World - Dinakaran

டிரம்பின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள்

மெக்சிகோ சிட்டி: ஹோண்டராஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவை நோக்கி படையெடுத்துள்ளனர். மெக்சிகோ, ஹோண்டராஸ், கவுண்டமாலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கும் நுழையும் நோக்கில் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக மெக்சிகோ வந்த இவர்களை பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றனர். எனினும் அங்கிருந்து தப்பித்து படகுகள் உள்ளிட்டவை மூலமாக எல்லையை கடந்து அவர்கள் அமெரிக்காவை நோக்கிச்செல்லும் நடைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே அவர்கள் அமெரிக்காவிற்கும் நுழைய மாட்டார்கள், மெக்சிகோ எல்லையிலேயே தடுக்கப்படுவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசு மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் எச்சரிக்கையை மீறி சுமார் 3 ஆயிரம் பேர் அமெரிக்காவை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ஐநா ஒப்புதல்

மனாமா: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் திட்டங்களுக்கு நிதி அளிக்க ஐநா ஒப்புதல் வழங்கியுள்ளது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக பெஹ்ரேய்ன் நாட்டில் 4 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 19 திட்டங்களை செயல்படுத்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்க ஐநா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கடலோர பகுதிகளில் கொண்டுவரப்பட வேண்டிய திட்டங்களுக்கு இதன்மூலம் நிதியுதவி அளிக்கப்படும். புவி வெப்பமயமாவது உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 4 ஆண்டுகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு, காட்டுத்தீ, கடுமையான வறட்சி உணவு பற்றாக்குறை ஆகிய பிரச்சனையை உலகம் சந்திக்க நேரிடும் என்று ஐ.நாவின் ஐபிசிசி பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர் ஜமாலின் உடல் மாயமாகி விட்டதாக நாடகமாடும் சவுதி அரசு: உலக நாடுகள் கண்டனம்

துருக்கி: துருக்கியில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் ஜமாலின் உடல் மாயமாகி விட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையார் ஜமால் திடீரென மாயமானர். இதுதொடர்பாக விசாரணையில் சவுதி அரசின் தலையீடு இருக்காது என மன்னர் சல்மான் உறுதி அளித்துள்ளார். ஒசாமா பின்லேடனை 4-க்கும் மேற்பட்ட முறை நேர்காணல் செய்திருந்த ஜமால் மாயமானது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியது.இவர் கடந்த 2-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். இதில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறி வந்த சவுதி அரேபிய அரசு கஷோகி கொல்லப்பட்டதாக 2 நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டது. அவரது இறப்பைப் பற்றி பல முரண்பட்ட தகவல்களையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜமால் கடும் சித்ரவதைக்கு பின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், அதனால் அவை அனைத்தும் பிரேத பரிசோதனையில் தெரியவரும் என்பதால் சவுதி அரசு உடலை காணவில்லை என்று பொய் சொல்வதாக கூறப்படுகிறது. அவரை வைத்து பெரிய அரசியல் திட்டங்களை சவுதி தீட்டி இருக்கிறது. அதனால்தான் அவரது உடலை அளிக்க மறுக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து: 19 பேர் பலி

தேரா காசி கான்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேரா காசி கான் மாவட்டத்தில் உள்ள முல்தான் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பேருந்தில் பயணித்த ஒருவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 9 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் சிக்கி 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் நிலநடுக்கம் : மக்கள் பீதி

கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிரிட்டனில் இருந்து ஸ்காட்ச் விஸ்கி அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்

லண்டன்: பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக இந்தியா திகழ்கிறது. பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியை காட்டிலும் 10.8 விழுக்காடு அதிகமாகும். அந்நாட்டின் வரிவசூல் துறையான ஹெச்.எம்.ஆர்.டி. தரவுகளின்படி இந்தாண்டு தேவை அதிகரித்ததன் காரணமாக இந்தியாவுக்கான ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி 537 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஸ்காட்ச் விஸ்கி சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டிற்கான ஏற்றுமதி 348 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

மன அழுத்தத்தால் ஒரே வாரத்தில் 5 இங்கிலாந்து ராணுவ வீரர்கள் தற்கொலை

லண்டன்: இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்து. ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இடங்களில் இருப்பவர்களை விட ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ளவர்களுக்கு அதிக அளவில் மனஅழுத்தம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அதிக மன அழுத்தத்துடன் காணப்படும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி, தேவையான விடுப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராணுவ வீரர்களின் இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி அவர்களது உறவினர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

தைவானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பரிதாப சாவு

இலன் : தைவானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலியாகினர். தைவானில் வடகிழக்கு மாகாணமான இலனில் நேற்று மாலை விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள இந்த மார்க்கத்தில், 366 பயணிகளுடன் தாய்துங் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த புயுமா விரைவு ரயில், ஷின்மா ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். 132 பேர் காயமடைந்தனர். ஆனால், ரயிலுக்கு அடியில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 120 வீரர்களை தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் களமிறக்கி உள்ளது. இந்த விபத்திற்கு அதிபர் திசாய் இங் வென் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

மறுதேர்தல் நடத்த கோரிய மாலத்தீவு அதிபர் மனு.. உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ்: தேர்தலில் தோற்றது சரி என தீர்ப்பு

மாலே: தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மாலத்தீவில் கடந்த மாதம் 23ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இப்போதைய அதிபர் அப்துல்லா யமீன் மீண்டும் போட்டியிட்டார். இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை யமீன் முதலில் ஏற்கவில்லை. பின்னர், சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக தோல்வியை ஏற்பதாக அறிவித்தார். அடுத்த மாதம் 17ம் தேதி பதவி விலகுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தனது நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் தேர்தல் தோல்வியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாலத்தீவின் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தேர்தலில் மோசடி நடந்தது என்பதை நிரூபிக்க அதிபர் அப்துல்லா யமீன் தவறிவிட்டார். எனவே, அவரது மறு தேர்தல் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தேர்தலில் அவர் அடைந்த தோல்வி சரியானதுதான்’ என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

2ம் நாளாக தேர்தல் ஆப்கானில் தாக்குதல்: 11 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் 2வது நாளாக நேற்றும் பல பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் ஆரம்பம் முதலே பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை அரங்கேற்றினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.காபூலில் நேற்று முன்தினம் வாக்குச்சாவடியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். பல இடங்களில் வாக்குச்சாவடிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நடக்கவில்லை.  அப்படிப்பட்ட 401 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும், நங்கர்ஹார் மாகாணத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பாறுப்பேற்கவில்லை.

ரஷ்யாவுடன் 1987ல் செய்து கொண்ட ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அதிபர் டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: ‘‘ஆயுதங்களை கட்டுப்படுத்துவதற்காக ரஷ்யாவுடன் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்’’ என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் ரஷ்யா அதிபராக இருந்த மிக்கேல் கோர்பசேவும் கடந்த 1987ம் ஆண்டு, ஐஎன்எப் (நடுத்தர ரக அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் 300 மைல் முதல் 3,400 மைல் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடாது, உற்பத்தியும் செய்யக் கூடாது மற்றும் பரிசோதனையும் செய்யக் கூடாது. இந்த ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் காலாவதியாக உள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி ரஷ்யா ‘நோவாடர்’ என்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்யவுள்ளது. அதனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில் நேற்று பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஆயுத கட்டுப்பாடு குறித்த புதிய ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவோம். ஆயுதங்களை நாங்களும் தயாரிக்க போகிறோம். ரஷ்யாவும், சீனாவும் ஏவுகணைகளை தயாரிக்கும்போது, நாங்கள் மட்டும் ஐஎன்எப் ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா அமைதியாக இருந்தது எனக்கு தெரியாது’’ என்றார். அமெரிக்காவின் இந்த முடிவு, மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவுடன் அமெரிக்கா மோதி வருவது குறிப்பிடத்தக்கது.‘ஆபத்தான முடிவு’ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக முடிவு செய்துள்ளது பற்றி ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கய் ரியாப்கவ் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தான முடிவு. சர்வதேச நாடுகளால் இதை புரிந்து கொள்ள முடியாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்த முடிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழும்” என்றார்.

சீன போரின்போது எடுக்கப்பட்ட நிலங்கள் 56 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் நடவடிக்கை

பாம்திலா : இந்திய - சீன போரின்போது அருணாச்சல்லில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 56 ஆண்டுக்குப்பின் ரூ38 கோடி இழப்பீடு தரப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே 1962ல் நடந்த போரின்போது ராணுவ குடியிருப்புகள், பதுங்கு குழிகள், ராணுவ தளங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றை அமைப்பதற்காக அருணாச்சல பிரதேசத்தில் ராணுவம் அதிகளவில் நிலங்களை கையகப்படுத்தியது. இந்த நிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த இழப்பீட்டை பெற்றுத் தந்துள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரலில் மேற்கு காமெங்க் மாவட்டத்தின் மூன்று கிராமத்தை சேர்ந்த 152 குடும்பத்தினருக்கு ரூ54 கோடியும், செப்டம்பரில்ரூ158 கோடியும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் தவாங் மாவட்டத்தை சேர்ந்த 31 குடும்பத்தினருக்கு ரூ40.80 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேற்கு காமெங் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ38 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநில முதல்வர் பீமா காண்டு இதற்கான காசோலைகளை உரிமையாளர்களுக்கு  வழங்கினர்.மேற்கு காமெங் கிராமத்தை சேர்ந்த பிரேம் டோரீ கிரீமே ரூ6.31 கோடிக்கான காசோலையையும், புண்ட்சோ காவா ரூ6.21 கோடி மற்றும் காண்டூ குளோ ரூ5.98 கோடிக்கான காசோலைகளை பெற்றனர். இதுகுறித்து கிரண் ரிஜிஜூ கூறுகையில், “தேசிய நலனுக்காக கிராமத்தினரிடம் இருந்து நிலம் பெறப்பட்டன. ஆனால் 1960 முதல் எந்த அரசும் கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி கவலைப்படவில்லை. இந்த இழப்பீட்டை தற்பொழுது வழங்கியுள்ள பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மொத்தமாக ரூ37.73 கோடி இழப்பீடு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 17 பேர் பலி

தைவான்: தைவான் நாட்டில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 101 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு

ரியாத்: பத்திரிகையாளர் கசோகி தன்னுடைய தூதரகத்தில் கொல்லப்பட்டதை முதல் முறையாக சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றவரும், அந்நாட்டில் வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணி புரிந்து வந்தவருமான ஜமால் கசோகி, கடந்த 2ம் தேதி துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் மாயமானார். தனது திருமணத்திற்கான ஆவணங்களை பெறுவதற்காக சவுதி அரேபிய தூதரகத்துக்கு அவர் சென்றிருந்தார். சவுதி அரேபிய அரசு மற்றும் அந்நாட்டின் இளவரசர் குறித்து தொடர்ந்து விமர்சனங்களையும், பல்வேறு கட்டுரைகளையும் கசோகி எழுதி வந்த நிலையில், தூதரகத்துக்கு உள்ளே அவர் மாயமானது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனிடையே, கசோகி மறைவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். சவுதியில் வரும் 23ம் தேதி நடைபெறும் நிதி மாநாட்டையும் சர்வதேச நாடுகள் புறக்கணித்துள்ளன. தன் மீதான குற்றச்சாட்டை சவுதி மறுத்து வந்த நிலையில், பத்திரிகையாளர் கசோகி தன்னுடைய இஸ்தான்புல் தூதரகத்தில் கொல்லப்பட்டதை அவர் மாயமான இரண்டு வாரங்கள் கழித்து முதல் முறையாக சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அகமது அல் அசிரி, சவுத் அல் குவாதானி என்ற இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சவுதியின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில், “இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் அங்குள்ள அதிகாரிகளை கசோகி சந்தித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது. மேலும், ‘இளவரசர் தலைமையில் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டு, உளவுத்துறை  நிறுவனத்தின் அதிகாரங்கள் குறித்து வரையறை செய்யப்படும்’ என்றும் சவுதி மன்னர் தெரிவித்துள்ளார்.

உலகம் பலவிதம்

மொராக்கோ விபத்துமொராக்கோ நாட்டின் சிடி போக்நாடலில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்தனர். 80 பயணிகள் படுகாயமடைந்தனர். தடம்புரண்ட ரயில் உருக்குலைந்து கிடக்கிறது.குதூகலமடையும் சிறுவர்கள்ஜெர்மனியின் ஜெல்சென்கிர்சன் மிருகக்காட்சி சாலையில், பாதுகாப்பு கண்ணாடி வழியாக போலார் கரடியைப் பார்த்து குதூகலமடையும் சிறுவர், சிறுமியர்.மலேசியாவில் தீமிதி விழாமலேசியாவில் உள்ள சீனர்கள் 9 பேரரசர்களை கடவுளாக பாவித்து ஆண்டுதோறும் விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு விழாவில் அம்பாங்க் கோயிலில் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்திய சீனர்கள்.மின்னல் ரயில்ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஒளிவெள்ளத்தில் மின்னலென சீறிப்பாய்கிறது பயணிகள் ரயில்.சரிந்த மனித கோபுரம்ஸ்பெயினின் டார்ரகோனா நகரில் கேட்டலான் கலாச்சார திருவிழாவில், மனித கோபுரம் அமைக்கும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விழாவில், பிரமாண்ட மனித கோபுரம் அமைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து, ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடக்கின்றனர்.

காசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்

காசா: காசா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 130 பேர் காயமடைந்துள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய காசா எல்லையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடந்த மார்ச் 30 முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சுமார் 10,000 பாலஸ்தீனியர்கள் ஒன்று கூடி டயர்களை எரித்தும், கற்களை வீசியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 130 பேர் காயமடைந்துள்ளனர். 1948-ல் இஸ்ரேல் நிர்மாணிக்கப்பட்ட போது பிற பகுதிகளுக்கு துரத்தப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு, அவர்களது நிலத்தை வழங்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும். இஸ்ரேல் ராணுவம் எல்லை பகுதிகளை ஆயுதபிரயோகத்தின் மூலம் வளைத்து போடுவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் தங்களது மீது கையெறி குண்டுகளை வீசியதால் தான், பதிலுக்கு தாங்கள் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக விளக்கம் அளித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இதனால் காசா எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் : சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்; உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் கொலை தங்களது துணை தூதரகத்தில் தான் நிகழ்ந்ததாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. அரேபியாவைச் சேர்ந்தவரும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபருமான ஜமால் கசோகி கடந்த 2-ம் தேதி துருக்கியில் மாயமானார். இஸ்தான்புல்லில் உள்ள அரேபிய துணை தூதரகத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. ஆனால் இதனை சவுதி அரேபியா மறுத்து வந்த நிலையில், அரேபியா மீது அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் தங்களது தூதரகத்தில் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் என சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நல்லது. இது ஒரு நல்ல முதல்படி என நினைக்கிறேன். இது மிகப்பெரிய நகர்வு. பல மக்கள் இதில் தொடர்புபட்டிருக்கிறார்கள். நீங்களும், ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் உண்மையில் மிக சிறப்பானவர்கள் என்றார். கொல்லப்பட்ட பத்திரிகையாளரான ஜமால் கசோகி அரேபியாவின் மன்னர் ஆட்சியை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இதனால் அவரை கொல்ல திட்டமிட்ட அரேபியா, துருக்கியில் தங்களது துணை தூதரகத்தில் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. தன்னுமைய திருமணத்திற்காக ஆவணங்களை பெற சென்ற ஜமால் கசோகியின் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். அவரது விரல்கள் உட்பட உடல் பாகங்களை பிடுங்கி எடுத்து அவரை சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். ஜமால் கட்டியிருந்த ஸ்மார்ட் கை கடிகாரம் மூலம் கிடைத்த ஆடியோ பதிவுகளின் மூலம் இத்தகவல்கள் உறுதியானது. கொலை தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழுவையும் அரேபியா அமைத்துள்ளது.

இந்திய அமெரிக்கருக்கு விருது

ஹூஸ்டன் : மனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.  ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆலோசகராக இருப்பவர் மினால் படேல் டேவிஸ். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆட்கள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதை பாராட்டி வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்த விழாவில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் மினால் படேலுக்கு அதிபர் விருது வழங்கப்பட்டது.

விளைவுகள் மோசமாக இருக்கும் பத்திரிகையாளர் கசோகி கதி என்ன? : சவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் : பத்திரிகையாளர் கசோகி நிச்சயமாக இறந்ததாகவே தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றவரும், அந்நாட்டின் பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணிபுரிந்து வந்தவருமான பத்திரிகையாளர் ஜமால் கசோகி, கடந்த 2ம் தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றவர், மாயமானார். அவர் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தனது அரசிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கியில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நாடு திரும்பியுள்ள அவர், அதிபர் டிரம்பை நேரிடையாக சந்தித்து தனது விசாரணை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது :பத்திரிகையாளர் ஜமால் கசோகி நிச்சயமாக இறந்ததாகவே தெரிகிறது. இது மிகவும் சோகமான விஷயம். இதன் பின்னணியில் சவுதி இருப்பது நிச்சயமானால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். மிகவும் மோசமாக இருக்கும். ஆனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சில விசாரணைகளுக்காக காத்திருக்கிறோம். அதன் தீர்வுகள் விரைவில் வரும். அதை தொடர்ந்து மிகவும் கடுமையான அறிக்கையை வெளியிடுவோம். ஆனால் அந்த மூன்று விதமான விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைந்து சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பதை தடுக்க தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளனர்.

சவுதியின் முதலீட்டு மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பு

இஸ்லாமாபாத் : சவுதி அரேபியாவில் வரும் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில்’ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கவுள்ளார். எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாடு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் வரும் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை ஒட்டிய பொருளாதாரத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த ஆண்டு 90 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 800 பிரதிநிதிகள் மற்றும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியின் சவுதி தூதரகத்தில் கடந்த 2ம் தேதி மாயமானதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜேபி மார்கன், போர்டு, கூகுள் உள்ளிட்டவையும் இந்த ஆண்டு இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன. இந்நிலையில், சவுதி மன்னர் சல்மானின் சிறப்பு அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.