Virudhnagar - Dinakaran

விளையாட்டு தினவிழா

திருவில்லிபுத்தூர், பிப். 14: திருவில்லிபுத்தூர் அருகே, பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி, சத்யா வித்யாலயா நர்சரி பள்ளி, அக்ஷயா ஹைடெக் பள்ளிகள் ஆகியவை சார்பில், சத்யா வித்யாலயா பள்ளி மைதானத்தில் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. பள்ளிச் சேர்மன் குமரேசன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், சிஇஓ அரவிந்த், முதல்வர் முருகதாசன், துணைமுதல்வர் சத்தியமூர்த்தி, பள்ளி ஆலோசகர் பாரதி மற்றும் நிர்வாக அதிகாரி அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, தேசிய பூப்பந்து (பாரா) விளையாட்டு வீரர் பத்ரிநாரயணன், இந்திய கிராமப்புற கபடி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு தின விழாவில் தொடர் ஓட்டம், சிலம்பாட்டம், டேக்வாண்டோ, யோகா, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மூலம் மாணவ, மாணவியர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் தேசிய மற்றும் மாநில அளவில் யோகா, சிலம்பாட்டம், செஸ் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கபட்டன. அரவிந்த் நன்றி தெரிவித்து பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

சாத்தூர், பிப்.14: பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி, சாத்தூரில் மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் வடக்கு ரத  வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் உமா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் லெட்சுமி முன்னிலை வகித்தார். மாதர் சங்க நகர செயலாளர் தெய்வானை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘கடந்த நவ.13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுமார் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில், உரிய முறையில் வாதிட்டு, பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள், மாதர்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டியில் காலனி மக்கள் தர்ணா

திருச்சுழி, பிப். 14: காரியாபட்டி அருகே, கே.செவல்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் ரூ.2000 பெறுவதற்காக, தங்களை வறுமை கோட்டிற்கு கீழ் சேர்க்க வேண்டும் என  காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மோகன்கென்னடியிடம் நேற்று மனு கொடுக்க சென்றனர். இதற்கு அவர் நான் மனு வாங்க அரசு உத்தரவிடவில்லை என மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுத்து, வினோத்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது

சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஹேமாவின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஹேமா இறுக பிடித்துக் கொண்டதால் நகை தப்பியது. அவரை கீழே தள்ளி விட்டு மணிகண்டன் தப்பினார். இது தொடர்பான புகாரின் பேரில், சிவகாசி டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அலுவலகத்தில் திருட முயற்சி சிவகாசி, பிப். 14: சிவகாசியில் பட்டாசு ஆலை

அலுவலகத்தில் திருட முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி-விருதுநகர்  மெயின்ரோட்டில் தனியார் மகளிர் கல்லூரி அருகே, பிரபல பட்டாசு ஆலையின் தலைமை  அலுவலகம் உள்ளது. இந்த பட்டாசு ஆலை அலுவலகத்தில் முக்கிய கதவுகள்  உடைக்கப்பட்டு இருந்தது. சம்பவம் குறித்து பட்டாசு ஆலை அலுவலக மேலாளர்  வளையாபதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா  பதிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

ராஜபாளையம், பிப். 14: ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் தெற்குமலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. மனைவி சரஸ்வதி, மகன் முருகானந்தம் (40), டெய்லர். திருமணமாகவில்லை. கடந்த மாதம் சரஸ்வதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால், மனமுடைந்த முருகானந்தம் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறினார். மாயமான அவரை கண்டுபிடித்து தரும்படி ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துச்சாமி புகார் அளித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுந்தரராஜபுரம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் முருகானந்தம் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகு, கேது பெயர்ச்சி பூஜை

அருப்புக்கோட்டை, பிப். 14: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ராகுவும், கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கி, அந்தந்த ராசிகளுக்கு ஏற்ப பலன்களை தருவதாக கூறப்படுகிறது. நேற்று ராகு பகவான் கடகத்திலிருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரத்திலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதனையொட்டி அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவகிரகங்களில் உள்ள ராகுவிற்கும், கேதுவிற்கும், பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகுவிற்கும், கேதுவிற்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயில், திருநகரத்தில் உள்ள ராகு, கேது விநாயகர் கோயில், தாதன்குளம் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

சிவகாசி 3வது வார்டில் சாலை வசதியில்லா ‘லோட்டஸ்’ நகர்

சிவகாசி, பிப். 14: சிவகாசி 3வது வார்டில் உள்ள லோட்டஸ் நகரில் பொதுமக்கள் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். சிவகாசி நகராட்சி 3வது வார்டில் முஸ்லீம் நடுத்தெரு, வேலாயுத ரஸ்தா ரோடு, என்எஸ்சி தெரு, லோட்டஸ் தெரு, ரத்தினம் நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வேலாயுத ரஸ்தா சாலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால், அந்த தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்பகுதியில் வாறுகால்கள் அனைத்தும் தூர்ந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. லோட்டஸ் நகரில் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறப்பதாலும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.நகராட்சி 3வது வார்டு சிறுகுளம் கால்வாய் பகுதியில் முட்செடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில், கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முஸ்லீம் நடுத்தெருவில் உள்ள சலவை தொழிலாளர்கள் சமுதாயக்கூடம் முன்புள்ள பாலம் இடிந்து வரத்து கால்வையை மூடியுள்ளது. இதனால், வாறுகால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.வேலாயுத ரஸ்தா தெருவில் வாறுகால், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. லோட்டஸ் நகரில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருவதால் சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே குப்பை மேடாகும் தோட்டச்சாலை ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

ராஜபாளையம், பிப். 14: ராஜபாளையம் அருகே, தோட்டச் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இனாம் செட்டிகுளம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை, அப்பகுதியில் தோட்ட நிலங்களுக்கு செல்லும் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கிராமத்தில் வாறுகால் வசதியில்லாத காரணத்தினால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையில், குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதில் உள்ள பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள் விவசாய வேலைகளுக்கு செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. மழை நேரங்களில் கொசுக்கள் உற்பத்தி குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. எனவே, இனாம்செட்டிகுளத்தில் விவசாய நிலங்களுக்கு சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, வேறு இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதியில்லாத ரயில்நிலையம்

அருப்புக்கோட்டை  ரயில்நிலையத்தில் கழிப்பறை மூடிக்கிடக்கிறது.  நடைபாதை மேடையில் குடிநீர் குழாய்கள் காட்சிப் பொருளாக உள்ளன. நடைமேடையில் கடைசி வரை  மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில், ரயிலில்   கம்பார்ட்மெண்ட் கண்டுபிடித்து ஏற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.  நடைமேடையில் கடைசி வரை இருக்கை வசதியும் இல்லை. தற்போது மின்சார ரயில்கள்  இயக்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. பல வசதிகள் இருந்தும், அருப்புக்கோட்டை  வழியாக போதிய ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. ரயில் நிலையம் வாக்கிங் செல்லும் இடமாகவும், சமூக விரோதிகளின்  கூடாரமாகவும் மாறி வருகிறது.

விருதுநகர் டூ மானாமதுரை மார்க்கத்தில் அகலரயில் பாதை அமைத்தும் ரயில் போக்குவரத்து அதிகமில்லை கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை, பிப். 14: விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை பல கோடி ரூபாயில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும்,போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை இருந்த மீட்டர் கேஜ் பாதை, அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு, தினசரி திருச்சி வரை ‘டெமோ’ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை (வியாழன், ஞாயிறு) சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரசும்,  கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு வாரந்திர ரயிலும் இயக்கப்படுகின்றன. வேறு ரயில்கள் இல்லை. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளோட்டத்தோட நின்ற அந்தியோதயா ரயில்:தமிழகத்திற்கு 2 வழித்தடத்தில் அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில நாட்கள் மட்டுமே தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. சென்னை செல்ல பகல் நேர ரயிலாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்ததால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அந்தியோதயா ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருமுறை ரயில்வே கால அட்டவணையில் அறிவித்தும் இன்னும் அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை. இதனிடையே, தாம்பரத்தில் இருந்து விருதுநகர்  வழியாக நெல்லைக்கு ஒரு ரயிலும், தாம்பரத்திலிருந்து விழுப்புரம்,  சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை,  காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ஒரு ரயில்  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இது குறித்து வட்டார ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தலைவர் மனோகரன்  கூறுகையில், ‘சென்னையில் இருந்து செங்கோட்டை வரை  அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், சில நாட்களுக்கு  முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி  இயக்கவும், திருச்செந்தூரிலிருந்து  அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம்  வரையும், செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம் வரையிலும்  புதிய ரயில்களை இயக்கவும், அந்தியோதியா ரயிலை அட்டவணைப்படி இயக்கவும்,   தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை  மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரை அணுகுச்சாலை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகர், பிப். 14: விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை 10 ஆண்டுகளுக்கு முன் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. விருதுநகரின் நுழைவுப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில், புல்லலக்கோட்டை சாலையில் இருந்து பாவாலி சாலை வரை ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச்சாலை இல்லை. கவுசிகா ஆறு செல்லும் வழித்தடத்தில் அணுகுச்சாலை இல்லாததால் வடமலைக்குறிச்சி ரோட்டில் உள்ள கலைஞர் நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி மற்றும் வடமலைக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விருதுநகர் வந்து செல்ல, நான்குவழிச்சாலையில் எதிர்புறம் வந்து செல்கின்றனர். இதற்காக நான்குவழிச்சாலை தடுப்புகளை கடந்து செல்கின்றனர். மேலும், கவுசிகா ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதி வழியாக டூவீலர்களில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நான்குவழிச்சாலையில் எதிர்புறம் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் பகல், இரவு பாராமல் நீரில் கடந்து விருதுநகருக்குள் வந்து செல்கின்றனர். எனவே, நான்குவழிச்சாலை தேசிய ஆணையம் விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர்கள் இடைநீக்கத்திற்கு கண்டனம்

திருவில்லிபுத்தூர், பிப். 14: தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடந்த ஜன. 22 முதல் போராட்டம் தொடங்கினர். ஜன.28ல் திருவில்லிபுத்தூரில் மறியல் நடந்தது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டனர். இதில், சுமார் 25 பேரை நடுவர் எண் 2ல் ஆஜர்படுத்தபட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டனர். ஜன.29ல் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், கைதான 25 நபர்களில் 48 மணி நேரத்திற்கு குறைவாக சிறையில் இருந்ததால், 15 பேர் அவரவர் பணியாற்றும் துறையில் கட்டுப்பாடு அலுவலர் மூலம் பணி ஏற்பு செய்து பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், கல்விதுறையில் 10 ஆசிரியர்களை மட்டும் பணி ஏற்கவிடமால் இடை நீக்கம் செய்துள்ளனர். இத்தகைய செயல் அரசு விதிகளுக்கு முரணாக பழி வாங்கும் நடவடிக்கையாக எங்களின் சங்கம் கருதுகிறது. மேலும் பணி நீக்கம் செய்ய்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி ஏற்க அனுமதிக்க வேண்டும்‘ என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் எங்களுக்கும் ரூ.2000 கிடைக்குமா? தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் பரபரப்பு

விருதுநகர், பிப். 14: தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் பெறுவதற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ரூ.2000 ஆயிரம் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரியத்தில், ரூ.2000க்கு பதிவு செய்ய நேற்று 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘தொழிலாளர் நல வாரியத்தில் 90க்கும் மேற்பட்ட முறை சாரா தொழில்களை செய்யக்கூடியவர்கள் பதிவு செய்து பயனடையும் பட்சத்தில், ரூ.2000க்கு புதிதாக பதிவு செய்வது எந்தவிதத்திலும் பயனளிக்காது என தெரிவித்தனர்.

சிவகாசியில் பி(இ)றப்பு சான்று அனுமதிக்கு தாமதிக்கும் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் கடும் அவதி

சிவகாசி, பிப். 14: சிவகாசியில் உள்ள ஆர்டிஓ அலவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுக்கான அனுமதிகான உத்தரவு வழங்குவதில் காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பிறக்கும் குழந்தைகளை 20 நாட்களுக்குள் பதிவு செய்து விஏஓ, நகராட்சி ஆணையாளர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் அபராத தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல இறப்புகளையும் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தும் பதிவு செய்யாதவர்களுக்கு, நீதிமன்றத்தில் மனு செய்து பிறப்பு, இறப்புகளை விஏஓக்கள், நகராட்சி ஆணையாளர்கள் மூலம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.தற்போது ஓராண்டு முடிந்து பதிவு செய்யாதவர்கள் ஆர்டிஓ அலுவலரிடம் மனு தாக்கல் செய்து பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்கள் என்றால் ஆர்டிஓவிடம் மனு கொடுத்து அந்த மனுவை தாசில்தார், விஏஓக்கள் விசாரணை செய்து வழங்கும் சான்று அடிப்படையில் பிறப்பு, இறப்புகளை ஆர்டிஓ பதிவு செய்து சான்று அளிக்க உத்தரவிட வேண்டும். நகர பகுதி எனில் நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி சான்று பெறப்பட்டு ஆர்டிஓ மூலம் சான்று வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமனானோர் பிறப்பு, இறப்பு சான்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மாதகணக்கில் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.அதிகாரிகளை ‘கவனித்தால்’ அவர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் சான்று வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் அவதிப்படுகின்றனர். இதேபோல அரசின் நல திட்ட உதவிகளையும் பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்த பலர் இறப்பு சான்று பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஆர்டிஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது முறையான விசாரணை நடத்தி, உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி

விருதுநகர், பிப். 13: விருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி வைத்திருந்தவை, போலீசார் கைது செய்தனர். விருதுநகர் பாவாலி காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர், தனது வீட்டின் அருகே, காலியிடத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரிப்பிற்கான மருந்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஆமத்தூர் எஸ்ஐ கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், செல்வம் வீட்டின் காலியிடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு வெடிகள் தயாரிப்பிற்கான பொருட்கள் இருந்தன. இது தொடர்பாக செல்வத்தை கைது செய்த ஆமத்தூர் போலீசார், 12 கிலோ மெஸ் அலாய், 7 கிலோ சோடியம் ஆக்ஸிலைட், 4 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 10 கிலோ தூக்கு மணி, 38 அவுட் பந்து, ஆயிரம் மெஷின் பீஸ் திரிகளை பறிமுதல் செய்தனர்.

அரசு மருத்துவமனை முன் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருச்சுழி, பிப். 13: நரிக்குடியில் அரசு மருத்துவமனை முன், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நரிக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீரசோழன், நாலூர், கட்டனூர், மறையூர் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரதான சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், நோயாளிகள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். இதனால், மருத்துவமனை முன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வேகத்தடை அமைக்க இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து நாலூர் மணி கூறுகையில், ‘நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திருப்புவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் சந்திப்பு சாலையும் இந்த இடத்தில் கூடுவதால், வருகிற வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.பட்டாசு மூலப்பொருள் பதுக்கல்: ஒருவர் கைது

பாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்

ராஜபாளையம், பிப். 13: ராஜபாளையத்தை சேர்ந்த மூதாட்டியிடம் நகை பாலீஷ் செய்வதாக கூறி, மோதிரம் மற்றும் வளையல்களை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் மூதனூர் தெருவைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி ரத்தினம்மாள் (62). இவர், தனியாக வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் வந்து, அவரிடம் நகைகளை பாலீஷ் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ரத்தினம்மாள் தான் அணிந்திருந்த மோதிரம் மற்றும் எட்டு தங்க வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார்.நகைகளை வாங்கிய இருவரும், பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் நகைகளை போட்டுள்ளனர். பின்னர் மஞ்சள் நிற பொடியைப் போட்டு சூடு ஏற்றினர். பின்னர், சூடு ஆறிய பின்னர் பாத்திரத்தில் நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி சென்றுவிட்டனர். சூடு ஆறிய பின் பாத்திரத்தில் மோதிரம் மற்றும் வளையல்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ரத்தினம்மாள் வெளியே சென்று பார்த்தபோது, அவர்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சிவகாசியில் 2 மாதத்தில் தாமிரபரணி குடிநீர்

சிவகாசி, பிப். 13: சிவகாசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறை காரணமாக தற்போது நகராட்சியில் 7 நாட்களுக்குஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்க ரூ.170 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் எடுத்து வருப்படுகிறது. சிவகாசி நகரில் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிவகாசி நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. சிவகாசியில் வாட்டர்டேங்க் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்பேத்கர் சிலை பின்புறம் உள்ள கிருதுமால் ஓடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தாமிரபரணி நீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது. இதன்மூலம் நகராட்சி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்’ என்றார்.

சாத்தூரில் ஆய்வுக்கூடம் இல்லாத அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அவதி

சாத்தூர், பிப். 13: சாத்தூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ஆய்வுக் கூடம் மற்றும் சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தாததால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.சாத்தூர் மேலகாந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, பெரியார் நகரில் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. இங்கு ஆய்வுக் கூடம் இல்லை. சத்துணவு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு வழங்காததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கின்றனர். எனவே, சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம்,  சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதுடன், அங்கு சமையலறை மற்றும் சத்துணவுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்போதே, ஆய்வுக்கூடம் மற்றும் சமையலறை உள்ளதா என சம்பந்தபட்ட துறையை சார்ந்த பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கலெக்டர் தலையிட்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம், சமையலறை அமைத்து சத்துணவு திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.