக்டர் உரிமம் ரத்து செய்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு பதிலாக கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் கடந்த மாதம் 30ம் தேதி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை ஆய்வு செய்தனர்.அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு நபருக்கு ₹56க்கு பதிலாக கூடுதலாக ₹14 சேர்த்து ₹70 வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சின் கண்டக்டர் போளூர் தாலுகா சாலகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் கண்டக்டர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.  இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்` திருவண்ணாமலை மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் வாகன உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்ைக எடுப்பதோடு, மோட்டார் வாகன சட்டப்படி அனுமதிசீட்டு மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று கூறி உள்ளார்.

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை போளூரில் பிரபல நகைக் கடைகளில்

போளூர், அக்.12: போளூரில் பிரபல நகைக் கடைகளில் வருமானத்துறையினர் ேநற்று அதிரடியாக  சோதனை நடத்தினர்.தமிழகம் முழுவதும் வரிகட்டாமல் ஏமாற்றி வருபவர்கள் யாரென்று அடையாளம் காணப்பட்டு அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வருமான வரித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் மாவட்ட வாரியாக உள்ள பெரிய நிறுவனங்கள், பிரபலமான நகைக்கடைகள் போன்ற இடங்களில் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து 6 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 14 பேர் கொண்ட குழுவினர் போளூரில் உள்ள பிரபல நகைக் கடைகளில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், கடைகளில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையில் நீண்ட காலமாக பணியாற்றும் வேலையாட்களை மட்டும் கடைக்குள் வைத்து மீதமுள்ள பணியாட்களை வெளியே அனுப்பி விட்டனர். மேலும், நகைக்கடையின் முன்புற கதவை அடைத்துவிட்டு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், நகைக் கடையில் செய்த வியாபாரத்திற்கு ரசீதுகள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? வருமானவரி சரியாக கட்டப்பட்டுள்ளதா? கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா என தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை காரணமாக போளூர் பஜார் வீதி பகுதியில் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்வேன் பெண் அமைப்பாளர் மிரட்டல் பணிமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு

வேலூர், அக். 12: வேலூரில் பணிமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்வேன்’ என பெண் அமைப்பாளர் மிரட்டல் விடுத்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், மக்கான் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி. இவர் சரிவர உணவு சமைக்காமலும், தலைமை ஆசிரியையிடம் அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் சரஸ்வதியை, வி.எம்.செட்டித்ெ தருவில் உள்ள பள்ளிக்கு அண்மையில் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மக்கான் பள்ளிக்கு வேறு ஒரு பெண்ணை சத்துணவு அமைப்பாளராக நியமித்தனர்.ஆனால், சரஸ்வதி பணி மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் மக்கான் பள்ளிக்கு வந்து புதிய அமைப்பாளரிடம் தகராறு செய்தாராம். மேலும், சத்துணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டோர் ரூமை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டாராம். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஆய்வுக்கு வந்தனர். அங்கு பூட்டப்பட்டிருந்த சத்துணவு ஸ்டோர் ரூமின் பூட்டை உடைத்து சமையல் பணிகளை தொடங்க செய்தனர். இதையறிந்து அங்கு வந்த சரஸ்வதியிடம், பணிமாற்றம் செய்த இடத்திற்கு செல்லும்படி அறிவுரை கூறினர்.ஆனால், இதை ஏற்க மறுத்த சரஸ்வதி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை பணியிட மாற்றம் செய்ததற்காக சத்துணவில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்லப்போகிறேன்’ என மிரட்டல் விடுத்தாராம்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கு திரண்ட குழந்தைகளின் பெற்றோர், சரஸ்வதியை தட்டிக்கேட்டனர். இருப்பினும் சரஸ்வதி, வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று, தலைமையாசிரியர் மீது புகார் கொடுத்தார். இதேபோல் பணி செய்யவிடாமல் தடுப்பதாக தலைமை ஆசிரியையும் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதி மீது புகார் அளித்தார்.இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி கூறுகையில், ‘சம்பவம் குறித்து நேரடி ஆய்வு செய்து விசாரித்தோம். இதன் அறிக்கையை கலெக்டரிடம் விரைவில் சமர்ப்பித்து, சரஸ்வதியை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்’ என்றார்.

அதிக மாணவர்களை சேர்த்த 1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு இந்தியா முழுவதும் விதிகளை மீறி

வேலூர், அக். 12: இந்தியா முழுவதும் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்த சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ போர்டு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளி விவரங்களை பதிவு செய்யும் ஆன்லைன் நடைமுறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நாடு முழுவதும் 1700 சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளில் ஒரு வகுப்புக்கு 50 முதல் 80 மாணவர்கள் வரை படித்து வருவதாக தெரியவந்தது.இதையடுத்து, அதிக மாணவர்களை சேர்த்த 1700 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதுடன், ஒரு மாணவருக்கு ₹500 வீதம் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், பின்னர் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண் தூக்கு போட்டு தற்கொலை மகளை திருமணம் செய்து வைக்க கூறியதால் விபரீத முடிவு போலீஸ்காரர் ஆன கள்ளக்காதலன் டார்ச்சர்

வாலாஜா, அக்.12: கணவரை பிரிந்து வசித்த பெண்ணுடன் போலீஸ்காரர் ஒருவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது மகளை திருமணம் செய்து வைக்கும்படி போலீஸ்காரர் வற்புறுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கல்பனா(34), தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி. இவரது மகள் மஞ்சு(18) என்பவரும் இதே கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் கல்பனா வேலைக்கு செல்லவில்லை. மஞ்சு வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கல்பனா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்பனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து வாலாஜா போலீசில் கல்பனா மகள் மஞ்சு புகார் செய்தார். அதில் காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், எனது தாய்க்கும் திருமணமானது. 2 மகள்கள் உள்ளோம். எனது, தாய், தந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் திருமணம் ஆகாத சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றும் குமரேசனுக்கும் எனது தாய்க்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தார். அப்போது என்னை, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வந்தார். அதற்கு எனது தாய் ‘உனக்கு மகள் முறையுள்ள என் மகளை எப்படி திருமணம் செய்வது’ என மறுத்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் குமரேசன் செல்போனில் எனது தாயை தொடர்பு கொண்டு என்னை மீண்டும் திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் எனது தாய் நேற்று (நேற்று முன்தினம்) ேவலைக்கு செல்லவில்லை. நான் மட்டும் வேலைக்கு சென்றேன். எனது தங்கையும் பள்ளிக்கு சென்றிருந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, எனது தாய் புடவையால் தூக்கு போட்டது தெரியவந்தது.போலீஸ்காரரான குமரேசன் அடிக்கடி டார்ச்சர் செய்ததால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே குமரேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதிதிராவிடர் பகுதிகளில் 150 திருக்கோயில்கள் தேர்வு திருப்பணிகள் விரைவில் துவக்கம் வேலூர் உட்பட மூன்று மாவட்டங்களில்

வேலூர், அக்.12: வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் 150 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வசதிப்படைத்த திருக்கோயில் நிதியில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் ₹25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011-12ம் ஆண்டு ஒதுக்கப்படும் நிதி திருப்பணிகள் மேற்கொள்ள போதுமானதாக இல்லை என்பதால் நிதி ₹50 ஆயிரமாக உயர்த்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். பின்னர் இந்த நிதி ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் இப்போது வரை மொத்தம் 5 ஆயிரத்து 160 கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2017-18ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 1,019 ஆதிதிராவிடர் பழங்குடியினர் பகுதி கோயில்களில் திருப்பணி செய்ய ₹10 கோடியே 19 லட்சம் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இதில் வேலூர் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 150 திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 44 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விரைவில் இக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடும் ரயிலில் பெண் பயணிகளிடம் 11.5 சவரன், பணம் கொள்ளை முகமூடி கும்பலுக்கு வலை காட்பாடி அருகே அதிகாலை துணிகரம்.

ஜோலார்பேட்டை, அக். 12: காட்பாடி அருகே நேற்று அதிகாலை ரயிலில் பெண் பயணிகளிடம் 11.5 சவரன் நகை, பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை காட்பாடி வழியாக சென்றது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே சிக்னலுக்காக மெதுவாக சென்றது. அப்போது முகமூடி அணிந்திருந்த மர்ம ஆசாமிகள் கும்பலாக பல்வேறு பெட்டிகளில் ஏறினர். எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் எல்துருத்தி பகுதியை சேர்ந்த அசோக்ரெட்டியின் மனைவி லட்சுமி(32) என்பவர் அணிந்திருந்த 3 சவரன் தாலி செயினை பறித்தனர். அதேபோல் எஸ்-8 பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சின்னபஜார் பகுதியை சேர்ந்த மாதவி(40), எஸ்-சி1 பெட்டியில் பயணம் செய்த தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், வேதபுரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பிந்து(35) ஆகியோரிடம் இருந்து 8.5 சவரன் நகை, ₹8 ஆயிரம் ஆகியவற்றை முகமூடி ஆசாமிகள் பறித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி கூச்சலிட்டனர். உடனே முகமூடி ஆசாமிகள் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியோடி விட்டனர்.இதுகுறித்து 3 பேரும் ேஜாலார்பேட்டை ரயில்வே ேபாலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிக்கு வலை குடியாத்தத்தில்

குடியாத்தம், அக். 12: குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(45). இவர் மீது குடியாத்தம் டவுன் போலீசில் கந்துவட்டி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இஸ்மாயில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி அதே பகுதியை சேர்ந்த அல்லாபகஷ் என்பவரிடம் வட்டிக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அல்லாபகஷ் தற்கொலைக்கு முயன்றார்.  இதுகுறித்து அல்லாபகஷ் கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 4ம் தேதி இஸ்மாயிலை கைது செய்தனர். இதையடுத்து கடந்த 9ம் தேதி இஸ்மாயில் ஜாமீனில் வெளியே வந்தார்.நேற்று முன்தினம் காலை கையெழுத்து போடுவதற்காக குடியாத்தம் காவல்நிலையத்திற்கு சென்ற இஸ்மாயில், அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணனிடம் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தாராம். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி கையெழுத்து போடாமல் சென்றாராம்.இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள இஸ்மாயிலை தேடி வருகின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ஊசூர் அருகே அரசுப்பள்ளியில்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்வேலூர், அக்.12: ஊசூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியரை நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை 340 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஊசூரை சேர்ந்த சதீஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் இதுகுறித்து கடந்த 9ம் தேதி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை சத்தியபிரபா, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினாராம்.இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரித்தனர். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி புலேந்திரன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் உடற்கல்வி ஆசிரியர் சதீஷை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று உத்தரவிட்டார்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடற்கல்வி சதீஷ்குமார், ஏற்கனவே ஊசூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணி மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை வேலூர் மத்திய சிறையில் இருந்து 9வது கட்டமாக

வேலூர், அக்.12: வேலூர் மத்திய சிறையிலிருந்து 9வது கட்டமாக 9 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் இதுவரை 8 கட்டமாக 104 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், 9வது கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் அர்ஜூனன், சாம்ராஜ், சிவகுமார், சிவலிங்கம், கோவிந்தராஜ், அழகர், முருகன், பெருமாள், தனபால் ஆகிய 9 பேரை நேற்று காலை 6.45 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். அவர்களை பார்த்த உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்று அழைத்து சென்றனர். இதுவரை மொத்தம் 113 பேரை சிறைத்துறை நிர்வாகம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

₹60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கைது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க

வேலூர், அக்.12: ஆக்கிரமிப்பு நிலம் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக விவசாயியிடம் ₹60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.வேலூர் மாவட்டம், அமிர்தி அடுத்த தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம்(33), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமிர்தி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ளது. சிதம்பரத்தின் தந்தை ராமன், வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கடந்த 8ம் தேதி அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா அழைத்து விசாரணை நடத்தினார்.அப்போது வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் ₹1.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும் ராமனிடம், ராஜா கேட்டுள்ளார்.அதற்கு ராமன், ‘என்னிடம் அளவு பணம் இல்லை. ₹60 ஆயிரம் தருகிறேன்’ என்றாராம். இதை ராஜா ஏற்றுக்கொண்டாராம். இதுகுறித்து ராமன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ₹60 ஆயிரத்துடன், ராமன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அமிர்தி வனச்சரக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வனச்சரக அலுவலர் ராஜாவிடம், ₹60 ஆயிரத்தை கொடுத்தார்.பணத்தை ராஜா வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி மற்றும் போலீசார், ராஜாவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு விசாரணை முடிந்த நிலையில் வனச்சரக அலுவலர் ராஜாவை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.வனப்பகுதியை ஆக்கிரமித்தவரிடம் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கில், வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவிகள் உறுதிமொழி: கலெக்டர் உத்தரவு

வேலூர், அக். 11: வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தின் முதல் நாளன்று குழந்தை திருமணம் தடைச்சட்டம், பாலியல் துண்புறுத்தல் குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்தன. இதை தடுக்கும் வகையில், கடந்த 2006ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் பல குழந்தை திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அக்குழந்தை திருமணங்களை தடுக்கலாம். ஆனாலும் இதுவரையில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க முடியவில்லை. ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலெக்டர் ராமன் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: வேலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளிடையே குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் துன்புறுத்தல், வன்ெகாடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.குழந்தை திருமணம் இன்றும் பொது நிகழ்வாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேலை நாள் காலை கூட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மொமோ சேலன்ஞ் கேம் விளையாடுவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர், அக்.11: மொமோ சேலன்ஞ் கேம் விளையாடுவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மொமோ சேலன்ஸ் என்ற அபாயகரமான இணையதள விளையாட்டை செல்போனில் குழந்தைகள் விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் மிக விபரீதமான முடிவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விளையாட்டு தொடர்பான விவரங்களை பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் எடுத்துச் சொல்லி இத்தகைய விளையாட்டை எக்காரணம் கொண்டும் விளையாடக் கூடாது. அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். அந்த எண்களை செல்போனில் தொடர்பு பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடியாத்தம் ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு மட்டுமே இலவச ஆடுகள் வழங்கும் விண்ணப்பங்கள் கிராம மக்கள் குற்றச்சாட்டு

குடியாத்தம் அக். 11: குடியாத்தம் ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு மட்டுமே இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என கிராமமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தமிழக அரசின் சார்பில் இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி கிராமங்களி்ல் வசிக்கும் நிலமுள்ள, நிலமற்ற விவசாயிகளுக்கு தலா 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ கேட்டால் விண்ணப்பங்கள் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், அந்த விண்ணப்பங்களை அதிமுகவின் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.இவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அளித்துவருகின்றனர். மேலும் சிலர் ₹50 முதல் ₹100 வரை பெற்றுகொண்டு விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பெயரை எழுதி கொடுக்கின்றனர். இதனால் உரிய பயனாளிகள் விண்ணப்பத்தை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். இதனால் விண்ணப்பங்களை ஊராட்சி மன்ற அலுவலகங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர் ஆடுகளை பெற்றுதருவதாக கூறி சில ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்து ஏமாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, தகுதி உள்ள அனைத்து கிராம மக்களுக்குக்கும் இலவச ஆடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 10 நாள் நவராத்திரி விழா துவங்கியது

ஆற்காடு, அக். 11: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள விஜய துர்க்கையம்மன் கோயிலில் 23ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. விஜய துர்க்கை அம்மனுக்கு தினமும் காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. அதேபோல் வாராஹி அம்மனுக்கு காலை 10 மணிக்கு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.நேற்று காலை 7 மணிக்கு விஜய துர்க்கை அம்மனுக்கும் வாராஹி அம்மனுக்கம் அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. நவராத்திரி முன்னிட்டு கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், செயல்அலுவலர் மு.சிவஞானம் செய்திருந்தனர்.